வாழ்க்கைத்துணை - 20.1
ரிஷிக்கு மகாலட்சுமியின் புன்னகை மிகவும் பிடித்தம். சத்தமின்றி மலரும் பூக்களை போல இதழ்களை பிரியாத அவள் புன்னகை பார்க்க கொள்ளை அழகாக இருக்கும்.
மகாவின் கண்களில் தோன்றும் ஆர்ப்பாட்டமில்லாத புன்னகை இதழ்களில் படர்ந்து அவற்றின் வளைவில் நிறைவு பெரும். பலமுறை அவள் புன்னகை முகத்தை ரசித்திருக்கிறான் ஆனால் பெரிதாக அவளிடம் பகிர்ந்தது கிடையாது.
இப்போதும் தன்னை கண்டதும் அவள் முகத்தில் க்ஷண நேரத்தில் வந்து போன புன்னகையில் ரிஷியின் பார்வை தேங்கி நின்றது.
மகாவை கண்ட நொடி அவன் கொண்டிருந்த கோபம், ஆதங்கம், ஆற்றாமை எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை.
அவனையும் மீறி கடந்த சில நாட்களாக மனம் மனைவியை தேடிக்கொண்டு தான் இருக்கிறது.
இத்தனை நாள் பிரிவில் ‘பணமா? நகையா? பத்திரமா?’ எதுவுமே அவன் நினைவில் இல்லை. ஆனால் ‘தன்னோடு மனைவி இல்லையே’ என்ற எண்ணம் அவனை அதிகம் வாட்டியது.
இதுதான் காரணம் என்று வரையறுக்க முடியாதளவு ‘எதற்கு அவளை தேடுகிறோம்?’ என்று தெரியாமலே ரிஷியன் மனம் அவளை தேடிக்கொண்டிருந்தது.
அவனும் இங்கு நடைபெறும் மீட்டிங்கில் கலந்து கொள்ள தான் வந்திருக்கிறான். ஆனால் இங்கே மகாவை அவன் எதிர்பார்க்கவில்லை.
பார்த்த நொடி அவனுக்கு வேறு எந்த நினைவும் இல்லை, மனைவியும் பிள்ளைகளும் மட்டுமே தெரிந்தனர்.
மனைவியை வட்டமிட்டு கொண்டிருந்த ரிஷி மகாவின் குரலில் மீண்ட போதும் அவன் பார்வை அவள் வயிற்றின் மீதே பதிந்திருந்தது.
முன்பிற்கு இப்போது இரு பிள்ளைகளின் வளர்ச்சி நன்றாக தெரிந்தது எட்டு மாத வயிறு நிறை மாதம் போல தோற்றமளித்தது.
அதை கண்டவனின் முகம் தன்னையறியாமல் கனிந்து போனது.
இரண்டு பிள்ளைகள் என்பதால் இந்த வளர்ச்சி என்று புரியாமல் இல்லை அதே நேரம் ‘எப்படி இத்தனை பாரத்தை சுமந்து கொண்டு அவளால் புன்னகைக்க முடிகிறது?’ என்ற கேள்விதான் அவனிடம்.
கடந்த சில மாதங்களாக மனதில் சுமக்கும் பாரம் அவனை எத்தனை அழுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அவன் தான் அறிவான்.
“ரிஷி!!” என்று மகாவுக்குமே கணவனின் பார்வை குழந்தைகளை வருடிக் கொண்டிருப்பதை கண்டு மகிழ்ச்சி தான்.
குழந்தைகளுடன் சஞ்சரித்து இருப்பவனிடம், “ரிஷி இப்போ ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டாங்க தெரியுமா? நீ மட்டும் தான் உதைப்பியா நானும் உதய்ப்பேன்னு சொல்லி போட்டுக்கிட்டு கட்டி உருண்டுகிட்டு இருக்காங்க..” என்றாள் குறையாத புன்னகையோடு.
