வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 12.1

கணவன் பேச்சில் அதிர்ந்து நின்ற மகாலட்சுமிக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

‘என்ன செய்து விட்டாள் அவள்? இல்லை என்ன தவறாக சொல்லிவிட்டாள்? அவன் இத்தனை கோபம் கொள்ள?!’

‘தன்னுடைய வேதனையை கூட காது கொடுத்து கேட்க மாட்டானா? அப்போது அவனுக்கு தான் யார்?’ என்ற கேள்வி அவளுக்குமே இப்போது எழுந்தது.

திருமணமான இத்தனை மாதங்களில் இரட்டை குழந்தைகளை சுமந்திருக்கும் இந்த நேரத்தில் எழ வைத்து விட்டான் அவள் கணவன் ரிஷிவரதன்.

இதற்கு மேலும் அங்கு இருந்து சூழலை சிக்கலாக விரும்பாதவள் அமைதியாக வெளியில் வந்து விட்டாள். 

என்ன தான் அமைதியாக வந்திருந்தாலும் கணவனின் கோபத்திலும், வெறுப்பிலும், நொடியில் தன்னை அன்னியமாக்கி விட்டவனின் பேச்சிலும் கலங்கி போயிருந்தவளின் இருதய துடிப்பு இன்னுமே சீர்பட வில்லை. 

வார்த்தைகளின் வடிக்கவியலா அதீத அச்சம் அவள் நெஞ்சம் முழுக்க பரவி தொண்டையை கவ்வி பிடித்து வலியை கூட்டியது. அவளுக்கு பேச்சு கூட வரவில்லை. 

ரிஷி போட்ட சத்தம் வெளியே இருந்தவர்களுக்கும் கேட்டது

“என்னடி வேணும் உனக்கு? கொஞ்சம் நேரம் கூட அமைதியா இருக்க முடியாதா? வெளியே போய் வர ஆம்பளைக்கு ஆயிரம் இருக்கும் எல்லாமே உன் கிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா?”

“எதுக்கு என் பையனுக்கு தேவையில்லாம கொடைச்சல் கொடுக்கிற? இப்போ உன் ஆத்தா வீட்டுல இருந்து வந்த விருந்தை சாப்பிடாதது தான் உன் பிரச்சனையா? அவனுக்கா தோணும் போது சாப்பிடுவான் நீ போய் என் வேலையை பார்..” என்று எரிந்து விழுந்தார் இந்திரா.

“இந்திரா எதுக்கு இப்போ நீ மருமகளை பேசற? போ போய் சிந்துவை பார் இல்லை படு..” என்று அதட்டல் போட்டார் சிவபாலன்.

இன்று மட்டுமல்ல என்றுமே அவர்களின் குடும்ப விஷயத்தை முக்கியமாக வனிதாவின் நிலை பற்றி யாருமே அவளிடம் பகிர்ந்தது கிடையாது.

நாத்தனார் மகளுக்கு செய்ய வேண்டியது தவறாமல் செய்து விடுபவள் இதுவரை வனிதா இங்கு வரும் போதெல்லாம் அவளை குறை சொல்ல முடியாதளவு சமைத்துக் கொடுத்து தேவையானதை பார்த்துக் கொள்வாள். 

வனிதாவும் அவளிடம் அதிகமாக பேச்சு வைத்துக் கொள்வது கிடையாது. அதே நேரம் நாத்தனார் கெத்தை மெயின்டைன் செய்பவளின் அதிகாரம் தூள் பறக்கும். 

“நீங்க எதுக்கு உடனே வக்காலத்து வாங்கிட்டு வரீங்க?”

“ப்ச் இந்திரா, லட்சுமி கிட்ட நான் தான் ரிஷியை சாப்பிட கூப்பிட்டேன். அவன் யார் மேலயோ இருக்குற கோவத்தை மருமக மேல காட்டினா அதுக்கு லட்சுமி என்ன பண்ண முடியும்?” என்றவர் “அவன் வராட்டி போறான்.. நீ உட்காருமா, சாப்பிடுவ..” என்றார்.

“இல்ல மாமா இருக்கட்டும்” என்றவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிய இந்திராவின் பேச்சு கூட முழுதாக அவளை சென்று சேரவில்லை.

