வாழ்க்கைத்துணை

தீராத காதல் தொல்லையோ - 4.2

Image
“ஸர்!!” என்றவனுக்கு அவன் கோபம் எதனால்? என்று புரியவில்லை.  “அவர் யார் தெரியுமா?” “இல்லையே ஸர்..” “யார் என்னன்னு விசாரிக்காம கூட்டிட்டு வந்துடுவியா?” என்றான் அடக்கபட்ட கோபத்தோடு.  “க்ரவுட் இன்னும் ஜாஸ்தியாகி ட்ராஃபிக்காகிட கூடாதுன்னு ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க கூட்டிட்டு வந்தேன்.. ஏன் ஸர் அவர் ஏதாவது அரசியல் கட்சியை சேர்ந்தவரா? கால் வந்ததா இல்லை..” “ப்ச், உன் மேடமோட அப்பா மேன்!!” என்றதில் உச்சபட்ச அதிர்ச்சியோடு வேதாந்த்தை பார்த்தான். “சொன்னது புரிஞ்சுதா? ” என்றிட அவன் வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கிக்கொள்ள தர்ஷனால் அத்தனை எளிதாக பதிலளிக்க முடியவில்லை.  “அப்.. அப்போ அவர் உங்களுக்கு மாமனாரா ஸர்?..” என்றதற்கு தலையசைத்தவன், “எதுக்காக அவரை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்த? க்ரவுடை கிளியர் பண்ணிட்டு அங்கேயே பேசி பிரச்னையை முடிக்க வேண்டியது தானே?!” என்றதில் பதிலின்றி நின்றான்.  “சரி, போய் அவரை வர சொல்லு” என்றதும் வேகமாக வாசுதேவனிடம் சென்றவன் பணிவோடு, “ஸர், உங்களை ஏசிபி ஸர் கூப்பிடுறாங்க வாங்க..” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை விசித்திரமாக பார்த்தபடி எழுந்து சென்றார்....

உயிர் கேட்கும் அமுதம் நீயடா - FINAL 2

 

மேலும் ஒரு வருடம் கழிந்த நிலையில்...

அன்று குழந்தையின் முதல் வருட பிறந்தநாள் என்பதால் காலையிலேயே மகளோடு கோவிலுக்கு சென்று வந்தவர்கள் இன்று சஞ்சனா இருக்கும் இடத்திற்கு செல்ல இருக்கின்றனர். 

இரவு மகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுமே மூன்றாம் கடிதத்தை பிரித்து படித்தவர்கள் அதன் பிறகு உறங்கவே இல்லை.

‘எப்போது.. எப்போது’ என்று தவித்திருந்த நாள் நெருங்கிய போது இருவருமே கையாள முடியாத உணர்வுகளில் சிக்கி தத்தளித்து கொண்டிருந்தனர். மனம் முழுக்க சஞ்சனாவும் அவள் நினைவுகளை ஆக்கிரமித்திருந்த போதிலும் இருவருக்குமே வார்த்தை தீர்ந்து போயிருந்தது. 

குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த நயனியை அணைத்தபடி குழந்தையை பார்த்திருந்தான் அபய். விடியலில் நிர்மலா அவர்களை தேடி வரவும் தான் குளித்து தயாராகினர். 

பேத்தியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட அனைத்து தயாரிப்புகளையும் நேற்றே செய்து முடித்து இருந்தார் சக்கரவர்த்தி. 

முதலில் மாலை விசேஷத்தை நடத்த இருந்தவர் இன்று அவர்கள் சஞ்சுவை காண போவதால் காலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை மாற்றி விட்டார். 

பேத்தி பிறந்தது முதலே சக்கரவர்த்தியின் உலகம் அவளை சுற்றியே சுழல தொடங்கியது. 

விழாவிற்காகவே பேத்திக்கு பார்த்து பார்த்து உடை தேர்ந்தெடுத்து இருந்தவர் சாப்பிடுவதற்கு எதுவாக சாதாரண உடை மாற்றி நிர்மலாவோடு வந்தாள் சஞ்சனா.

