தீராத காதல் தொல்லையோ - 4.2
“உன் மாமா சொல்றதெல்லாம் உண்மையா சிந்து? நாங்க உனக்கு என்ன குறை வச்சோம்? கண்டவனோடு எப்படிடி வெளியே போன? இதெல்லாம் உன் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா என்னாகும்?” என்று கண்ணீரும் கம்பலையுமாக பேத்தியிடம் கேட்டவர்,
“பாவி மக இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்திருக்காளே, இவளை பெத்தவங்களுக்கு நான் என்னங்க பதில் சொல்லுவேன்..”
“ரிஷி சொன்ன மாதிரி நாம தப்பு பண்ணிட்டோம் இந்திரா.. ஓரளவு வளர்த்த பிறகு இவளை அவ அப்பாம்மா கிட்ட சேர்த்திருக்கணும்.. மாப்பிள்ளைக்கு புரிய வச்சுருக்கணும். இப்போ நம்ம மேல தான் தப்புன்னு சொல்லுவாங்க..”
“தாத்தா மாமா தப்பா புரிஞ்சிருக்காங்க. அவர் காலேஜ்ல கோல்ட் மெடலிஸ்ட்டாம்.. இப்பவே அவருக்கு ஐம்பதாயிரத்துல வேலை கொடுக்க தயாரா இருக்காங்களாம் ஆனா அவர் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கனும்னு தான் காத்திருக்கார்..”
“இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள எப்படியும் வேலை வாங்கிடுவார் தாத்தா.. கண்டிப்பா என்னை தேடி வருவார்..” என்றதும் தான் தாமதம் பளாரென அவளை அறைந்து விட்டார் சிவபாலன்.
“இன்னமும் உன்னை குழந்தைன்னு நினைச்சா எவ்ளோ பெரிய பேச்சு பேசற? கல்யாணம் பண்ற வயசா உனக்கு?” என்றவரின் சப்தத்தில் அரண்டு போனாள் சிந்துஜா.
“இவ்ளோ பேசறவ எதை செய்ய துணிய மாட்ட? பொட்ட புள்ளையை வளர்க்கிறது நெருப்பை வயித்துல கட்டிக்கிட்டு இருக்கிறது போலன்னு என் அண்ணன் தம்பி எல்லாம் சொன்ன போதும் என் பேத்தின்னு கர்வமா சொன்னேன் ஆனா இப்போ எல்லாத்தையும் தரைமட்டம் ஆக்கிட்டியே…” என்றார் கண்ணீரோடு.
“உனக்கு உலகம் தெரியுமா? இல்லை மனுஷங்களை தெரியுமா? படிக்க தானேடி உன்னை அனுப்பினேன் ஆனா பிஞ்சு மனசுல இப்படி நஞ்சை கலந்துட்டாங்களே.. ஏன்டி இப்படி பேசற?” என்று பேத்தியை கட்டிக்கொண்டு மீண்டும் அழுதார் இந்திரா.
“நாடு எந்தளவு கெட்டு போயிருக்கு. பொம்பளைங்களே தனியா நடமாட முடியாம இருக்கிறப்போ குழந்தைக்கு எங்கிருந்து பாதுகாப்பு இருக்கும். ப்ச் நான் ஒரு மடையன் முதல் முறை தான் கல்யாணத்துக்கு போனேன் அடுத்தடுத்து கூட படிக்கிற பிள்ளை தானேன்னு அனுப்பி வச்சது தப்பா போச்சு..” என்ற சிவபாலனின் கண்களில் இருந்து கண்ணீர் வற்றாமல் வழிந்தது.
அனைத்தையும் பார்த்துக்கொண்டு கல்லை போல அமர்ந்திருந்தாள் சிந்து. இது அவளின் குணமே கிடையாது. அவர்களுக்கு ஒன்று என்றால் துடிதுடித்து போய் விடுவாள் ஆனால் இப்போது அவர்கள் இத்தனை கதறிய போதும் அமைதியாக பார்த்திருந்தாள்.
