வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 4.1

 


அன்று காலை மருத்துவமனையில் அப்பாயின்மென்ட் இருப்பதால் ஒன்பது மணிக்கு அவர்கள் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். 

அவர்கள் வீட்டில் இருந்து அரை மணி நேர பயணம் தான். சென்றதுமே டெஸ்ட் கொடுத்து விட்டு டாக்டரை சந்தித்து கிளம்ப வேண்டியது தான்.

அதனால் இன்று சற்று நிதானமாக ஆறு மணிக்கு மேல் எழுந்து வேலையை தொடங்கிய மகா தோசை மாவை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வைத்தாள்.

காலை உணவு மட்டும் சமைத்தால் போதும், இன்று மதிய உணவு சமைக்க தேவை இல்லை. அவள் பெற்றோர் கலவை சாதம் கொண்டு வருகின்றனர். 

அதனால் வனிதாவின் குடும்பமும் சிவபாலனின் உடன் பிறந்தோர் சிலரும் வர இருக்கின்றனர்.

ரிஷி அவசர வேலையாக வெளியில் சென்றிருக்க அன்றாட வழக்கம் போல மாமனார் மாமியாருக்கு காஃபி கொடுத்து விட்டு  சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.


மகாலட்சுமி தோசை வார்ப்பதை கண்ட சிந்து “மாமி எனக்கு நெய் ரோஸ்ட் வேணும்” என்றாள்.

“நெய் ரோஸ்ட்டா? எனக்கு அந்த ஸ்மெல் இப்போ ஆக மாட்டேங்குது சிந்து. நான் வேணும்னா ப்ளெயின் ரோஸ்ட் போட்டு கொடுக்கட்டா?” 

“இல்லை, எனக்கு நெய் ரோஸ்ட் தான் வேணும் மாமி. நேத்து என் ஃபிரண்டோட மம்மி அவளுக்கு மதியம் சூடா எடுத்துட்டு வந்து கொடுத்தாங்க சூப்பரா இருந்தது தெரியுமா?! எனக்கு அது மாதிரி வேணும்”

“தினமும் மதியத்தில் ஆறிப்போன சாப்பாடு சாப்பிடுறேன். அவளை போல நானும் அம்மா அப்பாவோடு இருந்திருந்தா அவங்க எனக்காக சுட சுட கொண்டு வருவாங்க, நீங்க காலையில கூட எனக்கு சமைச்சு கொடுக்க மாட்டீங்களா?” என்றால் சப்தமாக.

“நான் செய்ய மாட்டேன்னு சொல்லல சிந்து, எனக்கு நெய் வாடை ஆக மாட்டேங்குது வாமிட் வந்துடுது.. அதனால தான் கொஞ்ச நாளாவே உங்க மாமா கேட்டும் அவருக்கு பிடிச்ச பொங்கலை நான்  செய்யாம இருக்கேன்..”  “வாமிட் வந்தா என்ன? எடுத்து முடிச்சுட்டு வந்து ரோஸ்ட் போட்டு கொடுங்க..”

“ப்ச், சிந்து வாமிட் எடுத்துட்டு என்னால உடனே சாப்பிடவும் முடியாது. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா?” 

“முடியாது, எனக்கு இன்னைக்கு ரோஸ்ட் வேணும்..” என்று அடமாக நிற்க இந்திரா அங்கு வந்து விட்டார்.

கடந்த ஒரு மாதமாகவே யாரின் துணையும் இல்லாமல் அவராவே நடக்கத் தொடங்கி விட்டார். என்ன ஒன்று வேகமாக நடக்க மாட்டார், வெளியிடங்களுக்கு அதிகம் செல்ல மாட்டார். 

ஃபிசியோதெரபி கொடுப்பதால் இப்போது கை கால்களை நன்றாகவே அசைக்க முடிகிறது.. சுருங்க சொல்ல வேண்டுமானால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே அவர் கையும் காலும் நன்றாக குணமாகி இயல்பிற்கு திரும்பி இருந்தது. 

அப்படி இருந்தும் மருமகள் கிளம்பும் வரை அறையை விட்டு வெளியில் வர மாட்டார். ‘மகாவால், மகா தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த ராசியால் தானே தனக்கு இந்த நிலை’ என்ற கோபம் இப்போதும் உள்ளுக்குள் கனன்று கொண்டு இருக்கிறது.

