தீராத காதல் தொல்லையோ - 4.2
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.
“அவர் யார் தெரியுமா?”
“இல்லையே ஸர்..”
“யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.
“க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..”
“ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான்.
“சொன்னது புரிஞ்சுதா?” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.
“அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன்,
“எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.
“சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு,
“ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்.
வேதாந்த் ஸ்டேஷனுக்குள் வந்ததில் இருந்து நடந்த அத்தனையையும் பார்த்திருந்தவரின் அதிருப்தி இன்னுமே அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
“உட்காருங்க” என்று வேத் சொல்ல தர்ஷன் பவ்யத்தோடு அவருக்காக நாற்காலியை பின்னே இழுத்தான்.
வாசுதேவன் அமர்ந்ததுமே இருகரங்களையும் மேஜையில் கோர்த்தபடி, “சொல்லுங்க என்ன பிரச்சனை?” என்றான்.
“அது தெரியாமலா கூப்பிட்டீங்க?” என்றார் நக்கலாக.,
அவருக்கு குறையாத கேலியோடு “கார்த்திக் கிட்ட விசாரிச்சப்போ அவர் பக்கத்தை சொல்லிட்டார். அப்போ அதை மட்டும் வச்சு உங்க மேல் கேஸ் போட்டு உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டட்டுமா?” என்றதில் திடுக்கிட்டு போனார் வாசுதேவன்.
“சொல்லுங்க தட்டட்டுமா?” என்றதற்கு பதிலில்லாமல் பல்லை கடித்துக்கொண்டு வேதாந்த்தை பார்க்க, “கேட்ட கேள்விக்கு பதில் சொல்றது தான் நாகரீகம்.. அதுவும் எங்களோட விசாரணைக்கு ஒத்துழைக்காம போறது சட்டப்படி தப்பு” என்றான் குறையாத மிடுக்கோடு.
“நீங்க சட்டத்தை மதிக்க மாட்டீங்க ஆனா போலீஸ்னாலே இப்படி தான்னு ஒரு முடிவுக்கு வந்துடுவீங்க!! என்ன நியாயம் இது?” என்றான் ஆழ்ந்த குரலில்.
“என் முடிவை கேள்வி கேட்க நீங்க யார்?” என்றவருக்கு அவன் பூடக பேச்சு புரியாமல் இல்லை.
“நான் யார்னு தெரியாமலா இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கீங்க?” என்றவன் தன் பேட்சை சுட்டி காண்பித்து, “இப்போ தெரியுதா?” என்றான்.
அவர் அமைதியாக அமர்ந்திருக்க, “ஸர் கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க ஸர்” என்றான் தர்ஷன் பணிவாக.
‘இவன் கேட்டு நான் பதில் சொல்வதா?’ என்று நிமிர்ந்து அமர்ந்தவர் பார்வை என்னவோ அவன் பேட்ச் மீது தான் இருந்தது. “இங்கு என்ன தெரிகிறது?” என்று அடக்கப்பட்ட புன்னகையோடு வேதாந்த் கேட்க வாசுதேவன் பல்லை கடித்தார்.
“தெரிஞ்சதான்னு கேட்டேன்.. என் கேள்விக்கு பதில் கிடைக்காமல் நீங்க இங்கிருந்து கிளம்ப முடியாது” என்று நிதானமான குரலில் சொல்ல அதற்கு மேலும் பதில் அளிக்காமல் இருக்க முடியாது என்பது புரியவும், “தெரியுது!!” என்றார்.
“என்ன தெரியுது?” படிச்சவர் தானே நீங்க?” என்றான் மீசையை நீவியபடி..
சிறு தலையசைப்போடு, “ஏசிபி வேதாந்த் ஆர்யன்” என்றார்.
“இனி நான் யார் என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன். இது தான் என் அடையாளம்! யாருக்காகவும் மாத்திக்க மாட்டேன், யாராலையும் மாற்ற முடியாது.. அதுக்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்” என்று கடுமையான குரலில் மீண்டும் அவருக்கு தன் முடிவை தெளிவு படுத்தினான்.
‘தன்னை பேசக்கூடாது என்று சொல்லி விட்டு அவன் மட்டும் பேசலாமா?’ என்ற கோபத்தோடு அவரால் பார்க்க மட்டுமே முடிந்தது. எங்கே அதை கேட்டால் மீண்டும் தன் வாயாலேயே அவன் பெயரை உச்சரிக்க செய்வானோ என்பதால் அமைதியாக அமர்ந்திருந்தார்.
