வாழ்க்கைத்துணை - 20.3
“அம்மாடி
லட்சுமி..” என்ற சிவபாலனின் குரலில் ஹாலுக்கு வந்தவள், “காஃபி
எடுத்துட்டு வரட்டுமா மாமா?..” என்றாள்.
“இருக்கட்டும் மா
கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடறேன்.. உன் அத்தை வாழைக்காயை வறுவல் பண்ணிட சொன்னா
இன்னைக்கு விட்டா வீணா போயிடுமாம்..”
“சரி மாமா. அத்தை
எந்திரிச்சுட்டாங்களா?”
“இல்லை மா. அவ
என்னைக்கு எட்டு மணிக்கு முன்னாடி எழுந்து இருக்கா? பொதுவாவே
எல்லாருக்கும் வயசு ஏற ஏற தூக்கம் குறையும்னு சொல்லுவாங்க ஆனா உன் அத்தை மட்டும்
தான் அதுக்கு விதிவிலக்கு போல..”
“குடுத்து வச்ச
மகராசி அவளால நல்லா தூங்க முடியுது. ஆனா எங்கே எனக்கு தான் டான்னு அஞ்சு மணியானாலே
முழிப்பு வந்துடுது.. அதுக்கு மேல படுக்கையில இருக்க முடியறதில்லை..” என்றவரின்
பேச்சை கேட்டுக்கொண்டே வாழைக்காயை நறுக்கினாள் மகாலட்சுமி.
நேரம் ஏழு மணியை நெருங்கிக்
கொண்டிருக்க சமையல் வேலைகளை முடித்து, “சிந்து இன்னும்
ரெண்டு நிமிஷத்துல பொரியல் ஆஃப் பண்ணிடு நான் குளிச்சிட்டு வந்துடறேன்..” என்று
அறைக்குள் நுழைய முயல,
“மாமி இன்னைக்கு
நான் ஸ்கூலுக்கு சீக்கிரம் போகணும். நானும் இப்ப குளிக்க போறேன், நீங்க ஆஃப் பண்ணிட்டு போய் குளிங்க..” என்றாள் முகத்தில் அடித்தார் போல.
ஒரு பெருமூச்சோடு
குளியலறைக்கு சென்று தண்ணீரை திறந்து விட்டு வந்தவள் பொரியலை அணைத்து விட்டு
வேகமாக குளித்து வந்தாள்.
இன்னுமே ரிஷி உறக்கத்தில்
இருக்க அவனை எழுப்புவதற்காக அருகே சென்றவள் பின் வேகமாக சமையலறைக்கு சென்று காஃபி
போட தொடங்கினாள்.
எப்போதுமே ரிஷிக்கு அவன்
கண் விழிக்கும் போது அவன் முன்னே காபி இருக்க வேண்டும். அப்படி ஒரு காஃபி ப்ரியை
அவன். தினமும் காஃபியோடு தொடங்கும் அவன் நாள் முடிவதும் காஃபியோடு தான்.
அதனால் மகா காஃபியோடு
கணவனை எழுப்புவது தான் வழக்கம். அப்படி காஃபி இல்லாமல் ரிஷியை அவள் எழுப்பி
விட்டால் ‘அன்றைய நாளை பற்றி சொல்லவும் வேண்டுமா?’
ரிஷி கோபத்தில் கை
நீட்டும் ரகம் இல்லை. என்றாலும் பொதுவாகவே அவன் விலகிப் போகும் குணம் கொண்டவன்.
மனைவியோடு சிறு சிறு
உரசல்கள் ஏற்படும் போதெல்லாம் அவளை அவன் தண்டிப்பது ஒதுக்கத்தின் மூலமாகத்தான்.
அவள் கையால் சாப்பிடுவது, தண்ணீர்
குடிப்பது மட்டுமல்ல, அவளை நேருக்கு நேராக பார்ப்பதையும்
தவிர்த்து என்று முழுதாகவே மனைவியை ஒதுக்கி
வைத்து விடுவான்.
திருமணம் ஆகி
வந்ததிலிருந்து அவனிடம் அவளுக்கு பிடிக்காத குணம் இதுதான்.
"உங்களுக்கு
எவ்வளவு கோபம் இருந்தாலும் திட்டுங்க, சண்டை போடுங்க. ஆனா
இப்படி ஒதுங்கி போகாதீங்க. அது ரொம்ப வலிக்குது ரிஷி. ஏன் இந்த மாதிரி நடத்துறீங்க?"
