வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 4.2

 


“மாமிக்கு பாப்பா பிறந்து உடம்பு நல்லபடியா ஆன பிறகு உனக்கு பத்து ரோஸ்ட் கூட போட்டு கொடுக்க சொல்றேன் இப்ப இது ஒன்னு சாப்பிடு இன்னொரு தோசை நானே போட்டு கொடுக்கிறேன்..” என்று சிவபாலன் பேத்திக்கு போட்டு கொடுத்தார். 

உடை மாற்றிக்கொண்டு மகாலட்சுமி அறையில் இருந்து வெளியில் வர நெய் மணம் அவளை வரவேற்றது.

மூக்கை பொத்திக்கொண்டு சமையலறைக்கு சென்று தனக்கான தோசையை எடுத்துக் கொண்டு அறைக்கு திரும்பி கதவை சாற்றிக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள். 

ஒரு தோசையை முழுதாக சாப்பிட்டு முடிக்கும் முன்னமே அனைத்தும் வெளியில் வந்து விட சோர்வோடு அவள் கட்டிலில் அமர்ந்திருக்க வெளியில் சென்று இருந்த ரிஷி அப்போது தான் வீடு திரும்பினான். 

“எத்தனை மணிக்கு வரதா ஆஸ்பத்திரிக்கு வர சொல்லி இருக்காங்க?” என்று மகனிடம் விசாரித்தார் இந்திரா. 

“அவ்ளோ தான் ம்மா,  இப்ப கிளம்பனும். மகாலட்சுமி ரெடி ஆயிட்டா தானே?” 

“அதெல்லாம் நல்லா தான் ஆகிருப்பா. அவளுக்கு என்ன குறை? அவளால தான் இங்க எல்லாத்துக்கும் குறையாகி போய் இருக்கு..” 

“என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி பேசுறீங்க?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லடா நீ மருமகளை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பு..” என்று பேச்சை கத்தரித்தார் சிவபாலன். 

அறைக்கதவை திறந்து கொண்டு வந்தவன், மகாவின் சோர்வைக் கண்டு “என்ன ஆச்சு லச்சு? எதனால இப்படி படுத்திருக்க?” என்று அவள் அருகே அமர்ந்தான். 

“ஏன் ரிஷி இவ்வளவு லேட்?” 

“டிராஃபிக் மா..”

“கொஞ்சம் முன்னாடி வந்திருக்க கூடாதா?” என்றவள் நடந்ததை சொல்லி முடித்து, “நான் சிந்துவுக்கு செய்ய மாட்டேன்னு எப்பவும் சொல்லலையே ரிஷி, ஜெய் அம்மா எனக்காக கேரட் அல்வா கொடுத்திருந்தாங்க.. எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு உங்களுக்கு தெரியும் தானே?!

“ஆனா அதையே என்னால சாப்பிட முடியாமல் போயிடுச்சு.. உங்களுக்கு பிடிச்ச பொங்கல் என்னால செய்ய முடியலைன்னு சொல்லவும் நீங்க வெளியில சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லிட்டீங்க ஆனா சிந்து கொஞ்சமும் புரிஞ்சுக்க மாட்டேங்குற.. நீங்களாவது சொல்லலாமே” 

“அவ குழந்தை டி. அம்மா அப்பா இல்லாம இங்க இருக்குற ஏக்கம் தெரியாத மாதிரி நாம தான் அவளை பத்திரமா பாத்துக்கணும்..”

“நான் மாட்டேன்னு சொல்லலியேப்பா., இப்ப கூட பாருங்க தோசை முழுசா சாப்பிட முடியாம உட்கார்ந்து இருக்கேன். கஷ்டமா இருக்கு ரிஷி..” என்று கணவன் தோள் சாய மனைவியை அணைத்துக் கொண்டவன் மெல்ல அவள் தோளில் தட்டிக் கொடுத்து,

“சரி நேரமாச்சு. கிளம்பு, ஹாஸ்பிடல் போயிட்டு முதல்ல டாக்டர் கிட்ட சொல்லலாம் அப்புறம்  ஏதாவது சாப்பிடுவ..” என்று மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினான்.

