வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 13

மேலும் 10 நாட்கள் கடந்த நிலையில்…

 

ரிஷி மகாவின் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை. இத்தனை நாட்கள் மனைவியை அவன் ஒதுக்கி வைத்தான் என்றால் இப்போது அவளும் அதையே தொடர்ந்து இருந்தாள். 


குழந்தைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் நிலையில் அவளால் இரவு சீக்கிரமாக உறங்க முடிவதில்லை. காலையில் விரைவாக எழுந்து கொள்ளவும் முடிவதில்லை.


‘சிவபாலன் இந்திராவிடம் என்ன பேசினார்?’ என்று மகாவுக்கு தெரியாது. ஆனால் அதிகாலை எழுந்து வேலை செய்யாதது குறித்து மகாவை அவர் நேரடியாக எதுவும் கேட்பது கிடையாது என்றாலும் அவ்வப்போது மகனை வேலை செய்ய வைப்பதை குத்தி காட்டி பேசுவதை தவறவிடுவதும் கிடையாது.


இந்திரா எத்தனை பேசினாலும் மகாலட்சுமி அவர் பேச்சை காதில் கூட வாங்கிக் கொள்வது கிடையாது.


காலை வேளையில் ஆறு மணிக்கு மேல் எழுவதை வழக்கமாக்கிக் கொண்டவள் சமையலறைக்கு செல்லும் போது ரிஷி பாத்திரம் கழுவிக் கொண்டு இருப்பான் அல்லது சிவபாலனுக்கு சமையலில் உதவி கொண்டிருப்பான்.


ஆம் ரிஷியே தான்!!

தற்போதைய நிதி நிலைமைக்கு நிச்சயம் அவனால் வேலைக்கு ஆள் வைக்க முடியாது அதனால் தானே செய்ய தொடங்கி விட்டான். ரிஷி எப்போது எழுகிறான், எப்போது உறங்க வருகிறான் என்று அவளுக்கு தெரியாது.


ஆனால் காலை ஏழரை மணிக்குள் வீட்டில் இருந்து கிளம்பி விடுவான்.


மகா ரிஷியோடு எந்த பேச்சும் வைத்துக் கொள்வது கிடையாது. எதற்குமே அவனை எதிர்பார்ப்பதும் கிடையாது. அன்றைய ஊடலுக்கு பின்னர் ரிஷி அவளை நெருங்குவது கிடையாது. 


ஆனால் குழந்தைகளின் துடிப்பை உணர்பவளுக்கு அதை கணவனுடன் பகிர்ந்து கொள்ள எழும் ஆவலை கட்டுப்படுத்த அவள் தான் அரும்பாடு பட்டுப்போவாள்.


ஏனோ இன்னுமே தன் பேச்சுக்காக வருந்தாதவனிடம் தன்மானத்தை விட்டு இறங்கி சென்று குழந்தைகளின் அசைவை பகிர அவளுக்கு மனம் இல்லை.


இறங்கி செல்ல மனமில்லையே தவிர்த்து ‘அவன் தன்னிடம் வருத்தம் தெரிவித்து விட மாட்டானா?’ என்று பாழும் மனம் தினமும் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டது.


‘தான் இத்தனை பலவீனமானவளா? தன்னை மதிக்காதவன் தன் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவன் மீது தனக்கு இத்தனை நேசமா?’ என்று அவளை அவளே திட்டிக் கொண்டிருக்கிறாள். 


நிச்சயமாக மகாலட்சுமி இத்தனை பலகீனமானவள் கிடையாது. என்ன தான் கணவனிடம் இருந்து அவளால் பிரிந்து இருக்க முடிந்தாலும் தாய்மை அவளை தன் குழந்தைகளின் தந்தையை தேட செய்வதில் அவளும் என்ன செய்ய?!


என்னதான் வாந்தி மட்டுபட்டு இருந்தாலும் சோர்வின் காரணமாக அலுவலகத்தில் பல நேரம் அவளால் வேலை செய்ய முடியாமல் போவதில் ஜெயசித்ரா உட்பட மற்றவர்கள் தான் அவளுக்கு பெரும் உதவியாக இருக்கின்றனர். 


ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. அடிக்கடி அவர்களின் உதவியை எதிர்பார்க்க மகாலட்சுமிக்கு மனம் கூசியது.


அன்று இரவு உறக்கம் வராமல் ஹாலில் வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு கதிர்வேலனிடம் இருந்து அழைப்பு வந்தது.


அன்று இரவு காயத்ரிக்கு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.


உடனே தங்கைக்கு அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்தான் கதிர்வேலன். 


“எப்போ ண்ணா சேர்த்தீங்க? முன்னாடியே சொல்லலை?! நார்மல் டெலிவரி ஆனதுல ரொம்ப சந்தோஷம் ண்ணா.. அண்ணியோட ஆசைப்படியே பிரின்ஸ் வந்தாச்சு, நாங்க இப்போவே வரோம்..” என்றாள் நேரத்தை பார்த்தபடி.


“இந்நேரத்துக்கு எங்க வர நீ? மணி இப்பவே பத்தாக போகுது. இப்போ வேண்டாம், காலையில வந்து பாரு..” என்று கடிந்தார் பாக்கியலட்சுமி.


“இருக்கட்டும் ம்மா, ஒரு மணி நேரம் தானே நானும் அவரும் வரோம்..” 


“நீ தனியா இருந்தா உடனே வான்னு சொல்லி இருப்பேன் ஆனா இந்த நிலைமையில இப்போ வேண்டாம். புரிஞ்சுக்கோ..” என்றார் பாக்கியலட்சுமி.


ஃபோனை வாங்கிய கதிரும் அதையே தான் சொன்னான்.


“சரி ண்ணா, நான் காலையில வரேன்..” என்றவள் அதே மகிழ்ச்சியோடு கணவனை தேடி சென்றாள்.

அவனும் அறையில் வேலை செய்து கொண்டு தான் இருந்தான். 


அவர்களுக்கு இடையிலான ஊடலை மறந்தவளாக, “ரிஷி அண்ணாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு.. நார்மல் டெலிவரி..” என்று பூரிப்போடு சொல்ல அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை. 


“ரிஷி உங்ககிட்ட தான்! அண்ணாவுக்கு குழந்தை பிறந்திருக்கு..” என்று சொல்ல, “இப்போ அதுக்கு நான் என்ன பண்ணனும்?” என்றான்.


“என்ன பேசறீங்க ரிஷி?” என்றவள் இப்போது தான் அவன் முகத்தில் இருந்த இறுக்கத்தை கண்டு,


“இன்னும் நீங்க அதை மறக்கலையா?” என்றாள். 


“மறக்கக்கூடிய பேச்சையாடி பேசின நீ?!”


“ரிஷி, என்னை யாருன்னு கேட்டது நீங்க. அந்த வார்த்தை என்னை  எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கும்னு புரிஞ்சுக்காம அன்னைக்கு நைட் நீங்க எதுவும் நடக்காத மாதிரி நடந்துக்கிட்டா எனக்கு எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க..” என்றாள் தன்மையாகவே. 


“நான் பேசினா நீயும் பேசுவியா டி?” என்றான் அடிக்குரலில். 


“நீங்க பேசின வார்த்தைக்கு என்கிட்டே ஒரு மன்னிப்பு கூட கேட்கல அட்லீஸ்ட் சமாதானப்படுத்த கூட நினைக்கலை ஆனா…” என்று ஒரு கணம் தன் பேச்சை நிறுத்தியவள்,


“நான் உங்க வைஃப் தான் ரிஷி. இல்லை என்று மறுக்கலை.. அதுக்காக என்னோட மனசை புரிஞ்சுக்காம நீங்க என்ன கட்டாயப்படுத்துறது சரியா?”


“ஒரு வார்த்தை நீங்க பேசினது தப்பு தான்னு அன்னைக்கு அக்னாலெஜ் பண்ணி இருந்தா கூட போதும்.. மன்னிப்பு கேட்கணும்னு எதிர்பார்க்கல ஆனா நீங்க செஞ்சது தப்புன்னு உணரவே இல்லையே?! அப்புறம் எப்படி?” என்று ததும்பிய மனதோடு கணவனைப் பார்த்தாள். 


