வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - எபிலாக் 2



“நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்..” என்றதும் பிள்ளைகளுக்கு முகம் கழுவி ரிஷி அழைத்து வர அங்கே சிவபாலன் தயாராக பாலை ஆற்றி கொண்டிருந்தார். 


சாம்பார், பொரியல் தயாராகிய நிலையில் மகா சுண்டல் செய்து கொண்டிருக்க ரிஷி சாதத்திற்கு உலை வைத்துவிட்டு மகனை அழைத்து கொண்டு குளியலறைக்கு சென்றான். 


எப்போதுமே குழந்தைகளை குளிக்க வைத்து தயார்படுத்துவதை பெரும்பாலும் சிவபாலனும் ரிஷியும் செய்து விடுவார்கள். 


சிவபாலன் பிள்ளைகளை துவட்டி உள்ளாடை அணிவிக்க ரிஷி சாதத்தை வடித்து டிஃபன் பாக்ஸ்களை எடுத்து வைத்துவிட்டு பழத்தை நறுக்க தொடங்கினான். 


குழந்தைகள் ரொம்பவே சமத்து!! தினகரன் வீட்டில் அனைவரிடமும் ஒட்டி கொண்டவர்கள் இங்கும் அப்படியே!! அதனால் அனைத்தையும் அவர்களுக்கு மகா தான் செய்தாக வேண்டிய கட்டாயம் கிடையாது. 


மாலை ரிஷியும் மகாவும் சேர்ந்து அவர்களை ஹோம்வொர்க் செய்ய வைத்து விட இரவே அவர்களுக்கான பொருட்களை தயாராக ஹாலில் இருக்கும் மேஜையில் மகா எடுத்து வைத்து விடுவாள்.


அதனால் காலையில் சிவபாலன் எதையும் தேடி ஓட வேண்டியதில்லை. கதை பேசியபடி அவர்களை தயாராக்கி விடுவார். 


குளித்து விட்டு வந்த மகா குழந்தைகளுக்கு தோசையை போட்டு கொடுக்க இருவரும் போட்டி போட்டு கொண்டு உண்ண தொடங்கினர். 


மகா ஊட்டுவதாக இருந்தால் இங்கும் அங்கும் ஓடியாடி, சண்டையிட்டு ஒரு மணி நேரமாக்கி விடுவார்கள். இதுவே அவர்களிடம் கொடுத்து யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களின் பெயரை இன்றைய வெற்றியாளர் (TODAY’S WINNER) என்று ஹாலில் இருக்கும் பலகையில் எழுதம் வழக்கத்தை கொண்டு வந்திருந்தாள். 


உணவு மட்டுமல்ல, பாடங்களை முடிப்பது, அவள் கொடுக்கும் சிறு வேலைகளை செய்வது என்று யார் முதலில் சிறப்பாக செய்கிறார்களோ அதன் அடிப்படையில் வார இறுதியில் வெளியில் செல்லும் போது அவர்களுக்கான பரிசையும் வாங்கி கொடுப்பாள். 


கடந்த ஒரு ஆண்டாகவே இதை செயல்படுத்தி வருவதால் அவர்களுக்கு நேரம் மிச்சமாவதோடு பிள்ளைகளும் சுறுசுறுப்பாக நேரத்தின் அருமை உணர்ந்து இயங்கினர். 


ஆனால் உணவை மட்டும் அவசர கதியில் முடிக்க அனுமதிக்க மாட்டாள் நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்று கண்டிப்போடு சொல்லி விடுவாள்.


மகா சுடிதார் அணிந்து தலையை பின்னலிட ரிஷி இருவருக்குமான டிஃபனோடு அறைக்கு வந்தவன் மனைவிக்கு ஊட்டியபடி தானும் உண்டான். 


அவர்கள் கிளம்ப இன்னும் நேரமிருக்கிறது மகாவே தனித்து சாப்பிடலாம் ஆனால் காலை உணவை அவளுக்கு ஊட்டி விடுவதை வழக்கமாக்கி இருந்தான் ரிஷிவரதன். 


ஒன்பது மணிக்கு இருவரும் வீட்டில் இருந்து கிளம்பினால் போதும். சமத்தாக இருக்கும் பிள்ளைகள் வேலைக்கு கிளம்பும் போது தான் சில நேரம் அடம் பிடிப்பார்கள். 