சஞ்சனாவை வார்த்து வைத்தது போல அவள் தோற்றம் இல்லை என்றாலும் குழந்தையின் கண்கள் அது எப்போதும் சஞ்சனாவை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். 

‘கண்கள் மட்டுமா?’ கழுத்தோர மச்சம், இடது கன்னத்து குழி, சிரிப்பு என்று அத்தனையும் சஞ்சுவே தான்!! 

நயனியும் அபய்யும் சஞ்சு சொன்னது போலவே அவள் தங்கள் கரம் சேர்த்திருந்த மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தனர். 

பேத்தியை நோக்கி புன்னகையோடு கை நீட்ட, “த்த்த்தா..” என்று நிர்மலாவின் கையில் இருந்து சக்கரவர்த்தியிடம் தாவிக்கொண்டது குழந்தை. 

அவரிடம் மட்டுமல்ல வீட்டில் அனைவருடனும் அத்தனை எளிதாக ஒட்டிக்கொண்டாள் குழந்தை. இத்தனைக்கும் வினோதனின் மகன்கள் இரண்டு வயது வரையிலும் ராகவியை விட்டு வேறு யாரிடமும் செல்ல மாட்டார்கள். அப்படியே சென்றாலும் தாய் அவர்கள் கண் பார்வையை விட்டு அகல கூடாது.

அப்படி அவளிடம் இருந்து யாராவது தூக்க முற்பட்டாலும் ஒரே அழுகை தான். அதையும் மீறி தூக்கி சென்றால் கலவர பூமி ஆக்கி விடுவார்கள். 

ஆனால் சஞ்சு அப்படி கிடையாது. மிகவும் சமத்து குழந்தை. 

புதிய முகங்கள் என்றால் தான் சில நிமிடங்கள் கழித்து அவர்களிடம் செல்வாள். அதேநேரம் வீட்டில் சக்கரவர்த்தி தொடங்கி முரளிதரன் வரையில் அனைவரிடமும் பாரபட்சம் இல்லாமல் பழகுவாள். 

தாய்ப்பாலோடு இணை உணவும் சில மாதங்களாக எடுத்துக் கொள்கிறாள்.

இன்றுமே கோவில் இருந்து வந்த குழந்தைக்கு பருப்பை கடைந்து தயாராக வைத்திருந்த நிர்மலா கணவன் கையில் இருந்தவளுக்கு ஊட்ட தொடங்கினார்..

பொதுவாகவே அவளுக்கு உணவு கொடுப்பது நிர்மலா அல்லது தனலட்சுமி தான் என்றாலும் சக்கரவர்த்தி அவளை தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் அப்போது தான் கிண்ணத்தை வேகமாக காலி செய்வாள்.. இல்லையென்றால் சற்று படுத்தி எடுத்துவிடுவாள்.

“என் சாமி..” என்று குழந்தையின் பாதங்களில் முத்தமிட்டு கண்களில் ஒற்றிக்கொண்டார். இது வழக்கமாக அவர் செய்வது தான். 

அன்று ‘ஜாதியை காரணம் காட்டி சஞ்சுவை அவர் ஒதுக்காமல் இருந்திருந்தால் இன்று நல்லதொரு வாழ்வை வாழ்ந்திருப்பாளே’ என்ற குற்ற உணர்ச்சி பேத்தியை பார்க்கும் போதெல்லாம் அதிகரிக்கும். 

ஒவ்வொரு முறையும் பேத்தியின் கால்களை தொட்டு மன்னிப்பு கேட்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்.

‘சஞ்சுவை தன் மகன் கட்டக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்த மனிதரோடு குழந்தைக்கு எப்படி இந்த பிணைப்பு உருவானது’ என்று யாருக்குமே புரியவில்லை. அவரிடம் அத்தனை பாந்தமாக பொருந்தி போவாள் சஞ்சனா. 

இதன் மூலமாக அவரை அவள் மன்னித்திருப்பதாகவே சக்கரவர்த்தி உணர்ந்தார். 

தன்னை காயப்படுத்தியவர்களை மன்னிக்க எத்தனை பெரிய மனம் வேண்டும்? குழந்தையும் தெய்வமும் ஒன்று அல்லவா?! தெய்வமாகி இருக்கும் சஞ்சனாவின் நினைவு நாளை வருடம் தோறும் அனுஷ்டிக்கிறார் சக்கரவர்த்தி. 

இதையெல்லாம் கண்ட நயனிகா வர்ஷிக்கு ஒரு புறம் மனம் கனிந்தாலும் மறுபுறம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறாரே என்ற ஆதங்கமும் அதிகரிக்கும். 

“உயிரோடு இருந்தப்போ அவளோட ஆசையை நிறைவேற்றாமல், விருப்பட்டவரோடு வாழ விடாம செய்துட்டு  இப்போ படத்தை வைத்து பூஜை பண்றது எந்த விதத்தில் நியாயம்?” என்று மனம் பொறுக்காமல் கேட்டு விட்டாள். 

“அன்னைக்கு மூடனா இருந்துட்டேன் அதுதான் அத்தனை மூர்க்கத்தனமா எதிர்த்துட்டேன். என் தப்பை உணர்ந்துட்டேன், இப்படியாவது சஞ்சு இந்த வீட்டுல இருக்கட்டுமே நயனி..” என்றார் ஏழு மாத குழந்தையை நயனி சுமந்திருந்த போது.

விருந்தினர்கள் வந்து சேர சாப்பிட்டு முடித்து உடை மாற்றி தளிர் நடை போட்டுக்கொண்டு இருந்த குழந்தை "சஞ்சு மா" என்ற தந்தையின் குரலில் கையில் இருந்த பொம்மையை தூக்கிக்கொண்டு "ப்பா.. ப்பா" என்று கால் கொலுசு சிணுங்க மகளுக்கான கேக்கோடு அங்கே வந்த அபய் ஸ்ரீவத்ஸனிடம் சென்றாள். 

"அடடே என் செல்லம் ரொம்ப அழகா ரெடியாகி இருக்கீங்களே.. பங்க்ஷன் ஸ்டார்ட் பண்ணிடலாமா? அம்மா எங்கே?!" என்று மகளை தூக்கி முத்தமிட அவனை கட்டிக்கொண்டு தோள் சாய்ந்தாள் குழந்தை.

நயனி வந்து சேரவும் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கியது. அனைவரும் மதிய உணவிற்காக அமர்ந்திருக்க, “ம்மா நீங்க பார்த்துக்கோங்க நாங்க கிளம்பறோம்..” என்றான் ஸ்ரீவத்ஸன்.

“சரிப்பா, பத்திரமா போயிட்டு வாங்க. நயனியும் பாப்பாவும்..” என்றருக்குமே தொண்டையை கவ்விப்பிடித்தது அவர்கள் செல்லும் இடம் குறித்த நினைவில்.

“அத்தை கார் ரெடியா இருக்கு நீங்க சஞ்சுவை கூட்டிட்டு போங்க நான் நயனியை கூட்டிட்டு வரேன்..” என்று அறையினுள் செல்ல அங்கே கண்ணீரோடு அமர்ந்திருந்தாள் நயனிகா. 

"என்னாச்சு நயனி? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? கிளம்பனும் மா.." என்றவனின் தோளில் சாய்ந்தவள்,

"என்ன தான் இந்த நாளுக்காக நாம காத்திருந்தாலும் என்னால முடியும்னு தோணலை அபய்..." என்றாள் விசும்பலோடு. 

"ஏன்டா? நேத்து நைட் பாப்பாக்கு விஷ் பண்ணின உடனே அந்த லெட்டரை ஓபன் பண்ணி படிச்சதே நீதான்! நாம கேரளா போறதுக்கான எல்லா ஏற்பாட்டையும் நான் பண்ணியாச்சு இப்போ இப்படி சொன்னா எப்படி?" என்று அவள் தலை கோதியவன்.

"சஞ்சுவோட கடைசி ஆசை. அதுவும் அவளோட பிறந்த நாளான இன்னைக்கு நிறைவேற்றாமல் போனா எப்படி? நிச்சயம் அவ நமக்காக காத்திருப்பா.." என்று சொல்ல அங்கே வந்த அவர்கள் மகளும் தாயின் கண்ணீரை துடைத்து அவள் முகம் முழுக்க முத்தமிட்டாள்.

