“எங்க குடும்பத்துக்குன்னு ஒரு கௌரவம்
இருக்கு.. இப்படி தான் பெண்ணை கல்யாணத்துக்கு முன்னாடியே உன் இஷ்டத்துக்கு
மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைப்பியா..? என்ன தான்
வசதியானவங்களா இருந்தாலும் நமக்குன்னு தன்மானம் வேணும்.. அவங்கதான் சொன்னாங்கன்னா
உனக்கு எங்க போச்சு அறிவு..?” என்று வீட்டினுள் நுழையாமல்
கேட்டுகொண்டிருந்தார் கஜபதி.
கஜபதியின் வரவிற்காக சீதாவும் தென்றலும் காலையில் இருந்தே
காத்திருக்க அவரோ சொன்ன நேரத்தில் இருந்து ஒருமணி நேரம் அவர்களை காக்க வைத்த
பின்னரே வந்தார். காரில் இருந்து இறங்கவும் மகளிடம் தண்ணீர் கொடுத்துவிட்ட சீதா
ஒரு மூலையில் ஒதுங்கிகொள்ள, அவரை வரவேற்ற தென்றலிடம்,
“பரவாலயே இந்தளவுக்கு மரியாதை தெரிஞ்சிருக்கு ஆனா நீ ஏன் கொண்டு வர?
போ, போய் உங்கக்காவை வர சொல்லு..” என்றவர் மணப்பெண்ணான இளந்தளிர்
அழைத்தால் தான் வீட்டிற்குள் வருவேன் என்பது போல போர்டிக்கோவில் இருந்த
நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
வந்ததும் தன் வேலையை ஆரம்பித்து விட்ட கஜபதியை முகம் கடுகடுக்க
பார்த்து நின்ற தென்றல் ‘பெரியவங்களா நடந்துக்கறவங்கள நாங்களும் மதிப்போம்... நீ
வாங்காமல் போனால் எனக்கென்ன..? இதை கொடுக்க வந்தது கூட எங்கம்மா
வார்த்தைக்காக தான்' என்று மனதினுள்
கௌன்ட்டர் கொடுத்தவாறு முறைத்திருந்தவள் தண்ணீரை அருகே இருந்த அவர் மனைவியிடம்
கொடுக்க அவரோ கணவரின் முகம் பார்த்து நின்றார்.
அதில் எரிச்சலுற்றவள் "ம்மா" என்று தாயை திரும்பி
பார்க்கவும் “வாங்க மாமா, வாங்கக்கா, வா தம்பி”
என்று வரவேற்று சூழலை சமாளிக்க பார்த்தார்..
“அதுதான் நாங்க வந்துட்டோமே..! போ போய் உன்
பெரிய பெண்ணை தண்ணி எடுத்துட்டு வர சொல்லு” என்றார் அதிகாரமாக.
“மாமா தளிர் பாட்டி வீட்டு சீர் செய்ய
போயிருக்கா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவா.. இங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலே
வியர்த்து கொட்டும் நீங்க வீட்டுக்குள்ள வாங்க அக்கா நீங்களும் தான்.. நீ என்னம்மா
குழந்தைகளை வச்சிட்டு நின்னுட்டு இருக்க..? என்று குழந்தையை
வாங்கிகொண்டவர்,
"என்ன பார்க்கிற தென்றல் அண்ணியை
கூட்டிட்டு போய் ரூம்ல ஏசி போட்டுவிடு.. எல்லாருக்கும் ஜூஸ் எடுத்துட்டு வா டிபன்
எடுத்து வை” என்று முறைத்திருந்த மகளை விரட்டினார்.
"வாங்க" என்று அவர்களை தென்றல்
அழைத்து செல்லவும் யோசனையில் இருந்த கஜபதி, “பாட்டி வீடா..?
உங்கப்பா அம்மா செத்து பல வருஷமாச்சே..? அது
யாரு எங்களுக்கு தெரியாத சொந்தம்..?” என்று கேட்க
திருமணத்திற்காக வந்திருந்தவர்களின் பார்வை இவர்கள் மீது படிந்தது.
“மாமா..” என்று தயக்கத்தோடு பார்த்தவர்,
“அது நம்ம பக்கம் முறை செய்ய யாரும் இல்லாததால சம்பந்தி நாங்களே
செய்யறோம்னு சொல்லிட்டார். மா.. மாப்பிள்ளையோட அக்கா வீட்டுக்கு தான் போயிருக்கா..
