சீதாவின் பேச்சில், "ம்மா அதுக்காக நீங்க எத்தனை முறைதான்
வேலூருக்கும் விழுப்புரத்துக்கும் அலைவீங்க.. இருக்கிற வேலைகளுக்கு நடுவுல இது
எவ்ளோ அலைச்சல்மா உங்களுக்கு!!"
"சரியான நேரத்துக்கு சாப்பிடறதுகூட கிடையாது கல்யாண
வேலையில தூக்கமும் இல்லாம போயிடுச்சு ஏற்கனவே மூணு முறை லோ சுகர்ல மயங்கி
விழுந்துடீங்க இப்படியே போனா உங்க ஹெல்த் என்னாகும்..?"
என்று அவர்களுக்காகவே நிமிட நேரத்தைகூட வீணாக்காமல் உழைக்கும் தாயை
கவலையோடு பார்க்க..,
"இருக்கட்டும்டா எனக்கு என் பொண்ணு
கல்யாணம் நல்லபடியா நடந்து முடியனும்.. அதைத்தவிர வேற எதுவும் பெருசா தெரியலை..,
ஒன்னு புரிஞ்சுக்க அம்மூ எப்பவும்
மனுஷங்களோட அடிப்படை குணத்தை நாம மாத்த முடியாது.. உங்க பெரிப்பா இப்போன்னு
கிடையாது எப்பவுமே இப்படிதான்!! அவரை மாற்ற முடியாது கல்யாணத்துக்கு
வரேன்னு ஒத்துகிட்டதே பெருசு ... யாரா இருந்தாலும் பிடிக்குதோ பிடிக்கலையோ ஒன்னு
அப்படியே ஏத்துக்கணும் இல்ல விலகிடனும் இதை தாண்டி வேற யோசிக்கிற நிலையில நாம
இல்லை.." என்று அவர் முடிக்கும் முன்னமே..,
"அதான்ம்மா நானும் சொல்றேன் உங்களை
கஷ்டபடுத்துற அவங்க நமக்கு வேண்டாம் எதுக்காக ஏத்துக்கனும் நாம விலகிடலாம்.."
என்றதில் சீதாவின் இதழ்களில் கசந்த முறுவல் படர்ந்தது.
"என்னமா சிரிக்கிறீங்க...?"
"உங்கப்பா இருந்திருந்தா அது வேற ஆனா
இப்போ அப்படியில்ல அவரோட சேர்த்து நாம பலவிஷயம் இழந்துட்டோம்., இதுதான் நிதர்சனம் நாம ஏத்துகிட்டு தான் ஆகணும் அவரும் உங்க பெரிம்மாவும்
வந்து கால் கழுவி ஆசிர்வாதம் பண்ணி என் மகளை தாரை வார்த்து கொடுக்கணும்"
"ஏன் அதை நீங்க செய்ய முடியாதா.. எங்க
அம்மா நீங்கதானே..?? அப்புறம் எதுக்கு அவங்க செய்யணும்"
என்ற இளைய மகளின் அறியாமையில் வெதும்பியவர் நெஞ்சை வேதனை கவ்விபிடிக்க கண்களில்
திரண்டுவிட்ட நீரோடு மெல்ல குரலை செருமியவர்,
"இல்லடா என்னதான்
பெத்தவளாவே இருந்தாலும் நாளைக்கு உங்கக்காவோட கல்யாணமேடையில நான் ஒரு ஓரமாதான்
நிற்கணும்" என்றதில் பதறிய தளிர்..,
"ம்மா என்னம்மா பேசுறீங்க..?"
என்று விசும்பலோடு சீதாவை கட்டிக்கொள்ளவும்..,
"அதுதான் நிஜம் தளிர் !! இன்னும் மனுஷங்க
தாயை தாயா மட்டுமே பார்க்கும் அளவு பக்குவ படலை தன் பெண்ணோட கல்யாணத்துலயே தாய்
சுமங்கலியா அமங்கலியான்னு தான் பார்க்குது.., அப்படியே
எல்லாரையும் மீறி என் பொண்ணு நான் நிற்பேன்னு முன்னாடி வர என்னாலேயே
முடியாது.."