ஆனால் உண்மையில் அவருக்கு அடிப்பட காரணம் மகாலட்சுமியின் ராசி கிடையாது. அவரின் அருமை மருமகன் ஸ்ரீனிவாசன் தான். 

இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்டி முடித்திருந்த புது வீட்டின் மாடியில் விருந்தினர்கள் தங்குவதற்காக இரண்டு அறை போட்டு இருந்தனர். 

ஸ்ரீனிவாசன் எப்போது வந்தாலும் மாடியில் தான் தங்குவது.

அதற்கு முன்பு வரை வாடகை வீட்டில் தான் இருந்தார்கள். பெண்ணை கட்டிகொடுத்து மகனை படிக்க வைத்து, கல்யாண கடனை அடைத்து என்று அதிலேயே வருடங்கள் உருண்டோடி போனது. 

எப்போது ரிஷியின் திருமண பேச்சு வந்ததோ அப்போதே மகனுக்கு வாடகை வீட்டில் இருந்தபடி திருமணம் செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் இந்திரா.

சில வருடங்களுக்கு முன்பு தான் கடன் ஆனாலும் பரவாயில்லை என்று அவர் பிறந்த வீட்டிலிருந்து கிடைத்த சொத்தை விற்று ஏற்கனவே இங்கு வாங்கி போட்டு இருந்த இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்று மகனிடம் சொன்னார். 

“ம்மா வீடு கட்ட எவ்ளோ தொகை ஆகும்னு தெரியுமா?” என்றான்.

“தெரியும் பா.. நேத்து தான் அப்பாவோட போய் என்ஜினியரை பார்த்துட்டு வந்தோம்.. அதனால என்ன என் நகைகள் ஒரு பத்து சவரன் இருக்கு. அதை அடமானம் வைக்கலாம் இல்லை வித்துடலாம்…”

“அம்மா அப்படி இருந்தாலும் நமக்கு ரொம்ப பெரிய தொகை தேவை. இஎம்ஐ போட்டா மாசம் எனக்கு கையில பத்தாயிரம் கூட நிற்காது.. எப்படி சமாளிக்க முடியும்?”

“அதெல்லாம் பாத்துக்கலாம் வரதா ஆனா என் பொண்ணுக்கு நான் பட்ட பாடு உனக்கு படக்கூடாது, இப்ப எல்லாம் மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இல்லனா யாருமே பொண்ணு கொடுக்கறது இல்ல..”

“அதுதான் தரகர் கிட்ட தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் வேலைக்கு போற பொண்ணு தான் வேணும்னு சொல்லி இருக்கோமே, அவ வந்த பின்னாடி அந்த சம்பளத்தை வச்சு சமாளிக்கலாம் நீ தைரியமா லோன் போடு” என்றார். 

“இந்திரா தம்பி சொல்றதும் சரிதான், கல்யாணத்துக்கு அப்புறமா கூட பொறுமையா வீடு கட்டிக்கலாமே.. ஆனா இப்போ வீட்டு லோன், கல்யாண கடன் எல்லாம் எப்படி அவன் தாங்குவான்? கொஞ்சம் யோசிச்சு பாரு..” என்றார் சிவபாலன்.

“அதெல்லாம் நான் நல்லா யோசிச்சுட்டேங்க இப்பவே இவனுக்கு 25 முடிய போகுது.. வீட்டு வேலை எல்லாம் நாம நினைக்கிற மாதிரி எடுத்தவுடனே முடிச்சுடாது, கட்டி முடிக்க வருஷமாவது ஆகும்.. அது முடிஞ்சாலும் நம்ம குடும்பத்துக்கு ஏற்ற பொண்ணு உடனே கிடைக்கும்னு சொல்லிட முடியாது..” என்றதில் ரிஷி லோன் போட்டு வீட்டு வேலைகளை தொடங்கி இருந்தான்.


ஆரம்பத்தில் இல்லை என்றாலும் ஸ்ரீனிவாசனுக்கு சமீப காலமாக குடிப்பழக்கம் உண்டு. தினமும் கம்பெனியில் அயராது உழைப்பவர் இரவில் அலுப்பு தீர குடித்த பின்னர் தான் உறங்குவது. 