சீக்கிரம் வந்துடுவா நீங்க வாங்க” என்று சுற்றி இருந்தவர்களை பார்த்தவாறு மெல்லிய
குரலில் கூறினார்.
“என்னது..? யார்
குடும்பத்துக்கு யார் முடிவு எடுக்கிறது..? இந்த
குடும்பத்துக்கு பெரியவன்னு நானொருத்தன் இருக்கும் போது என்னை கேட்காம உன்
இஷ்டத்துக்கு பெண்ணை அனுப்பி வைப்பியா..? பணக்கார சம்பந்தம்
கிடைச்சுட்டா வழக்கம் மறந்திடுமா..?"
"எல்லாமே உன் சம்பந்தியை
கேட்டு செய்யறப்போ கால்கழுவி ஆசிர்வதிக்க மட்டும் நாங்க எதுக்கு..? அதையும் அவங்களையே செய்ய சொல்ல வேண்டியது தானே..?” என்று
கேட்க சீதாவால் பதில் சொல்ல முடியவில்லை.
அத்தனை பேர் பார்த்திருக்க அன்னையை பேசும் கஜபதியை எதுவும்
பேச முடியாமல் நின்ற சீதாவை பார்த்த தென்றலுக்கு அத்தனை ஆற்றாமை.
“இல்ல மாமா அப்படியெல்லாம் இல்ல.. அவங்க
வீட்டுக்கு இது கடைசி கல்யாணம் அதனால எல்லாமே நாங்க பார்த்துக்குறோம்னு
சொன்னாங்க.. அப்பவும் நான் அக்கா வழியில செய்யலாம்னு உங்ககிட்ட பேச ஃபோன்
பண்ணினேன் ஆனா நீங்க யாருமே எடுக்கலை கடைசியா வேற வழியில்லாம தான் அவர்
சொன்னதுக்கு ஒத்துகிட்டேன்..
“ஏன் ஃபோன் எடுக்கலைன்னா நேர்ல வந்து கலந்து
பேசி முடிவெடுக்க தெரியாதா..? என்ன தான் பணக்கார சம்பந்தமா
இருந்தாலும் நமக்குன்னு நாலு உறவை வச்சு வைக்கணும்.. எங்க அதுதான் என் தம்பியை
கட்டிக்கிட்டு வந்த நாளில் இருந்தே உனக்கு அந்த பழக்கம் இருந்திருந்தா தானே..!!
உனக்காக என் தம்பி எங்களை தலைமுழுகிட்டான் இப்போ நீ சம்பந்திக்காக எங்களை
தலைமுழுகியிருக்க.." என்று ஊசியாய் வார்த்தைகளை கஜபதி சொருக சீதாவால் விழி
உயர்த்தி யாரையுமே பார்க்க முடியவில்லை.
"பேசாம நின்னா நீ செய்யறது எல்லாமே
சரியாகிடாது..! யார் எங்க இருக்கணுமோ அங்க இருந்தாதான் மரியாதை..! பணம் கொட்டி
கிடக்கறதால என்னைக்கும் சம்பந்தி இந்த வீட்டுக்கு தலைவன் ஆகிட முடியாது நியாபகம்
வச்சுக்க..” என்று வார்த்தை அம்புகளால் சீதாவை சிதறடித்து திருமணத்திற்கு
வந்திருந்தவர்களின் பார்வைக்கு விருந்தளித்தார்.
கலங்க முற்பட்ட விழிகளை
கட்டுபடுத்திய சீதாவின் குரல், “மாமா..” என்ற போதே உடைய
தொடங்கிவிட்டது.. முந்தானையால் கண்ணீரை துடைத்தவர் பேசும் முன்,
“ஏன் அக்காக்கு கல்யாணம் நடக்கபோறது உங்களுக்கு
தெரியாதா..? எல்லாமே நாங்களே கேட்கணுமா..? தலைவன்னு சொல்றவர் அதுக்கு ஏத்த பொறுப்போடு நடந்துக்கணும்..
ஒவ்வொன்னுக்கும் எங்கம்மாவை அலைகழிக்க கூடாது” என்று இதற்கு மேலும் பொறுக்க முடியாத
தென்றல் கேட்டுவிட,
"என்ன கேட்ட திரும்ப கேளு..?"
என்ற கஜபதி நாற்காலியிலிருந்து கோபத்தோடு எழுந்துவிட்டார்.
"வாயை மூடு தென்றல்.." என்ற சீதா
"மன்னிச்சுடுங்க மாமா அவ சின்ன பொண்ணு எதுவும் புரியாம வாய்க்கு வந்ததை
பேசிட்டா தயவுசெய்து நீங்க உட்காருங்க"
"இதுதான் பொட்டபுள்ளையை வளர்த்த லட்சணமா...?
