வாழ்க்கைத்துணை - 20.3
அங்கே இரு கரங்களையும் தலைக்கு பின்னே கோர்த்துக் கொண்டு விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான் ரிஷிவரதன்.
இன்னதென்று பிரித்தறிய முடியாத ஒரு உணர்வு அவன் முகத்தில். ரிஷி என்று அழைத்து அவன் பக்கத்தில் அமர்ந்தவர்,
“இப்போ என்ன பண்றதா முடிவு பண்ணி இருக்க?” என்றார்.
“என்ன பண்ணனும்னு சொல்றீங்க? அவதான் எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டாலே..”
“டேய் நான் இதை பத்தி கேட்கல வீட்டை விட்டு போன மருமகளை எப்படி கூட்டிட்டு வர போறேன்னு கேட்டேன்..”
“என்னவோ நான் வீட்டை விட்டு துரத்தின மாதிரி பேசுறீங்க.. நான் எதுக்கு அவளை கூப்பிடனும்? அவளாக போனாவ அவளாவே தான் திரும்ப வரணும்…
“என்னடா பேசற? புத்தி கெட்டு போச்சா உனக்கு?”
“எனக்கில்லை உங்க மருமகளுக்கு தான்…” என்று பல்லை கடித்தவன், “நான் சொல்ல சொல்ல எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு கிளம்பி இருக்கா அந்த அளவுக்கு என் மேல நம்பிக்கை இல்லாம போச்சு…” என்றான் ஆதங்கத்தோடு..
“எப்படிடா இருக்கும்?! மருமக கிட்ட சிந்து விசேஷத்துக்கு இப்படி செய்யலான்னு இருக்கேன் உன்னோட விருப்பம் என்னன்னு கேட்டு அவ கையால பத்திரத்தை வாங்கிட்டு போயிருந்தா நீ புத்திசாலி. ஆனா உன் இஷ்டத்துக்கு எடு பத்திரத்தைன்னு ரூமையே தலைகீழ புரட்டி வச்சிருக்க.. அப்புறம் எப்படி நம்பிக்கை வரும்?”
“எந்த வீட்டில் இந்த மாதிரி அக்கிரமம் நடக்கும்? புருஷனுக்கு என்னைக்கும் தோள் கொடுக்கிறவ தான் பொண்டாட்டி.. சந்தோஷத்துல கூட இருந்துட்டு கஷ்டத்துல இப்படி விட்டுட்டு ஓடுறவ பொண்டாட்டியா?”
“எதுக்குடி இப்போ புலம்பிட்டு இருக்கிற?” என்று சிவபாலன் அதட்டல் போட,
“என் மகனை எதுக்கு தேடி போக சொல்றீங்க? அவன் போக மாட்டான். போக கூடாது. ரெண்டு புள்ளைய வச்சுட்டு இருக்குற பொம்மனாட்டிக்கு இவ்வளவு இருந்ததுனா என் மகன் ஆம்பள!! அவனை எதுக்கு இறங்கி போக சொல்றீங்க?”
“வாயை மூடு இந்திரா..”
எதையும் புரிந்து கொள்ளாமல் பேசும் மனைவிடம் மகாவை பற்றி இனியும் பேசி பிரயோஜனம் இல்லை என்பதை நன்கு உணர்ந்து கொண்டார்.
அதோடு மகா கேட்டுக் கொண்டது போல பிள்ளைகளை பெற்றெடுக்கும் வரையில் நிம்மதியாக பிறந்து வீட்டில் இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தவர் ஒரு பெருமூச்சோடு மனைவி மகன் இருவரையும் பார்த்தார்.
“இந்த சூழ்நிலையில் செய்யறது கஷ்டம், உன் பொண்ணு கிட்ட நீ தான் பேசணும் இந்திரா..”
“என்ன பேசணும்?”
“ரிஷி மகாவோட இடத்தை நம்பி தான் இருந்தான் ஆனா இப்போ அது இல்லன்னு ஆகிட்ட பிறகு அவனும் என்ன பண்ண முடியும்? உன் பொண்ணுக்கு சூழ்நிலையை எடுத்து சொல்லி ஒரு வருஷம் காத்திருக்க சொல்லு..”
