“ஸாரி அத்தை தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க
இதை சொல்லாம விட்டது என்னோட தப்பு தான்” என்று கண்ணீரை துடைத்த தளிர்
ஜெகதீஸ்வரியிடம் சொல்லிகொண்டிருக்கும் போதே...
"இத்தனை வருஷமா பணம் காசு, சொத்து எதுவும் வேணும்னு தேடி வராதப்பவே நினைச்சேன் எப்படிடா இப்பதானே
தெரியுது.." என்று அருவெறுப்போடு சொன்னவரின் வார்த்தைகள் தளிர்,
தென்றலை சுக்குநூறாக சிதற செய்திருந்தது.
"நாங்க எப்படி வாழறோம்னு நீங்க ஒன்னும்
சர்டிபிகேட் கொடுக்க தேவையில்லை..." என்று தென்றல் கண்ணீரோடு முன்னே வரவும்,
"ஷ்ஷ் தப்பும் பண்ணிட்டு பேசவும்
செய்வீங்களா..? உங்க லட்சணத்துக்கு நீங்க வாயே திறக்ககூடாது.."
என்று அவர் தென்றலை கண்டித்தவரிடம்..,
"என்ன பேசுறீங்க நீங்க..? இவங்க உங்க தம்பி குடும்பம் அந்த நினைப்பும் வார்த்தையில
கொஞ்சம் கண்ணியமும் கவனமும் இருக்கட்டும்” என்றாள் சுஜி.
"தம்பி குடும்பமா ..? இன்னொரு முறை அதை சொல்லாதம்மா, இவங்க செய்திருக்க வேலையால
என்னால வெளியே தலைகாட்ட முடியாது.., இனி இந்த
குடும்பத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, உங்களை
ஏமாத்தினதுக்கு போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கிறதா இருந்தா கொடுத்து உள்ள தள்ளுங்க
நான் ஏன்னு கேட்கமாட்டேன் ஆனா எங்க பேரை எங்கயும் இழுத்துவிடாதீங்க நாங்க மானமுள்ள
குடும்பம் இதுங்களை மாதிரி இல்லை" என்று அண்ணாமலையிடம் கைகூப்பியவர் துண்டை
உதறி தோளில் போட்டு திரும்பியவர் அங்கே நின்றிருந்த சீதாவிடம்,
"த்து அந்த வீட்ல குடும்பம் தான்
நடத்துறீங்ளா இல்ல வேறெதுவுமா..? இப்படிப்பட்ட பொழப்புக்கு.." என்று அவர்
பார்த்த பார்வையே சீதாவை முழுதாக மரிக்க செய்திட குனிந்த தலை நிமிராமல்
நின்றிருந்தவரின் கரம் நடுக்கத்தோடு மகளை பத்திரமாக பிடித்துகொண்டது.
அதேநேரம் குறையாத ஆவேசத்தோடு மேடையேறிய உதயாதித்தனின்
செவியில் கஜபதியின் நாராசமான வார்த்தைகள் விழ வேகமாக நெருங்கி
அவரை ஓங்கி அறைந்தவன் "இதுக்கு மேல ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்தது
கொன்னுடுவேன், அவுட்" என்று கர்ஜிக்க அதை கண்ட ராஜியின்
கன்னமோ தானே அடி வாங்கியது போல காந்திட அவர் உடலோ வெகுவாக வெடவெடத்து போனது.
அதை எதிர்பாராத கஜபதி கன்னத்தை பிடித்துக்கொண்டு, "என்னையா அடிச்ச, நான் யார் தெரியுமா..?"
என்ற கஜபதியின் முகம் அவமானத்தில் கறுத்திருந்தது.
"நீ யாரா இருந்தா எனக்கென்ன..? ஐ சே ஜஸ்ட் கெட் அவுட்..!" என்று சீறியவனின் விழிகளில் தளிரின்
கண்ணீர் சுமந்த முகம் தென்பட, “அக்கா உன்கிட்ட இவளை
பார்த்துக்க சொல்லிட்டு தானே போனேன் நீ என்ன செய்திட்டு இருக்க..?” என்று கோபமாக சுஜியிடம் கேட்கவும் ராஜி மட்டுமல்ல ஜெகாவும் இத்தனை
நாள்களாக காணாத மகனின் ஆவேசத்தில் வெகுவாக திகைத்து போனார்.
