வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

மனசெல்லாம் மழையே - 12

 

உணவை முடித்த நிவியும் சுஜியும் "அம்மா பெரிம்மாகிட்ட நாங்களே பேசிட்டோம் த்தை நிச்சயம் இனி அப்படி எதுவும் பேச மாட்டாங்க.." என்ற சுஜியை இடையிட்ட நிவி,

"சும்மா பேசலை த்தை எங்க அக்கா கிட்டத்தட்ட அவங்களை மிரட்டிட்டு வந்திருக்கா.. இன்னைக்கு மாதிரி இல்லாம இனி உங்க யாரையாவது தப்பா பேசினா கண்டிப்பா அப்பாகிட்ட சொல்லிடுவோம் சொன்னதுல அவங்க கொஞ்சம் மிரண்டு போயிருக்காங்க.. ப்ளீஸ் நீங்களும் அப்பா வரை இதை எடுத்துட்டு போக வேண்டாம் ப்ளீஸ் எங்களுக்காக" என்றவர்கள் தளிரிடமும் அதே கோரிக்கையை வைக்க அவர்களும் சம்மதித்திருந்தனர்.

"சரி தளிர் உனக்கு எப்போ ஓகேன்னு சொல்லு அன்னைக்கு நாம கேர்ள்ஸ் எல்லாம் சேர்ந்து போயிட்டு உதய்க்கு  எங்க வீட்டுக்காரங்களுக்கு எல்லாம் ரிசெப்ஷன் சூட் எடுத்துட்டு வந்துடலாம்.. அத்தை தென்றலையும் தளிரையும் நாங்க கூட்டிட்டு போய்ட்டு வரோம் உங்களுக்கு சம்மதமா..?" என்று கேட்க சீதா தென்றலை தான் பார்த்தார்.

"டிரைவர் போட்டுட்டு நாங்க நாலு பேர் குழந்தைகளோடு போயிட்டு வரோம்.. வேற யாரும் வர மாட்டாங்க எதுவும் சொல்லவும் மாட்டாங்க, உதய் அவனே பார்த்துக்குறேன்னு அப்பாகிட்ட சொல்லிட்டான்.." என்று சுஜி சொல்லிகொண்டிருக்கும் போதே,

"ப்ளீஸ் தென்றல் ஓகே சொல்லு, நாம மட்டும் தான் போகபோறோம் செம ஃபன்னா இருக்கும்" என்றாள் நிவி.

"உதய்க்கு தளிர் செலெக்ஷன் எடுக்கணும்னு ரொம்ப ஆசை ஆனா வேலை விஷயமா அவசரமா கிளம்பிட்டான் சீக்கிரம் வந்துடுவான் ஆனா அதுக்கப்புறம் டைம் இருக்காது.." என்று சொல்லவும் சீதா பெரிய மகளை பார்த்தார்.

"ஆமாம்மா எனக்கும் சொன்னார்.. நீங்க ஓகே சொன்னா போயிட்டு வரேன்.."

"சரி இரண்டு பேரும் பத்திரமா போயிட்டு வாங்க" என்று சீதா சம்மதமளிக்கவும் "தேங்க்ஸ் அத்தை... நீங்க ரொம்ப ஸ்வீட்" என்ற நிவி சந்தோஷத்தில் அவரை கட்டிபிடித்து கன்னத்தில் முத்தமிட்டிருந்தாள்.

"சரிங்கத்தை அடுத்த வாரம் மெஹந்தி, ஹல்தின்னு மேரேஜ் செலிபரேஷன்ஸ் இருக்கு... நீங்க எதுவும் செய்ய வேண்டாம்  அதுக்கான ஆள்கள் இருக்காங்க நாங்க பேசிட்டோம் அவங்களே எல்லாம் பார்த்துப்பாங்க.."

"என்னம்மா நான்தான் அதெல்லாம் வேண்டாம் எங்களுக்கு பழக்கமில்லைன்னு அண்ணன்கிட்ட சொன்னேனே.."

