வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 15.1

 

கோபத்தில் தான் செய்த செயலை உணர பல நிமிடங்கள் பிடித்தது ரிஷிக்கு. 


‘இந்த அளவிற்கு தான் கட்டுப்பாட்டை இழக்க கூடியவனா என்ன?’ என்ற அதிர்ச்சியில் மகாவை பார்த்திருக்க கன்னத்தைப் பிடித்து படி அவனை பார்த்திருந்தவளின் விழிகளில் அத்தனை வலி.

அதையும் மீறிய ஏதோ ஒரு உணர்வு அவனை தாக்க,  மனைவியை அடித்ததை அவனாலே நம்ப முடியவில்லை. 

மகாவுமே கணவனிடம் இதை எதிர்பார்க்கவில்லை. கணவனின் செயலால் விளைந்த அதிர்ச்சி, வலியை விட அவன் மீது அவள் வைத்திருந்த நம்பிக்கை சில்லு சில்லாக  உடைந்து போனது. 

“லச்சு..” என்று ரிஷி அவளை நெருங்கும் முன்னமே, “எதுக்காக என் பெண்ணை அடிச்சீங்க மாப்பிள்ளை?” என்று அவர்களுக்கு இடையில் வந்தார் தினகரன்.

 

“மாமா..” என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தை எழவில்லை.

“பிள்ளைத்தாச்சி பொண்ண அடிக்க எப்படி மாப்பிள்ளை மனசு வந்தது?”

“அது.. அது..அவ.. பேசினதுல கொஞ்சம் டென்ஷனாகி..” என்றவனை இடையிட்டவர், 

“அப்படி என்ன பேசிட்டா? முதல்ல என் பொண்ணு வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தை வர காரணமே நீங்களா தான் இருக்கணும்..” என்ற அதேநேரம் அங்கே வந்த இந்திரா,

“பொண்ணா வளர்த்து வச்சுருக்கீங்க? புருஷன், மாமியார்னு யாருக்குமே மரியாதை கொடுக்கிறது இல்லை. இந்த அடியை என் பையன் எப்பவோ கொடுத்திருக்கணும் ரொம்ப லேட்டா கொடுத்திருக்கான்..” 

“என்ன பேசறீங்க சம்மதியம்மா? என் பெண்ணை ஒன்னும் நான் அப்படி வளர்க்கலை.. எல்லாரையும் மதிச்சு அனுசரிச்சு நடக்கிறவ என் பொண்ணு..” என்ற பாக்கியலட்சுமி மகளைத் தோளோடு அணைத்து, “என் பொண்ணு என்ன தப்பு பண்ணி இருந்தாலும் இந்த நிலைமையில் இருக்கிறவளை அடிக்க எப்படி உங்களுக்கு மனசு வந்தது?”

 

“என்னடி பேசற?” என்று மனைவியை முறைத்த தினகரன், 


“என் பொண்ணு தப்பு பண்ணி இருப்பான்னு நீயா எப்படி முடிவுக்கு வருவ பாக்கியா? மகா பேசினதை நீயும் கேட்ட தானே?!” என்றிட ரிஷிக்கு அவர்களின் பேச்சு மாமனார் மாமியார் வரை சென்றதை எண்ணி கோபமும் அவமானமும் ஒரு சேர எழுந்தது. 


“சம்பந்தி அவன் அடிச்சது தப்பு தான்!! அவனுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்..” என்று சிவபாலன் பிரச்சனையை தீர்க்க முயல அதற்கு இந்திரா விட்டால் தானே?!..


