"உன்னோட டவல், சோப் எல்லாம் எடுத்து வச்சுட்டேன் ஆதி.. நீ குளிச்சிட்டு வந்துடு நான் சூடா பால் கொண்டு வரேன்"
"சரி ராஜிம்மா..! நீங்க வரும் போது
அம்மாகிட்ட என்னோட ஃபோன் கொடுத்திருந்தேன் அதை வாங்கிட்டு வந்துடுங்க.. அப்புறம்
தலைவலின்னு சொல்லிட்டு தளிர் சரியாவே சாப்பிடலை, எப்படி
இருக்குன்னு கேட்டு அவளுக்கும் ஒரு காஃபி போட்டு கொடுத்துடுங்க"
என்றவன் குளியலறைக்குள் செல்ல,
"இவளுக்கு நான் சேவை
செய்யணுமா? எல்லாம் என் தலையெழுத்து" என்றவாறே முதலில்
உதய்க்கு பாலை வாங்கிக்கொண்டு அவன் கைபேசியோடு அறைக்கு திரும்ப தளிர் உதய்க்கு
அழைத்திருந்தாள்.
'இந்நேரத்துக்கு எதுக்கு என் பிள்ளைக்கு
கூப்பிடுறா..? ச்சை விவஸ்த்தை கெட்டவ இங்கயும் ஏதாவது
கூத்துகட்ட போறாளோ..?' என்ற யோசனையோடே ராஜி தளிரின் அழைப்பை அமைதியாக
ஏற்க.,
"ஹலோ உதய் உங்ககிட்ட ஒரு முக்கியமான
விஷயம் பேசணும்... வெரி அர்ஜென்ட்! இங்க என் ரூம்ல எல்லாரும் வந்துட்டு போயிட்டு
இருக்காங்க இஃப் யூ டோன்ட் மைண்ட் மாடிக்கு வரீங்களா..?" என்றபோதே,
"நாலு பேர்கள் கண்படக்கூடும் நீயும்
நானும் கூடினால்
ராஜயோகம் கைவரும் இன்று தோளில் தோகை ஆடினால்.."
என்றவாறே வெளியில் வந்தவன் "யார் ராஜிம்மா
ஃபோன்ல" என்று தலைதுவட்டி கொண்டே கேட்க உடனே அழைப்பை
துண்டித்த ராஜி, "மருமகள் தான்ப்பா உன்கூட பேசணுமாம்.. நீ பேசு நான்
காஃபி போட்டு கொடுத்துட்டு வரேன்" என்று தலையில் அடித்துகொண்டு சென்ற
ராஜிக்கு மனம் வெதும்பியது..
உடனே தளிருக்கு அழைத்தவன், "நான் டஃப்பான
கேள்வி தானே கேட்டிருந்தேன் மேடம் அதுக்குள்ள ஆன்சர் கண்டுபிடிச்சிட்டீங்களா..?"
என்று சிரிப்போடு உதய் கேட்க,
"அதில்ல உதய் இது வேற ஒரு முக்கியமான
விஷயம் உங்ககிட்ட அர்ஜென்ட்டா பேசணும் மாடிக்கு வரீங்களா..?" என்று கேட்டவள் குரலில் இருந்த அழுத்தத்தில் விளையாட்டை கைவிட்டவன்,
"உனக்கு தலைவலி எப்படி இருக்கு ராஜிம்மா
கிட்ட காஃபி கொடுக்க சொன்னேனே வந்ததா..?"
"இல்ல உதய் பரவால்ல பட் எனக்கு உடனே
பேசணும் வரீங்களா..?"
"சரி வரேன்" என்றவன் வைக்கவும்
நைட்டியில் இருந்தவள் அவசரமாக சுடிதாருக்கு மாறி வெளியில் வர அங்கே பலர் உறங்க
சென்றிருக்க ஓரிருவர் அமர்ந்திருந்தனர்.
