வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

மனசெல்லாம் மழையே - 9

 

தளிருக்கான நிச்சய புடவையே இரண்டு லட்சத்தில் எடுத்த அம்பலவாணன் இப்போது திருமணத்திற்கென எடுக்கவிருக்கும் புடவையின் விலையும்  சில லட்சங்கள்.. அதோடு சேர்த்து தென்றல் தன் மகள்கள் என்று அனைவருக்குமே லட்சத்திலேயே புடவைகளை காண்பிக்க சொல்லியிருக்கிறார்.

"சரிம்மா நீங்க என் மருமகளுக்கு புடவை பாருங்க நானும் மாப்பிள்ளையும் உதய்க்கு செலெக்ட் பண்றோம்" என்றவர் அருகேயிருந்த மூத்த மாப்பிள்ளை சரவணனிடம் "போகலாமாப்பா" என்று கேட்கவும்,

"மாப்பிள்ளை எங்கண்ணா அவரை காணலை..? எப்போ வருவார்..?"

"எங்களோட தான் கிளம்பினான் சீதா வரவழியில தான் ஷோ ரூம்ல இன்னைக்கு டெலிவரி எடுத்த வண்டியை ஓட்ட தெரியாம ஓட்டி இடிச்சுட்டாங்கன்னு தகவல் கிடைச்சது..” என்றவரை இடையிட்டு,

என்னண்ணா சொல்றீங்க..? யாருக்கும் ஒன்னுமில்லையே..” என்று சீதா பதறவும்.,

இல்லம்மா பெருசா அடியில்ல ஆனாலும் கார் டெலிவரி எடுத்த பிறகு என்ன நடந்தாலும் அது அவங்களோட பொறுப்பு.. இருந்தும் ஏதோ பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்களாம் அதான் அங்க போயிருக்கான்.., அதையெல்லாம் முடிச்சுட்டு எப்படியும் ஒருமணி நேரத்துக்குள்ள வந்துடுவான் நீங்க பாருங்க.." என்றவர்  சீதாவோடு முதல் தளத்திற்கு சென்றார்.

அவர்களுடன் வந்த கடையின் முதலாளி பணியாளர்களிடம் அனைவருக்கும் புடவைகளை காண்பிக்குமாறு கூற அங்கே இவர்களின் திருமணத்திற்காக பிரத்யேகமான புடவைகள் தயாராக இருக்கவும் மனைவியிடம் பார்த்துகொள்ளுமாறு சொன்னவர் தென்றலிடம், "நிவிகிட்ட சொல்லியிருக்கேன் தென்றல் அக்காக்கு பிடிச்ச மாதிரி எடு அதேபோல உனக்கும் பிடிச்ச புடவை எடுத்துக்கணும் விலையை எல்லாம் பார்க்ககூடாது" என்றவர் மருமகனோடு அடுத்த தளத்திற்கு சென்றார்.

அனைவருக்கும் குளிர்பானம் கொடுக்கபட  நிவி மற்றும் சுஜியின் நடுவே நின்றிருந்த தென்றல் மகிழ்ச்சியோடு தளிர்க்கு வீடியோ கால் செய்து அவளுக்கு காண்பித்தவாறே  புடவைகளை பார்வையிட்டு கொண்டிருந்தாள்.

விஸ்தாரமான தளத்தில் சற்றுதள்ளி நின்றிருந்த ராஜி மற்றும் ஜெகாவை கண்டு, “எப்படி இருக்கீங்க அண்ணி..?" என்ற சீதாவிடம்,

"எங்க சீதா தளிரை காணோம் நீங்க மட்டும் வந்திருக்கீங்க..?" என்று ஜெகதீஸ்வரி தெரிந்தே கேள்வி கேட்டார்.

ஆம் சீதாவின் அழைப்பு வந்ததுமே அம்பலவாணன் மனைவியை அழைத்து நிலைமையை சொல்லவும் முகத்தை சுழித்த ஜெகதீஸ்வரி

"நல்லநாள் அதுவுமா இப்படியா அபசகுனமா ஆகணும்... என் பையனுக்கு எது நல்லதுன்னு தெரியும்னு சொல்லுவீங்களே இப்போ சொல்லுங்க இது சரியா..?" என்றதுமே "ஈஸ்வரி.." என்று அதட்டல் போட்ட அம்பலவாணன்,

"எந்த காலத்துல இருக்க? மங்களகரமான விஷயம் செய்யறப்போ அமங்கலமான வார்த்தைகளை பேசிட்டு இருக்க..?"