தன்னை வெளியேற சொன்னவனை முறைத்து நின்றிருந்த கஜபதியின் கையை
பிடித்த அவர் மகன், 'அப்பா திரும்ப அடிச்சுட போறாங்க வாங்க போயிடலாம்'
என்று கூறவும் எங்கே மீண்டும் அறைந்துவிடுவானோ என்ற பயத்தில் கஜபதி
வேகவேகமாக மேடையில் இருந்து இறங்கியிருந்தார்.
“ராஜிம்மா” என்று கஜபதியை பார்த்து நின்றிருந்த
ராஜியை அழைக்கவும் தூக்கிவாரி போட மகன் புறம் திரும்பியவர், “என்ன.. சொ.. சொல்லு ஆதி” என்று அவனருகே வந்தார்.
“தளிரை என்ன கேட்டுட்டு இருந்தீங்க..?” என்றான் மிதமிஞ்சிய கோபத்தோடு.
“நானா..? இல்லையே
ஒன்னுமில்லையே.. நான் ஒன்னும் கேட்கலை..” என்றவர் வெளிறிப்போன முகத்தை இயல்பாக்க
முயன்றார்.
“இல்ல நான் வரும்போது பார்த்தேன் ஏதோ
கேட்டுட்டு இருந்தீங்க என்னன்னு சொல்லுங்க..” என்றவனின் வார்த்தையில் இருந்த
அழுத்தமும் குரலில் இருந்த சீற்றமும் ராஜியின் வாயை பூட்ட செய்ய மௌனமாக அவனை
பார்த்தார்.
"உங்களை தான் ராஜிம்மா.. அவகிட்ட என்ன
கேட்டீங்களோ அதை இப்போ கேளுங்க" என்று அவன் உறுமவும்..,
"இல்.. இல்லப்பா கல்யாணம் ஆனது.."
என்றவருக்கு உதய் நின்ற கோலத்தில் அடுத்த வார்த்தையை உச்சரிக்கும் தைரியம் இல்லாது
போனது.
ஒருநொடி ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவன், "இப்போ என்ன உங்களுக்கு எல்லாம் இவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லையான்னு
தெரியனும் அதுதானே..?" என்றவன் மேடையில் இருந்தவர்களை
பார்க்க அவர்களிடம் கலவையான உணர்வுகள்.
"நல்லா கேட்டுக்கோங்க ஒரு பெண்ணுடைய
சம்மதம் இல்லாம அவ விருப்பத்தை மதிக்காம அவளுக்கே தெரியாம அவ கழுத்துல கட்டப்பட்ட
கயிறுக்கு தாலின்னும் அதை கட்டுனவன் புருஷன்னும் .. நடந்ததுக்கு பேரு கல்யாணம்னும்
நீங்க நினைச்சீங்கன்னா ஆமா இவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு..!! அதுவும் சின்ன
வயசுல இருந்து கூட படிச்ச பரதேசி நண்பன் என்ற போர்வையில் தளிருக்கே தெரியாம அவளை
ஏமாற்றி கட்டின தாலி அது..! அதுவும் தன்னை ஏமாற்றி கட்டப்பட்டதை தெரிஞ்சதும் அவ
உடனே கழட்டி போட்டுட்டா... அவளுக்கு மட்டுமில்லை என்னை பொறுத்த வரையிலும் அந்த
தாலிக்கு எந்த மதிப்பும் இல்லை" என்று தீர்மான குரலில் சொல்லவும்..,
"என்ன ஆதி இவ்வளவு பெரிய விஷயத்தை இத்தனை
சாதாரணமா சொல்ற..? என்ன இருந்தாலும் இதையெல்லாம் நம்மகிட்ட
சொல்லாம விட்டது தப்புதானே..?"