"ம்மா என்னம்மா பேசுறீங்க.. ஏன் ஏன் நீங்க
நிற்க முடியாது.." என்ற தென்றலிடமும் இப்போது குறையாத கண்ணீர்..
"ம்மா என்னமா பேசுறீங்க? ஒரு குழந்தைக்கான நல்லதை அம்மா அப்பாவைவிட வேற யாரும் பெருசா நினைச்சிட
முடியாதும்மா, நீங்கதான் எங்களுக்கு எல்லாமே உங்க வாழ்த்து தான் எங்களுக்கு
முக்கியம் ப்ளீஸ் ஏன் இப்படி பேசுறீங்க.." என்ற தளிருக்கோ திருமணபேச்சு
ஆரம்பத்ததில் இருந்து இத்தனை நாட்கள் இதுபோன்ற பேச்சுக்கள் இல்லாத நிலையில்
அன்னையின் வேதனை அவளை உருக்குலைக்க தான் செய்திருந்தது..
"இல்லடா உன் கல்யாணம்
எந்த தடையும் இல்லாம நல்லபடியா நடக்கணும் நீ சீரும் சிறப்புமா வாழனும்.. ஒரு சொல்
வெல்லும் ஒரு சொல் கொல்லும்னு சொல்லுவாங்க நாளைக்கு என் பெண்ணுக்காக நான் முன்னாடி
நின்னு யாராவது ஏதாவது சொல்லிட்டா..”
“அதனால உன்.. உன்னோட ப்ச் இல்லடாம்மா உனக்கு ஏதாவதுன்னா எனக்கு நிச்சயம்
தாங்காது.. நான் எங்க இருந்தாலும் என் மனசு உனக்காக துடிக்கும்னு உனக்கு
தெரியாதா.." என்று மகளை அணைத்துகொண்டு அவள் உச்சியில் முத்தமிட்டவரின்
கண்ணீர் தளிரின் நெற்றியை தாண்டி வழிந்தது.
திருமணபேச்சு ஆரம்பித்ததில் இருந்தே தளிரின் ஜாதகத்தை
கொடுக்ககூட சீதா முன்வராததில் பிள்ளைகளுக்கு அத்தனை வருத்தம்.. பின்னே எத்தனை
வற்புறுத்தியும் சீதா மறுத்ததில் தளிரே பள்ளிக்கு செல்லும் போது தன் திருமணத்திற்கு ஜோசியரிடம்
பொருத்தம் பார்க்க வரங்களின் ஜாதகத்தை கொண்டு செல்வாள்.
"ம்மா நீங்க போயிட்டு வாங்க.. நானே
எப்படி..?" என்றாலும் இதுல என்னடா இருக்கு உன்னோட
ஸ்கூல் போற வழியில தானே அங்க போயிட்டு நான் கம்பனிக்கு போக எனக்கு நேரமாகிடும்
நீயே பார்த்துட்டு வந்துடு என்று விலகிவிடுவார்.
"எனக்கு தெரியும்மா ஆனா ப்ளீஸ் நீங்க இந்த
மாதிரி பேசாதீங்க.. எங்களுக்கு நீங்கதான் எல்லாமே யார் என்ன சொல்லிடுவான்னு நீங்க
விலகி போறீங்க நான் உங்க பெண் தானே..?"
"அதுதான் அம்மூ நானும் சொல்றேன் யார்
முன்ன நின்னாலும் என் பெண் வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சா போதும் உங்கப்பாவோட ஆசையும்
அதுதான்... புரிஞ்சுக்கோ"
"அதுக்காக அந்த பாய்சன் பெரியப்பாவை
ஏத்துக்கணுமா..?"
"சிட்டு.." என்று தளிர் அதட்ட..,
"போதும் போதும் நீ திரும்ப கிளாஸ் எடுக்க
ஆரம்பிச்சுடாத... நான் எதுவும் சொல்லலை" என்றவள் அன்னையின் தோள் சாய்ந்து,
"நீங்க இருங்கம்மா" என்றிட..,
"இல்ல தங்கம் ஆண்டவன் நமக்கு வேற வாய்ப்பு
கொடுக்கலடாமா.. நிச்சயத்துலயே உங்க அண்ணன் வந்து நின்ன போது தட்டு மாத்த பெரியவங்க
யாருமில்லயான்னு சில பேச்சு காதுல விழுந்தது... அப்படி எதுவும் கல்யாணத்துல இருக்க
கூடாதுன்னா நாம அவரை ஏத்துகிட்டு அனுசரிச்சுதான் ஆகணும்" என்றவரின்
கண்களிலும் கணவரின் நினைவில் நீர் திரண்டுவிட்டது.
