வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 3.2

 


மகாலட்சுமி ஆபீஸ்க்கு கிளம்பிய இருபது நிமிடங்களுக்கு பிறகு தான் எழுந்து வெளியில் வந்தார் இந்திரா.

தன் குடும்பம், கணவன், பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் ‘அவர்கள் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி’ என்ற எண்ணம்  கொண்ட சராசரி அம்மா, அடிப்படை நல்ல குணங்கள் கொண்டவர் தான். 

என்ன ஒன்று, மாமியார் பதவி கிடைத்த பிறகு மகாவை ‘தன் மகளாக இல்லையென்றாலும் தன் குடும்பத்தின் அங்கம், தன் மகனின் சரி பாதி, வாழ்க்கை முழுமைக்கும் உடன் இருக்கும் துணை’ என்றாவது அவர் நினைத்திருந்தால் இன்று மகாவின் கஷ்டங்களை புரிந்து கொண்டிருப்பார். 

ஆனால் அவரும் வழக்கமான மாமியார் ஆகிப்போனது தான் இங்கு பிரச்சனையே. அதிலும் அவரின் ஓரகத்திகள் தங்கள் மருமகளுடனான அனுபவங்களை பகிர்ந்ததில் இன்னுமே பக்காவான மாமியார் மெட்டீரியல் ஆகிப்போனார்.

மற்றவர்களைப் போல ‘தங்கள் மகனை பிரித்து அழைத்து சென்றுவிடுவாளோ..’ என்ற எண்ணமே தொடக்கம் முதல் மகாவை தள்ளி வைக்க செய்திருந்தது.

இத்தனைக்கும் அவள் படிப்பு, வேலை, சம்பாத்தியம் என்று எதைக்கொண்டும் யாரையும் அலட்சியப்படுத்தாமல் புகுந்த வீட்டில் அனைவரையும் அனுசரித்து பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்கிறாள். 

படிப்பு அவளுக்கு அகம்பாவத்திற்கு பதில் சிறந்த பண்பை கற்று கொடுத்திருந்தது. 

அப்படி இருந்தும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு அவள் செய்யும் சின்ன விஷயத்திலும் குறை கண்டுபிடிக்கும் இந்திராவிற்கு மாடிப்படியில் இருந்து விழுந்து கை கால் முறிந்தது சாதகமாகி போனது.

மகனும் மருமகளும் தேனிலவு சென்று இருந்த நேரத்தில் தான் வனிதாவும் அவள் கணவர் ஸ்ரீனிவாசனும் அவர்களின் இரண்டாம் மகள் தாரணியோடு சிந்துவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அங்கு வந்திருந்தனர்.

இந்திராவிற்கு மருமகன் மீது மிகுந்த மரியாதை உண்டு. இருக்காதா பின்னே?! வனிதாவிற்கு இருபத்தி மூன்று வயது ஆன போதும் திருமணமாகவில்லை.

அவளை விடவும் வயதில் குறைவான அவள் பெரியப்பா சித்தப்பா பெண்கள் நான்கு பேருக்கு அந்த நேரத்தில் திருமணமாகி இருவருக்கு குழந்தைகளும் இருந்தனர்.

அதனால் ஆளாளுக்கு 'என்ன தோஷமாக இருக்கும்?' என்று பரிகாரம் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

அதன் பிறகு தான் ஜோசியரிடம் சென்று அவள் பிறந்த தேதியை கொடுத்து திருமணம் தள்ளி போவதற்கான காரணத்தை கேட்டு அதற்கான பரிகாரங்களை அடுத்து வந்த நாட்களில் விடாமல் அனைத்தையும் செய்து வந்தனர்.

‘என்ன காரணமோ தெரியவில்லை..’ அத்தனை பரிகாரங்களை செய்த போதும் ஒரு வருடத்திற்கு மேலாகியும் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது.

இத்தனைக்கும் வனிதாவின் பதினெட்டாவது வயதிலிருந்தே வரன் பார்க்க தொடங்கிய போதும் திருமணம் அத்தனை எளிதாக கூடி வரவில்லை. 