"ம்மா ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க தளிர்
சரத்தை காதலித்திருந்தாலோ இல்லை திருமணம் செய்ய விரும்பி இருந்தாலோ அவன்
கட்டிய தாலியோடு அவனுடன் வாழ்ந்து இருந்தாலோ இதை திருமணம் என்று சொல்லலாம் ஆனால்
அவளுக்கு நடந்ததற்கு பெயர் விபத்து.. விபத்தை எல்லார்கிட்டயும் சொல்லிட்டு
இருக்கணும்னு அவசியம் இல்லம்மா.." என்ற உதய்யை நன்றி பெருக்கோடு
பார்த்திருந்த சீதாவின் மனதில் நிம்மதி பரவியது.
“என்ன பேசுற உதய்..? நீ
சொல்ற விபத்துனால தளிர் மட்டுமில்ல இப்போ நாம எல்லாருமே பாதிக்கப்பட்டிருக்கோம்.
நம்ம குடும்பத்துல இப்படி ஒரு நிகழ்வு இதுவரை நடந்ததில்லை.. நீ சொல்ற விபத்தை பற்றி
நமக்கு முன்கூட்டியே தெரியாததால மற்றவர்கள் கேள்விக்கு ஆளாகி விளக்கம் கொடுக்க
வேண்டிய நிற்பந்தத்துக்கு தள்ளபட்டிருக்கோம்னு உனக்கு புரியுதா..?” என்றார் அண்ணாமலை.
“தாத்தா..”
“சரி ஆதி அவங்க மேல தப்பு இல்லன்னும் போது அதை
நம்ம கிட்ட சொல்லி இருக்கணுமா இல்லையா..? எதுக்காக
யாருக்கும் சொல்லாம இவ்ளோதூரம் கொண்டு வரணும் முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியது
தானே..? என்று ஜெகாவும் கேட்க..,
“யாருக்கும் தெரியாதுன்னு யார் சொன்னா..?
எனக்கும் அப்பாக்கும் தெரியும்...” என்று உதய் சொல்ல மற்றவர்களிடம்
பேரதிர்ச்சி..
“என்னப்பா சொல்ற..? உங்களுக்கு
தெரியுமா ஏன் எங்ககிட்ட சொல்லல..?”
“ஆமா தாத்தா தளிர் என்கிட்ட ஏற்கனவே
சொல்லியாச்சு அவ எதையும் மறைக்கலை இன்ஃபாக்ட் இப்போ இந்த கல்யாணத்தை நடத்துறதே
நான் தான்..!”
“தளிர் சொன்ன பிறகும் எங்களுக்கு எந்த தகவலும்
சொல்லாம கல்யாணத்தை நடத்துறேன்னு சொல்ற..? உன்னோட முடிவால
நம்மோட குடும்ப கௌரவம், பேர் எல்லாமே இப்போ பேசு பொருளாகி
இருக்கு.. இதை நீ ஏன் முன்னாடியே சொல்லலை” என்று கேட்டவருக்கு என்ன பதில் சொல்லி
புரிய வைப்பது என்று யோசனையுடன் தந்தையை பார்த்தான்.
பின்னே அவர்களுக்குள்ளாகவே இதை மறைத்துவிட முயன்றவர்களுக்கு
இப்போது அனைவர் முன்னிலையிலும் வெட்டவெளிச்சமாகி போனது அவர்களுக்குமே பெரும்
அதிர்ச்சி தான்.
நிச்சயமாக அவர்கள் பெயர் பொதுமக்கள், தொழல்
மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் பேசும் பொருளாகி இருக்கும் என்பதை உதய்யும்
உணர்ந்து இருந்தான். ஆனால் சீதாவும் தளிரும் இதை திட்டமிட்டு நடத்தாத போது அவன்
எப்படி அவர்களை குறை சொல்ல முடியும்...?
“தாத்தா என் மேல உங்களுக்கு நம்பிக்கை
இருந்ததுன்னா கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க நான் நிதானமா சொல்றேன்” என்று
உதய் பேசிக்கொண்டிருக்க விருந்தினர்களின் மத்தியில் இருந்த சலசலப்பு மெல்ல
அடங்கியிருந்தது.
கீழே இருந்த குழந்தைகள் நிவியின் நாத்தனார் மூலமாக ஓரளவு
விடயத்தை தெரிந்து கொள்ளவும் மேடையில் இருந்த தளிரின் கண்ணீரை கண்டு தாளமுடியாத
வைஷு உடனே மேடைக்கு சென்று தளிரின் முன் நின்றாள்.
