“தப்பு நம்ம மேல..! இத்தனை நாளா என் மகளுக்கு
நடக்கபோற நல்லது என்னை வேற எதையும் யோசிக்கவிடல.. எத்தனை சமாதானம் சொன்னாலும் நான்
அண்ணன் குடும்பத்தை இந்த நிலையில நிறுத்தினது சரியாகிடாது.. என்னால
ஏற்பட்ட களங்கத்தை நான் தான் துடைக்கணும்..” என்ற சீதாவிற்கு 'இந்த நொடியே உயிர் போய்விடாதா..?' என்று எண்ணுமளவு
அத்தனை வேகமாக வலி ஊடுருவியது.
நெஞ்சம் மரத்து போக கண்ணீரும் வற்றிய நிலையில் “நான் செய்த
தப்புக்கு நான்தான் பிராயச்சித்தம் பண்ணும் தயவு செய்து சொன்னதை
செய்ங்க” என்று சீதா நெஞ்சை கல்லாக்கி கொண்டு சொல்ல இருமகள்களும் கண்ணீரோடு அவரை
பார்த்தனர்.
“செய்த தப்பை திருத்தி மன்னிப்பு கேட்க நமக்கு
ஒரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க தென்றல் தயவுசெய்து போய் தயாராகு.. நம்மால
மாப்பிள்ளைக்கு இன்னொரு அவமானம் வேண்டாம்” என்று சொல்ல கரைந்த விழிகளோடு
நின்றிருந்த தளிரின் உயிர்கூடு சீதாவின் வார்த்தைகளில் நொறுங்கி போனது.
“அம்மா ப்ளீஸ்ம்மா இது வேண்டாம் நான்..
எனக்கு..” என்று நெஞ்சம் விம்ம துடிக்கும் இதழ்களுடன் தாயை பார்த்தவளுக்கு அதற்கு
மேல் வார்த்தை எழாதளவு நெஞ்சை முட்டி அழுத்திக்கொண்டு நின்றது உதய்யின்
நினைவுகள்.. அதிலும் திருமணத்தை ஆவலாக எதிர்பார்த்த அவன் பேச்சு,
சிரிப்பு, கேலி, பாடல்,
அணைப்பு, ஸ்பரிசம்" என்று மொத்தமும்
ஒன்றன்பின் ஒன்றாக படையெடுத்து அவளை ஆட்கொள்ள நெஞ்சை அழுத்தும் நினைவுகளால்
கண்ணீர் பெருகியது.
பலவருடங்களுக்கு முன் அவளுக்குள் புதைந்து போயிருந்த பழைய
இளந்தளிரை நேற்றிரவு உயிர்பித்த உதயாதித்தனுடனான திருமண வாழ்வு குறித்த கனவோடு
இரவை கழித்தவளுக்கு இப்போது அத்தனையும் கானல் நீராகி போனதை அத்தனை எளிதாக
நம்பமுடியவில்லை.
தனக்கான ஆண்மகன் தன் தந்தையின் இடத்தை நிரப்ப வந்தவன் இன்று
தனக்கில்லை என்ற நிஜம் உயிர் வரை சென்று துளைக்க, 'அப்பாஆஆஅ..' என்று இதழ்கள் நடுங்க சத்தமின்றி கதறியவளுக்கு
இப்போது உதய்யை முழுதாக தாரைவார்த்து தங்கைக்கே கொடுக்கும் கொடுமையை சொல்லி
வாய்விட்டு அழக்கூட முடியாத நிலை.
"ம்மா ப்ளீஸ் இது வேண்டாம்.. என்னால
அத்தானை எப்படி கல்யாணம் செய்ய முடியும்..? இது வேண்டாம்மா”
என்ற தென்றலின் மன்றாடலை ஏற்க சீதா தயாராக இல்லை.
“அக்கா ப்ளீஸ் நீயாவது அம்மாகிட்ட சொல்லு ப்ளீஸ்க்கா”
என்று விம்மியவள் மனம் ஊரில் இருந்த அத்தனை தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்த
அதேநேரம், “இப்போ இந்த கல்யாணம் நடக்கலை என்னை நீங்க உயிரோட
பார்க்கிற கடைசி நிமிஷம் இதுவாதான் இருக்கும்..” என்ற சீதாவின் தீர்க்கமான குரலில்
தூக்கிவாரி போட சீதாவை பார்த்த இளந்தளிர் நெஞ்சம் நொறுங்க கிட்டத்தட்ட உறை
நிலைக்கு சென்றிருந்தாள்.
