தீராத காதல் தொல்லையோ - 4.2
அன்று மகாலட்சுமியின் பிறந்தநாள் மட்டுமல்ல ஞாயிறுக்கிழமையும் என்பதால் வீட்டில் இருக்கும் மகளுக்காக காலையிலேயே பிடித்த உணவுகளை செய்து கொண்டிருந்தார் பாக்கியலட்சுமி.
அதே நேரம் தன் குழந்தைகள் கௌரவ் மற்றும் கௌஷிகாவை தயார் செய்து கொண்டு இருந்தாள் மகாலட்சுமி.
“அத்தை இன்னைக்கு குட்டி பாப்புவும் நானும் சேம் டூ சேம் ட்ரெஸ்..” என்று கதிரின் மகள் வர, “பாப்புக்கு என்னோடது மாதிரியே தோடு போடுங்க…” என்றாள் பெரிய அண்ணனின் மகள்.
“போடுறேன்.. முதல்ல அந்த பாக்ஸ் எடுங்க..” என்றவள் பீரோவில் இருந்து மகளுக்கான தங்கத்தோடை எடுத்தாள்.
இது கௌஷிகா, கௌரவின் காதணி விழாவின் போது கதிர் எடுத்தது.
இத்தனைக்கும் ஏன் அவசரபட்டு விசேஷத்தை நடத்த வேண்டும்? ரிஷி மீண்டும் வந்த பின்னர் குழந்தைகளுக்கு முடி எடுத்து காது குத்தலாம் என்று பெற்றவர்கள் சொன்ன போதும் மகா அதை ஏற்க தயாராயில்லை.
கணவன் இல்லாமல் வளைகாப்பு, குழந்தை பேறு பார்த்திருக்க இப்போது காது குத்த மட்டும் அவன் எதற்கு? என் பிள்ளைகளுக்கு இனி நான் மட்டும் தான்!!
“அப்படியில்ல மகா மாப்பிள்ளை வழி குலதெய்வத்துக்கு தான் முடி எடுக்கணும்..” என்று பாக்கியலட்சுமி சொல்ல,
“ஏன் இவங்க என்னோட குழந்தைகளும் தானே!! நம்ம குலதெய்வ கோவிலில் முடி எடுத்தா ஆகாதா?” என்றாள்.
“அப்படி இல்லை மகா..”
“ம்மா போதும் இனி எவ்ளோ காலத்துக்கு தான் இதையே சொல்ல போறீங்க? என் பிள்ளைகளோட அப்பன் இதே சென்னையில் ஒன்றரை மணி தூரத்துல இருந்து கிட்டு இத்தனை வருஷமா வரலைன்னா இனியும் எதுக்காக நீங்க சொல்ற காத்திருப்பு? என்னோட முடிவுல நான் தெளிவா இருக்கேன்..” என்றாள் தீர்மானமாக.
“விடு பாக்கியா பார்த்துக்கலாம்..” என்று சொல்லிவிட்டார் தினகரன்.
எப்படி நெருங்கிய சொந்தங்களை கொண்டு வளைகாப்பு நடத்தினார்களோ அதேபோல அவர்களின் குலதெய்வ கோவிலில் கதிரின் மடியில் வைத்து பிள்ளைகளுக்கு காது குத்தி இருந்தனர்.
மகளுக்கு தோடு அணிவித்து விட்டு மகனுக்கான உடையை எடுத்து மாற்றினாள் மகா.
கணவனைக் கொண்டு பிறந்து இருந்த கௌரவை பார்க்க அவளை அறியாமல் ரிஷியின் ஞாபகம் அலை மோதியது.
அதோடு சேர்த்து இவர்கள் பிறந்த தினம் அவன் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை சுக்கு நூறாக போனதும் நினைவில் எழ அவள் முகம் கடினமுற்றது.
குழந்தைகள் பிறந்த அன்று மட்டுமல்ல அடுத்த இரண்டு நாட்களுமே ரிஷி வரவில்லை. ஒவ்வொரு நொடியும் அவளுக்கு எத்தனை நரக வேதனையோடு நகர்ந்தது என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
கணவனுக்காக மனம் ஒருபுறம் ஏங்குவதும், மறுபுறம் குழந்தைகளை எண்ணி கலங்குவதுமாக எதிலுமே மனம் ஒன்றாமல் ரிஷியின் நினைவில் தத்தளித்து போனாள்.
சுமதி காயத்ரி தினகரன் பாக்கியலட்சுமி என்று அனைத்து பக்கம் இருந்தும் உறவுகள் அந்த இரண்டு நாட்களில்தேடி வந்து பார்த்து சென்றிருக்க உரிமை பட்டவன் வராததில் மகாலட்சுமிக்கு தாள முடியவில்லை.
அவள் ஏக்கமும், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும், வேதனையும், ஆதங்கமும் மெல்ல மெல்ல கோபமாக உருமாறியது.