அப்போதும், ரிஷி அவர்களை வண்டியில் ஒரு சுற்று அழைத்து சென்று வந்தால் புன்னகையோடு பள்ளிக்கு கிளம்புவார்கள். இன்றும் அப்படியே அவர்களை இறக்கி விட்டவன் மனைவியோடு காரில் கிளம்பினான். 


பொதுவாகவே மகாவிற்கு அவனோடு பைக்கில் செல்வது தான் பிடிக்கும் என்றாலும் காலை நேர வெயில், ட்ராஃபிக், மாசு என்று பல காரணங்களுக்காக ரிஷி மனைவியை காரில் தான் அழைத்து செல்வது. 


மகா ரிஷிக்கு டாட்டா காண்பித்து கொண்டிருந்த குழந்தைகள் அவர்கள் தலை மறைந்ததும், “போலாம் தாத்து..” என்று சொல்ல சிவபாலன் அவர்களோடு பள்ளிக்கு கிளம்பினார். 


அது அவர்கள் வீட்டில் இருந்து பதினைந்து நிமிட தொலைவு தான் என்பதால் காலையும் மாலையும் அவரே பொறுப்பை ஏற்று கொண்டார். 


மூன்று மணிக்கு அழைத்து வந்தால் இருவருமே உடை மாற்றி பால் குடித்து உறங்கி விடுவார்கள். 


அன்றிரவு ரிஷி தலைவலி என்று சொன்னதால் அவனுக்காக காஃபி கொண்டு வந்த மகா அங்கே குழந்தைகள் தூங்கி கொண்டு இருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.


பிள்ளைகளின் பாதங்களை பிடித்து விட்டு கொண்டிருந்தவனிடம், “எப்படி ரிஷி, இவ்ளோ சீக்கிரம் தூங்கிட்டாங்க?”


“இன்னைக்கு பார்க்ல அவங்க ஃபிரெண்ட்ஸ் வந்துட்ட குஷியில கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டாங்க?” என்றான் சிரிப்போடு.   


பொதுவாகவே மாலை நேரங்களில் சிவபாலன் வாக்கிங் செல்ல இவர்கள் இருவரும் குழந்தைகளை பார்க்கிற்கு அழைத்து சென்று விளையாட வைப்பார்கள். 


காஃபியை கணவனிடம் கொடுத்தவள், “என்ன திடீர்னு தலைவலி?” என்று தைலத்தை எடுக்க, 


“இரு இவங்களை அவங்க பெட்ல படுக்க வச்சுட்டு வரேன்..” என்ற ரிஷி அவர்களுக்கான இடத்தில் படுக்க வைத்து போர்வை போர்த்தி விட்டான்.  


என்ன தான் அவர்களுக்கான கட்டிலில் தூங்கினாலும் சில நேரம் இரவில் விழிப்பவர்கள் பாத்ரூம் சென்று விட்டு இவர்களுடன் தான் உறங்குவது. 


“முதல்ல இந்த கட்டிலை மாத்தி பெரிய சைஸ் ஆர்டர் போடணும் ரிஷி!!” என்ற மகா காஃபியை எடுத்து கொடுத்து கணவன் அருகே அமர்ந்தாள்.


“எதுக்கு?”


“இவங்களுக்காக வாங்கினதை விட்டுட்டு எப்போ பார்த்தாலும் இங்க வந்துடுறாங்க இடமே போத மாட்டேங்குது..”


“இருக்கட்டும் லச்சு.. இன்னும் கொஞ்ச காலம் தானே இப்படி நம்மை தேடி நம்ம மேல ஏறி படுத்து தூங்குறது எல்லாம்..” என்றவன் பிள்ளைகளை பார்த்தபடி, “ஸாரிடி!!” என்றான். 


ஆனால் அவன் பேச்சை தொடர விடாத மகா, “திரும்ப ஆரம்பிச்சுட்டீங்களா?!” என்று செல்லமாக முறைத்தவள், “போதும் ரிஷி! கேட்கிற எனக்கே அலுத்து போச்சு உங்களுக்கு அலுக்கலையா?” என்று கணவனை தன் மடியில் சாய்த்து அவன் தலையை கோதினாள்.