அனைத்திற்கும் காரணகர்த்தாவான தன்னை, தான்
கொண்ட கள்ளமில்லா நட்பை நிந்தித்து கொண்டவள், அதை
கலங்கபடுத்தியவனின் காலம் கடந்த சூழ்ச்சி இன்று இருவரின் வாழ்வை பலி கேட்பதை கண்டு
ஊமையாய் கதறி கொண்டிருந்தாள்.
"அக்கா, க்கா.."
என்ற தங்கையின் அழைப்பு கூட அவள் காதில் விழவில்லை, இதழ்களை
கடித்தவாறு மௌனக்கண்ணீர் பெருக்கெடுத்த விழிகள் விட்டத்தை வெறிக்க நின்றிருந்தவள்
உயிர் ஒருகணம் துடித்து அடங்கியது.
மனதில் படர்ந்த வெறுமையுடன் கண்ணீரை துடைக்கவும் மறந்தவளாக
"வா தென்றல்" என்று உயிர்பற்ற குரலில் தென்றலை அழைத்து சென்று தன்
போக்கில் அவள் கட்டியிருந்த தாவணியை கழற்ற தொடங்கினாள்.
“அக்கா ப்ளீஸ்க்கா வேண்டாம்” என்று தென்றல்
அழுகையினூடே அவள் கையை பிடிக்க அதை உதறி அவளுக்கு புடவை மாற்றி தங்கையின் கண்ணீரை
துடைத்தவளின் இதழ்கள் தன் போக்கில், "உதய் ரொம்ப
நல்லவர் தென்றல்.. அவரை மாதிரி ஒருத்தரை நீ எங்கயும் பார்க்க முடியாது"
என்றாள்.
"க்கா என்னக்கா பேசுற..?" என்று தென்றல் பதறிக்கொண்டு தளிரை பார்க்கவும் அதையெல்லாம் கணக்கில்
கொள்ளாது, "நீ எதுவும் யோசிக்காத அவருக்கு உன்னை
பிடிக்கும் தென்றல் கண்டிப்பா நல்லா பார்த்துப்பார்.., அவர்
கிடைச்சது உன்னோட அதிர்ஷ்டம்" என்று சொல்லிக்கொண்டிருக்க அவள் மனமோ 'அவரை மிஸ் பண்ணிட்டது என்னோட துரதிர்ஷ்டம்' என்று
ஊமையாய் கதறியது.
குரலை செருமி தன்னை நிதானித்தவள், "என் தங்கச்சிக்கு அவரைவிட நல்ல லைஃப் பார்ட்னர் கிடைச்சுட
மாட்டாங்க.." என்று தென்றலின் நெற்றியில் முத்தமிட்டவள் அவள் முகத்தில்
ஒப்பனை செய்ய அவள் விழியில் வந்து விழுந்தது மருதாணியில் எழுதியிருந்த
உதயாதித்தனின் பெயர்..!
தளிரின் விழிகள் அவன் பெயரில் நிலைகொள்ள அதை தொடர்ந்து அவன்
தனக்கு வளையலிட்டது, முத்தமிட்டது என்று ஒவ்வொரு நொடிகளும் மனதை
அழுத்த பொங்கிய அழுகையை மென்று விழுங்கியவள் தன் கையில் இருந்த வளையலை ஒவ்வொன்றாக
கழற்றி தங்கை கையில் அணிவிக்க தொடங்கினாள்.
"அக்கா என்னக்கா செய்யற..? இதெல்லாம் வேண்டாம்.." என்று நெஞ்சம் பதற தளிரை பார்த்தவளின்
விழிகளில் திரையிட்ட நீர் அவள் பிம்பத்தை மறைத்தாலும் தளிரின் வேதனையை
உணர்ந்தவளின் மனம் வெகுவாக கசங்கிபோனது. பின்னே மருதாணியில் அவள் உதய்யின் பெயரை
எழுதியதில் தொடங்கி அவன் அதை கண்டுபிடிக்க முற்பட்டது பின் உதய் தளிருக்கு
வளையலிட்டது வரை நிவி புகைப்படமாக தென்றலுக்கு அனுப்பி கொண்டு தானே இருந்தாள்.
