மாலை கிளம்பும் வேளையில் "மேடம் உங்களை கரெஸ் ஸார்
கூப்பிடுறார்" என்று ஸ்டாஃப் ரூமில் இருந்த தளிரை அழைக்கவும் அம்பலவாணனின்
அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே செல்ல, "உட்காரும்மா" என்றார்.
"இருக்கட்டும் ஸார்" என்று வழமை போல
சொல்லிவிட்ட தளிர் தன்னை திருத்தும் முன்,
"ஸார் இல்ல மாமான்னு கூப்பிடனும்னு எத்தனை
முறை சொல்றது தளிர்..’ என்றவரின் குரலில் சிறு கண்டிப்பு...
"ஸாரி மாமா சொல்லுங்க என்ன விஷயம்..?"
"முதல்ல உட்காரும்மா" என்றவரின்
குரலை இப்போது மறுக்க முடியாமல் தளிர் அமர்ந்ததுமே
"என்னம்மா முடிவு செய்திருக்க..?" என்றார்.
"எதை பற்றி மாமா கேட்கறீங்க ..?"
"கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வாரம்கூட
இல்ல நாளை மறுநாள் முகூர்த்த புடவை எடுக்கணும் ஆனா நீ லீவ் எதுவும் அப்ளை பண்ணலைன்னு
ஆஃபிஸ்ல சொன்னாங்க அதான் லீவ் விஷயமா என்ன முடிவு பண்ணியிருக்கன்னு
கேட்டேன்.."
"நான் இதுவரை எதுவும் யோசிக்கல மாமா
தேவைப்படும் போது லீவ், பெர்மிஷன் எடுத்துகிட்டேன்... ஆனா
இப்போ குழந்தைகளுக்கு எக்ஸாம்ஸ் இருக்கு ஸோ அதிகநாள் எடுக்கமுடியாது.. அதோட
இன்னும் அ..." என்றவள் தயக்கத்தோடு பேச்சை நிறுத்த..,
"இன்னும் என்னம்மா? உதய்கிட்ட
கேட்கணும்னு யோசிக்கிறியா..?"
"அப்படியில்ல மாமா.." என்றவள்
ஒருகணம் நிதானித்து, "ஆனா நான் அவர்கிட்ட கேட்டுட்டு
சொல்லட்டுமா..? உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே.."
"அப்படி எதுவுமில்ல தளிர்.. உன் விருப்பம்
போல என் பையன்கிட்ட பேசி முடிவை சொல்லு போதும்.." என்றவருக்கு தெரியுமே
தளிருக்கு என்றுமே குழந்தைகள் தான் பிரதானம் என்பதும் இத்தனை வருடங்கள் வேலை செய்த
பள்ளியின் தாளாளர் மாமனாராக மாறியபோதும் நிச்சயம் வேலையை விடமாட்டாள் அதற்கு யாரும்
அவளை நிர்பந்திக்க போவதுமில்லை.
தளிரின் அர்பணிப்பும் குழந்தைகளை அரவணைத்து செல்லும் பாங்கும்
தான் மகன் கேட்டதுமே அம்பலவாணனுக்கு அவளை தன் வீட்டு மருமகளாக ஏற்க வைத்தது.
சொல்லபோனால் தளிரை பார்க்கையில் எல்லாம் இப்படி ஒரு பெண் தன் மகனின் துணையாக
அமைந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் எண்ணாத நாளில்லை ஆனாலும் மகனின் வாழ்க்கையை
அவன் விருப்பம் போல அமைத்து கொடுக்கவேண்டியே தன் எண்ணத்தை வெளிபடுத்தாது பெண்
தேடும் படலத்தில் இறங்கியிருந்தார்.
ஆனால் மகனே தளிரை விரும்புவதாக கூறவும் இனியும் தாமதிப்பதற்கு
இல்லை என்று உடனே பெண் கேட்டு சென்றுவிட்டார்.
"முகூர்த்த புடவை எடுக்க போறதை பற்றி
அம்மா சொன்னாங்களா ம்மா.."
