வாழ்க்கைத்துணை - 20.3
மகாவின் பேச்சில் ரிஷியின் கோபம் அதிகரிக்க, “நான் யாரைடி கேட்கணும்? என்ன, உன் அப்பனை கேட்கணும்னு சொல்ல வரியா? இல்ல உன் அண்ணனை கேட்கணுமா?” என்றான்.
“என்னை கேட்கணும்? அது என்னோட ப்ராப்பர்ட்டி. எனக்காக கொடுத்தது. என்னை ஒரு வார்த்தை கேட்காம என்னோட சம்மதம் இல்லாம அதை அடமானம் வைக்க நீங்க எப்படி முடிவு பண்ணுவீங்க?”
“ஹே, நான் உன் புருஷன் டி! எனக்கு அந்த உரிமை இல்லையா?” என்றவனுக்கு அவள் நகைகளை விற்றாலோ அல்லது அதை சிந்துவுக்கு கொடுத்தாளோ மனைவிக்கு வாங்கி கொடுக்க நினைக்கும் போது நிச்சயம் தங்கத்தின் விலை இன்னும் அதிகரித்திருக்க வாய்ப்பு உண்டு என்பதால் அதை கைவிட்டான்.
நகையை விடவும் மகாலட்சுமிக்கு அவள் தந்தை கொடுத்திருந்த அரை ஏக்கர் மதிப்பிலான இடத்தின் பத்திரத்தை வைத்து கடன் வாங்க முடிவெடுத்திருந்தான்.
திருமணத்திற்கு முன்பு இருவரும் பேசிக்கொண்டு இருந்த போதே மகாலட்சுமி அவள் தந்தைக்கு தன் மீதான பாசம், மூன்று பிள்ளைகளையும் அவர் சமமாக பாவிப்பது என்று பெருமையாக பேசியவள் தந்தை அவள் பெயரில் எழுதி வைத்திருக்கும் அரை ஏக்கர் நிலமும் அதை திருமணத்தின் போதே கொடுத்து விடுவதை பற்றியும் சொல்லி இருந்தாள்.
அதை தான் இப்போது அவன் நண்பன் மூலமாக ஃபைனான்சியர் பெயருக்கு சுத்த கிரயம் செய்து கொடுத்து இரண்டு வருடத்திற்குள் கடனை அடைத்து பத்திரத்தை திரும்ப பெற்று கொள்ளும் முடிவிற்கு வந்திருக்கிறான்.
முதலில் ராம் பத்திரத்தை அவரிடம் கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது வெறுமனே கொடுப்பது என்று தான் ரிஷி நினைத்திருந்தான்.
ஆனால் அப்படி கிடையாது என்பதே பின்னர் தான் அவனுக்கு புரிந்தது.
மொத்தமாக சொத்தையும் ரெஜிஸ்டர் ஆஃபிஸில் அவர் பெயருக்கு எழுதிக் கொடுத்து விட வேண்டும் கடன் தீர்ந்ததும் அவர் அதை மீண்டும் அவர்களுக்கே திருப்பி எழுதிக் கொடுத்து விடுவார்.
பல நாட்களாக யோசித்து, கணக்கு போட்டு ஒருவழியாக இதுதான் சிறந்த வழி என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
அவனுடையதை வைத்து வீட்டு செலவை சமாளித்தாலும் மனைவியின் சம்பளப் பணத்தை மொத்தமாக சேமித்தால் இரண்டு வருடத்தில் இடத்தை விடுவிக்கலாம் என்பதாலேயே இந்த முடிவுக்கு வந்தவன் நிச்சயம் மகா இதை ஆட்சேபிக்க மாட்டாள் என்று நம்பியிருந்தான்.
ஆனால் இன்றைய அவள் பேச்சில் தன்னை மதிக்காமல் பேசுபவள் மீது காரணமே இன்றி கோபம் கரை புரண்டது.
“புருஷன் இல்லன்னு சொல்லலையே! அதுக்காக என் கிட்ட ஒரு வார்த்தை கேட்காம உங்க இஷ்டத்துக்கு முடிவெடுப்பீங்களா? அப்போ பொண்டாட்டியா நான் எதுக்கு?”
“தேவை இல்லாம பேசாத மகா. என் ஃப்ரெண்ட் மூலமா ரொம்ப கஷ்டப்பட்டு அந்த பைனான்சியரை புடிச்சு ஏற்பாடு பண்ணி இருக்கேன். இந்த நேரத்துல இப்படி பேசுறது சுத்தமா நல்லா இல்ல..” என்றான் அதிருப்தியான குரலில்.
