தீராத காதல் தொல்லையோ - 4.2
கறந்த பாலை விட சுத்தமானது அம்மாவோட பாசம்னு சொல்லுவாங்களேடி! ஆனால் நீ இப்படி கலப்படமாகி போய் இருக்கியே.. ச்சீய் அம்மான்னு எங்கேயும் சொல்லாத, அந்த சொல்லுக்கு நீயெல்லாம் மிகப்பெரிய களங்கம்..” என்ற சிவபாலனுக்கு மனம் பொறுக்கவில்லை.
இனி கணவருக்கு பேசி புரிய வைக்க முடியாது என்பதால், “வரதா நீயாவது நான் சொல்றதை கொஞ்சம் கேளுப்பா..” என்று மகன் காலடியில் சென்று அமர்ந்த இந்திரா,
“அம்மா ஒன்னும் உன்னை நடுத்தெருவுல நிறுத்தனும்னு இப்படி செய்யல. உன் அக்காவோட வாழ்க்கை, எதிர்காலம் இல்லாம இருக்கிறதால தான் முடிஞ்ச வரைக்கும் அவளுக்கு பக்கபலமாக இருக்க நினைச்சேன்…”
“உனக்கு தெரியுமா வரதா, உன் அத்தான் முன்னாடி மாதிரி இல்லை இப்போ அவர் குணமே மாறி போயிடுச்சு. புதுசா குடிக்க ஆரம்பிச்சுட்டாரு..” என்றதுமே, “என்னடி சொல்ற? இது எப்போ இருந்து?” என்றார் சிவபாலன்.
“இப்போ கொஞ்ச வருஷமா தான் அவருக்கு இந்த பழக்கம் இருக்கு. முதல்ல உடம்பு வலிக்காக குடிக்க ஆரம்பித்தது அதுக்கப்புறம் தினம் குடிக்காமல் அவருக்கு தூங்க முடியாம போகவும் நாளாக ஆக பகல்லையும் குடிக்கிற அளவுக்கு ஆகிடுச்சு..”
“அப்படி ஒரு முறை குடிச்சுட்டு வேலைக்கு போனவர் அங்கே யாரோ ஒரு பெண்ணை கையை புடிச்சு இழுத்து..” என்றவர் அதற்கு மேல் தொடர முடியாமல் கண்ணீரோடு கணவன், மகன் இருவரையும் மாறி மாறி பார்த்தார்.
அவர்களிடம் அசைவற்று போகவும், கண்ணீரை துடைத்தபடி, “அதனால அவரோட வேலையும் போயிடுச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல கூட்டிட்டு போய் உட்கார வச்சுட்டாங்க.. ரெண்டு லட்ச ரூபா கிட்ட ஜாமீன் பணம் கட்டி தான் அவரை வெளியில் கூட்டிட்டு வந்தாங்க..”
“ஏய்!! இதே வீட்ல தானடி நாங்களும் இருக்கோம் ஆனா இவ்ளோ விஷயம் நடந்திருக்கு ஆத்தாளும் மகளும் ஒரு வார்த்தை எங்களுக்கு சொல்லல.. இது குடும்பமா இல்லை என்ன?” என்றார் உரத்த குரலில்.
“என்னங்க மாப்பிள்ளையை பத்தி தெரிஞ்சா அவருக்கு நம்ம வீட்ல என்ன மரியாதை இருக்கும்? அதோட வரதன் அவரை ரொம்ப மதிப்போடு நடத்துவான். இப்போ அவருக்கு யாரோ ஒருத்தி கூட தொடர்பு இருக்காம் வீட்டுக்கு கூட சரியா வருவதில்லைன்னு சொன்னா..”
“இதெல்லாம் தெரிஞ்ச பிறகு வரதன் கிட்ட அவருக்கு அதே மரியாதை இருக்குமா? அதோட இந்த வீட்டுக்கு வந்த மகராசிக்கும் அவ குடும்பத்துக்கும் இந்த விஷயம் தெரிஞ்சா அசிங்கம்னு பயந்து வனிதா உங்க யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொன்னா..”