என்று பலமுறை கேட்டிருக்கிறாள்.
அப்படி கேட்கும்
போதெல்லாம் அவளின் எந்த கேள்விக்கும் பதில் வராது இறுதியில் அவள் தான்
அவமானப்பட்டு திரும்ப வேண்டியிருக்கும்.
முகத்தை தூக்கி வைத்துக்
கொள்பவன் அவளோடு எந்த பேச்சும் வைத்துக்கொள்ள மாட்டான். அவள் பரிமாற வந்தால்
“வேண்டாம்” என்று தடுத்து விட்டு இந்திரா அல்லது அக்கா மகளை அழைத்து பரிமாற
சொல்வான்.
“மாமி தானே மாமா
உங்களுக்கு இப்போலாம் செர்வ் பண்ணுவாங்க? என்னை கூப்பிடறீங்க?”
என்ற சிந்துவை என்றுமே அவன் அழைத்ததில்லை.
மகாவின் வரவிற்கு முன்
இந்திரா தான் அவனுக்கு பரிமாறுவது 'இந்திரா படுக்கையோடு இருப்பதால் அந்த பொறுப்பு மகாவினது'
என்று தான் நினைத்தால், இப்போது மாமன்
அழைக்கவும் மாமியை பார்த்தாள்.
முதல் முறை இப்படி ரிஷி
அவளை ஒதுக்கியதில் கட்டுபடுத்த முடியாத கண்ணீர் வழிந்தது. அதை துடைத்தபடி கணவனை
பார்த்திருந்தவள் சிந்து தன்னை கவனிக்கவும் அறைக்குள் சென்றுவிட்டாள்.
அன்றிலிருந்து ‘எதற்கு
இப்படி ஒரு சூழலுக்கு தானே வழி வகுக்க வேண்டும்’ என்று கவனமாக இருப்பவள் இன்றும்
அவனை நினைத்த உடனே எழுப்பாமல் காஃபியோடு வந்து எழுப்பினாள்.
பிறந்த வீட்டில் இருந்தே
இரண்டு அண்ணிகளோடு அனுசரித்து வாழ கற்றுக் கொண்டவளுக்கு இங்கே தன்னைப் பொருத்திக்
கொள்வதில் பெரிதாக கஷ்டம் இருக்கவில்லை.
அவள் பெரிய அண்ணி சுமதி
திருமணமாகி அந்த வீட்டிற்கு வந்த போது அவள் பள்ளிப்படிப்பின் இறுதியில் இருந்தாள்.
அண்ணன் மனைவியோடு அத்தனை
பாசமாக பழக சுமதியும் அவளுக்கு
குறையாத பாசத்தோடு தான் நாத்தனாரை நடத்தினாள்.
இத்தனைக்கும் அவள் கணவன்
திவாகர் ‘மகாலட்சுமி எனக்கு பெண் போல’ என்று சொல்லவும் அதை அப்படியே ஏற்றுக்
கொண்டு மகாவை அவள் நடத்திய விதத்தில் மாமனார் மாமியார் மெச்சும் மருமகளாகிப்
போயிருந்தாள்.
அடுத்தவள் காயத்ரி, மகாலட்சுமி
கல்லூரி படிப்பின் நிறைவில் இருந்த போது அவர்கள் வீட்டிற்கு மருமகளாக அடி எடுத்து
வைத்திருந்தாள்.
திவாகர் மட்டுமல்ல
கதிரும் பாசக்காரன் தான்.
அப்படி அத்தனை அன்பான
உள்ளங்களுக்கு இடையில் வாழ்ந்தவளுக்கு இங்கே கணவன் மட்டும் தான் ஆதாரம்.
ரிஷியும் பாசக்காரன்
தான். சட்டென கை நீட்டாதது மட்டுமல்ல கோபத்தில் வார்த்தைகளை சிதற விடுபவனும்
கிடையாது. ஆனால் மிகவும் அழுத்தக்காரன்.
அவன் மனதில் என்ன
இருக்கிறது என்பதை அவனாக சொல்லாமல் அறிந்து கொள்வது மிகக்கடினம். ‘பெண் மனம்
மட்டுமல்ல ஆணின் மனமும் ஆழமானது’ என்பதை இத்தனை மாதங்களில் கண்டு கொண்டு இருந்தாள்.
ரிஷியாக விரும்பாமல்
அவனிடம் இருந்து வார்த்தைகளை அத்தனை எளிதாக வெளிக்கொண்டு வந்துவிட முடியாது.
