வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

மனசெல்லாம் மழையே - 1

 

கல்யாணத் தேதி வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு” என்ற பாடலின் சப்தம் கூடிக்கொண்டே போகவும் இளஞ்சிவப்பு நிற டாப்ஸ் லான்க் ஸ்கேர்ட் சகிதம் புருவமத்தியில் சிறுபொட்டு மெல்லிய சந்தனகீற்று என்று துளி ஒப்பனையின்றி காணபட்டாள் நம் நாயகி இளந்தளிர். 

தளர பின்னபட்டிருந்த நெடுங்கூந்தலை அலட்சியமாக வலப்பக்கம் தவழவிட்டு எதிரே கணினி மடியில் புத்தகம் என்று மும்முரமாக கேள்வித்தாள் தயாரித்து கொண்டிருந்த இளந்தளிரின் கவனம் பாடலால் சிதறியது.

"ப்ச் எத்தனை முறை இவளுக்கு சொல்றது" என்ற முணுமுணுப்போடு தளிர் அறையினின்று வெளியில் வர அங்கே பாடல் வரிகளுக்கு ஏற்ப தோழிகளுடன் நடனமாடி கொண்டிருந்தாள் அவள் தங்கை  இளந்தென்றல்.

"கைஸ் ரெடி.." என்ற தென்றல் மீண்டும் பாடலை ஒலிக்கவிட இசைக்கு ஏற்ப தற்போது பெண்கள் அனைவரும் இருபிரிவாக பிரிந்து சுழன்று பின் தத்தம் இணையுடன் சேர்ந்து ஆடவேண்டும்.

வேகமாக சுழன்று கொண்டிருந்த தென்றல் ஒருகட்டத்தில் "ஹே ஸ்டாப் ஸ்டாப்!!" என்று நடனத்தை  நிறுத்தி தன்னருகே இருந்தவளிடம் "ச்சோ என்ன வினோ இது எத்தனைமுறை சொன்னேன் நாங்க இந்த பக்கம் வரும்போது நீ எதிர்ல வரணும்னு திரும்ப திரும்ப அதே தப்பு பண்ற என்னடியாச்சு உனக்கு..??"

"ஸாரிடி மறந்துட்டேன்... எனக்காக மூணாவது முறையா நீ ஸ்டெப் மாத்தியும் எனக்கு இதுமட்டும் சொதப்புது பேசாம நான் இல்லாம  நீங்க மட்டும் ஆடுங்களேன்.."

"என்ன பேசுற வினோ..? தளிர் அக்கா கல்யாண செலிபரேஷன்ல நீ இல்லாமையா நோ வே..!!" என்று கனி கூற..,

"வேறே என்ன செய்ய கனி ? நமக்கு ப்ராக்டீஸ் செய்ய அதிக நேரமில்ல கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கு.. என்னமோ தெரியல என்னால அந்த பீட் மட்டும் ஆடமுடியலை இதனால நீங்க ரிஹர்சல் பார்க்க முடியாம போகுது.. நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன் எனக்கு ரைட் எடுக்க வரமாட்டேங்குது அக்காக்கு நாம பெஸ்ட் கொடுக்கணும்னுதான் சொன்னேன்"

"டைம் இல்ல அதுக்காக உன்னை விட்டுட்டு ஆடறதா அக்காவே இதுக்கு ஒத்துக்கமாட்டாங்க.." என்று சுகன்யா..,

"ஒன்னும் பிரச்சனையில்ல இப்போபார் நானும் கனியும் ஆடிக்காட்டுறோம்.." என்ற தென்றல் பாடலை  ரீவைண்ட் செய்து தோழியுடன் கைகோர்த்து அசைவுகளை தொடர அதுநேரம் வரை அறை வாயிலில் அவர்களை கவனித்து கொண்டிருந்த தளிர் குறிப்பிட்ட வரிகள் முடியவும் வினோதினியுடன் கைகோர்த்து ஆடத்தொடங்கிட சுற்றியிருந்தவர்கள் ஹே என்று உற்சாக கூச்சலிட்டனர்.

"நீங்களும் ஆடுங்க.." என்று மற்ற பெண்களிடம் கூறியவள் பாடல் முடிவடையவும் ஹாலின் ஓரத்திற்கு விநோதினியை  அழைத்து சென்று, "ரொம்ப பெர்ஃபெக்ட்டா ஆடுற வினோ ஏன் இந்த பீட் மட்டும் மிஸ் பண்ற..??" என்ற கேள்வியுடன் விநோதினியை அமர்த்தி அவள் அசைவுகளை தனியாக ஆடிக்காட்டவும்.