அப்போதைய அவர்களின் நிலைக்கு இரண்டு பிள்ளைகளில் ஒருவரை தான் படிக்க வைக்க முடியும் என்ற சூழல். ஆண் பிள்ளையை படிக்க வைத்தால் நாளை குடும்பத்தை கட்டிக் காப்பாற்றுவான் அவர்களையும் பார்த்துக் கொள்வான்.

அதனால் ‘அடுத்த வீட்டிற்கு செல்லும் பெண்ணிற்கு படிப்பு எதற்கு?’ என்று பள்ளி படிப்போடு வனிதாவை நிறுத்தி விட்டார்கள். 

அதோடு அதிகபட்சம் அவர்களால் பத்து சவரன் போட்டு, வண்டி, ஐம்பதாயிரம் ரொக்கம் மற்றும் அடிப்படை சீர்வர்சை பாத்திரம் மட்டுமே கொடுக்கக் கூடிய சூழல்..

வனிதாவை பார்க்க வந்த பல மாப்பிள்ளைகளுக்கு பெண்ணை பிடித்திருந்தாலும் வாடகை வீடு மற்றும் சீர்வரிசைகள், நகை, ரொக்கம் திருப்தியாக இல்லாததில் பல வரன்கள் பேச்சு வார்த்தையோடு நின்று போனது.

அப்போது அவள் பெரியப்பாவின் நண்பர் ஒருவர் மூலமாக பெங்களூரில் இருந்து வந்த வரன் தான் ஸ்ரீனிவாசனின் குடும்பம்.

ஸ்ரீனிவாசனின் நிலைக்கு சிவபாலன் குடும்பத்தின் நிலை எத்தனையோ மேல் என்று தான் சொல்ல வேண்டும்.

அவனுக்கு வீட்டில் இரண்டு தங்கைகள். 

ஸ்ரீனிவாசனுக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும் படியான படிப்பு கிடையாது. வனிதாவை பெண் பார்க்க வந்த போது நிலையான வேலையும் கிடையாது.

ஆனால் ஸ்ரீனிவாசன் நல்ல பேச்சுத் திறமை கொண்டவர்.

அதனால் வார்த்தை ஜாலத்திலேயே அவர்களை வீடு பார்க்க பெங்களூருக்கு வர விடாது ஒரே மாதத்தில் அவசரமாக பெண்ணை இங்கேயே திருமணம் செய்து அழைத்து சென்றார்.

சிவபாலன் இந்திராவிற்குமே பெண்ணுக்கு திருமணமானால் போதும் என்ற எண்ணம் தான் அப்போது மேலோங்கி இருந்தது.

அதோடு இதுவரை வந்த வரன்கள் யாருமே அவர்கள் செய்யும் சீர்வரிசை போதவில்லை என்று தட்டிக் கழித்தார்களே கொஞ்சமும் இறங்கி வர  ஒப்புக்கொள்ளவில்லை.

‘அத்தனை தொலைவில் மகளைக் கொடுக்க வேண்டுமா?’ என்று அவர்களின் யோசனை கூட ஸ்ரீனிவாசன் நிச்சயத்தை திருமணத்திற்கு முதல் நாள் வைப்பதோடு இருவரும் சரிசமமாக செலவை பிரித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டதில் பின்னே சென்றுவிட்டது.

வேலை விஷயமாக டெல்லி வரை செல்ல இருப்பதால் வந்ததுமே திருமணம் வைத்து கொள்ளலாம் என்ற ஸ்ரீனிவாசனின் வார்த்தைகளை நம்பி பெண்ணை கொடுத்து விட்டனர். 

ஆனால் பெண்ணை அழைத்துக் கொண்டு பெங்களூரில் விடுவதற்காக சென்ற போது தான் அவர்களின் உண்மை நிலை தெரிய வந்தது. 

அவர்களுடையதும் வாடகை வீடு தான்.

ஒரே ஒரு படுக்கை அறை, ஹால், குட்டி கிச்சன் என்று இருந்தது ஸ்ரீனிவாசனின் வீடு

திருமணத்திற்குப் பிறகு தான் தனியார் நிறுவனம் ஒன்றில் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டான். ஆனால் ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு அது எவ்வாறு போதுமானதாக இருக்கும்?

மனைவிக்கும் அதே நிறுவனத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்து இருவரின் சம்பளத்தில் சமாளித்து விடலாம் என்ற கணக்குகளோடு இருந்தான்.