அதையெல்லாம் கண்ட தென்றலும் தளிரின் முகத்தில் இருந்த
மகிழ்ச்சியையும் இருவரின் ஜோடி பொருத்தத்தையும் கண்டு எத்தனை பூரித்து
போயிருந்தாள்.
"அம்மாவை நான் கடைசிவரை கூட இருந்து
பத்திரமா பார்த்துப்பேன் தென்றல், எங்களை பற்றின கவலை உனக்கு
எப்பவும் வேண்டாம்.. நீ என்னை மாதிரி இல்லாம அவரோட நிறைய டைம்
ஸ்பென்ட் பண்ணு" என்றவளுக்கு என்ன முயன்றும் உதய்யின் அணைப்பு அதில் கனன்ற
தாபம் அதை தொடர்ந்த அவன் பாடல், பேச்சுக்கள் என்று
அத்தனையும் சித்ரவதை செய்ய அவள் கைகள் மேலும் தொடர முடியாமல் நடுக்கம் கொண்டது.
அவன் நினைவில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக கண்களை
அழுத்தமாக மூடி கொண்ட தளிரை பார்த்திருந்த தென்றலோ தமக்கையின் பேச்சில் கொண்ட
அதிர்வோடு அவள் நிலையை கண்டு கண்ணீர் வடிய அமர்ந்திருந்தவள், "அக்கா நீயும் அத்தானும் தான் பெர்ஃபெக்ட் மேட்ச்.. ப்ளீஸ் இப்படி பேசாத,
எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்று அவள் வயிற்றை
கட்டிக்கொண்டு கதறிட, கசந்த புன்னகையோடு தங்கையை பார்த்த
தளிர் அடுத்த சில நிமிடங்களில் உதய்யின் நினைவுகளை தனக்குள் எரித்து
சாம்பலாக்கியவள் இனி அவன் தன் தங்கையின் கணவன் என்பதை மனதில் பதிய வைத்துகொண்டு
தென்றலின் முகத்தை நிமிர்த்தினாள்.
"இல்ல தென்றல் நம்ம கையில எதுவும் இல்ல..
யாருக்கு யாருன்னு ஆண்டவன் முடிச்சு போட்டிருக்கானோ அவங்க சேருவது தான் சரி!
அவருக்கு இந்த மாதிரி அழுதா பிடிக்காது.. அவருக்கு முன்கோபம் கிடையாது ஆனா அவர்
கோபபட்டா நீ கூட பேசாம கொஞ்சம் பொறுமையா இரு.." என்றவள் வெதும்பும் மனதை
இறுக்கிபிடித்து தன் நகைகளை ஒவ்வொன்றாக கழற்றி தங்கையின் கழுத்துக்கு இடம் மாற்றி
இறுதியாக தென்றலுக்கு பூ வைத்து வெளியில் அழைத்து வந்தாள்.
இருமகள்களையும் பார்த்த சீதா இளந்தளிரின் கழுத்தில் இருந்த
மாலையை கழற்றி இளந்தென்றலின் கழுத்தில் போட்டு “கூட்டிட்டு போ” என்று சொல்ல
இருமகள்களும் விழிகளில் உயிர்ப்பற்று ஜீவனை தொலைத்து நடைபிணமாக தான் மணமேடைக்கு
சென்றனர்.
மகள்கள் செல்லவுமே கதவை அடைத்துவிட்டு அங்கேயே மடங்கி
அமர்ந்தவரின் மனசாட்சியே அவரை கொன்று கூறுபோட நொடிக்கு நொடி மனதின் பாரம்
அதிகரித்ததில் எத்தனை முயன்றும் எழுந்த கேவலை ‘அம்மாஆஆ’ என்று வாய்விட்டு
சத்தமின்றி கதறியவர் கண்கள் உடைபெடுத்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது.
