வாழ்க்கைத்துணை - 20.3
“அம்மா கேஸ் சரியா தொடைக்கலைன்னு சொன்னாங்களே? ஒழுங்கா பண்ணிட்டியா? நேத்து மிக்ஸி ஸ்விட்ச் ஆஃப் பண்ணாம விட்டுட்டியாம்.. செய்யற வேலை மேல கவனமில்லாம என்ன பண்ற நீ!”
“எனக்கு செய்யற வேலை எப்பவும் பெர்ஃபெக்டா இருக்கணும். யாரும் உன்னை ஒரு குறை சொல்ற அளவுக்கு வச்சுக்காத லச்சு..” என்பவன் அவள் தவறுக்கு தண்டனையாக மகாலட்சுமி அந்த வேலையை சரியாக செய்து முடிக்கும் வரை பேச்சு வைத்து கொள்ளாமல் ஒதுங்கி சென்று விடுவான்.
அவளும் எத்தனையோ முறை சொல்லி பார்த்துவிட்டாள் ஆனால் அதுதான் அவன் குணம் போலும். இதுவே இந்திரா எந்த குறையும் சொல்லாதளவு அவள் நடந்து கொண்டால் ரிஷியை போன்ற அன்பான கணவனை எங்குமே காண முடியாது.
வீட்டிற்கு வந்த மருமகள் அந்த வீட்டை உள்வாங்கி குடும்ப நபர்களை புரிந்து கொண்டு அங்கு தன்னை பொருத்திக் கொள்ளும் அவகாசம் எல்லாம் மகாவின் துரதிர்ஷ்டம் அவளுக்கு கிடைக்கவில்லை.
திருமணமான முதல் பத்து நாட்கள் மறுவீடு, வேண்டுதல், விருந்து என்று கழிய அடுத்த நான்கு நாட்களில் தேனிலவை முடித்துக் கொண்டு வந்த போது அவள் மாமியார் கை காலில் கட்டோடு படுத்திருந்தார்.
அன்று அவர்கள் மால்டிவ்ஸில் இருந்து கிளம்பிய போது தான் இந்த அசம்பாவிதம் நடந்திருந்தது. ப்ளைட் ஏறும் முன்பாகவே விஷயம் கிடைத்து விட்டதில் ஒருவித இறுக்கத்துடனே விமானத்தில் அமர்ந்திருந்தான் ரிஷி.
மகாவின் எந்த சமாதானமும் அவனிடம் எடுபடவில்லை. அதிலேயே அவனுக்கு அவன் அன்னை எத்தனை முக்கியமானவர் என்பதை அறிந்து கொண்டாள்.
மகாலட்சுமி திருமணத்திற்கு முன்பு மூன்று நாட்கள் அதிலிருந்து தேனிலவு சென்று வந்த அடுத்த நாள் வரைக்கும் என்று இருபது நாட்கள் தான் விடுமுறை எடுத்திருந்தாள்.
அது கூட திருமணம் முடிந்த நான்காம் நாளிலிருந்து ஐந்து நாட்கள் வீட்டில் இருந்த படியே ப்ராஜெக்ட் செய்து கொடுப்பது என்ற கண்டிஷனோடு.
மூன்று வருட அனுபவம் மட்டுமல்ல அவள் செயல்பாடுகள் அவளை அடுத்து வர இருக்கும் Team lead தகுதி பட்டியலில் சேர்த்துள்ளது. அதனால் இன்னும் ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் பதவி உயர்வு பெறுவதோடு அவள் சம்பளமும் லட்சத்தை தாண்டி செல்ல போகிறது.
அதனால் திருமணத்திற்கு விடுமுறை கொடுத்த போதே இதற்கு சம்மதித்து இருந்ததாள்.
ரிஷியிடம் அவளுக்கு ஒளிவு மறைவு என்பதே கிடையாது. நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையில் இரண்டு மாதங்களுக்கு மேல் இருந்ததால் அவர்களுக்கு இடையில் பேச்சுக்கள் அதிகமாகவே இருந்தது.
ரிஷி ஓ.டி செய்வதால் களைப்பு இருந்தாலும் உடனே உறங்காமல் வேலை முடித்து வந்து ஒரு மணி நேரமாவது அவளிடம் பேசுவான்.
தனக்காக அவன் நேரம் ஒதுக்குவதே மகாவிற்கு அத்தனை மகிழ்வை கொடுத்து இருந்தது. பெரும்பாலும் ரிஷி அவளை பற்றியும் மகா அவனை பற்றியும் அவர்கள் விருப்பு வெறுப்பு பற்றியும் தெரிந்து கொண்டதை தாண்டி அவரவர் கம்பெனியில் நடக்கும் பாலிடிக்ஸ், மியூசிக், நாட்டு நடப்பு என்று அவர்கள் பேச்சு நீண்டு கொண்டே செல்லும்.