"எனக்கென்ன வேண்டுதலா..? சாமிக்கு வச்சு படைக்கணும்னு உங்களுக்கு தெரியாதா..? நம்ம பொண்ணுங்களுக்கு அப்படிதானே செய்தோம் இப்போ அவ தொட்டு அதை கட்டிபார்த்து அதுக்கப்புறம்  எடுத்துட்டு போய் சாமிகிட்ட.. ஏங்க உங்களுக்கு சாமி விஷயமும் சாதாரணமா போச்சா சுத்தபத்தமா இருக்க வேண்டாமா...?"  

"ப்ச் ஏன் உங்க மருமகளை கேட்டு தானே நாள் முடிவு பண்ணினீங்க இவ்ளோ படிச்சிருக்க ஒருத்திக்கு இதுகூடவா தெரியாது.. முன்னாடியே சொல்லியிருந்தா அப்போவே எடுத்திருக்கலாமே..? என் பையன் நல்லதுக்காக தான் இவ்வளவும் சொல்றேன் கேட்டா கேளுங்க கேட்காட்டி போங்க.." என்று மொத்தமாக பேசிவிட்டு முகம் திருப்பி கொண்டார்.

"ஈஸ்வரி இதெல்லாம் ஒரு விஷயமா..?"

"உங்களுக்கு எதுதான் ஒரு விஷயமா இருந்திருக்கு..?"

"இங்கபார் ஈஸ்வரி இதெல்லாம் இயற்கையா நடக்ககூடியது யாரும் ஒன்னும் செய்ய முடியாது, நீ அதிகம் யோசிக்காத சீதாவுக்குமே தளிரை கூட்டிட்டு வரதுல இஷ்டம் இல்ல போல கூட்டிட்டு வரமாட்டான்னு நினைக்கிறேன் ஒருவேளை தளிர் வந்தா நீ எதுவும் பேசகூடாது.." என்று சொல்லியே தான் அழைத்து வந்திருந்தார்.

ஆனால் வழியில் ஷோரூமில் எடுத்த புதுக்கார் விபத்து என்று தெரிந்ததும் ஜெகதீஸ்வரி கணவரை அமைதியாக பார்த்தாரே தவிர வேறேதும் பேசவில்லை.

                      *****************************

என்ன யோசிக்கிற சீதா தளிர் எங்க..?" என்று மீண்டும் ஜெகா கேட்க..,

"அது.. அதுவந்து அண்ணி.. அம்மூக்கு  உடம்பு முடியலன்னு அண்ணாகிட்ட காலையிலேயே சொல்லியிருந்தேனே அண்ணி..” என்ற சீதாவின் குரல் குறைந்து ஒலித்தது.

முடியலைன்னா ஒரு மாத்திரையை போட்டுட்டு கிளம்பி வர வேண்டியது தானே..? இந்த காலத்து பசங்க டேஸ்ட் வேற மாதிரி இருக்கு, நாம எடுத்துகொடுத்தா பிடிக்கிறதில்ல நம்ம விருப்பத்தை மதிக்கிறதும் இல்லை... யாராவது ஒருத்தர் விட்டுகொடுத்துதான ஆகணும் என் தலையெழுத்து அது நானாவே இருந்துட்டு போறேன்.. அவளுக்கு பிடிச்சதே எடுக்கட்டும் வரசொல்லு.." என்று வேண்டா வெறுப்பாக பேசிட.,

இல்லண்ணி என் பொண்ணு அப்படியெல்லாம் சொல்லமாட்டா நாம எது எடுத்தாலும் அவளுக்கு சம்மதம்தான்"

"இன்னைக்கு நீ இப்படி சொல்லுவ..? ஆனா நாளைக்கு காலம் முழுக்க எனக்கு ஒரு சொல் வந்துடக்கூடாது பாரு எனக்கு எதுக்கு வம்பு அவளையே வந்து பிடிச்சதை எடுத்துக்க சொல்லு.." என்று பட்டும்படாமல் பேச.,

"இல்லண்ணி  அவ வீட்டுக்கு தூரமாகிட்டா எப்படி இங்க கூட்டிட்டு வர.. அதான் வரலை” என்று தயக்கத்தோடு சீதா சொல்லி முடிக்கும் முன்  "ச்சீய்ய்" என்று முகம் சுழித்துவிட்டார் ராஜேஸ்வரி.