ரகுபதியின் வீட்டில் இவர்களை ஏற்காமல் போனாலும் ரகுபதியின்
தமக்கை மீனாக்ஷியின் குடும்பம் மட்டுமின்றி சீதாவின் பெற்றோரும் அவர்களை
அரவணைத்திருந்தனர்.. சீதா அவர் பெற்றோருக்கு ஒரே பெண் அவர் தந்தைக்கு
சொல்லுகொள்ளும் படி நிலையான வேலையில்லை வாடகை
வீடுதான் என்றாலும் காதல் திருமணம் புரிந்த பெண்ணை அவர்கள் விட்டுவிடவில்லை..
ஆனால் கேன்சரால் பாதிக்கப்பட்ட சீதாவின் தந்தை தளிர் பிறந்த சில மாதங்களிலேயே
காலமாகிவிட அவர் தாயும் அதற்குபின் பல வருடங்கள் இருந்திருக்கவில்லை.
பெற்றோர் இல்லாத குறையே சீதாவிற்கு தெரியாத வகையில் அவரை
ரகுபதி தாங்கினார் வேலையில் எத்தனை பிரச்சனை என்றாலும் அதை வீட்டிற்கு தூக்கி வராத
மனிதருக்கு மனைவி மகள்களை கண்டாலே கொண்ட அலுப்பெல்லாம் தூரம் சென்றுவிடும்..
கல்லூரி படிப்பின் இறுதியில் இருந்த மனைவியை திருமணத்திற்கு பின் ரகுபதி படிப்பை
நிறைவு செய்ய வைத்திருந்தாலும் குடும்பதலைவியாக ஒருவர் சம்பளத்திலேயே குடும்பத்தை
சிறப்பாக நிர்வகித்தார் சீதாலக்ஷ்மி.. கணவன் மனைவிக்கிடையில் அத்தனை புரிதல்.
ஆனால் அவர்கள் மகிழ்ச்சியை அதிக நாட்கள் நீட்டிக்கவிடாமல் இடியென
விழுந்தது விபத்தில் சிக்கி உயிரிழந்த ரகுபதியின் மறைவு குறித்த செய்தி.
ஆம் இளந்தளிரின் பதினான்காம் வயதில் சென்னைக்கு வந்திருந்த
ரகுபதியின் அக்கா கணவரையும் அவர்களின் இரு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு வெளியில்
சென்றவர் எதிர்பாரா விபத்தில் சிக்க அவரோடு சேர்த்து அக்கா கணவரும் பிள்ளையும்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண் குழந்தை மட்டும் மருத்துவமனை கொண்டு
செல்லப்பட்டு நான்கு மாதங்கள் கோமாவில் இருந்து பின் இறந்து போனது.
சீதாலக்ஷ்மியும் மீனாட்சியும் இத்தகைய பேரிழப்பை
எதிர்பார்க்கவில்லை.. சீதாலக்ஷ்மிக்கு கணவர் மட்டுமென்றால் மீனாக்ஷிக்கோ
குடும்பமே..!! யாரை யார் தேற்றுவது என்று புரியாத நிலை.
தளிர் புரிந்து கொண்டாள் !! தந்தையின் இழப்பை ஏற்று தாய்க்கு
துணை நிற்க கற்றுகொண்டாள். ஆனால் தென்றலை சமாளிப்பது சீதாவிற்கு பெரும்பாடாகி
போகும்... ரகுபதிக்கு இரு மகள்களும் இரு கண்கள் என்றாலும் இளையவளாக தென்றலின்
ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் ரகுபதியுடனே ..!! உணவு கொடுப்பது, பள்ளிக்கு அழைத்து செல்வது, கதை சொல்லி தூங்கவைப்பது
என்று முற்றிலுமாக அவர் நிழலில் இருந்த தென்றலை தந்தையின் நினைவிலிருந்து மீட்பது
சீதாவிற்கு பெரும் சவாலாகவே அமைந்து போனது.