“அப்போ நான் மன்னிப்பு கேட்கணுமா? என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல? அதுதான் அன்னைக்கு நான் உன்னை அவ்வளவு தூரம் போனு சொல்லியும் எரிச்சலை கிளப்பினது நீ!! அதுக்கு நான் மன்னிப்பு கேட்கணுமா?” என்று அவன் முடிக்கும் முன்னமே, 

 

“மன்னிப்பு கேட்டாலும் தப்பில்லை ரிஷி..” என்று அழுத்தமான குரலில் சொன்னவள், 


“சொல்லப்போனா நீங்க பேசின வார்த்தைகள், அது எனக்கு கொடுத்த காயத்துக்கு நிச்சயம் நீங்க மன்னிப்பு கேட்டு தான் ஆகணும்.. பட் உங்ககிட்ட நான் அதை எதிர்பார்க்கவில்லை..”


“எவ்ளோ திமிர்டி உனக்கு?! என்கிட்டேயே இப்படி பேசுவ..” என்று ரிஷி பல்லைக்கடிக்க, மகா அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்தாள்.


“எதிர்பார்த்தாலும் தப்பு இல்லை, அது வேற விஷயம். ஆனா நீங்க அவ்வளவு சீக்கிரம் மன்னிப்பு கேட்கக்கூடிய ஆள் இல்லைன்னு எனக்கு தான் தெரியும்.. அதனால நான் எதிர்பார்க்கலை பட் அப்படி செஞ்சிருக்க கூடாது என்கிற வருத்தம் கூட உங்க கிட்ட இல்லையே..” என்று வலியோடு கணவனை பார்த்தாள்.


“நிச்சயமா நீங்க இப்படி இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை ரிஷி. மன்னிப்பு கேட்காட்டியும் குறைந்தபட்சம் நான் பேசினது தப்பு தான்னு ஒத்துக்கிற பெருந்தன்மையும் உங்ககிட்ட இல்லை..” என்று கணவன் மீதான தன் அதிருப்தியை மறைக்காமல் தெரிவித்தாள். 


“கோவமா இருக்கும் போது நான் வந்து பேசினது தப்பு, இருக்கிற பிரச்னையை அதிகமாக்கிட்டதால அப்படி பேசினதா சொல்றீங்களே தவிர்த்து என்ன பிரச்சனை? எதனால கோவமா இருந்தீங்க? யார் மேலிருந்த எரிச்சலை என் மேல காட்னீங்கன்னு இப்போ வரை எனக்கு நீங்க சொல்லல..”


“அப்போ நான் யாரு ரிஷி உங்களுக்கு? நான் மட்டும் தான் பைத்தியக்காரி மாதிரி எல்லா விஷயத்தையும் உங்ககிட்ட ஃபில்டர் பண்ணாம ஷேர் பண்ணிட்டு இருக்கேன்.. ஆனா நீங்க அப்படி இல்லையே?! ஏன் என்கிட்ட எதையுமே வெளிப்படையா சொல்ல மாட்டேங்கறீங்க? நான் புரிஞ்சுக்க மாட்டேன்னு நினைக்கிறீங்களா?”

 

“நான் உங்களோட சரிபாதி!! புருஷன் பொண்டாட்டிக்கு இடையில வெளிப்படைத் தன்மை இல்லனா அந்த உறவு அர்த்தமில்லாத ஆகிடும், தேவையில்லாதவர்கள் உள்ளே  நுழைந்து வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கவும் வாய்ப்பு இருக்குன்னு என் அப்பா சொல்லுவாங்க..”


“எந்த பிரச்சினையாகவும் இருக்கட்டும் என்கிட்ட ஷேர் பண்ணுங்க நான் அதை வச்சு உங்களை ஜட்ஜ்  பண்ண மாட்டேன். பருவ மாற்றம் மாதிரி நம்ம வாழ்க்கையில ஒவ்வொரு பிரச்சனைகள், அதன் தீவிரம் இருக்கும்…”


“அந்த சூழல், அந்த நேரத்தில் அந்த நிமிஷத்து உணர்வை தான் நீங்க காட்டுவீங்க, அதை வச்சு உங்களை நான் எப்படி ஜட்ஜ்  பண்ணுவேன்? அப்படி பண்ண மாட்டேன்..” என்று மகா எத்தனை சொன்ன போதும் எதையும் கேட்கும் நிலையில் இல்லாத ரிஷி,


“என்ன தான்டி வேணும் உனக்கு? வேலை செய்யறது தெரியலையா? இப்போ எதுக்கு இப்படி லக்சர் எடுத்துட்டு தேவையில்லாம எரிச்சலை கிளப்புற? எனக்கு காது வலிக்குது…” என்று எரிந்து விழுந்தான். 