"சொன்னாங்க மாமா"
"என்னமோ தெரியலை உங்க அத்தைக்கு முடியாம
போனதால முதல்முறை தடைபட்டு இரண்டாம் முறையும் எடுக்க முடியாம போயிடுச்சு
புதன்கிழமை எடுத்துடலாம் கார் அனுப்புறேன் நீங்க எல்லாரும் அதுல வந்துடுங்க"
என்ற அம்பலவானனுக்கு அன்று ராஜியின் பேச்சை கேட்டு மாமியாராக தனக்கு முன்னுரிமை
வேண்டியே தளிரிடம் கேட்டு முடிவு செய்த நாளில் புடவை எடுப்பதை மனைவி தள்ளிபோட்டார்
என்பது தெரிய வாய்ப்பில்லை.
ஏனோ தளிர் விடயத்தில் முரணாக நடந்துகொண்டாலும் மனைவியின்
உடல்நலக்குறைவை அன்று அம்பலவானனுக்கு சந்தேகிக்க
தோன்றவில்லை.. அடுத்தமுறை நாள் நட்சத்திரம் மகனின் ராசிக்கு சரியில்லை என்று கூறி
ராஜியின் ஆலோசனையின் பெயரில் ஜெகதீஸ்வரி தேர்ந்தெடுத்த நாளில் தான் முகூர்த்த
புடவை எடுக்க போகிறார்கள்.
"இல்ல மாமா பரவால்ல வேண்டாம் என்னோட
ஸ்கூட்டி இருக்கு நாங்க வந்துடுவோம்"
"என்னம்மா பேசுற கல்யாணம் கிட்ட
நெருங்குது உங்க ஹெல்ப்க்கு நான் நம்ம டிரைவரையும் ஒரு
அம்மாவையும் அனுப்புறேன்... அவங்க உங்களுக்கு உதவுவாங்க"
"இல்ல மாமா தென்றலும் நானுமே
சமாளிச்சுப்போம்.. ஆல்மோஸ்ட் எல்லா வேலையும் முடிஞ்சது அதோட கல்யாணம் நீங்க
எடுத்து செய்யறப்போ எங்களுக்கு பெருசா எதுவும் வேலையில்ல.."
"அப்படி சொல்லமுடியாது தளிர் கல்யாண
வீடுன்னாலே பூ, குண்டூசி, பாத்திரம்,
பண்டம்னு சின்னதும் பெருசுமா ஆயிரத்தெட்டு அவசர வேலைகள் முளைக்கும்
சீதா மட்டும் பார்க்கிறது கஷ்டம் ஒத்தாசைக்கு கூட ஒருத்தர் இருக்கிறது தப்பில்லை. அதோட
உங்க சேஃப்டி எனக்கு ரொம்ப முக்கியம்.. தென்றல் டூவீலர்ல போறது நல்லதில்ல நான்
சீதாகிட்ட ஏற்கனவே பேசிட்டேன் வெளியே போகவர கார் அனுப்புறேன் வேண்டாம் சொல்லகூடாது
புரியுதா..?"
"சரி மாமா" என்றவளுக்கு தெரியுமே
நிச்சயம் முடிந்ததுமே அம்பலவாணன் சீதாவிடம் இதுகுறித்து பேசியதும் அவர்
மறுத்ததும்.. இப்போது அன்னையே ஒப்புக்கொண்ட பிறகு அவளுக்கு என்ன மறுப்பிருக்க
போகிறது..?
அம்பலவாணனின் அறையில் இருந்து வெளியேறி ஸ்டாஃப் ரூமிற்கு
சென்ற தளிர் உடன் பணிபுரிவோருக்கு பத்திரிகை கொடுத்து திருமணத்திற்கு அழைக்கவும்,
"தளிர் மேம் அதுதான் கரெஸ் சார் ஏற்கனவே
எல்லாருக்கும் அனுப்பிட்டாரே நீங்க வேற தனியா கொடுக்கனுமா..?" என்று கேட்டவருக்கு பதிலாக புன்னகையை கொடுத்து, "கண்டிப்பா வந்துடுங்க" என்று பத்திரிகை கொடுத்தாள்.
