தீராத காதல் தொல்லையோ - 4.2
“அன்னைக்கு என் லச்சு அழுத அழுகையை நீங்க நேர்ல பார்க்கலை அதனால தான் உங்களால இவ்வளவு சுலபமா பேச முடியுது.. குழந்தைங்க பிறந்ததில் இருந்து ஒவ்வொரு நிமிஷமும் என்னை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கா ப்பா..”
“ஏமாற்றம் ரொம்ப தான் கொடுமை போல.. லச்சு தன்னோடு முடிவை தெளிவா சொன்ன பிறகு கூட இதோ இப்போ நீங்க பேசும் போது என்னையும் அறியாம என் மனசு லச்சு வந்துடுவாளான்னு எதிர்பார்க்குது ப்பா..”
“ஆனா அவ நிச்சயம் வர மாட்டா என்ற உண்மையை மனசு ஏத்துக்க மறுக்குது. நிதர்சனம் தெரிஞ்ச எனக்கே இவ்ளோ வலின்னா எதுவுமே தெரியாத லச்சுவுக்கு எவ்ளோ வலி இருந்திருக்கும்?”
“ரிஷி, உணர்ச்சிவசப்படாத நிச்சயம் எல்லாமே சரியாகும்..” என்றவரின் எந்த சமாதானமும் அவனிடம் எதிர்பார்க்கவில்லை.
“குழந்தைகளோட வளர்ச்சியை பக்கத்துல இருந்து பார்க்க முடியாட்டியும் ஃபோன்ல பார்த்து இருக்கலாம்னு லச்சு கேட்டா ஆனா அந்த நேரத்துல நான் என் குழந்தைகள் வளர்ச்சி எதையுமே மிஸ் பண்ணாம பார்த்ததை சொன்னா அவளுக்கு கோபம் வரும்னு தான் எதுவும் பேசல..”
ஆம் கதிர் மறக்காமல் குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சி நிலைகளையும் புகைப்படமாக வீடியோவாக ரிஷிக்கு மறக்காமல் அனுப்பி விடுவான்.
“அப்பா ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் என்னோடு சேர்ந்து ரசிக்க அனுபவிக்க நினைச்சிருக்கா ப்பா என் லச்சு, அதை புரிஞ்சுக்காம எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்.. நான் மனுஷனே இல்லை, இதுக்கே நான் என்னை மன்னிக்க மாட்டேன்..” என்றான் ஆத்திரத்தோடு.
“இப்படி கிடந்து மருகி உன் உடம்பை கெடுத்துக்கறதுக்கு பதிலா மருமக கிட்ட இன்னொரு முறை பேசி பார்க்கலாம் ரிஷி..”
“இல்லைப்பா வேண்டாம். லச்சுவுக்கு இனி எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டேன்னு சொல்லி இருக்கேன்.. எக்காரணம் கொண்டு அவளை வற்புறுத்தாதீங்க..”
“இப்படியே போனா என் பிள்ளையை நான் இழந்துடுவேன் போல இருக்கே ரிஷி..” என்றவரின் குரல் உடைய கண்ணீரும் இமை மீறியது.
“இருந்து மட்டும் என்னப்பா செய்யப்போறேன்?”
“அபசகுனமா பேசாத ரிஷி! இல்லை இது சரிபட்டு வராது. முதல்ல நீ வேலைக்கு கிளம்பு இன்னும் எவ்ளோ நாள் வீட்டோடு அடைஞ்சு இருக்க போற?”
“எதுக்கு ப்பா வேலைக்கு போகணும்? யாருக்காக நான் சம்பாதிக்கணும்? ஒருவேளை என் பொண்டாட்டி, குழந்தைகள் என்னை நம்பி இருந்தா அவங்களுக்காக நான் சம்பாதிக்கலாம் ஆனா யாருமே இல்லையே..” என்று முகம் பொத்தியவனின் முதுகு அழுகையில் குலுங்கியது.
“ரிஷி, நீ வா நான் மருமகள் கிட்ட பேசறேன். உன்னை பிரிஞ்சு லட்சுமியாலயும் இருக்க முடியாதுடா..”
“அதெல்லாம் எனக்கு நீங்க சொல்ற ஆறுதல் வார்த்தை மட்டுமே! என்னைக்கும் நிஜமாகாது இல்லைன்னா என்னை தன்னோட வாழ்க்கையை விட்டு போக சொல்லி இருப்பாளா?” என்று கேட்க சிவபாலனால் பதில் சொல்ல முடியவில்லை.
