வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

மனசெல்லாம் மழையே - 10

 

நிவி அவளை அழைத்த போதும், "இருக்கட்டும் அண்ணி நீங்களே செலெக்ட் பண்ணுங்க" என்று சொல்லிவிட புடவைகளை தேர்ந்தெடுத்தவர்கள் அதை பெற்றுக்கொண்டு வெளியில் வர அம்பலவாணனும் வேலை முடிந்து வந்தவர் அனைவரையும் உணவகத்துக்கு அழைத்து சென்றார்.

வழிநெடுக கலங்கிய விழிகளுடன் தாயின் முகம் பார்த்தவாறே அமைதியாக வந்த தென்றல் ஒருவழியாக மதிய உணவை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர அங்கே தென்றலின் தோழிகள் காத்திருந்தனர்.

"எப்போம்மா வந்தீங்க..? பஜ்ஜி போட்டுட்டு இருக்கேன் வந்துடுறேன் இருங்க" என்ற தளிர் சமையலறைக்குள் செல்ல, ஹாலில் இருந்த தென்றலின் தோழிகளை கண்டு, "எதுக்கு வந்திருக்காங்க..?" என்றார் சீதா.

"ம்மா அக்காவோட கல்யாணத்துக்கு அத்தானுக்கு வெல்கம் டான்ஸ் சர்ப்ரைஸ் கொடுக்க போறோம் அதுக்கு இன்னைக்கு கடைசியா ரிகர்சல் பார்த்துடலாம்னு வந்திருக்காங்க.." என்று நா தழுத்தழுக்க தென்றல் கூறவும்..,

"இல்ல எதுவும் வேண்டாம் அவங்களை அனுப்பிடு" என்றவர்  "எந்த டான்ஸ்ஸும் கிடையாதும்மா வேளையோடு வீடு போய் சேருங்க" என்றிட அவர்களோ கிளம்பாமல் தென்றலை பார்த்தனர்.

தென்றலோ எதுவும் சொல்ல முடியாமல் மெளனக்கண்ணீரோடு  நின்றிருக்க பஜ்ஜியோடு வந்த தளிர் தாயின் வார்த்தைகளில், "ம்மா என்னம்மா சொல்றீங்க..? உங்ககிட்ட பெர்மிஷன் கேட்டு தானே தென்றல் செய்தா  இப்போ ஏன்ம்மா  இப்படி சொல்றீங்க..? எல்லாரும் ரொம்ப ஆசையா இருந்தாங்க இப்போ வேண்டாம்னு சொன்..." என்று தளிர் முடிக்கும் முன்னமே,

"உனக்கெல்லாம் ஒருமுறை சொன்னா புரியாதா தளிர்..? கிளம்ப சொல்லு இவங்களை" என்று சீதா சீறவும்  திடுக்கிட்ட பெண்கள் உடனே அங்கிருந்து வெளியேறினர்.

சீதாவின் கோபத்தை கண்டு தளிர் அதிர்ந்து நிற்க தென்றலோ "ஸாரிக்கா" என்று அவளை கட்டிக்கொண்டு கதற தொடங்கிவிட்டாள்.

தென்றலின் தோழிகள் கிளம்பவும் எதுவும் புரியாத தளிர் "ம்மா என்னம்மா ஆச்சு ஏன் திடீர்ன்னு தென்றலை ஆட வேண்டாம் சொல்றீங்க..? என்னாச்சு..? ஏன் உங்க முகம் இப்படியிருக்கு..?" என்று அன்னையை கேட்டவளுக்கு பதில் சொல்லத்தான்  சீதா அங்கே இருக்கவில்லை.  கனத்த மனதுடன் மெளனமாக கணவரின் புகைப்படத்தின் முன் அமர்ந்தவரின் மனதில் கலவையான எண்ணங்களின் ஊர்வலம்.