வீட்டில் அவன் தான் மூத்தவன். இரண்டு தங்கைகள் அவனை விட வயதில் மிகவும் இளம். 

அவர்களில் ஒருத்தி படிப்பை முடித்துவிட்டு இருக்க இன்னொருத்தி பள்ளிப் படிப்பில் இருந்ததாள்.

வனிதா கொண்டு வரும் சீர்வரிசை நகைகளை வைத்து ஒருவரை கரையேற்றி விடலாம் என்று கணக்கு போட்டு இருந்தான் ஸ்ரீனிவாசன்.

அடுத்தவளுக்கு ஐந்து வருடங்கள் கழித்து செய்தால் போதும். 

அதனால் 'சீர்வரிசை குறைந்தது இருபது சவரன் நகை, பைக், சீர்வரிசை ரொக்கம் ஒரு லட்சம்' என்று அனைத்தும் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். வனிதாவின் ஜாதகமும் ஸ்ரீனிவாசன் ஜாதகத்தோடு அம்சமாக பொருந்தி இருந்தது. 

ஆரம்பத்தில் சில கஷ்டங்களை அனுபவித்தாலும் நன்றான வாழ்க்கை அமையும் என்றார் ஜோதிடர். 

அதனால் இதை நழுவ விட அவர்களுக்கு மனம் இல்லை. போதாததற்கு அப்போதே வனிதாவிற்கு வயது இருபத்தி நான்காகி போயிருந்தது. 

அதனால் சிவபாலன் சொந்த பந்தம் மட்டுமின்றி உடன் வேலை செய்பவர்களிடமும் கடன் வாங்கி தான் மகளின் திருமணத்தை நடத்தி முடித்தார். அப்போது ரிஷி பள்ளியில் இருந்தான்.

திருமணத்திற்குப் பிறகு ஆடி, பொங்கல், தீபாவளி சீர், வளைகாப்பு, தொட்டிலில் இடுவது என்று எதிலுமே வனிதாவின் மாமியார் சமரசம் செய்து கொள்ளவில்லை.

குழந்தை பிறந்த பிறகு ஆறு மாதம் கழித்து அவளை கொண்டு சென்று புகுந்த வீட்டில் விட்ட போது, “ஆம்பளப் பிள்ளையை பெத்திருந்தா  பரவால்ல. மொத மொதல்ல பொட்ட புள்ளையை பெத்து வச்சிருக்கா... எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பனை வேணும்னு சும்மாவா சொன்னாங்க..

இதுக்கெல்லாம் செய்ற அளவுக்கு இங்க என்ன கொட்டியா கிடக்கு? அடுத்ததா ஆம்பளப் புள்ளை பெத்து கொடுக்கணுமுன்னு சொல்லிட்டு போங்க..”
என்று சொல்லி இருந்தார்.

ஆனால் வனிதாவின் துரதிர்ஷ்டம் அவளுக்கு இரண்டாவதுமே பெண் குழந்தையாகி போனது.
‘அதனால் மூன்றாவது குழந்தை கண்டிப்பாக வேண்டும்’ என்று வனிதாவின் கணவரும் மாமியாரும் சொல்லி விட்டார்கள்.

ஆனால் வனிதாவின் உடல்நிலை அதற்கு தகுதியானதாக இல்லை.

தாரணியின் பிரசவத்தில் எக்கச்சக்க சிக்கல்கள். ‘பிழைத்து வருவாளா?’ என்பதே சந்தேகமாக இருந்தது. உயர் ரத்த அழுத்தம் சக்கரையின் அளவு அதிகரித்து என்று பல பிரச்சனைகளோடு தான் மருத்துவமனைக்கு சென்றாள்.

பல கட்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்திருந்தனர். இரண்டாவது பிரசவம் பெங்களூரில் தான் நடந்தது. 

சிவபாலனும் பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்பே மனைவியை அங்கே கொண்டு வந்து விட்டு சென்றிருந்தார். பத்து நாட்கள் மகளை உடன் இருந்து பார்த்து வீடு கொண்டு வந்து சேர்த்த பிறகே சென்னை கிளம்பினார் இந்திரா. 

வனிதாவின் மாமியார் அவளை மருத்துவமனையில் நொடிக்க தொடங்கியவர் வீடு வந்து சேர்ந்த பிறகும் அதை தொடர்ந்திருந்தார். 