"வாவ் அக்கா சூப்பர் ஒரேமுறை பார்த்துட்டு கரெக்டா ஆடிட்டீங்க.."

"உனக்கு வராதுன்னு நீ முடிவு செய்துட்டு ஒரு விஷயத்தை செய்தா அது நிச்சயம் வராம போகும்டா  உன்னால முடியும்னு நம்பு எல்லாருக்கும் வருது எனக்கு மட்டும் வரலைன்னு டென்ஷனாகாத.. ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் ஃபோகஸ், முக்கியமா வொர்க் ஆன் யுவர் வீக்னஸ்... ப்ராக்டிஸ் பண்ணினா நிச்சயம் உன்னாலயும் முடியும்" என்று அவளுக்கு சரியான அசைவுகளை சொல்லிகொடுத்து ஆடுவதற்கு உதவியவள் அடுத்த அரைமணி நேரத்தில் மற்றவர்களுக்கு இணையாக ஆட செய்திருந்தாள்.

"தேங்க்ஸ் க்கா.."

"இட்ஸ் ஓகேடா.. சத்தம் கொஞ்சம் கம்மியா வச்சுக்கோங்க நாளைக்கு குவெஸ்ட்டீன் பேப்பர் சப்மிட் பண்ணனும்"

"ஓகே ஓகேக்கா நீங்க கண்டினியூ பண்ணுங்க நாங்க குறைச்சுக்குறோம்" என்றவர்கள் சொன்னது போலவே சத்தத்தை குறைத்து மேலும் இரண்டு மணிநேரங்களுக்கு நடனபயிற்சியை முடித்திருந்தனர்.

அவர்கள்  கிளம்பவும் அன்னைக்கு அழைத்த தளிர், "எங்கம்மா வந்துட்டு இருக்கீங்க..? நான் இப்போ வீட்ல இருந்து கிளம்பினா உங்களை பிக் பண்ண சரியா இருக்கும் கிளம்பட்டுமா..?"

"வேண்டாம் தளிர்  ஆட்டோ பிடிச்சா பத்து நிமிஷத்துல வீட்டுக்கு வந்துடுவேன் கல்யாண பொண்ணுக்கு அதிக அலைச்சல்கூடாது.. அண்ணனும் வர புதன் கூரைபுடவை எடுக்கலாம்னு சொல்லியிருக்கார்.."

"புதன் கிழமையா..?" என்றதும்,

"ஆமாடா ஏற்கனவே இரண்டுமுறை நாள் பிக்ஸ் பண்ணி தள்ளி போயிடுச்சு இனியும் தாமதிக்க வேண்டாம்னு சொல்லிட்டார்.. என்ன கலர் டிசைன் எப்படின்னு யோசிச்சு வை நான் வந்துடுறேன்" என்றதும் சரிம்மா என்றவள் சமையலறைக்கு சென்றாள்.

சாதத்தை வடித்துவிட்டு சாம்பாரை தாளித்து முடித்து அப்பளம் பொரிக்க துவங்கிய இளந்தளிர் இருபத்து நான்கு வயதின் நிறைவில் இருக்கும் பாவை. ரகுபதி சீதாலக்ஷ்மியின் மூத்த மகள் மட்டுமல்ல  இன்னும் இரண்டு வாரத்தில் அம்பலவாணன் ஜெகதீஸ்வரியின் மருமகளாக செல்லவிருக்கும் புதுமணப்பெண்.

ஆசிரியர் பணியின் மீது கொண்ட  அலாதி விருப்பத்தில் இளநிலை பட்டபடிப்பை முடித்துவிட்டு தனியார் பள்ளியில் வேலை பார்க்க துவங்கியவள் வேலை செய்துகொண்டே பிஎட் முடித்து முதுகலை பட்டப்படிப்பையும் முடிக்கவிருக்கிறாள்.

இருபது வயதான இளந்தென்றல் இளங்கலை இறுதியாண்டில் இருப்பவள். வெளிநாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் முதுகலை சேர்ந்துவிடும் நோக்கத்தோடு தீவிரமாக படித்து கொண்டிருப்பவள் அதற்கான நுழைவு தேர்விற்கும் தயாராகி கொண்டிருக்கிறாள்.

