வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 18.1

 



ஒரு புறம் சிந்துவின் விசேஷத்திற்கான ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருக்க இங்கே மகாலட்சுமி தன் வீட்டில் தந்தை, அண்ணன், அண்ணி என்று அனைவரின் அன்பில் நிம்மதியாக இளைப்பாரி கொண்டிருந்தாள்.


ஆனால் பாக்கியலட்சுமி தான் வளைகாப்பு செய்து அனைவரின் ஆசிர்வாதத்தோடு அழைத்து வர நினைத்த மகளின் முடிவில் வெகுவாக கலங்கி போயிருந்தார்.

 

மனைவியை சமாதானப்படுத்திய தினகரன் மகளை இனி எந்த கேள்வியும் கேட்கக்கூடாது புகுந்த வீட்டிற்கு செல்ல சொல்லி அவளை கட்டுப்படுத்த கூடாது என்று மனைவிக்கு உத்தரவை பிறப்பித்து இருந்தார். 


“எல்லாம் சரி ஆனா வளைகாப்பு, பிரசவம் இதெல்லாம் எப்படிங்க?” 


“ஏன் என் பொண்ணுக்கு நான் வளைகாப்பு நடத்த மாட்டேனா?! நீ எதிர்பார்க்கிறதை விட பிரம்மாண்டமாக நடத்துவேன்.. அதை பத்தின கவலை உனக்கு எதுக்கு?” 


“ஆனா மாப்பிள்ளை இல்லாம உங்களால செய்ய முடியுமா? இப்படி தேவையான நேரத்துல அவருக்கு பக்கபலமா நிற்க விடாம உங்க பெண்ணை இழுத்துட்டு வந்துட்டீங்களே.. இது சரியா?”


“அப்போ இன்னைக்கு பிள்ளைதாச்சின்னு கூட பார்க்காம அடிச்சவங்க நாளைக்கு எது செய்யவும் தயங்காம போனாலும் அதை கை கட்டி வேடிக்கை பார்க்கனும்னு சொல்றியா?”


“அப்படி இல்லைங்க.. மகாவுக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் கூட ஆகலை.. புருஷன் பொண்டாட்டின்னா எந்நேரமும் கொஞ்சி குலாவிட்டேவா இருந்திட முடியும்… சின்ன சின்ன உரசல், சண்டைன்னு எல்லாம் வரும் அதெல்லாம் கடந்து வராத புருஷன் பொண்டாட்டி எங்க இருக்காங்க?”

“சொல்லப்போனா அதெல்லாம் தான் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க உதவும் உறவும் பலப்படும்.. ஆனா எதையுமே அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கடக்கணும்.. இப்படி பிரிஞ்சு வந்து இல்லை.. பொதுவாவே சின்ன விரிசல் தான் பெரிய பிரிவுக்கு வழி வகுக்கும்னு சொல்லுவாங்க…”


“அதுக்காக கை நீட்டலாமா?”


“ஏதோ அந்த நேரத்து கோபம் நிதானம் இழந்துட்டார்.. இத்தனை மாசமா நம்ம பெண்ணை நல்லா தானே பார்த்துக்கிட்டார் அதெல்லாம் யோசிக்காம..”


“என்ன பேசற பாக்கியா நீ?! மாப்பிள்ளையோட அம்மா பேசினதை கேட்ட தானே, அதுலயே உனக்கு அவங்க நம்ம பெண்ணை எப்படி நடத்துறாங்கன்னு புரியலையா?”


“எனக்கு புரியாம இல்லைங்க.. ஆனா இந்த மாதிரி இக்கட்டான நேரத்துல மகா மாப்பிள்ளைக்கு துணையா இருந்திருந்தா அந்த வீட்டுல அவளோட மதிப்பும் மரியாதையும் உயரும். அவங்க வீட்டு பொண்ணுக்காக உதவுற நம்ம மகளை அவங்க புரிஞ்சுகிட்டு அனுசரணையா நடத்தவும் வாய்ப்பு இருக்கு..”


“அதை விட  நீங்க தலையிடாம போயிருந்தா மாப்பிள்ளையும் மகாவும் அவங்களுக்குள்ள பேசி தீர்த்துக்கவும் வாய்ப்பு இருக்குன்னு சொல்றேன்…” என்றிட அங்கே வந்த மகாலட்சுமி, 


“ம்மா நீங்க பேசினதை நானும் கேட்டேன். இந்த பிரச்னையை நீங்க அணுகுற கோணம் வித்யாசமா இருக்கு. அதே நேரம் ஏத்துக்க கூடியதாவும் இருக்கு. இங்க பிரச்சனை நான் அவருக்கு உதவாம போனது இல்லைம்மா. அவர் என்னை ