வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

வாழ்க்கைத்துணை - 26.3



மகாலட்சுமி கர்ப்பமாக இருந்த போதே கணவனை பிரிந்து பிறந்த வீடு வந்து சேர்ந்தது காயத்ரிக்கு தெரியும். 


கணவன் மனைவி பிரிவும் பிள்ளைகள் வரவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அவள் வீட்டினர் சொல்லி இருக்க. இங்கே இரண்டு குழந்தைகள் எனும் போது எப்படியும் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று நினைத்திருந்தாள்.


மகா கிளம்பிய பின்னர் கணவனுடைய நேரம், பாசம் அனைத்தும் தங்களுக்கு கிடைக்கும் என்றவளின் நம்பிக்கையில் மண்ணள்ளிப் போட்டது போல பிரசவத்திற்கு பிறகும் ரிஷி வரவில்லை என்ற செய்தியை அறிந்து திடுக்கிட்டு போனாள்.


அதோடு மகா விவாகரத்து செய்யப் போவதையும் அறிந்ததில் காயத்ரிக்கும் கதிருக்கும் கருத்து முரண் ஏற்பட்டது. அதுவரை மாமியார் வீட்டிற்கு வாரம் ஒருமுறையாவது தவறாமல் சென்று கொண்டிருந்தவன் அதன்பின் மாதத்திற்கு ஒருமுறை என்று குறைத்துக்கொண்டான். 


அதை அவன் விரும்பி செய்தான் என்பதை விட மகா குழந்தைகளின் பொறுப்பு அவர்களுடையது என்றானதோடு காயத்ரியுடனான வாக்குவாதத்தை தவிர்க்கவும் விரும்பினான். 


அதுவே அவள் கோபத்தை அதிகரித்து இருந்தது. 


அப்போது மட்டுமல்ல அவள் இங்கு வந்து சேரும் வரையிலுமே!! சொன்ன நேரத்தை விட அரை மணி நேரம் கதிர் தாமதம் ஆகிவிட்டாலும் “தங்கச்சிக்கு சேவை செய்யறது தான் முக்கியம். நாங்கல்லாம் உங்களுக்கு முக்கியமா?” என்று வெடுக்கென கேட்க சிலநேரம் அவளை திட்டி விட்டு வாசனோடு கிளம்பியும் வந்து விடுவான்.


இதோ அவள் இங்கு வந்து சேர்ந்து கூட பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் கணவன் மனைவிக்கு இடையில் புகைச்சல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. 


ஆரம்பத்தில் நாத்தனாரோடு நல்ல உறவில் இருந்தவள் இப்போதெல்லாம் மகாவிடம் அதிகார தோரணையோடுதான் நடந்து கொள்கிறாள். 


மகாவிற்கு அது புதிதாக இருந்தாலும் பெரிது படுத்தாமல் அவளை அனுசரித்து போய்க் கொண்டிருந்தாள். அப்படி இருந்தும் சின்ன சின்ன விஷயங்களுக்காக வீட்டில் பிரச்சனைகள் அவ்வப்போது வெடிக்க தான் செய்தது. 


“சொல்லு காயத்ரி மகாவுக்கு கதிர் செய்யறது உனக்கு என்ன பிரச்சனை?” என்று மீண்டும் பாக்கியலட்சுமி கேட்ட போது கதிர் அங்கே வந்து சேர்ந்தான். 


“என்ன ம்மா ஆச்சு? கோவிலுக்கு கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றான் மனைவியை முறைத்தபடி.

“ஒரு நாள் ரெண்டு நாள் என்றால் பரவால்ல த்தை. ஆனா உங்க பொண்ணு என்னைக்கு வீட்டோட வந்து உட்கார்ந்தாலோ அன்னையிலிருந்து என் புருஷன் வேலைக்காரனாவே மாறிட்டாரு.. உங்க பொண்ணுக்கு மட்டும் இல்ல உங்க பெரிய மருமகளுக்கும் சேர்த்து எல்லாமே அவர் தான் செய்ய வேண்டியதா இருக்கு”​

“அவரும் மனுஷன் தானே!! 10 மணி நேரம் உழைச்சிட்டு வரவருக்கு ரெஸ்ட் வேண்டாமா?”​ என்றதிலேயே கதிருக்கு புரிந்து போனது.