குழந்தை பிறந்த இரண்டாம் வாரமே வனிதாவையும் குழந்தைகளையும் கொண்டு வந்து மாமியார் வீட்டில் விட்டு விட்டார் ஸ்ரீனிவாசன். 

இப்படி மருமகன் கொண்டு வந்து விடுவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

“இந்த மாதிரி நேரத்துல அவ எங்கயுமே பயணம் பண்ணக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்களே மாப்பிள்ளை. சொல்லிவிட்டு இருந்தா நாங்களே அங்க வந்து இருப்போமே..” என்று தன்மையாகவே சொன்னார் சிவபாலன்.

“உங்க பொண்ணு மூணாவது குழந்தைக்கு ஒத்துக்க மாட்டேங்குறா. ஆபரேஷன் பண்ணி ஆகணும்னு பிடிவாதமா இருக்கா... அப்படி ஆபரேஷன் பண்ணிகிறதா இருந்தா இங்கேயே உங்க பொண்ணா இருந்துக்கட்டும்..” என்றான்.

“என்ன மாப்பிள்ளை பேசுறீங்க? பிரசவத்தப்போ அவளுக்கு எவ்வளவு சிக்கல் இருந்துச்சுன்னு டாக்டர் சொன்னாங்க தானே?!... என் பொண்ணு பிழைச்சு வந்தது பூர்வ ஜென்ம புண்ணியம். டாக்டர் கூட அப்பவே இன்னொரு குழந்தைன்னு போனா அவளோட உயிருக்கே ஆபத்துன்னு சொன்னாங்களே...”

“டாக்டர் ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்காக எங்களுக்கு ஆம்பள வாரிசு வேண்டாமா? ஏற்கனவே இவ பெத்து வச்சிருக்க ரெண்டு பொண்ணுங்களை கரை ஏத்துறதுக்கு, தோள் கொடுக்க எனக்கு ஒரு துணை வேண்டாமா?” 

“எதையும் புரிஞ்சுக்காம என் அம்மாவை எதிர்த்து பேசற உங்க பொண்ணுக்கு நல்ல புத்திமதி சொல்லி அனுப்பி வைங்க..” என்று சொல்லி சென்றவன் மாதங்கள் பல கடந்தும் அவளை வந்து அழைத்துச் செல்லவில்லை.

மகளின் உடல்நிலை தேறினால் போதும் என்று அவர்களும் கஷ்டத்தோடு கஷ்டமாக வனிதாவையும் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டனர்.

ஆனால் மாதங்கள் எட்டை கடந்த போதும் ஸ்ரீனிவாசன் மனைவி குழந்தைகளை அழைக்க வராததில் அவர்களே தேடி சென்றனர். 

பெண்ணின் வாழ்க்கை அல்லவா?! எப்படி சுலபமாக விட்டுவிட முடியும்?! அவளை பார்ப்பவர் எல்லாம் 'இன்னும் உன் வீட்டுக்கு போகலையா?' என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய வனிதா தாயிடம் கண்ணீர் சிந்தாத நாளில்லை. 

எடுத்ததுமே ‘மூன்றாம் குழந்தைக்கு சம்மதித்து இருந்தால் மட்டும் பேசலாம், இல்லையென்றால் எனக்கு பேச ஒன்றுமே இல்லை..’ என்று திட்ட வட்டமாக சொல்லி விட்டான் ஸ்ரீனிவாசன்.

“மாப்பிள்ளை, ஒரு குழந்தையை நாங்களே வளர்க்கிறோம். அவ படிப்பிலிருந்து கல்யாணச் செலவு வரைக்கும் எல்லாமே நாங்க பார்த்துக்கிறோம். ஆனா இன்னொரு குழந்தைன்னு போனா எங்க பொண்ணு உசுரோடு இருப்பாளான்னு தெரியாது. அதனால கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..” என்றனர்.

ஸ்ரீனிவாசனும் 'தன் பாரம் குறைந்தால் போதும்' என்ற எண்ணத்தில் சிந்துவை அவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு மற்றவர்களை அழைத்துக் கொண்டு சென்றான்.

இப்படித்தான் சிந்து இந்த வீட்டின் தவிர்க்க முடியாத அங்கமாகி போனாள்.


Comments