சீதாவிற்கு பெற்றோர், உடன் பிறந்தோர் யாருமில்லை என்பதால் திருமணத்திற்கு முந்தைய நாள் தளிருக்கு பாட்டி வீட்டு சீர் செய்யும் பொறுப்பை தன் பெரிய மகள் மற்றும் மருமகனை எடுத்து செய்யுமாறு சொல்லி விட்டார் அம்பலவாணன்.
அதை கேட்ட சுஜிக்கு அத்தனை மகிழ்ச்சி, பின்னே ராஜியும் ஜெகாவும் பேசி வைத்திருக்கும் பேச்சுக்கு அன்று வார்த்தையால் கேட்ட மன்னிப்பு போதாது என்பதால் முடிந்தவரை தளிரின் வரவை கோலாகலமாக நடத்த முடிவு செய்துவிட்டவள் புகுந்த வீட்டினரிடமும் அனுமதி பெற்றுவிட்டாள்.
முதலில் மறுத்த சீதாவிடம் 'உடன் பிறந்த அண்ணன் சொன்னால் கேட்க மாட்டாயா..?' என்று அம்பலவாணனும், "என்னோட வீட்டுக்கு தான் கூட்டிட்டு போக போறேன் பத்திரமா கூட்டிட்டு போய் பத்திரமா கூட்டிட்டு வந்துடுவேன் நீங்க கவலை படாதீங்க" என்று சுஜிதா சொல்லவும் தலையசைத்திருந்தார்.
சொன்னது போலவே அடுத்த நாள் காலையே சரவணனும் சுஜியும் தளிரை அழைத்து வந்துவிட வாசலிலேயே நான்தான் ஆலம் சுற்றுவேன் என்று அடம் பிடித்த வைஷு பெரிய மனுஷியாக அன்னை மற்றும் பாட்டியுடன் சேர்ந்து ஆலம் சுற்றி தளிரை வரவேற்றாள்.
சுஜிதாவின் புகுந்த வீடும் செழிப்பானது தான்..
அவர்களின் பங்களாவே நுழைவாயிலில் இருந்து பல அடி தூரத்தில் கட்டபட்டிருந்தது.
சரவணின் பெற்றோர் இளந்தளிரை இன்முகத்தோடு வரவேற்று தங்கள் வீட்டு பெண் போலவே பாவித்ததில் எப்படி இருக்குமோ என்ற பயத்துடனே வந்த தளிரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. உள்ளே நுழைந்தவளின் கையை விடாமல் பிடித்து கொண்ட வைஷு தளிருக்கு தன் வீட்டை சுற்றி காட்ட தொடங்கிவிட்டாள்.
"வைஷு மாமி இன்னும் சாப்பிடலை.. கூட்டிட்டு வா"
"ப்ளீஸ்ம்மா இன்னும் என்னோட ரூம் காட்டலை காட்டிட்டு வந்துடுறேன்" என்று இரண்டடுக்கில் விஸ்தாரமாக இருந்த அவர்களின் பங்களாவை அரைமணி நேரமெடுத்து சுற்றி காட்டியவள் அதன்பின் கீழே அழைத்துவர சுபநேரத்தில் சரவணின் பாட்டி துவங்கி வைக்க அடுத்தடுத்து மற்ற பெண்களும் தளிர்க்கு நலங்கிட்டு வாழ்த்தினர்.
இங்கு நலங்கை முடித்த அதேவேளை அங்கே தளிரின் வீட்டிற்கு குடும்பத்தோடு வந்திருந்த கஜபதி காரைவிட்டு இறங்கியதுமே தன் அலப்பறையை தொடங்கிவிட சமாளிக்க முடியாமல் தென்றலே திணறிப்போனாள்.
குளித்துவிட்டு வந்தவள் சுஜியின் வீட்டார் எடுத்து வைத்திருந்த மயில் வர்ண மென்பட்டை கட்டிக்கொண்டு ஒப்பனையை முடித்துவிட்டு வெளியில் வர, "இன்னும் கொஞ்ச நேரத்துல வளையல்காரர் வந்துடுவாங்க தளிர்.. முகூர்த்த வளையல் போட்டதும் கிளம்பிடலாம் அப்போதான் பியூட்டிஷியன் உன்னை ரிசெப்ஷனுக்கு ரெடி பண்ண நேரம் சரியா இருக்கும்.."
“சரிங்க அண்ணி!" என்றவளுக்கு எப்படி கேட்பது என்ற தயக்கம் மேலிட.., அங்கிருந்த பொருட்களை உருட்டியவள் மெல்ல குரலை செருமி, "அண்ணி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா..?" என்றாள்.
"என்ன சொல்லு.."