நினைவுகளில் மூழ்கியிருந்த சீதாவின் கண்களில் இருந்து கண்ணீர்
இறங்குவதை கண்ட தளிர் "ம்மா.." என்று ஆதரவாக அணைத்துக்கொள்ள தென்றலும்
அவர் வயிற்றை கட்டிக்கொண்டு தந்தையை எண்ணி கண்ணீர் உகுத்தனர்.
மகள்களை கட்டிக்கொண்ட சீதாலட்சுமியின் காதில் "என்ன பண்ற
லக்ஷு முதல்ல கண்ணை துடை குழந்தைகளை அழவிடாத.." என்று எப்போதும் போல கணவரின்
குரல் ஒலிக்க முதலில் தன்னை மீட்டெடுத்து மெல்ல மகள்களையும் இயல்புக்கு கொண்டுவர
அவர்கள் வீட்டு காலிங் பெல் ஒலித்தது.
தென்றல் கதவை திறக்க அங்கே தளிரின் அறையில் ஏசி
பொருத்துவதற்காக ஆட்கள் வந்திருந்தனர்.
வேலூரில் அமைந்திருந்த கார் ஷோரூம் காலை நேர பரபரப்பிற்கு
பஞ்சமின்றி இயங்கி கொண்டிருந்தது..
அவர்கள் ஷோரூமின் ஐம்பதாவது வருட கொண்டாட்டம் நடைபெற்று வருவதால் பல சிறப்பு
சலுகைகளை முன்னிட்டு கடந்த இருவாரங்களாகவே மக்களின் வரத்து அதிகரித்து இருந்தது.
இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வாடிக்கையாளர்களை
வரவேற்பதும் சலுகைகள் குறித்து விவரிப்பதும், கார்களின்
சிறப்பம்சங்களை எடுத்தது சொல்வது, டெஸ்ட் ட்ரைவ் அழைத்து
செல்வது, டெலிவரிக்கான பேப்பர்களை சரி பார்ப்பது என்று நிற்க
நேரமின்றி இயங்கி கொண்டிருந்தனர்.
அன்று காலை நேரம் சில கார்கள் டெலிவரிக்கு இருப்பதால் மூத்த
பணியாளர்கள் அதில் பிஸியாக இருக்க அந்நேரம் ஷோரூமின் காம்பவுண்டினுள் நுழைந்தது
உதயாதித்தனின் கார். அம்பலவாணன் ஜெகதீஸ்வரியின் ஒரே மகன். மூன்று பிள்ளைகளில்
மூத்தவள் சுஜிதாவிற்கு பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து பிறந்தவன்.
காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு எதிர்ப்பட்ட
பணியாளர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டே உள்ளே நுழைந்தவன் அங்கிருந்த சூழலை
உள்வாங்கியவாறே வழக்கம் போல ஒரு சுற்று வந்து அனைத்தும் பக்காவா நடைபெறுவதில்
திருப்தி கொண்டவனாக ஒர்க்ஷாப் சென்று மீண்டும் பக்கவாட்டு கதவின் வழியே நுழைய
அங்கே ஒரு தம்பதியர் ஷோ ரூமின் வாயிலில் நின்றிருந்தனர்.
பணியாளர்கள் அனைவரும் பிஸியாக இருந்ததில் இவர்களை கவனிக்காமல்
போகவும் தன் அறைக்கு செல்லவிருந்தவன் தன் நடையை நிறுத்தி "வெல்கம் சார்
வெல்கம் மேடம்" என்று அவர்களை வரவேற்று இருக்கையில்
அமர்த்தியதை கண்ட பணியாளர்களிடம் எந்த மாற்றமும் இல்லை.. இது வழக்கம் என்பது போல
தம் போக்கில் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
தம்பதியருக்கு குளிர்பானம் கொடுத்தவன் கையோடு கொண்டு
வந்திருந்த கேட்லாக்கை கொடுத்து, "எந்த மாதிரி வண்டி பாக்கறீங்க பெட்ரோலா
இல்ல டீசலா..?" என்றான்.