“ஓகே, கம்மிங் டூ தி பாயின்ட்.. போலீஸ் என்றாலே இரண்டு தரப்பையும் விசாரிக்க மாட்டாங்க ஒரு சார்பா முடிவெடுப்பாங்க, நியாயமா இருக்க மாட்டாங்கன்னு நீங்களா ஒரு கற்பனையை செய்துகிட்டு பேசுவீங்க ஆனா எங்களுக்கு ஒத்துழைக்க மாட்டீங்க..” என்றதற்கும் அவரிடம் அமைதியோ அமைதி!!
“உங்களை பார்த்தா படிச்சவர் போல இருக்கீங்க, கண்ணால் பார்ப்பதை மட்டும் வச்சுட்டு நீங்களே இந்த தப்பை செய்யலாமா?” என்று கேட்க கார்த்திக் பதறி போய் நண்பனை பார்த்தான்.
வருங்கால மாமனாரிடம் நண்பன் பேசுவதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் வாயடைத்து போய் பார்த்திருந்தவன் அவனின் இறுதி வார்த்தைகளில் பதறி போய் விட்டான்.
“என்ன? என்ன தப்பு?”
“நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனுமா?” என்றிட இப்போது ‘வேத் தன் மகள் குறித்து பேசுகிறானா? அல்லது தற்போதைய பிரச்சனையை பேசுகிறானா?’ என்று புரியாத நிலையில் வாசுதேவன்.
“சரி சொல்லுங்க, என்ன நடந்தது?” என்றதும் தன் தரப்பை சொல்லி முடித்தார்.
“அப்போ நீங்க தான் பார்க் பண்ணி இருந்த கார் மேல இடிச்சிருக்கீங்க, ரைட்?!”
“ஆமா..”
“அப்போ மன்னிப்பு கேட்டு காம்பென்சேஷன் கொடுத்து இருக்கலாமே? ஏன் ஸ்டேஷன் வரையிலும் வரணும்?”
“அதற்காக தான் நானும் காரில் இருந்து இறங்கி வந்தேன் ஆனா இவர் எடுத்ததுமே என்னை மரியாதை இல்லாமல் பேசினார்…” என்றதும் வேத் நண்பனை பார்க்க,
“அது ஷாலுவை பார்க்க போற அவசரத்துல இருந்ததால அப்படி பேசிட்டேன் ஆரி..” என்றவன், “ரியலி வெரி ஸாரி ஸார். என்ன அவசரமா இருந்தாலும் நான் மரியாதை குறையவா பேசி இருக்க கூடாது, தப்பு தான்! என்னை மன்னிச்சுடுங்க..” என்று கை கூப்பினான்.
“பரவல்ல விடுங்க. சகவாசதோஷம் உங்களை அப்படி பேச வச்சுருக்குன்னு இப்போ தான் புரியுது..” என்று வேதாந்தை பார்த்த படி சொல்ல ‘என்னால் தானே உனக்கு இந்த பேச்சு’ என்று நண்பனை கெஞ்சலாக பார்த்த கார்த்திக், “மன்னிச்சுடு மச்சி” என்று இரு காதையும் பிடித்தான்.
“ஓகே, அப்போ நீங்க காம்பென்சேஷன் கொடுத்துடுறீங்களா?..”
“ஆமாம், எவ்ளோன்னு சொல்ல சொல்லுங்க..” என்றார் பர்ஸை எடுத்தபடி.
“இல்லை, இல்லை அதெல்லாம் எதுவும் வேண்டாம் அங்கிள். நீங்க ஆரியோட மாமனார் உங்க கிட்ட போய் பணம் வாங்கலாமா?” என்றதில் இருவருமே திகைப்போடு அவனை பார்த்தனர்.
“ஐயோ, டங் ஸ்லிப் ஆகிடுச்சு. ஐ’ம் ஸாரி! நீங்க ஆரி அக்காவோட மாமனார்!! உங்க கிட்ட பணம் வாங்கினா நல்லா இருக்காது அங்கிள். அதை தான் அப்படி சொல்லிட்டேன்! பை தி வே நான் ஆரியோட ஃப்ரெண்ட் கார்த்திக்” என்று புன்னகையோடு அவர் முன் கை நீட்டினான்.
