வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 9



வனிதாவின் பேச்சில் ஒன்றும் புரியாமல் ரிஷி பெற்றோரை தான் பார்த்தான். 

‘எப்படி புரியும்?’ மகளைக் கட்டிக் கொடுத்த இடத்தில் கஷ்ட ஜீவிதம், வேலைக்கு செல்பவளால் இரண்டு குழந்தைகளை வளர்ப்பது கடினம். ஒருத்தியை நாம் தான் வளர்த்து கொடுக்க வேண்டும் என்று தானே அவனிடம் சொல்லி இருந்தனர். 

முழு கதை ரிஷிக்கு தெரியாது. தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்த அக்கா மகளை அப்போதே தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டவன் அவளைப் படிக்க வைப்பது விளையாட வைப்பது என்று அத்தனையும் செய்தான். 

வேலைக்கு சென்ற பிறகு அவளுடைய கட்டண பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான் அவளும் தங்கள் வீட்டின் அங்கம் என்பதால் அனைத்து விசேஷத்திற்கும் யாரும் சொல்லாமலே அக்கா மகளை கடைக்கு அழைத்து சென்று உடை எடுப்பது அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்து விடுவான்.

எப்படியும் காலம் முழுக்க இங்கேயே அவள் இருக்கப் போவதில்லை உரிய வயதில் பெற்றோரிடம் சென்று விடுவாள் என்று தான் அவன் நினைத்தான். அதனால் இப்போதைய வனிதாவின் பேச்சு அவனுக்கு பேரதிர்ச்சியே!!

சிவபாலன் குடும்பம் மிகப்பெரியது என்பதால் பிள்ளைகளை படிக்க வைக்க போதுமான வசதி இல்லை. அதனால் அவரவர் விருப்பத்தின் பேரில் 8, 10, பள்ளி இறுதி வகுப்பு, சிலர் கல்லூரி படிப்பை முடித்திருந்தனர்.

சிலர் விவசாயம், சிலர் சொந்த தொழில், சிலர் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மூலமாக சென்னைக்கு வந்து கம்பெனியில் சேர்ந்து செட்டில் ஆகி இருந்தனர். 

அப்படி சிவபாலனுக்கு ஆரம்ப கட்டத்தில் ஊரில் மளிகை கடை வைத்து கொடுத்தனர். ஆனால் அது சரியாக போகவில்லை என்றதால் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் நடத்தி அதுவும் நஷ்டமான நிலையில் சென்னைக்கு வந்து சேர்ந்தார். 

அவருடைய அண்ணன் மூலமாக ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து குடும்பத்தை காப்பாற்றி வந்தவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கம்பெனியிலிருந்து வயது மூப்பின் காரணமாக வேலை விட்டு நீக்கியதில் கிடைத்த பணப்பயனோடு வீடு வந்து சேர்ந்தார்.

அவருக்கு பென்ஷன் பணம் என்று எதுவும் கிடையாது. பல வருடங்களுக்கு முன்பு மகளின் திருமணம் அதைத் தொடர்ந்த வளைகாப்பு காதுகுத்து என்று அனைத்து விசேஷத்திற்கும் சிறுக சிறுக அவர் பட்ட கடனையே மகன் தலை எடுத்து தான் ஓரளவு தீர்த்து இருந்தான்.  

பெற்றோரின் மருத்துவ செலவுகள், குடும்ப நிர்வாகம், அக்கா மகளின் படிப்பு, வீட்டிற்காக வாங்கியிருந்த கடன் என்று அனைத்தும் அவன் பொறுப்பு தான். 

பால் முதல் பெட்ரோல் வரை ஒருவனின் சம்பள பணத்தில் அத்தனையும் பார்ப்பது எளிதல்லவே! வீடு கட்டுவதற்காக ஈஎம்ஐ  எடுக்கும் முன்பாகவே அவனுடைய சம்பள பணம் பெரும்பாலும் இருபது, இருபத்தி ஐந்து தேதிக்குள் தீர்ந்துவிடும். 

அந்த அளவு வரவிற்கு மீறிய செலவுகள் சில நேரம் இருக்கும்.

அதிலும் வீட்டிற்காக போட்டிருந்த லோன் அவனுடைய எழுபது சதவித சம்பளத்தை எடுத்துக்கொள்ள மீதியை வைத்து குடும்பத்தை நடத்த எத்தனை சிரமபடுகிறான் என்பதை அவன் மட்டுமே அறிவான். 