இனியும் ‘இலவு காத்த கிளியாக’ அவனுக்காக காத்திருப்பது வீண் என்று புரிய ரிஷி மீதான வெறுப்பு பன்மடங்கு கூடியது.
மகளின் நிலையை உணர்ந்த பாக்கியாவுமே ரிஷிக்கு பலமுறை அழைத்தும் எந்த பதில் இல்லாததில் எப்படியாவது மகளை சமாதானப்படுத்த நேரம் பார்த்து கொண்டிருந்தார்.
ஆனால் அருகில் யாராவது ஒருவர் இருந்து கொண்டே இருந்ததில் எதுவுமே பேச முடியவில்லை.
இறுதி முயற்சியாக அடுத்த நாள் மற்றவர்கள் வேலைக்கு கிளம்பிய பின்னர் மகளிடம் “மகா மாப்பிள்ளைக்கு என்ன சூழலோ..” என்று மெல்ல பேச்சை பாக்கியலட்சுமி ஆரம்பித்தது தான் தாமதம்,
“தயவு செஞ்சு எதையும் பேசாதீங்க ம்மா.. தெளிவான முடிவு எடுத்திருந்தேன் ஆனா டெலிவரி நேர ப்ரெஷர், பயம் எல்லாம் சேர்ந்து என்னை குழப்பிடுச்சுன்னு பார்த்தா அதுக்கு மேல நீங்க என்னை குழப்பிட்டீங்க..”
“அன்னிக்கு நீங்க சொன்னதெல்லாம் கேட்டு நானும் முட்டாள் மாதிரி அவர் கிட்ட சின்ன கரிசனத்தை எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டேன். வேண்டாம், என்னை நானே இனியும் ஏமாத்திக்க தயாராக இல்லை. எனக்கு என் குழந்தைங்க போதும் அவர் எனக்கு தேவையே கிடையாது..”
“இனி இங்கிருந்து யாரும் அவருக்கு ஃபோன் பண்ணவோ அவரை பார்த்து எனக்கு வாழ்க்கை பிச்சை கொடுக்க சொல்லி கெஞ்சவோ கூடாது. உங்களால முடியாதுன்னா சொல்லுங்க உங்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் நான் தனியா வீடு எடுத்து என் குழந்தைகளோடு இருந்துக்கிறேன்..” என்றதில் பாக்கியா பதறி போய் விட்டார்.
“என்ன மகா நாங்க இத்தனை பேர் இருக்கிறப்போ இப்படி பேசுற? நீயும் குழந்தைகளும் என்னைக்குமே எங்களுக்கு பாரமில்லை. அந்த வீட்ல என் மூணு பிள்ளைகளுக்குமே உரிமை இருக்கு..” என்றார் கட்டுபடுத்தபடாத கண்ணீரோடு.
“வேற எப்படி ம்மா பேச சொல்றீங்க? நான் கொஞ்சம் கூட அவருக்கு முக்கியமே இல்லாமல் போயிட்டேன் அதைவிட குழந்தைகள்!! அவங்க பிறந்து முழுசா இரண்டு நாளாச்சு ஆனா இன்னமும் வரலை..”
“ப்ச் இன்னைக்கு நேத்து கிடையாது இத்தனை மாசமும் அவருக்கு அவருடைய ஈகோவும் குடும்பமும் முக்கியமாக இருந்த அளவுக்கு நானும் என் பிள்ளைகளும் இருந்தது கிடையாது..அப்படி இருந்திருந்தா தேடி வந்திருப்பார்..”
“அப்பா மேல இருக்கிற கோபத்தை விட்டு அட்லீஸ்ட் குழந்தைகளுக்காகவாவது நம்ம வீடு தேடி இத்தனை நாளில் வந்திருக்கனும் பட் இப்போ வரை வரலையே அவருக்கு அவரோட குடும்பம் முக்கியம்னா எனக்கு என்னோட குழந்தைங்க முக்கியம் என்னோட சுயமரியாதை முக்கியம்..” என்றவள் அதே கோபத்தோடு கைபேசியை வாங்கி கணவன், மாமனார், மாமியார், நாத்தனார் என்று அத்தனை பேரின் என்னையும் பிளாக்கில் போட்டு விட்டாள்.
குழந்தைகளின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் கணவன் முகம் நினைவு வர அவள் கொண்டிருக்கும் வேதனையை அவள் தான் அறிவாள்.
“என்னமோ விவாகரத்துக்கு அவசரப்படுறது பற்றி பேசுனியே ம்மா, அதெல்லாம் மத்தவங்க விஷயத்தில் பொருத்தமா இருக்கலாம் ஆனா எங்க விஷயத்துக்கு கொஞ்சம் கூட பொருந்தாது. இப்போதைக்கு உங்களுக்கு தெரிய வேண்டான்னு நினைச்சிருந்தேன் ஆனா இனி மறைச்சு உபயோகமில்லை. நிச்சயமா நான் அவரை விவாகரத்து பண்ண தான் போறேன் அதுல எந்த மாற்றமும் இல்லை..”