எத்தனை மகிழ்ச்சியான செய்தியோடு அவள் அறைக்குள் நுழைந்த போது மனதில் இருந்த இதம் இப்போது ரிஷியால் மொத்தமாக துடைத்து எறியப்பட்டு இருந்தது.


“அண்ணாவுக்கு குழந்தை பிறந்து இருக்கு ரிஷி, நாம போய் பார்க்க வேண்டாமா? நாளைக்கு பர்மிஷன் போடுறீங்களா பார்த்துட்டு ஆஃபீஸ் போகலாம்..”

என்றாள் பெரும் எதிர்பார்ப்போடு. 


“முடியாது, எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு..” 


“ரிஷி ப்ளீஸ் எல்லாரும் உங்களை கேட்பாங்க, குழந்தை கிட்ட கூடவா உங்க கோபத்தை காமிப்பீங்க?” என்றதும் தான் தாமதம் சட்டென மெத்தையில் இருந்து எழுந்தவன்,  


“அப்படின்னு நான் சொன்னேனாடி?!” என்று சீறியவன், “இதோ இந்த லட்சணத்துல தான் நீ என்னை புரிஞ்சி வச்சிருக்க இதுல நான் மத்த விஷயத்தை சொன்னதும் அப்படியே புரிஞ்சு கிழிச்சு கத்தை கட்டிடுவாளாம்..” என்று விழி சிவந்தவன், 


“ஏன்டி, குழந்தை மேல வன்மத்தை காட்டுற அளவுக்கு நான் மோசமானவனா?” என்றிட ‘அவனுக்கு எப்படி புரிய வைப்பது’ என்று புரியாமல் தவித்து போனாள் மகா. 


“ஆனா ஒன்னு என்னை வில்லன் ரேஞ்சுக்கு மத்தவங்க கிட்ட பில்ட் பண்ண நீ ஒருத்தி போதும்டி. நான் மோசமானவன்னு என் மேல முத்திரை குத்திடுவ..”


“ப்ச், ரிஷி நான் அப்படி…” என்றவளை கரம் நீட்டி தடுத்தவன், 


“போதும்! எந்த விளக்கமும் வேண்டாம். நான் தான் சொல்றேனே எனக்கு நாளைக்கு மீட்டிங் இருக்குன்னு..”


“சரி அப்போ எப்போ போகலாம் சொல்லுங்க?” 


“ஹே, அது என்ன உங்கப்பன் ஆஃபிஸா?”


“ரிஷி!!!” என்று மகா உரத்த குரலில் அழைக்கவும்,


“பின்னே என்ன? லீவ் போடுன்னு அதிகாரம் தூள் பறக்குது. இதோ பார் நினைச்சதும் லீவ் போட அது ஒன்னும் உங்கப்பன் ஆஃபிஸ் இல்லை. இப்போதைக்கு எப்போ முடியும்னு சொல்ல முடியாது. முடியும் போது சொல்றேன்..”

 

“ரிஷி ப்ளீஸ் நம்ம பிரச்சினை நம்மோடு இருக்கட்டும். நீங்க என் கூட பேச வேண்டாம், எப்பவும் போல என் கையால சாப்பிட வேண்டாம், என்கூட கூட வர வேண்டாம். நான் முதல்ல போறேன் நீங்க பின்னாடி ஆஃபீஸ்ல இருந்து வந்த மாதிரி கூட வாங்க..”


“ஆனா ப்ளீஸ் வாங்க ரிஷி..” என்று சொல்ல ஒரு பெருமூச்சோடு அவளை பார்த்தவன், 


“ஏற்கனவே நான் டென்ஷன்ல இருக்கேன்.. தயவு செய்து கிளம்பு. விஷயத்தை சொல்லிட்டல்ல நான் பார்த்துக்கிறேன்..” என்று சொல்ல மகாலட்சுமியின் அத்தனை எளிதாக சமன்படவில்லை.