**********

“நல்ல நேரத்துக்குள்ள கிளம்பனும்னு எத்தனை முறை சொன்னேன். இன்னுமா சமையல் முடியலை பாக்கியா?” என்றார் தினகரன் தன் மனைவி பாக்கியலட்சுமியிடம்.

“அஞ்சு வகை சாதமும் முடிஞ்சதுங்க…”

“அப்போ கிளம்பலாமா? மணி இப்போவே எட்டு ஆகிடுச்சு, கிளம்பினா சரியா இருக்கும்..”

“ஏங்க சாதம் தான் முடிஞ்சுருக்கு இன்னும் மகாவுக்கு பிடிச்ச காலிஃப்ளவர் பக்கோடா, பன்னீர் டிக்கா, சப்பாத்தி மட்டும் பாக்கி..”

“இவ்வளவும் நீங்க எப்ப செஞ்சு முடிக்கிறது? நம்ம எப்ப கிளம்புறது? நல்ல நேரம் முடிய இன்னும் நாற்பது நிமிஷம் தான் இருக்கு” என்ற தினகரன் முன்னாள் ராணுவ அதிகாரி.

கண்டிப்பான மனிதர், நேர்மையானவர், முன்கோபி. அதேசமயம் குடும்பம் தான் எப்போதுமே அவருக்கு பிரதானம்.

தினகரன் கட்டுக்கோப்பாக குடும்பத்தை வழிநடத்த பாக்கியா பிள்ளைகளை அருமையாக வளர்த்து இருப்பவர். 

இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு பின்னர் பல வருடங்கள் கழித்து பிறந்த மகளை கண்ணுக்குள் வைத்து பாதுகாத்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

என்ன தான் மகள் மீது அளவு கடந்த பாசம் இருந்தாலும் மிகவும் கண்டிப்பானவர். அதனால் மகா எப்போதுமே தந்தையின் வார்த்தையை மீறியதில்லை. 

அவரது மூத்த மகன் திவாகர் தற்போது ஆர்மியில் பணியாற்றுகிறான். இளையவன் கதிர்வேலன் பிரபல கம்பெனியில் உயர் பதவியில் இருக்கிறான்.

இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடிந்து பேரன் பேத்தி எடுத்தவரின் கட்டுப்பாட்டில் தான் இப்போதும் அவர்கள் குடும்பம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

மூத்தவனுக்கு ஒரு பெண், ஒரு ஆண்.

இளையவனுக்கு முதலில் ஒரு பெண் குழந்தை. இப்போது இரண்டாம் குழந்தையை கருவுற்றிருக்கும் மருமகள் காயத்ரி நிறை மாதத்தில் இருக்கிறாள்.

மகாலட்சுமிக்கு நான்காம் மாதம் என்றாலும் இன்று தமிழ் மாத கணக்கு படி ஐந்து தொடங்குவதால், அவளுக்கு பூ முடித்து ஐவகை சாதங்களை கொடுத்து சீர் செய்த பின்னர் நாளை தாய் வீட்டிற்கு கிளம்புகிறாள் காயத்ரி.

“ஆச்சுங்க, காயத்ரி பன்னீர் பண்ணிட்டு இருக்கா. சுமதி பக்கோடா போட்டுட்டு இருக்கா. நான் சப்பாத்தி பண்றேன். இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பிடலாம்.” என்றார் பாக்கியா. 

மேலும் முப்பது நிமிடங்கள் கடந்த நிலையில், “இன்னுமா முடியலை?” என்றவருக்கு எப்போதுமே நேரத்திற்கு எந்த விஷயத்தையும் செய்திருக்க வேண்டும்.

தங்கைக்கான சீர்வரிசை பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் கதிர். 

“கதிர் இதுல தாம்பூல தட்டு இருக்கு எடுத்து வச்சுடு..” என்று சொல்ல வாங்கிக்கொண்டு காரில் வைத்து விட்டு வர தினகரன் அனைவரையும் விரட்டிக்கொண்டு இருந்தார். 

“அப்பா நாம நேரத்துக்கு கிளம்பினாலும் மகாவும் மாப்பிள்ளையும் வர இன்னும் நேரம் ஆகும்…” என்றான் கதிர்.