“மேம் அழாதீங்க... எங்க மாமா
குட் பாய்..! நான் எது கேட்டாலும் மாட்டேன் சொல்லமாட்டார் ட்ரஸ்ட் மீ மேம்! அந்த
அங்கிளை போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்துட்டு உங்களை கல்யாணம் பண்ணிப்பார் இல்லனா
நான் மாமா கூட பேசவே மாட்டேன்” என்றிட கீழிதழை பற்களால் கடித்திழுத்து கொண்டு
வைஷுவை பார்த்தவளின் கரம் குழந்தையை தன்னோடு சேர்த்தணைத்து கொண்டது.
“நிஜமா தான் மாமி” என்று தளிரின் முகத்தை
நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் உடைப்பெடுத்தது.
"வைஷு என்ன இது கண்ணை துடை"
என்றவளின் கரமே தன் வார்த்தைகளை செயல்படுத்த அவள் மனமோ உதய்யை கண்டு விம்மி
வெடித்தது.
ஒரு கையால் குழந்தையை பிடித்திருந்தவள் 'எங்கே
வாய்விட்டு கதறிவிடுவோமோ அதுவேறு இன்னும் நிலையை மோசமாக்கி விடுமோ..' என்று மற்றொரு கையால் நெஞ்சை அழுத்தி பிடித்துக்கொண்டவளின் சூடான கண்ணீர்
மௌனமாக வெளியேறியது.
“நீங்க அழுதா எனக்கும் அழுகை வருது மேம் ப்ளீஸ்
எப்பவும் போல சிரிச்சுட்டு இருங்க.. கண்டிப்பா உங்களை அழ வச்ச அந்த அங்கிளை எங்க
மாமா பனிஷ் பண்ணுவாரு நீங்க வேணும்னா பாருங்க” என்றதும் தன் முகத்தை அழுந்த
துடைத்தவள் வைஷுவை கட்டிக்கொண்டு சுவரோடு சாய்ந்த அதேவேளை உதயாதித்தனுக்கு அழைப்பு
வந்தது.
“சொல்லுங்க அங்கிள்” என்றிட மறுபுறமிருந்த சிவனேஷ்
சொல்லிய செய்தியில் உதயாதித்தனின் முகத்தில் சொல்லென்னா அதிர்ச்சி பரவ உடனே அவன்
விழிகள் அவசரமாக தளிரை தான் துழாவியது.
அங்கே மணமகள் அறையின் வாயிலில் வைஷுவோடு நின்றவளை பார்த்தவாறே, “என்ன
சொல்றீங்க அங்கிள் ஹவ் இஸ் இட் பாசிபிள்..?” என்று தலையை
உலுக்கி கொண்டவனின் விழிகள் தன்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளை அழுத்தமாக
அவதானித்தது.
“....”
“அங்கிள் இதுக்கு வாய்ப்பே இல்லை ப்ளீஸ்
க்ராஸ் செக் பண்ணுங்க” என்றவனின் இதயதுடிப்பு பன்மடங்காக பெருகியதில் அவன்
முகத்திலும் என்றுமில்லாத பதட்டம் குடிகொண்டது. ஆனால்
அவர் மேலும் கூறிய செய்தியில் உதயனின் உடல் வெகுவாக இறுக மறுபுறமிருந்த சிவனேஷ்
பேசி முடித்த போது விழிகள் சிவக்க நின்றிருந்த உதயனின் மனதில் வெறுமை படர்ந்தது.
“யார் ஆதி ஃபோன்ல..?” என்ற
ஜெகாவின் கேள்விக்கு பதிலளிக்காது அங்கிருந்த நாற்காலில் அமர்ந்தவனின் பார்வை
நிலைகொண்டது என்னவோ தளிரடமே..!
“என்னாச்சுண்ணா..? வாங்க
முகூர்த்த நேரம் முடியபோகுது” என்று நிவி அழைத்தாள்.
பின்னே களேபரங்கள் ஒரளவு அடங்கிய நிலையில் இவர்களுக்கு
குறிக்கப்பட்ட அதிகாலை முகூர்த்தம் தவறிவிட்ட போதிலும் அடுத்த முகூர்த்தத்தில்
திருமணத்தை முடித்துவிட அம்பலாவாணன் ஐயரிடம் பேசியிருந்தார்.