அடுத்த நாள் காலை வழக்கம் போல தன் வேலையை தொடர்ந்தவள் நொடிக்கொரு தரம் கணவனின் முகத்தை பார்த்தபடி கிளம்பி தயாரானாள்.


குழந்தையை பார்க்க அவளை அழைத்துச் செல்ல தினகரன் வந்திருந்தார்.


காலையிலேயே தந்தைக்கு விஷயத்தை சொல்லி விட்டாள். இருந்தாலும் கணவனின் முடிவில் ஏதேனும் மாற்றம் இருந்துவிடாதா என்பதாலேயே அவனை பார்த்திருந்தாள்.


வழக்கத்திற்கு மாறாக ஏழு மணிக்கெல்லாம் அவன் கிளம்பிவிட சிவபாலன் இந்திராவோடு செல்வதாக சொல்லிவிட, தந்தையோடு கிளம்பினாள். 


அன்று குழந்தையை பார்த்துவிட்டு மகாலட்சுமி கிளம்பும் நேரம் தான் அங்கு வந்து சேர்ந்தான் ரிஷி.

அவனைப் பார்த்ததுமே என்ன மாதிரியான உணர்வு அவளை ஆட்கொண்டது என்று விவரிக்க முடியாதளவு நெகிழ்ந்து போயிருந்தாள் மகாலட்சுமி.


***********

சிந்துவிற்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் அவளை அழைத்து சென்று பெங்களூரில் விட்டு விட்டு வந்தான் ரிஷிவரதன் 


ஆனால் மூன்றாம் நாளே வனிதாவிடமிருந்து சிவபாலனுக்கு அழைப்பு வந்திருந்தது.


“சொல்லு வனிதா, என்ன விஷயம்?” என்றார் எடுத்ததுமே…


“அப்பா சிந்து வயசுக்கு வந்துட்டா..” என்று மகிழ்ச்சியோடு வனிதா பகிர்ந்து கொள்ள சிவபாலன் முகத்தில் முதலில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் கூடவே அதிர்ச்சியும் சேர்ந்து கொண்டதில் சட்டென அவரால் எதுவும் பேசிட முடியவில்லை. 


“என்னப்பா அமைதியா இருக்கீங்க? எவ்ளோ சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கேன் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க? அம்மா எங்க, அவங்க கிட்ட குடுங்க..” என்றவள் இந்திராவிடம் விஷயத்தை தெரிவிக்க, 


“ரொம்ப சந்தோஷம். எப்போடி வந்தா? நேரம் குறிச்சிங்களா? யார்கிட்ட முதல்ல சொன்னா? நீ பார்த்தியா இல்ல அவங்க அத்தைகளை பார்க்க சொன்னியா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு பதில் பெற்றுக் கொண்டவர் உடனே சிவபாலனை தேடி வந்தார்.


“ஏங்க நாம உடனே கிளம்பனும் டிக்கெட் புக் பண்ணுங்க..” என்றவர் “பெங்களூர் போய் சேர ஏழு மணி நேரமாவது ஆகும். இங்கிருந்து சமைச்சு எடுத்துட்டு போனா நல்லா இருக்குமா? இல்ல அங்கேயே போய் சமைச்சு போடலாமா?” என்றவரை மெளனமாக பார்த்தார் சிவபாலன்.


“உங்க கிட்ட சொன்னாளா?”


“என்ன?”


“சிந்துவை அஞ்சு நாளிலேயே வீட்டுக்கு கூப்பிட்டுக்கலாம்னு இருக்காங்களாம்..” என்றதும், 


“என்ன அவ்வளவு சீக்கிரமாவா?” என்றவர் மனம் எங்கும் ‘ஐந்து நாளில் எப்படி பத்து சவரன்?’ என்ற கேள்வி தான் வியாபித்திருந்தது.


“இதுக்கே அவங்க மாமியார் ஒத்துக்கலையாம் ஒன்பது நாலாவது இருக்கணும்னு சொன்னாங்களாம் ஆனா பத்தாவது படிக்கிறதால ஒத்துக்கிட்டாங்கலாம்... நல்லவேளை ரெண்டு நாள் லீவுல போயிடுது இடையில ஒரு சனி ஞாயிறு. அப்ப ஒரு நாலு நாள் லீவு எடுத்தா போதும்...”