சீதா உறவினர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றிருப்பதாக சொன்ன தென்றலிடம்
தான் உதய்யை சந்திக்க போவதை சொல்லிவிட்டு மாடிக்கு சென்றவள் அவனுக்கு காத்திருக்க
தொடங்கினாள்.
சமையல் கூடத்தில் இருந்த தங்கையிடம், "ஜெகா நாமெல்லாம் மாப்பிள்ளை முகத்தை கல்யாணத்துக்கு அப்புறம் தான் முழுசா
பார்த்தோம் ஆனா இங்க பொம்பளைக்கு கூச்சங்கிறது வேணாமா..? இந்த
ராத்திரியில ஆதியை மொட்டை மாடிக்கு வர சொல்லி இருக்காடி இதெல்லாம் எங்கயாவது
நடக்குமா..? எனக்கென்னமோ சரியாபடலை, எங்க
நாம உன் வீட்டுகாரர் பேச்சை கேட்டு அவசரபட்டுட்டோமோன்னு இருக்கு.."
"எதுக்குக்கா வர சொன்னா..?" என்ற ஜெகாவிற்குமே தளிரின் நடவடிக்கைகள் அத்தனை ஏற்பற்றதாக இருந்தது. தன்
பெண்கள் மாமியாரிடம் எத்தனை உரிமையாக வலம் வருகையில் தளிர் இதுவரை மாமியாரான
தனக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் போனதோடு மகனோடு
மட்டும் தன் உறவை வளர்ப்பது அவருக்கு அச்சம் கொடுத்தது.
"இருடி"என்று கிளம்பிய ராஜிக்கு இளந்தளிர்
உதயனை மாடிக்கு தனியாக வர சொன்னதன் பின்னணி அறியாவிட்டால் மண்டை வெடித்து போகும்
நிலை. வேகமாக மாடிக்கு செல்லவிருந்த ராஜியை வழியில்
வைஷுவும் கௌஷிக்கும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு வந்து இடித்து கீழே தள்ளிவிட,
"அம்மாஆஅ.." என்று இடுப்பை பிடித்துகொண்டு அமர்ந்துவிட்டார்.
"என்னாச்சு பாட்டி..?" என்று வைஷு கேட்க அவர்கள் பின்னே வந்த நிவியும் கேட்க, "என்னடி இதுங்க இன்னும் தூங்காம இருக்குதுங்க..?"
"அதுக்கு தான் உங்களை தேடி வந்தேன்..
குழந்தையை கொஞ்சுறேன்னு என் பிள்ளையையும் எழுப்பி விட்டுடாங்க.. அத்தை கிட்ட
கொடுத்துட்டு வந்திருக்கேன்.. நான் அவனை தூங்க வைக்கிறேன் நீங்க இவங்களை
கூட்டிட்டு போய் தூங்க வைங்க" என்று நிவி அதிகாரமாக சொல்ல அதை மறுக்க முடியாத
ராஜி இருவரையும் அழைத்து கொண்டு அறைக்கு சென்று கதை சொல்லி உறங்க வைக்க
முற்பட்டார்.
அதேநேரம் சூடான காஃபியோடு மாடிக்கு சென்ற உதய் தளிரிடம்
கொடுக்க அவளோ அதை பருகும் நிலையில இல்லாது கைபிடியில் வைத்து விட்டு, "நான் ஒரு.." என்று ஆரம்பிக்கவுமே கோப்பையை அவள் இதழ்களில் பொருத்திய
உதய், "எதுவா இருந்தாலும் குடிச்சிட்டு பேசு அப்போதான்
கேட்பேன்.." என்றவன் தன் கோப்பையை எடுத்துகொண்டு அவளை ஆராய்ந்தவாறே குடிக்க
தொடங்கினான்.