“என்னது ஒரு வருஷமா? என்ன பேசுறீங்க நீங்க?! ஏற்கனவே அவ அங்க படாத பாடு பட்டுட்டு இருக்கா.. ரெண்டு பொட்ட பிள்ளைகளை வச்சு எப்படி கரை ஏத்துவானு கொஞ்சமாவுது யோசிச்சு பார்த்தீங்களா?”
“ஏற்கனவே நம்ம போட்ட நகை நட்டையும் நாத்தனார்களுக்கு தூக்கி கொடுத்துட்டாங்க.. அது இருந்தாலாவது ஏதாவது ஒரு பொண்ண அவ கரையேத்துவா.. ஆனா இப்போ எப்படி முடியும்..”
“ம்மா இதெல்லாம் எங்களுக்கு புரியாம இல்ல. அதேசமயம் என்னோட சூழ்நிலையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. என்னால தனிப்பட்ட முறையில் இவ்ளோ பணம் நிச்சயமா புரட்ட முடியாது. என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கடன் வாங்குறதாக இருந்தாலும் ரெண்டு லட்சத்துக்கு மேல முடியாது…”
“என்ன வரதா இப்படி பேசற?”
“நிஜத்தை பேசறேன். கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க..”
“வரதா..”
“இப்போதைய நிலைக்கு, வேணும்னா சொல்லுங்க ரெண்டு லட்சத்துக்கு ஏற்பாடு பண்றேன். ஒரு சவரன்ல செயின் போட்டு, பட்டு புடவை சீர்வரிசை எல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி செய்யலாம்.. மத்ததெல்லாம் பிராப்தம் இருந்தா அவளோட கல்யாணத்துல பண்ணி போடலாம்..” என்றான்
“என்ன வரதா இப்படி பொறுப்பு இல்லாம பேசுற? அன்னைக்கு நாங்க வாக்கு கொடுத்ததால் தானே உன் மாமா இன்னொரு கல்யாணம் பண்ணாம போனாரு..” என்றவர் முடிக்கும் முன்னமே,
“என்னது இன்னொரு கல்யாணமா?” என்று ரிஷி கேட்க சிவபாலன் அனைத்தையும் சொல்லி முடிக்க அதிர்ச்சியோடு ரிஷி தந்தையை பார்த்தான். இன்னும் அவனுக்கு தெரியாமல் எத்தனை எத்தனை ரகசியங்கள் புதைந்து இருக்கிறதோ என்று இருக்க ரிஷிக்கு வனிதாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
‘ரிஷி அழைப்பை ஏற்பதா? வேண்டாமா?’ என்று பார்த்துக் கொண்டிருக்க, “யாருப்பா?” என்றார் இந்திரா.
“அக்கா தான்..”
“என்ன யோசனை? எடுத்து பேசு பா..” என்றிட ‘தனக்கு என்ன காத்திருக்கிறதோ..’ என்ற எண்ணத்துடனே அழைப்பை ஏற்றான்.
“ஹலோ ரிஷி எப்படிப்பா இருக்க?” என்றவரின் குரலே அத்தனை குழைந்து இருந்தது.
அதை எதிர்பாராத ரிஷியின் புருவம் சுருங்கி விரிய, “மாமா கிளம்பிட்டாங்களான்னு சிந்து கேட்டுட்டே இருக்கா.. எப்ப வர ரிஷி? அம்மா அப்பா கிளம்பிட்டாங்க தானே?!”
“இல்லை, இன்னும் இல்லை..”
“அப்படியா? சரி, சரி எல்லா ஏற்பாடும் பண்ணனும் இல்லையா அவங்க பொறுமையாவே கிளம்பட்டும்.. அப்புறம் ரிஷி, நான் இங்க என் மாமியார் கிட்ட நீங்க செய்யறது எல்லாம் சொன்னேன் அவங்களுக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா?”