“போதும் காயத்ரி, நிறுத்து!! இதுக்கு மேல எதுவும் பேசாத. என் தங்கச்சிக்கும் என் அண்ணன் பசங்களுக்கும் செய்யறதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை..” என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு.​

“உங்களுக்கு இருக்காதுங்க, ஆனா உங்க அளவுக்கு பெருந்தன்மையோ பரந்த மனசோ எனக்கு கிடையாது...”​

“அம்மா அண்ணா கடைக்கு போறது தெரிஞ்சு தான் டையப்பர் வாங்கிட்டு வர சொன்னேன். தனியா எனக்காக அனுப்பல”​

“இத பாரு மஹா பிரச்சனை இப்போ உங்க அண்ணன் மற்ற பொருள் வாங்கும் போது போனாரா இல்ல உனக்காக தனியா போனாரா என்பது கிடையாது. உங்க அண்ணா உனக்கு டிரைவராவும் வேலைக்காரனாவும் இருக்கிறது தான்...”​

“அவர் உனக்கு அண்ணன் மட்டுமில்லை எனக்கு புருஷன்!! என் குழந்தைக்கு அப்பா!!"​

"எங்களுக்குன்னு நேரம் வேண்டாமா? உன்னையே பார்த்துட்டு உனக்கு சேவை செஞ்சுட்டு இருந்தா குழந்தைகளோடு அவர் எப்போ நேரம் செலவிட?! எங்களுக்காக அவர் எப்போ வாழறது?” என்று இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்தது அனைத்தும் வெளியில் வர மகாவிற்கு பெரும் அதிர்ச்சி.​

“போதும் காயூ, அளவுக்கு அதிகமா பேசிட்ட... என் தங்கச்சிக்கு என்கிட்ட எல்லாம் உரிமையும் இருக்கு அதை கேள்வி கேட்கவும், செய்ய கூடாதுன்னு தடுக்கவும் நீ யாருடி?” என்று கதிர்வேலனும் குறையாத சீற்றத்தோடு கேட்க காயத்ரி இன்னுமே வெடித்தாள்.​

“உங்களுக்கு என்னை பற்றின கவலை என்னைக்கு தான் இருந்திருக்கு?” என்ற கேள்வியை இப்போது மட்டுமல்ல பல நேரம் அவனிடம் கேட்டு இருக்கிறாள். 


அப்போதெல்லாம்,​“பகல்ல எங்க இருந்தா என்ன? நைட் முழுக்க உனக்கு தானடி!” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும் மனைவியை தாஜா செய்து வழிக்கு கொண்டு வருவான் கதிர்.

“அப்போவும் நைட்டுக்கு மட்டும் தானா நான் உங்களுக்கு? நான் உங்க பொண்டாட்டி! ஆனா இப்படி சொல்றது உங்களுக்கே சரின்னு தோணுதா?” என்றாள் கண்களில் நிறைந்து விட்ட நீரோடு.

“பாப்பா உண்டாகி இருந்த போது உங்க அண்ணியோட அம்மாவுக்கு முடியாததால லீவ் நாளில் எல்லாம் அவங்களை கூட்டிட்டு போயிட்டு வரவே உங்களுக்கு நாள் சரியா இருக்கும்..”

“அண்ணன் கூட இல்லாதப்போ நான் தானே இதெல்லாம் செஞ்சாகணும்! இத்தனைக்கும் அண்ணியோட அப்பாவும் தவறிட்டார். அண்ணியோட தங்கச்சியும் அத்தை மட்டும் தான். அவங்களுக்கு முடியலன்னும் போது இவங்க பக்கத்துல இருக்கணும் தானே!”

“நான் வேண்டாம்னு சொல்லலையே! ஆனா கிட்டத்தட்ட மூணு மாசம் எல்லா சனி ஞாயிறு நீங்க என் கூட இல்லை. நான் எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா? பாப்பாவோட அசைவு, அவ உதைக்கிறது அதெல்லாம் உங்களுக்கு சொல்லணும்னு நினைக்கிறப்போ, நீங்க போய் வந்த டயர்டுல தூங்கிடுவீங்க. உங்களை எழுப்பும் மனசு வராது!”