பெரியவங்க எது செய்தாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்னு தெரியாதா..?
இதென்ன எடுத்தெறிஞ்சு பேசுற பழக்கம்..? முதல்ல
உனக்கு மரியாதை தெரிஞ்சா தானே பசங்களுக்கு தெரியும்..?" என்று அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மகளிடம்,
"முதல்ல பெரிப்பா கிட்ட மன்னிப்பு கேளு" என்று சீதா சத்தமாக
சொல்லவும் தாயின் கண்களில் இருந்து வழிந்த நீரில் தன்னை கட்டுபடுத்திய தென்றல்,
'இதுதான்ம்மா கடைசி இனி இந்தாளு ஏதாவது பேசினா நானே வெளியே போக
சொல்லிடுவேன்' என்று மனதார தாயிடம் சொன்னவள்,
"மன்னிச்சிடுங்க பெரியப்பா.."
என்றவள் கோபத்தோடு உள்ளே சென்றுவிட்டாள்.
"ஏதோ என் தம்பிக்காக வந்தேன்.. இப்படி கூப்பிட்டு
வச்சு செருப்பால அடிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன்"
என்றவர் வெளியில் செல்லவும் கூடியிருந்தவர்களிடம் சலசலப்பு, பதறிய
சீதா, "மாமா அதுதான் அவ மன்னிப்பு கேட்டுட்டாளே நீங்க
அதை பெருசு படுத்தாதீங்க உள்ள வாங்க நான் தளிரை உடனே வர சொல்றேன்.."
"உங்களுக்கு மரியாதை தெரியாம இருக்கலாம்..
உறவுகளோட அருமை புரியாம இருக்கலாம் அதுக்காக நானும் அப்படி இருந்திட முடியாதே..?
மட்டு மரியாதை தெரியாம பணத்துக்காக பழக்கத்தை மாத்திக்கிற
உங்களுக்காக இல்லைன்னாலும் கூட பிறந்தவனுக்காக மண்டபத்துல இருக்கேன் எங்கயும்
போகலை" என்றவர் காரில் ஏறி திருமண மண்டபத்திற்கு சென்றுவிட்டார்.
*************************
குளித்து முடித்திருந்த தளிர் தான் தேர்ந்தெடுத்த புடவையை
பாந்தமாக உடுத்தி ஒப்பனை செய்து முடித்து ஈரக்கூந்தலில் விரல்களை நுழைத்து
சிக்கெடுத்தவாறு பால்கனியில் நின்றுகொண்டிருந்தாள்.
பார்வை எதிரில் இருந்த கட்டிடத்தின் மீது இருந்தாலும் அவள்
மனதிலோ சற்று முன் வளையலிடுகையில் தன் மீது பதிந்த உதயாதித்தனின் பார்வையே
ஊர்கோலம் நடத்த அவள் இதழ்களில் நாணப்புன்னகை உதயமானது. உடனே
கைபேசியை எடுத்தவள் கூந்தலை ஒருபக்கமாக ஒதுக்கி தன்னை புகைப்படம் எடுக்க தொடங்கிட
சுஜியின் அழைப்பு.
"ரெடியாகிட்டியா தளிர்..?"
"ஹ்ம்ம் கிட்டத்தட்ட முடிஞ்சது..., தலை
ஈரமா இருக்கு ஆறவச்சுட்டு இருக்கேன் அண்ணி இன்னும் பத்து நிமிஷமாகும்”
“சரி சரி ஒன்னும் அவசரமில்லை நிதானமாவே வா..
அங்க உனக்கு கொடுத்த தாம்பாளத்துல நிவி நகை வச்சிருக்காளாம் பாரு அதையும்
போட்டுக்கோ..”
“என்ன அண்ணி ஏற்கனவே எடுதுட்டீங்களே இன்னும்
எதுக்காக..? எனக்கு ஜுவல்ஸ்ல அவ்வளவா விருப்பமில்லை..”
“இருக்கட்டும் தளிர்! இது அவளோட மாமியார்
மாமனார் எடுத்ததாம் அவங்களுக்காக போட்டுக்க சந்தோஷபடுவாங்க..” என்றதும்
"சரியண்ணி" என்றவள் நகையை போட்டுகொண்டு மீண்டும் பால்கனியில் நின்று
கூந்தலில் விரல் நுழைக்க அதனூடே மனதினுள் நுழைந்தது உதயனின் நினைவு.