அனைவருக்கும் கொடுத்து முடித்தவள் பின் தன் ஸ்கூட்டியில்
கிளம்பி அடுத்து சென்று சேர்ந்த இடம் சக்ஸஸ் அகாடெமி. இது அரசு தேர்வுகளுக்கு
முயற்சிக்கும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் மையம் இங்கே தான் கடந்த இரண்டு
வருடங்களாக மாலை வகுப்புகளையும் சிலநேரம் காலை வகுப்புகளையும் தளிர் எடுக்கிறாள்.
ஏழரை மணியளவில் ஆங்கில வகுப்பை முடித்துவிட்டு வீடு சென்று சேர்ந்தவளுக்கு சீதா
சூடாக காஃபி கொடுக்கவும் குடித்து முடித்தவள் முகம் கழுவி உடைமாற்றி
மாடிக்கு செல்ல அங்கே டியூஷன் பிள்ளைகள் காத்திருந்தனர்.
"நீ போய் படி தென்றல் நான்
பார்த்துக்கறேன்" என்ற தளிர் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க கீழே வந்த
தென்றல் தன்னறையில் அமர்ந்து படிப்பை தொடர்ந்தாள்.
இதுதான் தாய் மற்றும் இருமகள்களின் அன்றாட வழக்கம்.
கல்லூரியில் இருந்து முதலில் வரும் தென்றல் தளிர் வரும்வரை
பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பவள் அவள் வந்த பின்னர் தன் பாடபுத்தகங்களோடு அமர்ந்து
கொள்வாள். குழந்தைகளை அனுப்பிவிட்டு ஒன்பது மணியளவில் தளிர் வரவும் அனைவரும்
ஒன்றாக அமர்ந்து இரவு உணவை முடிக்கவும் தளிரின் கைபேசி ஒளிரவும் சரியாக இருந்தது.
தளிர் இரவு உணவை முடிக்கவும் அவள் கைபேசி ஒளிர்ந்தது அதில்
கஜபதியின் மகன் ஜீவாவின் அழைப்பு. நேற்றிலிருந்தே பலமுறை அழைத்தும் ஏற்காமல்
போனவர் இப்போது தானே அழைக்கவும் உடனே ஏற்ற தளிர் “சொல்லுங்கண்ணா
எப்போ வரீங்க...?" என்று உற்சாகமாக கேட்டிட மறுபுறம் ஏதோ
சொல்லப்படவும் தளிரின் முகம் மெல்ல மெல்ல பொலிவிழந்தது.
ஒருகட்டத்தில் “அண்ணா பெரிம்மாவையாவது அனுப்புங்க நானே வந்து
பிக்கப் பண்ணி திரும்ப அவங்களை பத்திரமா அனுப்பி வைக்கிறேன்” என்றவள் மேலும் சில
நிமிடங்கள் பேசி முடிக்க மற்றவர்கள் பார்வை அவள் மீதே..,
“ம்மா அண்ணி வீட்டு பக்கம் ஏதோ பிரச்சனையாம்
அதனால அவங்க யாரும் புடவை எடுக்க வரமுடியாது நம்மளையே பார்த்துக்க
சொன்னாங்கம்மா..”
“அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே க்கா நான் சொன்னா
யார் கேட்கிறா..? அம்மா நேர்ல சொல்லிட்டு வந்ததுமில்லாம
அவங்களுக்கு இதோட பத்து காலுக்கு மேல பேசியிருப்பாங்க ஆனா கடைசியில காலை
வாரிட்டாங்க. அவங்க ஒன்னும் வரத் தேவையில்லை நாமலே செலெக்ட் பண்ணிக்கலாம்”
“தென்றல் என்ன பேச்சு இது..? அமைதியா இரு” என்ற தளிர், “இப்போ என்னம்மா
செய்யறது..?” என்றாள்.
“இந்த பதில் வரும்னு நான் எதிர்பார்க்கலைடா..
எனக்காக இல்லைன்னாலும் உனக்காக வருவாங்கன்னு நினைச்சேன் அம்மூ..!” என்றவரின்
மனதில் ஏதோ பாரம் அழுத்தவும் தண்ணீர் குடித்து தன்னை
நிலைபடுத்தியவர்,
“இன்னொருமுறை கால் பண்ணிகொடும்மா நான்
பேசிப்பார்க்கிறேன்.." என்று சீதா சொல்லவும் நேரடியாக கஜபதிக்கே அழைத்தாள்
ஆனால் நான்குமுறையும் முழு அழைப்பு அடித்து ஓய்ந்தது ஆனால் அவர் ஏற்கவில்லை.
