வாழ்க்கைத்துணை - 20.3
ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவன், “நீ எதுவும் பண்ணலை போதுமா?” என்றதில் மகாவின் ஆதங்கம் அதிகரிக்க கண்ணீரை உள்ளிழுத்தபடி,
“எதுவும் பண்ணலையா? அப்படி எதுவும் செய்யாதவளை நீங்க என்ன பேச்சு பேசுனீங்கன்னு நியாபகம் இருக்கா?”
“இந்நேரத்துக்கு எதுக்குடி விதண்டாவாதம் பண்ணிட்டு இருக்க? அதுதான் நீ எதுவும் செய்யலைன்னு சொல்லிட்டேனே! எதையும் கிளறாம கொஞ்ச நேரம் அமைதியா இரு..” என்றான்.
“விதண்டாவாதமா?” என்று கணவனை பார்த்தவளின் விழிகளில் ஏகத்திற்கும் வலி.
“அப்போ நீங்க செய்யறது எல்லாம் ரொம்ப சரியா? கட்டின பொண்டாட்டியை, உங்க குழந்தைகளை சுமந்துட்டு இருக்கிறவளை பார்த்து யார் நீன்னு கேட்டது சரியான்னு உங்க மனசாட்சியை நீங்களே கேட்டுக்கோங்க..”
“இருக்கிற டென்ஷன் போதாதுன்னு நீ வேற படுத்தாதடி..”
“அதுதான் நானும் கேட்கிறேன் அப்படி என்ன டென்ஷன் உங்களுக்கு? உங்க கஷ்டத்தை தான் என்கிட்ட சொல்ல மாட்டேங்கறீங்கன்னு பார்த்தா என் கஷ்டத்தையும் கொஞ்சமாவது புரிஞ்சுக்கறீங்களா?”
“என்னடி புரியணும் இப்போ?”
“நான் அவ்வளவு தூரம் சொன்ன பிறகும் என்ன புரியனும்னு கேட்கறீங்க?” என்று விண்டு போன மனதோடு கணவனை பார்த்தவள்,
“சொல்லுங்க நான் யார் உங்களுக்கு? நான் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா, சமையல் காரியா, இல்ல சம்பாதிச்சு போடுற மிஷினா யாருன்னு நீங்க தான் சொல்லணும்..”
“அதிகம் பேசாதடி, எனக்கு டென்ஷன் அதனால தான் அப்படி பேசிட்டேன்..”
“நீங்க பேசின வார்த்தை என்னை எவ்ளோ காயபடுத்தி இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு? இந்த நிலைமையில் இருக்கிற என்னை பார்த்து அந்த வார்த்தை கேட்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது? என்ன கோபமா இருந்தாலும் எவ்ளோ டென்ஷன்ல இருந்தாலும் உங்க இஷ்டத்துக்கு வார்த்தையை விடுவீங்களா?”
“அனாவசியமா பேசாத மகாலட்சுமி..”
“பேச வேண்டிய அவசியத்தை நீங்க கொடுத்துடீங்க ரிஷி. வார்த்தையில காயபடுத்தினது போதாதுன்னு இப்போ செய்யல்ல காயபடுத்த முயன்றது நீங்க தான்!!”
“நான் தொடுறது உனக்கு அவ்ளோ கஷ்டமாவாடி இருக்கு? ஏன் இதுக்கு முன்ன நான் உன்னை தொட்டதே இல்லையா? இன்னைக்கு என்ன இவ்ளோ ஸீன் போடுற?” என்றான் கொண்டிருந்த எரிச்சல் அவள் பேச்சில் இருமடங்காக அதிகரித்த நிலையில்.
“ஸ்டாப் இட் ரிஷி!!” என்று இதழ்கள் துடிக்க கணவனை பார்த்தவளின் விழிகள் குளம் கட்டி போயிருந்தது.
“பின்னே என்னடி? நீ அழுதுட்டு இருந்ததா அப்பா சொன்னாங்க.. ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன் இல்லைன்னு சொல்லலை ஆனா இப்பவும் அழுதுட்டே இருந்தா என் பிள்ளைங்க எப்படி நிம்மதியா தூங்குவாங்க? அதுதான் அவங்களை தூங்க வைக்க கை போட்டேன் அதுக்கு அதிகாரம், உரிமைன்னு என்னென்ன பேச்சு பேசுற?” என்றான் குறையாத கடுமையோடு.