இது வனிதாவிற்கு மட்டுமல்ல அவன் பெற்றோருக்கும் தெரியும். இங்கு சிவபாலனுக்கு இல்லை என்றாலும் இந்திராவிற்கு மருமகனின் குடிப்பழக்கம் தெரிய வந்தது. 

“என்ன வனி சொல்ற? குடிப்பாரா? நம்ம குடும்பத்துல யாருக்கும் அந்த பழக்கம் கிடையாதே! குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு ஆச்சேடி..” 

“உங்க அப்பாக்கு இத்தனை வயசு வரைக்குமே அப்படி ஒரு பழக்கம் இல்லை. உன் தம்பியும் அப்படி தான் ஆனா இது எங்க போய் முடியும்னு தெரியலையேடி..” என்றார் பதைபதைப்போடு.

“ம்மா அவர் ஒன்னும் மொடா குடிகாரன் கிடையாது. தினமும் கம்பெனியில என்ன பாடு படுறாருன்னு நான் தான் பக்கம் இருந்து பாக்குறேனே, அலுப்பு தெரியாம தூங்கறதுக்கு தான் குடிப்பார். பகல் நேரத்தில் குடிக்க மாட்டார்..”

“அதைவிட நான் சொன்னாலும் கேட்க மாட்டார். இந்த விஷயம் தெரிய வந்த புதுசுல ஒரு முறை குடிக்க வேண்டான்னு சொல்லி அடி வாங்குனது தான் மிச்சம். அதுல இருந்து நான் எதுவும் கண்டுக்கறது இல்லை..”

“நீங்களும் இதெல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க.. அப்புறம் அதுக்கும் சேர்த்து என்னை தான் திட்டுவார்..” என்று எச்சரித்தாள்.

“உன் அப்பா தம்பிக்கு தெரிஞ்சா என்னாகிறது? இங்க வரும் போதாவது குடிக்காம இருக்கலாமே?!” 

“சொல்லி பார்த்துட்டேன் ம்மா ஆனா அவரு நான் சொல்லி கேட்கிற  ரகம் கிடையாது. இத்தனை வருஷம் அவர் செய்யறது மட்டுமில்லை நான் என்ன செய்யணும்னு முடிவு பண்றதும் அந்த மனுஷன் தான்னு உனக்கு தெரியாதா?”

“அப்பாவுக்கும் ரிஷிக்கும் தெரியக்கூடாதுன்னு  தான் அவர் மாடிக்கு போயிடுறது. நைட்ல அவருக்கு கூட ஆம்லெட், சிப்ஸ் இல்ல சிக்கன் ஃபிரை ஏதாவது இருக்கணும்.. அது மட்டும் கொடுத்துட்டா போதும் அவர் அங்கே சாப்பிட்டு அப்படியே தூங்கிடுவாரு..”

“அதுதான் நான் இங்க சிந்து கூட இருக்கேனே, இதுவரைக்கும் குழந்தைகளுக்கு தெரியாம தான் பார்த்துட்டு இருக்கேன். நீயும் அப்படியே பாத்துக்கோமா..” என்று சொல்லிவிட அன்று முதல் மருமகன் இங்கு வரும்போது எல்லாம் இரவில் ‘சிக்கன் 65, ஆம்லெட்’ என்று மருமகனுக்கு கொடுத்து விடுவது வழக்கம். 

அப்படி ரிஷியும் மகாவும் தேன் நிலவில் இருந்து கிளம்பும் முந்தைய நாள் இரவு மருமகனுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு திரும்பும் போது தான் படியில் இருந்து கீழே விழுந்து விபத்து நடந்தது. 

இரவோடு இரவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். 

ரிஷியிடம் சொல்லலாம் என்று வனிதா சொல்ல, சிவபாலன் “இப்போது சொல்ல வேண்டாம்” என்று தான் சொன்னார். 

ஆனால் வனிதா தான் ‘எங்கே அவர்கள் தேனிலவின் நாட்களில் நீட்டித்து விடுவார்களோ?’ என்ற எண்ணத்தில் உடனே தம்பிக்கு அழைத்து சொல்லியிருந்தாள்.