“மாப்பிள்ளைக்கு வேலை இல்லாததால இப்போ வனிதாவோட சம்பளம் மட்டும் தான் மொத்த குடும்பத்துக்கும். அவ ஒருத்தி சம்பளத்தை வச்சு தான் குடும்பத்தை நடத்தணும், மாமியார் மாமனாரை பார்க்கணும், நாத்தனார்களை பார்க்கணும் குழந்தையோட படிப்பு செலவுன்னு தினசரி வாழ்க்கையை நடத்துறது அவளுக்கு போராட்டமா இருக்கும் போது இரண்டு பொட்ட புள்ளங்களை எப்படி கரையேத்த முடியும்னு யோசிச்சு பாருங்க..”
“அதுக்காக என் மகன் வாழ்க்கையை பலி கொடுப்பியாடி? அப்ப கூட அவன் வீட்டை வைக்க மாட்டேன்னு எவ்வளவு சொன்னான் அப்படி இருந்தும் அவன் பாசத்தை பணயம் வச்சு வீட்ட அடமானம் போட்டு இந்த நிலைக்கு கொண்டு வந்துட்டியேடி.. நல்லா இருப்பியா?” என்று பொறுக்க முடியாமல் மனைவியை சபித்தார்.
“என்னங்க நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது. என் பிள்ளை நல்லா இருக்க கூடாதுன்னு நானே நினைப்பேனா? வரதன் நல்ல வேலையில இருக்கான் அவன் பொண்டாட்டியும் நல்லா சம்பாதிக்கிறா.. என்னைக்கு இருந்தாலும் அவங்க வாழ்க்கை நல்லா தான் இருக்கும்…”
“அன்னைக்கு நான் சொன்ன மாதிரி உங்க மருமக திரும்ப வீட்டுக்கு வந்தா அவ பத்திரத்தை வாங்கி நம்ம வீட்டு பாத்திரத்தை மீட்டுடலாம்னு நினைச்சேனே தவிர்த்து என்னைக்கும் அவனை நடுத்தெருவுல நிறுத்த நினைக்கலை..”
“வாயை மூடுடி! எந்த நம்பிக்கையில் அப்படி நினைச்ச? அது லட்சுமிக்கு அவங்க வீட்ல கொடுத்தது..” என்றவர் அப்போதுதான் நினைவு வந்தவராக,
“ஓ உன் மகன் நீ எது சொன்னாலும் செய்றதால அவனை ஏத்திவிட்டு மருமகள் கிட்ட இருந்து பத்திரத்தை வாங்கலாம்னு நினைச்சுட்ட.. அப்படித்தானே?!” என்று வெறுப்போடு பார்த்தவர்,
“நீ இந்த அளவுக்கு கீழ்த்தரமா இருப்பன்னு நான் நினைச்சு கூட பார்க்கல.. ஆண்டவா ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?” என்று பொறுக்க முடியாமல் பூஜையறைக்கு சென்று கதறி விட்டார் மனிதர்.
நேரமாக ஆக சிவபாலன் அழுகை அதிகரித்தது என்றால் உயிர்பின்றி அமர்ந்திருந்த ரிஷி மனதில் கடும் புயல் வீசிக்கொண்டு இருந்தது.
எந்தளவு தான் முட்டாளாக்க பட்டிருக்கிறோம். சிந்து வயதிற்கே வராத நிலையில், அக்காவின் பசப்பு வார்த்தைகள், தாயின் நாடகம் அதை நம்பி அடகு வைத்து அவன் ஓடி ஓடி செய்த சீர்வரிசை, எல்லாம் அவனை எள்ளி நகையாடின.
அதோடு திருமணமான நாள் முதலே மனைவியுடனான அவன் நிமிடங்கள் ஒவ்வொன்றும் கண் முன் வலம் வர மனதில் பெரும் பாரம் ஏறியது.
‘அவன் நினைத்தது என்ன? இப்போது நடந்தது என்ன?’ மனிதரின் கணக்கு ஒன்றாக இருந்தால் தெய்வத்தின் கணக்கு வேறாக தானே இருக்கும்!!
அதைவிட மத்திய தர வகுப்பில் ஆண் பிள்ளையாக பிறந்து மனைவி, பெற்றோர், உடன் பிறந்தோர் என்று அத்தனை தரப்பையும் அரவணைத்து செல்வது என்பது எளிதான காரியம் அல்லவே!!
