வாழ்க்கைத்துணை - 20.3
அன்று மகாவை அலுவலகத்தில் இருந்து அழைத்து செல்ல வந்த கதிர்வேலனிடம் பிரியாணி சுட சுட சப்பாத்தி நாட்டுக்கோழி வறுவல் என்று மொத்த குடும்பத்திற்குமே பேக் செய்து கொடுத்திருந்தார் பாக்கியலட்சுமி.
“என்னண்ணா இவ்ளோ பெரிய பேக்?”
“ரிஷி, அத்தை மாமாவுக்கு அம்மா கொடுத்துவிட்டாங்க மகா..” என்றிட உடனே அன்னைக்கு அழைத்தாள்.
“எதுக்கு மா உங்களுக்கு கஷ்டம்? நான் பார்த்துக்க மாட்டேனா?!”
“இருக்கட்டும் மகா ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் ரொம்ப ஆசைப்பட்டு கேட்டு சாப்பிட்ட மாப்பிள்ளை சம்மந்திங்க எல்லாருக்கும் கொடு” என்றார்.
“சரி மா. ஆனா இதுதான் கடைசி நீங்க கஷ்டப்படுத்திக்காதீங்க..”
“ஹ்ம்ம். வீட்டுக்கு போனதும் சாப்பிட்டுடு நேரம் கழிச்சு சாப்பிட்டேனா ஜீரணம் ஆகுறது கஷ்டம். சாப்ட்டுட்டு நான் சொன்ன மாதிரி கஷாயம் போட்டு குடிச்சுடு எந்த பிரச்சனை இருக்காது தூக்கணும் கெடாது..” என்று மகளுக்கு அறிவுரை சொல்ல புன்னகையோடு கேட்டுக்கொண்டாள்.
அசைவ உணவை மகா தனியாக கொண்டு செல்ல வேண்டாம் என்பதால் வேப்பிலை, மிளகாய், கரி என்று அவள் பாதுகாப்பிற்கானஅத்தனை முன்னேற்பாடுகளோடு கதிர்வேலனும் தங்கையுடன் வந்தான்.
“உள்ள வாங்க ண்ணா. காஃபி சாப்பிட்டுட்டு போவீங்க..” என்று வாசலோடு கிளம்பியவனிடம் சொல்ல,
“இருக்கட்டும் மகா இன்னைக்கு உன் அண்ணியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும். இப்பவே நேரம் ஆச்சு இன்னொரு நாள் பார்க்கலாம்..” என்றான்.
காயத்ரியின் பிரசவத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு என்பதால் கதிர்வேலன் மாமியார் வீட்டில் இருக்கும் மனைவியை தினமும் பார்க்க சென்று விடுவான் ஒரு சில நாட்கள் இரவு அங்கு தங்குவதும் உண்டு.
இப்போதும் முக்கியமான டெஸ்ட் எடுப்பதற்காக மருத்துவர் அவர்களுக்கு இரவு நேரம் ஒதுக்கி இருந்தார். தங்கையை விட்டு விட்டு மனைவியை அழைத்துக் கொண்டு கதிர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதால் வாசலோடு கிளம்பி விட்டான்.
அவள் வீட்டினுள் வந்த போது ரிஷி வீட்டில் இல்லை. அவன் மட்டுமல்ல சிவபாலனை தவிர்த்து வேறு யாருமே அங்கு இல்லை.
வந்த காரியம் நிறை வேறியதால் வனிதா மாலையே பெங்களூருக்கு கிளம்பி விட்டாள்.
“கை அடிபட்டு இருக்கு. இன்னும் ரெண்டு நாள் தங்கி சரியான பிறகு போ..” என்று இந்திரா சொன்ன போதும் அவள் அங்கிருக்க தயாராக இல்லை.
“என்னமா கதிரா உன்கூட வந்தது.. ஏன் வாசலோடு கிளம்பிட்டார்?” என்றார் மாடியில் இருந்து வந்த சிவபாலன்.
“ஆமா மாமா அண்ணியை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்னு கிளம்பிட்டார்..”
“இது என்னம்மா இவ்ளோ பெரிய பேக்?” என்றார் டைனிங் டேபிள் மீது இருந்ததை கண்டு.
“அம்மா சாப்பாடு கொடுத்துவிட்டு இருக்காங்க. வாங்க சாப்பிடுவீங்க..” என்று மாமனாரை அழைத்தாள்.
“என்ன மா விசேஷம்?” என்றவரிடம் அவள் இன்று அங்கு சென்றது வாய்க்கு ருசியாக சாப்பிட ஆசைப்பட்டது என்று அனைத்தையும் சொன்னவள், “சிந்து எங்க காணோம்? அண்ணி கூட வெளிய போயிருக்களா?” என்றாள்.
“இல்லை மா. வனிதா சாயந்திரமே கிளம்பிட்டா.. சிந்து ஏதோ அவ ஃப்ரெண்ட் கூட சேர்ந்து ப்ராஜெக்ட் பண்ணனுமாம் அதனால ரிஷி அவளை அங்க கூட்டிட்டு போய் இருக்கான்..”
