தீராத காதல் தொல்லையோ - 4.2
“கனகமழை பொழிகின்ற காருண்ய மேகமே
லக்ஷ்மியே வந்தருள்கவே..
கனகதா ரைஎன்னும் துதிகேட்டு வாழ்விலே
ஐசுவர்யம் தந்தருள்கவே..”
என்று ஒலித்த கனகதாரா ஸ்தோத்திரத்தை உடன் உச்சரித்த படி மஞ்சள் பூசிய முகத்தில் நெற்றியிலும் உச்சி வகுட்டிலும் நிறைந்திருந்த குங்குமத்தோடு மங்களகரமாக பூஜை அறையில் அமர்ந்திருந்த வாகீஸ்வரி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.
“வாகீ..” என்று குரல் கொடுத்தபடி ஹாலுக்கு வந்தார் அறுபது வயதை நெருங்கி கொண்டிருக்கும் சைலேந்தர்.
“இன்னைக்கு என்ன வச்சுருக்கீங்க வாகீக்கு..” என்று புன்னகையோடு பூஜையறையில் இருந்து வெளியில் வந்து கணவன் எதிரில் நின்றார்.
“இவ்ளோ சீக்கிரம் தலைக்கு குளிக்காதன்னு சொன்னா கேட்கறியா?”
“இன்னைக்கு வெள்ளிக்கிழமைங்க..”
“இருக்கட்டுமே ஆறு மணிக்கு மேல மெல்ல எந்திரிச்சு ஏழு மணிக்கு பூஜை பண்ணினா ஆகாதா?”
“பிரம்ம முகூர்த்தத்துல எந்திரிச்சு விளக்கு போட்டு வேண்டிக்கிட்டா நிச்சயம் நம்ம வேண்டுதல் நிறைவேறும்..”
“இருக்கட்டும் ஆனா ஒத்த தலைவலியால அவஸ்த்தை படுறது யாரு?! நீதானே!! பாரு இன்னும் தலையை கூட துவட்டாம இருக்க. ரொம்ப நேரம் ஈரத்துண்டோடு இருக்க கூடாதுன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்..” என்றவர் மனைவியின் தலையில் இருந்த துண்டை எடுத்து தலை துவட்ட தொடங்கினார்.
“நான் பார்த்துக்கிறேன். உங்களுக்கு நேரமாச்சு வாக்கிங் கிளம்புங்க..”
“பத்து நிமிஷம் வாக்கிங் லேட்டா போனா ஒன்னும் ஆகிடாது..” என்றவர் அறைக்கு சென்று ஹேர் ட்ரையர் கொண்டு வந்து அவர் கூந்தலின் ஈரத்தை முற்றிலுமாக போக்கினார்.
“இவ்ளோ சீக்கிரம் யாருக்காக விளக்கு போட்டுட்டு இருக்க? அதுதான் தன்ஷியோட கல்யாண தேதி முடிவாகிடுச்சே இன்னும் என்ன?”
“தன்ஷி மட்டும் தான் நம்ம குழந்தையா?” என்று கேட்ட வாகீஸ்வரி - சைலேந்தர் தம்பதிகளுக்கு உத்ரா, வேதாந்த், தன்ஷிகா என்று மூன்று பிள்ளைகள்.
உத்ராவை சேதுபதி - கிரிஜா தம்பதியரின் மூத்த மகன் நிலவனுக்கு திருமணம் செய்து கொடுத்து எட்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
யுவராஜ், விஹான் என்று இரு குழந்தைகளோடு மகளின் திருமண வாழ்க்கை அழகிய நீரோடையாக சென்று கொண்டிருக்கிறது. கலகலப்பு பேர்வழியான உத்ரா இருக்கும் இடமே எப்போதும் சிரிப்பும் கொண்டாட்டமுமாக கலகலத்து இருக்கும்.
உத்ராவுடையது முழுக்க முழுக்க பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான். அதிலும் அவளுடைய சின்ன மாமனாரான வாசுதேவன் தான் அடிக்கடி மஹிமாவோடு தங்கள் வீட்டிற்கு வரும் உத்ராவை தன் அண்ணன் மகனுக்கான வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுத்தது.
ஆனால் தன் உயிர் தோழியான மஹிமாவின் அண்ணனை அவள் திருமணம் செய்ய போவதை அறிந்த அவள் உறவினர்களும் நண்பர்களும் அதை ஏற்க தயாராக இல்லை. இப்போது வரையிலும் அவர்களுடையது காதல் திருமணம் என்பதை ஒப்புக்கொள்ள ஏன் தயக்கம்? என்று அவளை ஒருவழியாக்கி விடுவார்கள்.
அவர்களின் வாய் முகூர்த்தமோ என்னவோ நிலவனும் உத்ராவும் காதல் திருமணம் புரிந்தவர்களை விடவும் இணக்கமாக இருப்பதை கண்டு மஹிமாவே ஆச்சர்யப்பட்டு போவாள்.