ராஜி 'ச்சீய்' என்ற ஒற்றை வார்த்தையில் சீதாவின் நெஞ்சில் அமிலத்தை வார்க்க திகைத்து போன சீதா அடுத்து எதுவும் பேசமுடியாமல் கலங்கிய விழிகளுடன் மெளனமாக நின்றார்.

"ச்சை என்ன இதெல்லாம் நல்லநாள் அதுவுமா இப்படிதான் அபசகுனமா ஆகணுமா..? அதான் இப்போல்லாம் மாத்திர மருந்து இருக்குதே எதையாவது  போட்டு தள்ளி வைக்க தெரியாதா..? காலையில வீட்ல இருந்து கிளம்பும் போதே வண்டி ஆக்சிடென்ட்னு கால் வந்துச்சு இங்க வந்து பார்த்தா மகராசி இப்படி உட்காந்துட்டா.. விளங்கின மாதிரி தான்" என்று ராஜி நொடித்து கொள்ள.,

"அப்படியில்ல சம்பந்தியம்மா ஏற்கனவே குறித்த நாளில் அண்ணிக்கு முடியாம போனதால நாம எடுக்க முடியல.." என்று ஜெகாவை துணைக்கு அழைக்க அவரோ சீதாவின் புறம் திரும்பவே இல்லை.

"ஓஓ அப்போ என் தங்கச்சி எப்படி போனாலும் பரவாயில்ல உங்க காரியம் ஆகணும் அப்படிதானே..?"

"இல்ல சம்பந்தியம்மா நான் அப்படி சொல்லலை.."

"வேற எப்படி..? நீ சொல்ல வந்ததுக்கு அதுதான் அர்த்தம்..! உங்க தரப்பு தப்பை மறைக்க எங்களை குறை சொல்லாத" என்று இறைந்து விட்டு தனியாக சென்று அமர்ந்துவிட்டார்.

சுஜியும் நிவியும் தென்றலோடு சேர்ந்து தளிர்க்கு பொருத்தமான பட்டுக்களை மும்முரமாக பார்வையிட்டு கொண்டிருந்ததில் சற்று தள்ளி அமர்ந்திருந்த ஜெகாவும் ராஜியும் பேசியது பெரிதாக அவர்களுக்கு தெரியவில்லை.

ராஜி கோபித்து கொண்டு செல்லவும், "வயசுல மூத்தவங்க கிட்ட இப்படிதான் பேசுவியா சீதா..? எங்கக்கா வயசும் அனுபவமும் என்னன்னு உனக்கு தெரியுமா? ஆதியை நான் பெத்திருக்கலாம் ஆனா அவனை முழுக்க முழுக்க தன் சொந்த பிள்ளையா வளர்த்தது எங்கக்கா தான்..!!" 

"அவனுக்காக எந்த நேரமானாலும் சிரமம் பார்க்காம ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்யறவங்க பெஸ்ட் மட்டும் தான் கொடுப்பாங்க.. ஆனா இன்னைக்கு அவனுக்கு  நடக்கற விசேஷத்துல கரும்புள்ளி மாதிரி உன் பொண்ணு உட்காந்துட்டாளேன்னு ஏதோ ஆதங்கத்துல ஒன்னு இரண்டு வார்த்தை கூட குறைய பேசத்தான் செய்வாங்க அதுக்காக இப்படி சொல்லுவியா..?" என்று ஜெகா கோபமாக கேட்க..,

அண்ணி நான் ஒன்னும் சொல்லலையே அண்ணி..” என்று சீதா பரிதவித்து போனார்.

"அவங்களோட வார்த்தைக்கு வார்த்தை பேசினதே தப்பு.. போ நீயே போய் எங்கக்காவை கூட்டிட்டு வா இல்லைன்னா உங்க இஷ்டத்துக்கு என்ன செய்யணுமோ செய்ங்க நானும் எதுலயும் தலையிடலை..  ஏற்கனவே உன் பெண்ணால வீட்ல எனக்கு மரியாதை போச்சு இன்னைக்கு மானமும் போகணும்னு இருந்திருக்கு நான் எதுக்கு பேசிக்கிட்டு.." என்று தெளிவாக அவர் காதில் விழுமாறு முனுமுனுத்தவர் இறுதியாக,

"என்னையெல்லாம் யார் மதிக்க போறா எங்கக்கா மாதிரியே நானும் ஒரு ஓரமா இருந்துக்கிறேன்.." என்று சொன்னது போலவே ஒரு ஓரத்தில் அழுத்தமாக நின்றுகொண்டார். அக்கா தங்கையின் பேச்சை கேட்டு ஸ்தம்பித்த நிலையில் நின்றிருந்த சீதாவிற்கு  அவர்களின் வார்த்தையை  கிரகிக்கவே பலநிமிடம் பிடித்தது.