“என்ன விஷயம் லட்சுமி? சிந்துவை தேடுற...”
“அவளுக்கும் பிரியாணி பிடிக்குமே அதுதான் சூட சாப்பிடட்டும்ன்னு கேட்டேன். அத்தை எங்க மாமா?”
“பக்கத்து வீட்டு கற்பகம் கூட கோவிலுக்கு போய் இருக்கா வந்துடுவா.. நீயும் உட்காரு மா சேர்ந்து சாப்பிடலாம்..” என்றார்
“இருக்கட்டும் மாமா நீங்க சாப்பிடுங்க. நான் அவர் கூட சேர்ந்து சாப்பிடுறேன்..”
“ராத்திரி நேரத்துல அசைவம் எடுக்காம இருக்கிறது நல்லது. அப்படி எடுத்தாலும் வேளையோடு எடுத்துடனும் இல்லை எப்படி ஜீரணம் ஆகும்?” என்றார்.
“பரவால்ல மாமா. நாங்க சேர்ந்து சாப்பிடறதே நைட்ல மட்டும் தான். அம்மா கஷாயம் சொல்லி இருக்காங்க சாப்ட்டு அதை குடிச்சுட்டு ஒரு வாக் போய் வந்தா சரியாகிடும்..” என்றாள் புன்னகையோடு.
எப்போதுமே இரவு எத்தனை நேரம் ஆனாலும் வேலை அதிகம் இல்லை என்றால் உணவு முடித்த பிறகு ரிஷி மனைவியை அழைத்து கொண்டு அரை மணி நேரமாவது நடந்து விட்டு வருவான்.
இருவருக்குமான நேரம் அது. எப்போதும் அதை தவறவிடாத மகா அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் அவனிடம் பகிர்ந்து கொள்வாள்.
கணவனின் வரவிற்காக மகா காத்திருக்க இந்திரா வந்து சேர்ந்தார்.
“எங்க உங்க மருமகள்?” என்று போர்ட்டிகோவில் இருந்தவரிடம் கேட்டார்.
“என்ன வந்ததும் வராததுமா மருமகளை தேடற என்ன விஷயம்?”
“எல்லாம் நல்ல விஷயம் தான்…” என்று உள்ளே சென்றவர், “இந்தா முதல்ல இதை குடி” என்றார் மருமகளிடம்.
“என்ன அத்தை இது?”
“அம்மனுக்கு அபிஷேகம் செய்த பால்.. ரொம்பவே சக்தி வாய்ந்த அம்மன், நம்ம வீட்ல இருந்து அரை மணி நேரம் தான்.. கற்பகம் மருமகளுக்கு அங்க வேண்டிகிட்டு தான் பையன் பிறந்ததாம்..” என்றார் வாயெல்லாம் பல்லாக.
“என்ன வேண்டிகிட்டாலும் நம்ம வேண்டுதல் அப்படியே பலிக்குமாம். ஒன்னுக்கு ரெண்டு குழந்தைகள் என்பதால் இரண்டுமே பேரப்பிள்ளைகளா பிறக்கணும்னு வேண்டிட்டு வந்திருக்கேன்.. இதை குடிச்சுட்டு கையை நீட்டு..” என்றார்.
“ஏன் இரண்டுல ஒன்னு பெண்ணா இருந்தா என்னடி?” என்றார் சிவபாலன்.
“ஆம்பளை பிள்ளைன்னா வரவு பொண்ணுனா என்னைக்குமே செலவு தானே!! என் மகனுக்கு ரெண்டு சிங்க குட்டிங்க தான் பிறக்கணும், பிறப்பாங்க..” என்று அத்தனை உறுதியாக சொல்ல மகா மாமியாரை வெறித்திருந்தாள்.
“அப்போ பேத்தி வேண்டாமா?”
“அதுதான் ஏற்கனவே ரெண்டு பேத்திங்க இருக்கங்களே அவங்க போதாதா எனக்கு ரெண்டு சிங்க குட்டிங்க தான் வேணும்..” என்றார்.
“ஏன்டி ஆசைக்கு ஒன்னு கூடவா ரிஷிக்கு வேண்டான்னு சொல்ற??”
“எதுக்கு? பொண்ணுன்னா அவனுக்கு தான் அனாவசிய செலவு? ஏற்கனவே ரெண்டு பொண்ணை பெத்துட்டு என் பொண்ணு படர கஷ்டம் போதாதா? ரிஷியாவது நல்லா இருக்கட்டும்..” என்றவர், “என்ன என் வாயை பார்த்துட்டு நிக்கிற சீக்கிரம் குடி.. பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்..” என்றார் அதட்டலாக.