“இனி எனக்கு அவர் வேண்டாம். இன்னைக்கு மாறிடுவார் நாளைக்கு என்னை புரிஞ்சுப்பார்னு ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து எனக்கு நானே பொய்யான நம்பிக்கையை கொடுத்துட்டு இன்னும் முட்டாளாக விரும்பலை..”
“என்னோட டெலிவரி டேட் அவருக்கு நல்லா தெரியும் அதுக்கும் மேல எத்தனை ஃபோன் கால் பண்ணி இருப்பேன் அதுக்கும் இதுவரை எந்த ரெஸ்பான்ஸும் இல்லைன்னா என்ன அர்த்தம்? அவரை எதிர்பார்த்து ஏமாந்து எதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு.. இல்லை எதுக்கு எனக்கு இந்த நரக அவஸ்தைன்னு கேட்கிறேன்?!”
“எல்லாருக்கும் எல்லாமே கிடைச்சுடாது. யார் யாருக்கு என்னென்ன கிடைக்கும்னு இருக்கோ அதன் படி தான் அமையும். எனக்கான வாழ்க்கை என் குழந்தைகள் மட்டும் தான்னு ஆண்டவன் எழுதி வச்சிருக்கான். அதை யாரால மாத்திட முடியும்?”
“என்னைக்குமே எடுத்து விடுற பூனை எலி பிடிக்காது. நீங்கள் எல்லாரும் புத்தி சொல்லி கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்து அவரை என்னோட வாழ வைக்க முடியாது. அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை அவர் வாழட்டும். எனக்கு அதைப் பற்றி கவலையே இல்லை, ஆனா எங்க வாழ்க்கையை எங்களை வாழ விடுங்க ம்மா..”
“எனக்கு நீங்க செய்யகூடிய மிகப்பெரிய உதவி இனி அவரை பற்றி பேசாம இருக்கிறதும் என் முடிவை மாற்ற நினைக்காம இருக்கிறதும் தான். இல்லை முடியாது என்றால் இப்போவே சொல்லிடுங்க எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம்..”
“சரி சரி மகா நீ டென்ஷன் ஆகாத. பிள்ளை பெத்த பச்சை உடம்பு அதிகம் அலட்ட கூடாது. இனி நான் எதுவும் பேசல… நிச்சயமா எதுவும் பேச மாட்டேன்.. எனக்கு நீயும் என் பேரன் பேத்தியும் தான் முக்கியம் உன் வாழ்க்கை நல்லபடியா மாறினா எனக்கு சந்தோஷம் தான் ஆனா இனி உன்னை எந்த விதத்திலும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன்..” என்று கண்ணீரோடு வாக்கு கொடுத்தார்.
சொன்னது போலவே அதன் பிறகு ரிஷி பற்றிய பேச்சு எடுக்காமல் மகா, குழந்தைகளை கவனத்தோடு பார்த்துக்கொண்டார்.
அதே நேரம் குழந்தைகளோடு வீடு வந்து சேர்ந்த அடுத்த மாதமே விவாகரத்து நோட்டீசும் அவனுக்கு அனுப்பி விட்டாள்.
அதற்கும் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
“என்ன திமிர் பாத்தியா மஹா?” என்று கதிர் பல்லைக்கடிக்க,
“விடுங்க ண்ணா. எங்க போய்ட போறார்? விஷயம் இதுதான்னு கன்வே பண்ணியாச்சு தானே.. இனி நேர்ல வந்தா பேசிக்கலாம்..” என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
சீதோஷன மாற்றம் ஒப்புக் கொள்ளாமல் ஒரு குழந்தை அவதிப்பட்டாலும் அடுத்ததும் அதேபோல அவஸ்தைக்கு உள்ளாகும். காய்ச்சல், சளி, இருமல் என்று இருப்பதால் இருவரையும் மொத்தமாக தனியாய் வைத்திருக்கவும் முடியாது.
இதுதான் இரட்டை பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய சவால்!!
பாக்கியலட்சுமி, சௌந்தரி, சுமதி வேலை செய்ய ராணி என்று இத்தனை பேர் உடன் இருந்தும் இம்மாதிரியான நேரங்களில் குழந்தைகளை பார்த்துக்கொள்ள மிகவும் சிரமப்பட்டு போயினர்.
மற்றபடி மகாவின் வேதனையை குழந்தைகளும் உணர்ந்திருந்தார்களோ என்னவோ பகலில் விழித்து இரவில் உறங்கும் நல்ல பழக்கத்தை கொண்டிருந்தனர்.
அதேபோல அதிகம் அவளை தொந்தரவு செய்யாமல் அவளுடனே தான் எந்நேரமும் இருப்போம் என்று அடம் பிடிக்காமல் தாத்தா பாட்டி, மாமா, மாமி என்று அத்தனை பேரிடமும் குழந்தைகள் அழகாக ஒட்டிக்கொண்டனர்.
phone yedukalana yenna nera poi pakkavendiyathu thane
ReplyDelete