அத்தனை பேருக்கு நடுவில் முத்தமிட போனவனின் நினைவை ஒதுக்க
முடியாது தத்தளித்த தளிரின் மனம் போலவே அவள் விரல்களும் நடுக்கம்கொண்ட அதேவேளை
முதலிரண்டு அறைகளில் தளிரை தேடிய உதய் மூன்றாவது அறையில் அவளை கண்டுகொண்டு
சத்தமின்றி கதவை அடைத்துவிட்டு பால்கனிக்கு சென்றவன் சட்டென தளிரை பின்னிருந்து
அணைக்கவும் அதை எதிர்பாராதவள் நெஞ்சம் படபடக்க "அம்மாஆ.." என்ற அலறலுடன்
பயத்தில் கண்களை மூடியவாறு சட்டென கீழே அமர்ந்து விட்டாள்.
அவள் செய்கையில் பதறிப்போன உதய் "ஹே தளிர் என்னாச்சு..? நான்
தான் ரிலாக்ஸ்.." என்று அவளெதிரே அமர்ந்திட அவளோ இன்னமும் குறையாத
நடுக்கத்தோடு அமர்ந்திருந்தாள்.
"எதுக்கு உனக்கு இவ்ளோ பயம்..? இங்கபாரு.." என்றவன் அவள் முகம் நிமிர்த்தி, "என்னை தவிர வேற எவன்டி உன்னை கட்டிபிடிப்பான்..? இப்பவும்
நீ என்னை நினைக்கல இல்ல.." என்று அவன் சிடுசிடுக்க.,
மெல்ல கண்களை திறந்து ஆசுவாச மூச்செடுத்தவள், "ப்ச் நான் யாரோன்னு பயந்துட்டேன் உதய்.. எதுவும் சொல்லிட்டு செய்ய
மாட்டீங்களா..? இப்படியா பயமுறுத்துவீங்க..?" என்ற நெஞ்சில் கைவைத்தபடி படபடத்தாள்.
"ஏன்டி இதெல்லாம் சொல்லிட்டா செய்வாங்க..?
விட்டா என் பொண்டாட்டியை கட்டிபிடிக்க போறேன்னு மீடியாவை கூப்பிட்டு
நியூஸ் கொடுத்துட்டு வர சொல்லுவா போல..? கொஞ்ச நேரத்துல நீ
பயந்து என்னையும் பயமுறுத்தி ப்ச் முதல்ல எந்திரிடி" என்று அவளை நாற்காலியில்
அமர்த்தியவனுக்குமே அவள் முகத்திலிருந்த அச்சம் சற்று நிதானிக்க செய்தது.
"முதல்ல தண்ணீ குடி" என்று டம்பளரை நீட்ட
வாங்கி குடித்தவள் இப்போது ஓரளவு இயல்பிற்கு திரும்பியிருந்தாள்.
"ஆர் யூ ஓகே..?"
"ஹ்ம்ம்! ஆனா திடீர்னு நீங்க என்ன இங்க..?
எதுக்கு வந்தீங்க..? ஏதோ கால் பேச போனதா அண்ணி சொன்னாங்களே
சாப்ட்டீங்களா இல்லையா..?" என்ற தளிர் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக
பால்கனியின் கைபிடியில் சாய்ந்து இருகரங்களையும் மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு
நின்றிருந்தவன் பார்வை தெளிந்திருந்தவளை ரசனையாய் கொள்ளை கொள்ள தொடங்கியிருந்தது.
அவன் பார்வை மாற்றத்தை கண்டு கொண்ட தளிர், "யாராவது வரப்போறாங்க வாங்க கீழ போகலாம்.." என்றழைத்தாள்.
"போகலாம் அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு
பதில் தெரியனும்.." என்றான் உல்லாசக்குரலில்.
"என்ன தெரியனும்..?"
"எங்கக்கா வளையல் போட்டுவிட சொல்ற ஆள்
கிடையாது.. என்ன விஷயம்னே சொல்லாம அவசரமா வர சொல்றவங்களும் கிடையாது, இன்னைக்கு விசேஷமா என்னை வரவும் சொல்லி வளையல் போட்டு விடவும்
சொல்லியிருக்காங்களே என்று புருவத்தை நீவியவன், உண்மையை
சொல்லு நீதானே என்னை வரசொன்னது..?"
"நானா..? நான் ஏன்
வர சொல்லணும்..?"