அப்படி இருந்தும் பெற்றோரின் மனம் நோகக்கூடாது உடன் பிறந்தவளின் மனம் வாடக்கூடாது என்பதால் தன்னோடு பயணிக்க உடன் வந்த மனைவியின் மனம் பற்றி அவன் பெரிதாக சிந்திக்கவில்லை.
சிந்திக்கவில்லை என்பதை விட அவனுக்கு இருந்த நெருக்கடியில் இருந்து வெளியில் வந்த பின்னர் மனைவியுடனான உறவை பலப்படுத்தலாம் என்று நினைத்திருந்தான்.
ஆனால் திருமணமான முதல் இரண்டு வருடத்தில் உணர்வு ரீதியாக கணவன் ஒரு பெண்ணுக்கு எத்தனை பக்க பலமாக இருக்கிறானோ அதை பொறுத்து அவர்களின் இல்லற வாழ்வு சிறக்கும் என்பதை அறியாமல் போனான்.
அதுவே அவன் செய்த பெரும் பிழை!!
அதுவே அவனை இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்பதையும் ரிஷி அறியவில்லை.
மனைவியாக வந்தவள் தன் ஊனோடு உயிராக கலந்தவள் என்று உணர மறந்திருந்தான்.
சிவபாலன் ரிஷியை பற்றி சொன்னது அத்தனையும் உண்மை.
சொல்லப்போனால் அவரே அறியாத மகாவுக்கு தெரியாத என்றுமே தெரிந்து விடக்கூடாது என்று ரிஷி மறைத்த அவன் பக்கங்கள் தான் அதிகம்.
பதின்ம வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்க தொடங்கியவன் திருமணத்திற்கு பின்னர் எத்தனை சீக்கிரம் அதை இறக்கி வைக்க முடியுமோ அத்தனை சீக்கிரம் இறக்கி வைத்து விட வேண்டும் என்று நினைத்திருந்தான்.
சுமைகளை இறக்கிய பின்னர் மனைவி பிள்ளைகளுடனான மகிழ்ச்சியான வாழ்க்கை தான் அவன் கொண்டிருந்த ஒரே கனவு!!
அதை நோக்கி மட்டுமே இத்தனை நாட்கள் ஓடிக்கொண்டிருந்தவன் தன்னுடன் பயணிக்க வந்தவளின் உணர்வுகளை சரிவர கையாளாமல் போய்விட்டான்.
அதை எண்ணி உதடுகள் நடுங்க அமர்ந்திருந்தவனுக்கு இப்போது கண்களில் துளிர்த்த கண்ணீர் இமை மீறியது.
“மாமா என்னை மன்னிச்சுடுங்க மாமா இனி நான் பொய் சொல்ல மாட்டேன்” என்ற சிந்துவின் குரலோ “அம்மா உனக்கு கெடுதல் நினைப்பேனா? இதை வச்சு என்னை வெறுத்திடாதா வரதா..” என்ற இந்திராவின் குரலோ அவனுக்கு சுத்தமாக கேட்கவில்லை.
ஆனால் அங்கே அமர்ந்திருந்த ஒவ்வொரு நொடியும் நெருப்பில் இருப்பது போல தகித்தவன் சட்டென வீட்டை விட்டு வெளியேறி கால் போன போக்கில் நடக்க தொடங்கினான்.
அதேநேரம் லேபர் வார்டில் பல்லை கடித்தபடி வலியோடு போராடிக்கொண்டிருந்த மகாவின் பார்வை ரிஷியின் வரவை தேடி அறையெங்கும் அலைபாய்ந்தது.
அவன் இல்லை என்றதுமே ஏமாற்றத்தோடு இமைகளை தாழ்த்தியவள் மயக்கத்திற்கு செல்ல அவள் கன்னம் தட்டி விழிக்க செய்த செவிலியர்,
“மகா இன்னும் கொஞ்சம் தான் குழந்தை பிறந்திடும் புஷ் பண்ணு..” என்றிட சற்று தெளிவு பெற்றவள் “இன்னும் அவர் வரலையா ம்மா?” என்றாள் கண்ணீரோடு.
பரிதவிப்போடு மகளை பார்த்திருந்த பாக்கியா, “பேசிட்டேன் மகா மாப்பிள்ளை வந்துட்டே இருக்கார்..”
“நிஜமாவா ம்மா..”
“ஆமா, குழந்தையை கண்டிப்பா மாப்பிள்ளை கிட்ட தான் கொடுப்பேன்..” என்று மகளுக்காக பொய் சொன்னவரின் விழிகளும் அவள் நிலையை எண்ணி ஈரம் கொண்டது.
அதேநேரம் அம்மா அக்காவின் துரோகத்தை தாள முடியாது தடுமாற்றத்தோடு இலக்கின்றி நடந்தவனின் வலி அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும் பன்மடங்காக கூடியதில் ரிஷியின் மனம் என்றும் போல மனைவியை தேடியது.
இப்போதே அவளிடம் பேசாவிட்டால் அவன் நிச்சயம் என்னாவான் என்று அவனுக்கே தெரியாது. அதனால் வேகமாக பேன்ட் பாக்கட்டில் இருந்த கைபேசியை எடுத்து திறக்க அதில் எண்ணிலடங்கா அழைப்புகள்!
மகா மற்றும் அவள் தந்தை, அண்ணன், அண்ணி என்று அத்தனை பேரிடமிருந்தும் வந்திருந்தது. அப்போது தான் ‘இது தன் மனைவியின் டெலிவரி நாட்கள் அல்லவா?’ என்ற நினைவு வரவும் அவனிடம் பதட்டம் கூடியது.
அவசரமாக மகாவிற்கு அழைக்க மறுபுறம் ஏற்கப்படவில்லை. விடாமல் அவளுக்கு அழைத்தவன் அடுத்து மாமனார் மச்சினனுக்கு அழைக்க யாருமே எடுக்கவில்லை.
உடனே மருத்துவமனைக்கு அழைத்து மகாவை பற்றி விசாரிக்க அவள் அங்கு அட்மிட் செய்யபட்டிருப்பதையும் சிகிச்சை சென்று கொண்டிருப்பதையும் உறுதி செய்தனர்.
மனைவி நிச்சயம் தன்னை தேடுவாளே, அவள் மட்டுமா குழந்தைகளும் தானே!! அவன் குழந்தைகள் பூமியில் அவதரிக்கும் போது அவர்கள் அருகே தான் இருக்க வேண்டும்.. என்று இன்னும் வேகமாக நடந்தான்.
அந்நேரத்தில் அவர்களை பார்க்க வேண்டும் என்ற வேகத்தோடு நடந்தவனுக்கு மூளை மரத்து போயிருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
எத்தனை தூரம் நடந்து வந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவன் இருந்த இடத்தில் எந்த வாகனமும் இல்லாததில் உடனே மருத்துவமனையை நோக்கி இன்னும் வேகமாக நடக்கத் தொடங்கினான்.
ரிஷியின் மனமோ அவனை விடவும் வேகமாக மனைவியிடம் சென்று தன் மன்னிப்பை யாசிக்க தொடங்கியது.
ஆம் இதுநாள் வரை தன் செயலுக்காக, தான் பேசிய பேச்சுக்களுக்காக வருந்தி ஒரு முறை கூட மன்னிப்பு கேட்காதவன் இப்போது மூச்சுக்கு முன்னூறு தரம் அவளிடம் மன்னிப்பை கேட்டபடி நடந்தான்.
“ஐம் ஸாரி லச்சு. இதுவரை நான் உன்னை புறக்கணிச்சத்துக்கு இந்த ஒரு ஸாரி போதாதுன்னு எனக்கு தெரியும் ஆனாலும் பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சுடு..” என்று மனதினுள் மனைவியிடம் மன்றாடியவாறே வேகமாக நடந்தவன் பிள்ளைகளை எண்ணியும் நொடிக்கு நொடி மருகினான்.
“நீ ரொம்ப நல்லவ லச்சு ஆனா நான் தான் உன்கிட்ட நல்லவனா நடந்துக்கலை..” என்று மனைவியோடு மனதார பேசியபடி நடந்தவன் ஒரு கட்டத்தில் எதையும் கவனிக்காமல் சாலையை கடந்தான்.
தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று சுதாரிக்கும் முன் கட்டுபாட்டை இழந்து அவன் மீது மோதியதில் ரிஷி தூக்கி எறியப்பட்ட அதே நேரம் ஆண் ஒன்று பெண் ஒன்றுமாக அவன் உதிரங்கள் பூமியில் ஜனித்தன.
acho yennamma ipdi paniteenga
ReplyDelete