“இல்லை அலுக்கவே இல்லை! அலுக்கவும் அலுக்காது..” என்றவன் நெற்றியை இதமாக பிடித்து விட்டவள் தைலம் எடுத்து ஓரங்களில் மென்மையாய் தடவினாள்.  


“நான் ஆரம்பத்துலயே என் ஈகோவை, தாழ்வு மனப்பான்மையை ஒதுக்கி வச்சுட்டு உன்கிட்ட என்னோட நிலவரத்தை சொல்லி இருந்தா இப்போ மாதிரியே அப்போ திட்டம் போட்டு செய்திருக்கலாம் தானே?!” என்றான்.


“இப்போ இந்த பேச்சு ரொம்ப அவசியமா?” 


“எனக்கு அவசியம்! பொதுவாவே உயிரோடு சொர்கத்துக்கு போக முடியாதுன்னு சொல்லுவாங்க ஆனா பூலோக சொர்கத்தை எனக்கு பரிசளித்த உன்னை புரிஞ்சுக்காம போன தப்புக்கு எவ்ளோ ஸாரி கேட்டாலும் தீராது லச்சு!!”


“ஓகே, இன்னைக்கு கோட்டா முடிஞ்சது. ஸாரி அக்ஸப்டெட்!! இனி ஒரு வார்த்தை இப்படி வரக்கூடாது..” என்று அவன் நெற்றியில் முத்தமிட போக அவள் கழுத்தை வளைத்து, 


“ஹே தைலம் போட்டிருக்க.. மறந்துட்டியா?” என்றவன் அவள் முத்தத்தை தன் இதழ்களில் முற்று பெற வைத்து மோட்சம் பெற்றான். 


“எதனால தலைவலி சொல்லவே இல்லை?!”


“என்னோட கலீக் கரண் - ஸ்வேதாக்கு குழந்தை பிறந்திருக்குன்னு சொன்னேனே?!”


“ஆமா…”


“அவங்களை பார்த்துட்டு அப்படியே ராம் மாமியார் வீட்ல பங்க்ஷன்னு கூப்பிட்டான் அங்க போயிருந்தேன்.. ரொம்ப நாள் கழிச்சு அவ்ளோ தூரம் பைக்ல வெயில்ல சுத்தினதால..”


“இப்போ எப்படி இருக்கு?” என்றாள் நெற்றியை பிடித்து விட்டபடி.


“நீ பக்கத்துல இருக்கிறப்போ எப்படி இருக்கும்? போயே போயிந்தி, இட்ஸ் கான்!! பறந்து போச்சு..” என்றவன் அறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த மெல்லிய விளக்கை அணைத்து விட்டு மனைவியோடு மெத்தையில் சரிந்தான். 


“எல்லாரும் பொண்டாட்டினாலே தலைவலி இல்லை அவங்களால தலைவலின்னு புலம்புவாங்க ஆனா நான் பக்கத்துல இருந்தா தலைவலி பறந்து போறது உங்களுக்கு மட்டுமா தான் இருக்கும்..” என்றாள் சிரிப்போடு. 


“மத்தவங்களுக்கு, எனக்கு இல்லைடி..” என்றவனின் பார்வை மாற்றத்தில் “வேண்டாம், ஆரம்பிக்காதீங்க..” என்று மகா அவன் மீசையை பிடித்து இழுத்தாள்.


“என் பொண்டாட்டியை நான் ரசிக்கிறேன் உனக்கு என்ன பிரச்சனை?!..” என்று தன் மார்பு முடிகளோடு விளையாடி கொண்டிருந்தவளின் நாடியை உயர்த்தி கேட்டான்.


“நீங்க ரசிக்கிறதோடு நிறுத்துறது தான் பிரச்னை!”


“அஹான்!!” என்று ரிஷி அவள் நெற்றியை முட்டிட.,


“நானும் இரண்டு வருஷமா இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்னு சொல்றேன் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க.. போங்க..” என்று விலகியவளை விடாமல் வளைத்து கொண்டவன்,  


“இதுக்கு ஏற்கனவே நான் பதில் சொல்லிட்டேன்..” என்றான்.