"அத்தை கல்யாணம்னாலே கொண்டாட்டம் தானே..!  ஒருமுறை செய்யபோற விசெஷத்துல எல்லாமே மெமொரீஸ் திரும்ப கிடைக்காது.. அதைவிட எங்க இரண்டு பேரோட கல்யாணத்துல இருந்த எல்லாமும் உதய் கல்யாணத்துலயும் இருக்கணும்னு அப்பா ரொம்ப ஆசைபடறார்.. இது எங்க வீட்டோட கடைசி கல்யாணம் அத்தை மறந்துட்டீங்களா..?"

"இல்ல நிவி ஆனா இங்க அதுக்கெல்லாம் இடம் இல்..." என்று அவர் தயங்க,

"அத்தை இது நெருங்கின சொந்தம் பிரெண்ட்ஸ் மட்டும் கலந்துக்க போற விசேஷம் இங்க நம்ம வீட்டு மாடியில வச்சுதான் தளிருக்கு செய்யபோறோம் உதய்க்கு தனியா எங்க வீட்ல அதனால ப்ளீஸ் வேண்டாம் சொல்லாதீங்க.." என்று இருவரும் கெஞ்சவும் ஏற்கனவே தென்றலின் நடனத்தை மறுத்துவிட்டவருக்கு இப்போது இதையும் மறுத்து பிள்ளைகளின் மகிழ்வை கெடுக்க விருப்பம் இல்லை.. புன்னகையோடு தன் சம்மதத்தை தெரிவிக்கவும் அவர்களும் மகிழ்ச்சியோடு கிளம்பினர்.

மேலும் நான்கு நாட்கள் கழிந்த நிலையில் காலையும் மாலையும் அகடெமிக்கு சென்று வந்த தளிர் இன்று உதய்க்கான உடைகளை தேர்வு செய்துவிட்டு மாலை போல வீடு திரும்பியிருந்தாள். தென்றல் சென்னை சென்று வந்த அனுபவத்தை சீதாவிடம் உற்சாகத்தோடு பகிர்ந்து உணவை முடித்துக்கொண்டு அசதியில் உடனே படுக்க சென்றுவிட்டாள். அறையில்  யோசனையோடு இருந்த தளிர் இன்று  சீதாவிடம் பேசிவிடுவது என்ற முடிவோடு அவர்களின் கணக்கு வழக்கு புத்தகத்தோடு தாயிடம் வந்தவள், "ம்மா உங்ககிட்ட பேசணும்" என்றாள்.

அவள் கையில் இருந்ததை கொண்டே என்ன  பேசபோகிறாள் என்பதை உணர்ந்த சீதாவும், "சொல்லும்மா.." என்றார்.

"ம்மா இவ்ளோநாள் நாம ரெண்டு பேரும் தான் மன்த்லி பட்ஜெட் போடுவோம் உங்களோட இருபதாயிரம் என்னோட ஸ்கூல் சம்பளம்  இருபத்தேழாயிரம், அகெடமியோட பதினைந்தாயிரம், டியூஷன்ல பத்தாயிரம் பிளஸ்ன்னு  எப்படியும் நம்ம மாத வருமானம்  எழுபத்தைந்தாயிரத்துக்கு அதிகமா இருந்தது நாம தேவைக்கு செலவழிச்சு சேமிக்க முடிஞ்சது.. ஆனா இப்போ சேவிங்க்ஸ் எல்லாமே கல்யாணத்துக்கு எடுத்துட்டோம், என் கல்யாணத்துக்கு பிறகு டியூஷன் அமொண்ட் தவிர்த்து பார்த்தாலும் எப்படியும் பாதிக்கும் மேல குறையும் எப்படிம்மா சமாளிப்பீங்க.. அத.. அதனால நான்..." என்று  அன்னையை பார்த்த தளிருக்கு அடுத்து எப்படி பேசுவது என்ற தயக்கம் மேலிட மெளனமாக நோட்டை புரட்டிக்கொண்டிருந்தாள்.

"சொல்லி முடி தளிர்" என்று சீதா மகளை கூர்மையாக பார்க்க..,

"நீங்க தப்பா எடுக்காட்டி கல்யாணத்துக்கு பிறகும் நான் ஸ்கூல் சேலரியை உங்ககிட்ட கொடுக்கட்டுமாம்மா..? ப்ளீஸ் வேண்டாம்னு மட்டும் சொல்லிடாதீங்க நான் உதய் கிட்ட ஏற்கனவே இதை பற்றி டிஸ்கஸ் பண்ணிட்டேன் அவருக்கும் முழு சம்மதம்.."