"ம்மா பெரிப்பா எடுக்கலை இப்போ என்னம்மா
செய்யறது..?"
"வேற என்ன செய்ய..? நான்
என்னோட வேலை செய்யறவங்களையும் நம்ம அக்கம் பக்கம் சிலரையும் கூப்பிட்டிருக்கேன்
அவங்களோட போயிட்டு வந்துடலாம்..”
“ம்மா நீங்க கஷ்டபடாதீங்க நான் வேணும்னா
இன்னொருமுறை அண்ணனுக்கே ட்ரை பண்ணி பெரிப்பாகிட்ட பேசி பார்க்கட்டுமா...?” என்றாள் தாயின் நிலையை உணர்ந்த மகளாக.
“அக்கா அம்மா சொல்லியே வராதவர் நீ சொன்னா
மட்டும் வந்துடுவாரா..? நம்மளை ஒதுக்கணும்னு நினைக்கிறவங்க
கண்ணிருந்தும் குருடா காதிருந்தும் செவிடா வாயிருந்தும் ஊமையா தான் இருப்பாங்களே
தவிர மனசாட்சியோட நடந்துக்க மாட்டாங்க.. உனக்கு நிச்சயமானது கல்யாணம் ஆகபோறது
எல்லாமே அவங்களுக்கு தெரியும் தானே..!! பாசம் இருந்தா அன்னைக்கு அம்மா சொன்ன
மாதிரி ஆம்பளை இல்லாத வீடு தனியா என்ன பண்ணுவாங்கன்னு அவங்களாவே தேடி
வந்திருப்பாங்க.. அதைவிட்டுட்டு நம்மளை ஒவ்வொரு முறையும் அவங்களை தேடி போய் கெஞ்ச
விடுறது எல்லாம் மனுஷதன்மையே இல்லாத செயல்.. ஏன் அவர் பசங்களுக்கு கல்யாணம்
பண்ணினவருக்கு அவங்களோட ப்ரெசென்ஸ் இங்க எவ்ளோ முக்கியம்ன்னு தெரியாதா..? நம்ம
கஷ்டத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து சந்தோஷபடறது என்ன மாதிரி ஆட்டிடியூட் சரியான
சாடிஸ்ட்" என்று ஆற்றாமையில் பேசிய தென்றலிடம்,
"பெரியவங்கள அப்படி பேசகூடாது" என்ற
சீதாவின் வார்த்தைகள் எல்லாம் எடுபடவில்லை.
"நான் அன்னைக்கே சொல்லிட்டேன் அவர் பெரிய
மனுஷனா நடந்துக்கல நானும் அப்படி இருக்க மாட்டேன்.. நீங்களே சொல்லுங்கம்மா அப்படி
என்ன அவர் அந்தஸ்த்துக்கு நாம குறைஞ்சு போயிட்டோம்..?” என்று கேட்க சீதாவின் நினைப்போ மகளின் முகூர்த்த புடவையை
மூன்று அல்லது ஐந்து சுமங்கலிகள் சேர்ந்து தான் வாங்க வேண்டும்.. மாப்பிள்ளை
வீட்டார் சார்பாக பலர் இருக்க பெண் வீட்டு சார்பாக இருக்கும் ஒரே நெருங்கிய
சொந்தமான கஜபதியின் மனைவி மற்றும் மருமகள் இருக்க வேண்டுமே இப்போது அவர்கள்
இல்லையென்றால் யாரை கேட்பது என்பதில் மட்டும் தான் இருந்தது.
“நம்மை புரிஞ்சுகிட்டு நமக்காக தேடி வரவங்க
இரண்டே பேரா இருந்தாலும் போதும்.. வேணும்னு நம்மளை அலைக்கழிக்க நினைக்கிறவங்க
எப்பேற்பட்ட ஆளா இருந்தாலும் தேவையே இல்லை திரும்ப திரும்ப அவங்களை கெஞ்சனும்னு
நமக்கு என்ன அவசியம்..? அவங்களை மாதிரி ஆள்களை எல்லாம்
தூக்கி சுமக்கனும்னு நினைச்சா நாம எந்திரிக்கவே முடியாது புரிஞ்சுக்கோக்கா..”