அம்பலவாணனின் குடும்பம் பூ வைத்து உறுதி செய்த பின்னர் கூட யாரிடமும் மகளுக்கு கூடி வந்திருக்கும் இடம் குறித்து சீதா பேசிக்கொள்ளவில்லை. ஆனால் தளிருக்கும் உதய்க்கும் நிச்சயம் முடிந்ததில் இருந்தே சீதாலக்ஷ்மியை அக்கம் பக்கம், வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்கள், 'எப்படி சீதா இவ்ளோ பெரிய சம்பந்தம் கிடைச்சது..? அவங்க ஸ்கூல்ல தளிர் மட்டுமா டீச்சர்..? அவங்க வசதிக்கு சம்பந்தமே இல்லாம எப்படி பெண் கேட்டு வந்தாங்க..? தீர விசாரிச்சியா அவங்க பக்கம் ஏதாவது குறை இருந்து உன் பெண்ணை கட்ட நினைகிறாங்களா...? பணத்தோடவே குடித்தனம் பண்றவங்களுக்கு குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க மாட்டாங்க... அவங்களுக்கு  பணத்தோட அருமை தெரிஞ்ச அளவு பெண்டாட்டியோட மனசு புரியாது...'

'ஷோகேஸ்ல வைக்கிற பொம்மைக்கும் பணக்கார வீட்டுல வாக்கப்படற பெண்ணுக்கும் பெருசா வித்யாசம் இருக்காது.., கூழோ கஞ்சியோ நம்ம தகுதிக்கு மாப்பிள்ளை பார்க்கிறது நல்லது.., அவங்களே தேடி வந்தா என்ன? நமக்கு தான் விரலுக்கு ஏத்த வீக்கம் வேணும் சீதா..! நாளைக்கு நம்ம பொண்ணுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நாம அவங்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாதது பார்த்துக்கோ.. இன்னும் தாலி ஏறலை எதுக்கும் இன்னொருமுறை நல்லா யோசிச்சுக்கோ..' என்று கலவையான கேள்விகளும் கருத்துகளும் அவரை நோக்கி வந்த போதும் அத்தனையையும் புன்னகையோடு கடந்துவிடுபவரின் ஒரே பதில் 'மாப்பிள்ளை குணம் தங்கம்' என்பது தான்.

பின்னே அன்று தங்கள் வீட்டிற்கு வந்த போது தென்றல் சுமக்க முடியாமல் நாற்காலிகளை மேலிருந்து எடுத்து வருவதை கண்ட மறுநொடியே ஓடிசென்று அவளிடம் இருந்து வாங்கி வந்த உதய் தானே எடுத்து போட்டதில்  அத்தனை நேரம் தங்கள் வசதிக்கு மீறிய சம்பந்தத்தை எப்படி வேண்டாம் என்று சொல்வது என்று தவித்திருந்த சீதாவின் மனம் வெகுவாக கனிந்து போனது... அன்றைய உதய்யின் செயலில் அவரை அறியாமல் எப்போது வெளியில் சென்றாலும் தன் மனைவியையும் மகள்களையும்  பாரம் சுமக்கவிடாத ரகுபதி  சீதாவின் நினைவை ஆக்கிரமித்திருந்தார்.

ஆம் மனைவி மக்களை பூப்போல பாதுகாக்கும் ரகுபதி சீதா முதல்முறை கருவுற்ற போதே அவர் தண்ணீர் குடம் சுமப்பதை தடுத்துவிட்டவர் பிள்ளை பிறந்த பிறகும் எந்த கடினமான வேலைகளையும் செய்ய அனுமதிக்காது அவர்  காலை வேலைக்கு செல்லும் முன்னமோ அல்லது வந்த பின்னரோ செய்து கொடுத்துவிடுவார்.

அதிலும்  மகள்களை பள்ளிக்கு அழைத்து செல்கையில் அவர்களின் பாடப்பை முதற்கொண்டு உணவுப்பை இன்னும் இதர பொருட்களை தானே தோளிலும், கைகளிலும்  எடுத்துகொள்வாரே தவிர அவர்களை சுமக்க விடமாட்டார்.

அன்று தன் கணவரை போலவே உதய் தென்றலை பாரம் சுமக்க விடாததில் சீதாவின் மனக்கிலேசங்கள் அத்தனையும் பின்னே செல்ல நிச்சயம் உதய் தன் மகளை அவள் தந்தை போலவே பாதுகாப்பான் என்ற நம்பிக்கை முன்னின்று கொண்டது. பெரும் அலைப்புருதலில் சிக்கிதவித்த சீதாவின் மனதில் அந்நொடி நிம்மதி பரவியது என்றால் உதய்யிடம் பேசிவிட்டு வந்த தளிரின் முகத்தில் தெரிந்த  மகிழ்வு அவரை வேறு எதையும் யோசிக்க விடாது சட்டென தன் சம்மதத்தை சொல்ல வைத்தது.