"நாங்க இப்போதான் முதல்முறை கார் வாங்க
போறோம் எது நல்லா இருக்கும் சொல்லுங்க" என்று அவனிடமே கேட்க "உங்களுடைய
பட்ஜெட் என்ன..?" என்று கேட்டு தெரிந்துகொண்டவன் குறிப்பிட்ட
காரின் முன் அவர்களைக் கொண்டு நிறுத்தியவன்,
"இது பேசிக் மாடல் உங்க பட்ஜெட்ல வரும்,
ஆன்ரோட் ப்ரைஸ் ஆறு லட்சத்து நாற்பத்து ஐந்தாயிரமாகும்.. இதுல
உங்களுக்கு வண்டியோட விலை, த்ரீ இயர்ஸ் இன்ஷுரன்ஸ், ஒன் இயற் பம்பர் டூ பம்பர் கேஷ்லெஸ் க்ளைம் இன்க்லூட்டாகும் வித் தேர்ட்
பார்டி இன்ஷுரன்ஸ்.. பிப்டீன் இயர்ஸ் லைஃப் டேக்ஸ் ஆப்ஷன், அக்ஸசரீஸ்
அண்ட் வாரண்டி இன்க்லூட்டாகும்... ஏசி, பவர் ஸ்டேரிங்,
ஹீட்டர், பவர் விண்டோ, பார்க்கிங்
சென்சார், ஏர்பேக், மேனுவல் சென்டர்லாக்
ஆப்ஷன் இருக்கும்.." என்றவன் காரில் உள்ள வசதிகளை அவர்களுக்கு புரியும்படி விளக்க
கேட்டுக்கொண்ட தம்பதிகளின் முகத்தில் மகிழ்ச்சி.
"அங்கிருக்க காருக்கும் இதுக்கும் என்ன
தம்பி வித்யாசம்" என்று சற்று தள்ளி நிறுத்தியிருந்த காரை சுட்டி காண்பித்து கேட்டார்.
இரண்டிற்குமான ஒற்றுமையையும் வித்யாசங்களையும் விளக்கியவன்
"இதுலே நமக்கு நாலு வேரியன்ட்ஸ் இருக்கு இங்கிருக்கிறது
டிஸ்ப்ளே பீஸ் என்றவன் தன் கைபேசியை திறந்து அவைலபிள் கலர்ஸ் மொத்தம் நாலு நீங்க
எது வேணும்னு சொன்னா ஆர்டர் எடுத்துப்போம்" என்று உதயாதித்தன்
சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்த செல்வம்,
"ஸார் .. ஸாரி ஸார் ஒரு முக்கியமான ஃபோன்
கால் அட்டென்ட் பண்ண போயிட்டேன் நீங்க போங்க ஸார் நான் பார்த்துக்குறேன்"
என்றதும்,
"நோ ப்ராப்ளம் செல்வா இதெல்லாம் எனக்கு
பழக்கப்பட்டது தான்.. உங்களோட கால் முடிஞ்சதா..?"
"எஸ் ஸார் நேத்து வந்து போன பார்ட்டி
தான்! அவங்களோட சேர்ந்து இன்னும் இரண்டு பேர் வாங்கற ஐடியால இருக்காங்களாம்
எந்தளவுக்கு செய்ய முடியும்னு கேட்டுட்டு இருந்தாங்க, நீங்க
நேரில் வாங்க பேசிக்கலாம்னு சொன்னாலும் கேட்கலை அவங்க ரிலேட்டிவ் யாரோ ஒருத்தர்
கிட்ட கொடுத்து நிறைய டவுட்ஸ் கேட்டுட்டு இருந்தாங்க அவாய்ட் பண்ண முடியலை அதனால
டிலே ஆகிடுச்சு "என்று சிறு குற்ற உணர்வோடு உதயனை பார்க்க,
"இட்ஸ் ஓகே! நோ இஷ்யூஸ்.. பை தி வே
கஸ்டமர்ஸ் கிட்ட இன்டெராக்ட் பண்றது நான் விரும்பி செய்யக்கூடியது.. ஸோ எதுவும்
யோசிக்காம அடுத்த கஸ்டமரை பாருங்க" என்ற உதயனின்
வார்த்தைகள் அத்தனையும் நிஜம்.