அப்படி என்ன பேசிவிட்டோம் என்று இருவரும் இப்படி நடந்து கொள்கின்றனர் என்று அலமலந்து போனவருக்கு ஒருவழியாக  ராஜியை சமாதானம் செய்யவேண்டும் என்பது வரை புரிபட உடனே அவரை நெருங்கி, “மன்னிச்சிடுங்க சம்பந்தியம்மா.. நான் ஏதோ தெரியாம பேசிட்டேன், தயவுசெய்து வாங்க வந்து புடவையை பாருங்க ப்ளீஸ்.." எனவும் அமர்த்தலாக அவரை ஒரு பார்வை பார்த்தவர் "வா ஜெகா" என்று தங்கையையும் அழைத்து கொண்டு சென்றார்.

அனைவரையும் நகர்த்திவிட்டு முன்னே சென்றவர் சில புடவைகளை பார்வையிட்ட பின், "இந்த புடவையை பாருங்க" என்று ஏதோ ஒன்றை கடனே என்று காண்பிக்க அதுவோ கிளி பச்சையில் காபி கலர் பார்டரில் அரத பழசான டிசைனில் இருந்தது.

ராஜிம்மா என்ன இது அண்ணிக்கு புடவை எடுக்க சொன்னா உங்களுக்கு எடுத்திருக்கீங்க..?” என்று நிவி சிரிக்கவும் தென்றலும் உடன் இணைந்து சிரித்துவிட்டாள். அதில் ராஜியின் கோபம் இன்னுமே கிளறப்பட தென்றலை முறைத்தவாறு அமர்ந்துகொண்டு, "நீங்களே பார்த்து சொல்லுங்க" என்றுவிட்டார்.

"அத்தை வாங்க.." என்று சுஜி அழைத்த போதும் அருகே செல்லாத சீதா நாற்காலியில் அமர்ந்திருந்த ஜெகாவின் அருகே அமைதியாக நின்றுகொண்டார்.

"அம்மா அத்தை இது பாருங்க.." என்று சிவப்பு நிறத்தில் தங்க இழையோடிய ஆறரை லட்சம் பெறுமானமுள்ள மனதை கொள்ளைகொள்ளும் வேலைபாட்டிலான மென்பட்டை காண்பித்த சுஜி, "தளிருக்கு இது ரொம்ப நல்லா இருக்கும்மா.. அவளுக்குமே பிடிச்சிருக்கு" என்றிட

"ம்மா மா இதை பாருங்கம்மா.." என்று மற்றொரு பட்டுடன் வந்த நிவி, "அக்கா காட்டினதைவிட அண்ணிக்கு இது அட்டகாசமா இருக்கும்.." என்றவளின் கையில் இருந்தது கிட்டத்தட்ட பத்து லட்சம் பெறுமானமுள்ள புடவை. பெண்கள் புடவையை பார்த்துகொண்டிருக்க அங்கே வந்த அம்பலவாணனிடம் "ப்பா நீங்க சொல்லுங்க இதுல எது அண்ணிக்கு நல்லா இருக்கும்..?" என்று நிவி கேட்கவும்,

"இரண்டுமே சூப்பரா இருக்கு நிவி.. ஃபைனல் பண்ணும் முன்னாடி எதுக்கும் உங்க அண்ணன் அண்ணிக்கு அனுப்பி கேளுடா.."

"கலெக்ஷன்ஸ் எல்லாம் பிடிச்சிருக்கா இல்லைன்னா சொல்லுங்க இன்னும் கொண்டு வருவாங்க" என்று பொதுவாக சொன்னவர் சீதாவிடம், "ஒரு எமெர்ஜென்சி சீதா நாங்க கிளம்பறோம் நீங்க பொறுமையா பாருங்கம்மா  வந்துடுறேன்"

"அண்ணா மாப்பிள்ளை இன்னும் வரலைங்களே எதுவும் பிரச்சனைங்களா..?"

"அப்படியில்ல சீதா இன்னொரு முக்கிய வேலை வந்துடுச்சு அதான் அவன் வர முடியலை நீங்க பாருங்கம்மா நான் சீக்கிரமே வந்துடுவேன்" என்றவர் உதய்க்கு எடுத்திருந்த பட்டுவேட்டியை மனைவியிடம் கொடுத்து கிளம்பிவிட்டார்.