மாப்பிள்ளையின் குணத்தை சீதா எடுத்து சொல்லி பிறகும் 'இது சரி வருமா..?' என்று கேள்வி கேட்கும் நெருங்கிய வட்டத்தில், 'பணத்தை கொண்டு மனுஷங்களை எடை போடுறவங்களுக்கு மத்தியில பாகுபாடில்லாம எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி பழகவும் மனுஷங்களை மனுஷங்களா நடத்தவும் என் மாப்பிள்ளைக்கு தெரிஞ்சிருக்கு, அதைவிட அவர் வீட்டு பெண்களை போலவே மற்ற பெண்களையும் அவருக்கு மதிக்கிறவர் நிச்சயம் என் பெண்ணை கண்கலங்காம பார்த்துப்பார்னு  நம்பிக்கை இருக்கு.. நீங்க நினைக்கிற மாதிரி பணத்தை பார்த்து நான் பெண் கொடுக்கலை மாப்பிள்ளையோட குணம் அவர் சார்ந்த மனுஷங்களை பார்த்து தான் கொடுக்குறேன்.." என்றவருக்கு பாலில் சிறுதுளி விஷம் விழுந்தது போல இன்றைய நிகழ்வு அவர் நம்பிக்கையை சிறிது ஆட்டம் காண செய்திருந்தது.

புடவை எடுத்து முடித்து அனைவரும் கீழ் தளத்திற்கு வரும் வழியிலேயே உடன் வந்தவர்கள், 'இதுக்கு தான் சீதா அப்பவே சொன்னோம் கேட்டியா..? தளிர் தூரமானது என்னமோ பெரிய பாவம் மாதிரி அந்த பொம்பளை என்ன அப்படி பேசுது..?  பணம் இருந்தா இஷ்டத்துக்கு பேசலாமா..? தென்றல் சின்னபிள்ளை அவளை போய்  நரம்பில்லாத நாக்கு என்னமா சுழட்டி அடிச்சுடுச்சு, எவ்ளோ சந்தோஷமா வந்த பிள்ளை முகமே மாறி போச்சு.. அவங்களால தானே கூறை எடுக்குறது தள்ளிபோச்சு அதைபத்தி நீ ஒரு வார்த்தையாவது கேட்டிருக்கணும் சீதா.. நானா இருந்திருந்தா உங்க சங்காத்தமே வேண்டாம்னு சொல்லி அங்கேயே உறவை முறிச்சுட்டு வந்திருப்பேன்' என்று சீதாவின் நெருங்கிய தோழியான சங்கீதா உட்பட அனைவரும் ஆதங்கத்தோடு கேட்க கலங்கிய விழிகளுடன் பதிலின்றி நின்ற  சீதாவின் மனமெங்கும் அத்தனை ரணம்.

"தீர விசாரிக்காம நான் அவசரபட்டுடேனாங்க..?" என்று கேட்டு கொண்டிருந்த சீதாவிடம், "ம்மா நீங்க கவலைபடாதீங்க நான் அவர்கிட்ட இதை பற்றி பேசறேன்" என்று தளிர் கூறிய பின்னரும் மௌனம் காத்த சீதாவின் மனதில் இதற்கு மேலும் இத்திருமணத்தை நடத்த வேண்டுமா என்ற கேள்வி மட்டுமே விஷ்வரூபம் எடுத்திருந்தது.

"ம்மா ஏன் இப்படியிருக்கீங்க..? ப்ளீஸ் ஏதாவது பேசுங்க.." என்று சிவந்திருந்த அவர் கண்களும் கண்ணீரும் கண்டு கேட்ட தளிரை ஒருபுறம் சீதா மெளனமாக இருந்து  பயமுறுத்தினார் என்றால் அதற்கு நேரமாராக தென்றல் மன்னிப்பு கேட்டு அவளை பயமுறுத்தி கொண்டிருந்தாள்.