‘ஏங்க ஏன் எங்களை தனியா விட்டுட்டு போனீங்க
எங்களையும் அன்னைக்கே கூட்டிட்டு போயிருக்கலாமே..? இரண்டு
பொண்ணுங்க பிறந்தப்போ எவ்ளோ சந்தோஷபட்டீங்க நாம இரண்டு பேரும் சேர்ந்து எத்தனை
கனவு கண்டிருப்போம் ஆனா இப்போ நம்ம பொண்ணுங்களை நானே கொன்னுட்டேங்க... என்னால
முடியாதுன்னு சொல்ல முடியாத நிலமையில நான் இருக்கேன்! அன்னைக்கு நீங்க கூட
இருந்திருந்தா இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்காதே.., ஆனா
ஏன் ஆண்டவன் நம்மளை இப்படி சோதிக்கிறான்”
“என்னால தான் என் பொண்ணுங்களுக்கு இந்த நிலைமை
என்னை விட மோசமான அம்மா யாருமே இருக்க முடியாது.. வேண்டாம் இதுக்கு மேல என்
பொண்ணுங்க படக்கூடிய கஷ்டத்தை என்னால பார்க்க முடியாது தயவுசெய்து என்னை
கூட்டிட்டு போயிடுங்க...” என்று முகத்தில் அறைந்து கொண்டு சத்தமின்றி கதறியவர்,
‘ஏன் அண்ணி ஏன் என்னை தடுத்தீங்க..? இப்போ பாருங்க தப்பே செய்யாத என் மகளுக்கு அன்னைக்கு எதெல்லாம்
நடக்ககூடாதுன்னு நினைச்சு நீங்க என்னை தடுத்தீங்களோ அதெல்லாம் இப்போ நடக்குது
அண்ணி... அன்னைக்கு ஏதேதோ பேசுனீங்களே இப்போ வந்து பேசுங்க.. உங்களுக்கே தெரியும்
தளிர் என் வயித்துல வந்து பிறந்ததை தவிர வேற எந்த பாவமும் செய்யலை அண்ணி
ஆனா ஏன் அவளுக்கு இந்த நிலைமை..?’ என்று மனதோடு
மீனாட்சியிடம் கேள்வி கேட்டவரின் மனம் வெகுவாக ரணம் கொண்டிருந்தது.
‘நான் பொண்ணா பிறந்து இரண்டு பொண்ணுங்களை
பெத்தது தான் நான் செய்த பாவமா...? ஏன் எங்களுக்கு இந்த
நிலைமை..? தப்பே செய்யாத என் இரண்டு பெண்களுக்கும் இப்படி
ஒரு தண்டனையை என் கையாலேயே கொடுக்க வச்சிட்டியே..?”
“போதும் இனியும் நான் ஏன் உயிரோட இருக்கணும்..? நான்
பாவி! மன்னிக்க முடியாத பாவத்தை செய்து என் பொண்ணுங்களை நானே கொன்னுட்டேனே..?’
என்று இளந்தளிரின் கழுத்தில் இருந்த மாலையை இளந்தென்றலின்
கழுத்திற்கு இடமாற்றிய தன் இரு கரங்களையும் சுவற்றில் ஓங்கி அறைந்தவர் மீண்டும்
எழுந்த கேவலை இருகைகளாலும் பொத்தி இலக்கற்ற பார்வையோடு சத்தமின்றி கண்ணீர் வடிக்க
தொடங்கினார்.
“ஹலோ சிவா என்னடா ஆச்சு..? ஏன் உதய் கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டு கிளம்பிட்டான்” என்றார் மகன்
அளித்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அம்பலவாணன்.
“உதய் மேரேஜ் ஸ்டாப் பண்ணிட்டானா..?”
“ஆமா சிவா, ஆனா என்ன காரணம்னு சொல்லாம உன்னை
பார்க்க கிளம்பிட்டான்.. ஏற்கனவே உதய் அடிச்ச வீடியோ வைரல் ஆகிட்டதால நீ சொன்ன
மாதிரி சி.எம் வரவேண்டாம் கல்யாணம் முடிஞ்சு நானே ஆசிர்வாதம் வாங்க கூட்டிட்டு
வரேன்னு சொல்லிட்டேன்.. ஆனா இப்போ கல்யாணமே நடக்காதுன்னா வந்திருக்கவங்களுக்கு நான்
என்ன பதில் சொல்ல..? ஏன் உதய் இப்படி ஒரு முடிவு எடுத்தான்..?”