தந்தையை உணர்ந்ததாலோ என்னவோ உள்ளிருந்த குழந்தைகளும் உற்சாகமாக கை கால்களை அசைத்தது. குழந்தைகளின் கை அவள் வயிற்றை அழுத்திக்கொண்டு தெரியவும்,
“ரிஷி இங்க பாருங்க, இந்த சைடு கை தெரியுதா?” என்று குழந்தைகளின் உற்சாகம் தொற்றிக்கொண்டவளாக வயிற்றில் தன் கையை வைத்து கணவனிடம் காண்பித்தாள்.
ரிஷியின் விழிகளும் அதை கண்டு கொள்ள அவனையும் அறியாமல் ஆசையோடு அவள் வயிற்றில் கரம் பதித்தான். குழந்தையின் கரமா? பாதமா? என்று அவனுக்கு சரியாக தெரியவில்லை.
ஆனாலும் அதை வருடியவன் மற்றொரு இடத்திலும் அதே போல கரம் தென்படுவதை கண்டு இன்னொரு கையால் அதைப்பிடித்தான்.
குழந்தைகளை உணர்ந்தவனின் முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சி அதையும் மீறிய ஒரு உணர்வு அவனை ஆட்கொள்ள மனமெங்கும் அப்படி ஒரு நெகிழ்ச்சி.
‘என்ன மாதிரியான உணர்வு?’ என்று அவனுக்கு சரியாக வரையறுக்க தெரியவில்லை. ஆனால் பிள்ளைகளை உணர்ந்தவனுக்கு தன்னையும் மீறி கண்கள் கலங்கி விட்டது.
“இந்த சைட் தலை தெரியுது பாருங்க ரிஷி..” என்று அவளுமே தழுதழுத்த குரலில் சொல்ல மகாவின் உச்சியில் அழுத்தமாய் முத்தமிட்டு அப்படியே அவள் முன் மண்டியிட்டவன் குழந்தையின் தலையை வருடி மென்மையாக அவ்விடத்தில் முத்தமிட்டான்.
மகா அதிர்வோடு ரிஷியை பார்க்க, தந்தையை ஸ்பரிசத்தில் குழந்தைகளின் உற்சாகம் இன்னும் அதிகரிக்க மற்றொரு குழந்தையின் தலையும் மேலெழுந்தது.
நெகிழ்ச்சியோடு அதன் தலையிலும் முத்தமிட்டவன் மகாவின் வயிறை கட்டிக்கொண்டு குழந்தைகளின் பாதங்களிலும் மாறி மாறி முத்தமிட்டான்.
அதில் குழந்தைகள் மீதான அவன் ஏக்கத்தை புரிந்து கொண்ட மகாவிற்குள்ளும் ஏதோ செய்தது.
இதழ்கள் துடிக்க “ரிஷி..” என்றழைக்க, குழந்தைகளின் பாதத்தில் தலையை பதித்து, “எப்படி இருக்கீங்க செல்லங்களா?” என்றான் நா தழுதழுக்க..
இதழ்களை கடித்தபடி கண்ணீரை கட்டுபடுத்திய மகா, “நல்லா இருக்காங்க ரிஷி. வாட்டர் லெவல், சுகர், பீபின்னு எல்லாமே சரியா இருக்கு.. இப்படியே இருந்ததுன்னா நிச்சயம் நார்மல் டெலிவரிக்கு நிறைய பாஸிபிலிட்டீஸ் இருக்குன்னு சொல்லி இருக்காங்க..” என்ற நேரம் லிஃப்ட் திறந்து கொண்டது.
ஆனால் அதை உணராது குழந்தைகளை வருடியபடி ரிஷியும் அவனை பார்த்தபடி மகாவும் அதே நிலையில் இருந்தனர்.
இதை கண்டு தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டு பார்த்திருந்தனர் லிஃப்ட்டுக்காக காத்திருந்தவர்கள். அதில் ஒருவன் ராம் மற்றொருவன் மிதுன்.