தென்றலுக்கு தளிர் தமக்கை என்பதைவிட மற்றொரு அன்னை என்று சொன்னால் சரியாக இருக்கும். தங்கை கேட்டு எதையும் தளிர் இதுவரை மறுத்ததில்லை. ஆனால் குணத்தில் தளிரும் தென்றலும் நேரெதிர்!! அதிர்ந்துகூட  பேச தெரியாத வார்த்தைக்கு வலித்துவிடுமோ என்று பேச்சில் கவனம் கொள்பவள் தளிர் ஆனால் தென்றலிடம் வாய் கொடுத்து அத்தனை எளிதில் மீள முடியாது.

சமையலறைக்கு வந்தவள், "என்னக்கா இது இன்னும் அம்மா வரல. எவ்ளோ நேரமாகும் சொன்னாங்க..? எனக்கு பசிக்குது நீ போறியா இல்ல நானே போய் கூட்டிட்டு வரட்டா.." என்றவாறே தென்றல் சமைத்த உணவுகளை ஹாலில் கொண்டு வைக்க வீட்டினுள் நுழைந்தார் அவர்கள் அன்னை சீதாலக்ஷ்மி.

அவர் கையில் இருந்த பைகளை வாங்கிக்கொண்ட தளிர் "பெரிப்பா என்னம்மா சொன்னாரு.." என்று கேட்க தென்றல் அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

"சொல்றேன் ஆனா உன் ரூம்ல ஏசி போட ஆள் இன்னைக்கு வரேன் சொல்லியிருந்தாங்களே வந்தாங்களா..?" என்றார் அதிமுக்கிய கேள்வியாக..,

"அம்மா.." என்று தளிர் தயங்க

"என்னடா..?"

"இல்லமா இன்னும் வரலை சாயங்கலாம் ஆகிடுமாம் ஆனா இப்போ ஏசி கண்டிப்பா போடணுமா..?"

"அக்கா இதென்னக்கா கேள்வி அன்னைக்கு மாமாவோட பெரியம்மா ஏசி இல்லாம இருக்க முடியாதுன்னு கொஞ்ச நேரத்துலையே கார்ல போய் உட்காந்துட்டாங்களே மறந்துட்டியா? அத்தைகூட மாமா எப்பவும் ஏசிலயே தான் இருப்பாருன்னு சொன்னாங்களே..."

"ப்ச் அப்படியில்ல சிட்டு ஏற்கனவே கல்யாண செலவு நாம போட்ட பட்ஜெட்விட அதிகமாகிடுச்சு அதோட அம்மாவும் சொன்னதைவிட கல்யாணத்துக்கு நகை அதிகமா எடுத்துட்டாங்க.. இப்போவே சேவிங்க்ஸ் எல்லாமே கிட்டத்தட்ட முடிஞ்ச மாதிரிதான்  ஆனா அப்புறம் உனக்கு பார்க்கணுமே அப்போ என்ன செய்ய.. உன்னோட ஹையர் ஸ்டடீஸ்" என்று தளிர் தயங்க..

"இதெல்லாம்  நீ எதுக்கு யோசிக்கிற..? தென்றல்க்கு ஒன்னும் நாளைக்கே கல்யாணம் செய்யபோறது இல்ல அதுக்கு இன்னும் நாலஞ்சு வருஷமாகும் அப்புறம் அவ மேல்படிப்புக்கு லோன் கேட்டிருக்கேன் கண்டிப்பா சேக்ஷனாகிடும்"

"ஆனா ம்மா என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் உங்களால தனியா சமாளிக்க முடியாதே.. இதுல எதுக்கு லோன் எல்லாம் வேண்டாம் நாம்..." என்றவளை இடையிட்ட தென்றல்..,

“என்னக்கா பேசற கல்யாணத்துக்கு பிறகு நீ இல்லைன்னாலும் நான் டியூஷன் தொடர்ந்து எடுப்பேன் அதோட பார்ட் டைம் ஜாப் போவேன்க்கா எப்பவும் அம்மாவை கஷ்டப்பட விடமாட்டேன் நீ கவலைபடாத..” என்று  பேசிக்கொண்டே செல்ல...,

அம்மூ என்ன பிரச்சனை உனக்கு..? கல்யாண பொண்ணு சந்தோஷமா இல்லாம என்னென்னமோ யோசிச்சிட்டு இருக்க இதோபார் உன் அம்மா உடம்புல தெம்பிருக்கு என் பிள்ளைகளை என்னால கரையேத்த முடியும்.. ஆண்டவன் நாம கனவுலகூட நினைச்சு பார்க்காத சம்பந்தத்தை கொண்டு வந்திருக்கார்.. மாப்பிள்ளையோட  அப்பா அந்தஸ்து பேதம் பார்க்காம நம்ம வீடு தேடி வந்து பெண் கேட்டார் அப்படியிருக்கப்போ அவங்களை நாம அலட்சியபடுத்த முடியாது.."