“கண்டதையும் யோசிக்காமல் குழந்தைகளை பாருமா. அவன் சாப்பிடவில்லை என்றால் உன்னை நீ வறுத்திக்காதே..” என்றவருக்குமே மகன் மீதான மருமகளின் பாசம் புரியுமே.

“இல்லை மாமா” என்று மறுக்க மறுக்க மகாவை அமர்த்தி உணவை பரிமாறியவர் “சாப்பிடுமா குழந்தைங்க எவ்வளவு நேரம் பசி தாங்கும்?! உன்னாலயும் தூங்க முடியாது..” என்றதில் அமைதியாக சாப்பிட தொடங்கினாள்.

மௌனக்கண்ணீருடனே உணவை அளந்து கொண்டிருந்தவள் மாமனாருக்காக உண்ண ஆரம்பித்தாள்.

ஒவ்வொரு கவளமும் இரும்பு குண்டாக கணக்க, முயன்று மென்றவளின் தொண்டைக்குழியை அறுத்து கொண்டு சென்றது.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் உணவு இறங்கவில்லை. 

“போதும் மாமா..” 

“ஒரு சப்பாத்தி எப்படிமா போதும்?! இன்னொன்னு சாப்பிடு..” என்றவர் அவளுக்காக வெந்நீர் கொண்டு வந்து வைத்தார்.

‘மாமனாருக்கு இருக்கும் அக்கறை கூட கணவனுக்கு இல்லையே?!’ என்ற எண்ணமே நெஞ்சை அழுத்த மனதளவில் வெகுவாக தளர்ந்து போனவளிடம் இருந்து தன்னையும் அறியாமல் பெரிய கேவல் வெளிப்பட்டது.

சிவபாலனுக்குமே மருமகளின் வேதனை புரிந்தாலும் சட்டென தன் மகளின் குணம் பற்றி அவளால் வீட்டில் ஏற்பட்டிருக்கும் பூகம்பம் பற்றி சொல்ல முடியவில்லை.

“அழாத லட்சுமி. எல்லாம் வனிதாவால வந்தது சீக்கிரமே சரியாயிடும்..” என்று பொத்தாம் பொதுவாக சொல்லி மற்றொரு சப்பாத்தியை எடுத்து வைக்க, 

“போதும் மாமா இதுக்கு மேல முடியாது..” என்றாள் மெல்லியக்குரலில்.

“மூணு பேருக்கு ரெண்டு சப்பாத்தி எப்படி மா போதும். இது ஒன்னு மட்டும் சாப்பிடாம எந்திரிக்க கூடாது. முழுசா சாப்பிடுமா, எனக்காக!!” என்றவர் மகனை தேடி சென்றார்.

இன்னுமே சயன கோலத்தில் தீவிர யோசனையில் இருந்தான் ரிஷிவரதன். 

கதவை சாற்றி தாளிட்டு விட்டு “அறிவு இருக்கா ரிஷி உனக்கு? யார் மேல இருக்கிற கோபத்தை யார் மேல காட்டுற?”

“ப்ச். ப்பா..”

“என்னடா அப்பா? எதுக்கு லட்சுமியை அப்படி பேசின? பிள்ளைத்தாச்சி பொண்ணு கிட்ட இப்படி தான் கத்துவியா?…” என்றார் அடக்கப்பட்ட கோபத்தோடு.

“அப்பா அவ என்ன பேசினான்னு தெரியுமா உங்களுக்கு?” என்று அவரிடமும் சீறினான்.

“என்ன இருந்தா என்னடா? அதுக்கு பொறுமையா பதில் சொல்ல வேண்டியது தானே?! இப்படித்தான் பேசுவியா வெளியே சத்தம் கேட்குது.. புருஷன் பொண்டாட்டி பிரச்சினை நாலு சுவத்துக்குள்ள இருக்கணும் ஆனா என்ன பண்ணிட்டு இருக்க நீ?”

“இருக்கிற சிக்கல் போதாதுன்னு இப்போ அவளுக்கு வேலைக்காரி வைக்கணுமாம்.. இப்ப எல்லாம் வேலைக்கு ஆள் கிடைக்கிறது சுலபமா என்ன?! அப்படியே கிடைச்சாலும் மாசாமாசம் குறைஞ்சது நான் பத்தாயிரம் தண்டம் அழனும் தெரியுமா?” என்றவன் மனைவி பேசியதை முழுவதுமாக சொல்லி முடித்தான்.

