வாழ்க்கைத்துணை - 20.1
அதிகாலை நான்கே முக்கால் மணி என்பதால் வீடே அத்தனை நிசப்தமாக இருக்க ரிஷிவரதனின் அறையில் இருந்த கைபேசியில் அலாரம் சப்தமாக ஒலித்தது.
மனைவியை கட்டிக்கொண்டு இருந்த ரிஷிவரதனின், “லச்சு” என்ற குரல் தூக்க கலக்கத்தோடு மகாலட்சுமியின் காதோரம் கிசுகிசுக்க “ஹ்ம்ம்” என்றபடி அசைந்தவளால் இமைகளை திறக்க முடியவில்லை.
“லச்சு எந்திரி நேரமாச்சு” என்று முணுமுணுத்த ரிஷி இன்னும் உறக்கத்தில் தான்.
“ஹ்ம்ம்.. இதோங்க..” என்றபடி கணவனின் முகத்தில் விழித்தவள் அவன் உறங்கி கொண்டிருக்கும் அழகை மெல்லிய விளக்கொளியில் ரசித்தபடி இருக்க மீண்டும் அலாரம் ஒலித்தது.
சைட் டேபிளில் இருந்த கைபேசியை பாய்ந்து எடுத்து ரிஷி விழிக்கும் முன்பாக அலாரத்தை நிறுத்தியவள் எழுந்து கொள்ள முயல அதற்கு ரிஷியின் கரம் அனுமதிக்கவில்லை.
புன்னகையோடு கணவனை பார்த்தவள் இதழ்கள் அவன் உன் முச்சி முடிகளை ஒதுக்கி நெற்றியில் மென்மையாய் முத்தமிட, அவன் கரத்தை மெல்ல அகற்றி விட்டு எழுந்து கொண்டாள்.
கூந்தலை அள்ளி முடிந்தவள் குளியலறை கதவை திறந்து கொண்டு சென்றாள்.
மகாலட்சுமி, தினகரன் - பாக்கியலட்சுமி தம்பதியினரின் ஒற்றை பெண். இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு பிறகு பல வருடங்கள் கழித்து பிறந்த மகாலக்ஷ்மி நிச்சயம் அந்த மகாலக்ஷ்மியின் ஸ்வரூபம் தான்.
அவளுடையது மத்திய தரத்திற்கும் சற்று கூடுதலான வசதி படைத்த குடும்பம். அவளுடைய தாத்தா பெரும் செல்வந்தர். அவருக்கு பின் அவருடைய ஒரே மகனான தினகரனின் பெயருக்கு அனைத்து சொத்துக்களும் வந்து சேர்ந்தது.
இருபத்தி நான்கு வயதின் நிறைவில் இருப்பவள் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பிரபல ஐடி கம்பெனியில் பணியாற்றி வருபவள் மட்டுமல்ல ரிஷிவரதனின் மனைவியும் இன்னும் சில மாதங்களில் ஜனனம் எடுக்க இருக்கும் அவர்கள் குழந்தையின் அன்னையும் ஆவாள்.
நல்ல நிறம், அழகு, குணம் அனைத்தும் ஒருங்கே அமைந்த மகாலக்ஷ்மியின் அழகு நம் ரிஷிவரதனை ஈர்த்ததில் வியப்பொன்றும் இல்லை.
ரிஷிவரதன் இருபத்தி எட்டு வயதில் மாநிறத்திற்கும் சற்று கூடுதலாகவே நிறம் கொண்டு சராசரிக்கும் சற்று அதிகமான உயரம், திடகாத்திரமான உடல்வாகு என்று இருந்தவனின் வசீகரத் தோற்றம் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
சில மாதங்களுக்கு முன்பு தான் மகாலட்சுமியோடு திருமணம் நடந்திருந்தது. இவர்களுடையது பெற்றோர் பார்த்து வைத்த திருமணம்.
கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக ஐடி துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பவன். பெற்றோருக்கு ஒரே மகன். இவனோடு பிறந்த பெண் வனிதா. இவனை விடவும் பத்து வயது பெரியவள்.
அவளை கட்டி கொடுத்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது.
மகாலக்ஷ்மி ரிஷிவரதனுடையது பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான். ரிஷியின் புகைப்படம் கொடுக்கப்பட மஹாவிற்கு அவனை மறுப்பதற்கு பெரிதாக எந்த காரணமும் இல்லாமல் போனது.
மகாலக்ஷ்மியும் அவள் வயதிற்கே உரிய வனப்போடு காண்போரை மீண்டுமொரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகி தான். அவளுடன் வேலை செய்த ஆண்களில் சிலர் ப்ரொபோஸ் செய்திருக்கின்றனர்.