"அதோட உன்னை விரும்பி கட்டிக்கபோற மாப்பிள்ளையோட சவுகரியம்தான் எனக்கு முக்கியம்... அவர் வீடு, ஆபிஸ் முழுக்க ஏசிலயே இருந்து பழக்கப்பட்டவர் உங்க கல்யாணத்துக்கு பிறகு இங்க வந்து இரண்டொரு நாள் தங்க வேண்டாமா..நம்மால வீடு முழுக்க போட முடியலைனாலும் உன் ரூம்க்கு கண்டிப்பா போடணும்" என்றிட தளிரின் வாய் தன்னால் முடிக்கொண்டது.

இரண்டு படுக்கையறைகள் ஒரு சமையலறை, சின்னதாக பூஜையறை மற்றும் ஒரு ஹால் என்று கச்சிதமான வீடு அவர்களுடையது.. தளிர் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின்னர் டியூஷன் படிக்க வரும் மாணவர்களுக்காக மேலே ஒரு அறையை கூடுதலாக கட்டியிருந்தனர் அதுவும்கூட நான்கு புறம் சுவரெழுப்பி மேலே ஷீட் போட்டு இருப்பர்.

இத்தனை ஆண்டுகளாக வேலூர் வெயிலுக்கு பழக்கபட்டிருப்பவர்களுக்கு பெரிதாக ஏசியின் தேவை இல்லாது போயிருந்தாலும் மாப்பிள்ளைகாக சீதாலக்ஷ்மி விரும்பி செய்கிறார்..

"சரிம்மா பெரிப்பா என்ன சொன்னார்..?" என்ற தளிர் மூவருக்கும் தட்டு வைத்து உணவு பரிமாறிக்கொண்டே கேட்க,

“சொல்றேன் முதல்ல சாப்பிடுங்க” என்று பிள்ளைகளோடு உணவை முடித்துகொண்டவர் சுவரில் சாய்ந்து அமரவும் பாத்திரங்களை ஒதுக்கிய தளிரும் தென்றலும் அவரின் இருபுறம் வந்தமர்ந்தனர்.

தளிர் அன்னையின் முதுகின் பின்னே தலையணை வைக்க தென்றல் அவர் பாதங்களை பிடித்து விட்டவாறே "சொல்லுங்கம்மா" என்றாள்.

"வரேன் சொல்லியிருக்காங்கடா எதுக்கும் கல்யாணத்துக்கு இரண்டு  நாள் முன்ன ஃபோன் பண்ணி நியாபகபடுத்த சொல்லியிருக்கார்" என்றதில் தென்றலுக்கு அப்படி ஒரு கோபம்..

"என்னம்மா இது நாங்க அவரோட தம்பி பொண்ணுங்க தானே அப்பா இல்லாதபோது அவர்தானே அக்கா கல்யாணத்தை முன்னே நின்னு எடுத்து நடத்தனும் அதைவிட்டுட்டு ஒவ்வொன்னுக்கும் உங்களை இப்படி அலையவிடறது இல்லாம  நியாபகபடுத்த சொல்லுறார் அவரை போய் நீங்க முன்னாடி வைக்கறீங்க..”

“ஏற்கனவே நிச்சயத்துக்கு அவர் வராம பெரியம்மா, அப்புறம் அவர் பையன் மருமகளை  மட்டும் அனுப்பினார்.. அவங்களும் ஒப்புக்கு கொஞ்ச நேரம் இருந்துட்டு நான்  மதிக்கலை அது இதுன்னு ஏதேதோ நொண்டி சாக்கு சொல்லி உங்களை மனம் நோகடிச்சாங்க..."