“அப்புறம், அவங்க வீட்ல இருந்து இரண்டு தெரு தள்ளி ஒரு சத்திரம் இருக்காம் அவங்க நாத்தனார் வீட்டுக்காரரோட முதலாளிக்கு சொந்தமானதுன்னு சொன்னா..  பாதிக்கும் குறைவா கொடுத்தா போதுமாம்…”


“மண்டபத்துலயா வைக்க போறாங்க? எப்படிடி நம்மளால சமாளிக்க முடியும்?” என்றார் நிறமிழந்து போன முகத்தோடு. 


“அதை பற்றி கவலைப்படாதீங்க, எப்படியோ பங்க்ஷன் செலவு அவங்களே பார்த்துக்கொள்கிறதா சொன்னா..”


“நிஜமாவா?”

“ஆமா மாப்பிள்ளை தான் பங்க்ஷன் நாம பண்ணிக்கலாம் உன் வீட்ல சீர் செய்தா போதும்னு சொன்னாராம்.. ஆனாலும் மாப்பிள்ளைக்கு எவ்வளவு பெரிய மனசு பாருங்க..” என்று பூரித்து போனவர், 


“சிந்து இங்க வயசுக்கு வந்திருந்தா பங்ஷனுக்கே நமக்கு குறைந்தது இரண்டு லட்சமாகி இருக்கும். அதெல்லாம் இப்போ மாப்பிள்ளை தான் மீத்தி கொடுத்து இருக்காரு. அவர் தங்கமான மனசுக்கே பத்து என்னுங்க 15 சவரன் கூட போடலாம்..” என்றார் பெருமிதத்தோடு


“ஏய்! என்னடி பேசிட்டே போற.. அஞ்சு நாள்ல எப்படி 15 லட்சம் பொரட்ட முடியும்? இவ்வளவு பேசினியே வனிதா கிட்ட இதை பற்றி சொல்லி இருக்கலாம்ல..”


“என்ன சொல்ல சொல்றீங்க? இது நம்மோட கடமை, அதுதான் அன்னைக்கே நகைக்கு என்ன பண்ணலாம்னு வனிதா சொன்னாளே, அப்புறம் என்ன?” என்று முறைத்தவர், 


“நம்ம முதல்ல போகலாம் ரிஷியும் அவளும் இரண்டு நாள் கழிச்சு வரட்டும்..” என்றவர் பேத்திக்கு செய்ய வேண்டிய சீர்வரிசைகளை பட்டியல் போடதொடங்கினார்.


“இன்னொரு விஷயம் தெரியுமாங்க?”


“என்ன?” என்றார் அவர் பேச்சில் எழுந்த எரிச்சலோடு. 


“வனிதாவோட முதல் நாத்தனார் பொண்ணுக்கு இவங்க 37 தட்டு வெச்சாங்களாம்.. 21 வச்சுக்கலாம்னு சொன்னதுக்கு அவங்க மாமியார் ஒத்துக்கவே இல்லையாம். 50 தட்டாவது செஞ்சு ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சு உக்காந்துருச்சாம்…”


“அவங்களை பேசி சரிகட்டி ஒரு வழியா 37 க்கு ஒத்துக்க வச்சாங்களாம். அதனால நம்ம பேத்திக்கு குறைந்தது 50 தட்டாவது செய்ங்கன்னு வனிதா கேட்டு இருக்காங்க..” என்றதில் சிவபாலன் தளர்ந்து அமர்ந்து விட்டார்.


“இங்கிருந்து வாங்கிட்டு போனா பழம் எல்லாம் தாங்காது. அதனால தட்டுக்கு தேவையானதை அங்க போய் வாங்கிக்கலாம். துணிமணி நகை மட்டும் வரதன் எடுத்துட்டு வந்தா போதும்..” என்றவர் மீண்டும் மகளுக்கு அழைத்து பேசத் தொடங்கி விட்டார்.


அன்று மாலை அதிசயமாக ரிஷிவரதன் வீட்டிற்கு சீக்கிரமாக வந்திருந்தான்.


Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 20.3