இப்போது தான் அவனுக்கு கிடைத்திருக்கும் பதவி  உயர்வும், மனைவியின் வருமானமும் சேர்ந்து ஓரளவு சமாளிக்க முடிகிறதே தவிர்த்து மொத்தமாக அவனால் இன்னும் கடனில் இருந்து விடுபட முடியவில்லை. 

ஆனால் அவன் பெற்றோரோ மாப்பிள்ளை எங்கே மகளை கை விட்டு விடுவாரோ என்ற பயத்தில் அப்போதே, “பேத்தி வயதுக்கு வந்தால் பத்து சவரன் செய்து விடுகிறோம்.. மீதம் சீர்வரிசைகளோடு திருமணத்தின் போது..” என்று மகள் தன் கஷ்டத்தை சொல்லும் போதெல்லாம் சொல்லி தேற்றுவார்.

ஆனால் இப்போது அதுவே அவர்களுக்கு ஆபத்தாகி போனது. 

தனிப்பட்ட முறையில் அவர்களிடம் எந்த சேமிப்பும் கிடையாது, பத்து சவரன் அதை தொட்டு சிந்துவின் திருமணம் வரையிலுமே மகனை தான் நம்பி தான் இருக்கின்றனர். 

ரிஷிக்கு சிந்துவை மிகவும் பிடிக்கும். அவன் வளர்த்த குழந்தை அல்லவா? “மாமா” என்று சிறு வயது முதலே அவன் பின்னே தான் சுற்றிக் கொண்டிருப்பாள்.

அவளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது தொடங்கி, அவளுக்குச் சொல்லிக் கொடுப்பது வரையும் அனைத்தும் ரிஷிதான். எப்போதுமே அவனுக்காக காத்திருந்து அவனோடு சேர்ந்து தான் சிந்து உணவு எடுத்துக் கொள்வாள்.

சில நாட்களில் ரிஷி ஓவர் டைம் முடித்து விட்டு வீட்டிற்கு வர தாமதமானாலும் அவனுக்காக காத்திருப்பாள். அப்படி ஒரு பாசப்பிணைப்பு அவர்களிடத்தில்.. அதனால் கஷ்டத்தோடு கஷ்டமாக மகன் செய்து விடுவான் என்று அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. 

அதேநேரம், கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு விற்ற விலையில் தங்கம் இல்லை. இப்போது விலை லட்சத்தைத் தொட்டு நிற்கும் நிலையில், பத்து சவரன் என்பது அவர்களுக்கு மிகப் பெரிய தொகையே!! 

ஆனால் மாப்பிள்ளையிடம் வாக்கு கொடுத்திருக்கும் நிலையில் செய்தாக வேண்டிய கட்டாயம். மகா இப்போது கருவுற்று இருப்பதால் சிவபாலன் முடிந்த வரை மகளிடம் பிறகு செய்கிறேன் என்று பேசி பார்த்து விட்டார். 

ஆனால் அவள் விடாப்பிடியாக இப்போதே பத்து சவரன் செய்து போட்டாக வேண்டும் என்று நிற்கிறாள்.

“என்னப்பா இதெல்லாம்?” என்ற ரிஷியின் கேள்விக்கு அவரால் சட்டென பதில் சொல்லிட முடியவில்லை.

“நாம எதுக்காக சிந்துவுக்கு 30 சவரன் போடணும்? பெத்த பொண்ண கட்டி கொடுக்க வேண்டியது அவங்களோட கடமை தானே?!” 

“என்ன ரிஷி அவங்க இவங்கன்னு பிரிச்சு பேசுற?! நான் உன் அக்காடா!!” என்று பதறிவிட்டார் வனிதா.

“அக்கா பிரிச்சு பேசல நிதர்சனத்தை சொல்றேன். இங்கே வளர்ந்துட்டு இருக்கிறதால சிந்து எங்களோட மகள் ஆகிட முடியாது. அப்பம்மாவுக்கு பேத்தி எனக்கு அக்கா பொண்ணு, என்னைக்கு இருந்தாலும் உங்களோட மகள். இதுதான் நிதர்சனம்…”

“உங்களுக்கு கஷ்டம் அதனால கொஞ்ச நாள் சிந்து இங்க வளரட்டும்னு விட்டு வச்சிருக்கீங்க, எப்படியோ சிந்து பெரிய பொண்ணு ஆன பிறகு இங்கே இருக்க மாட்டா பெங்களூருக்கே கூட்டிட்டு போயிடுவீங்கன்னு தான் நான் நினைச்சேன்..”

“ஆனா நீ என்னடான்னா நான் தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்ற. எனக்கு ஒன்னும் புரியல..”

“வரதா நீ நினைக்கிற மாதிரி இல்லை சிந்துவோட முழு பொறுப்பும் நம்மளோடது தான்..” என்றார் இந்திரா. 