ஒருமணி நேரத்திற்கு மேலாக ராஜியை படுத்தி எடுத்த குழந்தைகள்
ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல அவசரவசரமாக இடுப்பை பிடித்துக்கொண்டு மாடிக்கு
சென்றார் ராஜி,
அங்கே கைகளை கட்டிக்கொண்டு கைபிடியில் சாய்ந்து நின்றிருந்த
தளிரை நெருங்கிய உதய் அவள் முகத்தை இருகரங்களால் அள்ளிக்கொண்டு அவள் நெற்றியில்
அழுத்தமாக முத்தமிட்டு இறுக்கமாக கட்டிக்கொண்டான்.
அதை கண்டு அதிர்ந்த ராஜி மீண்டும் தலையில் அடித்து கொண்டு
புகைப்படம் எடுத்து கொண்டு கீழே வந்தார்.
இரவு முழுக்க தூங்காமல் உதய் அனுப்பிய காணொளிகளை பார்த்து
கொண்டிருந்த தளிரின் முகத்தில் நிரந்தரமாக புன்னகை குடியேற அவன் கொடுத்த
முத்தத்தின் தித்திப்பு மனதெங்கும் விரவியிருக்க தளிரின் சிந்தை முழுக்க
உதயாதித்தனின் ராஜ்ஜியம் தான். அவனை பார்க்கும் ஆவலில் அதிகாலையே எழுந்துவிட்ட
தளிரின் முகத்தில் என்றும் இல்லாத பொலிவு குடிகொண்டு இருந்தது.
கைபேசியை எடுத்து மீண்டும் உதய் அனுப்பிய பாடலை கேட்டவளின்
முகத்தில் செம்மை படர இதழ்களில் உருகிய புன்னகையோடு அவனை போலவே இருவரும்
சேர்ந்திருக்கும் புகைப்படங்களை கொண்டு பாடல் வரிகளை கோர்த்து பதில் அனுப்பினாள்.
இரவு தளிருடனான நிமிடங்களுக்கு பின் அறைக்கு திரும்பிய உதய்
புன்னகையோடு படுக்கையில் சரிந்து சுகமாக உறக்கம் கொள்ள தளிரின் மெசேஜூடன் அவன்
காலை அழகாய் புலர்ந்தது அவள் கொடுத்த நிறைவுடன் குளிக்க சென்றவன் வேகமாக தயாராக
தொடங்கினான்.
தளிரை அலங்கரிக்க வந்த அழகுநிலைய பெண்கள் அடுத்த ஒருமணி நேரத்தில்
தளிரை ஜொலிக்க வைத்திருந்தனர். சுஜியின் கைவண்ணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட புடவை
தளிருக்கு அத்தனை அழகாக இருந்தது.
மகளை நெட்டி முறித்த சீதாலக்ஷ்மி திருஷ்டி பொட்டு வைக்க
தளிரின் அறைக்கு வந்து வைஷு "மாமி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்னோட டிரஸ்
எப்படி இருக்கு பாருங்க..?"
"வைஷு ரொம்ப கியூட்டா இருக்கீங்க"
என்றவள் இருவரையும் செல்ஃபி எடுத்து ஏற்கனவே எடுத்த புகைப்படங்களையும் சேர்த்து
உதய்க்கு அனுப்பி வைத்தாள்.
முதலில் மணமேடைக்கு வந்த உதயாதித்தன் பூஜை செய்திட அடுத்து
சர்வலங்காரத்தோடு வந்த இளந்தளிர் உதய் அருகே அமர்ந்து பூஜை செய்ய
தொடங்கியிருந்தாள். சுஜியும் நிவியும் மணமேடையில் கணவரோடு இணைந்து
நின்றிருந்தனர்.. வரவேற்ப்பரையில் சம்பந்திகளோடு நின்றிருந்த அம்பலவாணன் சடங்குகள்
ஆரம்பிக்கவும் மேடைக்கு வந்துவிட்டார்.