“வரணுமா, எங்கிருந்து? ஏன்? இன்னைக்கு மாப்பிள்ளை லீவ் போட்டு இருக்கிறதா தானே சொன்ன? மகா எங்க போயிருக்கா?”

“ஆமாப்பா ரிஷி லீவ் போட்டிருக்கார் ஆனா அன்னைக்கு டாக்டர் ஊருல இல்லாததால அவங்களை பார்க்க முடியலை, இன்னிக்கு காலையிலேயே ஸ்கேன் பண்ண வர சொல்லிட்டாங்க…”

“ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டாங்கலா?”

“இப்ப தான் மகா வீட்ல இருந்து  கிளம்பறதுக்கு முன்னாடி பேசினா..” என்ற கதிர் தினகரனின் இரண்டாம் மகன்.

அவர்கள் வீட்டின் ஆணி வேர் அவன். அண்ணன் மிலிட்டிரியில் இருப்பதால் அனைத்து வகையிலும் ஒற்றை ஆளாக குடும்ப பாரத்தை சுமப்பவன். 

என்ன தான் தினகரன் கட்டுப்பாட்டில் குடும்பம் இயங்கினாலும் வெறுமனே ஆணை இடுவதோடு சரி செய்து முடிப்பது எல்லாம் கதிர்வேலன் தான்.

தினகரன் இப்போது செக்யூரிட்டி ஹெட்டாக வேலை பார்ப்பதால் சுழற்சி முறையில் வேலை முடித்து வரும் தந்தையை தொந்தரவு செய்யாமல் அவனே பார்த்து கொள்வான். 

“ஸ்கேன் எடுத்துட்டாங்களா இல்லையா? எவ்ளோ நேரம் ஆகுமாம்?..”

“இப்போ தான் ஸ்கேன் எடுக்க காத்திருக்காங்களாம், டாக்டரை பார்த்துட்டு வர நேரம் ஆகும்னு சொன்னா...”

“சரி, அவங்க பொறுமையா வரட்டும். அதுக்காக நாம நல்ல நேரத்தை தவிர விட முடியாது. சரி, நீ நாம கொண்டு போக வேண்டிய மத்த பொருளெல்லாம் எடுத்து வச்சுட்டியா?” 

“வச்சாச்சு மாமா..” என்றபடி அங்கே வந்தாள் அவர்களின் மூத்த மருமகள் சுமதி. 

மருமகள்கள் இருவருமே அவர்களுக்கு மற்றுமொரு  மகள் தான். அந்த அளவு அனுசரணையாக நடந்து கொள்பவர்கள்.

ஆனாலும் திவாகர் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே விடுமுறையில் வருவதால், குடும்ப பொறுப்பை ஏற்று நடத்த வேண்டிய அவசியம் கதிருக்கு.

அதனால் மனைவி பிள்ளையோடு சில நேரம் செலவிட முடியாமல் போகும். அதில் காயத்ரிக்கு என்றுமே மனத்தாங்கல் உண்டு.

*************

“எப்படி இருக்கீங்க மிஸ்டர் அண்ட் மிஸஸ் ரிஷி?” என்று புன்னகையோடு கேட்டார் ரிஷிவரதன்  நண்பனின் அன்னையும் மருத்துவருமான லீலாவதி.

“நல்லா இருக்கோம் ஆன்ட்டி..”

“இன்னிக்கு ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லி இருந்தேனே? எடுத்துட்டீங்களா?”

“எடுத்தாச்சு ஆன்ட்டி. இதோ ரிப்போர்ட்…” என்று அவரிடம் ஃபைலை கொடுத்தான். 

சில நொடிகள் ஃபைலில் விழிகளை நிலைக்க விட்டவர், “ட்வின்ஸ்னு பயப்பட வேண்டாம், எல்லாம் நார்மலா இருக்கு ரிஷி. நத்திங் டூ வொரி, வேற ஏதாவது காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கா மா?” என்றார் மகாலட்சுமியிடம். 

“மேம் எனக்கு தலை சுற்றல் அதிகமா இருக்கு, நெய் உட்பட சில ஸ்மெல் ஒத்துக்க மாட்டேங்குது, வாமிட்டிங் அதிகமா இருக்கு, மார்னிங் சிக்னஸ்னால ரொம்ப சீக்கிரமே டையார்டாகிடுறேன்...” என்றாள்.