"தளிர் நீ சொல்ற எழுபது ப்ளஸ் சம்பளம் இந்த நாலஞ்சு வருஷமா தான்.. அதுக்கும் முன்ன என் ஒருத்தியோடு பத்தாயிரத்துக்கும் குறைவான சம்பளத்துக்குள்ள தான் உங்களை வளர்த்து ஆளாக்கினேன்.. இப்போ முப்பதாயிரத்துல எங்க இரண்டு பேரோட செலவை என்னால சமாளிக்க முடியாதுன்னு நினைக்கிறியா..?"

"எப்படிம்மா முடியும் ..? ப்ரொவிஷன், காய்கறி, பால், கேஸ் சிலிண்டர், எலெக்ட்ரிசிட்டி, பெட்ரோல், தென்றல் காலேஜ் ஃபீஸ் உங்க மெடிசன்னு எவ்ளோ எக்ஸ்ப்பென்சஸ் இருக்கு..? அதோட தென்றலோட அப்ராட் கனவு எல்லாமே இந்த முப்பதாயிரத்துல சாத்தியமா சொல்லுங்க..?"

"ஏன் முடியாது..?  இதோபார் உங்கப்பாவோட இருந்த காலத்துலயே பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தினவ அடுத்து நான் மட்டும் செய்தப்பவும் சரி நீ கைகொடுத்தப்பவும் சரி அது பத்தாயிரமா இருந்தாலும் லட்சமா இருந்தாலும் வரவுக்குள்ள செலவை அடக்கி மிச்சம் பிடித்து வாழ உங்கம்மாக்கு தெரியும்.. ஏற்கனவே சொன்னதுதான் எங்களை  பற்றிய கவலைய விட்டுட்டு நாளைக்கு நீ அங்க எப்படி வாழப்போறன்னு யோசி. படைத்தவனுக்கு தெரியும் உங்கப்பாவும் அவனும் எங்களுக்கு துணை இருந்து வழி நடத்துவாங்க, எங்களுக்காக உன் வாழ்க்கையை நீ வாழாம இருக்ககூடாது தளிர்.." என்று கோபமாக சொல்லவும்,

"ம்மா என்னம்மா பேசுறீங்க..? உங்களுக்கு பையன் இருந்திருந்தா இப்படி தான் சொல்லுவீங்களா..? நிஜமா என் மனசை இது ரொம்பவே அழுத்திட்டு இருக்கு நான் இல்லாம எப்படி நீங்க இரண்டு பேரும் தனியா இருப்பீங்கன்னு நினைச்சாலே எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது, எதையும் யோசிக்க முடிய மாட்டேங்குது, அட்லீஸ்ட் நீங்க பணம் வாங்கிகிட்டா ஃபினான்ஷியல் சப்போர்ட்டாவது கொடுக்க முடிஞ்ச நிம்மதியோடு இருப்பேன் புரிஞ்சுக்கோங்க ம்மா" என்ற மகளை ஆழ்ந்து பார்த்தவர்,

"ஃபினான்ஷியல் சப்போர்ட் விட மாரல் சப்போர்ட் முக்கியம் தளிர் எனக்கு முடியாதப்போ பார்த்துக்க வேண்டாம்னு மாப்பிள்ளை சொல்லமாட்டார்னு நம்பிக்கை இருக்கு  அப்புறம் என்ன..?"

"அவர் சொல்லமாட்டார் அதுக்காக உங்களுக்கு என் சம்பளத்துல உரிமை இல்லைன்னு ஆகிடுமா..?"

"உரிமையா..?" என்று கசந்த புன்னகையை சிந்தியவர், "ஏன் தளிர் நாளைக்கு என் வீட்டுல உலை கொதிக்கிறதே உன் புகுந்த வீட்டு பணத்துலன்னு நான் பேச்சு வாங்கவா..?"

"ம்மா..."                     

"இதோபார் நீயும் மாப்பிள்ளையும் சம்மதிச்சு கொடுத்தாகூட என்னமோ அவங்க வீட்டு சொத்தையே நான் ஏமாத்தி எழுதி வாங்கிட்டதா தான் பேச்சு வரும் அதெல்லாம் எனக்கு தேவையா..? பெண்ணோட காசுல சாப்பிடுறேங்கிற பேரு பெருமையோ இல்லையோ நாளைக்கு மாப்பிள்ளை மற்றும் சம்மந்தி வீட்டு பணத்துல சாப்பிடுறேங்கிற பேர் வந்துடகூடாது புரியுதா..?"

