தீராத காதல் தொல்லையோ - 4.2
மகாவின் கேள்வியின் பின்னே இருந்த அவள் வேதனையை உணர்ந்ததில் அனைவரும் சட்டென பதில் சொல்ல முடியாமல் அவளை பார்த்திருக்க, “சரி குழந்தை பிறந்த போது ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு ஆனா அதுக்கு முன்னாடி கூட வராத மனுஷனுக்கு எப்படி நீங்க இவ்ளோ வக்காலத்து வாங்கறீங்கன்னு தான் எனக்கு புரியலை..”
“மகா மாப்பிள்ளை தன்னோட தப்பை உணர்ந்துட்டார்.. உனக்கு செய்த தப்பை எங்க கிட்ட ஒத்துக்கிட்டு மன்னிப்பும் கேட்டார். செய்த தப்பை ஒத்துக்கிறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? அதைவிட அதுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறது சாதாரணம் இல்லை…”
“மாப்பிள்ளை எந்த ஈகோவும் இல்லாம எங்க எல்லார் கிட்டயுமே மன்னிப்பு கேட்டார். இன்னொரு முறை நீ இப்படி வீட்டுக்கு வருமளவு நடந்துக்க மாட்டேன்னு சத்தியம் செய்து கொடுத்திருக்கார். உன்னை இனி கண் கலங்காம பார்த்துப்பேன்னு வாக்கு கொடுத்திருக்கார்டி.. இன்னும் என்ன கோபம் உனக்கு?” என்றார் பாக்கியா.
“மகாம்மா ஆம்பளைங்க அவ்ளோ சீக்கிரம் இறங்கி வந்து மாமியார் வீட்டார் கிட்ட மன்னிப்பு கேட்க மாட்டாங்க ஆனா மாப்பிள்ளை எந்தளவு மனசு மாறி இருக்கார் என்பதுக்கு இதுவே பெரிய ஆதாரம். அவர் திருந்தி வந்திருக்கப்போ பழசை கிளறுவது நல்லா இருக்காதுடா..” என்றவர் அறை வாசலில் ரிஷிவரதன் நிற்பதை கண்டு,
“வாங்க மாப்பிள்ளை, என்ன அங்கேயே நின்னுட்டீங்க, உள்ள வாங்க..” என்று வரவேற்றார்.
“எப்படி இருக்கீங்க மாமா?” என்றவன் பார்வை முழுக்க மகாவிடம் தான்.
“நாங்க நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க? எப்ப வந்தீங்க?”
“ஃபார்மாலிட்டீஸ் முடிச்சு வீடு வந்து சேர மிட் நைட் ரெண்டு மணியாச்சு மாமா..” என்று அவர்கள் சாதாரணமாக உறவாட மகாலட்சுமுக்கு தான் பற்றி கொண்டு வந்தது.
“மூணு பேரையும் நல்லபடியா பாத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி அத்தை”
“இதுக்கெல்லாமா மாப்பிள்ளை நன்றி சொல்லுவீங்க இது எங்களோட கடமை” என்றவர், “மகா, சின்ன பொண்ணு. காயத்ரி பண்ணின பிரச்சனையால இங்க எல்லாருக்குமே கொஞ்சம் டென்ஷன். அந்த கோபத்துல தான் உங்க கிட்ட அப்படி நடந்துகிட்டு இருக்கா அவளுக்காக நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறோம் மாப்பிள்ளை..” என்றார்.
“என்ன அத்தை நீங்க? அதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கலை. நீங்க கவலையை விடுங்க..” என்றான் புன்னகையோடு.
“சாப்ட்டீங்களா மாப்பிள்ளை?” என்று தினகரன் கேட்க, “என்ன கேள்வி இது? வாங்க மாப்பிள்ளை முதல்ல சாப்பிடுவீங்க..” என்றவர், “கூட்டிட்டு வா கதிர்” என்று முன்னே சென்றார்.