“அத்தை என்னாச்சு?..” என்று அபய் பார்க்க, 

“குழந்தைக்கு தூக்க கலக்கம் கிளம்பும் முன்னாடி பால் கொடுத்து அழைச்சுட்டு போயிடலாம் மாப்பிள்ளை..” என்றார்.

“சரி” என்றவன் "ஒரே ஒருமுறை பார்த்துட்டு வந்துடலாம். உனக்கு விருப்பம் இல்லையென்றால் இதுக்கு அப்புறம் நீ வர வேண்டாம்.." என்றான் மனைவியிடம்.

"அப்படி இல்லை அபய்... அவளோடு ஒண்ணா வளர்ந்து, சாப்பிட்டு, பேசி, சிரிச்சு, விளையாடி ஊனும் உயிருமா பார்த்தவளை எப்படி நான் அப்படி பார்க்க முடியும்? மனசு ரொம்பவே கெடந்து அல்லாடுது, ஒரு நிலையா இல்லை. ஏன்னு தெரியலை.." என்றாள் கண்ணீரோடு. 

"நான் இருக்கிறப்போ உனக்கு ஏன் இப்படியெல்லாம் தோணுது?" என்றிட குழந்தையும் அவள் கையை ‘நான் இருக்கிறேன், எதற்கும் கலங்காதே’ என்பதாக பிடித்துக்கொண்டது.

ஒருவாறு தன்னை தேற்றிக்கொண்ட நயனிகா குழந்தைக்கு பால் கொடுத்து கீழே இறங்கி வந்தவள் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப தனலட்சுமி  மகளுக்கு துணையாக அவளுடன் வந்திருந்தார்.

அனைவருக்குமே சஞ்சு எழுதிய கடிதம் இப்போது அவள் நிரந்தர உறக்கம் கொள்ளும் இடம் குறித்து தெரியும். 

அபய் குடும்பம் விமானம் மூலம் கேரளா வந்து சேர்ந்து கடிதத்தில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணிற்கு அழைக்க மறுபுறம் இருந்தவர் இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக சொல்லி அதே போல அவர்களை வந்து அழைத்து சென்றார்.

"நீங்க சஞ்சுவுக்கு உறவா?" என்று நயனி கேட்க, 

"இல்லை பக்கத்து வீடு. சஞ்சு இங்கே வந்த போது அவங்களை ட்ரீட்மென்ட்க்கு அழைச்சுட்டு போனது நான் தான்.." என்றவர் சஞ்சு இவர்கள் இருவரை குறித்து சொன்னதை எல்லாம் சொல்லிக்கொண்டே காரை செலுத்த அபய் நயனி இருவருமே உணர்ச்சி பெருக்கில் வார்த்தை வசப்படாது அவரை பார்த்திருந்தனர். 

ஒருபுறம் அவளின் இறுதி நொடிகளை கிரகிக்க முடியாமல் போனாலும் அந்நொடிகளில் அவளுடன் தான் இருக்க முடியவில்லை, குறைந்தபட்சம் அந்நொடிகளை அறிந்து கொள்ள மனம் துடித்தது. 

பயணம் முழுக்கவே ஒருவித அழுத்தம் சூழ்ந்திருந்த போதிலும் அவர்கள் சென்று சேர்ந்த இடத்தில் அப்படி ஒரு குளுமை.

இயற்கை அன்னையின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்தது போல சுற்றிலும் பசுமை படர்ந்திருக்க நேராக அவள் வீட்டிற்கு அழைத்து சென்றார் அந்த மனிதர்.

இவர்களின் வருகையை சஞ்சுவின் தாய் ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால் வாசலிலேயே ஆலம் கரைத்து வைத்து காத்திருந்தார்.

பின்னே! அவரின் மகள் இன்று அவர்களை காண வரப்போகிறாளே அந்த மகிழ்ச்சியோடு காலையில் இருந்தே காத்திருக்கிறார். 

வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த அபய் கரங்களில் இருந்த குழந்தையை கண்டதும் ஓடி சென்று வாங்கிக்கொண்டவர், "சஞ்சு..." என்று வாஞ்சையாக தன் மார்போடு சேர்த்து கட்டி அணைத்துக்கொண்டார்.