முகத்தை அழுந்த துடைத்துக்கொண்ட சிவபாலன், “இல்லை இது சரிபடாது. முதல்ல உன் பொண்ணுக்கு ஃபோனை போடு.. அவங்கவங்க பிள்ளை அவங்கவங்களோட இருக்கிறது தான் சரி.. மாப்பிள்ளை கையில காலுல விழுந்தாவது அவருக்கு நான் புரிய வைக்கிறேன்..” என்று வெளியில் வர மற்றவர்களும் அவர் பின்னே வந்தனர்.
“ரிஷி..” என்று இடிந்து போய் அமர்ந்திருந்த மகனின் தோளை தொட அவனிடம் அசைவில்லை.
ரிஷியின் காலடியில் அமர்ந்த சிந்துஜா, “மாமா ப்ளீஸ் மாமா நானும் அவரும் லவ் பண்றோம்.. இப்போவே கல்யாணம் பண்ணிக்க போறதில்லை நான் ஸ்கூல முடிச்ச பிறகு தான் கல்யாணம்னு சொல்லி இருக்கார்..”
“கல்யாணத்துக்கு அப்புறம் அவரே என்னை படிக்க வைக்கிறேன்னு சொல்லி இருக்கார்.. தாத்தா என்னென்னமோ பேசறார் நான் இங்கே தான் இருப்பேன் எங்கயும் போக மாட்டேன். ப்ளீஸ் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் ஆனா எங்களை பிரிச்சுடாதீங்க..” என்று அவன் கால்களை பிடித்து கதறினாள்.
சிலைக்கு உயிர் வந்தது போல பல நிமிடங்களுக்கு பிறகு அசைந்தவன், “போய் முகத்தை கழுவிட்டு துணி மாத்திட்டு வா..” என்றான்.
“எங்கே மாமா.. நான் பெங்களூர் வர மாட்டேன் இங்க தான் இருப்பேன்..”
“பெங்களூர் கூட்டிட்டு போகலை.. ஹாஸ்பிட்டலுக்கு தான் போறோம் போதுமா?” என்று சொல்ல அமைதியாக தயாராக சென்றாள்.
தானுமே அறைக்கு சென்று முகத்தை கழுவி கொண்டு வெளியில் வர, “அவளை எதுக்கு இப்போ ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போற வரதா?” என்றார் இந்திரா.
“வேலை இருக்கு..”
“அப்படி என்ன தலை போற வேலை?”
“அவளுக்கு டெஸ்ட் எடுக்கணும்..”
“என்ன டெஸ்ட்?”
“ப்ரேக்னன்சி டெஸ்ட்..” என்றதில் ஆடிப்போனார் இந்திரா.
“என்னப்பா பேசற? அவளுக்கு எதுக்கு இந்த டெஸ்ட் எல்லாம்.. இதை தவிர அவ வேற எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டா.. அனாவசியமா என் பேத்தியை சந்தேகபடாத..”
“போதும் நீங்க அவளுக்கு வக்காலத்து வாங்கினது. அவளுக்கு செல்லம் கொடுத்து குட்டி சுவராக்கினதோட விளைவை பார்த்தீங்க தானே?!..”
“வரதா..”
“எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்னு சொல்ல முடியாது.. ஏற்கனவே இவ ஸ்கூல்ல படிக்கிற ஒரு பொண்ணை நாலு மாசமா இருக்கிற போது தான் கண்டு பிடிச்சிருக்காங்களாம்..”
“இது நம்ம பிள்ளை ரிஷி. ஏன் அடுத்த பொண்ணுங்களோட ஒப்பிட்டு பேசற..”
“அது மட்டுமில்லை.. அவ ஏஜ் அட்டென்ட் பண்ணி நாலு மாசம் கிட்ட ஆகிடுச்சு ஆனா இதுவரை என்கிட்டே நேப்கின் கேட்கவே இல்லை. முதல் இரண்டு மாசம் அங்கிருந்து கொண்டு வந்திருந்தாலும் அதுக்கு அப்புறம் கேட்டிருக்கணும் தானே!!” என்றவனை திகைப்போடு பார்த்தார்.