“சுமதி வடை மாவு எடுத்து வெளியே வை, காயத்ரி ரசம் வச்சுட்டீங்களா இன்னும் இல்லையா?..” என்று அவர் பரபரப்பாக இயங்க, “டேய் குழந்தையை மாப்பிள்ளை கிட்ட கொடு..” என்ற தினகரன் கௌஷிகாவையும் கொண்டு வந்து ரிஷியிடம் கொடுத்தார்.
பிள்ளைகள் அவனை பார்த்து மிரளாமல் புன்னகையோடு அழகாய் ரிஷியின் கரங்களை ஆக்கிரமித்தன.
“ரிஷி ஒவ்வொருத்தரா தூக்குங்க. ஒரே கையில முழு வெயிட் கொடுக்க வேண்டாம்..” என்றான் கதிர்.
“இப்போ எந்த பிரச்னையும் இல்லை கதிர் ஐ’ம் ஆல்ரைட்!!” என்றவனுக்கு பாயாசம் கொண்டு வந்து கொடுத்த காயத்ரி, “என்ன இங்கேயே இருக்கீங்க வெளியே வாங்க அண்ணா மகாவோடு பேசட்டும்..” என்று கணவனிடம் மெல்லிய குரலில் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
“நீங்க பேசிட்டு இருங்க..” என்ற கதிர் தந்தையை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றான்.
“ஒரு நிமிஷம் கதிர்..” என்று தடுத்தவன், “இதுல சாக்லெட்ஸ், பிஸ்கெட்ஸ் இருக்கு குழந்தைகளுக்கு கொடுங்க…” என்று ஒரு கவரை கொடுத்தவன் கௌரவ் அதை வாங்க முற்படவும், “உங்களுக்கு அப்பா கொடுக்கிறேன் கண்ணா..” என்று மகனுக்கு எடுத்து கொடுக்க அழகாய் புன்னகைத்தான்.
“ப்பா என்க்கு..” என்று கௌஷி கேட்க எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் மழலையின் “அப்பா” என்று அழைப்பில் கண்கள் கலங்க அவளை வாஞ்சையோடு முகமெங்கும் முத்தமிட்டான்.
“ப்பா.. ப்பா..” என்று அவன் தாடையை பிடித்து தன் புறம் திருப்பிய மகன் ரிஷியின் கன்னத்தில் முத்தமிட இருவரையும் கட்டிக்கொண்டவனின் விழிகளின் ஈரம் அதிகரித்தது.
ரிஷியோடு பேசும் போதெல்லாம் மகாவுக்கு தெரியாமல் கதிர் குழந்தைகளை அவனுக்கு வீடியோ காலில் காண்பிப்பதோடு “அப்பா” என்று அழைக்க பழகியும் இருந்தான்.
முதல்முறை அவர்களின் திருமண புகைப்படத்தை பார்த்த குழந்தைகள் “அப்பா” என்றதை அதிர்வோடு மகா பார்க்க, “பாருங்க அத்தை எவ்ளோ அழகா சொல்றாங்க..” என்ற அண்ணன் பிள்ளைகளின் பேச்சில் அவளால் மகிழ முடியவில்லை.
அவள் எதிரிலேயே குழந்தைகள் கௌரவ் கௌஷிக்கு ரிஷியின் புகைப்படத்தை காண்பித்து “அப்பா” சொல்லுங்க என்று சொல்லி கொடுத்து இருக்கின்றனர்.
குழந்தைகளை அவளால் கண்டிக்கவும் முடியாது, அவர்களை தடுக்கவும் முடியாது. ஆனால் நாளை குழந்தைகள் அப்பாவை கேட்டால் என்ன பதில் சொல்ல? என்ற கேள்வி அவளை நிலை கொள்ள விடாமல் அரித்து தின்றது.