“குழந்தைகளைப் பார்க்க முடியலை என்பதை தவிர்த்து அவர்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லப்பா… என் லட்சு அவங்க ரெண்டு பேரையும் தன்னோட ரெண்டு கண்ணா பார்த்துப்பா.. ஆனா அவ தான் எப்படி இருக்கான்னு தெரியல..”
“சரியா தூங்கினாளா? சாப்பிட்டாளா? தன்னை கவனிச்சுக்கிறாளா எதுவும் தெரியலை. இதோடு சேர்த்து வேலையும் பார்த்துட்டு இருக்கா ப்பா..”
“நீங்க பார்க்க போனப்ப கூட வேலையா இருந்ததா தானே சொன்னீங்க?” என்றதற்கு தலையசைத்தார்.
ஆம் இதுவரை நான்கு முறை மருமகளை பார்க்க சென்றிருக்கிறார் சிவபாலன். ஆனால் முன்பு எப்படி மகன் வெளிநாட்டில் இருக்கிறான் என்ற செய்தியை சொல்லாமல் மகா குழந்தைகளை மட்டும் பார்த்துவிட்டு வந்தாரோ இப்போதும் அதே நிலையில் நிற்க வைக்கப்பட்டு இருந்தார்.
மகா அவரை எப்போதும் போல இன்முகத்தோடு வரவேற்று குழந்தைகளை பற்றிய பேச்சு அவர் உடல்நிலை என்று விசாரித்து கொள்வாளே தவிர்த்து ரிஷியை பற்றி மறந்து பேசி விட மாட்டாள்.
சிவபாலனுக்கு தான் மகன் அனுபவிக்கும் கொடுமைகளை மருமகளிடம் சொல்லிவிட வாய்வரை வார்த்தை வரும் ஆனால் சொல்லாமல் கிளம்பி விடுவார்.
ஒரு புறம் மருமகளுக்கு எந்த சங்கடமும் கொடுக்கக் கூடாது என்ற அக்கறை இருந்தாலும் மகாவிடம் பேசியது தெரிந்தால் மகன் இன்னுமே வேதனை கொள்வானே என்ற கழிவிரக்கம் அவரை வாய் இருந்தும் ஊமையாக செய்திருந்தது.
மகாவின் பெற்றோரும் தினமும் காலை மகளிடம் சென்று விடுபவர்கள் மாலை வரை பேரக்குழந்தைகளையும் அவளையும் பார்த்துக் கொண்டாலும் மகளை ஒரு வார்த்தை கூட கேட்க முடியாத நிலையில் தான் நிறுத்த பட்டிருந்தனர்.
அன்று மருமகனின் வார்த்தைக்காக கட்டுப்பட்டு எதையும் சொல்லாதவர்கள் இன்று மகளின் மனம் கொண்டிருக்கும் வேதனை உணர்ந்து அவளை கேள்வி கேட்காமல் இருக்கின்றனர்.
காலம் அனைத்தையும் மாற்றும் அருமருந்து என்பதால் மகளை புரிந்து கொண்டு அவள் காயம் ஆறுவதற்காக நேரம் கொடுத்து அமைதி காத்து வருகின்றனர்.
“நான் என் லச்சுவை மறந்துடுவேன்னு சொல்றாப்பா எப்படி என்னால அது முடியும்?” என்ற மகனின் வலியில் அவனை விடவும் அதிகம் துடித்தது அவர் தான்!!
பூஜையறைக்கு சென்றவர் கண்ணீரோடு இரு கரங்களையும் கூப்பி, “ஆண்டவா, ஏன் என் பிள்ளைக்கு இப்படி ஒரு தண்டனை? லட்சுமி கிட்ட அவன் நடந்துகிட்டதை நான் நியாயப்படுத்தல.. அது தப்பு தான்!!”
“இப்போ தன் தப்பை அவனே உணர்ந்துட்டான். உணர்ந்து திருந்தி வருந்தி அழுது கரையறவனோட வாழ்க்கையை ஏன் நரகமாக்குற? எப்படியாவது என் மகனை காப்பாற்றி கொடுத்துடு..” என்று வேண்டிக் கொண்டு ரிஷிக்கு விபூதியை பூசி விட்டவர்,
“உன் நல்ல மனசுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் ரிஷி. மனசை போட்டு உழப்பிக்காம நிதானமா யோசி விளங்காத பல விஷயம் விளங்கும்.. தெளிவு கிடைக்கும்..” என்றார்.