“தென்றல் அவசரப்பட்டு பேசாத.. நானும் எதையும்
மறுக்கலை ஆனா மத்தவங்களை விட அம்மா முக்கியம்..”
“இல்லைன்னு சொல்லலை அதுக்காக சுயமரியாதையை
விட்டுட முடியாதுக்கா.. நம்மோட ஸெல்ஃப் ரெஸ்பெக்ட்டை தகுதியே இல்லாதவங்க கிட்ட இழந்துடகூடாது
நீ நேர்லயே போய் நின்னாலும் அந்தாளு வரப்போறது இல்லை திரும்ப கால் பண்ணி அவரோட
ஈகோவை ஸாட்டிஸ்ஃபை பண்ணபோறியா..? ஏன் அம்மாவோட வொர்க் பண்ற
ஆன்டிங்களை பார்த்தா உனக்கு மனுஷங்களா தெரியலையா..? அவங்க
சேர்ந்து வந்து செய்தா உன் கல்யாணம் நடக்காதா..?"
“என்னை முக்கியமா நினைக்காத நீயெல்லாம் எனக்கு
ஒரு ஆளே இல்லைன்னு தூக்கி போட்டுட்டு போ.. நம்மை மதிக்காதவங்களை நாம மதிக்கணுன்னு
ஒன்னும் அவசியமில்லன்னு சொல்லி கொடுத்ததே நீதான் க்கா ஆனா இப்போ என்னாச்சு
உனக்கு..? ஏன் இப்படி நடந்துக்குற..? உனக்கு
வேற வேலை இல்லைன்னா போய் அத்தானோட பேசு அவர் உன்னை ரொம்ப மிஸ் பண்றார்
அதைவிட்டுட்டு தேவையில்லாத ஆணியை பிடுங்கிட்டு இருக்க..” என்ற தென்றல் கோபமாக
எழுந்து செல்ல சுவரில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்த சீதாவின் மனமெங்கும் வலி..!
“தென்றல் நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியாம
இல்லடி.. நான் அப்படி சொல்ல வரலை ஆனா கொஞ்சம் அம்மாவை யோசிச்சு பாரு..” என்று
தங்கையின் பின்னே சென்ற தளிர் பல நிமிடங்களுக்கு பின் போராடி அவளை சமாதானபடுத்திவிட்டு
வெளியில் வர அங்கே சீதாலக்ஷ்மி கணவரின் புகைப்படத்தின் முன் மெளனமாக
அமர்ந்திருந்தார்.
எப்போதும் போலவே கண்ணீர் இன்றி, வார்த்தைகள் இன்றி
தந்தையுடன் மனதார அவர் மன்றாடல்கள் இருக்கும் என்பதை உணர்ந்த தளிர் சீதா தன்னை
திரும்பி பார்க்கவும்,
“அம்மா நான் அவருக்கு பேசிட்டு வரேன்..” என்று
மாடியறைக்கு சென்று உதய்க்கு அழைத்துவிட்டாள்.
"வாவ் வாட் எ சர்ப்ரைஸ்!! மேடம் அதிசயமா
எனக்கு கால் பண்ணியிருக்கீங்க..? என்ன இன்னைக்கு எந்த
ப்ரிபரேஷனும் இல்லையா..?”
"இருக்குங்க ஆனா உங்ககிட்ட ஒரு விஷயம்
கேட்கணும்..? நீங்க ஃப்ரீயா இருந்தா இப்போ பேசலாமா..?"
என்று தளிர் நேரடியாக விஷயத்திற்கு வர அவள் குரலில் இருந்த
தீவிரத்தில்,
"இதென்ன கேள்வி தளிர்..? நீ எப்போ பேச நினைச்சாலும் என்னை நான் ஃப்ரீ பண்ணிப்பேன் சொல்லும்மா என்ன
விஷயம்..?" என்றான்.