"அப்படியா..?" என்றவனின்
வார்த்தை அவள் செவியோடு உறவாட இருவருக்கும் இடையிலிருந்த தூரத்தை வெகுவாக
குறைத்துவிட்டவனின் பார்வையில் மயக்கம் கூடிட "உன்னோட பொய்கூட உன்னை
மாதிரியே ரொம்ப அழகா இருக்கு தளிர்.. ஆனா உனக்கு அதை
சரியா சொல்ல தெரியல இனி ட்ரை பண்ணாத வேஸ்ட் ஆஃப் டைம்.." என்றான் இதழ்களில்
உறைந்த புன்னகையோடு.
உதய்யின் நெருக்கத்தில் அன்னிச்சையாக கண்களை மூடி கொண்டவள், "எஸ் நான் தான் வர சொன்னேன்.." என்றாள்.
"ஏன் உன்கிட்ட என் நம்பர் இருக்கே நீயே
என்னை கூப்பிட்டு இருக்கலாமே எதுக்கு அக்காகிட்ட சொன்ன..? நீதான்
கூப்பிட்டன்னு தெரியாம நான் எல்லாரையும் கூட்டிட்டு வந்து உன்னால கொடுக்க
வேண்டியதை கொடுக்க முடியாம போயிடுச்சு.." என்று அவன் சலித்துக்கொள்ள..,
"நான் கூப்பிட்டு நீங்க கோபத்துல வராம
போயிட்டா என்ன செய்ய..? அதான் அண்ணியை விட்டு உங்களை
கூப்பிட்டேன். சர்ப்ரைஸ் பிடிச்சிருந்ததா..?" என்று தளிர் அவனறியாமல் ஓரடி பின்னே வைக்க..,
"பிடிச்சதாவா..?" என்றவன் அவளோடு சேர்த்து ஓரடி முன்னே வைத்தான்.
"ஏன்டி நீ மட்டும் எதுவும் சொல்லாம என்னை
சர்ப்ரைஸ் பண்ணி திக்குமுக்காட வைக்கலாம் பதிலுக்கு நான்
ஹக் பண்ணி உன்னை சர்ப்ரைஸ் செய்யகூடாதா..?"
"இது சர்ப்ரைஸா..? ச்சோ
நான் நிஜமா பயந்துட்டேன் உதய்"
"ஓகே ரிலாக்ஸ்! என்றவன் அவள் கையை
பிடித்து வளையலை வருடியவாறே, "இதுக்கு என்ன அர்த்தம்..?"
என்றான்.
'திடீரென இப்படி கேட்டால் அவள் என்ன அர்த்தம்
சொல்ல..?' பதிலின்றி பார்த்திருந்தவள் விழிகளில் அவன்
நெற்றியில் உற்பத்தியாகி இருந்த வியர்வை விழவும், “உதய் ஏன்
இங்க நின்னுட்டு ரொம்ப வெயிலா இருக்கு வாங்க உள்ள போய் பேசலாம்"
"நீ என்னை டைவர்ட் பண்ணாம விஷயத்துக்கு
வா"
"என்ன விஷயம்..? நான்
ஒன்னும் டைவர்ட் பண்ணலை. மதியவெயில்ல இருந்தா உங்களுக்கு ஒத்துக்காதோன்னு
சொன்னேன்"
"இல்ல வேண்டாம் இங்கயே இருக்கலாம் ஐம் ஓகே
வித் இட்..!"
"இது பால்கனி உதய்..! நான் தலை
காயட்டும்னு இங்க வந்தேன் உங்களுக்கு எப்படி வியர்க்குது இங்க ஏசி இல்ல வாங்க உள்ள
போகலாம்.." என்று மீண்டும் அழைத்தாள்.
"இல்ல வேண்டாம்" என்று அவளிடமிருந்து
விலகி பால்கனியின் கைபிடியில் அமர்ந்திருந்து கொண்டான்.
"ஏன் உதய் உங்களுக்கு ரொம்ப வியர்க்குது
வாங்க.."
"ப்ச் சொன்னா கேளுடி! இப்போ நான் என்
கண்ட்ரோல்ல இல்ல, ஏற்கனவே நீ பயந்துட்ட! இப்போ உள்ள போறது
தான் இன்னும் ஆபத்து இந்த இடம் சேஃப்..!! ஸோ இங்கயே இருக்கலாம்..." என்று
உதய் தன் மனதை மறைக்காமல் சாதாரணமாக சொல்லிவிட அதற்கு நேர்மாறாக அவன் வார்த்தைகள்
கொடுத்த அதிர்வில் மூச்சு விடவும் மறந்து நின்றாள் இளந்தளிர்.
Comments
Post a Comment