மகனின் பேச்சில் இந்திராவிற்கு என்ன சொல்வது என்று முதலில் புரியவில்லை என்றாலும் சில நிமிடங்களில் தன்னை மீட்டுக்கொண்டவர். “வயசுக்கு வந்த புதுசுல எல்லாருக்கும் தொடர்ந்து தீட்டு ஆகாது வரதா. ஒருவருஷம் வரைக்குமே தள்ளி தான் போகும்..”
“நான் ஒன்னும் இதை வச்சு மட்டுமே பேசலை. இன்ஸ்டாவுல அவ பேசி இருக்கிறதை எல்லாம் படிச்சுட்டு தான் பேசறேன்.. நாளைக்கு ஏதாவது ஒன்னுனா நமக்கு தான் அசிங்கம், அதுக்கு இப்பவே தெரிஞ்சு அழிக்கிறது நல்லது...”
“ஐயோ என் பேத்திக்கு அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லை..”
“என்னமோ நீங்க கூட போய் எந்த தப்பும் நடக்கலைன்னு கண்ணால பார்த்த மாதிரி சொல்றீங்க..”
“இல்லை நான் அவ கூட இல்லை. ஆனா எதையும் பார்க்கலைன்னாலும் என்னால சொல்ல முடியும் என் பேத்திக்கு எதுவும் இல்லை..”
“ஐயோ ம்மா அந்த பையனோடு அவ பேசினது, பழகினது, எடுத்த போட்டோஸ் வச்சு தான் சொல்றேன்.. ப்ளீஸ் கொஞ்சம் சொன்னா புரிஞ்சுக்கோங்க.. அப்படியே ஏதாவது ஒரு அசிங்கம் இருந்துச்சுன்னா கூட அதை கலைச்சிடலாம்..”
“எதுக்குப்பா பெரிய வார்த்தை எல்லாம் பேசற? அப்படி எதுவும் இருக்காது என் பேத்திக்கு அந்த சூதுவாதெல்லாம் தெரியாது..”
“இன்னும் அந்த நினைப்புலையே இருங்க.. ஆனா கண்டிப்பா நான் டெஸ்ட் எடுக்க தான் போறேன் கூடவே அந்த பையனையும் நான் சும்மா விட மாட்டேன்..”
“வேண்டாம் வரதா நீ பண்ற காரியத்தால பிள்ளையோட மனசு காயப்படும்.. உன் பிள்ளையா இருந்தா இப்படி செய்வியா? யார் பெத்த பிள்ளையோன்னு தானே இந்தளவு கேவலப்படுத்தற?”
“வாயை மூடுங்க ம்மா! உங்க பெண்ணை அருமை பெருமையா கட்டி கொடுத்ததை பற்றி வாய் ஓயாம பேசுவீங்களே அப்போ சிந்துவும் அவ அம்மாவோடு வளரணும்னு ஏன் உங்களுக்கு தோணாம போச்சு..”
“பேத்திக்கு சோறு போட்டு, படிக்க வச்சு நகை போட்டு சீர் பண்ணிட்டா போதும்னு நினைச்சீங்களா? அப்போவே லச்சு அவளோட வயசை பற்றி சொல்லி அக்காவோட அனுப்ப சொன்னா ஆனா நான் தான் உங்களை மாதிரியே அவளை முட்டாள்தனமா பேசிட்டேன்..”
“என்ன வரதா இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு என்னமோ நாங்க தப்பு, உன் பொண்டாட்டி சரிங்கிற மாதிரியே பேசற? அவ பண்ணினதெல்லாம் மறந்துட்டியா? உன்னை நம்பாம நகை சொத்தை எடுத்துட்டு போனவ தானே..”