“ப்ச், ரிஷி சுமக்க போறது நான் தானே!! ஏன் ஒத்துக்க மாட்டேங்கறீங்க? எனக்கு ஆசையா இருக்கு..”


“நீயென்ன குழந்தையாடி?! சொன்னா புரிஞ்சுக்கோ லச்சு, ஏற்கனவே மசக்கையால வாந்தி தலை சுத்தல்னு நீ பட்டது போதாதா?!


இப்போ வரையிலும் என் கண்ணுக்குள்ள இருக்கு. அதுதான் ஆண்டவன் நமக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என்று கொடுத்து இருக்காரே அப்புறம் எதுக்கு இன்னொன்னு?!”


“நான் தான் சொன்னேனே மிஸ் பண்ணின காலங்களை அனுபவிக்கனும்னு..”


“மிஸ் பண்ணின காலங்கள் என்றால் எதை சொல்ற?”


“நீங்க எனக்கு வாமிட் வரும் போது நெற்றியை பிடிச்சுட்டு துணை இருக்கணும், தலைசுத்தல் போது தோளில் சாய்த்து அரவணைக்கனும், ஊட்டி விடனும், வாக்கிங் கூட்டிட்டு போகணும், கால் பிடிச்சு விடனும், டெலிவரி போது என்கூட இருக்கணும், இப்படி நிறைய இருக்கு..”


“ஏன் பிரசவ காலத்தில் மட்டும் தான் மனைவியை தாங்கணுமா என்ன? நம்மோடு வாழ்க்கை முழுக்க உடன் பயணிக்க போற துணையை பிள்ளைக்காக இல்லாம அவங்களுக்காக தாங்கனும்.. அப்போ தான் அந்த உறவோட வேர் பலமிழக்காமல் உறுதியாக இருக்கும்”


“என்ன புதுசா வேர் கொடின்னு சயின்ஸ் கிளாஸ் எடுக்கறீங்க?” என்று மகா சிரிக்க ரிஷி அவள் சிரிப்பில் லயித்து போனான். 


“ரிஷி..”


“...”


“ரிஷி, கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு ரசிங்க யார் வேண்டாம் சொன்னா?!” என்று கணவனை பிடித்து உலுக்கவும் ஸ்மரன் பெற்றவன், 


“குழந்தைக்காகவும், ஊருக்காகவும், உறவுக்காகவும் மட்டும் அல்லாமல், மனைவிக்கான உரிமையையும், அவளது ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் அவளுக்காகவே மதித்து நிறைவேற்றனும். அதுவே அவளுக்குக் கொடுக்கப்படும் உண்மையான மரியாதை..”


“அப்போதுதான் அந்த பந்தம் குறுகிய காலத்திற்கு சுருங்காமல், காலத்தால் மேலும் வேரூன்றி, அவர்களுடைய நேசம் விருட்சமாகப் பரவி வளரும்..”


“நீயே யோசிச்சு பாரு, ‘உன் குழந்தை வயித்துல இருந்தப்போ என்னை கவனிச்சுக்கிட்ட மாதிரி இப்போ பார்த்துக்கிறது கிடையாது’ என்பது தான் பல மனைவிகளோட கம்பளைன்ட்டா இருக்கும்..” என்றதும் மகாவும் அதை ஆமோதித்தாள்.


“என் பொண்டாட்டிக்கு ஊட்டி விட்டு, கால் அமுக்கி விடறதுல இருந்து வாக்கிங் போறது, அவளோடு டைம் ஸ்பென்ட் பண்ணி ஆசைகளை நிறைவேற்ற அது என்ன பத்து மாசம் டைம் லிமிட்? என் வாழ்க்கை முழுக்க செய்வேன்டி!!” என்றான் அவள் பாதங்களை தன் மடியில் வைத்து மென்மையாய் பிடித்து விட்டபடி. 


நாள்கள் மாறினாலும், நிலைகள் மாறினாலும்,
நெஞ்சம் மாறாத நிழலாய்,
நேச விருட்சமாய், அன்பின் ஆலாபனையாக,
என் வாழ்வின் முழு அர்த்தமாய் நிற்கும்
என்றும் என் அருகில் நீயே என் வாழ்க்கைத்துணை!


நிறைந்தது


Comments

Post a Comment

Main Pages