"இல்ல நான் தெரியாம கேட்கிறேன் ஏன் பெரிப்பா இல்லாம நாம இந்த கல்யாணம் நடத்த முடியாதா..? சின்ன வயசுல இருந்து எங்களுக்காக ஒத்த பைசாகூட செலவு செய்யாத பாசமே இல்லாத  அவர் அப்படி என்ன முக்கியம்? விட்டுத்தள்ளுங்கம்மா அவர் வரணும்னு அவசியமில்ல நீங்க தேவையில்லாம அலையாதீங்க" என்று ஆதங்கத்தோடு தாயை பார்க்க..,

"சிட்டு என்ன பேச்சுடா  இது..? பெரியவங்க அப்படிதான் இருப்பாங்க நாம மதிச்சு கூப்பிடறது தப்பு கிடையாது.." என்று ஏற்கனவே அன்னையிடம் இதுகுறித்து பேசியபோது அவர் கண்டிப்புடன் கூறிய வார்த்தைகளை தளிர் மென்மையாக எடுத்து சொல்லவும்..,

"நீ சும்மா இருக்கா.. பெரியவங்க பெரியவங்களா நடந்துக்கணும் அப்போதான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.. விசேஷத்துக்கு நாம மதிச்சு கூப்பிடறது வேற ஆனா எனக்கு சுத்தமா அவரை கூப்பிடறதுல இஷ்டமே இல்ல..  உன் கல்யாணத்துக்காக நாம மூணு பேரும் தான் நேரமில்லாம ஓடிட்டு இருக்கோம் ஒன்னுக்கு இரண்டு ஆம்பளை பசங்க இருக்கு அவருக்கு ஆனா பெரிப்பாவோ அவர் பசங்களோ துணைக்கு வந்தாங்களா..?

“உதவி வேணுமான்னு தான் கேட்கலை அட்லீஸ்ட் கல்யாண வேலை எப்படி போகுதுன்னு விசாரிச்சாங்களா அவருக்கு நம்ம மேல கொஞ்சமும் பாசம்தான்  இல்லன்னு பார்த்தா இப்படி கல்யாணம் நெருங்கிறப்போ அம்மாவை இவ்ளோ அலைய விடறது கொஞ்சமும் சரியில்ல.. ச்சை இவரெல்லாம் நம்ம பெரியப்பான்னு சொல்லவே பிடிக்கலை.. இதுவே நம்ம அப்பா இருந்திருந்தா உன் கல்யாணத்துக்காக  கண்டவங்க காலை பிடிக்க வச்சிருப்பாரா..? இல்ல அம்மாக்கு இவ்ளோ கஷ்டம் இருந்திருக்குமா நீயே சொல்லு ...?" என்று கோபத்தில் தொடங்கி அழுகையில் முடித்திருந்தாள் தென்றல்.

                            ****************************

"அம்மூ என்னடா  இது..?" என்று தேம்பிய மகளை அணைத்து கொண்ட சீதாலக்ஷ்மி பின் நாற்பதுகளில் இருப்பவர் அவர் கணவர் ரகுபதி தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்தவர் அங்கே கல்லூரியில் படித்து கொண்டிருந்த அவர்கள் ஜாதியிலேயே வேறு பிரிவை சேர்ந்த பெண்ணான சீதாலக்ஷ்மியை  காதலித்து மணமுடித்ததில் வீட்டினர் அவருக்கு எதிரியாகி போயினர்.. தன்னையும் மனைவியையும் ஏற்காத வீட்டினரை எந்நாளும் தேடிசெல்லாத ரகுபதிக்கு மனைவி பிள்ளைகள் தான் உலகம், சொற்ப சம்பளமாக இருந்தாலும் அவர்களுக்கு எந்த குறையும் வைக்காத மனிதர்..

ரகுபதியின் அண்ணன் கஜபதி அவர் தந்தையை போலவே ஜாதிவெறி ஊறிப்போன மனிதர் பெற்றோருக்கு ஏற்ற மகன் என்பதால் அவர்களை போலவே தம்பியை ஒதுக்கி வைத்துவிட அது பலவகையில் அவருக்கு வசதியாகி போனது.. பின்னே ஜாதிக்காக ரத்தபந்தத்தை தூக்கி எரிந்ததில் ஊரில் மரியாதையை மட்டுமின்றி அவருக்கு பலவிதத்தில் நன்மையையும் கொடுத்தது..

ஆம் சீதாலட்சுமியை சேர்க்க மறுத்த வீட்டினரிடம் காதல் மனைவி தான் முக்கியம் உங்கள் பணமும் சொத்தும் பெரிதல்ல என்று கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு வந்த ரகுபதியால் அலுங்காமல் நலுங்காமல் தந்தையின் மொத்த சொத்தும் கஜபதிக்கு வந்து விட்டது.