“அம்பலா உதய் எடுத்தது ரொம்ப சரியான முடிவு!
இல்லன்னா நானே வந்து கல்யாணத்தை நிறுத்த வேண்டியதா இருந்திருக்கும்”
“என்னடா சொல்ற..?” என்றவருக்கு
அடுத்தடுத்து கொண்ட அதிர்ச்சியில் வியர்வை பெருகியது. மெல்ல மணமகன் அறையின்
வாயிலுக்கு சென்றவர் அங்கிருந்த ஃபேன்னை போட்டுவிட்டு ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை
நிலைபடுத்தி கொண்டு,
"என்ன பேசுற சிவா நீயே கல்யாணத்தை
நிறுத்தியிருப்பியா..?” என்று கேட்க மேடையில் இருந்தவர்களின்
பார்வை அவர் மீதே..!
“ஆமாடா அந்த பையன் தளிரை ஏமாற்றி தாலி மட்டும்
கட்டலை கல்யாணத்தை ரெஜிஸ்டரும் பண்ணியிருக்கான்... இனியும் தளிர் உதய் கல்யாணத்தை
நடத்துறது சட்டப்படி குற்றம்”
“டேய் என்னடா சொல்ற..? தளிருக்கு
பிடிக்காம தாலி கட்டினவனை தளிர் எப்படி ரெஜிஸ்ட்ரேஷன் மேரேஜ் பண்ண முடியும்..?”
என்றவர் அறையின் வாயிலுக்கு வர அவர் பார்வை அரங்கை
ஆக்கிரமித்திருந்த உறவினர்கள், நட்பு வட்டம், தொழிலதிபர்கள், பள்ளி, கல்லூரி
உரிமையாளர்கள், அரசியல் வட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களிடம்
பணிபுரியும் ஆசிரியர்கள் தொழிலாளர்கள் மீது படிந்திட இப்போது கைபேசியை
பிடித்திருந்த அம்பலவாணனின் கையில் மெல்லிய நடுக்கம்.
“அதை தளிர் கிட்ட தான் கேட்கணும்.., எனக்கு தெரிஞ்சு ஒன்னு தளிருக்கு தெரியாம செய்திருக்கணும், இல்ல தளிரை மிரட்டி செய்ய வச்சிருக்கணும்... எப்படி இருந்தாலும் இப்போ
தளிர் சட்டப்படி அவனோட மனைவி அதுதான் உதய்கிட்ட சொல்லவும் புரிஞ்சுகிட்டு அவனே
நிறுத்திட்டான்” என்று சிவனேஷ் சொல்லவும் ஏற்கனவே கூடியிருந்த அம்பலவாணனின் ரத்த
அழுத்தம் இப்போது ஏகத்திற்கும் எகிறி போக லேசான தள்ளாட்டத்தோடு நாற்காலியில்
அமர்ந்தார்.
கணவனிடம் பேசிக்கொண்டிருந்த சுஜி தந்தையின் தடுமாற்றத்தை
கண்டு ஓடி வந்தவள் “அப்பா என்னப்பா ஆச்சு” என்று அவர் முகத்தில் இருந்த வியர்வையை
துடைக்க அம்பலவாணன் அருகே வந்த ஜெகதீஸ்வரி,
“என்னங்க ஆச்சு ஏன் உட்காந்துடீங்க.. என்ன
பண்ணுது உங்களுக்கு..? என்று பதட்டத்தோடு கேட்டவருக்கு
அப்போது தான் நினைவு வர,
“நிவி அப்பா இன்னும் டேப்லெட் போடலை போய் எடுத்துட்டு
வா" என்றதும் உடனே அறைக்கு சென்று அவருக்கு தேவையான மாத்திரையை கொண்டு வந்து
கொடுத்தாள்.
