வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 10.1



ரிஷி அலுவலகத்திற்கு கிளம்பி செல்ல மகளை சாப்பிட அழைத்தார் இந்திரா. 

“சாப்பாடு ஒன்னு தான் இப்போ குறைச்சல். அவன் எப்படி பேசிட்டு போறான்னு பார்த்தியாம்மா? எதையாவது நீங்க கேட்கறீங்களா? அவனுக்கு வக்காலத்து வாங்கி தான் பேசுறீங்க…” என்றாள் கண்ணீரோடு. 

“ப்ச் சும்மா சும்மா அழாத வனிதா. அவசர வேலைன்னு சொல்லிட்டு தானே கிளம்பினான்..”

“ரிஷி என்ன பண்ணுவான்னு யோசிக்கிற நீங்க ரெண்டு பேரும் நான் என்ன பண்ணுவேன்னு யோசிக்கிறீங்களா? நீங்க கட்டி வச்ச மாப்பிள்ளை தானே! நான் என்ன எவனையாவது இழுத்துட்டு ஓடிப்போயிட்டனா இல்லை உங்க தலை குனிய அளவுக்கு நடந்துக்கிட்டேனா? உங்களை நம்பி இருக்கிற என்னை பத்தி நீங்க கொஞ்சமாவது கவலை படறீங்களா?” என்றாள் கட்டுபடுத்த முடியாத கண்ணீரோடு.

“இப்ப எதுக்கு தேவை இல்லாம அழுதுட்டு இருக்க நீ! அன்னைக்கு சூழல் அப்படி அதனால ஒத்துக்கிட்டோம் ஆனால் இப்போ தங்கம் விக்கிற விலைக்கு உன்னால முதல்ல பத்து சவரன் போட முடியுமா யோசிச்சு பாரு..” என்றார் சிவபாலன். 

‘அவளால் எப்படி போட முடியும்?’

சொல்லப்போனால் இந்த முறை சிந்துவுக்கு பத்து சவரன் கறந்து விட்டால் அடுத்து தாரணி வயதுக்கு வரும் போது இவளை முன்னோடியாக வைத்து அவளுக்கும் பத்து சவரன் போட வைத்து விடலாம் என்ற கணக்கோடு தான் இங்கே வந்திருக்கிறாள். 

“என்னை என்ன அவனை மாதிரி படிக்க வச்சீங்களா? இல்ல வீடு தான் கட்டிக் கொடுத்தீங்களா?” 

“என்னடி பேசுற?”

“பின்னே என்ன ம்மா, பொட்ட பிள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு என்னை  படிக்க வைக்கல..” என்றவளை இடையிட்டு,  

“வனிதா உனக்கு படிப்பு ஏறலைங்கிற உண்மையை மறந்துட்டு பேசாத..  பனிரண்டாவதுல மொத்தம் மூணு சப்ஜெக்ட்ல நீ ஃபெயில்” என்றார் சிவபாலன்.

“இருந்துட்டு போறேன். அதுக்காக அப்படியே விட்டுடுவீங்களா? ஏதாவது  ஒரு டுட்டோரியல் சென்டர்ல சேர்த்து விட்டிருந்தா நான் அந்த மூணு சப்ஜெக்ட் பாஸ் பண்ணி இருப்பேன்.. என்னை டீச்சர் ட்ரைனிங் சேர்த்து விட்டிருந்தா இன்னைக்கு ஒரு கவர்மெண்ட் டீச்சரா யார் கையையும் எதிர்பார்க்காம இருந்திருப்பேன்..”

“ஆனா நீங்க தான் ரெண்டு பேரையும் படிக்க வைக்க முடியாதுன்னு அவனுக்கு மட்டும் படிப்பு கொடுத்தீங்க. அது மட்டுமா கடனை உடனை  வாங்கியாவது அவன் கல்யாணத்துக்கு முன்னாடி வீடு கட்ட தெரிஞ்ச உங்களுக்கு அதுல பாதி பணத்தையாவது எனக்கு கொடுக்கணும்னு தோணுச்சா?” என்றதில் இருவருமே ஆடிப் போயினர். 