“நான் கொடுக்கிறதும் கொடுக்காம போறதும் இரண்டாம் பட்சம் அதுக்கு முதல்ல நான் யார் உங்களுக்கு பதில் சொல்லுங்க..” என்று விடாப்பிடியாக கேட்க ரிஷியின் பொறுமை முற்றிலுமாக விடை பெற்றது.
மகன் மருமகளுக்கு இடையில் வார்த்தை தடிப்பதை உணர்ந்த சிவபாலனுக்கு சுத்தமாக இருப்பு கொள்ள முடியவில்லை.
அதேசமயம் கணவன் மனைவிக்கு இடையில் செல்வது அநாகரீகம் என்பதால் அமைதி காத்தவர் மனைவியையும் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி இருந்தார்.
கணவனின் பேச்சில் உடைந்து போன மகா, அவன் வாழ்வில் தனக்கு அளித்திருக்கும் இடத்தின் மீதான ஆற்றாமையோடு, “இவ்வளவு விஷயம் நடந்திருக்கு ஆனா எதுவுமே எனக்கு தெரியலை அப்போ நான் யார் மாமா இந்த வீட்ல?” என்று அதே கேள்வியை தான் மாமனாரிடமும் கேட்டிருந்தாள்.
ஆனால் சிவபாலனால் மருமகளின் கேள்விக்கு அத்தனை எளிதாக பதில் சொல்லிவிட முடியவில்லை.
“சொல்லுங்க மாமா, அவருக்கு தான் நான் ஒண்ணுமே இல்லை ஆனா நீங்க என்னை மகளை போல தானே பார்த்துக்கிட்டீங்க?! உங்களுக்கு கூடவா இந்த விஷயத்தை என்கிட்டே சொல்லனும்னு தோணலை.. அப்போ நான் இந்த வீட்டை சேர்ந்தவள் இல்லையா மாமா?”
“இந்த வீட்டுல நடக்கும் எந்த இன்ப துன்பமும் என்னை பாதிக்காதுன்னு நினைக்கறீங்களா மாமா?.. என்கிட்டே இருந்து எல்லாத்தையும் மறைச்சுட்டு இப்போ பத்திரத்துக்கும் சம்பளத்துக்கும் மட்டும் என்னை எதிர்பார்த்தா என்ன அர்த்தம்?”
“அப்படி இல்லைம்மா, நீயும் எனக்கு ஒரு பொண்ணு தான் அதுல மாற்றம் இல்லை. அத்நேரம் வனிதா பேசின பேச்சு நடந்துகிட்ட விதம் எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருந்தது.. எங்களை பற்றி யோசிக்காம இவனோட சூழலை புரிஞ்சுக்காம செய்து தான் ஆகணும்னு கட்டாயப்படுத்தினா..”
“ஒரு பக்கம் என் மகளோட பேராசையை எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு இருந்தாலும் இன்னொரு பக்கம் உனக்கும் ரிஷிக்கும் இடையில இருக்கிற பிரச்சனையை பெருசு பண்ணி இந்த மாதிரி நேரத்துல உன்னை எதுக்கு பதட்டப்பட வைக்கனும்னு தான் சொல்லலை..”
“இத்தனைக்கும் இவளும் வனிதாவும் உன்னோட நகையை சிந்துவுக்கு போடணும்னு சொன்ன போது கூட எனக்கு அதுல உடன்பாடு இல்லை.. அப்படி இருக்கிறப்போ உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி உன்னையும் சஞ்சலபடுத்த வேண்டாம்னு தான் சொல்லலை..”
“நிச்சயம் ரிஷி இதுக்கு வேற ஏதாவது ஏற்பாடு செய்வான்னு நினைச்சேன் ஆனா இப்படி இடத்தை அடமானம் போட நினைப்பான்னு எனக்கு தெரியாம போச்சும்மா..” என்றவர் முகத்திலும் வேதனை.
“எல்லாருக்கும் சமைச்சு போட்டு, சம்பாதிச்சு கொடுத்து, வேலை செய்துன்னு மருமகள் என்ற கௌரவமான பேரில் ஒரு வேலைக்காரியா தான் இருந்திருக்கேன். சிந்து விஷயத்தை எனக்கும் சொல்லனும்னு யாருக்குமே தோணலை, உங்களுக்கு மத்தியில எவ்ளோ அன்னியப்பட்டு போயிருக்கேன் நான்..”