குழந்தையும் பொதுவாகவே புதிய ஆட்களிடம் சட்டென ஒட்டிக்கொள்ளாது என்றாலும் சஞ்சுவின் தாயிடம் அத்தனை பாந்தமாக அடங்கினாள் சஞ்சனா. 

"எப்படி இருக்கீங்க ம்மா?" என்ற நயனியின் கையை உணர்ச்சி பெருக்கில் பிடித்துக்கொண்டவர் அடுத்த சில நிமிடங்களுக்கு அவளை கட்டிக்கொண்டு அழுகையில் கரைந்து கொண்டிருந்தார்.

யாராலுமே அவரை தேற்ற முடியவில்லை.

அபய் இங்கு வந்த பிறகு சஞ்சு எடுத்திருந்த அவள் புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்தான். 

"சொன்ன மாதிரியே என் சஞ்சு என்னை பார்க்க வந்துட்டா. உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை தம்பி.." என்றவர் வேறு எதுவும் பேசாமல் அவர்களை அழைத்து கொண்டு சஞ்சு உறங்கிக்கொண்டிருக்கும் இடத்திற்க்கு அழைத்து சென்றார்.

தனியாக அவளுக்கென்று கூடாரம் அமைக்க பட்டிருந்தது. அங்கு சென்ற அபய் நயனி இருவரின் முகத்திலும் எண்ணற்ற உணர்வுகளின் படையெடுப்பு!!

கண்ணீர் அதில் முதன்மை பெற அமைதியாக அவளுக்கு விளக்கு ஏற்றி வைத்து விட்டு அமர்ந்து கொண்டனர்.

இருவருமே கண்களை மூடி மனதோடு சஞ்சுவிடம் உரையாட, எத்தனை மணி நேரம் இமையோரம் கசிய அமர்ந்திருந்தனர் என்று அவர்களுக்கே தெரியாது.

சில்லென்ற காற்று அத்தனை இதமாக அவர்களை தழுவி வழுவி சென்றதில் அரூபமாய் சஞ்சுவின் அணைப்பை உணர்ந்தவர்கள் இத்தனை வருடங்களாக கொண்டிருந்த தவிப்பும், வலியும், வேதனையும், உயிர் வதையும் அங்கே பனியாய் கரைந்து போனது.

குழந்தை பாலுக்காக நயனியை பிடித்து இழுக்கவும் தான் சுயம் பெற்றவள் அவளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினாள்.

"ம்மா நீங்களும் எங்களோடு வாங்க.. எப்பவும் உங்க மகளோடு இருக்கலாம்.." என்று அழைத்தாள் நயனி.

"இல்லைமா வேண்டாம். அது நல்லா இருக்காது. நீங்க என் மகளை நல்லா பார்த்துப்பீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.. சந்தோஷமா போயிட்டு வாங்க.. எனக்கு தோணும் போது சொல்றேன் அப்போ இவளை கொண்டு வந்து காட்டினா போதும் அதுக்கு மேல நான் பெருசா ஆசைப்படலை..." என்று அவர்களை வழியனுப்பி வைத்தார்.

கனத்த இதயத்தோடு கேரளாவிற்கு வந்து இறங்கியவர்கள் மனதில் என்றுமில்லா நிம்மதி பரவ நயனி கரத்தில் இருந்த சஞ்சு செய்த சேட்டையில் அவள் முகத்தில் படர்ந்த புன்னகை மெல்ல அபய்யையும் தொற்றிக்கொள்ள இருவரின் கவனமும் மகள் புறம் திரும்பியது.

மூவரின் பயணமும் சஞ்சுவின் ஆசியோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

Comments

Main Pages

வாழ்க்கைத்துணை - 1.1

வாழ்க்கைத்துணை - 22

வாழ்க்கைத்துணை - 25

வாழ்க்கைத்துணை - 23.3

வாழ்க்கைத்துணை - 9

வாழ்க்கைத்துணை - 29.2

வாழ்க்கைத்துணை - 26.3

வாழ்க்கைத்துணை - 17

வாழ்க்கைத்துணை - 24.4

வாழ்க்கைத்துணை - 16.2