வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 16.2

 



மாலை வீடு வந்து சேர்ந்த கதிர்  தினகரனும் பாக்கியலட்சுமியும் அங்கு இல்லாததை கண்டு “அப்பா அம்மா எங்க அண்ணி? வெளியே போயிருக்காங்களா?” என்றான்.

“தம்பி உங்களுக்கு விஷயம் தெரியாதா?”

“என்ன அண்ணி?” என்றான் கையிலிருந்த பையை அவரிடம் கொடுத்தபடி. 

“இன்னிக்கு மகா ஆஃபிஸ்ல மயக்கம் போட்டுட்டாளாம். ஹாஸ்பிடல்ல சேர்க்கிற அளவுக்கு ஆகிடுச்சாம், மாமா அத்தைக்கு தகவல் கிடைக்குவும் அவளை பார்க்க போயிருக்காங்க உங்களுக்கு சொல்லலையா?”

“இல்ல அண்ணி, இன்னைக்கி சைட்டுக்கு போய் இருந்தோம் அது டவர் இல்லாத ஏரியா. சரியாவே சிக்னல் கிடைக்கல.. குழந்தைக்கு வேக்சினேஷன் பண்ணனும் அதுதான் அங்கிருந்து அப்படியே காயூவை கூட்டிட்டு போயிட்டு வந்தேன். சரி,  மகா இப்போ எப்படி இருக்கா?” என்றவன் பைக் சாவியை எடுப்பதை கண்டவள்,

“தம்பி அத்தை மாமா அங்கிருந்து கிளம்பிட்டாங்களாம். மகாவையும் கூட்டிட்டு தான் வந்துட்டு இருக்காங்களாம்..”

“அதுவும் நல்லது தான்.. குழந்தைகளை டியூஷன்ல நீங்களே விட்டுட்டு வந்துட்டீங்களா அண்ணி..”

“ஆமா தம்பி. இன்னைக்கு ஏதோ ப்ரோக்ராம் இருந்ததால சீக்கிரமே ஸ்கூல் விட்டுட்டாங்க மெசேஜ் வந்தது. அதுதான் அழைச்சுட்டு வந்து நானே கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டேன்..”

“சரி அண்ணி கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருக்கு நான் கடைக்கு போறேன். உங்களுக்கு ஏதாவது தேவையா?”

“பன்னீரும், மஷ்ரூமும் வாங்கிட்டு வந்துடுறீங்களா நைட் மகாவுக்கு செய்யணும். அப்படியே வாழைப்பூ கிடைச்சதுன்னா அதையும் வாங்கிட்டு வந்துருங்க. மகா வருவதால வடைக்கு  ரெடி பண்ணிட்டு இருக்கேன்…”

“சரி அண்ணி..” என்று கிளம்பி சென்றவன் அரை மணி நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்த போது அவன் தங்கையின்  பெட்டிகளை தந்தை எடுத்து செல்வதை கண்டவன் “என்னப்பா இது?” என்றான் ஒன்றும் புரியாமல்.

“சொல்றேன் கதிர், முதல்ல கொண்டு போய் மகா ரூம்ல வை..” என்று மகனிடம் கொடுத்தவர் உடை மாற்றுவதற்காக சென்றார்.

வாங்கி வந்த பொருட்களை சுமதியிடம் கொடுத்துவிட்டு வந்த கதிர் மகாவின் சோர்ந்த முகத்தை கண்டு, “என்னாச்சு மகா..” என்று கேட்க, “அண்ணா எனக்கு ரொம்ப டையர்ட்டா இருக்கு கொஞ்ச நேரம் படுத்து எந்திரிச்சு வரட்டுமா?” என்று களைப்போடு கேட்டாள்.

“அதுக்கு என்னடா? வா. நல்லா ரெஸ்ட் எடு..” என்று மகாவை அறைக்கு அழைத்து சென்று ஏசியை ஆன் செய்துவிட்டு கிளம்ப ப்ரெக்னேன்சி கவுனுக்கு மாறிய மகாலட்சுமி மெல்ல மெத்தையில் சாய்ந்தாள்.