“அடப்பாவி! லட்சுமி தன்னால் முடியாமல் தானடா உன்கிட்ட சொல்லுது, அதுக்கு என்ன தீர்வுன்னு பார்க்காம ஏன்டா அந்த புள்ளைய போட்டு இந்த பாடு படுத்துற? மருமக எப்படி அழுதுட்டு இருக்கு தெரியுமா?”

“அவளை யாரு இப்போ பேச கூப்பிட்டா?  எனக்கே அட்வைஸ் பண்றா, ஆர்டர் போடுறா, என்ன நெனச்சிட்டு இருக்கா?” என்று அவன் ஆரம்பிக்கவும்

“ப்ச் ரிஷி இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லி இருந்தா நானே மருமகளுக்கு கூடமாட உதவி செஞ்சு கொடுத்திருப்பேனே!”

“நீங்க எதுக்கு ப்பா செய்யணும்?” என்றவனை ஆழ்ந்து பார்த்தவர், 

“உனக்கு அடிச்சு திருத்திற வயசா இருந்தா நீ பேசின பேச்சுக்கு இந்நேரத்துக்கு நாலு அறை கொடுத்திருப்பேன். ஆனா முடியாததால பேசிட்டு இருக்கேன்..” என்று வேதனையோடு சொன்னவர்,

“நீ எவ்ளோ காரணம் சொன்னாலும் லஷ்மியை பேசினது பெரிய தப்பு. பிள்ளைதாச்சி பொண்ணு மனசு கஷ்டப்பட்டா அவளுக்கு மட்டுமில்லை உன் குழந்தைகளுக்கும் தான்டா பாதிப்பு.. அது கூடவா உனக்கு புரியல?!”

“அதைவிட வீட்டுல ஒரு ரெண்டும் கெட்டான் வயசுல இருக்கிற ஒரு பொண்ணு இருக்கா. உன் பேச்சையெல்லாம் கேட்டா லட்சுமியோட மரியாதை அவ கிட்ட எந்தளவு இறங்கும்னு யோசிக்க மாட்டியா? நல்லவேளை உன் குரல் உயரவும் அவளை படிக்க சொல்லி அனுப்பி கதவை சாத்திட்டேன்..”

“அவளுக்காக கூட உன் கோபத்தை கட்டுபடுத்த தெரியாதா? ஏற்கனவே லட்சுமியை எதிர்த்து பேசிட்டு இருக்கா இப்போ நீயும் அதுக்கு வாய்ப்பு கொடுக்கிற மாதிரி நடந்துக்கிறது சுத்தமா நல்லா இல்லை சொல்லிட்டேன்..” என்றதில் அவனுக்கு எரிச்சல் கூடியது.

“என்கிட்டே இவ்ளோ பேசறவர் இதையெல்லாம் அவளுக்கும் சொல்லணும்.. அந்த புத்தி அவளுக்கு இருந்திருந்தா நேரம் காலம் தெரியாம வந்து ஆர்டர் போடுவாளா?”

“என்னடா பேசற? உன்கிட்ட தானே தன்னோட கஷ்ட நஷ்டத்தை சொல்ல முடியும்?! உனக்காக உன் கூட சாப்பிடணும்னு எவ்வளவு ஆசையா காத்திருந்துச்சு தெரியுமா? நேரம் கழிச்சு சாப்பிடறது மருமகளோட ஹெல்த்கு நல்லதில்லை.. அதனால தான் உன்னை சாப்பிட கூப்பிட சொன்னேன் ஆனா எப்படி கத்தி அனுப்பி இருக்க நீ?”

“ப்பா அவளுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? அதுதான் நான் வேண்டான்னு சொல்றேனே! ஒருமுறை சொன்னா புரிஞ்சுக்கணும் அதைவிட்டுட்டு டார்ச்சர் பண்றா?”

“என்னடா பேசற? எத்தனையோ பேருக்கு ஒரு வாய் சாப்பிட்டியான்னு கேட்க நாதி இல்லை. உனக்காக ஒரு ஜீவன் இருக்கிறது எவ்ளோ பெரிய வரம்னு தெரியாம ஆணவத்துல பேசிட்டு இருக்கிற..”