"ம்மா அப்பாக்கு இரண்டுமே ஓகே உங்களுக்கு எதுன்னு சொல்லுங்க" என்று நிவி இருபுடவைகளையும் காட்டி கேட்க, "இதுவா..?" என்று ஜெகதீஸ்வரியின் நெற்றி சுருங்கி விரியவும் அருகே இருந்த பணிப்பெண்,

கல்யாண பெண் யாருன்னு சொல்லுங்க மேடம் நாங்க அவங்களுக்கு கட்டிவிடுறோம் அப்போ உங்களுக்கு செலெக்ட் பண்ண ஈசியா இருக்கும்.." என்றதும்..,

"எங்க எங்களுக்குத் தான் அந்த கொடுப்பனை இல்லையே! நல்லநாள் அதுவுமா உட்காந்து வச்சிருக்கவ இன்னும் என்னல்லாம் செய்ய போறாளோ.. நல்லவேளை மகராசி மணமேடையில வந்து அபசகுனமா உட்காந்து தொலைக்காம போனாலேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.." என்று ராஜி அங்கலாய்க்க..,

இறுகிய முகத்துடன் நின்றிருந்த ஜெகாவும், "பொண்ணு வரலம்மா நீங்க இந்த புடவையே குடுத்துடுங்க" என்று மகள்கள் தேர்ந்தெடுத்ததில் ஒன்றை கடமைக்கு கைகாட்டி இருந்தார்.

"அத்தை ஏன் இவ்ளோ டல் ஆகிட்டீங்க?  ஒன்னும் கவலைபடாதீங்க அக்கா இல்லைன்னா என்ன அதுதான் நான் இருக்கேனே! நானும் அம்மாவும் தான் பொதுவா அக்காக்கு புடவை செலெக்ட் பண்ணுவோம் எனக்கு பொருத்தமா இருந்தா அது அக்காக்கும் நல்லாத்தான் இருக்கும்.." என்று தென்றல் உல்லாசக்குரலில் கூற,

"அப்போ முகூர்த்த புடவையை உனக்கு வச்சு பார்த்து எடுக்கணும்னு சொல்றியா..?" என்று ராஜி நக்கலாக கேட்க,

அதை புரிந்து கொள்ளாத தென்றல், "ஆமாத்தை நீங்க எனக்கு வச்சு பாருங்க அதுல எது பெஸ்ட்டா இருக்கோ அதையே நாம எடுத்துடலாம்" என்றதும் தான் தாமதம்,

"எப்படி இப்போ புடவையை உனக்கு கட்டி பார்த்து எடுக்கிற மாதிரியே கல்யாண மேடையில என் பையன் உனக்கு தாலி கட்டி பார்த்து உங்கக்காக்கு கட்டனும்னு  சொல்லவரியா..?" என்று ராஜி குத்தீட்டியாய் வார்த்தைகளை வீச,

"அத்தை" என்று  திகைத்த தென்றலுக்கு  குறையாத அதிர்ச்சியுடன் சீதாவும் ராஜியை பார்த்தார்.

கூடி இருந்த பெண்களுமே திகைப்புடன் பார்க்க.., "என்ன பார்க்கிற சீதா பொட்டபுள்ளைக்கு நாவடக்கம் வேணும்! இதுதான் நீ வளர்த்த லட்சணமா...? புடவை எடுக்க வராம ஒருத்தி ஒதுங்கிட்டான்னு பார்த்தா இன்னொருத்தி அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்போ காலியாகும்னு இருக்காளே.." 

"கூறைபுடவையை இவளுக்கு கட்டி பார்த்து எடுக்கணும்னா நாளைக்கு என் பையன் இவளுக்கு தாலிகட்டி பார்த்து அக்காளுக்கு கட்டனும்னு சொல்றாளா..? சொல்லு..?" என்றார் ஆவேசமாக.

"என்ன ராஜி ஏன் இப்படி கோபப்படற..?" என்றார் வயதில் மூத்த பெண்மணி.