“இது நார்மல் தான் மகா. ஒரு சிலருக்கு உனக்கு இருக்கிற எந்த சிம்டம்ஸும் இருக்காது இன்பாக்ட் அவங்களுக்கு வயிறு கூட தெரியாது. அவங்களா ப்ரெக்னேன்ட்டா இருக்கிறதை அவங்களா சொல்லாம தெரியாது.. அந்தளவு நார்மலா இருப்பாங்க.."

"அதே இன்னும் சிலரை மசக்கை பாடா படுத்தி பாதியாக்கிடும்.. உனக்கு எந்த ஸ்மெல் ஒத்துக்கலையோ அதை அவாய்ட் பண்ணிடுங்க. தென் வாமிட்டிங்காக டேப்லெட் கொடுக்கிறேன் அதிகமா இருக்கிறப்போ எடுங்க போதும்..” என்றிட மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தனர். 

“ஏதாவது சாப்பிடறியா லச்சு?” என்றான் ரிஷி அவள் கையில் இருந்த பையையும் ஃபைலையும் வாங்கிய படி. 

அவளுக்கு இப்போதைக்கு எதுவும் தேவையில்லை என்றாலும் கணவனுடன் பேச வேண்டி இருப்பதால், “காஃபி சாப்ட்டுட்டு போகலாமா?” என்றாள்.  

“சரி நீ உட்கார், நான் வந்துடுறேன்..” என்ற ரிஷி காஃபி வாங்க செல்ல இவளுக்கு கதிரிடம் இருந்து அழைப்பு, “சொல்லுங்க அண்ணா, எங்க இருக்கீங்க?” 

“நாங்க ரீச்சாகிட்டோம், நீங்க?” 

“முடிஞ்சது ண்ணா, காஃபி குடிச்சுட்டு கிளம்பிடுவோம்..” என்று சொல்ல ரிஷி காஃபியோடு வந்தான்.

"என்னங்க எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" இன்று மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் மகாலட்சுமி.

"சொல்லு லச்சு" என்றவன், "சுகர் ஓகேவா? இல்லை இன்னும் கொஞ்சம் தேவையா" என்றான்.

"சரியா இருக்கு" இன்று காஃபியை பருக தொடங்கிய அதே நேரம் சமையலறையில் இருந்து வந்த தாளிப்பு நெடி அவளுக்கு குமட்டச் செய்தது. 

உடனே கர்சீஃப்பால் மூக்கை பொத்தினாள்.

“என்னாச்சு வாமிட் வர மாதிரி இருக்கா?” என்று கேட்க வாயை பொத்திக்கொண்டு வாஷ்பேஸினுக்கு சென்றாள்.

அவளை பின் தொடர்ந்து வந்த ரிஷி மகாவின் தலையைப் பிடித்துக் கொண்டு நிற்க அவளுக்கு காலை உணவு மொத்தமும் வெளியில் வந்துவிட்டது.

மகா சோர்வோடு நாற்காலில் தலை சாய்த்து அமர்ந்து கண்களை மூடிக்கொள்ள, "லச்சு இப்ப எப்படி இருக்கு?" என்றான்.

"பரவாயில்லைங்க.." என்றாள் ஈனஸ்வரத்தில்.

“காஃபி ஆறிடுச்சு லச்சு, நீ இரு நான் வரேன்..” என்றவன் அவளுக்கு இதமாக இருக்கும் விதத்தில் பழச்சாறு வாங்கிக் கொண்டு திரும்பினான்.

"காஃபி?"

"இப்பதானே வாமிட் எடுத்திருக்க. காஃபி வேண்டாம். ஜூஸ் குடி. யூ ஃபீல் பெட்டர்" என்றவனை பார்த்தபடி இருந்தவளுக்கு ‘இப்போது பேச்சை ஆரம்பிப்பதா? கூடாதா?’ என்ற குழப்பம்.  

இத்தனை அனுசரணையாக இருப்பவன் அவள் எடுக்க போகும் முடிவை கேட்டபின் 'எப்படி நடந்து கொள்வானோ?!' என்ற அச்சம் அவளை சூழந்தது.

 


Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 20.3