“சிந்துவோட பொறுப்பு எப்படி நம்மளை சாரும்? அது பெத்தவங்களோடது தானே?!”

“ஆமாப்பா, ஆனா இரண்டுமே பெண் குழந்தையா போயிட்டதால உன் மாமா வீட்ல ஆண் குழந்தை வேணும்னு விருப்பட்டாங்க. வனிதா மூணாவது குழந்தைக்கு ஒத்துக்காததால உன் அக்காவை வேண்டான்னு வெட்டி விட இருந்தாங்க..” 

“அப்போ நாங்க தான் ஒரு குழந்தையோட பொறுப்பை ஏற்று கட்டிக் கொடுக்கிற வரைக்கும் எல்லாமே பார்த்துக்கிறோம் என்று வாக்கு கொடுத்து உன் அக்காவை அங்க வாழ அனுப்பினோம்..” என்று சொல்ல ‘இது என்ன புது கதை..’ என்பது போல தான் அவர்களைப் பார்த்தான்.

வனிதா ஏதோ பேச ஆரம்பிக்கவும், “என்ன நடந்தது எனக்கு முழுசா சொல்லுங்க..” என்றான். 

“என்ன நடந்திருந்தா என்ன ரிஷி. உனக்கு நான் ஒரே அக்கா. நீ தூக்கி வளர்த்த பொண்ணுக்கு உன்னால செய்ய முடியுமா முடியாதா?” என்று கண்ணீரும் கம்பலையுமாக கேட்டாள் வனிதா.

அவளுக்கு கணவன் மீது தம்பிக்கு இருக்கும் மரியாதையை கெடுத்துக்கொள்ள மனம் இல்லை. 

அதனால் பேச்சை மாற்றி உருக்கமாக கேட்க, “இல்லைன்னு சொல்லையே க்கா. பட் ஏஜ் அட்டென்ட் பண்ணினா தாய் மாமா சீர் செய்யறது முறை! தாராளமா செய்றேன். ஆனா நீ சொல்ற மாதிரி பத்து சவரன் எப்படி போட முடியும்?”

“ஏன்? ஏன் முடியாது? நீயும் உன் பொண்டாட்டியும் கை நிறைய சம்பாதிக்கிறீங்க தானே?! அப்புறம் ஏன் போட முடியாது..”

“என்னக்கா பேசற? நாங்க ரெண்டு பேர் சம்பாதிச்சா எங்களுக்குன்னு குடும்பம் இல்லையா? இல்லை குழந்தைகள் இல்லையா?” என்றதற்கு அவளால் எதுவும் பேச முடியவில்லை. 

“அதுக்காக செய்ய வேண்டிய சீரை எப்படி வரதா முடியாதுன்னு சொல்ல முடியும்? புகுந்த வீட்டுல உன் அக்காவோட மரியாதை என்னாகிறது?”

“அதானே! நேத்து உன் பொண்டாட்டிக்கு ஐஞ்சு மாசத்துக்கே எப்படி சீர் செனத்தி எடுத்துட்டு வந்தாங்கன்னு பார்த்த தானே அப்படி எனக்கும் என் மகள்களுக்கும் செஞ்சா தானே உங்களுக்கும் மரியாதை..” என்றதில் அவனுக்கு மண்டை வலித்தது.

“ப்ச், அக்கா எங்களோட வசதிக்கு ஏத்த மாதிரி தானே பண்ண முடியும்? ஏற்கனவே வாங்கி வச்சுருக்க கடனே கழுத்தை நெரிக்குது, இதுல பத்து சவரன் என்னால எப்படி முடியும்னு யோசிக்க மாட்டியா?” என்றவனுக்கு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.

பேசி முடித்து வந்தவன், “ஆஃபிஸ்ல அவசரமா வர சொல்றாங்க, நான் வந்து பேசறேன்..” என்றான்.

“இது எவ்ளோ முக்கியமான விஷயம் பாதியில விட்டுட்டு போனா எப்படி?” என்று அங்கலாய்த்தாள் வனிதா. 

எப்படியும் தம்பியிடம் சொன்னால் உடனே சரி என்று தலையாட்டி விடுவான் என்று தான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் இத்தனை கேள்விகள் அவனிடம் இருந்து வரும் என்று அவள் நினைத்து பார்க்கவில்லை.

“இதை விட எனக்கு ஆபிஸ் முக்கியம் முடிஞ்சா மதியம் வரேன் பேசிக்கலாம்..” என்றவன் அவசரமாக கிளம்பி அலுவலகம் சென்றான்.