“எனக்கு இந்த வீட்ல கடமை மட்டும் தான் இருக்கு உரிமை இல்லை..” என்று விரக்தியாக சிரித்தவள், “நான் எவ்ளோ பெரிய முட்டாள் பாருங்க, இந்த விஷயத்தை புரிஞ்சுக்கவே எனக்கு இத்தனை மாசமாகி இருக்கு..”
“எங்க குடும்ப விஷயத்தை தெரிஞ்சுகிட்டு உன் ஆத்தா வீட்டுல போய் சொல்லி கொக்கரிக்கவாடி கேட்கிற?” என்று எகிறினார் இந்திரா.
“வாயை மூடுடி!!” என்று மனைவியை பார்த்து கர்ஜித்தவர், “அம்மாடி லட்சுமி அப்படியெல்லாம் எதுவும் இல்லைமா. இதை பெருசு பண்ணி உன்னை நீயே கஷ்டபடுத்திக்காத, அது உனக்கு மட்டுமில்லை குழந்தைகளுக்கும் நல்லதில்லை..”
“இல்லை மாமா.. நீங்க எத்தனை சொல்லி என்னை சமாதானப்படுத்த நினைச்சாலும் உண்மை வேற!! அதை இப்போ என்னால புரிஞ்சுக்க முடியுது..” என்றவள் மனம் அத்தனை ஆர்பரித்து கொண்டிருந்தது..
முகத்தை அழுந்த துடைத்து கணவனை தேடி செல்ல அவன் இன்னுமே தீவிர தேடுதலில் இருந்தான்.
“என் பொண்டாட்டி, போதுமா?!” என்று உரக்க கத்திவிட்டான்.
“பொண்டாட்டியா?” என்று கண்கள் இடுங்க ரிஷியை பார்த்தவள்,
“இத்தனை மாசத்துல பெட்ரூம்ல பெட்டை தவிர்த்து வேற எங்கேயுமே, என்னைக்குமே நீங்க என்னை பொண்டாட்டியா நடத்தினதே கிடையாதே ரிஷி அப்புறம் எப்படி நான் பொண்டாட்டி ஆவேன்?!..” என்று எல்லையில்லா கோபத்தோடு அவள் கேட்டதும் தான் தாமதம்.
“என்னடி சொன்ன?” என்று கண்மூடித்தனமான ஆத்திரத்தோடு ரிஷியின் கரம் அவள் கன்னத்தை பதம் பார்த்தது.
மகன் அடித்த சத்தத்தில் பதறிப் போன சிவபாலன், “ரிஷி” என்று நெருங்கும் முன்னமே “மாப்பிள்ளை!” என்ற கர்ஜனை அவரை சென்று சேர்ந்தது.
மகளை பார்ப்பதற்காக அங்கே வந்த தினகரனும் பாக்கியலட்சுமியும் இருவரின் வாக்கு வாதத்தில் வாசலிலேயே நின்றுவிட சிவபாலனும் அவர்களை கவனிக்கவில்லை.
இந்திரா எதையோ தேடுவதற்காக அவர்களின் அறைக்கு சென்றிருக்க, சிவபாலன் மகன் அறைக்கு உள்ளே செல்வதா? வேண்டாமா? என்ற தயக்கத்தோடு அறையை பார்த்தபடி நின்றிருந்தார்.
ரிஷியின் சப்தத்தில் அதற்கு மேலும் வாசலில் நிற்க முடியாமல் மகளின் அறைக்கு வந்தவர்கள் கண்டது என்னவோ ரிஷி மகாவை அடித்த காட்சியை தான்.
ரிஷிக்குமே அவன் அடித்த பிறகு தான், அவன் செய்த காரியம் புத்தியில் உரைத்தது.
அதுநேரம் வரை அவன் கொண்டிருந்த அழுத்தத்திலும், மகாவின் வார்த்தைகள் கொடுத்த கண்முடித்தனமான ஆத்திரத்திலும் நிதானம் இழந்து பேசிக்கொண்டு இருந்தவன், என்ன செய்கிறோம் என்று உணர்வு இல்லாமல் சட்டென கை நீட்டி விட்டான்.
.
Ivanaym ivan aatha kaariyayi ulla thooki vaikanum
ReplyDelete