"அது.. நீங்க தப்பா எடுக்காட்டி, உங்க தம்பியை இங்க வர சொல்ல முடியுமா..?” என்று கேட்டு முடிக்கவும்,
கையிலிருந்த பொருள் நழுவ "பார்ராஆ..!" என்று ஆச்சர்யத்தோடு தளிர்புறம் திரும்பியவர் முகம் கொள்ளா புன்னகையோடு "ஹும் சொல்றேன் ஆனா எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா..? என்று உல்லாசமாக சுஜி கேட்கவும் அன்று பள்ளியில் நடந்ததை சொல்லியவள்,
"எனக்கு அவர்தான் வளையல் போட்டுவிடணும். ஆனா நான் சொன்னதா இல்லாம நீங்களா இங்க வரவச்சு அவரை போட்டுவிட சொன்னதா இருக்கட்டும் ப்ளீஸ்" என்று தவிப்போடு முடித்தவளின் ஏக்கத்தை புரிந்து கொண்ட சுஜிக்கு அத்தனை மகிழ்ச்சி... எங்கே தம்பிக்கு அவள் மீதிருக்கும் காதலில் கொஞ்சமும் தளிர்க்கு இல்லையோ..? என்று நினைத்திருந்தவள் நெஞ்சில் தளிர் பால் வார்க்க மகிழ்ச்சியோடு தம்பிக்கு அழைத்துவிட்டாள்.
அடுத்த இருபதாவது நிமிடம் முட்டிவரை மடித்துவிடப்பட்ட வெள்ளை சட்டை ஜீன்ஸ் சகிதம் அடங்க மறுத்த கேசத்தை அலட்சியமாக கோதியவாறே புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்தான் உதயாதித்தன்.
"ஹைய் மாமா வந்தாச்சு.." என்று தளிரிடம் அரட்டை அடித்து கொண்டிருந்த கௌஷிக்கும் வைஷுவும் வாசலை நோக்கி ஓடிட உடனே சமையலறைக்கு சென்ற தளிர், "அண்ணி அவர் வந்துட்டாரு நான் தண்ணீர் எடுத்துட்டு போறேன்.. ப்ளீஸ் நான் சொன்னதா தெரியக்கூடாது.." என்று உறுதிபடுத்தி கொண்டு உதயாதித்தனை வரவேற்க சென்றாள்.
வரவேற்பறைக்கு சென்றவள் அங்கே அவன் பின்னே அம்பலவாணன், ஜெகதீஸ்வரி, ராகவனின் பெற்றோர், நிவி என்று மொத்த குடும்பமும் இருப்பதை கண்டு அதிர்ந்து நிற்க, "எல்லாருக்கும் தண்ணீர் எடுத்துட்டு வா தளிர் அப்படியே சுஜியை வரசொல்லு" என்றதும் அப்படியே யூடர்ன் அடித்தவள், "அண்ணி அவரை மட்டும் தானே வரசொன்னீங்க..?" என்று அவசரமாக கேட்க..,
"ஆமா.. ஏன்..?"
"அங்க வந்து பாருங்க எல்லாருமே வந்திருக்காங்க"
"யாரெல்லாம்..?" என்றவாறே சுஜிதா வெளியில் வர அங்கே "வாங்க சம்பந்தி வாங்க சம்பந்தியம்மா" என்று அவள் மாமனார் வரவேற்று கொண்டிருந்தார்.
"நான் உதய் மட்டும் தான் வரசொன்னேன் எப்படி இவங்கெல்லாம் வந்தாங்கன்னு தெரியலையே"
"அட ஏன் தளிர் அங்கேயே நின்னுட்ட வாம்மா.." என்று அம்பலவாணன் அழைக்க உதயாதித்தனை பார்த்தவாறே தளிர் அவரிடம் வர, "சாப்ட்டியா..? நலங்கு நல்லபடியா முடிஞ்சதா தளிர்.." என்றவர் பேசிக்கொண்டே செல்ல,
"எப்படி இருக்க தளிர்..? இங்க எல்லாம் உனக்கு ஓகேவா.." என்றபடி அவளருகே வந்தான் உதய். ராஜியும் ஜெகாவும் தளிரை பார்ப்பதை கண்டவள் சிறு தலையசைப்பை மட்டும் உதய்க்கு கொடுத்துவிட்டு, "ஆசிர்வாதம் பண்ணுங்க மாமா" என்று அவர்கள் பாதம் பணிய அவளோடு உதயனும் இணைந்திருந்தான்.
சரவணின் தாத்தா பாட்டியியில் தொடங்கி பெரியவர்கள் அனைவரிடமும் இருவரும் ஆசி பெற இறுதியாக, "வா தளிர் ராஜிம்மா கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்" என்று உதய் அழைக்க 'என்னடா இது..?' என்பது போல பார்த்து நின்றாள்.