அவன் பேசாமல் இருந்தால்
‘தான், அன்று
என்ன தவறு செய்தோம்’ என்று அவளாகவே யோசித்து அதை திருத்திக்கொள்ள வேண்டும்.
சில நேரம் அவன் கோபம்
கட்டுக்குள் இல்லாமல் போகும் போது தான் அவன் வார்த்தைகள் சற்று கடுமையாக
இருக்கும்.
பெரிதாக திருமண கனவுகள்
இல்லாதவள் தான் மகாலட்சுமி.
ஆனால் என்று ரிஷிவரதன்
தான் ‘தன் கணவன்’ என்று மனதில் வரித்துக் கொண்டாளோ அப்போது இருந்தே ‘அவர்களுக்குள்
விரிசல் வராமல் இருக்க தன் பக்கத்திலிருந்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ..’
அதையெல்லாம் செய்து கொண்டு தான் இருக்கிறாள்.
அதையும் மீறி அவள்
மாமியார் நாத்தனார் அல்லது சிந்து என்று யார் வடிவிலாவது பிரச்சனைகள் அவ்வப்போது
முளைக்கும்.
ரிஷிக்கு அடுத்து
அவளுக்கு அந்த வீட்டில் பேச ஒரு ஆள் உண்டு என்றால் அது சிவபாலன் தான்.
மனைவி மருமகளை பேசுவது
தவறு மட்டுமல்ல அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் நேரடியாக மனைவியிடம் கோபப்பட
மாட்டார்.
ஆனால் முடிந்த வரை
மருமகளை இக்கட்டான சூழலில் இருந்து ஏதாவது ஒரு வகையில் காப்பாற்றி விடுவார்.
நல்ல மனிதர். சிவபாலன்
இந்திரா தம்பதியரின் பூர்வீகம் சென்னை கிடையாது. கிராமத்திலிருந்து இங்கு வந்து
செட்டில் ஆனவர்கள்.
அவருடையது மிகவும்
எளிமையான குடும்பம் தான். அண்ணன் தம்பிகளே ஏழு பேர். கஷ்ட காலங்களில் இரண்டு
அண்ணன்களின் மனைவிகள் அவர்களைப் பிரிந்து சென்ற போதும் இந்திரா அவருடன் பக்கபலமாக
இருந்தவர்.
அதனால் இப்போது மாமியாராக
அவர் கடுமை காண்பித்தாலும் அதை உரக்க தட்டி கேட்டு விட முடியாது அவரால்.
இன்று மனைவி பிள்ளைகள்
என்று ஒரு குடும்பமாக சமூகத்தில் ஒரு அந்தஸ்தோடு அவர் இருக்க காரணம் நிச்சயம் அவர்
மனைவி இந்திரா தான். எத்தனை கடுமையான சூழல்கள், அவர் நகைகளை எல்லாம் விற்று
வாழ்க்கையை நடத்திய போதும் மனம் தளராமல் பயணித்தவர்.
**********
“என்னங்க
காஃபி..” என்று கணவனின் தோள் தொட்டு எழுப்பவும், “தேங்க்யூ
லச்சு..” என்று புன்னகையோடு வாங்கிக் கொண்டவன் முகம் கழுவி வர அதற்குள் மகாலட்சுமி
புடவை கட்ட தொடங்கி இருந்தாள்.
“இன்னைக்கு என்ன
டிஃபன்?” என்றான் காஃபியை பருகிய படி..
“இட்லி, சாம்பார், சட்னி, அப்புறம்
மறக்கிறதுக்கு முன்னாடி சொல்லிடுறேன், வாஷிங் மெஷின்ல துணி
இருக்கு, இன்னும் பத்து நிமிஷத்துல முடிஞ்சுடும், ஆஃபிஸ் கிளம்பும் முன்ன உலற போட்டுடுங்க..”
“சரி..” என்ற
ரிஷி மனைவி கருவுற்ற பின்னர் அவளை மாடிக்கு செல்ல அனுமதிப்பதில்லை. அவனே துணிகளை
உலர்த்தி எடுத்து வந்துவிடுவான்.
“சாயந்தரம்
வந்ததும் எடுத்து வச்சுடுங்க. நான் வந்து மடிச்சுக்கிறேன்..”
“சரி, இன்னைக்கு அப்பாயின்மென்ட் இருக்கு சீக்கிரம் வந்துருவ தானே?!”