"ப்ளீஸ்ம்மா எனக்காக.."

"ஒருவேளை எனக்கு பையன் இருந்திருந்தாலும் இதையே தான் சொல்லுவேன்.. பிள்ளைங்க தான் பெற்றவங்களை நம்பி பிறக்கறாங்களே தவிர எந்த பெற்றவர்களும் பிள்ளைகளை நம்பி இல்லை, நீங்க வரும் முன்னமும் நாங்க வாழ்ந்திருந்தோம் இப்போ நீங்க இல்லாமலும் வாழ்வோம் எங்களை பற்றின கவலையை விட்டுட்டு உன் வாழ்க்கையை பார்.." என்றார் கடின குரலில்.

"ம்மா ஏன்ம்மா இப்படி பேசறீங்க..?" என்ற தளிரின் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது.

அதைகண்ட சீதாவின் மனம் வெகுவாக  தளர்ந்து போக கலங்க துடித்த விழிகளில் திடம் கொண்டவர் "இதோபார் அம்மூ உனக்கே தெரியும் அம்மாக்கு உங்க சந்தோஷத்தை தவிர வேற எதுவும் பெருசில்ல.. நான் பாடமெடுக்க நீ ஒன்னும் சின்ன குழந்தையில்ல, உன்னோட வாழ்க்கையை நீதான் வாழனும்... இப்போ என்ன உனக்கு எங்களுக்கு செய்யணும் அவ்ளோதானே !" என்றதும் தளிர் தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

"சரி மாசாமாசம் இல்லாம அம்மாக்கு எப்போ தேவை இருந்தாலும் உன்கிட்ட கேட்டு வாங்கிக்கிறேன் போதுமா..?" என்றதும் தளிரின் முகம் சட்டென ஒளிபெற "தேங்க்ஸ் ம்மா" என்று கட்டிக்கொண்டவள் மனதில் அத்தனை மகிழ்ச்சி.

திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் இளந்தளிர்க்கு ஹல்தி மற்றும் மருதாணி வைக்கும் வைபவத்தை நிகழ்த்த ஈவென்ட் ஆர்கனைரை தளிரின் வீட்டிற்கு அனுப்பிய அம்பலவாணன் அவர்கள் வீட்டு மாடியில் அதற்கான அலங்காரங்களை செய்ய சொல்லிவிட்டார்.

தென்றல் தளிரின் தோழிகள் அக்கம் பக்கத்தினர் மணமகன் வீட்டு பெண்கள் என்று அனைவருக்கும் மருதாணி வரைந்து கொண்டிருக்க.., தளிருக்கு போட்டுகொண்டிருந்த பெண் ப்ரைடல் மெஹந்தியை அவள் உள்ளங்கையில் வரைந்து முடித்ததும்,  "மேம் மாப்பிள்ளையோட பேரை எங்க போடனும் உங்களுக்கு எப்படி வேணும்னு சொன்னீங்கன்னா அதுக்கு ஏற்ற மாதிரி டிசைனை ஆல்டர் பண்ணிப்பேன்..?" எனவும் தனக்கு உதயாதித்தனின் பெயரை எப்படி போட வேண்டும் என்று பத்து நிமிடங்களுக்கும் மேலாக தளிர் விளக்கிட அப்பெண் அசந்து போய் பார்த்தார்.

"புரிஞ்சதுங்களா..?" என்று தான் எழுதி கொண்டு வந்த பேப்பரை அப்பெண்ணிடம் நீட்டவும்,

"மேம் இது லவ் மேரேஜா..? யார் முதல்ல ப்ரொபோஸ் பண்ணினா..?" என்று கேட்ட பெண்ணுக்கோ இத்தனை வருடங்களில் எத்தனையோ பேருக்கு மருதாணி போட்டிருந்தாலும் இப்போது தளிரின் கோரிக்கையில் எழுந்த ஆச்சர்யம்.

