
“அதுக்காக இங்க என்ன பணம் கொட்டியா கிடக்கு? சிந்து பங்க்ஷனுக்கு பத்து சவரன் போடுற அளவுக்கு எங்களுக்கு சக்தி கிடையாது. அதுவும் இப்போ தங்கம் விக்கிற விலைக்கு எங்க பக்கம் இருந்து ஒரு சவரனே அதிகம்.. அது கூட அப்போதைய சூழலை பொருத்து தான் முடிவு பண்ண முடியும்? ஆனா நீ எந்த நம்பிக்கையில முப்பது சவரன் செய்வோம்னு நினைக்கிற?” என்றான் அக்காவிடம் நேரடியாக.
“வரதா பெரியவ கிட்ட இப்படியா பேசுறது?” என்று கண்டித்தார் இந்திரா.
“என் கஷ்டத்தை புரிஞ்சுக்காம கட்டாயபடுத்தினா வேறே எப்படிம்மா பேச சொல்ற? சிந்துவை வளர்த்து கொடுக்கிறதே பெரிய விஷயம் இதுல எல்லா பாரத்தையும் நம்ம தலையில போட்டா எப்படி?”
“அப்போ என் பொண்ணு உனக்கு பாரமா தெரியறாலா டா?” என்றார் சிவந்த விழிகளுடன்.
“அப்படின்னு நான் சொல்லல ஆனா இத்தனை சவரன் போட்டு தான் ஆகணும்னு நீ கட்டாயப்படுத்தும் போது நிச்சயமா பாரம் ஆகிடும்னு தோணுது…”
“இப்படி பேசாத வரதா உன் அக்காவுக்கு நம்மள விட்டா யார் இருக்கா? அவ எதிர்பார்க்கிறது ஒன்னும் தப்பில்லையே! அம்மா அப்பாவுக்கு போடுற சோறும் அக்கா தங்கச்சிக்கு செய்யற சீறும் எப்பவும் கணக்கு பார்க்க கூடாதுன்னு சொல்லுவாங்க..”
“ம்மா அக்காவுக்கு செய்ய வேண்டிய சீர், அக்கா பொண்ணுங்களுக்கு செய்ய வேண்டிய எதையுமே நான் மாட்டேன்நு சொல்லலையே! நாளைக்கு சிந்து கல்யாணத்துக்கு நாம ரெண்டு லட்சமோ அஞ்சு லட்சமோ கொடுத்து உதவலாம்..”
“ஆனா 30 சவரன் போட்டு நாம தான் கட்டிக் கொடுக்கணும் எல்லாமே செய்யணும்னு சொல்லும் போது அதை எப்படிமா என்னால ஏத்துக்க முடியும்? எனக்கு பொண்டாட்டி இல்லையா இல்ல நாளைக்கு புள்ளைங்க வரப்போறது இல்லையா? அவங்களை யார் பார்ப்பா?”
“வர வருமானம் எல்லாம் ஈஎம்ஐ க்கு போயிடுது நான் எப்படி குடும்பம் நடத்துறேன்னு உங்க யாருக்காவது தெரியுமா? எனக்கு எவ்வளவு கடன் இருக்குன்னு ஒரு நாளாவது கேட்டிருப்பீங்களா? அப்பவே கல்யாணம் முடிச்சுட்டு வீடு கட்டிக்கலாம்னு சொன்னேன் கேட்டியா ம்மா?” என்றவன் குரல் உயரவில்லை ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் அத்தனை வலியோடும் ஆதங்கத்தோடும் வெளியேறியது.
“பார்த்தியா ம்மா என் தம்பி கல்யாணத்துக்கு அப்புறம் எந்த அளவுக்கு மாறிட்டான்னு…”
“ப்ச், அப்படி என்ன க்கா மாறிட்டேன்?”
“இதோ நீ இப்படி எல்லாம் பேசினதே கிடையாது. இதுக்கு முன்னாடி எனக்கு கணக்கு பார்க்காதவன், ஒரு வார்த்தை சத்தமா பேசாதவன் இப்போ இப்படி பேச காரணம் யாருன்னு எனக்கு தெரியாதா என்ன?” என்றவள்,
“யார் காரணம்?” என்ற ரிஷியின் கோபமுமே அவன் கட்டுக்குள் இல்லை.