வெளியில் வந்தவனுக்கு தங்கையின் சோர்ந்த முகமே நினைவை ஆக்கிரமிக்க சோஃபாவில் அமர்ந்திருந்த பாக்கியாவிடம், “என்னமா ஆச்சு ஏன் மகா ஒரு மாதிரி இருக்கா?” என்றான். 

மகளின் வாழ்க்கை மலர்ந்த சில மாதங்களிலேயே உதிரும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதை அவரால் தாங்க முடியவில்லை. அவரையும் மீறி கண்ணீர் துளிகள் இமை மீறிக்கொண்டு இருந்தது. 

அவரிடம் இருந்து பதில் வராததில் அப்போது தான் தாயின் முகத்தை கதிர் பார்க்க அவர் விழிகள் சிவந்து, கன்னம் எங்கும் கண்ணீரின் தடம் வியாபித்து இருந்தது. 


“அம்மா அழுதீங்களா, என்ன ஆச்சு?” 


“உன் தங்கச்சி மொத்தமா வந்துட்டா டா..” என்று மகனின் தோள் சாய்ந்தவர், அங்கு நடந்ததை சொல்லி முடித்து, “பொட்ட புள்ள வாழ்க்கை, இரண்டு குழந்தைகள் இருக்கு எதை பத்தியும் கவலைப்படாம உன் அப்பா எடுத்தேன் கவிழ்த்தேன்னு கூட்டிட்டு வந்துட்டாரு. அவளும் ஒரு வார்த்தை மறுத்து பேசாம கிளம்பி வந்துட்டா கதிர்..” என்று கண்ணீரை துடைத்தபடி சொன்னார் 


“என்னமா பேசுறீங்க? இவ்வளவு நடந்த பிறகு மகா அங்க தான் இருக்கணும்னு எப்படி நீங்க நினைக்கிறீங்க? என்ன தைரியம் இருந்தா என் தங்கச்சியை கைநீட்டி இருப்பான்..” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை அனல். 


“கதிர் நீயும் கோபப்படாதே, இது உன் தங்கச்சியோட வாழ்க்கை! ஒரு பத்து நாள் பொறுத்து இருந்தா வளைகாப்பு பண்ணி அவளை கூட்டிட்டு வந்து இருக்கலாம்.. இப்ப எல்லாமே அறுத்து கழிச்ச மாதிரி மாப்பிள்ளை அவ்வளவு சொல்லியும் இவ கிளம்பி வந்துட்டாடா…” 


“பத்து நாளா? என்னம்மா பேசுறீங்க?! பிள்ளைதாச்சின்னு கூட பார்க்காம கை நீட்ற அளவுக்கு போயாச்சு.. இதுல அவங்க பேத்திக்கு இன்னும் நாலு நாள்ல சடங்குன்னு சொல்றீங்க அதுவரைக்கும் என் தங்கச்சியை நிம்மதியா விட்டு வைப்பாங்க நினைக்கிறீங்களா?” 


“கதிர்..”


“பத்து சவரன்!! இப்ப தங்கம் விற்கிற விலைக்கு எவ்வளவுன்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்னு இல்லை. அவங்ககிட்ட எந்த லிக்விட் கேஷும் (Liquid cash) இல்லாத நிலையில மகாவோட பத்திரத்தை கேட்டிருக்காங்க.. மகா கொடுக்க மாட்டேன்னு திடமா சொன்ன பிறகும் அவளை சும்மா விட்டுடுவாங்களா..?”


“நீங்க சொல்ற பத்து நாளும் அவளை நச்சுறுச்சு நச்சருச்சு நிம்மதி இல்லாம பண்ணி இருப்பாங்க.. அவளோட ப்ரெஷர் ஏறி பிரசவம் சிக்கலாகிடும். ஜெயசித்ரா கிட்ட பேசினேன் டாக்டர் அவளுக்கு மன அமைதி தேவைன்னு சொல்லி இருக்காங்க. பிளட் பிரஷர்ல இருந்து எல்லாமே அதிகமாகி இருக்காம். இப்படியே போனா டெலிவரி ப்ராப்லாமாகிடும் புரிஞ்சுக்கோங்க ம்மா..”