“காயூ, எனக்கு மட்டும் உன்னோடு டைம் ஸ்பென்ட் பண்ண கூடாதுன்னு வேண்டுதலா என்ன? அப்பா அவ்வளவு தூரம் போய் வர முடியுமா? அண்ணியை தனியா அனுப்ப அண்ணனே ஒத்துக்கிட்டாலும் அப்பா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க.. ஏன் உன்னை கூட தானே எப்பவும் தனியா போக விடமாட்டார்..”

“உன்னை உங்க வீட்டுக்கு நான் கொண்டு போய் விட்டுட்டு வரணும். இல்ல உன் அண்ணன், தம்பி யாராவது வந்து கூட்டிட்டு போகணும் இதுதானே வழக்கம்!” என்றவனின் சூழ்நிலை அவளுக்கு புரிந்த போதும் கருவுற்று இருப்பவளின்  எண்ணங்கள் சமநிலையில் இல்லாமல் போவதற்கு அவள் மட்டும் என்ன செய்ய முடியும்?

மனைவியின் ஏக்கம் புரிந்தவன் அதனாலேயே இரண்டாவது குழந்தையை சற்று தள்ளிப்போட்டு, இரண்டாம் முறை மகனை அவள் கருவுற்றிருக்கும் போது முடிந்த வரையில் காயத்ரியோடு நேரம் செலவிட தான் நினைத்தான்.

ஆனால் அவனது துரதிர்ஷ்டமா? அல்லது அவன் பிள்ளை உருவான அதிர்ஷ்டமா? தெரியவில்லை காயத்ரி இரண்டாவது குழந்தை கருவுற்றதை உறுதி செய்த சமயத்தில் மகாலட்சுமிக்கு ரிஷிவரதனுடனான திருமணம் உறுதி செய்யப்பட்டது.

மூன்று மாதங்களில் திருமணம் நடைப்பெற்றதில் கதிரால் மனைவியோடு நேரம் செலவிட முடியவில்லை. ஒவ்வொரு நாள் இரவும் மனைவியை அணைத்துக்கொண்டு அவளிடம் மன்னிப்பு கேட்டே உறங்க வைப்பான்.

அவளுமே, ‘கணவனின் அந்த ஒற்றை அணைப்பில் அனைத்தும் மறந்து உறங்குவாள்..’

மகாவின் திருமணம் முடிந்து, வேண்டுதல், மறு வீடு, சலசலப்புகள் அடங்கி, கதிர் காயத்ரியோடு நேரம் செலவிட தொடங்கிய போது தான் மகாலட்சுமி கருவுற்ற செய்தி கிடைத்தது. 

காயத்ரி ஆசைப்பட்டபடி கதிர் அவளோடு செலவிட்டது எண்ணி நாற்பது நாட்களாக தான் இருக்கும். அதன் பின் நடத்தவை எதுவுமே கதிரே எதிர்பாராதது. 

தனித்து நிற்கும் தங்கைக்கு தோள் கொடுத்து தாங்கும் வேகத்தில் மனைவியின் மனதை அறிய மறந்திருந்தான்.

அதிலும் அவள் இங்கு வந்து சேர்ந்த பின்னரும் அவர்களுடன் நேரம் செலவிடாமல் எந்நேரமும் தங்கைக்காக செய்து கொண்டிருப்பதை அவளால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.​

“அப்போ உங்களுக்கு என்னை விட உங்க தங்கச்சி தான் முக்கியமா?!” என்று காயத்ரி கேட்க கதிரிடம் கனத்த மௌனம்.​

“உங்க தங்கச்சி தான் எல்லாம் என்றால் பொண்டாட்டியா நான் எதுக்கு உங்களுக்கு?!”​

“வார்த்தையை விடாத காயத்ரி எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம் போ” என்று கதிர்வேலன் அடக்கபட்ட கோபத்தோடு சொன்ன போதும் அவள் மேலும் பேசிக்கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் வார்த்தைகள் தடித்து கதிர் காயத்ரியை கை நீட்டி விட்டான்.​