“வேற யார் எல்லாம் உன் பொண்டாட்டி தான்! எதுவும் நீயா பேசல அவ கீ குடுக்குறா அதுக்கு ஏத்த மாதிரி நீ ஆடுற..” என்றதில் ரிஷிக்கு அப்படி ஒரு கோபம்.
“வாயை மூடு க்கா! நான் என்ன மடையனா? எனக்கு சுய புத்தி கிடையாதா? எனக்கு இன்னொருத்தர் கீ கொடுத்து பேச வைக்க?”
“சிந்து கல்யாணம் வரைக்கும் மொத்தமா நாங்க தான் பார்க்கணுங்கிற விஷயம் எனக்கே இப்ப தான் தெரியும். இன்னும் அவளுக்கு எதுவுமே தெரியாது… அப்படி இருக்கும் போது அவ சொல்லிக் கொடுத்து பேசுறேன்னு எப்படி சொல்லுவ?” என்றான் அடக்கப்பட்ட கோபத்தோடு.
“ரிஷி பொறுமையா பேசுடா..” என்றார் சிவபாலன்.
“ப்பா அக்காவை விடுங்க, ஏற்கனவே அக்கா கல்யாணத்தை நடத்தி முடிச்ச உங்களுக்கு தெரியாதா? அப்படி இருந்தும் நீங்க எப்படி இதுக்கு ஒத்துக்கலாம்?” என்று கேட்க சிவபாலனால் பேச முடியவில்லை.
மகனுக்கு பாரம் கூடுவது புரிந்ததால் தான் மகளிடம் எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றார். ஆனால் அவள் பிடிவாதத்தின் முன் தோற்று போனவரால் எதுவும் பேச முடியவில்லை.
“அப்படியில்லை வரதா அப்போ தங்கம் சவரன் இருபத்தி ஐந்தாயிரத்துகுள்ள தான் இருந்துச்சு.. பத்து சவரன் எப்படியும் மூணு லட்சத்துல முடிஞ்சிடும்னு தான் நினைச்சோம் ஆனா இப்படி கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாதளவு தங்கம் விலை இருக்கும்னு நினைக்கலை..” என்று இந்திரா சொல்ல,
“ சிந்து கல்யாணத்துக்கு சிறுக சிறுக சேர்த்து வச்சு பண்ணி கொடுத்திடலாம்னு நினைச்சோம் ஆனா உன் அம்மா வீடு கட்டணும்னு சொல்லி சேர்த்து வைச்ச கொஞ்சம் நகையையும் குடுத்துட்டா..” என்ற சிவபாலன் மேலும் பேசும் முன்,
“இன்னைக்கு என் கையில இந்த வேலையும் இல்லாம இருந்திருந்தால் முப்பது சவரனுக்கு என்ன பண்ணி இருப்பீங்க? என் தலையை கொண்டு போய் அடமானம் வச்சிருப்பீங்களா?”
“ரிஷி….”
“அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடனையே நான் தான் அடைச்சேன். அடுத்து வீடு கட்டினது கல்யாணம் பண்ணினதுன்னு ஈஎம்ஐ இல்லாம எத்தனை இடத்துல கடன் வாங்கி இருக்கேன்னு தெரியுமா உங்களுக்கு?.. இது போதாதுன்னு அம்மாவுக்கு ஹாஸ்பிடல் செலவு..”
“ஸ்கேன், எக்ஸ்ரே, ப்ளட் டெஸ்ட் அது இதுன்னு ஒவ்வொரு முறையும் ஹாஸ்பிடல் பில் ஆயிர கணக்குல போக வர கேப் செலவு, ஃபிஸியோதெரபிஸ்ட் செலவு, ஷோல்டர் பெல்ட், ஹிப் பெல்ட், மாத்திரை மருந்துன்னு இப்ப வரைக்கும் கிட்டத்தட்ட லட்ச ரூபாய்க்கு மேல செலவு உனக்கு தெரியுமா?”