“என் பையன் என்ன தப்பு பண்ணிட்டான்னு இப்போ நீங்க மன்னிப்பு கேட்கறீங்க? பொட்டச்சியை ஒழுங்கா வளர்க்க துப்பில்லாதவங்க கிட்ட உங்களுக்கு என்ன பேச்சு? முதல்ல இப்படி வாங்க..” என்றவர், 


“புருஷன் முன்னாடி போனா பொண்டாட்டி பின்னாடி போகணும் அதுதான் நல்ல பொம்பளைக்கு அழகு. ஆனா உங்க பொண்ணு அப்படியா இருக்கா? புருஷனை மதிக்கிறது இல்ல நாத்தனார் மாமியாரை எடுத்தெறிஞ்சு பேசறதுன்னு எவ்ளோவோ நடத்தி காட்டிட்டு இருக்கிறா.. இதெல்லாம் எங்க குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது…”

“ஆனாலும் கட்டிக்கிட்டு வந்தாச்சேன்னு நாங்களும் இத்தனை நாள் சகிச்சுகிட்டு இருந்தோம் ஆனா இப்போ யாரைக் கேட்டு உங்க பொண்ணு வேலையை விட முடிவு பண்ணா? புருஷன்னு என் பையன் இருக்கிறது எதுக்கு? அவன் கிட்ட ஒரு வார்த்தை கேட்காம, அவனுக்கு மரியாதை கொடுக்காம அவ இஷ்டத்துக்கு முடிவு எடுத்துட்டு வருவாளா?”

“என்னமா பேசறீங்க? என் மகளை பற்றி இன்னொரு வார்த்தை..” என்று தினகரன் கட்டுபடுத்த கோபத்தோடு தொடங்க அவர் கையை பிடித்த பாக்கியலட்சுமி, 


“கொஞ்சம் அமைதியா இருங்க அவசரப்பட்டு எதுவும் பேசிடாதீங்க..” என்று அவரை கட்டுபடுத்தி இந்திராவிடம், 


“ஏங்க, மூணு உயிரா இருக்கிறவளால எப்படி பழைய படி வேலை செய்ய முடியும்? இங்க இருந்து வேலைக்கு போக வர அவ கஷ்டபடுறதால தான் ஏழாம் மாசமே வளைகாப்பு பண்ணி கூட்டிட்டு போலாம்னு இருந்தோம்.. ஏற்கனவே உங்க கிட்ட பேசியிருந்தேனே ண்ணா..” என்றார்.


“ஆமா மா நானும் பேசிட்டு சொல்றதா சொன்னேன் ஆனா அதுக்குள்ள எதிர்பாராம எவ்வளவோ நடந்துடுச்சு..”


“இருக்கலாம் ஆனா இன்னைக்கு என் பொண்ணு மயக்கம் போட்டு ட்ரிப்ஸ் ஏத்துற அளவுக்கு ஆகிருக்கு. என் பொண்ணுக்கும் குழந்தைகளுக்கும் ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு நடந்துச்சுன்னா என்ன பண்ணுவீங்க?” 


“நடக்குதுன்னா எதுக்கு பறக்குதுங்கிறீங்க? அதெல்லாம் உங்க பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது. ஏற்கனவே என் புள்ளையையும் புருஷனையும் வேலைக்காரங்களா மாத்திட்டு அவ இங்க மகாராணியா தான் சுத்திகிட்டு இருக்கா? சம்பாதிக்கிறது மட்டும் தான் இவ உருப்படியா செய்யற வேலை இப்போ அதுவும் செய்ய மாட்டேன்னு சொன்னா எப்படி?” 


“என்னமா பேசுறீங்க என் பொண்ணு என்ன சம்பாதிச்சு போடுற மிஷினா? ரொம்ப நாளாவே சாப்பிட முடியல தூங்க முடியல வேலை செய்ய முடியலைன்னு சொல்லிட்டு இருக்கா முடியாதவளை எதுக்காக கட்டாயப்படுத்துறீங்க?”


“சம்பந்தி கொஞ்சம் பொறுமையா பேசுங்க. இங்க யாரும் கட்டாயப்படுத்தல வீட்டு சூழல் அந்த மாதிரி அதனால தான் ரிஷி இப்போதைக்கு வேலையை விட வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கான்..”


“அப்படி என்னங்க சூழல்? என் பொண்ணோட உயிரை விட உங்க சூழ்நிலை அவ்வளவு முக்கியமா? ஹாஸ்பிடல்ல இருந்து ஃபோன் வரவும் பதறி அடிச்சுகிட்டு வரோம் உங்களுக்கு அதெல்லாம் கொஞ்சமாவது இருக்கா? அவ எந்த நிலையில இருக்கான்னு கூட வேலை செய்றவங்க சொன்னதைக் கேட்டு ஆடி போய் இருக்கோம். ஆனா அவளை போட்டு மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிறீங்க..” என்ற தினகரனின் பேச்சில் அதிர்ந்த ரிஷி. 