“என்ன மகா அமைதியா இருக்க?” என்று சிவபாலன் கேட்கவும் சிந்துவோடு ரிஷி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
“வா.. வா ரிஷி.. நல்ல நேரத்துல தான் வந்திருக்க..” என்றவர் மகனுக்கும் அபிஷேக பாலை டம்பளரில் ஊற்றி கொடுத்தார்.
“என்னம்மா இது?” என்றவனிடம் விஷயத்தை சொல்ல எதுவும் சொல்லாமல் குடித்து முடித்தான். ஆனால் மகா கையில் கொடுத்த டம்பளர் இன்னும் அப்படியே தான் இருந்தது.
“ரிஷி உன் அம்மா சொல்றது சரியாவா படுது? பேத்தியா இருந்தாலும் பேரனா இருந்தாலும் குழந்தைகள் எந்த பிரச்னையும் இல்லாம பிறந்தா போதாதா?” என்றார் மருமகளின் முக மாற்றத்தை கண்டு.
“இப்போ உங்களுக்கு என்னப்பா பிரச்சனை? அம்மா சொல்ற மாதிரி ரெண்டு பையன் பிறக்கட்டுமே.. அதுதான் என் ஆசையும்..” என்றவனுக்கு தன் பாரத்தை பகிர ஒரு அண்ணன் தம்பி இல்லையே என்ற எண்ணத்தை ஒரே நாளில் வரவழைத்து இருந்தாள் வனிதா.
“ரிஷி என்ன பேசறீங்க?” என்றவளால் இன்னுமே கணவனின் பேச்சை நம்ப முடியவில்லை.
கருவுற்றதில் இருந்தே இது வரையிலும் அவர்கள் ‘என்ன குழந்தை’ என்று பெரிதாக பேசியதில்லை.
ஆனால் இப்போது கணவன் ஆண் குழந்தை என்றதில் அவளுக்கு அதிர்ச்சி. நிச்சயமாக குழந்தைகளுக்குள் ஆண் பெண் என்ற பேதம் பார்க்க கூடியவனாக தன் கணவனை அவளால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
“அடுத்து அவள் பேசும் முன்பாக “வாவ்! பிரியாணி. என்ன தாத்தா இந்நேரத்துக்கு பிரியாணி சமைச்சு இருக்கீங்க என்ன விசேஷம்..” என்றாள் சிந்து.
“இப்போ அது ரொம்ப முக்கியமா? அமைதியா உட்கார்ந்து சாப்ட்டுட்டு போய் படி..” என்றார்.
அப்போது தான் உணவு மேஜையை கவனித்த இந்திராவும் அதே கேள்வியை கேட்க, “அம்மா கொடுத்து விட்டாங்க அத்தை..” என்றாள் அறைக்கு சென்ற கணவனையே பார்த்தபடி.
பல கட்ட கேள்விகளுக்கு பிறகு அவர் சாப்பிட அமரவும் இந்திராவுக்கு பரிமாறியவள் கணவனை தேடி சென்றாள்.
உடை மாற்றி விட்டு மடிக்கணினியோடு அமர்ந்திருந்தான் ரிஷி.
“ரிஷி குழந்தையில ஆண் பெண் என்ற பேதம் என்ன? அவங்க நம்ம குழந்தைங்க தானே?!” என்று கேட்க அவன் தன் வேலையில் கவனமாக இருந்தான்.
“ரிஷி உங்களை தான்!” என்றவளுக்கு அப்போது தான் அவன் மௌன விரதம் நினைவில் வர தன்னையே நொந்துக்கொண்டாள்.
இப்போது அவளுக்கு ‘என்ன குழந்தை’ என்ற பிரச்சனையை விட அவர்களுக்கு இடையிலான ஊடலை தீர்ப்பது தான் முக்கியம். ஆனால் அவனாக என்றுமே இறங்கி வந்து அவளை சமாதானம் செய்வதோ பிரச்சினையை தீர்ப்பதோ கிடையாது. அவளாக முன்னெடுத்து தான் அதை செய்ய வேண்டும்.
அதற்கு முதலில் அவன் எதிர்பார்க்கும் பதிலை கொடுத்து விட வேண்டும். அதன் பிறகு தான் அவள் பேச்சை காது கொடுத்து கேட்பான்.
இப்போதும் கணினியில் மூழ்கி இருந்தவன் முன்னே அமர்ந்து, “நான் பேப்பர் போடல ரிஷி” என்று மகாலட்சுமி சொல்லவும் தான் அவளை ஏறிட்டு பார்த்தான்.
“நிஜமாவே நான் பேப்பர் போடல, தொடர்ந்து வேலைக்கு போறேன் ஆனா அதுக்கு பதிலா நீங்க எனக்கு சில உறுதி கொடுக்கணும்.. அப்படி இருந்தா நீங்க எதிர்பார்க்கிற மாதிரி ஒன்பதாம் மாசம் வரைக்கும் தான் வேலை செய்ய தயார்..” என்றதில் கணினியை மூடி வைத்துவிட்டு அவள் பேச்சை கவனிக்க தொடங்கினான்.
adapavi
ReplyDelete