மிதுனின் மாமியார் வீடு புதுச்சேரி என்பதால் மனைவியை பார்க்க வந்திருந்தவன் அப்படியே இங்கு மீட்டிங்கிற்கு வந்து விட்டான்.
முதலில் ரிஷியும் ராமும் ஒன்றாக வருவதாக தான் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ராம் இன்று ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு நேரே புதுச்சேரி வந்து விடுவதாக சொல்லிவிட ரிஷி தனியாக கிளம்பி வந்திருந்தான்.
ரிஷியும் மகாவும் பிரிந்து இருப்பது ராமிற்கு தெரியும். ஆனால் மிதுனுக்கு தெரியாது. பிரசவத்தை முன்னிட்டு தாய் வீட்டில் இருப்பதாக அறிந்திருந்தவன் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக வந்திருப்பதாகவே நினைத்திருந்தான்.
“மச்சி லிஃப்ட் ஓப்பன் ஆகிடுச்சு டா.. எந்திரிக்கிற எண்ணம் இருக்கா? இல்லையா?” என்று ராம் கேலி செய்ய அப்போது தான் இருவருமே சுற்றம் உணர்ந்தனர்.
மகா முகத்தில் லேசாக வெட்கம் படர்ந்திட முகத்தை துடைத்தபடி எழுந்து கொண்டு ரிஷி முகத்திலும் புன்னகை. அதுவும் பல நாட்களுக்குப் பின்…
“குழந்தைகளோடு பேசிட்டு இருந்தேன்டா..” என்றபடி வெளியில் வந்தவன் அப்போது தான் மிதுனை கண்டான்.
“உங்களை ரிசீவ் பண்றதுக்காக தான் நான் கிளம்பி வந்தேன் மகா. ரிஷி உங்களோடு வரார்னு சொல்லவே இல்லை. ஹவ் வாஸ் தி ஜர்னி?” என்று மகாவிற்கு கை கொடுத்தான்.
“அவர் லிஃப்ட்ல தான் ஜாயின் பண்ணினார்..” என்று புன்னகையோடு சொன்னவள், “தேங்க்ஸ் மிதுன். நேத்து லேட் நைட் டைம் எடுத்து எனக்காக நீங்க பிரிப்பேர் பண்ணினதுக்கு..” என்றாள்.
“இதுல என்ன இருக்கு மஹா? ஆல்மோஸ்ட் நீங்க முடிச்சுட்டீங்க லாஸ்ட் ஸ்டேஜ்ல எனக்கு அனுப்பி கம்ப்ளீட் பண்ண சொன்னீங்க.. அது முடியாதா என்ன? சரி இப்ப எப்படி இருக்கு உங்களுக்கு?”
“ஐ’ம் ஓகே மிதுன். நேத்து சீக்கிரமா தூக்கம் வந்துருச்சு, குழந்தைகள் படுத்து தான் ஆகணும்னு சொல்லிட்டாங்க.. அதுக்கு மேலயும் உட்கார முடியாம தான் உங்களுக்கு அனுப்பிட்டேன்..”
“இட்ஸ் ஓகே, நோ இஷ்யூஸ்..” என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்க, “என்ன மச்சான் நீயும் சிஸ்டரும் சேர்ந்துட்டீங்களா? ஒரு வார்த்தை சொல்லவே இல்லை..” என்றான் ராம்,
“உங்களை சேர்ந்து பார்க்கிறதுல ரொம்ப சந்தோஷம் மச்சி. அதோடு இன்னைக்கு தான் உன் முகத்துல இவ்ளோ சந்தோஷத்தை பார்க்கிறேன்..” என்று சொல்ல ரிஷியின் பார்வை முழுக்க மகா மற்றும் மிதுன் மீது தான்!!