“என்கிட்டே ஏன் சொல்ற ரிஷி. இதை உன் பொண்டாட்டி கிட்ட சொல்லணும். எல்லாம் அந்த மகாராணி வந்த நேரம். அவ ராசியால தான் எங்க அம்மா படுத்த படுக்கையா ஆனாங்க…” என்ற வனிதாவிற்குமே தெரியும் அதற்கு காரணம் தன் கணவன் என்று!!
ஆனால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும். அப்படி அவள் செய்து விட்டால் அவரின் குடிப்பழக்கம் அப்பா தம்பிக்கு தெரியவரும். அது மட்டுமா பத்து சவரனை அவள் உறுதி படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள்.
பின்னே! அவள் கணவன் குடித்து விட்டு கம்பெனியில் உடன் வேலை செய்த ஒரு பெண்ணின் கையை பிடித்திழுத்து தவறாக நடக்க முற்பட்டு அது பெரிய பிரச்சினையாகி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று விட்டது.
இரண்டு லட்ச ரூபாய் செட்டில்மென்ட் செய்து தான் அவனை விடுவிக்க வேண்டி இருந்தது. கையில் இருந்த சேமிப்பு குழந்தைகளுக்கு போட்டிருந்த செயின் கம்மலை விற்று ஓரளவு பணம் புரட்டி அழைத்து வந்திருந்தாள் வனிதா.
இறுதியில் ஒழுக்க சீர்கேட்டால் அவனை வேலையை விட்டு நீக்கியது என்று கடந்த இரண்டு மாதங்களில் எத்தனையோ நடந்து முடிந்து விட்டது.
அதை பற்றி வனிதா பிறந்த வீட்டில் மூச்சு விடவில்லை.
வேலை போன பின்னர் இப்போது முழு நேரமும் குடியும் குடித்தனமுமாக வீட்டோடு இருக்கும் கணவன் பற்றிய உண்மையை எப்படி அவளால் சொல்ல முடியும்? எப்போது கணவன் குடிக்க ஆரம்பித்தானோ அப்போதே தாரணியை அங்கிருக்கும் ஹாஸ்டலில் சேர்த்து இருக்கிறாள்.
மகள் எதிரில் பகலில் குடிக்க கூடாது என்ற நிபந்தனையோடு, வார இறுதிகளில் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவாள்.
இதையெல்லாம் சொன்னால் பிறந்த வீட்டில் அவளுக்கு இன்னும் தலையிறக்கம் அல்லவா?! தன் குடும்ப நிலை தெரிந்த பின்னர் சிந்துவை இங்கு வைத்துக் கொள்ளாமல் போகவும் வாய்ப்பு உண்டு என்ற அச்சம் ஒரு புறம் என்றால் அவளுக்கு கிடைக்க வேண்டிய சீர் கிடைக்காமல் போய் விடுமோ என்ற ஆதங்கம் மறுபுறம்.
அதனால் முடிந்த வரை மகள்களுக்கு சேர வேண்டியதை உறுதி செய்யாமல் அவள் இங்கிருந்து கிளம்ப போவதில்லை.
“கல்யாணம் வரைக்கும் கூட சிந்து இங்க இருக்கட்டும் அது பிரச்சனை இல்லை ஆனால் அவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டியது பெத்தவங்களோட பொறுப்பு தானே அது எப்படி நம்மளோடதாகும்?” என்றான் ரிஷிவரதன்.
“அப்போ நான் வாழா வெட்டியா இங்க வந்து இருந்தாலும் உனக்கு ஒன்னுமில்லையா ரிஷி?..” என்று கண்ணீரோடு கேட்ட வனிதா,
“யாருமே எனக்காக இல்லைங்கிறப்போ இனியும் நான் எதுக்கு உயிரோட இருந்துகிட்டு?! யாருக்கும் பாரமில்லாம செத்து போறேன்..” என்று கண் இமைக்கும் நொடியில் கத்தியை எடுத்து கையை கீற முற்பட அனைவரும் பதறிப்போயினர்.