“புரியாமல் இல்லை கதிர். எனக்கு என் பொண்ணு முக்கியம் அதே நேரம் அவளோட வாழ்க்கையும் குழந்தைகளோட எதிர்காலத்தையும் பார்க்கணும் இல்லையா?”

 

“அப்போ உன் மாப்பிள்ளை என் தங்கச்சியை இந்த நிலையில் எப்படி நடத்தி இருக்கணும்?! அப்படியா நடத்தினான்? காட்டுமிராண்டித்தனமா நடந்துகிட்டவன் கூட இதுக்கு மேலயும் வாழ்ந்து என்ன ஆகப்போகுது? என் தங்கச்சிக்கு நான் இருக்கேன் நான் பாத்துக்கறேன் இன்னொரு முறை அவளை அங்க போக சொல்ற வேலை வச்சுக்காதீங்க ம்மா..” 


“அப்படி இல்லப்பா கொஞ்சம் நிதானிக்கலாமே…”


“இதை நீ உன் மாப்பிள்ளை கிட்ட தான் சொல்லணும். என் தங்கச்சி சரியான முடிவு தான் எடுத்து இருக்கா. நீங்க அவ மண்டையை கழுவி அங்க அனுப்பாம இருந்தா சரி..” என்ற  

நேரம் அங்கு வந்த தினகரன், “கதிர் நாளைக்கு மகாவுக்கு ஒரு ஃபுல் செக்கப் பண்ணிடலாம். அப்பாயின்மென்ட் போட்டுடு..” என்றார்.


“சரிப்பா..” என்றிட சுமதி வாழைப்பூ வடை டீயோடு மகாவின் அறைக்கு சென்றார். 


கண்களை மூடி சாய்ந்திருந்த மகாவின் தோளை தொட்டு எழுப்பியவள், “சூடா வடை போட்டுட்டு வந்திருக்கேன் சாப்பிடு மகா..” என்றாள்.


“இருக்கட்டும் அண்ணி…” என்றவள் இப்போது சாப்பிடும் மனநிலையில் இல்லை. 

“அத்தை சொன்னதை எல்லாம் நானும் கேட்டுட்டு தான் இருந்தேன் மகா. நீ எதுவும் கவலைப்படாதே! நல்லதே நடக்கும். முதல்ல குழந்தைகளை பாரு இப்போ அவங்க தான் முக்கியம். முதல் பிரசவம் வாழ்வா சாவாங்கிற நிலையில பலரை நிறுத்தும்னு சொல்லுவாங்க… அதுவும் ரெண்டு குழந்தைங்க இருக்கிற நேரத்துல எதை பற்றியும்  கவலைப்படாதே..”


“அண்ணி…”


“நாங்க கூட இருக்கோம் டா.. இந்த நிலையில் நீ எடுத்த முடிவு ரொம்ப சரி, மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம், எதுக்கும் நேரம் காலம்னு ஒன்னு இருக்கு தான்னே?! யாருக்காகவும் உன்னோட முடிவை மாத்திக்க வேண்டாம்.. நல்லா ரெஸ்ட் எடுத்து சந்தோஷமா இரு..” என்று சொல்ல “அண்ணி..” என்று கலங்கிய விழிகளோடு  தன் முன்னே நின்று இருந்தவரின் இடையை கட்டிக்கொண்டாள். 