அவனுக்கு மிதுனை நன்கு தெரியும். அன்று மகா அவனோடு மெட்ரோவில் செல்கிறேன் என்ற போதே அவனுக்கு உள்ளுக்குள் யாரோ ஒருவன் தன் மனைவியை பொறுப்பு ஏற்பதா? என்ற கோபம் மூண்டது.
ஆனாலும் அன்றைய சூழலில் வேறு வழி இல்லாமல் அதற்கு சமாதித்தானே தவிர்த்து மனதார அவன் சம்மதிக்கவில்லை.
இப்போது இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்டவனுக்கு ‘இவர்களுக்கு இங்கு என்ன வேலை?’ என்ற கேள்வி தான் மனம் முழுக்க. ஒருவேளை அவர்களுடைய கம்பெனியை ரெப்ரெசன்ட் (Represent) செய்ய வந்திருக்கிறார்களோ?! என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் அன்று இறுதியாக அவனிடம் வேலையை விட போவதாக தானே மகா சொன்னாள்.
பேப்பர் போட்டு இரண்டு மாதங்களாவது அங்கு வேலை செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் உடனே ரிலீவ் ஆக நினைத்தால் இரண்டு மாத சம்பளப் பணத்தை கொடுக்க வேண்டும்.
மகா வரையில் அவள் தந்தையும் அண்ணனும் நிச்சயம் பணத்தை கொடுத்து அவளை வேலையில் இருந்து விடுவித்து இருப்பார்கள் என்று தான் அவன் நினைத்திருந்தான்.
ஆனால் இப்போது அவளும் இங்கே கலந்து கொள்ள வந்திருக்கிறாள் என்றால் இன்னும் அவள் வேலையை விடவில்லை என்று தானே அர்த்தம்.
அதை உணர்ந்தவனின் முகத்தில் அத்தனை நேரம் இருந்த புன்னகையும், கனிவும், நெகிழ்ச்சியும் மறைய அங்கே ஆவேசம் குடிகொண்டது.
“சரி மச்சி இன்னும் மீட்டிங் ஆரம்பிக்க நேரம் இருக்கு நீ சிஸ்டர் கூட டைம் ஸ்பென்ட் பண்ணு. நான் இவனோடு கீழே போய் ஒரு தம் போட்டுட்டு வரேன்..” என்று ராம் கிளம்பினான்.
மிதுனும் மகாவும் இன்னும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்லாமல் அங்கே இருந்த லாபியில் (Lobby) அமர்ந்து இருந்தனர்.
கோப்பை சரி பார்த்து, இருவரும் கணினியில் வேலையாக இருப்பதை கண்ட ரிஷியின் கால்கள் அசைய மறுத்தது.
அன்று வேலைக்கு செல்ல முடியாது, தன்னை புரிந்து கொள்ள மாட்டானா என்று எத்தனை பேச்சு பேசினாள் ஆனால் இப்போது மட்டும் வேலைக்கு வர முடிகிறதா? என்ற கோபம் அதிகரிக்க அழுத்தமான காலடிகளுடன் அவர்களை நோக்கி சென்றான்.
அவனைக் கண்டதுமே மிதுன் சினேகமாக புன்னகைக்க. “உன் கிட்ட பேசணும்” என்றான் மகாலட்சுமியிடம்.
“இப்போவே பேசணுமா ரிஷி. இன்னும் கொஞ்ச நேரத்துல மீட்டிங் ஸ்டார்ட் ஆகிடும் முடிச்சுட்டு பேசலாமா?” என்றாள் அவன் முகத்தை பார்த்தபடி..
“இட்ஸ் ஓகே மகா, ஐ'ல் டேக் கேர்! நீங்க போய் பேசுங்க நான் பார்த்துக்கறேன்..” என்று மிதுன் சொல்ல அவளை அழைத்து கொண்டு அதே தளத்தில் அமைந்திருந்த கேஃபிடேரியாவிற்கு சென்றான்.
IVAN TIRUNTHA MATTANA
ReplyDelete