“குழந்தைகளுக்காகவா ரிஷி? அப்போ நான்! நான் அழுதது உங்களுக்கு தெரிஞ்சிருக்கு ஆனாலும் என்னை சம்.. சமா..தானப்படுத்த நினை..க்கலை. ஒரு வார்த்தை ஆறுதல் சொல்..லலை ஆனா குழந்தைகள் மட்டும்… இப்போ தான் தோணுது நீ.. நீங்க யார் என..?” என்று திணறியவளுக்கு தொண்டையை கவ்வி பிடித்த வேதனையால் அடுத்த வார்த்தை சுலபமாக வெளியேறவில்லை.
என்றுமே தன்னை எதிர்க்காத மனைவி தான் சொல்லும் அனைத்திற்கும் கட்டுப்படுபவள் இன்று தன்னையே கேள்வி கேட்டு தன்னை விலக்கி வைத்ததில் அவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம்.
‘மீண்டும் மீண்டும் அவன் யார்?’ என்ற அவள் கேள்வியில் நெற்றியை வருடியபடி மனைவியை பார்த்திருந்தவன் உதடுகள் வரை வந்து விட்ட வார்த்தையை கட்டுபடுத்திய படி, “இன்னொரு முறை நான் யாருன்னு கேட்காதடி” என்றான் அடிக்குரலில்.
அவன் ஒன்றும் அவளோடு கொஞ்சி குலகுவதற்காக கை போடவில்லை என்றாலும் அவள் பேச்சு கோபத்தை கிளறவும் வார்த்தை தடித்து விட்டது.
ஏனோ அவளை பேசியதற்கு அத்தனை எளிதாக அவனால் மன்னிப்பும் கேட்டு விட முடியவில்லை அதே நேரம் இப்போதெல்லாம் குழந்தைகளை ஸ்பரிசிக்காமல் அவனுக்கும் அத்தனை சீக்கிரம் உறக்கம் வருவதில்லை.
அப்படி இருக்கும் போது தன் பிள்ளைகளை தொடவிடாமல் செய்தது அவன் ஈகோவை வெகுவாகவே சீண்டி இருந்தது.
“இல்லை, எனா.. எனக்கு தோணுது சொல்லுங்க எனக்கு நீங்க யார்..” என்றாள் கண்ணீரை துடைத்தபடி தழுதழுத்த குரலில்.
“ஏய்!! வாயை மூடுடி!” என்றதில் மகா அரண்டு போய் அவனை பார்க்க, “நானும் பொறுமையா இருக்க பார்க்கிறேன் ஆனா என்ன உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போற? என்னை பார்த்தா எப்படிடி தெரியுது உனக்கு?”
“இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங் இன்னொரு முறை நான் யார்ன்னு கேட்ட
நல்லா அர்த்தமா கேட்டுடுவேன், என்னை பேச வைக்காத.. தாங்க மாட்ட...” என்றவனின் ஆவேசத்தில் விக்கித்து போனாள் மகாலட்சுமி.
கணவனின் பேச்சில் அதிர்ந்து போனவள் கைகள் அன்னிச்சையாக தன் வாயை மூடிக்கொள்ள, பேசிய பிறகே வார்த்தையின் வீரியத்தை உணர்ந்த ரிஷி “ப்ச்..” என்று கண்களை மூடி திறந்து மகாவை பார்க்க அவளோ மௌனக்கண்ணீரோடு கணவனை வெறித்து பார்த்திருந்தாள்.
“கூட கூட பேசியே ஆகணுமா? அமைதியா இருன்னு சொன்னா கேட்க மாட்டியாடி?” என்றவன் இப்போதும் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்காது அவள் பேசியதால் தான் அவன் கட்டுப்பாடில்லாமல் பேச வேண்டியதாகி போனது என்பது போல பேச நெஞ்சம் கணக்க அமர்ந்திருந்த மகா எதுவும் பேசாமல் அமைதியாக படுத்துக்கொண்டாள்.
“உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்..” என்று சொன்ன போதும் அவளிடம் கனத்த அமைதி மட்டுமே நிலவியது.
அவன் இருந்த மனநிலைக்கு அதற்கு மேல் பேசினால் சூழல் இன்னுமே சிக்கலாகி போகும் என்பதால் வெளியே சென்றுவிட்டான்.
**************
அடுத்த நாள் காலை மகா மிகவும் தாமதமாக தான் எழுந்தாள். உடலும் மனமும் வெகுவாகவே சோர்ந்து போயிருந்தது.
சுத்தமாக அவளால் எழுந்து கொள்ள முடியவில்லை. மணி ஆறரை ஆக போவதை கண்டவள் குளியலறைக்கு சென்றாள்.
இருபது நிமிடங்கள் கழித்து குளித்து முடித்து வந்தவள் வாந்தி எடுத்ததால் மிகவும் சோர்ந்து போயிருந்தாள். உடை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு வர அங்கே சிந்து படித்துக்கொண்டிருந்தாள்.