அவர்கள் தனித்து வளர்ந்தாலாவது பரவாயில்லை ஆனால் அண்ணன் குழந்தைகளோடு வளர்பவர்கள் நிச்சயம் அப்பாவை தேடுவார்கள், அவள் முடிவை சொன்னாலும் அப்படியே ஏற்று கொள்ளாமல் தந்தையை கேட்பார்களே எப்படி சமாளிக்க போகிறோம் என்று எத்தனை நாட்கள் உறக்கம் தொலைத்திருப்பாள்.
ஆனால் இப்போது நேரில் பார்த்தவனிடம் பாந்தமாய் இருவரும் பொருந்தி, அப்பா என்று அழைக்கும் அழகை பார்த்தவளுக்கு நெஞ்சம் பதறியது.
குழந்தைகளுக்கு வாங்கி வந்த விளையாட்டு பொருட்களை ரிஷி கொடுக்க மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு மற்றவர்களிடம் காண்பிக்க வெளியில் சென்றனர்.
குழந்தைகள் செல்லவும் மனைவியை பார்க்க அவளோ இன்னுமே நீங்கா அதிர்ச்சியோடு கதவை பார்த்திருந்தாள். மகாவுக்கு வாங்கிய பரிசு பொருட்களை எடுத்து கொண்டு அவளிடம் சென்றவன், “ஹாப்பி பர்த்டே லச்சு!! உன்னோட கோபம் தீரலைன்னா இன்னும் எவ்ளோ அடினாலும் அடிச்சுக்கோ பட் ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளு..” என்றான்.
மகா இன்னும் பரிசை வாங்காமல் நிற்க கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த பாக்கியா, “சாப்பிடுவீங்க வாங்க மாப்பிள்ளை..” என்று அழைத்தார்.
“வரேன் அத்தை, மகா சாப்ட்டாச்சா?..” என்றவன் பார்வை மனைவியிடம் இருந்தது.
“இன்னும் இல்லை. அவளும் சாப்பிட வருவா நீங்க வாங்க..” என்றிட அவனை அழைத்து செல்ல கதிர் வந்துவிட்டான்.
மகாவை பார்த்தபடி ரிஷி வெளியில் செல்ல, “மகா மாப்பிள்ளைக்கு இனி நாம தான் எல்லாமே, உன் பிடிவாதம் கோபத்தை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு வீட்டுக்கு வந்திருக்கிறவருக்கு சாப்பாடு வை வா..” என்றார்.
“ம்மா..” என்று அவள் அதிர்ந்து பார்க்க, “உன் அண்ணிங்க இருக்காங்க.. நீ உன் புருஷனுக்கு என்ன மரியாதை கொடுக்குறியோ அதை பொருத்து தான் உனக்கான மரியாதையும் இருக்கும். இத்தனை நாள் மாப்பிள்ளையை விட்டு இருந்ததால காயத்ரி உன்னை எவ்ளோ இளக்காரமா நடத்தினா..” என்றதும் மகா வெறுமையாக தாயை பார்த்தாள்.
“இதே அவர் இன்னைக்கு வரவும் உன்கிட்ட மன்னிப்பு கேட்கும் அளவுக்கு வந்திருக்கா.. ஒன்னு புரிஞ்சுக்கோ எவ்ளோ படிச்சாலும், சம்பாதிச்சாலும் ஒரு பொண்ணுக்கான மரியாதை அவ புருஷனை கொண்டு தான் அமையும்.. நீ என்னைக்கும் எங்களுக்கு பாரமில்லை ஆனா புருஷன், குழந்தைகள்னு குடும்பமா நீ இருக்கணும்னு தான் ஆசைப்படறோம்..”
“உன் புருஷனை அவமதிக்காத உன்னோட பிறந்த நாளுக்காகவே நடுராத்திரி வந்த போதும் அவ்ளோ அலைச்சலோட தேடி வந்திருக்கார்.. கொஞ்சம் சாமர்த்தியமா நடந்துக்கோ..” என்று மகளை அழைத்து சென்றார்.