இப்போது குணமான பிறகும் இந்திராவால் காலையில் முன்பு போல சீக்கிரமாக எழுந்து கொள்ள முடிவதில்லை.. 

எழ முடிவதில்லை என்பதை விட இந்திரா காலை உறக்கத்திற்கு பழகிப் போனார் என்று தான் சொல்ல வேண்டும். அவர் நினைத்தால் ஒரு ஆறு மணிக்கு எழுந்தாவது மருமகளுக்கு உதவலாம் ஆனால் செய்ய மாட்டார். 

“என்ன ஆச்சு சிந்து?” என்று பேத்தியின் அழுகுரலில் சமையலறைக்கு வந்து விட., “அம்மம்மா எனக்கு நெய் ரோஸ்ட் வேணும்னு கேட்டேன் ஆனா மாமி செஞ்சு கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. இதே அம்மா இருந்திருந்தா அப்படி சொல்லி இருப்பாங்களா?” என்று கண்ணீரோடு சொன்னதும் தான் தாமதம், 

“ஏன் என் பேத்தி கேட்கிறதை செஞ்சு கொடுத்தா நீ என்ன குறைஞ்சா போயிருவ?” என்றார் மருமகளிடம். 

“அத்தை எனக்கு கொஞ்ச நாளாகவே நெய் வாசனை குடலை பிரட்டிட்டு வருது. அதனால தான் அவளையே போட்டுக்க சொன்னேன்..” 

“படிக்கிற பிள்ளையே வேலை வாங்குவியா நீ? இதே உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா? யாரோ பெத்த பொண்ணு தானே உனக்கு எங்க அந்த அக்கறை எல்லாம் இருந்திட போகுது?” 

“அத்தை நான் தான் எனக்கு வாமிட் வருதுன்னு சொல்றேனே..”

“வந்தா என்ன எடுத்துட்டு வந்து செய்ய வேண்டியது தானே?!” 

“ப்ச், என் சூழலை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. ஏன் இதுவரைக்கும் அவளுக்கு நான் எதுவும் செஞ்சு கொடுத்தது இல்லையா?” என்று பொறுமை இழந்து.

“என்ன செஞ்சதெல்லாம் சொல்லி காட்டுறியா?” 

“நான் எதுவும் சொல்லி காட்டல.. நான் என்னமோ சிந்து மேல பாசம் இல்லாம அவ கேட்டது இதுவரைக்கும் செஞ்சு கொடுக்காத மாதிரி பேசுறீங்களே, அது தான் கேட்டேன்..” என்றால் ஆற்றாமையோடு.

“என்னம்மா சத்தம் இங்க? என்ற சிவபாலனிடம் விஷயத்தை சொன்னால் சிந்துஜா.

“சிந்து, மாமி வயித்துல பாப்பா இருக்கிறது உனக்கு தெரியும் தானே?! மாமி அடிக்கடி வாமிட் பண்ணினா பாப்பாவுக்கு எப்படி சாப்பாடு கிடக்கும்? அதோடு நீ மாமியை கஷ்டப்படுத்தினா பாப்பாவுக்கும் கஷ்டமாகும்..” என்று பேத்திக்கு சொல்வது போல மனைவிக்கு சொல்லி இருந்தார். 

“குழந்தை ஆசைப்பட்டு கேட்கிறாங்க…” 

“அப்போ நீ செஞ்சு கொடுக்க வேண்டியது தானே! தோசை ஊத்தறது ஒன்னும் மலையை புரட்டி போடற வேலை கிடையாதே.. ரெண்டு தோசை ஊத்துறது உன் கைக்கும் ஒரு எக்சர்சைஸ் தான் இந்திரா..” என்றார். 

“அம்மம்மா செய்ற தோசை முறுகலா இருக்காது தாத்தா..” என்று சிணுங்களோடு சொன்னவள்,

“எனக்கு மாமி செய்ற மாதிரி தான் ரோஸ்ட் வேணும்” என்ற சொல்ல, “சரிமா மகா, நீ தோசைய மட்டும் ஊத்து நான் நெய் போட்டு திருப்பி போட்டு கொடுத்துடுறேன்..” என்று தீர்வை கண்டுபிடித்தார். 

அது போலவே தோசையை ஊற்றிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டாள் மகாலட்சுமி.

Comments