அவள் தலையை வருடி கொடுத்தவர், “இப்போ உனக்கு நல்ல சாப்பாடு முக்கியம். வாந்தி குறைஞ்சு இருக்கு தானே தைரியமா பிடிச்சதெல்லாம் சாப்பிடு.. சாப்பிட்டு வாமிட் பண்ணினாலும் பரவால்ல சாப்பிடாம இருக்க கூடாது. இதோ உனக்கு பிடிச்ச வாழைப்பூ வடை இருக்கு…” என்று அவள் கையில் கொடுத்தவள், 


“இஞ்சி தட்டி போட்டு தான் கொண்டு வந்து இருக்கேன் சாப்ட்டுட்டு டீ குடி, ஈஸியா டைஜெஸ்ட் ஆகும். நான் டின்னர்கு ஸ்டஃப்ட் பன்னீர் சப்பாத்தி, மஷ்ரூம் மசாலா பண்றேன்…” என்று கிளம்பியவரின் முந்தானையை பிடித்து இழுத்தவள், 

“இங்கேயே இருங்க அண்ணி நாம சேர்ந்து சாப்பிடலாம்..” என்றாள் தழுதழுத்த குரலில். 


“இன்னும் அத்தை மாமா, தம்பிக்கு கொடுக்கலை. நான் போய் கொடுத்துட்டு வந்துடறேன்..” என்றார் புன்னகையோடு.


“சரி சீக்கிரம் வாங்க அண்ணி..” என்றிட மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு மகாவின் அறைக்கு சென்று அவளோடு சாப்பிட்டபடி பேச்சு கொடுத்து சகஜப்படுத்தினாள். 


பெண்களுக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், சோதனைகளை சந்தித்தாலும் ‘உனக்காக நான் இருக்கிறேன்..’ என்று பிறந்த வீட்டினர் கொடுக்கும் ஆதரவும், அரவணைப்பும் பெரும் பலம் அல்லவா?! 


என்ன தான் தந்தையை அவளுக்கு துணையாக இருக்கவும் தன் முடிவில் திடமாக இருந்த மகாலட்சுமிக்கு அங்கிருந்து கிளம்பிய நொடி நெஞ்சில் சொல்லில் வடிக்க முடியா பாரம் ஒன்று அழுத்தியது. 


தன் வீட்டிற்குள் வந்த போது கனத்த இதயத்தோடு தான் நுழைந்திருந்தாள். இதே வீட்டில் இருந்து எத்தனை மகிழ்ச்சியோடு தன் வாழ்வின் புது அத்தியாயத்தை நோக்கி கிளம்பினாள் ஆனால் அது இத்தனை சீக்கிரம் முடிவுக்கு வந்து விட்டதே என்ற ஆதங்கம் அவளை சுழற்றி அடித்து கொண்டிருந்தது. 


‘இதுதான் இறுதி முடிவா?’ என்று அவளுக்கு தெரியாது. ஆனால் ரிஷி பேசியதை பார்க்கும் போது அவன் மனம் வருந்துவான், திருந்தி தன்னை தேடி வருவான் என்று நம்பிக்கை அவளுக்கு சுத்தமாக இல்லாமல் போனது.

ஒரு புறம் வீம்போடு தன் சுயமரியாதையை காத்துக் கொள்ள அங்கிருந்து கிளம்பி வந்து விட்டாலும் மறுபுறம் குழந்தைகளை தந்தையிடம் இருந்து பிரிக்கிறோமோ என்ற எண்ணம் அவளை வாட்டியது. 


பார்க்கலாம், காலம் அனைத்தையும் ஆற்ற வல்லது!!


இதுநாள் வரை அவள் இருப்பு அவனுக்கு தன் மதிப்பை அருமையை தெரிய விடாமல் செய்திருந்தாலும் ‘இன்றைய பிரிவு அதை உணர்த்தும், உணர்த்தி விடாதா? உணர்த்த வேண்டுமே?!’ என்ற வேண்டுதலோடு மகா. 


கண்களை மூடி படுத்திருந்தவளின் மனதில் இருந்த சஞ்சலம் இப்போது சுமதியோடு பேசியதில் முழுதாக விடை பெற்று இருந்தது.


Comments

Post a Comment

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 20.3