*****************

பூரி தக்காளி தொக்கை ஒரு பிடி பிடித்த மகாலட்சுமி அத்தனை நிறைவோடு அமர்ந்திருந்தாள்.

இப்படி ஆற அமர ரசித்து ருசித்து சாப்பிட்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டது 

“மகா குலோப்ஜாமூன்..” என்று சுமதி கொடுக்க ஆசையோடு வாங்கிக் கொண்டவள் “தேங்க்ஸ் அண்ணி” என்றாள் முகம் மலர.

“ரொம்ப நாள் ஆச்சு ம்மா இந்த மாதிரி திருப்தியா சாப்பிட்டு. ஆஃபீஸ்ல வீட்ல ஒரு அவசரத்திலேயே போயிடும் இப்படி ஒருத்தர் சமைச்சு கொடுத்து சாப்பிடறது அவ்வளவு சந்தோஷமா இருக்கு..” என்ற மகளின் புன்னகை பாக்கியாவின் முகத்திலும் புன்னகையை தோற்றுவித்தது.

“உன்னை தினமும் இங்க கூட்டிட்டு வர சொல்லி தம்பி கிட்ட சொல்லி அனுப்புறேன். ஆனா நீ தான் கேட்க மாட்டேங்கிற, இன்னும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி இங்க வந்து தினமும் இப்படி டிஃபன் சாப்பிட்டுட்டு கூட ஆஃபிஸ் கிளம்பலாமே மஹா” என்றாள் சுமதி.

“எங்க அண்ணி?” என்று சலிப்போடு பார்த்தவள், “தினமும் எந்திரிச்சதுல இருந்து ஆஃபிஸ் கிளம்பற வரைக்கும் அங்க வேலை கரெக்டா இருக்கு. எப்படியும் வளைகாப்பு முடிச்சு இங்க தானே இருக்க போறேன் அப்போ சேர்த்து சாப்பிட்டுக்கிறேன்..” என்றாள் சிரிப்போடு. 

“சரி சரி நீங்க பேச ஆரம்பிச்சீங்கன்னா நேரம் போறதே தெரியாம பேசிட்டு இருப்பீங்க. சுமதி நீ போய் இஞ்சி பூண்டு அரைச்சு பிரியாணிக்கு தேவையானது எல்லாம் எடுத்து வை… நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்..” என்றவர் மகளுக்கு சீரகம் போட்டு வெந்நீர் கொண்டு வந்து கொடுத்தார்.

“அம்மா எனக்கு உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். கொஞ்சம் உட்கார்.. அப்புறம் சமைக்க போகலாம்..”  

“சொல்லுடா என்ன விஷயம்?”

“அண்ணிகளுக்கு நாம ஒன்பதாம் மாசம் தானே வளைகாப்பு பண்ணி அவங்க வீட்டுக்கு அனுப்பினோம்?! ஏன் ஏழாம் மாசம் பண்ணலை..”

“ஆமாம் மகா, பொதுவாவே அப்படித்தான். ஒருவேளை நாள் சரியில்லை, இல்லை ரெட்டை மாசம் அப்படி ஏதாவது இருந்ததுனா ஏழு மாசம் கூட வளைகாப்பு பண்ணலாம்.. உன் அண்ணிகளுக்கு அப்படி தேவைப்படலை..” என்று சொல்ல பலத்த யோசனையோடு அமர்ந்திருந்தாள் மகாலட்சுமி.

“என்னடா யோசனை?” என்றார் வாஞ்சையோடு.

“ம்மா எனக்கு ஏழாம் மாசமே வளைகாப்பு பண்ணி இங்க கூட்டிட்டு வந்துடுறீங்களா?”

“ஏன்டா, ஏதாவது பிரச்சனையா?”

“அச்சோ அம்மா, சீக்கிரம் வளைகாப்பு பண்ண சொன்னா பிரச்சனையா தான் இருக்கணுமா என்ன? இப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது.. எனக்கு அங்கிருந்து இவ்வளவு தூரம் டிராவல் பண்றது கஷ்டமா இருக்கு..”

“கல்யாணத்துக்கு ஏற்கனவே தேவையான லீவ் எடுத்துட்டதால இப்போ உடனே இன்னொரு முறை லீவ் போட்டா எனக்கு மெட்டர்னிட்டி லீவ்ல சிக்கல் வரும்.. அதே நான் இங்க வந்துட்டேன்னா எனக்கு டிராவல் பண்ற அந்த ஒன்றரை மணி நேர அலைச்சல் மிச்சமாகும். நான் இன்னும் பொறுமையா நிதானமா ஆறு அமர ஆஃபீஸ்க்கு கிளம்பலாம் ம்மா..”