ஆனால் சிலவருடங்களுக்கு முன் தம்பி இறந்த பின்னர் எங்கே  சீதாவும் அவர் பெண்களும் சொத்து கேட்டு வந்துவிடுவார்களோ என்ற எண்ணத்திலேயே தம்பியின் இறுதி சடங்கில் மட்டும் கலந்து கொண்டு அதன்பின் அவர்  குடும்பத்திடம் இருந்து தள்ளி இருப்பவர் மறந்தும் அவர்களை நினைத்துவிட மாட்டார் அவர்கள் அவரை நினைக்கும் சந்தர்பத்தையும் கொடுத்து விடமாட்டார்.

மீறி தொடர்புகொள்ள அவர்கள் முயன்றாலும் முயன்றவரை அவர்களை தவிர்க்கவே பார்ப்பார்.. அப்படிதான் தளிருக்கு அம்பலவாணனின் குடும்பத்தில் சம்பந்தம் தகைத்த போது அவர்கள் குடும்பத்தின் மூத்த மனிதராக அவருக்கு பலநாட்கள் அழைப்பு  விடுத்து ஓய்ந்த சீதா இறுதியில் தன் வீடு தேடி வந்த பிறகே அவர் பேச்சை கேட்டவர்.., அறுவடை சமயம் எங்குமே நகர முடியாது சம்பந்தம் நீங்களே பார்த்து கொள்ளுங்கள் என்றவர் பெரிய மனது வைத்து மனைவியையும் மகனையும் நிச்சயத்திற்கு மட்டும் அனுப்பியிருந்தார்.. சீதா என்ன வற்புறுத்தியும் முக்கிய வேலைகளை சாக்கிட்டு தளிரின் நிச்சயத்தில் கலந்து கொள்வதை  தவிர்த்துவிட்டார்.

"வேறென்னம்மா அந்த பெரிப்பாக்கு நீங்க அவர் காலில் விழுந்து கெஞ்சி கூப்பிடனும் அதான் இப்படி செய்றார்.., போங்கம்மா உங்களை க்ஷ்டபடுத்துற பெரிப்பாவை எனக்கு சுத்தமா பிடிக்கலை.." என்ற மகளின் தலையை ஆதூரமாக வருடிக்கொண்டே,

"உங்கப்பா என்னோட துணை இருக்கப்போ எனக்கு ஒன்னும் கஷ்டமில்ல  தங்கம்.. நான் எங்க போனாலும் என்கூட இருந்து வழிநடத்துறவர் என்னை எப்பவும் தனியா ஃபீல் பண்ணவிட்டதே கிடையாது.. உங்கக்காக்கு நல்லவரன் வந்திருக்கு பாசம் இருக்கோ இல்லையோ நமக்குன்னு நாலு பேர் வேணும்டா நாளைக்கு நம்மவீட்டு கல்யாணத்தில் சொந்தபந்தம் இல்லாம உங்கக்காவோட  நீ நான் மட்டுமே நின்னா நல்லா இருக்காது.. அதைவிட எந்த விசேஷத்தையும் ஒரு ஆம்பளை முன்னாடி நின்னு எடுத்து செஞ்சாதான் கண்ணுக்கு நிறைவா இருக்கும் நமக்கும் மரியாதையா இருக்கும்..”

“நம்மோட துரத்திருஷ்டம் உங்களுக்கு அப்பாதான் இல்லைன்னு பார்த்தா அண்ணன் தம்பின்னு யாருமில்ல... உங்க பெரியப்பா இன்னைக்குன்னு கிடையாது அவர் எப்பவுமே இப்படிதான்!!”

“கல்யாணத்துக்கு வந்து கால் கழுவி கொடுக்க ஒத்துகிட்டதே பெரியவிஷயம் அதுக்கு மேல அவர்கிட்ட எதிர்பார்க்ககூடாதுடா.." என்றவரின் கண்களில் திருமணமானதில் இருந்து சீதாவின்  மதிப்பை யாரிடமும் விட்டுகொடுக்காத கணவர் இல்லாத நிலையில் பெண்ணின் திருமணத்தை நன்முறையில் நடத்த எத்தனை பேர் காலை கட்டவேண்டி இருக்கிறதே என்று சொல்லிலடங்கா வலி.

ஆனால் தன் வலி பிள்ளைகளை இன்னுமே உருக்குலைக்கும் என்பதால் அதை மென்று விழுங்கி சாதரணமாக மகள்களை பார்த்தார்.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1