                      *************************   

ஆம் வந்தத்தில் இருந்தே, "அக்கா ப்ராமிஸ்க்கா நிஜமா நான் அந்த மாதிரி நினைக்கலை.  நீ வராததுல அத்தைக்கு வருத்தம் போல அவங்க முகமே ஒரு மாதிரி இருந்தது அதுதான் அவங்களை சியர் அப் பண்ற மாதிரி பேசினேன், ஆனா அவங்க அதை வேற மாதிரி புரிஞ்சிகிட்டாங்க... க்கா நீ இல்லாததால நான்  வழக்கம் போல தான் உனக்கு புடவை செலெக்ட் பண்ண நினைச்சேன் வேற எதையும் நினைக்கலை ப்ளீஸ் நீயாவது என்னை நம்பு" என்று தளிரின் மடியில் முகம் புதைத்து அழுதவளின் கண்ணீரில் தளிரின் விழிகளிலுமே நீர் துளிர்த்துவிட்டது..

பின்னே 'கூறைப்புடவை எடுக்க சென்ற இடத்தில் தனக்கு ஏற்பட்ட மாதவிடாயை மையமாக வைத்து இத்தனை அக்கப்போறா..?' என்று அதிர்ந்து போனவளுக்கு அதை தொடர்ந்த தங்கை மீதான ராஜியின் குற்றச்சாட்டை சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை.  சிறுவயதில் தந்தையை கேட்டு நடு இரவிலும் ஓயாது அழும் தங்கையை அதன் பின் எப்போதுமே எதற்காகவும் தளிர் அழவிட்டதே கிடையாது...

பலவருடங்களுக்கு பின்பான தங்கையின் தொடர் அழுகையில் தளிரின் கண்களும் குளம் கட்ட அதை சுண்டி விட்டவள் தென்றலின் முதுகை வருடியவாறே, "யார் என்ன பேசினா என்ன..? எனக்கு உன்னை தெரியும் சிட்டு எதுக்கு இவ்ளோ விளக்கம் கொடுக்குற..? ப்ளீஸ்  கொஞ்சம் அமைதியா இருடி! நீ இப்படி அழுதா என்ன அர்த்தம்..? எதுக்கு அவங்க வார்த்தைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர..?" என்று கேட்டதுமே நிமிர்ந்து தளிரை பார்த்தவள்,

"உனக்கு தெரியாதுக்கா பெரிய அத்தை அப்படி சொன்னதும் அங்கிருந்த எல்லாருமே என்னை எப்படி பார்த்தாங்கன்னு.. எனக்கு எவ்ளோ எம்பாராஸிங்கா இருந்தது தெரியுமா..?  யாரையுமே என்னால பார்க்க முடியலை அவ்ளோ அசிங்கமா இருந்தது.. உனக்கே தெரியும் என்கூட படிக்கிற பசங்ககிட்ட கூட நான் இவ்ளோ ஈஸீயா பேசினதில்ல ஆனா அத்தான் கிட்ட எனக்கு அப்படி ஒரு வைப் கிடைக்கும்.."

"சரியா சொல்லணும்னா நம்ம அப்பாகூட இருக்கப்போ எப்படி ஃபீல் பண்ணுவேனோ அப்படிதான் அத்தானோடு பேசுறப்போ அவ்ளோ சந்தோஷமா, கான்பிடன்டா, செக்யூர்ட்டா  ஃபீல் பண்ணுவேன் ஆனா அத்... அத்தானுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவரும் என்னை அவங்களை மாதிரி தப்பா நினைப்பாரா..?  இனி எப்படிக்கா நான் அவரை ஃபேஸ் பண்ணுவேன்.. எனக்கு ப்ராமிஸா அப்படி எந்த எண்ணமும் இல்லை" என்று மீண்டும் தளிரை கட்டிக்கொண்டு கதறி அழுதவளின் கண்ணீரை துடைத்த தளிர்..,