முதலில் அம்பலவாணன் ஜெகதீஸ்வரி தம்பதியருக்கு மணமக்கள் கால்கழுவி
பாதபூஜை செய்திட அடுத்து கஜபதியும் அவர் மனைவியும் வந்து நிற்க அதுநேரம் வரை
கேட்டுக்கொண்டிருந்த மேளசத்தம் நின்றுவிட மந்திரம் உச்சரித்து கொண்டிருந்த ஐயரின்
வார்த்தைகைள் தடைபட்டுபோனது "கல்யாணத்தை நிறுத்துங்க" என்ற குரலில்.
தாம்பாளத்தில் கால் வைக்க போன கஜபதி தன் செயலை நிறுத்திவிட்டு
பார்க்க கூட்டத்திற்கு மத்தியில் நின்றிருந்த இருபத்திஐந்து வயது மதிக்கத்தக்க
வாலிபன்,
"என் பொண்டாட்டிக்கு நீ எப்படிடா தாலி கட்டுவ..? எந்திரி இல்ல நடக்கறதே வேற.." என்று உதய்யை பார்த்து சொல்ல மொத்த
கூட்டமும் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனது.
கூட்டத்தில் சலசலப்பு எழ வந்திருந்த வாலிபன் கையோடு கொண்டு
வந்திருந்த புகைப்படத்தை அனைவரிடமும் கொடுத்து, "உயிருக்கு உயிரா
காதலிச்சு கட்டிக்கிட்ட என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ண பார்க்கிறான் நீங்களே
கேளுங்க இந்த நியாயத்தை.." என்று கேட்டுக்கொண்டிருக்க தளிரை நெருங்கிய ராஜி
அவளிடம் புகைப்படத்தை காட்டி,
"இது நிஜமா இதுல இருக்கிறது நீதானா..?
உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா..?" என்று
கேள்விகளை தொடுக்க அவர் காட்டிய புகைப்படத்தில் பட்டுபுடவை பூவோடு நின்றிருந்த
இளந்தளிரின் கழுத்தில் புதிதாக வந்திருந்த வாலிபன் தாலி கட்டிக்கொண்டிருந்தான்.
மணமேடையில் திருமண சடங்குகள் ஆரம்பிக்க குழந்தைகள் இருவரும்
மணமக்களின் அருகே அமர்ந்து கொண்டு ஒவ்வொன்றையும் ஆர்வமாக கவனித்திருந்தனர்..
பேரனின் திருமணத்தை அருகே இருந்து பார்க்கும் வகையில் அண்ணாமலை அன்னபூரணிக்கு
அங்கேயே நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. தளிரும் உதயனும் குறையாத மகிழ்வோடு
அம்பலவாணன் தம்பதியருக்கு பாதபூஜை செய்து முடித்த தருவாயில், "இந்த கல்யாணம் நடக்ககூடாது, நிறுத்துங்க" என்று
ஓங்கி ஒலித்தது மண்டபத்தின் மத்தியில் நின்றிருந்த வாலிபனின் குரல்.
ஒலித்து கொண்டிருந்த மங்களவாத்தியங்களின் ஒலி நின்று போகவும்
மேடையில் இருந்தவர்களின் கவனம் குரல் வந்த திசையில் குவிய விருந்தினர்கள்
மத்தியிலும் பெரும் சலசலப்பு.
"என் பொண்டாட்டிக்கு நீ எப்படிடா தாலி
கட்டுவ..? எந்திரி இல்ல நடக்கறதே வேற.." என்றவனை
இமைக்காமல் பார்த்திருந்த இளந்தளிருக்கு என்ன முயன்றும் இத்தனை வருடங்களுக்கு
பின்னர் தன் முன் தோன்றியிருப்பவனை கண்டு தூக்கிவாரி போட்டது. நெஞ்சம் படபடக்க
இமைக்கவும் மறந்திருந்தவளுக்கு அவளுள் புதைந்து போன நினைவுகள் அத்தனையும்
தன்னையறியாமல் மீண்டும் படையெடுத்தது.