“நீ செய்ய போறதெல்லாம் கேட்ட என் நாத்தனார்களுக்கு பேச்சே இல்லாம் போச்சு தெரியுமா? அந்தளவு வாயடைச்சு போயிட்டாங்க.. எல்லாம் எனக்கு கிடைச்ச மாதிரி தம்பி அவன்களுக்கு கிடைக்கலையே என்ற பொறாமை தான் வேற என்ன?!”
“என் சின்ன நாத்தனார், உனக்கு கிடைச்ச மாதிரி தம்பி யாருக்குமே கிடைக்க மாட்டாங்கன்னு சொல்லிகிட்டே இருந்தா.. அது சந்தோஷமா இல்ல வயித்தெரிச்சலான்னு தெரியல.. சரி ரிஷி நீ சிந்துவுக்கு நகை செய்யறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டியாமே..”
“உனக்கு யார் சொன்னா?”
“அம்மா கிட்ட பேசினப்போ சொன்னாங்க..”
“எப்ப பேசுன?”
“கொஞ்சம் முன்னாடி..” என்றிட கைபேசியை மூடியபடி “ம்மா இங்க இவ்ளோ பிரச்சனை போயிட்டுருக்கு ஆனா அவ என்னவோ நான் செய்ய தயாரா இருக்கிற மாதிரி பேசுறா.. என்னம்மா சொன்னீங்க அவகிட்ட?!”
“வரதா நீ சிந்துவுக்காக இடத்தை வச்சு பணம் ஏற்பாடு பண்ணி இருக்கல்ல அதை பத்தி தான் பேசிட்டு இருந்தேன்.. அதுல உங்க அக்காவுக்கு அவ்வளவு சந்தோஷம். ஆனா அதுக்கு அப்புறம் தானே உன் பொண்டாட்டி இல்லாத ஆட்ட ஆடி எல்லாத்தையும் கெடுத்துட்டு கிளம்பி போயிட்டா…”
“அது அவளுக்கு தெரியாது. உனக்கு புண்ணியமா போகும் அவ கிட்ட இதையெல்லாம் சொல்லிடாதப்பா… சொல்லி அவங்க சந்தோஷத்தை கெடுத்துறாத..”
“என்னம்மா பேசறீங்க?”
“ஆமா வரதா, ரொம்ப வருஷம் கழிச்சு என் பொண்ணு குடும்பத்துல ஒரு நல்லது நடந்திருக்கு எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க.. நம்ம குடும்ப பிரச்சினையை சொல்லி அதை கெடுக்க வேண்டாம்” என்று சொல்ல அவனுக்கு மண்டை வெடித்தது.
“ரிஷி ரிஷி..” என்று மறுபுறம் வனிதா கத்திக் கொண்டிருக்க, “சொல்லுக்கா..” என்றான் சுரத்தே இல்லாமல்..
“இன்னுமா உன் அம்மா தம்பி எல்லாம் வரலைன்னு இங்க எல்லாரும் என்னை கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரே தாய் மாமன் அச்சே! அப்படி என்ன தான் அத்தை சித்தின்னு அவங்க எல்லாம் சமைச்சு போட்டாலும் நம்ம பக்கம் கெட்டியா இருக்கணும் இல்லையா?”
“மறக்காம மகாவையும் கூட்டிட்டு வந்துரு. உங்க எல்லாருக்கும் நான் காத்திருப்பேன்.. என் வீட்டுக்காரர் கிட்ட நகை சீர் பற்றி சொன்னேன், அவர் இருந்துட்டு, ‘பரவால்ல உங்க அப்பா அம்மா ஒரு நாக்கு ஒரு சொல்லுன்னு இருக்காங்க.. சொன்னது நிறைவேத்துறாங்கன்னு சொன்னார்..’”
“சொல்லப்போனா இத்தனை நாள் விட இப்போ அப்பா அம்மா மேலயும் அவருக்கு இருந்த மரியாதை இன்னுமே கூடிப்போச்சு.. இது எல்லாத்துக்குமே காரணம் நீ தான் ரிஷி! உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல..”