“ப்பா இப்போ என்ன அவ நிறுத்தின இடத்துல இருந்து நீங்க அட்வைஸ் பண்ண போறீங்களா?!” என்று சலிப்போடு சொன்னவன், 

“ப்ளீஸ் ப்பா கொஞ்ச நேரம் என்னை தனியா விடுங்க எதுவும் பேசாதீங்க..” என்ற ரிஷிக்கு இன்னுமே தலைவலி அதிகரித்தது.

“இப்படி மருமகள் கிட்டயும் பொறுமையா பேசி இருக்கலாமே ரிஷி ஏன் அவ்ளோ கோபம்? இதுநாள் வரை நீ இப்படி இருந்ததில்லை இப்போ ஏன் திடீர்னு இந்த மாதிரி. இது நல்லதுக்கு இல்லை லட்சுமிகிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்க..”

“சாப்பிடவே மாட்டேன்னு சொன்ன பொண்ணை ஒரு வழியா நான் சாப்பிட வச்சுட்டேன். ஆனா இன்னமும் அழுகை நின்ன பாடில்லை. ஒரு வாய் சாப்பிடறது கண்ணை துடைக்கிறதுன்னு லட்சுமி மனசு படாத பாடு பட்டுட்டு இருக்குடா.. எப்படியாவது சமாதானப்படுத்து. இப்படியே அழுதுட்டு இருக்கிறது லட்சுமிக்கும் குழந்தைகளுக்கும் நல்லது இல்லை” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

பாக்கியலட்சுமி சொன்ன கசாயத்தை வைத்து குடித்து விட்டு இடையை ஒரு கையால் பிடித்தபடி மெல்ல போர்ட்டிக்கோவில் நடந்து கொண்டிருந்தாள் மகாலட்சுமி.

“படுக்க போகலையா மா?” என்றபடி அங்கே வந்தார் சிவபாலன்.

“இதோ மாமா, அவ்வளவு தான் கிளம்பிட்டேன்..” என்றவள் உள்ளே செல்ல சிவபாலன் வீட்டை பூட்டிக்கொண்டு வந்தார்.

அறைக்குள் மகா சென்ற போது விளக்கு எரிந்து கொண்டிருக்க ரிஷி அதே நிலையில் தீவிர யோசனையில் இருந்தான்.

சுடிதாரை கலைந்து விட்டு நைட்டிக்கு மாறியவள் முகம் கழுவிக்கொண்டு உதடுகள் துடிக்க இதழ்களை மடித்தபடி வந்து கண்ணாடியின் முன் நின்றாள்.

வெகுவாக கலங்கி போயிருந்த விழிகள் ரத்தமென சிவந்திருக்க கண்ணீரில் கரைந்து ஓய்ந்து சோர்ந்து போனவளின் முகம் வீங்கி போயிருந்தது. துடிக்கும் இதழ்களை மடித்தபடி முகத்தை மீண்டும் துடைத்த போதும் அவளை மீறி கண்ணீர் முத்துக்கள் உருண்டோட தான் செய்தது. 

கண்ணீரை உள்ளிழுத்தபடி விளக்கை அணைத்து விட்டு தன் இடத்தில் வந்து கணவனுக்கு முதுகு காண்பித்தபடி படுத்து ‘எதையும் நினைக்காதே மனமே..’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு இறுக்கமாக கண்களை மூடினாள்.

அடுத்த நொடியே மகாவை நெருங்கி படுத்த ரிஷியின் கரம் அவள் இடையில் வந்து விழுந்தது.

அதை எதிர்பாராதவளின் கண்கள் அன்னிச்சையாக திறந்து கொள்ள அடுத்த க்ஷணமே, “கையை எடுங்க” என்றாள் அடர்ந்த குரலில்.

ஆனால் எதுவும் பேசாதவனின் மூச்சுக்காற்றின் வெம்மை அவள் கழுத்து வளைவில் சதிராட ரிஷியின் கரமோ இன்னுமே அவளை தன்னோடு சேர்த்து அணைத்தது.

“உங்க கிட்ட தான் சொல்றேன் கையை எடுங்க ரிஷி..” என்றவள் நிமிடங்கள் கடந்த போதும் அவன் அதே நிலையில் இருக்கவும்,

“நீங்க யார் என் மேல கை வைக்க? யார் கொடுத்தா இந்த அதிகாரத்தை? மரியாதையா இப்போ கையை எடுங்க போறீங்களா இல்லையா?” என்றாள் என்றுமில்லாத வெற்றுக்குரலில்.

Comments

Post a Comment

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.3