"கல்யாணத்துக்கு பிறகும் நான் வேலைக்கு
போகணும் என்னால விடமுடியாது, அதுல உங்களுக்கு
ஏதாவது..." என்று அவள் முடிக்கும் முன்னமே..,
"தாராளமா போகலாமே, யார்
உன்னை வேண்டாம் சொன்னா..? நாம முதல்முறை இதைப்பற்றி
பேசும்போதே நீ வேலைக்கு போகவும் உன்னோட சம்பளத்தை அத்தைக்கு கொடுக்கவும் ஓகே
சொன்னதா எனக்கு நியாபகம் ஏன் திரும்ப கேட்கிற..?"
"இல்ல ஒருவேளை
இன்னைக்கு ஸ்கூல்ல நான்.. நமக்குள்ள..” என்றவளுக்கு தன் வகுப்பறையை விட்டு
சென்றபோது ஒருநொடி உதயனின் பார்வை வளையல்கள் மீது அழுத்தமாக படிந்தது நினைவில்
எழவும்,
“ஐம் ஸாரி நீங்க.. ஐ மீன் என்மேல கோபமா
இருக்கிறதால வேண்டாம் சொல்லிடுவீங்கன்னு நினைச்சேன்..." என்று ஒருவழியாக
சொல்லி முடித்தாள்.
"கோபமா..?” என்று
ஒருநொடி நிதானித்தவன்..,
“தளிர் எப்பவும் நான் என்னோட முடிவுகளை அவ்ளோ
சீக்கிரம் எடுக்கமாட்டேன் அப்படி எடுத்தா அதுல இருந்து எப்பவும், எதுக்காகவும் யாருக்காகவும் பின்வாங்க மாட்டேன். இன்னும் நமக்குள்ள சரியா
பேசிக்கவே முடியாத நிலையில் நிச்சயம் சின்ன சின்ன மிஸ்ஸண்டர்ஸ்டான்டிங் வரத்தான்
செய்யும்.. அதுக்காக கோபபட்டா அது அந்த மொமென்ட்டோட ரியாக்ஷன் அவ்ளோதான்.. அதையே
நாள் முழுக்க தூக்கிட்டு சுமப்பாங்களா என்ன..?” என்று கேட்க
இல்லை என்றாள்.
"தட்ஸ் இட்! நத்திங் ஈஸ் பர்மனென்ட் ஜஸ்ட்
லிவ் தி மொமென்ட்.. உன்கிட்ட சொன்னா சொன்னது தான் நிச்சயம் அதுல மாற்றம்
இருக்காது... யூ கேன் ட்ரஸ்ட் மீ" என்றதில் சற்று ஆசுவாசம் கொண்டவள்.,
“அப்புறம் இன்னொரு விஷயம் கேட்கணும்..”
“கேளு..”
“நான் இன்னும் லீவ் அப்ளை பண்ணலை.. நம்ம
கல்யாணத்துக்கு எவ்ளோ நாள் எடுக்கட்டும் சொல்லுங்க.."
"உனக்கு எவ்ளோ நாள் வேணுமோ அவ்ளோ நாள்
போட்டுக்கோ.."
"இல்ல உங்களுக்கு எப்படி..? கல்யாணத்துக்கு
அப்புறம் ஏதாவது ப்ளான் வச்சிருக்கீங்களா..? நீங்க சொல்லுங்க
நாம் டிஸைட் பண்ணிட்டு அதன்படி எடுத்துக்குறேன்.."
"என்ன ப்ளான்..? நான்தான்
உன்னிஷ்ட்டம்..” என்று பேசிக்கொண்டே சென்றவனுக்கு அவள் கேள்வி புரிய.., “ஓஹ் நீ நம்ம ஹனிமூன் ட்ரிப் பற்றி கேட்கிறியா தளிர்..?" என்றவனின்
முகத்தில் இளம்முறுவல்..
‘....’
"ஆமாவா தளிர்..?"
"இல்ல குழந்தைகளுக்கு எக்ஸாம் இருக்கு
அதிகநாள் முடியாது நான் உடனே ஜாயின் பண்ணனும்.."