ராஜிக்கோ உதய் சொன்னதை கேட்டு உச்சி குளிர்ந்து போனது. பின்னே சுஜி அவரை பேசிய பேச்சில் உள்ளுக்குள் எரிமலையாக கொதித்து கொண்டிருந்த ராஜிக்கு அதுநேரம் வரை தளிர் மீதிருந்த கோபம் கூட பின்னுக்கு தள்ளப்பட மகிழ்ச்சியுடன் உதய்யை பார்த்தவர் பூக்களை கையில் எடுத்துகொண்டு ஆசிர்வதிக்க தயாராய் நின்றார்.
"தளிர் என்ன பார்த்துட்டு இருக்க வா" என்று அவள் கைபிடித்த உதய் ராஜியின் முன்சென்று "ஆசிர்வாதம் பண்ணுங்க ராஜிம்மா" என்று அவர்கள் குனியும் முன்னமே எங்கிருந்தோ ஓடிவந்த கௌஷிக் வேகமாக தளிரை இடிக்க வைஷு உதய்யை இடித்து கொண்டு நின்றாள். "ஹே பார்த்து.." என்று வைஷுவை ஒரு கையில் பிடித்தவன் தடுமாறிய தளிரையும் தன் கையணைவில் கொண்டு வந்திருந்தான் உதய்.
"மாமா மாமி காப்பாத்துங்க" என்ற கௌஷிக் தளிரை கட்டிக்கொள்ள, "விடுங்க மாமா" என்று தன் கையில் இருந்து திமிறிய வைஷுவை பிடித்துகொண்டு, "ஏன்டா நல்லாதானே இருந்தீங்க திடீர்னு என்னாச்சு..?"
"அவனை நான் சும்மா விட மாட்டேன் விடுங்க மாமா" என்று வைஷுவின் முகத்தில் அப்படியொரு கோபம் அதை கண்ட பெரியவர்களின் கவனமும் குழந்தைகளிடம் குவிந்தது.
"மாமா அவன் என் ட்ரெஸ்ல நெயில் பாலீஸ் ஊத்திட்டான்.. நீங்க விடுங்க" என்று வைஷு மீண்டும் பல்லை கடித்து கொண்டு கௌஷிக்கை நெருங்க,
"இவ்ளோ நேரம் இங்கதானடா இருந்தீங்க இது எப்போ..?" என்று சலிப்புடன் சுஜி பார்க்க தளிரோ பள்ளியில் அமைதியின் ஸ்வரூபமாய் இருக்கும் வைஷுவின் இந்த அவதாரத்தில் வியந்து போய் பார்த்திருந்தாள்.
"அவன் சின்ன பையன் ஏதோ தெரியாம செய்திருப்பான் அமைதியா இரு வைஷு" என்றவள், "என்ன நிவி வைஷு இவ்ளோ நாஹ்ட்டியா..? கிளாஸ்ல ரொம்ப அமைதியா இருப்பாளே"
"கிளாஸ்ல இந்த முட்டகண்ணன் இருக்க மாட்டான் மேம் அப்போ நான் வெரி குட் கேர்ளா இருப்பேன்.. அவனை நம்பாதீங்க ஹீ இஸ் பேட் பாய்" என்ற வைஷு கண்ணை கசக்க,
கௌஷிக்கை தன்புறம் இழுத்த உதய், "எதுக்குடா அவ ட்ரெஸ்ல நெயில் பாலிஷ் கொட்டின..? கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டியா..?" என்று விசாரணையை தொடங்கி இருவரையும் சமாதானம் செய்து முடித்து அமர்ந்தான்.
ஜூசோடு அவனருகே வந்த சுஜி, "உன்னை மட்டும் தானே உதய் வரசொன்னேன் எதுக்கு எல்லாரையும் கூட்டிட்டு வந்த..?"
"ஏன்க்கா அதனால ஏதாவது பிரச்சனையா..?"
"அப்படியில்லடா ஆனா நீ மட்டும் வந்திருக்கலாமே..?"
"நீ கால் பண்ணப்போ அப்பாவோட பேசிட்டு இருந்தேன், நான் கிளம்பவும் நிவி அவளும் ஏதோ தளிருக்கு சீர் செய்யணும் வருவேன்னு சொல்லி ராகவோட கிளம்பிட்டா.. நான் கார் எடுத்தா அப்பம்மா, மாமா எல்லாரும் தளிரை பார்க்கணும்னு கூட வந்துட்டாங்க நான் எப்படி வேண்டாம்னு சொல்ல..?"
"ப்ச் அதெல்லாம் ஒண்ணுமில்ல சரி வா சாப்பிடுவ நேரமாச்சு.."
"ஏன்க்கா உன் முகம் ஒரு மாதிரி இருக்கு எனி ப்ராப்ளம்..?"