“ஏய் என்னடி பேசுற?” என்று அதிர்ச்சியோடு இந்திரா பார்க்க, 

“உனக்கே தெரியுது கடன் வாங்கி தான் வீடு கட்டி இருக்கோம்னு.. அதுல எப்படி உனக்கு பாதி கொடுக்க முடியும்?” என்று காட்டமாகவே கேட்டார் சிவபாலன்

“இப்போ எல்லாம் பொண்ணுங்களுக்கும் சொத்தில் சம உரிமை இருக்கு கடன் வாங்கி இருந்தா என்ன அதெல்லாம் அடைச்ச பிறகு எப்படியும் இந்த வீட்டை அவனுக்கு தானே கொடுக்க போறீங்க. இதோட மதிப்பு எவ்ளோன்னு எனக்கும் தெரியும் ஆனா இதுவரைக்கும் ஒரு வார்த்தை நான் கேட்டிருப்பேனா?!” என்று மூக்கை உறிஞ்சியவள்.,

“நான் பெருசா என்ன கேட்டுட்டேன், உங்ககிட்ட வளர்ந்துட்டு இருக்கிற  என் மகளுக்கு கௌரவமா நகை போடுங்க, சீர் செனத்தி செஞ்சு நல்லபடியா கட்டி கொடுத்து நாள பின்னே அவளோட  நிகழ்ச்சிகளையும் சிறப்பாக செஞ்சு கொடுங்கன்னுதானே கேட்கிறேன்..” என்றதில் அவர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது.  

‘இது என்னடா காலை சுற்றிய பாம்பாக தங்கள் கழுத்தை நெறிக்கிறதே’ என்று அயர்ந்து போனார் சிவபாலன். 

“என்னது கல்யாணத்துக்கு அப்புறம் வர நிகழ்ச்சியா? என்னடி பேசுற? அவ உன் பொண்ணு அது ஞாபகம் இருக்கா?”

“என் பொண்ணு தான் ம்மா! ஆனா நீங்க தானே வளர்த்தீங்க அந்த பாசம் உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லையா? என்னை எப்படி தலைமுழுகுனீங்களோ அதே மாதிரி என் பொண்ணையும் தலைமுழுகணும்னு முடிவு பண்ணிட்டீங்க அப்படித்தானே?!” 

“வனிதா உன் பேச்சு சரியில்ல. கொஞ்சமாவது எங்க சூழ்நிலையை புரிந்து அனுசரிச்சு நடந்துக்கோ, அவ்வளவு தான் சொல்லுவேன்..” என்றார் சிவபாலன்.

“நான் அனுசரிச்சு தான் நடந்துக்கிறேன் ஆனா என் மனசை நோக்கடிச்சு இவ்வளவு தூரம் பேச வைக்கிறது நீங்க தான்!! சரி புதுசா நகை எடுத்தா தானே உங்களுக்கு லட்ச கணக்குல செலவாகும்னு யோசிக்கிறீங்க?! ஏற்கனவே இருக்கிற நகைகளை என் பொண்ணுக்கு போடுங்க. நான் என்ன புதுசா தான் வேணும்னு சொல்றேன்னா?!”  

‘ஏற்கனவே இருக்கிற நகையா? அப்படி என்ன இருக்கு இங்க?’  என்று மகளை பார்த்த இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை. 

“அதான் இந்த வீட்டுக்கு வந்திருக்கிறாளே மகாராணி, அவளுக்கு கல்யாணத்தப்போ நாற்பது சவரனுக்கு மேல போட்டாங்க தானே?! அதுல ஒரு பத்து சவரன் என் மகளுக்கு போட்டா என்னவாம்?”

“என்னடி பேசற?” என்ற இந்திராவே அவள் பேச்சில் வாயில் கை வைத்து விட்டார்.  