அதிலும் இறுதியாக அன்று சாலையில் இருவருக்கும் இடையில்
நடைபெற்ற உரையாடல் அவள் மனக்கண்ணில் தோன்றிய நொடி அவள் உடல் உதறல் எடுக்க
தொடங்கிவிட்டது. அதுகாறும் தளிரின் அருகே இருந்த உதய் சரத்தை கண்டதும் அவள் கையை
இறுக்கமாக பிடித்துக்கொண்டான்.
அப்போதும் அவள் நடுக்கம் குறையாதிருக்கவும்
"ஒண்ணுமில்லடி ரிலாக்ஸ்" என்று அவளை தோளோடு சேர்த்து அணைத்த நொடி
வந்திருந்தவன் அவர்களின் திருமண புகைப்படத்தை முதல் வரிசையில் தொடங்கி
எல்லோருக்கும் விநியோகிக்க தொடங்கிவிட்டான். அதை கண்ட ஜெகா, ராஜி,
கஜபதி கீழே இறங்க அவர்களுடன் தென்றலும் அவசரமாக இறங்கிட அவளிடமும்
புகைப்படம் கொடுக்கப்பட்டது.
அதில் பட்டுபுடவை பூவோடு நின்றிருந்த இளந்தளிரின் கழுத்தில்
புதிதாக வந்திருந்த வாலிபன் தாலி கட்டிக்கொண்டிப்பதை கண்ட இளந்தென்றல்
அதிர்ச்சியோடு சிலையாய் சமைந்து போனாள்.
"ப்ளீஸ் தளிர் ஜஸ்ட் பீ ஸ்ட்ராங்! நத்திங்
இஸ் கோயிங் டூ ஹேப்பென் நான் உன்கூட தான் இருக்கேன், டோன்ட்
திங்க் அபவுட் எனிதிங்" என்று அவளுச்சியில் முத்தமிட்டவன் அவள் முதுகை
வருடியவாறே, "எது வந்தாலும் பார்த்துக்கலாம்டி"
என்ற உதயனின் வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையின் கலங்க முற்பட்ட விழிகளை அவள்
கட்டுப்படுத்த நினைத்தாலும் தன் போக்கில் கண்ணீர் துளிகள் கன்னங்களை நனைக்கதான்
செய்தது.
"ப்ச் தளிர் எதுக்குடி அழற..? அதுவும் அந்த பொறுக்கி முன்னாடி.." என்று சிவந்த விழிகளுடன் அவள்
கண்ணீரை துடைத்தவன், "பீ ஸ்ட்ராங்..! இத்தனை வருஷம்
கழிச்சு இதை நான் உனக்கு சொல்ல வேண்டியதில்ல", என்றவனுக்கு
நேற்றிரவே அவளிடம் தன் சந்தேகத்தை சொல்லி அவளை தயார்படுத்தி இருக்க வேண்டுமோ..?
என்ற எண்ணம் தோன்ற தலையை அழுந்த கோதியவன்,
"ப்ச் தளிர் லிசென் என்னை மீறி அவன் உன்னை
எதுவும் செய்ய முடியாதுடி உனக்கு புரியுதா..? ட்ரஸ்ட்
மீ" என்றவனின் விழிகளில் சரத் விநியோகித்த புகைப்படம் விழவும் கோபமாக மனையில்
இருந்து எழ முயன்றான்.
"உதய் மனையை விட்டு எழக்கூடாதுபா நீ இரு
நாங்க பார்த்துக்கறோம்" என்ற அம்பலவாணன், "ஐயரே
மந்திரத்தை நிறுத்தாம சொல்லிட்டே இருங்க நான் வந்துடறேன்" என்றுவிட்டு
மருமகன்களோடு கீழே இறங்கினார்.