“என்ன ஆச்சு? எதுக்கு ஹாஸ்பிடல் போனா?” என்றான் திகைப்போடு.


“ஓஒ, அதுவே தெரியாதா? இந்தளவுக்கு தான் உங்க அக்கறையா? ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை..”


“....” 


“பொண்டாட்டிக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு கூட தெரியாம அவளை கை நீட்டுற ஆம்பளையை இங்க தான் பார்க்கிறேன்.. ப்ச்..” என்று அதிருப்தியோடு ரிஷியை பார்


“அப்பா என்ன ஆச்சுன்னு நீங்களாவது சொல்லுங்க...” என்று ரிஷி கேட்கவும் சிவபாலன் நடந்ததை சொல்லி முடித்தார். 


“இவ்ளோ நடந்திருக்கு ஏன் என்கிட்டே சொல்லலை?” என்றவன், “குழந்தைங்க எப்படி இருக்காங்க? உனக்கு எதுவுமில்லையே..” என்றான் மனைவியிடம். 


ஆனால் மகா அவனுக்கு பதில் அளிக்கும் நிலையில் இல்லை. 


“வேலைக்கு போறது அவ! தன்னால முடியுமா முடியாதா என்று முடிவெடுக்க வேண்டியதும் அவ தான். அவளை  புரிஞ்சுக்காம உங்க சூழ்நிலைக்கு பலிகடாவாக்க பார்க்கறீங்களா?” என்றார் தினகரன் ஆற்றாமையோடு.


“மாமா நான் வேணும்னு அடிக்கலை ஒரு கோபத்துல..”


“அப்படி என்ன கோபம் பிள்ளைதாச்சி பொண்ணு மேல? மூணு உசுரா இருக்கிறவ மேல கோபப்படுற ஒரு மூர்க்கனுக்கா என் பெண்ணை கட்டி கொடுத்து இருக்கேன்?! உங்களை நான்  இப்படி நினைக்கல மாப்பிள்ளை..” 


“என்ன உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறீங்க? என் மகன் ஆம்பளை அவனை இத்தனை பேர் எதிர்ல நீங்க கேள்வி கேப்பீங்களா?” என்று ஆர்பரித்தவர், 


“எதுக்கு எடுத்தாலும் எதிர்த்து பேசிக்கிட்டும் எடுத்தெறிஞ்சு நடந்துக்கிறதுமா இருக்கா இவ! பொட்ட பொண்ண அடக்கி வளர்க்க துப்பு இல்ல என் மகனை பேச வந்துட்டீங்களா?” என்று எதிரி கொண்டு சென்றார் இந்திரா.


ஆனால் மறு நொடியே “வாயை மூடுடி, இவன் அடிச்சது தப்பு! பெண்ணை பெத்தவங்க கேட்க தான் செய்வாங்க, ஒழுங்கா பதில் சொல்ல முடிஞ்சா சொல்லு இல்லை இங்கிருந்து போ நான் பேசிக்கிறேன்….” என்று மனைவியை அடக்கினார் சிவபாலன். 


“என்ன பேசிடுவீங்க நீங்க?! கொஞ்சம் தள்ளுங்க, அவங்க மக லட்சணம் என்னன்னு அவங்க தெரிஞ்சுக்கட்டும்..”


“அப்படி என்ன சொல்லுங்க?” என்ற பாக்கியலட்சுமியின் முகத்திலும் என்றுமில்லா ரௌத்திரம்.  


“புருஷன் பத்திரத்தை கேட்டா எடுத்துக் கொடுக்க வேண்டியது தானே?! அதை விட்டுட்டு ஆயிரத்து எட்டு கேள்வி கேட்டுட்டு இருக்கிறா..” என்றார் இந்திரா கோபம் குறையாமல். 