சிறுவயது முதலே மஹிமாவும் உத்ராவும் பெரும்பாலும் ஒன்றாக தான் காணப்படுவர். இருவருமே ஒரே ஏரியா, இருவரின் வீட்டிற்கும் பதினைந்து நிமிட தொலைவு என்பதால் ஒருவரை மற்றொருவரின் வீட்டில் அடிக்கடி காணலாம்.
உத்ராவிற்கும் மஹிமாவிற்கும் இடையில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. அதனால் தன் தோழிக்கோ அண்ணனுக்கோ திருமணத்திற்கு முன்பு வரை அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பது நன்கு தெரியும்.
அவர்கள் குடும்பத்தின் மூத்த மகனான நிலவனுக்கு பெண் பார்க்க முடிவு செய்ததுமே முதலில் ‘உத்ராவை பார்க்கலாம்’ என்று வாசுதேவன் சொல்ல சிறு வயது முதலே அவர்கள் பார்த்து வளர்ந்த பெண் என்பதால் அனைவருக்குமே அதில் பெரிதாக ஆட்சேபனை இல்லை.
விஷயம் அறிந்த மஹிமாவோ துள்ளி குதிக்காத குறை தான். உடனே உத்ராவிற்கு அழைத்து சொல்ல அவளுக்கும் ஆச்சர்யம் தான்.
“நான் அண்ணின்னு கூப்பிட மாட்டேன்டி.. நீயும் கூப்பிட சொல்லக்கூடாது..” என்று செல்லமாக மிரட்ட மறுபுறம் பலத்த யோசனை.
“உன் அண்ணா என்னை லவ் பண்ணினாராடி அதனால தான் என்னை ஒத்துக்கிட்டாரா?”
“லவ்வா எங்க அண்ணனா? சான்ஸே இல்லை அவர் உன்னை என் ஃப்ரெண்டா மட்டும் தான் பார்த்தார்.. உன்னை மருமகளா கொண்டு வர சொன்னது வாசுப்பா டி..”
“அப்படியா?” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சேதுபதியும், வாசுதேவனும் தங்கள் மனைவியரோடு அவள் வீட்டிற்கு வந்து சேர ஒரே மாதத்தில் உத்ரா நிலவனின் மனைவியாகி இருந்தாள்.
குடும்ப வாழ்க்கை ஒருபுறம் தன்னுடைய பொட்டிக் மறுபறம் என்று மிகவும் சீராக கூட்டு குடும்பத்துக்குள் தன்னை பொருத்தி கொண்டிருக்கும் மகளை எண்ணி என்றுமே பெற்றவர்களுக்கு பெருமிதம் தான்.
அடுத்ததாக அவர்களின் ஒரே மகன் வேதாந்த் ஆர்யன். தன் எதிர்காலம் குறித்த தீர்க்கமான முடிவோடு படிப்பில் கவனம் செலுத்தி யூபிஎஸ்ஸி பரீட்சையில் தேர்வாகி கடந்த சில வருடங்களாக ஏசிபியாக பணிபுரிந்து கொண்டிருப்பவன்.
வேதாந்த் உத்ரா போல கலகலப்பாக பேசக்கூடியவன் இல்லையென்றாலும் அளவான அவன் பேச்சுக்களில் ஆழமும் அடர்த்தியும் அழுத்தமும் அதிகமாகவே இருக்கும்.
நிதானமும், பொறுமையும் மிக்கவன் எதையும் அவசரமில்லாமல் லாவகமாக கையாளும் விதத்தை உடன் பணிபுரிவோர் ஆச்சர்யமாகவே பார்ப்பர்.
அவன் துறையில் பெரும்பாலானவர்கள் கோபத்தோடும் டென்ஷனோடு இருக்கையில் ஒவ்வொரு வழக்குகளையும் மிகவும் நிதானமாக அணுகுபவனின் தோரணையும் வெற்றியும் அவர்களுக்கு பிரமிப்பே..
இறுதியாக தன்ஷிகா கல்லூரி படிப்பை முடித்த கையோடு அர்ஜுனை திருமணம் செய்ய இருப்பவள்.
இவர்களுடையது ஒரு வகையில் காதல் திருமணம் என்று சொல்லலாம். ஆம் அர்ஜுன் தன்ஷிகா மீதான தன் காதலை அவளிடம் கூட தெரிவிக்காமல் நேராக திருமணம் வரை கொண்டு வந்துவிட்டான்.
பெரிய மகளின் புகுந்த வீட்டிலேயே இளைய மகளை கேட்க சைலேந்தர் - வாகீஸ்வரியின் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா என்ன? போதாதற்கு அர்ஜூன் மகனின் தோழனும் கூட.
வேதாந்த் அர்ஜூன் நட்பு கிரிக்கெட் மைதானம், கல்லூரி வரையில் தான் இருக்குமே தவிர்த்து அனாவசியமாக அர்ஜூன் அவன் வீட்டிற்கு வந்தது கிடையாது.