இதெல்லாம் தாண்டி வருங்கால கணவனிடம் மகாலட்சுமி அவள் குடும்ப விஷயங்களையும் பகிர்ந்திருந்தாள்.
அதுமட்டுமில்லை அவள் பிறந்த வீட்டில் இருந்து வேலை செய்யும் கம்பெனி அரை மணி நேர தூரம் தான் ஆனால் புகுந்த வீட்டில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணம்.
இப்போது வேலையை விட்டாலோ வேறு கம்பெனி மாறினாலோ நிச்சயம் திருமணமாகி இருப்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு குழந்தை பெற்று கொள்ள கூடாது என்ற நிபந்தனை விதிப்பார்கள். அதனால் எக்காரணம் கொண்டும் வேலையை விடக்கூடாது, வேறு கம்பெனிக்கும் மாறக்கூடாது என்று ஆரம்பத்திலேயே ரிஷி சொல்லிவிட்டான்.
அங்கிருந்து மெட்ரோ பிடித்தால் தினமும் மூன்று மணி நேரம் சென்று வரும் அலுப்பே தெரியாது என்று ரிஷி சொன்னதை வீட்டில் சொல்லவும் அவர்களும்,
“மாப்பிள்ளை உன்னோட வளர்ச்சிக்காக தானே சொல்லி இருக்கார். பொண்டாட்டி தன்னை விட ஒரு ரூபா அதிகமா சம்பாச்சுட கூடாதுன்னு அவளை வீட்டோடு இருக்க வைக்க என்ன தகிடுதித்தம் வேலையெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யறவங்களுக்கு மத்தியில இப்படி புரிதலோடு யார் இருப்பா? மாப்பிள்ளை சொல்ற படியே செய்” என்று சொல்லி விட்டனர்.
ரிஷிவரதனுக்கு அவள் வீட்டில் அத்தனை மதிப்பு ஆனால் அதே மதிப்பும் மரியாதையும் அவளுக்கு இங்கு உண்டா? என்று கேட்டால் பதில் நிச்சயம் “கிடையாது” என்பது தான்.
இத்தனைக்கும் ரிஷியை விடவும் அவள் கூடுதலாக சம்பாதிப்பவள் அப்படி இருந்தும் வெளிப்படையாக இல்லாமல் மருமகள் என்ற பெயரில் அவர்கள் வீட்டு வேலைக்காரியாக தான் நடத்தபடுகிறாள்.
‘நீ வந்த நேரம் எங்க அம்மாவை படுக்க வச்சுட்ட.. இப்படி மாமியார் படுத்த படுக்கையாகி போயிருக்கும் நிலையில் வீட்டு வேலையை யார் செய்வா?’ என்ற கேள்வியை முதலில் எழுப்பியதே வனிதா தான்.
அதற்கு மகாவை பதில் கூட பேச விடாமல், ‘உன்னால முடியாதுங்கிறப்போ என் அப்பாவையும் தம்பியையும் முறை வாசல் செய்ய சொல்லலாமா?’ என்று கேட்க ரிஷியின் பார்வை அதிருப்தியோடு மனைவி மீது படிந்தது.
‘ரிஷி நாம வேலைக்கு ஆள் வச்சுக்கலாமே?! சமையல் மட்டும் நான் பார்த்துக்கிறேன் எனக்கு ப்ராப்ளம் இல்லை..’ என்று மகா சொன்னதும் தான் தாமதம் கொதித்து போனார் இந்திரா.
‘என் வீட்டுக்குள்ள யார் வரணும் போகணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன் நேத்து வந்த நீ அதிகாரம் பண்ணுவியா?’ என்று கேட்க,
‘உன் இஷ்டத்துக்கு வார்த்தையை விடுவியா? ஏற்கனவே இங்க வேலைக்கு ஆள் கிடையாது அம்மா தான் செய்வாங்கன்னு சொல்லியிருக்கேன் தானே! அப்படி இருந்தும் சூழல் தெரிஞ்சு பேச தெரியாதா லச்சு..’ என்ற கணவனின் அடிக்குரலில் அரண்டு போனாள் மகாலட்சுமி.
அவள் வீட்டில் மகாராணியாக இல்லையென்றாலும் யாருமே இப்படி கடிந்து பேசுபவர்கள் கிடையாது. தினகரன் தான் சற்று முன்கோபி! அப்படியும் தந்தையின் குணம் அறிந்து அவர் ஒரு வார்த்தை பேசும் அளவிற்கு அவள் நடந்து கொண்டது கிடையாது.