"ஷ்ஷ் தென்றல் போதும்டி! எதுக்காக நீ உன்னை பற்றி தெரியாதவங்களோட வார்த்தைக்கு இவ்ளோ இம்பார்டன்ஸ் கொடுக்குற..? உன்னை புரிஞ்சவங்க யாருமே உன்னோட வார்த்தையை  தப்பா நினைக்க மாட்டாங்க உன்னை தெரியாதவங்களுக்கு நீ விளக்கம் கொடுக்கணும்னு அவசியமில்லை.., எனக்கு எப்படி உன்னை புரியுமோ அதேபோல அவருக்கும் புரியும் அதை நீ  புரிஞ்சுக்கோ அதைவிட்டுட்டு கண்டதையும் கற்பனை பண்ணி தேவையில்லாம எதையாவது பேசின கண்டிப்பா என்கிட்டே உதைபடுவ.." என்று தளிர் அதட்டி மிரட்டி அவள் கண்ணீரை மட்டுபடுத்திட அடுத்த சிலநிமிடங்களில் தென்றல் முகம் கழுவி துடைத்துகொண்டு வெளியில் வந்த வேளை தளிருக்கு  உதயிடமிருந்து அழைப்பு வந்தது.

"இனி கண்டதையும் உளறிட்டு இருக்காம அமைதியா உட்கார்ந்து படி..! நான் அவர்கிட்ட பேசிட்டு வரேன்.." என்றதும் சரி என்று தலையசைத்த தென்றல் தன் புத்தகத்தை திறக்கவும்  அறையிலிருந்து வெளியேறிய தளிர் அன்னையை பார்க்க அவரோ  இன்னுமே கணவரின் முன் அமர்ந்திருந்தார்.

அவரை பார்த்தவாறே வெளியில் வந்து அழைப்பை ஏற்ற  தளிர் "ஹலோ உதய் நானே உங்களுக்கு கால்.." என்றவள் பேச்சை தொடங்கும் முன்னமே,

"ஹலோ தளிர் ஒரு எமெர்ஜென்சி நான் அவுட் ஆஃப் ஸ்டேஷன் இப்போ ஏர்போர்ட்ல இருந்துதான் பேசுறேன்..." என்றவன் அவசரமாக பேசவும் தான் பேச எண்ணியதை மறந்து, "ஏங்க என்னாச்சு எதுவும் பிரச்சனையா..?" என்றாள்.

"நத்திங் ஸீரியஸ் பட் ஐ ஆம் கெட்டிங் லேட்,  இன்னைக்கு நீ புடவை எடுக்க வரலன்னு அக்கா சொன்னாங்க.. இப்போ நீ எப்படி இருக்க..? இன்னும் பெயின் இருக்கா.. ஆர் யூ ஓகே..?" என்றவனின் கேள்வியை எதிர்பாராதவள் ஒருநொடி என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றுவிட்டாள்.

"ஹலோ தளிர் ஆர் யூ தேர்..? ஹவ் ஆர் யூ ஃபீலிங் நவ்..?" என்று விடாமல் மீண்டும் அதே கேள்வியில் வந்து நின்றான்.

நெற்றியை வருடிவிட்டுக்கொண்டே "ஹும் இருக்கேங்க.. ஆனா நீங்க எங்கயோ அவசரமா கிளம்பறேன் சொன்னீங்க..?" என்று தளிர் பேச்சை மாற்றவும்..,

"யாஹ்! இட்ஸ் ஆன் எமெர்ஜென்சி.." என்றவனுக்கு மற்றொரு அழைப்பு வரவும்,

"சரி தளிர்  நான் அக்காகிட்ட சொல்லிட்டேன் நீ அவங்களோட போயிட்டு எனக்கு ரிசெப்ஷன்க்கு பர்சேஸ் பண்ணிட்டு வந்துடு.." என்றான்.

"என்னது..?"

"இல்லமா நான் வர கொஞ்ச நாளாகும்... உனக்கு ஹெல்ப் பண்ணத்தான் அக்கா கூட வராங்க ஆனா அவங்களை சஜஷன் கேட்காம உனக்கு பிடிச்சதை  தான் செலெக்ட் பண்ணனும் புரியுதா..?"  என்றவனிடம், "என்னங்க நான் எப்படிங்க..? எனக்கு என்ன தெரியும்..?" என்று கேட்டவள் ஷாப்பிங் செய்யும் மனநிலையிலா இருக்கிறாள்..? ஆனால் அதை அறியாத உதய் பேச்சு முடிந்தது போல அழைப்பை  துண்டித்து அவசரமாக இமிக்ரேஷனுக்கு சென்றுவிட்டான்.

Comments