"இல்ல அரேன்ஜ்ட் மேரேஜ்" என்று சன்ன சிரிப்போடு தளிர் சொல்லியபோதும் அப்பெண்ணின் விழிகள் நம்பகமின்மையை வெளிபடுத்தியது.

"நிஜமா தான் சொல்றீங்களா..?"

"ஆமா.."

"நிறைய லவ் மேரேஜ் அட்டென்ட் பண்ணியிருக்கேன் ஆனா யாருமே அவங்க லவ்வர் பேரைகூட  இப்படி போட சொன்னதில்லை.. ப்பாஹ் என்ன  ரசனை மேம் உங்களுக்கு" என்று சிலாகிக்க,

"அவருக்கு இது சர்ப்ரைஸ்..!! யாருக்கும் சொல்லாதீங்க நமக்குள்ள இருக்கட்டும்"

"சரி" என்றவர்  தளிர் கேட்டது போலவே உதயனின் பெயரை எழுதி அவள் முழங்கையில் தொடங்கி விரல் நுனிவரை அழகாய் மருதாணியிட்டு அடுத்து கால்களிலும் வரைந்து முடிக்க அப்போதுதான் பள்ளி முடித்து அங்கே வந்த வைஷு, "ம்மா என்னை விட்டுட்டு எல்லாரும் மெஹந்தி போட்டிருக்கீங்க..?" என்று செல்லமாக கோபிக்க,

"உனக்கில்லாமயா வைஷு..? இங்க வா.." என்ற தளிரிடம்  "மாமி" என்று ஓடிசென்றவள் அவள் கைகளில் வரையபட்டிருந்த டிசைனை கண்டு வாய் மேல் விரல் வைத்து நின்றுவிட்டாள்,

"வாவ் மாமி எவ்ளோ அழகா இருக்கு.. ஆன்ட்டி எனக்கும் இதே மாதிரி போட்டுவிடுங்க" என்று அப்பெண்ணிடம் கேட்க,

"ஹே வைஷு அது ப்ரைடல் டிசைன், கல்யாண பெண்ணுக்கு மட்டுமே போடுவாங்க இங்க வா உனக்கு வேறே போட சொல்றேன்" என்றாள் நிவி.

"போங்க சித்தி எனக்கு மாமி டிசைன் தான் வேண்டும்.. அதுல இருக்க மாதிரியே மாமா மாமியை எனக்கு வரைஞ்சுவிட சொல்லுங்க" என்று அடம் பிடிக்க, உடன் வந்த அவள் தம்பி,

"ஏய் வைஷுக்கா மாமா மாமிக்கு தானே கல்யாணம்னு அம்மா சொன்னங்க உனக்கும் அதேமாதிரி போட சொல்ற..? அப்படின்னா  உனக்கும் கல்யாணமா...?" என்று சந்தேகத்தை கேட்க,

"டேய் மாமாக்கு எடுத்த மாதிரி உனக்கு வேஷ்டி சட்டை எடுத்தாங்க அப்போ உனக்கு என்ன கல்யாணமா..?"

"நான் கேட்கல நீதான் மாமி மாதிரி கேட்கிற.. மாமியோடது அழகா இருக்குன்னு உனக்கு ஜெலஸ் வைஷுக்கா.."

"எனக்கு ஜெலஸா..? ம்மா என்ன சொல்றான் பாருங்க" என்று கண்ணை கசக்கியவள்,

"உனக்கு தான்டா ஜெலஸ்" என்று அவனிடம் சண்டை பிடிக்க பதிலுக்கு கௌஷிக்கும் மல்லுக்கு நிற்க அடுத்த சில நொடிகளில் யாரும் எதிர்பாரா வகையில் இருவரும் கட்டி உருண்டிருந்தனர். வழக்கமாக நடப்பது என்றாலும் இன்று அவர்களை பிரித்து சமாதானபடுத்துவதற்குள் சோர்ந்து போயினர் நிவியும் சுஜியும்.