“எத்தனை உறவு இருந்தாலும் ரத்த உறவு போல வருமா? ஒருநாள் அடிச்சுக்கிறது தான் அடுத்த நாள் புடிச்சுக்கிறது தான்.. அதுக்காக பாசம் இல்லைன்னு ஆகிடுமா?! நான் கூட நீ அன்னைக்கு பேசினதுல எங்கே என் தம்பிக்கு என்மேல பாசமே இல்லையோன்னு ஒருநொடி நினைச்சுட்டேன் ஆனா அதுக்கு நான் இப்போ வெட்கப்படறேன் ரிஷி..” என்று கண்ணீரை உள்ளிழுத்தவர்,
“உனக்கு என் மேல இருக்கிற பாசத்தை நினைச்சா எனக்கு நெஞ்சை அடிக்குது, கண்ணு கலங்குது.. சந்தோஷமான நேரத்துல அழக்கூடாதுன்னு அடக்கி கிட்டு இருக்கேன் சீக்கிரம் வந்துருப்பா, காத்துட்டு இருப்பேன்..” என்றவள் கைபேசியை வைக்க ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்தான் ரிஷிவரத்தான்.
“வனிதா என்னடா சொன்னா?” என்றார் சிவபாலன்.
“என்ன சொல்லுவா? நம்ம கிளம்பி வரதுக்காக காத்திருக்கலாம்.. நான் பணத்துக்கு ஏற்பாடு பண்ணுது வச்சு அவங்க வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கா அவங்களுக்கும் சந்தோஷமாம்..உங்க மேல இருந்த மரியாதை அதிகமாகி இருக்குன்னு சொன்னா..”
“அப்படியா சொன்னா?!” என்று பூரிப்போடு கேட்ட இந்திரா, “பார்த்திங்களா, அங்க நமக்கு இருக்கிற மரியாதையை கெடுக்கவே உங்க மருமக திட்டம் போட்டு கிளம்பி இருக்கா… இப்ப நாம சீர் செய்யாம போனாலும் தேவையில்லாத மனஸ்தாபம் வரும்..”
“அதனால நம்ம பொண்ணோட வாழ்க்கை தான் கெடும். கஷ்டத்தோட கஷ்டமா இதை செஞ்சுடலாம் கொஞ்சம் யோசிங்க..” என்றவர் மகனிடம் திரும்பி, “நீயும் யோசி..” என்றிட,
“சரி என்னை கொஞ்ச நேரம் தனியாக விடுங்க நான் ஏதாவது ஏற்பாடு செய்ய பார்க்கிறேன்..” என்றவன் கண்களை மூடிக்கொண்டு அப்படியே சாய்ந்து அமர்ந்தான்.
பல மணி நேர யோசனைக்கு பிறகு, அடுத்த நாளே ஃபைனான்ஷியரை சந்தித்து அவர்களின் வீட்டு பத்திரத்தை கொடுத்திருந்தான்.
“என்னப்பா இது, காலி இடம்னு சொன்ன ஆனா வேற இடத்தோட பத்திரம் கொடுத்திருக்க.. உன்னோட அட்ரஸ்ஸும் இதுவும் ஒன்னா இருக்கு..” என்று அவர் கேட்க “ஸார் இது நான் இப்ப இருக்கிற வீடு தான்!” என்றான்.
“அந்த இடத்துக்கு என்னப்பா ஆச்சு?”
“அதோட பத்திரம் இப்போ என்கிட்டே இல்லை..”
“இல்லாம எதுக்கு நீ பேச வந்த? எனக்கு என்ன வேலை வெட்டி இல்லைன்னு நினைச்சியா?” என்றார் சப்தமாக.
அதில் சுற்றி இருந்தவர்கள் ரிஷியை பார்க்க அவனுக்கு தலை இறக்கமாக போனது. “ஸார் அப்போ இருந்தது ஆனா இப்போ இல்லை நான் எதிர்பார்க்காத சூழல்! உங்க நிலையும் எனக்கு தெரியும், அதனால தான் குடியிருக்கிற வீட்டோட பத்திரத்தை கொண்டு வந்தேன்..” என்றதில் சற்று தணிந்தார்.