விருந்தினர்களில் முக்கிய புள்ளிகள் எல்லாம் முதல் வரிசையை
ஆக்கிரமித்து இருக்க அம்பலவாணன் கீழே இறங்கியதும் அவரை சுற்றிவளைத்து கொண்டனர்.
அவரின் நெருங்கிய நண்பரும்தொழிலதிபருமான சுந்தரேசன் புகைப்படத்தை காட்டி,
"என்னடா அம்பலா இது? அவன் சொல்றது உண்மையா?
உன் மருமகளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சா ஏன் இதை முதல்லயே
சொல்லலை உதய்க்கு வேற பெண்ணே கிடைக்கலையா..? சொல்லியிருந்தா
என் தம்பி பெண்ணை கட்டிகொடுத்திருப்பேனேடா.." என்று வருத்தத்தோடு நண்பன்
மகனுக்கு இழைக்கபட்ட துரோகம் குறித்து பிறர் பேசுவதை பொறுக்காமல் கேட்கவும்
மற்றொருவர்,
"அம்பலவாணன் உங்களுக்காக தான் சிஎம் கிட்ட
கஷ்டப்பட்டு கல்யாணத்துக்கு டேட் வாங்கினேன்.. அவரும் சென்னையில இருந்து
கிளம்பிட்டார் நம்ம கல்யாணத்தை முடிச்சிட்டு மதியம் மதுரையில நடக்கிற கூட்டத்துல
கலந்துக்க போறதா தகவல் வந்திருக்கு.. அவர் வரும்போது பிரச்சனை இல்லாம இருக்கணும்
புரியுதா..?" என்று ஆளுங்கட்சியை சேர்ந்த மற்றொருவர்
"யார் இந்த பையன், இவனுக்கும்
உன் மருமகளுக்கும் என்ன சம்பந்தம்..? ஏன்பா அப்படியே
இருந்தாலும் இதையெல்லாம் மண்டபம் வரை வளர விடலாமா..?" என்று
ஆளாளுக்கு அவரை பிடித்து கொண்டனர்.
"அப்படியில்லப்பா இது வேற ஒரு பிரச்சனை..
என் மகனுக்கும் மருமகளுக்கும் கல்யாணம் கண்டிப்பா நடக்கும் நீங்க உட்காருங்க"
என்று சொல்லிகொண்டிருக்க வந்திருந்தவனோ மண்டபத்தின் மத்தியில் நின்று,
"என் பொண்டாட்டியை தட்டி பறிக்க பார்க்கிறான் நீங்களே கேளுங்க
இந்த அநியாயத்தை.. எப்படியாவது தளிரை என்கூட அனுப்பி வச்சுடுங்க" என்று
திருமணத்திற்கு வந்திருந்தவர்களிடம் கேட்டு கொண்டிருந்தவனை பிடித்து அறைந்த
ராகவன்,
"யார்டா நீ..? உனக்கு என்ன வேணும்..? யார் இந்த கல்யாணத்தை கெடுக்க சொல்லி உன்னை
அனுப்பினா உண்மையை சொன்னேனா தப்பிச்ச இல்ல மோசமா அனுபவிப்ப.." என்று மீண்டும் அறைய
அத்தனையும் லோக்கல் சேனலில் லைவ்வாக ஒளிபரப்பபட்டு கொண்டிருந்தது.
"ராஸ்கல் பணம் பறிக்க இப்படி ஃபோட்டோவை மார்ஃபிங்
செய்து எடுத்துட்டு வந்திருக்கியா..? மரியாதையா
உண்மையை சொல்லு" என்ற சரவணனும் அவன் முகத்தில் பளீரென அறைந்திருந்தான். எங்கே
தொழில் போட்டி காரணமாக யாரேனும் உதய்க்கு எதிராக அனுப்பி வைத்திருக்கின்றனரோ என்று
சந்தேகித்தவனின் மனம் யாராக இருக்ககூடும் என்றும் அலச தொடங்கி விட்டது.
Comments
Post a Comment