காயத்ரி மூலமாக விஷயத்தை அறிந்திருந்த சுமதிக்கு அத்தனை மகிழ்ச்சி.
“உன்னோட கஷ்டத்தை தீர்க்கவே அண்ணா வந்திருக்கார் மகா, இப்போ சந்தோசம் தானே?!” என்று கேட்க கசந்த முறுவலோடு அவரை பார்த்தவள்,
“குழந்தைகளுக்கு நீங்க சாப்பாடு கொடுத்துடுறீங்களா அண்ணி நான் அவருக்கு பரிமாறனும்..” என்றாள் மெலிந்த குரலில்.
“ஹ்ம்ம் நீ நடத்து நான் குழந்தைகளை பார்த்துக்கிறேன்..” என்று கண்சிமிட்டியபடி உணவை போட்டுக்கொண்டு சென்றாள்.
மகா டைனிங் டேபிளுக்கு வர தன்னருகே இருந்த சேரை அவளுக்காக நகர்த்தினான் ரிஷி.
“இருக்கட்டும் மாப்பிள்ளை..” என்ற பாக்கியா மகளுக்கு கண் ஜாடை காண்பிக்க அவள் ரிஷிக்கு பரிமாறினாள்.
“நீ ஏன் இதெல்லாம் செய்யற லச்சு முதல்ல உட்கார்..” என்று பதறிக்கொண்டு எழுந்தான்.
“மகா பரிமாறிட்டு உட்கார்ந்துப்பா..”
“எதுக்கு? அதெல்லாம் வேண்டாம் அத்தை. லச்சு நேரத்துக்கு சாப்பிடட்டும்..” என்றவன் அவளை வலுக்கட்டாயமாக அமர்த்தி தானே பரிமாறினான்.
“நீங்க எதுக்கு மாப்பிள்ளை இதெல்லாம் செய்துட்டு? கொடுங்க நான் பண்றேன்..”
“பரவால்ல அத்தை இருக்கட்டும்..” என்றவன் மகாவுக்கு தண்ணீரும் எடுத்து வைத்து விட்டு “சாப்பிடு லச்சு..” என்ட்று அமர்ந்தான்.
இதை கண்ட பெற்றவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
சாப்பிட்டு முடித்து குழந்தைகளை கொஞ்சிக்கொண்டு இருந்தான் ரிஷி. கௌஷி லேசாக சிணுங்க, “இது அவங்க தூங்குற நேரம் மாப்பிள்ளை என்கிட்டே கொடுங்க நான் தூங்க வச்சுடுறேன்..” என்றதும் மகளை கொடுத்துவிட்டு மகனை பார்க்க அவனும் சிணுங்கினான்.
“இரண்டு பேரும் ஒண்ணா தான் தூங்குவாங்க..” என்று பேரனை வாங்கிக்கொண்ட தினகரன், “மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கட்டும், கூட்டிட்டு போ மகா..” என்றார்.
“இருக்கட்டும் மாமா, எனக்கு உங்களோடு பேசணும்..” என்றிட அதற்கு மேல் இருக்க முடியாமல் மகா அறைக்கு சென்று விட்டாள்.
“குழந்தைங்க இப்போ விட்டா தூங்க மாட்டாங்க நாங்க தூங்க வச்சுட்டு வரோம்..”
“கொடுங்க நானே தூங்க வைக்கிறேன்..”
“இல்லை வொர்க் ஃப்ரம் ஹோம் பண்றதால எப்பவும் மகாவுக்கு மதியம் கொஞ்ச நேரம் தான் டைம் கிடைக்கும்.. அதுல அவ ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு நாங்க தான் தூங்க பண்ணுவோம்.. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை சாயந்திரம் பேசிக்கலாம்..” என்ற மகாவின் அறைக்கு சென்றான்.
ஆனால் உள்ளே நுழைந்தவனை வரவேற்றது என்னவோ அவன் வாங்கி வந்த பட்டு சேலை தான்.
Aduthu yennavo
ReplyDelete