"பண்ணிக்கோ..! கன்ஸ்ட்ரக்ஷன் இன்னும்
முடியாததால நானும் ஹனிமூன் பற்றி எதுவும் ப்ளான் பண்ணலை அவசரமா கிளம்பனும்னு இல்லை
நிதானமா போகலாம் நோ ப்ராப்ளம்.. உன்கிட்ட பாஸ்போர்ட் இருக்கா இல்லைன்னா சொல்லு
அப்ளை பண்ணிடலாம்..”
"இருக்குங்க, நான்
எப்போ ஜாயின் பண்ணினாலும் உங்களுக்கு ஓகேதானே..?"
"டபுள் ஓகே"
"அப்போ நான் வைக்கட்டா.."
"ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் பேச நேரம்
கிடைச்சிருக்கு நீ பேசு தளிர் கேட்கணும் போல இருக்கு.."
‘.....’
"என்ன அமைதியாகிட்ட..?" என்று உதய் கேட்க அவளுக்கோ இவனிடம் பேசிவிட்டு தந்தையின் முன்
அமர்ந்திருந்த அன்னையை பார்க்கும் அவசரம்.. ஆனால் அதை சொன்னால் இன்னுமே கோபம்
கொள்வானோ என்று அமைதியாக இருந்தாள்.
“உப்ஸ்...” என்று மூச்சை எடுத்துவிட்டவன்,
"எனக்கு உன்கிட்ட நிறைய பேசணும் ஆனா நான் ஏதாவது ஆரம்பிச்சா
டைவர்ட் பண்ணி விட்டுடுற நீ ..? என்னோட பேசணும்னா நான் என்ன
செய்யணும் சொல்லு செய்யறேன்.."
"எனக்கும் பேசணும் ஆனா எப்படி
ஆரம்பிக்கன்னு தெரியலை.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும் இப்போ நீங்க ஏதாவது கேளுங்க
நான் சொல்றேன்"
"ஓகே ஹனிமூன்க்கு எந்த ஸ்பாட்ன்னு நீயே
செலெக்ட் பண்ணி சொல்லு தளிர்” என்று கேட்க சட்டென பதில்
சொல்ல முடியாதவளிடம் மீண்டும் அமைதி.
"..."
"ப்ச் கேட்கிறது காதுல விழுதா..?”
"ஹ்ம்ம் ஆனா நீங்க பர்சேஸ் போகணும்
சொல்லிட்டு இருந்தீங்களே அது..."
"திரும்ப என்னை டைவர்ட் பண்ற நீ..?
என்று புன்னகைத்தவன் ஓகே ஃபைன் பர்சேஸ்க்கு இன்னொரு நாள் போகலாம்
பட் நாளைக்கு ஸ்கூல் முடிஞ்சபிறகு வெளில போகலாமா..? என்
பிரெண்ட்ஸ் ஃபாமிலி உன்னை மீட் பண்ணனும் சொல்லிட்டு இருந்தாங்க.."
"எனக்கு அகெடமி கிளாசஸ் இருக்குங்க.. எக்ஸாம் டேட்
அனொன்ஸ் பண்ணிட்டாங்க ஒருநாள் கூட டைம் வேஸ்ட்.."
"ஓகே யூ கேரி ஆன்.." என்று உதய் உடனே
கத்தரித்துவிட 'ச்சோ என்ன பேசிட்டு இருக்க தளிர்.. யோசிக்காம
இப்படிதான் டக்குன்னு பதில் சொல்லுவியா..?' என்று தன்னையே
கடிந்து கொண்டவள் கீழிறங்கி தன் அறைக்கு வந்து மேஜையின் முன் அமர்ந்தாள்.
தன் போக்கில் பேப்பர் பண்டிலை எடுத்து வைத்துவிட்டாலும்
தளிரின் பார்வை என்னவோ கைப்பேசியிலேயே இருந்தது. உதய்யின் ஏக்கம் சுமந்த
வார்த்தைகளை கேட்டபின்னர் தளிரால் அடுத்து எதையும் செய்ய முடியவில்லை. ஏனோ
இப்படியே பழகிவிட்டவளுக்கு திடிரென்ற இம்மாற்றங்களை கையாள தெரியவில்லை, அவன்
ஏக்கம் புரிந்தாலும் உடனே அதற்கு இசைந்துவிட முடியாது தத்தளித்து கொண்டிருந்தாள்.
Comments
Post a Comment