“இருக்கிற நகையை இப்போ சிந்துவுக்கு போட்டுட்டு பின்னாடி அவளுக்கு புதுசா கூட எடுத்து போடுங்க நான் ஒன்னும் வேண்டாம்னு சொல்லலையே.. உங்களுக்கு கடனும் ஆகாது சீர் செய்றதுல பிரச்சனையும் வராது..” என்று தீர்வை சொல்ல சிவபாலனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. 

“மருமகளுடைய நகையா? என்ன பேசுற நீ?!” என்றார் அடிக்குரலில். 

“ஏன்? என்னை கல்யாணம் பண்ணிட்டு போனதுமே என் நகை எல்லாத்தையும் தூக்கி என் நாத்தனாருக்கு போட்டு கட்டிக் கொடுத்தாங்க தானே! நான் ஒன்னும் நாற்பது சவரனையும் கேட்கலையே, அதுல கொஞ்சம் எடுத்து போட்டா என்ன தப்பு?”  

“அது உன் தம்பி பொண்டாட்டியோட நகை. அதை எப்படி நாங்க?” என்று சிவபாலன் முடிக்கும் முன்னமே “அவ சொல்றது சரிதானே?!” என்றார் இந்திரா. 

“என்னடி பேசுற?” என்று பல்லை கடித்த மனிதருக்கு அப்படி ஒரு ஆற்றாமை. 

இதோ பார் அவ தான் புரியாம உளறிட்டு இருக்கா ஆனா மருமகளோட நகைகளை பற்றி எக்காரணம் கொண்டும் ரிஷி கிட்ட பேசி பிரச்சனையை இன்னும் சிக்கலாக்கிக்காதீங்க.. அவ்ளோ தான் சொல்வேன்.. என்று எச்சரித்தார்.

அன்று மகளின் நகைகளை எடுத்து அவள் நாத்தனாருக்கு போட்டதையே சிவபாலனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

ஆனால் ஸ்ரீனிவாசனும் அவன் குடும்பமும் பெண்ணை கொடுத்த பின்னர் அவளை சார்ந்த அத்தனையும் தங்களின் உடமை யாருக்கும் கேள்வி கேட்கும் உரிமை இல்லை என்று பேசிய பேச்சில் அதற்கு மேல் அவர் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. 

மருமகளும் அவள் குடும்பமும் எத்தனை மதிப்பானவர்கள் என்று அவருக்கு தெரியும். இன்று வரையில் அவர்களுடனான உறவு ஓரளவு சீராக இருக்கிறது இப்போது நகையை கேட்டு அதைக் கெடுத்துக் கொள்வதில் அவருக்கு விருப்பமில்லை. 

ஒருபுறம் இதை அறிந்த பின்னர் மகன் என்ன சொல்வானோ?! என்ற கேள்வி எழுந்தாலும் மறுபுறம் இந்த பிரச்சனைக்கு எப்படியாவது ஒரு தீர்வு கண்டு விட வேண்டும் என்ற எண்ணம் மனிதரை வெகுவாக அழுத்தியது. 

கிட்டத்தட்ட வேலியில் சென்ற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாக அன்று மகளை வாழ வைக்க கொடுத்த வாக்கு இப்போது அவர்கள் கழுத்தை நெறிப்பதை எண்ணி நொந்து போய்விட்டார். 

மகளின் மனதை எப்படியாவது மாற்றலாம் என்று பார்த்தால் மனைவியும் இப்போது அவளுடன் கூட்டு சேர்ந்து கொண்ட நிலையில் அவர்களிடம் இனி பேசி ஆகப்போவது எதுவும் இல்லை என்று புரிந்து போக மகனுக்கு அழைத்தார். 

முக்கியமான மீட்டிங்கில் இருந்ததால் ரிஷி அவரின் அழைப்பை உடனே ஏற்கவில்லை. 

“அவசரம். முடிந்த வரை சீக்கிரமாக வீட்டிற்கு வா” என்று வாய்ஸ் நோட் போட்டு விட்டவருக்கு மகளின் பேச்சு மகாலட்சுமி வரை போய் விடக்கூடாது என்ற பதைபதைப்பு.