இறுதியில் தளிரின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட வைஷு பெருமூச்சுக்களை எடுத்தவாறு தளிர் அருகே அமர்ந்து, "நீ எவ்ளோ கெஞ்சினாலும் உனக்கு க்ரேயான்ஸ் ஷேர் பண்ண மாட்டேன்டா முட்டகண்ணா.., ஒழுங்கா லாஸ்ட்வீக் சாக்லெட்க்கு பதிலா என்கிட்டே வாங்கின மைக்ரோட்டிக் பென்சில் கொடுத்துடு இல்ல உன் ஸ்கெட்ச் எடுத்துட்டு போய் தண்ணியில போட்டுடுவேன்..." என்று கௌஷிக் அவள் கையில் கடித்திருந்த காயத்தை பார்த்து கொண்டே கூறியவளை,

"வைஷு" என்று அதட்டல் போட்ட தளிர் "என்ன பழக்கம் இது..? இப்படி செய்ய கூடாதுன்னு சொன்னேன் தானே..?"

"மேம் உங்களுக்கு தெரியாது அவன் ரொம்ப பேட் பாய்! என்னோட க்ரேயான்ஸ், பென்சில், பென் எல்லாமே எனக்கு தெரியாம எடுத்து ஸ்பாயில் பண்ணிடுவான்.. ஆனா எல்லாரும் சின்ன பையன்னு அவனுக்கே சப்போர்ட் பண்ணுவாங்க இவன் அழுது எல்லாரையும் ஏமாத்திடுவான்" என்று அவளிடமும் அழுது கொண்டே புகார் வாசிக்க.,

"போதும் வைஷு  என்னோட வா" என்று அவளை அழைத்து சென்று முகம் கை கால் கழுவ செய்தவள்  "என்னோடது மாதிரியே வச்சு விடுங்க" என்றாள் மெஹந்தி இடுபவரிடம்.

"ஆன்ட்டி எனக்கு மாமாவை ஒரு கையிலும் மாமியை ஒரு கையிலும் வரைங்க" என்று வைஷு கேட்டது போலவே வரைந்து முடிக்க,

"அண்ணி அண்ணா பேரை எழுதிட்டீங்களா..? இல்லன்னா எழுதுங்க அவர் கண்டுபிடிக்கிறாரா பார்ப்போம்"

"ஹ்ம்ம் எழுதியாச்சு நிவி"

"அண்ணி ஈஸியா கண்டுபிடிக்கிற மாதிரி எழுத கூடாது.. நீங்க எங்க எழுதியிருக்கீங்க காட்டுங்க சரியான்னு பார்க்கிறேன் இல்லன்னா வேற இடத்துல எழுத சொல்லலாம். அப்போ தான் செம ஃபன்னா இருக்கும்" என்றதும் தளிருக்கு திக்கென்றானது. 

'என்ன பதில் சொல்வது?' என்று புரியாமல் தளிர் பார்த்திருக்க அதற்குள், "சித்தி மெஹந்தில மாமா பேர் போடுவாங்களா? அப்போ எனக்கும் போட்டு விட சொல்லுங்க" என்று கேட்டதில் நிவியின் கவனம் சிதறியது.

"ஏய் உன் மாமாவை கட்டிக்க போற மாமி தான் போடணும் உனக்கு எதுக்குடி..? சும்மா எல்லாத்துக்கும் எனக்குன்னு வந்துடற அதுக்கு  அவன் ஏதாவது சொல்லுவான் உடனே ஒரு சண்டைக்கு நிற்ப சண்டகோழி..! அதுதான் நீ கேட்ட மாதிரி போட்டாச்சுல கிளம்பு.." என்று நிவி அதட்ட,

"நிவி அவ குழந்தை ஏன் இப்படி அதட்டிட்டு, சொல்ற படி சொன்னா புரிஞ்சுப்பா.."

"உங்களுக்கு தெரியாதண்ணி இவ..."

"ப்ச் நீ போய் வைஷு கௌஷிக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வா நான் வைஷுவை பார்த்துக்கறேன்" என்று நிவியை அனுப்பிவிட்டு "உதய் பேரை இவளோட கையிலயும் எழுதுங்க" என்று தளிர் சொல்ல,

"மாமி எனக்கு உங்க பேரும் எழுதணும்" என்றதும் அவள் கேட்டது போலவே வைஷுவின் இரு உள்ளங்கைகளிலும்  தளிர் மற்றும்  உதய்யின் பெயரை எழுத அவள் முகத்தில் அத்தனை பூரிப்பு ஓடி சென்று அங்கிருந்த அத்தனை பேரிடமும் காட்டிக்கொண்டிருந்தாள்.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1