ஆனால் நான்கு நாட்கள் மால்டிவ்ஸில் “லச்சு.. லச்சு..” என்று வார்த்தைக்கு வார்த்தை “இச்சு” வைத்து கொஞ்சி பேசியவனின் குரலில் இப்போது தொனித்த கடுமையும் அந்நியத்தன்மையும் அவளை திகைக்க செய்திருந்தது.
மகாவினுடையதும் கூட்டுக்குடும்பம் தான்.
வீட்டில் அவளோடு சேர்த்து நான்கு பெண்கள் என்பதால் வேலைக்கு ஆள் கிடையாது. ஆனால் விசேஷ நாட்களில் தேவைபட்டால் இரண்டு நாட்கள் நான்கு நாட்களுக்கு ஆட்களை அழைத்து கொள்வார்கள் .
ஆனால் இங்குவேலைக்காரி வைத்து கொள்வதில் இந்திராவிற்கு உடன்பாடு இல்லை. எல்லா வேலையும் அவரே செய்து கொள்வது தான் வழக்கம். அதையே வேலைக்கு செல்லும் மருமகளும் செய்தாக வேண்டும் என்று நிற்பந்திப்பவர்.
என்ன ஒன்று 'மருமகள் வந்த வேளை கை காலை உடைத்து கொண்டவர் அறையோடு முடங்கியதற்கு மருமகளின் ராசி தான் காரணம்' என்று இன்று வரையிலும் பார்ப்பவர்களிடம் மறக்காமல் சொல்லி விடுவார்.
அதுமட்டுமல்ல, மேலே சொன்ன வேலைகள் அனைத்தும் செய்துவிட்டு தான் மகா ஆபிஸிற்கு கிளம்ப வேண்டும் என்று கண்டிப்போடு சொல்லி விட்டார்.
‘தனியாளாக எப்படி செய்வாள்?’ என்று சிவபாலன் கேட்க, ‘ஏன் நாங்க எல்லாம் பதினைஞ்சு பேருக்கு ஆக்கி போட்டு காடு கழனின்னு வேலை செய்யலையா?’ என்று அவர் வாயை அடைத்து விடுவார்.
‘அம்மாடி மகா நான் வீட்டோடு தானே இருக்கேன், உன் அத்தையை குளிப்பாட்டுறது, ஊட்டிவிடறது எல்லாமே நான் பார்த்துக்கிறேன்’ என்று அவரால் முடிந்தளவு பாரத்தை குறைத்தார்.
இல்லையென்றால் காலை மாலை வேளைகளில் மகாவை நொடி நேரம் கூட நிற்க விடாமல் அழைத்து அவருக்கு சேவை செய்ய வைத்திருப்பார் இந்திரா.
முதலில் சமையலறையில் பொருள்களை அவளுக்கு ஏற்ற மாதிரி அடுக்கி வைத்து தட்டு தடுமாறி அவர்களின் வழக்கம் கற்று கொண்டவள் தினகரன் மகளுக்கு சீர்வரிசை குறையில்லாமல் செய்ததால் இங்கு வரும் போதே வாஷிங் மெஷின், டிஷ்வாஷரோடு தான் வந்திருந்தாள்.
என்ன ஒன்று, அவர்கள் தேனிலவு சென்று திரும்பும் வரை அனைத்தும் பிரிக்கபடாமல் இருந்தது. இப்போது அதற்கு வேலை வந்துவிட இரண்டே நாட்களில் ரிஷி அதையெல்லாம் பொருத்தி கொடுத்துவிட்டான்.
அதில் மகாவின் டென்ஷன் ஓரளவு குறைய கணவனை பார்த்து புன்னகைத்தவளிடம் ஆசுவாச மூச்சு வெளியாகியது. ஆனால் அது சில வாரங்களுக்கு கூட நிலைக்கவில்லை.
சமையல், வீடு பெருக்கி சுத்தம் செய்வது, சிந்துவின் படிப்பு என்று அத்தனையும் சீராக செய்துவிட்டு ஆபிஸ் கிளம்பியவளுக்கு இப்போது கருவுற்ற பிறகு அதையும் சரியாக செய்ய முடியாத நிலை..
மருமகள் கருவுற்ற பின்னர் மாமனார் உதவ வந்தாலும் மகா மறுத்துவிடுவாள். அவள் கணவன் அவ்வப்போது அவளுக்கும் உதவுவான் தான் என்றாலும் காலையில் அவனை எதிர்பார்க்க முடியாது.
ஏழரைக்கு முன்பாக விழித்து கொள்ளும் பழக்கம் ரிஷிவரதனுக்கு எப்போதுமே இருந்தது கிடையாது.
வேக வைத்திருந்த பருப்பை கடைந்து காய்களை நறுக்கி தாளித்து சாம்பாரை இறக்கியவள் அடுத்த அடுப்பில் பொரியலுக்கு வெங்காயத்தை வதக்க தொடங்கினாள் மகாலட்சுமி.
Comments
Post a Comment