முடிந்தவரை அவள் வருவதற்குள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் உழன்று கொண்டிருந்தவருக்கு அதித அழுத்தத்தில் நெஞ்சை அடைக்கும் உணர்வு. 

உடனே அறைக்கு சென்று தான் வழக்கமாக எடுக்கும் மாத்திரையை போட்டுக்கொண்டு படுத்து விட்டார். 

ரிஷி மூன்று மணி போல வீட்டிற்கு வந்த போது அத்தனை அமைதியாக இருந்தது.

“எங்கப்பா அம்மா அக்கா யாரையும் காணோம்?” என்றான் சிவபாலனிடம்.

“அடுத்த வாரம் தாரணிக்கு பிறந்தநாள் வருதே அதுக்கு துணி எடுக்க போயிருக்காங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க…” என்றிட உடை மாற்றிக்கொண்டு வந்தவன்,

“சரிப்பா, சாப்பாடு இருக்கா?” என்றபடி சமையலறையில் ஆராய ஹாட்பாக்ஸில் சாதம் இருந்தது. 

“லட்சுமிக்கு முடியலைன்னு இன்னைக்கு பொரியல் பண்ணலை. அப்பளம் போடட்டுமா பா?..” என்றார் மகனிடம். 

“இருக்கட்டும் ப்பா…” என்றவன் சாப்பாடு போட்டுக்கொண்டு ஊறுகாய் வைத்தபடி சாப்பிட அமர்ந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் அப்பளம் கொண்டு வந்து வைத்தவர், “எப்பவும் நேரத்துக்கு சாப்பிட்டுடுவ, இன்னைக்கு ஏன் இந்நேரமாகியும் சாப்பிடலை.. வேலை அதிகமா ரிஷி?”

“ஆமா ப்பா மீட்டிங் இருந்தது.. அக்கா இன்னைக்கே பேசியாகனும்னு சொன்னதால மீட்டிங் முடியவும் இருந்த வேலைகளை டீம் கிட்ட கொடுத்துட்டு கிளம்பிட்டேன்..” என்றவன் சாப்பிட்டு முடிக்கவும் வெளியில் சென்றிருந்தவர்கள் திரும்பவும் சரியாக இருந்தது. 

சிவபாலன் ரிஷி சாப்பிடும் வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை. முடித்த பிறகு பேசலாம் என்று காத்திருக்க அதற்குள் இந்திராவும் வனிதாவும் வந்துவிட்டதில் எதுவும் பேச முடியாமல் போனது. 

வாங்கியிருந்த துணிகளை அவர்களிடம் காண்பித்தார் இந்திரா. 

“எதுக்கு ஒரே மாதிரி ரெண்டு?”

“தாரணிக்கு ஒன்னு சிந்துவுக்கு ஒன்னு..” என்றதில் கண்களை மூடி திறந்த சிவபாலனுக்கு தான் எது பேசினாலும் பிரச்சனை அதிகரிக்கும் என்பதால் அமைதி காத்தார். 

“தம்பி சிந்து விஷயத்துல என்ன முடிவு பண்ணியிருக்க?” என்றாள் வனிதா. 

“புதுசா சொல்ல என்னக்கா இருக்கு. அதுதான் காலையிலேயே சொன்னேனே தாய் மாமன் சீர் செய்ய தயாரா இருக்கேன் ஆனா நீ சொல்ற மாதிரி பத்து முப்பதுன்னு போட முடியாது…” என்றான் தீர்மானமான குரலில். 

“இத்தனை நாள் நீங்க அவளோட பொறுப்பை ஏத்துக்கிட்டதை எவ்ளோ பெருமையா என் மாமியார் நாத்தனாருங்க கிட்ட பேசி இருப்பேன் ஆனா இப்போ எப்படி அவங்க முகத்துல முழிப்பேன்.. அவர் கேட்டா என்னன்னு பதில் சொல்லுவேன்?” என்று ஒப்பாரி வைக்க தொடங்கி விட்டாள்.

Comments

Post a Comment

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.3