கன்னத்தை பிடித்தபடி மஹாலக்ஷ்மியிடம் சென்றவள், “இப்ப சந்தோஷமா உனக்கு?! இதுக்கு தானே காத்திருந்த, இதுக்காக தானே இங்க வந்து உட்கார்ந்து எங்க நிம்மதியை கெடுத்த?! உங்கண்ணன் கை நீட்டியாச்சு, இது போதுமா இல்ல என்னை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளினுமா?”​

“அண்ணி என்ன பேசறீங்க? நான் அப்படி எதுவும் நினைக்கலை . சாதாரணமா தான் சொன்னேன்” என்றவளுமே கதிர் அடிப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.​

“என் புருஷன் என் மேல பாசமா இருக்கறது உனக்கு பிடிக்கலடி, நீ உன் புருஷன் கூட வாழாத மாதிரி யாருமே வாழக்கூடாதுன்னு நினைக்கிற அப்படித்தானே?!” என்று சொல்ல மகாலட்சுமியோ வார்த்தைகளின்றி கலங்கிய விழிகளோடு அண்ணியை பார்த்தாள்.​

“காயத்ரி உன்னை பேசாதன்னு சொன்னேன்...” 

“எனக்கு என்ன உங்க தங்கச்சிக்கு எல்லாத்தையும் செய்ங்க. நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்” என்ற மருமகளை பாக்கியலட்சுமி தான் ஓடி சென்று சமாதானபடுத்த முயன்றார். 

“தங்கச்சி முக்கியமா இருக்கிற அளவுக்கு உங்க பிள்ளைக்கு பொண்டாட்டி முக்கியமில்லை அத்தை. இனி அவருக்கு சொல்லி புரிய வைக்க முடியும்னு தோணலை..” என்றவள் அவர் வார்த்தை எதையும் காதில் வாங்காமல் துணிகளை அடுக்க தொடங்கவும்,  

“அண்ணி ப்ளீஸ், இனி நான் அண்ணா கிட்ட எதையும் கேட்க மாட்டேன். நானே போய் வாங்கிட்டு வந்துடுறேன் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க..” என்றாள் மகாலட்சுமி கண்ணீர் மல்க..

“நீ பேசாத! எப்போ நீ இங்க வந்து சேர்ந்தியோ அப்போ இருந்தே என் புருஷன் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இல்லாம போயிட்டார்..”

“உனக்கு புருஷன் தேவை இல்லாம இருக்கலாம் எனக்கு என் புருஷன் வேணும்னு தான் மானம் கெட்டு போய் இங்க வந்தேன் ஆனா இப்போ என்னோட இடம் என்னன்னு தெரிஞ்சது..” என்றவள் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேற..,

“என்னடா பார்த்துட்டு இருக்க? போய் அவளை கூப்பிடு என்ன இருந்தாலும் நீ அவளை கை நீட்டினது தப்பு.. முதல்ல மன்னிப்பு கேளு..” என்று சொல்ல அவர் மகனோ அமைதியாக செல்லும் மனைவியை பார்த்து நின்றான்.

“அண்ணா என்னால யாருக்கும் பிரச்சினை வேண்டாம் தயவு செஞ்சு போய் அண்ணியை கூட்டிட்டு வாங்க இல்லை நான் நிச்சயம் வீட்டை விட்டு போயிடுவேன்” என்று கண்ணீரோடு சொல்லவும் தான் முகத்தை அழுந்த துடைத்தவன் மனைவியை பின்தொடர்ந்து சென்றான். 

அதே நேரம் ஒரு வருடம் கழித்து யூஎஸ்ஸிலிருந்து நேற்று நள்ளிரவு தாய்நாடு திரும்பி இருந்த ரிஷி வந்ததும் வராததுமாக சரியாக தூங்காமல் காலையே குளித்துவிட்டு தயாராகிக் கொண்டிருந்தான்.

மகனுக்காக காஃபி போட்டுக் கொண்டு வந்த சிவபாலன் ஒரு வருடத்திற்கு பின்னர் புது பொலிவோடும், மகிழ்வோடும் லேசாக சீட்டி அடித்தபடி தலைவாரி கொண்டு நிற்கும் மகனை வாஞ்சையோடு பார்த்திருந்தார்.


Comments

Post a Comment

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 17