"வேற என்ன சித்தி செய்ய சொல்றீங்க..? கல்யாண பொண்ணு வீட்டுக்கு தூரம், நாங்க வீட்ல இருந்து கிளம்பினப்போ டெலிவரி எடுத்த கார் ஆக்சிடென்ட், சரின்னு மனசை தேத்திகிட்டு இங்க வந்தா இதோ இவ என்னடான்னா அக்காளுக்கு எடுக்க போற புடவையை இவளுக்கு கட்டி பார்த்து எடுக்கணும்னு சொல்றா..?" என்று கோபமாக கேட்க,

"என்ன பாப்பா பேச்சு இது" என்று அப்பெண்மணி தென்றலை கண்டிக்கவும்  என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நின்ற தென்றலின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. நிச்சயம் தான் இப்படி நினைத்து பேசவில்லையே பிறகு எப்படி தவறாகி போனது என்று புரியாமல் நின்றிருந்தவளின் கரத்தை அதரவாக சுஜி பிடித்துக்கொள்ள,

"ராஜிம்மா தென்றல் சாதாரணமா சொன்ன வார்த்தையை நீங்க எப்படி பேசுறீங்க..?" என்று நிவி பதற ஜெகா மெளனமாக நின்று அக்காவின் கேள்விகளை ஆதரித்தார்.

"கொஞ்சம் அமைதியா இரு நிவி எல்லாம் இவங்களை கேட்டுதானே உங்கப்பா செய்துட்டு இருக்கார் அப்படியிருக்கப்போ இன்னைக்கு வீட்டுக்கு தூரம்ன்னு முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல ஏன் உன் கல்யானத்தப்பவும் இப்படிதானே ஆச்சு.."

"நீ எங்களுக்கு இரண்டு நாள் முன்னாடியே சொல்லவும் நாம அடுத்த வாரம் போய் எடுக்கலயா இவங்களும் முன்கூட்டியே  சொல்லியிருந்தா வேற தேதி பார்த்து வந்திருப்போமே.. ப்ச் போயும் போயும் என் பையனுக்கு இப்படியா..." என்று ஏதோ பேசவரவும் அவர் முன் கண்ணீருடன் கைகூப்பி விட்ட சீதாலக்ஷ்மி,

"மன்னிச்சிடுங்க சம்மந்தியம்மா அவ சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டா.. தயவுசெய்து இந்த பேச்சை இத்தோட விட்டுடுங்க.." என்றவரை இடையிட்ட ராஜி,

"இதெல்லாம் என்ன பேச்சு கொஞ்சமும்  அடக்க ஒடுக்கம் இல்லாம.. முதல்ல உன் பொண்ணுக்கு பெரியவங்களை மதிக்கவும் எப்படி பேசணும்னு கத்து கொடு"  என்று கடுமையான குரலில் கூற "இல்ல.." என்று தென்றல் ஏதோ சொல்ல வர உடனே அவள் கை பிடித்து இழுத்து சொல்ல விடாமல் தடுத்து விட்ட சீதா எதுவும் பேசாதே என்று கண்களாலேயே மகளை கட்டிபோட்டு விட்டார்.

"ராஜிம்மா விடுங்க அவ ஏதோ தெரியாம சொல்லிட்டா எதுக்கு பெருசு பண்ணிட்டு.." என்று சுஜி ஆரம்பிக்கவும்,

"கல்யாணங்கிறது ஆயிரங்காலத்து பயிறு..! பெண் பார்த்து, பாக்கு  வெத்தலை மாற்றி, பத்திரிகை அடிச்சு,  பந்தக்கால் நடறதுல இருந்து மணமேடை ஏறி தாலி வாங்கற வரை ஒவ்வொரு விசேஷத்தையும் சுத்த பத்தமா செய்யணும் தீட்டோட செஞ்சா அந்த கல்யாணம் எப்படி செழிக்கும்..? சின்ன பசங்க உங்களுக்கு இதெல்லாம் விளையாட்டா போச்சா..?" என்ற ராஜி சுஜியையும் கத்திக்கொண்டிருப்பதை கண்ட தென்றல்,

"ஸாரி ஆன்ட்டி நான் பேசினது தப்பு தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க" என்று சொன்ன பின்னர் தான் ராஜி சற்று அடங்கினார்.

"சரி சரி விடுங்க அதான் அந்த பொண்ணு மன்னிப்பு கேட்டுடுச்சே விட்டுட்டு வந்த வேலையை பாருங்க" என்றவர் மற்றவர்களுக்கும் புடவையை எடுக்க சொல்ல கடைக்கு வந்த போதிருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்து போக கரைபுரண்ட  கண்ணீரோடு அமைதியாக சீதாவின் பக்கம் நின்றுகொண்டாள் இளந்தென்றல்.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - 20.1