ஆனால் நிலவன் உத்ராவின் திருமணத்திற்கு பிறகு விசேஷங்களில் இருவருமே அடிக்கடி ஒருவர் வீட்டிற்கு மற்றவற சென்று வந்ததில் தன்ஷிகா மீதான அவன் விருப்பமும் வளர தயங்காமல் வேதாந்திடம் சொல்லிவிட்டான்.
வேதாந்த்துக்கு நண்பனை பற்றி நன்கு தெரியும்.. அவன் குணமும் அத்துபடி சொல்லபோனால் வாசுதேவனின் தலையீடு இல்லை என்றால் இன்று அர்ஜூனும் அவனை போலவே காவல்துறை அதிகாரியாகி இருக்க வேண்டியவன் தான்.
வேதாந்துடனே உடற்தேர்வு முதற்கொண்டு அனைத்து தேர்வுகளுக்கும் தயாராகியவனை தேர்வெழுத விடாமல் கிட்டத்தட்ட மிரட்டி தங்களின் குடும்ப தொழிலில் இறக்கி விட்டார் வாசுதேவன்.
அர்ஜுனும் எத்தனையோ தன் தந்தையிடம் போராடி பார்த்துவிட்டான் ஆனால் தம்பியின் முடிவிற்கு கட்டுப்பட்டு அவரும் கை விரித்துவிட கிரிஜா மகனை தேற்றி உயர் படிப்பிற்கு அனுப்பினார்.
சேதுபதியும் வாசுதேவனும் இளையவர்களுக்கு வழி விட்டு ஓய்வு எடுக்க படிப்பை முடித்த அர்ஜுன் அண்ணனுடன் சேர்ந்து வெற்றிகரமாக தொழிலை நடத்தி வருகிறான்.
“இப்போ தன்ஷி படிச்சுட்டு இருக்கிறதால கல்யாணம் செய்யற ஐடியா இல்லை மச்சி.. முடிச்ச பிறகும் அவ ஹையர் ஸ்டடீஸ் எப்படின்னு பார்த்துட்டு தான் சொல்ல முடியும்.. இருந்தாலும் அப்பா அம்மா கிட்ட பேசறேன்” என்று வேத் பேசி விட்டு வந்த அன்று மாலையே பெற்றோரை அழைத்து கொண்டு வந்துவிட்டான் அர்ஜூன்.
வேதாந்த் சொன்னதை தான் அவன் பெற்றோரும் சொல்ல, “நாங்க காத்திருக்கோம் ஆனா இப்போ பெரியவங்க அளவுல உறுதி படுத்திக்க தான் வந்திருக்கோம் சம்மந்தி. இந்த விஷயம் தன்ஷிக்கு கூட தெரிய வேண்டியதில்லை, நடக்கும் போது சொல்லிக்கலாம்..” என்றதில் அவர்களுக்கு முழு திருப்தி.
தன்ஷிகா படிப்பை முடிக்கவும் அவளிடம் விஷயத்தை சொல்லி “கல்யாணம் பண்ணிட்டு நீ ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணலாம் தன்ஷி. உன் அக்கா உன்னோடு இருக்கிறதால எங்களுக்கு உன்னை பற்றின கவலை இருக்காது..” என்றார் வாகீஸ்வரி.
பின்னே பெரிய மகளின் குணத்திற்கு அப்படியே நேர் எதிர் குணம் கொண்டவள் அல்லவா அவர்களின் இளைய மகள். அமைதியான சுபாவம், அதிர்ந்து பேச மாட்டாள், அடுத்தவரோடு அத்தனை எளிதாக பழகுதும் அவளுக்கு சற்று கடினமே!! ஆனால் பழகிய பின்னர் அவர்களிடம் அழகாக பொருந்தி கொள்வாள்.
அதனால் அவளை எப்படி கட்டி கொடுத்து கரை சேர்க்க போகிறோம். மகள் எப்படி புகுந்த வீட்டில் பொருந்தி போவாள் என்று அவர்களுக்கு இருந்த கவலை எல்லாமே உத்ரா வீட்டில் இருந்து தன்ஷியை பெண் கேட்டு வந்ததில் மறைந்து போனது.
ஒரு வருடம் வரை காத்திருந்தவர்களை மேலும் இரண்டு வருடங்கள் காத்திருக்க சொல்வது நன்றாக இருக்காது என்பதால் இப்போதே மகளுக்கு மணமுடிக்க விருப்பம் கொண்டிருந்தனர். ஆனாலும் மகளின் பதில் தெரிந்து கொண்டு சம்மந்தி வீட்டில் பேச இருந்தனர்.
தன்ஷிகாவிடம் அவள் முடிவை கேட்க அவளோ, ‘எதுவானாலும் பெற்றோரின் முடிவு தான் தன்னுடையதும்..’ என்று சொல்லிவிட இறுதி பரீட்சை முடியவும் அர்ஜூனின் குடும்பம் அவளை முறையாக பெண் பார்க்க வந்து நிச்சயம் முடிந்து இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடக்க இருக்கிறது.
Comments
Post a Comment