“போதும் ம்மா! இதுக்கு மேல அவளை பற்றி பேசினா நான் மனுஷனா இருக்க மாட்டேன். அவ ஒரு தீர்க்கதரிசி!! என்னோட நல்லதுக்காக தான் சிந்துவை பற்றி மட்டுமில்லாம வீட்டை அடமானம் போட்டதை தப்புன்னு சொன்னா.. அவ சொன்ன விஷயம் ஒவ்வொன்னா நடக்கிறதை பார்த்தா வீட்டு விஷயத்துல தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது..”
“என்ன? என்ன தப்பு?..” என்றவருக்கு வியர்த்து விட்டது.
“தெரியலை ஆனா என் பொண்டாட்டி என்னோட நல்லதுக்காக தான் சொல்லி இருப்பான்னு என் மனசு சொல்லுது..” என்றவனின் மனம் மனைவியை வெகுவாக தேடியது.
“கொடுத்த வாக்கை மீறினா உன் அக்கா வாழ்க்கை பாதிக்கப்படும் வரதா..” என்று சமாளிக்க பார்த்தார்.
“ப்ச் அக்கா வாழ்க்கையை விட அவ பொண்ணோட வாழ்க்கை முக்கியம்னு ஏன் இன்னும் உங்களுக்கு புரியலை? குறைந்த பட்சம் உங்களுக்கு அடிபட்ட பிறகாவது சிந்துவை அவ பெத்தவங்களோடு சேர்த்திருக்கணும்.. செஞ்சீங்களா?” என்றிட இந்திராவிடம் பதிலில்லை.
“அந்த பெண்ணை நீங்களும் கண்காணிக்கல, பெத்தவ கிட்டயும் வளர விடலை, போதாததுக்கு என் பொண்டாட்டியோடவும் சேர விடாம பண்ணின உங்களால ஒழுங்க வளர்க்க முடிஞ்சதா? ஒருவேளை அவ வயித்துல ஏதாவது இருந்தா உன் பொண்ணுக்கு என்ன பதில் சொல்ல போற?”
“ஆனா..” என்று உதடுகள் துடிக்க மகனை பார்த்தவர், “சொன்னா கேளு வரதா இந்த விஷயம் உன் அக்காவுக்கு தெரிஞ்சது ரொம்ப வேதனை படுவா.. நம்ம குழந்தை அப்படி இருக்க மாட்டாடா..”
“ப்ச் அவ லவ் பண்ணுவாங்கறதையே நான் எதிர்பார்க்கல அதுக்கு மேல நம்மள ஏமாத்தி பூசி மொழுகி, திருட்டுத்தனம் பண்ணுவான்னு சுத்தமா நினைச்சு கூட பார்க்கல…”
“அப்படி இருக்கும் போது இதுக்கு வாய்ப்பு இருக்காதுன்னு எப்படி நம்ப சொல்ற.. வளர விட்டா கஷ்டம் புரிஞ்சுக்கோ ம்மா..” என்றவன் கைபேசியை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பினான்.
அவன் பின்னே வந்தவர், “ஐயோ நான் சொல்றதை கொஞ்சம் கேளு வரதா..” என்று மகன் கையை பிடித்து கெஞ்சினார்.
“இனி உங்க வார்த்தையை கேட்டா நாம எல்லாரும் அசிங்க பட வேண்டி இருக்கும்..” என்று அவர் கையை உதறிவிட்டு நடந்தவனின் முன்னே வந்து நின்றவர்,
“வரதா சிந்து இன்னும் வயசுக்கு வரலை.. அப்புறம் எப்படி கர்ப்பமா இருப்பான்னு நினைக்கிற” என்று ஆதங்கத்தில் இத்தனை நாட்கள் கட்டிக்காத்த உண்மையை அவரே கொட்டி கவிழ்த்துவிட ரிஷியும் சிவபாலனும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
ada de ithu innum supera irukke
ReplyDeleteIdhu veraya velangidum 😡ammadi maha Appa veetuku pakathula rent ku veedu paru Ivan namaku vayndam .
ReplyDelete