நல்லவேளை சட்டென சுதாரித்த ரிஷி அவள் மணிக்கட்டில் அழுத்த முற்பட்ட கத்தியை பிடுங்கி விசிறி எறிந்தான்.
ஆனாலும் அவளிடம் இருந்து கத்தியை பறிக்கும் முயற்சியில் பெருவிரலுக்கு கீழே உள்ளங்கையில் கத்தி கீறி விட்டிருந்தது.
“அக்கா உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?” என்றான் என்றுமில்லாத குரலில்.
“எவ்ளோ ரத்தம்?!” என்ற இந்திரா மகளின் கையை தூக்கி பிடிக்க ரிஷி முதலுதவி செய்து கட்டு போட்டான்.
“வரதா நம்மளை விட்டா அவளுக்கு யார் இருக்கா? உன் கூட பிறந்தவளுக்கு உன்கிட்ட இல்லாத உரிமையா? அது தான் இவ்ளோ செய்ங்கன்னு சட்டமா கேட்கிறா? வேற யாருக்கு டா உன் கிட்ட இந்த உரிமை இருக்கு..” என்ற இந்திரா கண்ணீரோடு பேச தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் ரிஷி.
மனமெங்கும் அப்படி ஒரு வலி. தன் நிலையை புரிந்து கொள்ளாமல் ஆளாளுக்கு பேசியதில் அவன் ரத்த அழுத்தம் தான் ஏகத்திற்கும் உயர்ந்தது.
“விடும்மா. மத்த பொண்ணுங்க மாதிரி பதவிசா பேசி பொறந்த வீட்டுல இருந்து எதையும் செஞ்சுக்க எனக்கு தெரியலை. பட்டுபட்டுன்னு கேட்டுட்டேன் அது அவனுக்கு கஷ்டமா இருக்கு அதுதான் பேசிட்டான்..” என்று பெருந்தன்மையாக சொன்னவள்,
“எனக்கும் என் தம்பி மேல அளவில்லாத பாசம் உண்டு.. அதை ஒவ்வொரு முறையும் வார்த்தையில் சொல்லனும்னு இல்லை. சின்ன வயசுல அவனை குளிப்பாட்டுறது, ஊட்டி விடறது, தூங்க வைக்கிறதுன்னு எவ்வளவோ செஞ்சிருக்கேன்....”
“நாளைக்கு அவனுக்கு பிள்ளைங்க பிறந்தாலும் எல்லாமே அள்ளி போட்டு வளர்க்க போறவளும் நான் தான்! ஆனா எந்நேரமும் அதையெல்லாம் சொல்லி காட்டிட்டேவா இருக்க முடியும்?! என் தம்பிக்கும் எங்க மேல பாசம் உண்டு..” என்று கண்ணீரும் கம்பலையுமாக அவள் பேச..
“இப்ப என்ன உனக்கு? உன் பொண்ணு சடங்குக்கு பத்து சவரன் செய்யணும் அதானே?! செஞ்சு தொலைக்கிறேன்..” என்றான் ரிஷி இன்னுமே குறையாத கோபத்தோடு.
“செஞ்சுடுவ தானே ரிஷி? இப்ப என்னை சமாதானம் பண்றதுக்காக பேசிட்டு நாளைக்கு மனசு மாறிட மாட்டியே…”
“கண்டிப்பா மாட்டேன்..” என்றான் இறுகிய குரலில்.
“பணத்துக்கு என்ன பண்ணுவ?”
“ஏன்? இப்ப தான் உனக்கு இந்த கேள்வியை கேட்க தோணுதா?” என்று சிவபாலன் பல்லைகடிக்க,
“என்னமோ பண்றேன். கொள்ளையடிக்கிறேன் இல்லை என் தலையை அடமானம் வெச்சாவது உன் பொண்ணுக்கு சீர் செய்றேன் போதுமா?!” என்றவன் கொண்டிருந்த அழுத்தம் தாளாமல் ஆழ்ந்த மூச்சை எடுத்த படி வெளியே சென்று விட்டான்.
unakku ithu pathathu
ReplyDelete