அவளை பார்த்தபடி சமையலறைக்கு செல்ல அங்கே சிவபாலன் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார் .
“மாமா..” என்று திகைத்து பார்க்க, “வா லட்சுமி, இப்போ எப்படி இருக்கு, பரவாலயா?” என்றபடி காய்ச்சிய பாலை பெரிய டம்ப்ளரில் ஊற்றி நாட்டு சக்கரை போட்டு கொடுத்தார்.
“நீங்க ஏன் மாமா இதெல்லாம்?”
“நம்ம வீட்டு வேலையை நாம செய்யாம வேற யார் செய்வா? இத்தனை நாள் வேற இப்போ மூணு உயிரா இருக்கிற உன்னால எவ்ளோ செய்திட முடியும்? வேலைக்கு ஆள் இல்லைன்னா என்னம்மா நான் இருக்கேன் தானே?!”
“உன்னால முடிஞ்ச நேரம் முடிஞ்சதை மட்டும் செய், மற்றதை நான் பார்த்துக்கிறேன் இல்லை உன் அத்தையால முடிஞ்சதை செய்ய சொல்றேன்.. எல்லாமே நீதான் செய்யணும்னு எந்த கட்டாயமும் கிடையாது..” என்றிட அவள் எதையும் மறுத்து பேசாமல் அமைதியாக பாலை அருந்த தொடங்கினாள்.
அதேநேரம் கண் விழித்த ரிஷி மனைவியும் காஃபியும் தன் முன்னே இல்லாததில் எரிச்சலுடனே எழுந்து கொண்டவன் வேகமாக குளியலறைக்கு சென்று திரும்பினான்.
சிவபாலன் பொங்கல் செய்திருக்க மகா சட்னி தாளித்து எடுத்து வந்தாள். “கொஞ்ச நாளைக்கு உன் அம்மாவை உனக்கு மதிய சாப்பாடு கொடுக்க சொல்றியா ம்மா?”
“சொல்றேன் மாமா ஆனா உங்களுக்கு, அவருக்கு, சிந்துவுக்கு எப்படி?” என்றாள் தயக்கத்தோடு.
“அவனை கேண்டீன்ல சாப்ட்டுக்க சொல்றேன், மதியத்துக்கு சீக்கிரமே சமைச்சு சிந்துவுக்கு நானே கொண்டு போய் கொடுத்துடுறேன்..”
“மாமா அத்தை… அவங்க இதுக்கு சம்மதிப்பங்களா?” என்ற மகா இத்தனை நாட்கள் தன் வேலையை பகிர மட்டுமில்லை சிறு உதவிக்கு கூட ஆளில்லாமல் தவித்து வந்ததில் இப்போது மாமனார் உதவ முன் வந்ததில் மிகப்பெரிய ஆறுதல்.
“நான் பேசிக்கிறேன் லட்சுமி, நீ அதைப்பற்றி கவலை படாம வேலைக்கு போயிட்டு வாம்மா. முடியலைன்னா பக்கத்துல இருக்கிற ஹோட்டல்ல வாங்கிக்கலாம்..” என்று மருமகளுக்கு ஆறுதல் சொல்லிகொண்டிருக்க அங்கு வந்து சேர்ந்தான் ரிஷி.
மகா அவனை பார்க்க கூட இல்லை அமைதியாக உணவை சாப்பிட்டு முடிக்க அவளுக்கு முன்பாக ரிஷி அலுவலகத்திற்கு கிளம்பி சென்றிருந்தான்.
“டேய் எங்கடா இவ்ளோ சீக்கிரம் கிளம்பற? மருமகளை யார் கூட்டிட்டு போவா?”
“எனக்கு வேலை இருக்கு இனி இப்படி தான் சீக்கிரம் கிளம்பனும்..” என்றவன் மகாவிடம் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பினான்.
“தப்பா எடுத்துக்காத லட்சுமி, ஏதோ அவசர வேலையா இருக்கும் அதுதான் சீக்கிரம் கிளம்பறான்..” என்று மகனுக்கு சப்பை கட்டு கட்ட முயல, “பரவால்ல மாமா நேத்தே என்கிட்டே சொல்லிட்டார் நான் கேப் புக் பண்ணிக்கிறேன்..” என்று கேப் புக் செய்து கிளம்பினாள்.
என்றுமில்லாத வகையில் அன்றைய பேச்சு அவர்கள் உறவின் விரிசலுக்கான அடித்தளமாக அமைந்து போனது.
nice
ReplyDelete