“எதுவா இருந்தா என்ன அன்னைக்கு சொன்ன அதே ரூல்ஸ் தான் வீட்டு பத்திரத்துக்கும்.. உனக்கு சம்மதமா?” என்றதற்கு ரிஷி உடனே பதிலளிக்க முயல அவனை கை நீட்டி தடுத்தவர்,
“ஒன்னும் அவசரமில்லை. வேணும்னா ரெண்டு நாள் டைம் எடுத்து உன் பதிலை சொல்லு. பொதுவாவே நான் குடி இருக்கிற வீட்டை அடமானம் போடுவது கிடையாது நாளை பின்ன டைம் முடிஞ்சு போய் வீடு எனக்கு சொந்தமாச்சுனா எல்லாருக்குமே கஷ்டம்.. உனக்கு புரியும்னு நினைக்கிறேன்..” என்று சொல்ல ரிஷிக்கு இந்திரா கொடுத்த அழுத்தம் இன்னுமே மனதை விட்டு அகலாமல் இருந்தது.
“நல்லா யோசிச்சுட்டு தான் சொல்றேன் ஸார். நீங்க பத்திரத்தை வச்சுட்டு பணம் குடுங்க..” என்றவனுக்கு இப்போது இதைத் தவிர வேறு வழி கிடையாது.
அவன் தலையை அடமானம் போடுவதற்காக பதில் வீட்டை அடமானம் போட இருக்கிறான் அவ்வளவு தான் வித்தியாசம்!! ஆனால் நிச்சயம் இந்த கடன் தன்னை மீளா சுழலில் சுழற்றி இழுத்து மூழ்கடிக்கும் என்று அவனுக்கு நன்கு தெரியும்..
ஆனாலும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து அது நடக்காமல் போய் விடாதா என்ற நப்பாசையும் இருந்தது. அதைவிட மீள முடியா சுழலில் தான் மாட்டிக் கொள்வதற்கு காரணமாக இருந்த மனைவியின் மீது தான் தற்போதையை அவனது மொத்த கோபமும் திரும்பி இருந்தது.
ஏற்கனவே பத்திர வேலைகளை பார்த்து வைத்திருந்ததால் கையெழுத்து போட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு வந்தவன் நேரே நகைக்கடைக்கு சென்று அட்டிகை ஆரம் தோடு என்று 10 சவரனுக்கு எடுக்க அதுவே 15 லட்சத்தை விழுங்கி விட்டது.
அப்போதி இந்திரா 5 லட்சம் கூடுதலாக கேட்க சொன்னார். ஆனால் சிவபாலன் தான் “எதுக்குடி ஐஞ்சு லட்சம் அதிகமாக வாங்க சொல்ற எவ்ளோ இருந்தாலும் அவன் தானே அடைக்கணும்..” என்றார்.
பின்னே! பத்திரம், நகை என்று எதையாவது வைத்து கை நீட்டி கடன் பெறுவது எளிது அதை அடைப்பது கடினமல்லவா?
அதனால் தங்கத்தின் விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு வட்டி போக 15 லட்சம் கைக்கு கிடைப்பது போல தான் பெற சொன்னார் சிவபாலன்.
இப்போது மற்ற செலவுகளை காணும் போது இன்னும் ஒரு லட்சம் கூடுதலாக வாங்கி இருக்கலாம் என்று தோன்றியது ஆனாலும் கையில் அதிகமாக பணம் இருந்தால் இந்த நேரத்தில் அது சேமிப்பில் போகாது. நிச்சயம் செலவாகும் என்பதால் அவனுமே அதை தவிர்த்து விட்டான்.
நகை எடுத்து வீட்டிற்கு வந்த போது இந்திரா ஒரு மூச்சு மகாலட்சுமியை திட்டி தீர்த்தார்.
வீட்டையும் கட்டாம, கல்யாணம் பண்ணாம ரிஷி இருந்திருக்கலாம். இந்த கஷ்டமே இருந்திருக்காது.
ReplyDeleteIndhira yeppo savumo appo tha avanukku vidivu
ReplyDelete