ஆனால் தந்தை பார்க்கும் மாப்பிள்ளை தான் தன் ‘வாழ்க்கைத்துணை’ என்று தீர்மானமாக சொல்லிவிட்டாள்.
பெண் பார்க்க வேட்டி சட்டையில் வந்தவனின் கற்றை மீசை, அளவாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி அவனுக்கு கூடுதல் கம்பீரத்தை கொடுக்க மகாவின் அத்தை, சித்தி, அண்ணிகள் எல்லாம் அவர்களின் ஜோடி பொருத்தத்தை சிலாகித்து பேசி சிலிர்த்து போயினர்.
பெரியவர்களின் அனுமதியோடு அவளிடம் பேசியவனின் ஆளுமையும் புன்னகையும் அவளைக் கவர்ந்து விட திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றது.
பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு குளியலறையில் இருந்து மெல்ல வெளியில் வந்த மகாலட்சுமி இரவு விளக்கின் மெல்லிய ஒளியில் துண்டை தேடி எடுத்து ஈர முகத்தை துடைத்தாள்.
ரிஷி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் சப்தம் எழுப்பாமல் செல்ஃபோன் வெளிச்சத்தில் பொட்டு வைத்து கொண்டு தண்ணீர் பாட்டிலோடு வெளியில் வந்தவள் சமையலறைக்கு சென்று பாலை அடுப்பில் ஏற்றி அரிசி ஊறப்போட்டு காய்கறிகளை எடுத்து வெளியில் வைத்துவிட்டு தண்ணீர் குடித்தாள்.
குக்கரில் பருப்பை வைத்தவளுக்கு குமட்டிக்கொண்டு வர வாஷ் பேசினுக்கு சென்று வாந்தி எடுத்து முடித்தவள் மீண்டும் திரும்பிய போது பத்து நிமிடங்கள் கடந்திருந்தது.
இப்படி காலை நேரத்தில் வாந்தி எடுப்பது என்பது அவளுக்கு ஒன்றும் புதிது கிடையாது கடந்த மூன்று வாரங்களாகவே நிகழும் வைபவம் தான்.
நான்காம் மாதத்தில் இருப்பவளுக்கு தண்ணீர் குடித்த பிறகு மட்டுமல்ல பிரஷ் பண்ணும் போதும் வாந்தி எடுக்காமல் இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இன்றாவது தண்ணீரை முழுதாக குடித்து முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தவள் வேண்டுதல் பொய்த்து போக சோர்வோடு முகத்தை அழுந்த துடைத்தபடி சோஃபாவில் அமர்ந்தாள்.
விழிகள் எதிரில் இருந்த கடிகாரத்தின் மீது விழவும் நேற்று சிந்து சொன்னது நினைவில் வர அவசரமாக எழுந்து கொண்டாள்.
அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க பக்கத்து அறை கதவை திறந்து கொண்டு சென்றவள் போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு உறங்கி கொண்டிருந்த சிந்துஜாவை எழுப்பினாள்.
“சிந்து மணி அஞ்சாக போகுது எந்திரி..” என்று உலுக்கவும் எழுந்து அமர்ந்தவள், “என்ன டைம் மாமி?” என்றாள் கண்ணை கசக்கி கொண்டு.
“ஃபைவ் ஆகுது.. சீக்கிரம் எந்திரி”
“என்னது ஃபைவ் ஒ கிளாக்கா? நான் தான் உங்களை நாலரை மணிக்கே எழுப்ப சொன்னேனே, ஏன் மாமி இவ்ளோ லேட்டா எழுப்புனீங்க?” என்று சிணுங்கினாள்.
“டயார்டா இருந்ததால் தூங்கிட்டேன் சிந்து நான் எந்திரிச்சதே லேட்.. அதோடு இப்போ தான் வாமி..” என்றவளை இடையிட்டு,
“போங்க மாமி, உங்களால அரை மணி நேரம் போச்சு எனக்கு, இப்போ நான் எப்படி படிப்பேன்?..” என்ற சிந்துஜா மகாலட்சுமியின் நாத்தனார் மகள்.
சிறு வயதில் இருந்தே இங்கு தான் வளர்கிறாள். இப்போது பத்தாம் வகுப்பில் இருப்பவள் படிப்பு முழுக்க மகாலட்சுமியின் பொறுப்பு தான்!
“இப்போ பேசிட்டு இருந்தேனா இன்னும் டைம் வேஸ்ட் ஆகும்… முகம் கழுவிட்டு உட்கார்ந்து படி..” என்றவள் வாசலை தெளித்து கோலமிட்டு அவசரமாக சமையலறைக்கு சென்று பொங்கிய பாலை அணைத்தாள்.