"இல்லல்ல நீ வா.." என்றழைக்க "இப்போதானே ஜூஸ் குடிச்சேன் அதோட நான் லேட்டா தான் ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணினேன் இருக்கட்டும் அப்புறம் சாப்பிடுறேன்" என்றவனை சரவணின் பெற்றோர் அழைக்கவும் அவர்களிடம் சென்றான்.
*************************
தளிர் அனைவருக்கும் பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க அங்கே வந்த கௌஷிக் "மாமா கண்ணை மூடுங்க உங்களுக்கு ஒரு சப்ரைஸ் காட்டனும்"
"வா வைஷுக்கா.." என்ற கௌஷிக் உதய் முன் வைஷுவை நிறுத்தி "இப்போ கண்ணை திறங்க மாமா" என்றான். அருகேயிருந்த நிவியின் மாமியார், "என்னம்மா கொஞ்ச முன்ன தான் இரண்டு பேரும் அப்படி அடிச்சுகிட்டாங்க உடனே சமாதானமாகிட்டாங்க"
"அவங்க எப்பவும் இப்படி தான் அத்தை..! எப்போ மல்லுகட்டுவாங்க எப்போ கொஞ்சிப்பாங்கன்னே தெரியாது அதான் நான் அவங்களுக்கு நடுவுல போகவேமாட்டேன்" என்று புன்னகைக்க, "அதென்னவோ உண்மை தான்! குழந்தைங்க சண்டையை உடனே மறந்து சமாதானம் ஆகிடுவாங்க.."
"இங்க பாருங்க மாமா அக்கா உங்க ஃபேஸ்ஸும் மாமி ஃபேஸ்ஸும் வரைஞ்சிருக்காங்க, எப்படி இருக்கு சொல்லுங்க" என்று வைஷுவின் கையை காண்பிக்க பெரியவர்களின் கவனம் குழந்தைகளின் மீது திரும்பியது.
"மாமா உங்க பேர்கூட எழுதியிருக்கேன் எங்கன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்" என்ற வைஷுவின் கையை பிடித்த உதய்,
"வாவ் ரொம்ப அழகா இருக்கே வைஷு" என்றவன் உள்ளங்கையில் எழுதியிருந்த அவன் பெயரை சரியாக கண்டுபிடித்து சொல்லவும் "ஹேய்ய்ய்ய்" என்று குதுகலித்தவர்கள் "மாமா உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸ்ஸும் இருக்கு கண்ணை மூடுங்க" என்ற இருவரும் தளிரை அழைத்து வந்து அவன்முன் நிறுத்தினர்.
"மாமி கையிலயும் உங்க பேர் எழுதியிருக்கு எங்கன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்..?" என்று வைஷு சொல்லவும் "ஆமாண்ணா நான் மறந்தே போயிட்டேன், அண்ணி உட்காருங்க" என்று உதய் அருகில் சேரை எடுத்து போட்ட நிவி,
"அண்ணி மெஹந்தில உங்க பேர் எழுதியிருக்காங்க, எங்க இருக்குன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்" என்றிட புன்னகையோடு தளிரின் கையை பிடித்த உதய் அவள் உள்ளங்கையில் விழிகளை ஓடவிட்டான்.
உதய்யை நெருங்கி அமர்ந்த ராகவன், "மச்சான் இது நம்ம மானப்பிரச்சனை எப்படியாவது கண்டு பிடிச்சுடுடா இல்ல காலம் முழுக்க சொல்லி காட்டுவாங்க... உன் தங்கச்சி இப்போ வரை என்னை வச்சு செய்யறா.." என்று நண்பன் காதை கடித்தவன் தன் திருமணத்தின் போது நிவி அவன் பெயரை விரல் நுனியில் எழுதியிருந்ததில் கண்டுபிடிக்காமல் கோட்டை விட்டிருந்தான்.
"புரியுது மச்சி" என்ற உதய் தளிரின் கையை திருப்பி மீண்டும் முழங்கையில் இருந்து தன் பார்வையை கூர்மையாக்கிட உடனே ராகவன், சுஜி, பெரியவர்கள் என்று அனைவரும் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் கடந்த நிலையிலும் உதய்யால் அவன் பெயரை கண்டுபிடிக்க முடியாமல் போக, "தளிர் அப்படி எங்க எழுத சொன்ன..? பாவம் என் தம்பி ரொம்ப திண்டாடிட்டு இருக்கான்" என்று சுஜி சிரிப்புடன் கேட்கவும்.,
"கையில தான் அண்ணி எழுதியிருக்கேன்.. அதுவும் இரண்டு கையிலயும்" என்று சிரித்த தளிரை கண்டு, "ஆனாலும் அவனை ரொம்ப திணற வைக்கிற நீ..! நடத்து நடத்து" என்று கணவன் அருகே அமர்ந்து ரசிக்க தொடங்கிவிட்டார்.
Comments
Post a Comment