“ஆல்ரெடி பர்மிஷன்
போட்டுட்டேன் ரிஷி, வந்துடுவேன்.. அப்புறம் நாளை மறுநாள்
அப்பா, அம்மா, அண்ணி எல்லாரும்
வராங்க.. உங்க கிட்ட இதைப்பற்றி பேசுறேன்னு சொன்னாங்களே.. நேத்து அப்பா கால் பண்ணி
இருந்தாரா?..”
“ஆமா லச்சு மாமா
பேசினார்.. ஃபிப்த் மந்த்ல உனக்கு வெரைட்டி ரைஸ் கொடுக்கணுமாம் என்னையும் உடன்
இருக்க சொல்லி கேட்டிருக்கார். லீவ் சேக்ஷன் ஆகுமா தெரியலை பட் நான் ட்ரை
பண்றேன்...” என்றவன் அருகே வந்தவள்,
“என்னங்க இந்த
ஃபிலீட்ஸ் சரியாவே வர மாட்டேங்குது கொஞ்சம் பிடிங்க” என்று சொல்ல அவள் எதிரே ஒரு
காலை மடக்கி அமர்ந்த ரிஷி புடவையை பிடித்துக்கொள்ள மகாலட்சுமி மடிப்புகள்
எடுத்தாள்.
“என்ன இன்னைக்கு
திடீர்னு புடவை? எப்பவும் சுடிதார், குர்த்தி
தானே போட்டுட்டு போவ?”
“இன்னைக்கு
ராதிகாவோட வீட்ல பூஜைக்கு அழைச்சிருக்காங்கன்னு சொன்னேனே மறந்துட்டீங்களா?”
“ஹ்ம்ம்!
நியாபகம் இருக்கு..” என்று தலையசைத்தான்.
“சாயந்திரம் நேரா
ஆஃபிஸ்க்கு வந்துடுங்க, அங்கிருந்து பக்கம் தான் அவங்க வீடு.
பூஜை அட்டென்ட் பண்ணிட்டு அப்படியே ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்..” என்றவள்
அவசரமாக வெளியில் வந்து மூன்று இட்லிகளை டிஃபன் பாக்ஸில் எடுத்து வைக்க
தொடங்கினாள்.
பொதுவாகவே அவளுக்கு காலை
உணவு ஆற அமர எடுத்துக் கொள்ளும் நேரம் வாய்க்காது. அவசர அவசரமாக தான் சாப்பிட
வேண்டும்.. அப்படி செய்யக்கூடாது என்று ஒருமுறை பார்த்து பாக்கியா கண்டிக்கவும்
தான் மெட்ரோவில் செல்லும் போது சாப்பிட தொடங்கினான்.
அதுவும் எல்லா நேரமும்
அவளுக்கு உட்கார இடம் கிடைக்கும் என்று சொல்லி விட முடியாது. வார முதல் நாள் வார
இறுதிகளில் நிற்கக்கூட பெரும்பாலும் இடம் கிடைக்காது. அப்போதெல்லாம்
அலுவலகத்திற்கு சென்று காலை உணவை சாப்பிட 11 மணி ஆகிவிடும்.
உடனே இரண்டு மணி
நேரத்தில் மதிய உணவு எனும் போது அவளால் முழுதாக உணவை சாப்பிட முடியாது போய்விடும்.
அவளுக்கான மதிய உணவையும்
எடுத்து வைக்க “மாமி டிஃபன் வைங்க..” என்று சிந்து சாப்பிட அமர்ந்தாள்.
அவளுக்கு பரிமாறி விட்டு
மாமியாருக்கான காஃபியையும் போட்டு பிளாஸ்க்கில் எடுத்து கொண்டு அவர் அறைக்கு செல்ல
அப்போது தான் சிவபாலன் குளித்து விட்டு வந்திருந்தார்.
“மாமா டிஃபன்
எடுத்து வச்சுட்டேன் இது அத்தைக்கு காஃபி. நாங்க சாயந்திரம் ஒரு பங்க்ஷனுக்கு
போயிட்டு ஹாஸ்பிடல் போயிட்டு தான் வருவோம்..”
“அதுக்கென்னமா
தாராளமா போயிட்டு வா, சிந்து, உன்
அத்தைக்கு தேவையானதை நான் பார்த்துக்கிறேன்..”
“சரி மாமா
போயிட்டு வரேன்..” என்று வெளியில் வர குளித்து விட்டு ட்ராக் பேன்ட் டீஷர்ட்
சகிதம் வந்த ரிஷி மனைவியை அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்கு சென்றான்.
Comments
Post a Comment