கொஞ்சம் கவனிக்காமல் விட்டிருந்தால் மொத்த பாலும் பொங்கி வழிந்து அன்றைய அவள் நாளை பாழாக்கி இருக்கும்.
“மாமி காஃபி..” என்று குரல் கொடுத்தாள் சிந்து.
“போட்டு வச்சுருக்கேன் எடுத்துக்கோ சிந்து..” என்றாள் பருப்பை கடைந்தபடி.
“நான் படிச்சுட்டு இருக்கேன் மாமி. எனக்கு எந்த வேலையும் வைக்க கூடாதுன்னு அம்மம்மா சொல்லி இருக்கே.. மறந்துடீங்களா?” என்று இருந்த இடத்தில் இருந்தே குரல் கொடுத்தாள்.
இதில் சிந்துஜாவை குறை சொல்ல முடியாது. அவள் நேரம் கிடைக்கும் போது மகாவுக்கு சிறு சிறு உதவிகள் செய்ய தயார் தான். ஆனால் இந்திராவின் கட்டுப்பாடு அவளை இருக்கும் இடத்தை விட்டு அசையாது அமர வைத்திருந்தது.
அது மட்டுமல்ல மகாலட்சுமி இங்கு வந்த பின்னர் ‘சிந்து அவர்களின் பேத்தி மட்டுமல்ல குடும்பத்தின் தவிர்க்க முடியாத நபர்.. பத்தாம் வகுப்பில் இருக்கும் பெண்ணை எந்த வேலையும் ஏவக்கூடாது காஃபி முதல் சாப்பாடு வரை அனைத்தும் அவளை தேடி சென்று விட வேண்டும்’ என்று மகாவிற்குமே கட்டளை பிறப்பித்து இருந்தார்.
ஒரு பெருமூச்சோடு காஃபியை கொண்டு வந்து சிந்துவிடம் வைத்து விட்டு சமையலறைக்கு திரும்பினாள் மகாலக்ஷ்மி.
கிச்சனுக்கும் ஹாலுக்கும் பெரிய இடைவெளி இல்லை என்பதாலும் morning sickness இருப்பதாலும் மீண்டும் அவள் சிந்துவை சமையலறைக்கு வந்து காஃபியை எடுத்து செல்ல சொல்லி இருக்கலாம்.
ஆனால் அவள் அப்படி செய்து விட்டால் காலையிலேயே ஒரு பஞ்சாயத்து தொடங்கிவிடும். அதை தவிர்க்க சில நொடிகள் செலவழிப்பதில் அவளுக்கு கஷ்டம் ஒன்றும் இல்லை.
சிந்துவே மறந்து விட்டாலும் தினமும் பேத்தியிடம் ‘மகா எப்படி நடந்து கொள்கிறாள் ஏதாவது அதிகாரம் செய்கிறாளா? வேலை வைக்கிறாளா? கடுமையாக நடந்து கொள்கிறாளா?’ என்று கேட்டு தெரிந்து கொள்வார் இந்திரா.
மகாலட்சுமி இந்த வீட்டிற்கு வந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது என்றாலும் வீட்டின் மொத்த பொறுப்பும் அவளுடையது தான்.
பொறுப்பு என்றால் அவள் ‘இந்த வீட்டின் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் இருக்கிறாள்..’ என்று அர்த்தம் கிடையாது.
சமையல், வீடு பெருக்குவது, துடைப்பது, பாத்திரம் கழுவுவது எல்லாமே அவள் பொறுப்பு!!
அதோடு மாமனார், மாமியார், சிந்து, கணவன் என்று அனைவருக்கும் தேவையானது நேரம் தவறாமல் செய்து கொடுக்க வேண்டியதும் அவள் பொறுப்பு தான்.
இத்தனையும் அலுவலகத்திற்கு செல்லும் முன்பும் வந்த பிறகும் அவள் நிச்சயம் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் தினமும் இந்திரா இரவு ஏழு முதல் பத்து வரை அவள் மீதான குறைகளை கணவன் மற்றும் பிள்ளையிடம் படிக்க தொடங்கி விடுவார்.
என்ன தான் அவள் கணவன் அனுசரணையாக இருப்பவன் தான் என்றாலும் இந்திராவின் தாளத்திற்கு ஏற்ப ஆடும் குணம் கொண்டவன் என்பதை திருமணமாகி வந்த ஒரே மாதத்தில் கண்டு கொண்டாள்.
அவர் சொல்லாத வரை மகாவிடம் எந்த குறையும் காணாதவன், ஆனால் இந்திரா சொல்லிவிட்டால் போதும் அடுத்த ஒரு வாரத்திற்கு அவளை ஒரு க்ஷண நேரம் கூட உட்கார விட மாட்டான்.
nice
ReplyDelete