***************
பெங்களூரில் இருந்த இந்திரா காலை மகள் வேலைக்கு கிளம்பும் முன்பாக அவளுக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்.
“நேத்தி நைட்டு எதுக்கு அவ்ளோ சாப்பாடு நாய்க்கு போட்ட?” என்றார் வனிதாவின் மாமியார்.
“காலையில வனிதாவுக்கும் பாப்பாவுக்கும் வடிச்ச சாதத்தில் கொஞ்சம் மீந்துடுச்சு சம்பந்தி..”
“அதுக்கு?!”
“இல்லை அந்த சாதம் கெட்டும் போயிடுச்சு.. நமக்கு மதியம் வடிச்சதுல கொஞ்சம் மீறவும் ரெண்டும் சேர்த்து நாய்க்கு போட்டேன்.
“இங்க என்ன வல்லா கொள்ளையாவா இருக்கு எடுத்து வெளியே கொட்ட? சாதம் மீந்தா நைட் சாப்பிட வேண்டியது தானே?!”
“இல்லை சம்பந்தியம்மா, பொதுவாவே நான் ராத்திரியில சாப்பாடு சாப்பிடுறது கிடையாது. எப்பவும் டிஃபன் சாப்பிட்டு தான் பழக்கம்..”
“அதெல்லாம் உங்க வீட்டோட.. எங்க வீட்ல இப்படி மீந்து வெளியில கொட்ற வேலை எல்லாம் வச்சுக்க கூடாது.. அரிசி பருப்பு விக்கிற விலைக்கு தினமும் இப்படி வடிச்சு நாய்க்கு கொட்டினா நாளைக்கு சோத்துக்கு சிங்கி தான் அடிக்கணும்..”
“...”
“இப்படியே போனா கடைசியில எங்க வயித்துல ஈரத்துணியை போட வச்சுடுவ போலயே. இவ்ளோ வயசாகியும் எப்படி சிக்கனமா குடும்பம் நடத்தனும்னு தெரியாது உனக்கு..”
“கெட்டு போன சாப்பாட்டை எப்படி சாப்பிடறது சம்பந்தி?”
“ஏன் காலையில வடிச்சதை மதியம் சாப்பிட்டிருந்தா அது ஏன் கெட்டு போக போகுது?” என்றவரிடம் எதையும் பேச முடியா நிலையில் இந்திரா நின்றிருக்க,
“எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது. ஆரம்பத்துல உன் பெண்ணும் இப்படி தான் இருந்தா.. இப்போ எப்படி கட்டு கோப்பா குடும்பம் நடத்துறான்னு தெரியுமா?”
“தெரியலைன்னா அவ கிட்ட கத்துக்கோ ஆனா இப்படி சாப்பாட்டை வீணடிக்கிறது இதுவே கடைசியா இருக்கட்டும்..” என்றவர் இந்திரா இங்கே வந்து சேர்ந்த புதிதில் இப்படி பேசாமல் குறைந்தபட்ச மரியாதை கொடுத்தார்.
ஆனால் சிந்து அந்த பையன் வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ததில் அவளை இந்திரா அடக்க முயன்ற போது, “உங்களால தான்! நீங்க பொய் சொல்ல சொன்னதால தான் வயசுக்கு வராமலே வந்தேன்னு சொன்னேன். அதனால தான் மாமாவுக்கும் எனக்கும் நிறைய பிரச்சனை..” என்று வனிதாவும் இந்திராவும் மூடி மறைத்த விஷயத்தை நட்ட நடு வீட்டில் போட்டு உடைத்து விட்டாள்.
அதை கேட்டு “என்ன நீ இன்னும் வயசுக்கு வரலையா?” என்ற அனைவரிடமும் அத்தனை அதிர்ச்சி.
“ஆமா. மாமா எங்களை மறந்துடுவாங்க எதுவுமே செய்ய மாட்டாங்கன்னு சொல்லி அம்மாவும் பாட்டியும் தான் பொய் சொல்ல சொன்னாங்க..”
“என்னடி இதெல்லாம்?” என்று வனிதாவின் மாமியார் அவளை பார்க்கவும் வேறு வழி இல்லாமல் தான் தப்பித்துக் கொள்வதற்காக மொத்த தவறையும் நா கூசாமல் அன்னை மற்றும் தம்பி மீது போட்டாள் வனிதா.
Comments
Post a Comment