“என்ன பத்திரம்?”


“அதுதான் அவளுக்கு அரை ஏக்கரா எழுதி கொடுத்து இருக்கீங்களே அந்த பத்திரம் தான். ஒரு ஆத்திர அவசரத்துக்கு கட்டினவன் பத்திரத்தை கேட்டா கொடுத்து உதவறவ தான் பொண்டாட்டி. ஆனா உங்க பொண்ணு  பத்திரத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை என் மகனுக்கு கொடுக்குறது இல்லை. இதையெல்லாம் கண்டிக்க மாட்டீங்களா?”


“அந்த காலத்துல என் புருஷன் தேவைன்னு கேட்டதும் காதுல மூக்குள் போட்டு இருக்கிறதுன்னு எனக்கு என் அம்மா வீட்ல போட்ட மொத்த நகையையும் தூக்கி இந்த மனுஷன் கிட்ட கொடுத்தவ நான்!! ஆனா உங்க பொண்ணு கொஞ்சமாவது புருஷன் மேல அக்கறை இருக்கா?”


“நிறுத்துங்க! முதல்ல உங்களுக்கு எதுக்கு அந்த பத்திரம்? அப்படி என்ன தேவை? ஏதாவது கடன் இருக்கா உங்களுக்கு? அப்படியே இருந்தாலும் அதுக்கு எதுக்காக அந்த பத்திரத்தை கேட்டீங்க..” என்று தினகரன் கேள்விகளை தொடுக்கவும், 


“சம்பந்தி இதை பெரிசு படுத்த வேண்டாமே.. அவன் அடிச்சதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அவனையும் கேட்க சொல்றேன்.. லட்சுமி வேலைக்கு போக வேண்டாம் வீட்லயே இருந்து குழந்தைகளை நல்ல படியா பெற்று எடுக்கட்டும்..” என்றார் சிவபாலன்.


ஆனால் அதை ஏற்கும் நிலையில் இல்லாத தினகரன், “சொல்லுங்க ம்மா அது என் பொண்ணுக்கும் என் பேரன் பேத்தியுடைய எதிர்காலத்துக்குமா நான் கொடுத்த சொத்து… எந்த மாதிரியான சூழல் இருந்தாலும் அதை எப்படி நீங்க கேட்கலாம்?” என்றார். 


“ஏன் என் மகனுக்கு இல்லாத உரிமையா?!” 


“உரிமை பேசுறதுக்கு முன்னாடி புருஷனா என் பொண்ணோட உணர்வுக்கு மதிப்பு கொடுத்து இருக்கணும்..” 


“என்ன புதுசா சட்டம் பேசறீங்க? என் மகன் புருஷனா இல்லாம தான் உங்க பொண்ணு அம்மா ஆகிட்டாளா?” என்றிட சூழல் இன்னுமே கை மீறி போவதை உணர்ந்த ரிஷி, 


“வாயை மூடுன்னு சொன்னேன் இந்திரா… இன்னொரு வார்த்தை பேசின நான் மனுஷனா இருக்க மாட்டேன்..” என்றவர், 


“சம்பந்தி இது எதிர்பாராம நடந்த விஷயம், நான் ரிஷியை கண்டிச்சு வைக்கிறேன் இன்னொரு முறை இப்படி நடக்காது..”


“நீங்க தான் அப்படி சொல்றீங்க.. ஆனா இங்க நடக்கிறது, இந்தம்மா பேசறது எதுவுமே எனக்கு அந்த நம்பிக்கையை கொடுக்கலை.. இனியும் உங்களுக்கு இடையில் என் பொண்ணை விட்டு வைக்க நான் தயாரா இல்லை..” என்றிட, 


“லட்சமி நீயாவது உன் அப்பாவுக்கு சொல்லு மா..” என்றார் மருமகளிடம். 

“அவ என்ன சொல்றது? இனி ஒரு நிமிஷம் கூட என் பொண்ணு இங்க இருக்க கூடாது..” என்ற தினகரனின் பேச்சில் அனைவரும் அதிர்ந்து போயினர்.



Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 20.3