உதயாதித்தனின் தாத்தா தொடங்கிய ஷோ ரூம் இது! அவன் தந்தையின்
பொறுப்பில் வந்த பிறகு சிறுவயது தொட்டே இங்கு வளர்ந்தவனுக்கு கார்கள் என்றால்
கொள்ளை பிரியம்.. உதயனும் அவன் உயிர்த்தோழனான ராகவனும் பள்ளி காலத்தில் மட்டுமல்ல இன்ஜினியரிங்
சேர்ந்த பின்னரும் மாலை வேளைகளில் இங்கே வந்துவிடுவர்.
வொர்க் ஷாப்பில் கார்களின் ஸ்பேர் பார்ட்ஸ் குறித்து
கற்றுக்கொள்வதில் தொடங்கிய ஆர்வமும் ஈடுபாடும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே
சென்றது
கார் ஷோ ரூம் மட்டுமல்லாது பல தொழில்களில் கால் பதித்திருக்கும்
அம்பலவாணனுக்கு மகன் ஷோ ரூமில் காட்டிய ஆர்வத்திலும் படிக்கையிலேயே பார்ட் டைமாக
நண்பனுடன் வேலை செய்தவன் பேச்சு திறமையில் கார்களில் விற்பனையை அதிகரிக்க
செய்ததிலும் ஆசுவாச மூச்சு. பின்னே அவருக்கும் வயதாகிறதே அத்தனையும் ஒற்றை ஆளாக
கட்டிக்காப்பாற்றுவது எளிதல்லவே மகன் கல்லூரி முடித்து பாரம் குறைத்து விட்டான்.
புதுக்கார்கள் மட்டுமல்லாது Preowned கார்களை கைமாற்றி
கொடுப்பது என்று படிக்கும் வயதிலேயே சம்பாதிக்க தொடங்கிவிட்டான். கல்லூரி முடித்த
பின்னர் அதுவரை கார்களை கைமாற்றியவன் அதன்பின் தானே கார்களை வாங்கி விற்கவும்
செய்தவன் சிறிய அளவில் செக்கென்டஸ் கார்களுக்கான ஷோ ரூமையும் திறந்துவிட்டான்.
இத்தனை வருட அனுபவத்தில் நண்பனுடன் சேர்ந்து தொழிலை
விரிவாக்கியவன் வங்கியில் லோன் போட்டு ராணிப்பேட்டையில் மற்றொரு கிளை
தொடங்குவதற்கான பணிகளில் பாதியை நிறைவு செய்துவிட்டான்.
ஆம் ஷோ ரூம் கட்டிடம் முதல் தளம் முடிந்து அடுத்த தளத்தின்
கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன . சிறுவயது தோழர்கள் என்பதால்
இருவருக்கும் இடையில் அத்தனை புரிதல் அதுவே ராகவனை தன் தங்கைக்கு துணையாய்
தேர்ந்தெடுக்க வைத்தது.
சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்த நிவியின் மீது
ராகவனுக்கு பிடித்தம் உண்டு.. ராகவனுக்கு மட்டுமல்ல நிவிக்குமே பிடித்தம் இருந்தது
ஆனால் இருவரும் வேறு ஜாதியினர் என்பதால் வெளிக்காட்டாமல்
மனதினுள் வைத்து கொண்டவள் ராகவனிடமே அதை சொன்னதில்லை.. ஆனால் ராகவன்
நிவேதாவின் மனதை கண்டுகொண்டான்! அதனாலேயே நிவேதாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் செய்தி
கேட்ட பின்னர் தைரியமாக தன் மனதை மறையாமல்
நண்பனிடம் வெளிப்படுத்தி விட்டான்.
நட்பிற்கு இடையில் வராத ஜாதி திருமணம் என்றபோது இடைப்புக தந்தையோடு
சேர்ந்து அதை அழகாக கையாண்டு ராகவனுக்கு தங்கையை மணமுடித்திருந்தான் உதயாதித்தன்.
அம்பலவாணனும்
உதயதித்தனும் தந்தை மகன் என்பதை விட சிறந்த நண்பர்கள் என்று சொல்லலாம் அதுவே தளிர்
மீதான அவன் பிடித்தத்தை தயக்கமின்றி அவரிடம் தெரிவிக்க செய்திருந்தது.
Comments
Post a Comment