“ஏழாம் மாசம் என்ன எங்களுக்கு நீ இப்ப இருந்தே இங்க இருக்கிறதா இருந்தாலும் சந்தோஷம் தான் மகா ஆனால் சம்பந்தி வீட்டில் ஒத்துப்பாங்களா? ரெண்டு நாளைக்கு மேல உன்னை இங்க விட்டு வைக்கல இப்போ ரெண்டு மாசம் முன்னாடி அனுப்புங்கன்னு சொன்னா ஒத்துப்பாங்களா?” என்றார் தயக்கத்தோடு

“ம்மா ரெண்டு குழந்தைங்க என்பதால பிரசவம் முன்ன பின்ன இருக்க வாய்ப்பு உண்டுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க.. அப்பாவோடு வந்து பேசுங்க, அப்பா சொன்னா ஓரளவு கேட்பாங்க.. நானும் அவர் கிட்ட இதை பற்றி பேசறேன்..”

“பேசுறத பத்தி ஒன்னும் இல்ல மகா ஆனா ஏன் எதுக்குன்னு ஏதாவது கேட்டு சிக்கல் ஆகுமோன்னு  யோசிக்கிறேன்…”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது..” என்ற மகாவிற்கு கணவனுக்கும் தனக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைக்கு இது ஒன்று தான் தீர்வாக தெரிந்தது. 

மாத்திரை போட தொடங்கியதிலிருந்து வாமிட் சென்சேஷன் சற்று மட்டுபட்டு இருந்தது.

அதற்காக சுத்தமாக வாந்தி இல்லை என்றோ சோர்வு இல்லை என்றோ தலை சுற்றல் இல்லை என்றோ சொல்லி விட முடியாது. அனைத்துமே இருக்கிறது தான்! ஆனால் வேலையை விடும் முடிவு எந்தளவு அவர்களின் உறவை சிக்கலாக்கும் என்று மகாலட்சுமிக்கு நன்கு புரிந்து போனதில் எப்படியாவது மீதமிருக்கும் மாதங்களை சமாளித்து விட முடிவு செய்தாள்.

அதனால் தான் இந்த ஏற்பாட்டை முன்னெடுத்து இருக்கிறாள். ஏழாம் மாதம் தொடக்கத்திலேயே இங்கு வந்து விட்டால் தற்போது அவள் செய்யும் அதிகப்படியான வீட்டு வேலை, அலைச்சல் எல்லாமே குறையும். அதன் பிறகு மெட்டர்னிட்டி அது முடிந்த பின்னர் புகுந்த வீட்டிற்கு சென்றால் போதும்.

அது மட்டுமல்ல இப்போது அவள் வேலையை விடக்கூடாது என்றால் மகாலட்சுமிக்கு கணவனிடம் சில எதிர்பார்ப்புகள் உண்டு. அதற்கு அவனும் சம்மதிக்க வேண்டும் அப்போது தான் அவள் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியும்.

“சரி மகா, நீ மனசை போட்டு உலப்பிக்காத நான் அப்பா கிட்ட பேசுறேன் ஏழு மாசம் இங்க வந்துருவ..” என்றிட சுமதி மூவருக்குமான காபியோடு அங்கே வந்தார்.

“காயத்ரி அண்ணிக்கு பேசவே இல்லை. எப்படி ம்மா இருக்காங்க.. உங்க கிட்ட பேசினாங்களா?”

“நல்லா தான் இருக்கா. நேத்து கூட உனக்கு கூப்பிட்டதா சொன்னா ஆனா நீ தான் எடுக்கலையாமே! ஏன்?” 

“கொஞ்சம் டயர்டா இருந்ததால சீக்கிரம் தூங்கிட்டேன் இப்ப நான் போய் பேசுறேன் ம்மா..” என்றவள் தன் அறைக்கு சென்று ஏசி போட்டுவிட்டு காயத்ரிக்கு அழைத்து மெல்ல நடந்தபடி பேசத் தொடங்கினாள்.

இங்கு பிரியாணிக்கான ஆயத்த பணிகளில் சுமதி பாக்கியலட்சுமி மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

காயத்ரியிடம் பேசி முடித்த மகாலட்சுமி தன்னை அறியாமல் உறங்கிப் போயிருந்தாள்.

பன்னிரண்டரை மணிக்கு உணவு தயாரானதும் மகளை எழுப்பிய பாக்கியலட்சுமி பரிமாற வயிறார உண்டு முடித்தவள் கேப் புக் செய்து ஆஃபிஸுக்கு கிளம்பினாள்.

 

Comments

Post a Comment

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 20.3