‘ஆமா இது ரொம்ப முக்கியம்! ஏன்டா எரியுற தீயில எண்ணெய் ஊத்துற?’ என்பது போல வேத் நண்பனை முறைக்க அவனோ அசட்டு சிரிப்போடு வாசுதேவனை பார்த்தான். ஆனால் அவரோ அவன் கை நீட்டியதை கண்டு கொள்ளாமல் இருபதாயிரத்தை எடுத்து கார்த்திக்கிடம் கொடுத்தார்.
“இல்லை பரவால்ல வேண்டாம் அங்கிள்.. நான் பார்த்துக்கிறேன்..” என்றதும் அவர் வேதாந்த்தை பார்த்தார்.
ஆனால் பார்வையில் அப்படி ஒரு அனல்!!
“எனக்கு எந்த புது உறவும் வேண்டாம். நம்மோட கணக்கு இங்கேயே முடிஞ்சது..” என்று இருவருக்கும் சேர்த்து பதில் சொன்னவர்,
“இது என்ன போலீஸ் ஸ்டேஷனா இல்லை காஃபி ஷாப்பா? சிரிப்பும், சத்தமுமா? ப்ச் எவ்ளோ நியாயபடுத்தினாலும் இது தான் போலீசோட லட்சணம்.. தெரியாதா எனக்கு? யாரும் புதுசா பாடம் எடுக்க தேவையில்லை” என்று கோபத்தோடு கிளம்பினார்.
“மச்சி என்ன டா உன் மாமனார் மிர்ச்சியை விட காரமா இருக்கார்? நிஜமாவே இவர் பெண்ணை தான் லவ் பண்றியா?” என்றிட க்ருதியின் நினைவில் வேதாந்த்தின் முகத்தில் மென்னகை படர்ந்தது.
“இப்படி ஒரு மாமனாருக்கு மருமகனா வாக்கப்பட போற உன் தைரியத்தை ரொம்பவே பாராட்டுறேன்.. இந்த ஜென்மத்துகுள்ள உனக்கு கல்யாணமாக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!!” என்றதில் சட்டென சிரித்து விட்டான் வேத்.
“நிஜமாவே எனக்கு நம்பிக்கை இல்லை ஆரி, இருந்தாலும் ஆல் தி வெரி பெஸ்ட்!!”
“சரி, எனக்கு ஆஃபிஸ்ல வேலை இருக்கு, நீ இங்க வந்ததால தான் வந்தேன்.. இன்னொரு நாள் மீட் பண்ணலாம் பை மச்சி..” என்றவன் கிளம்ப காரை ஓட்டிக்கொண்டிருந்த வாசுதேவனின் முகம் இறுகி போயிருந்தது.
‘எத்தனை தைரியம் இருந்தால் ஒரு வருடம் கடந்த நிலையிலும் தன் முடிவில் மாற்றமில்லை எக்காரணம் கொண்டும் வேலையை விட மாட்டேன் என்று அவரிடமே சொல்லுவான்?’ அதைவிட அவன் பதவியை அவர் வாயாலேயே சொல்ல வைத்த கடுப்போடு சென்றவருக்கு வேதாந்துடனான சந்திப்பில் மண்டை சூடாகி போனது.
வழியில் இருந்த கடையில் வண்டியை நிறுத்திவிட்டு “சில்லுனு ஒரு தர்பூசணி ஜூஸ் கொடுங்க மா” என்று நாற்காலியில் அமர்ந்தார்.
“கும்பிட போன தெய்வம் குறுக்கே வரும்னு நான் நினைச்சே பார்க்கலைங்க ஐயா.. எப்படி இருக்கீங்க?” என்றபடி அவர் முன் வந்து நின்றார் தரகர் முருகன்.
“அடடே முருகனா!! வாப்பா, உட்கார். இன்னொரு ஜூஸ் கொடுங்க மா” என்று குரல் கொடுத்தவர், “எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேங்க ஐயா ஆனா எத்தனை முறை உங்களுக்கு கூப்பிட்டும் நீங்க எடுக்கவே இல்லையே?!”
“ப்ச் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தேன் முருகா..”
“மருமகனை பார்க்க போயிருந்தீங்களா ஐயா?” என்றதும் தான் தாமதம்,
“மருமகனா? யோவ் என்ன பேசற?” என்று குறையாத கோபத்தோடு எழுந்து விட்டார்.
“நிஜத்தை தான் சொன்னேன்...” என்றவர் தன் கைபேசியை திறந்து கேலரியில் இருந்து காண்பிக்க அதில் க்ருதி வேதாந்திற்கு விபூதி கொடுத்தது அழகிய புகைப்படமாக மாறியிருந்தது.

Comments
Post a Comment