“மாமா.. என்று தளிரும் தென்றலும் அவரை நெருங்க,
“அப்பா இன்னும் எதுவுமே சாப்பிடலைம்மா வெறும் வயித்துல எப்படி
மாத்திரை போட.., இருங்கப்பா நான் குடிக்க ஏதாவது கொண்டு
வரேன்" என்ற சுஜியிடம்,
“நீங்க இருங்க அண்ணி நான் எடுத்துட்டு
வரேன்" என்று தென்றல் கீழே செல்லவும் மருமகனை அருகே அழைத்த அம்பலவாணன்,
“மாப்பிள்ளை இந்த கல்யாணம் நடக்காது தயவுசெய்து காரணம் கேட்காம
எல்லாரையும் அனுப்பி வைச்சுடுங்க” என்றார்.
“என்ன மாமா சொல்றீங்க..?"
“ஆமா மாப்பிள்ளை, எப்படியாவது
எல்லாரையும் அனுப்பிடுங்க" என்று வேண்டுகோள் வைக்க கீழே சென்ற சரவணன்,
“தவிர்க்க முடியாத காரணத்தால கல்யாணத்தை
நிறுத்துறோம், உங்களை சிரமபடுத்தினதுல எங்களுக்கும்
வருத்தம்" என்றவர் காரணம் கேட்டு அம்பலவாணனை சந்திக்க முற்பட்டவர்களை தடுத்து
ஒருவழியாக அனைவரையும் அனுப்பிவிட்டு இருபது நிமிடத்திற்கு பின் மணமேடைக்கு செல்ல
இப்போது சீதா மற்றும் அம்பலவாணனின் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.
அனைவரும் அம்பலவாணனை சூழ்ந்திருக்க ராஜியோ தன் கைபேசிக்கு
வந்திருந்த வாட்ஸ்ஸப் மெசேஜை திறந்து பார்க்கவும் தான் இங்கு நடக்கும் கலவரங்கள்
செய்தியாகி போயிருப்பதே அவருக்கு தெரிந்தது.
உடனே தங்கையை அழைத்து காட்டியவருக்கு ஏற்கனவே தளிர் மீது
இருந்த கோபம் இப்போது பலமடங்காகி போனது.
ஆனால் தன் பேச்சு அங்கு எடுபடாது என்பதால் அண்ணாமலையிடம்
சென்று வீடியோக்களை காட்டியவர், “நம்ம ஆதிக்கு என்ன குறைன்னு கேட்டு ஊரே
என்னென்னமோ பேசுது, தகுதியை கூட பார்க்காம குணத்துக்காக தான் இந்த பெண்ணை
சம்மதிச்சீங்க ஆனா இந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு இனியும் சரிப்படுமான்னு
நீங்களே முடிவு பண்ணுங்க மாமா..”
“எனக்கு ஆதி வாழ்க்கை நல்லபடியா அமையனும் இதுக்கு மேலயும்
இந்த பெண்ணை கட்டினா காலம் முழுக்க நம்ம குடும்பத்துக்கு அவப்பெயர் தான்..
சொந்தகாரங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என்று சொல்ல காணொளியை கண்டு கண்ணீரோடு
அமர்ந்திருந்த அன்னபூரணி,
“என் பேரன் என்ன தப்பு பண்ணினான் ராஜி?”
என்றார் ஆற்றாமையோடு.
“அதே தான் அத்தை என்னோட ஆதங்கமும் ஆனா ஆதி
எதையும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான் நீங்களாவது எடுத்து சொல்லுங்க” என்று கண்ணீர்
கசிய சொன்னவர்,
“ஜெகா வீட்டுகாரரும் அந்த பொண்ணு பக்கம்
பார்க்கிறாரே தவிர உங்களை பற்றியோ ஆதியோட வாழ்க்கையை பற்றியோ நம்ம சம்பந்திங்க
நம்ம குடும்ப கௌரவத்தை பற்றி பார்க்கலை எந்த ஜென்மத்துல யார் செய்த பாவமோ இவங்களால
நாம அசிங்கப்பட்டு இருக்கோம்” என்றவரின் பேச்சில் அண்ணாமலைக்கு உதய் காக்க சொன்ன
பொறுமை எல்லாம் எல்லை கடந்து போயிருந்தது.
Comments
Post a Comment