“மச்சான் எழுந்து வாடா ஏன் உட்காந்துட்ட..?
எல்லாரும் காத்திருக்காங்க” என்ற ராகவன் அவன் கழுத்தில் மாலையை
அணிவிக்க அழுத்தமாக தன் முகத்தை துடைத்து ஒரு பெருமூச்சோடு எழுந்து
கொண்டவன் தலையை இருபுறமும் அசைத்தவாறே, “இல்ல
மச்சான் இந்த கல்யாணம் நடக்காதுடா” என்றான்.
“என்னடா சொல்ற..? ஏன்
திடீர்ன்னு இப்படி ஒரு முடிவு” என்று கேட்க அவனை தாண்டி மணமேடையின் நடுவில் வந்து
நின்ற உதயாதித்தன் "இந்த கல்யாணம் நடக்காது" என்று
சபையில் நிறைந்திருப்போரிடம் தீர்க்கமான குரலில் சொல்லியவாறே தன் கழுத்திலிருந்த
மாலையை கழற்றிட அதை கண்ட சீதாலக்ஷ்மி இத்தனை நேரம் கொண்டிருந்த நூலிழை
நம்பிக்கையும் அறுபட்டதில் மொத்தமாய் உருக்குலைந்து போனார்.
உதய்யின் வார்த்தையில் திகைத்த தென்றல் இடிந்து போய் அமர்ந்த
சீதாவிடம் கண்ணீரோடு செல்ல மறுபுறம் இருந்த சுஜியும், நிவியும்
உதய்யின் வார்த்தைகளில் உச்சகட்ட அதிர்வோடு அவனை பார்த்தனர்.
"என்னங்க இது அண்ணன் ஏன் திடீர்ன்னு
இப்படி சொல்றாங்க..? நீங்க நியூஸ் அவர்கிட்ட
காமிச்சுட்டீங்களா..?” என்று நிவி ராகவனை கேட்க அவனோ
இல்லையென்று தலையசைத்தவாறே நண்பனை தான் பார்த்திருந்தான்.
தந்தையை சமாதானபடுத்தி கொண்டிருந்த அம்பலவாணன் திகைப்போடு
மகனை பார்த்தவர் மறுநொடி தளிரை பார்க்க சர்வலங்காரத்தோடு இருந்தவளோ
முழுதான உறை நிலைக்கு சென்றிருந்தாள். சிறு அசைவின்றி நின்றிருந்த தளிரின் விழிகள்
உதய்யை பார்த்தவண்ணம் இமை சிமிட்டவும் மறந்திருக்க அவள் கண்களில் இருந்து வழிந்த
கண்ணீர் மட்டுமே அவள் உயிர்ப்போடிருப்பதை உறுதிபடுத்தியது.
மறுபக்கம் ராஜியின் முகம் மகிழ்ச்சியில் கூத்தாட அவளருகே
இருந்த ஜெகாவும் நிம்மதி மூச்செடுத்தவராக மகனை பார்த்தார். திருமணம் நடைபெறாது
என்று உதய் சொன்ன அடுத்த சில நிமிடங்களுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கும் மேலாக
நிறைந்திருந்த அப்பெரிய திருமண மண்டபத்தில் அப்படியொரு நிசப்தம் குடிகொள்ள அதை உடைத்தது
வைஷுவின் அழுகுரல்.
அவசரமாக மகனிடம் சென்ற அம்பலவாணன் "உதய் ஏன் இந்த
முடிவு..?
யார் ஃபோன்ல" என்று கேட்கவும் “ப்பா இனியும்
யாரும் இங்க இருக்க வேண்டாம் வந்திருக்க கெஸ்ட் எல்லாரையும் அனுப்பிடுங்க நான்
அங்கிளை பார்த்துட்டு வரேன்” என்ற வேகமாக சென்ற மகனை வேதனையுடன் பார்த்த
அம்பலவாணன் உடனே கைபேசியை எடுத்து, "ஹலோ சிவா.."
என்றார்.
Comments
Post a Comment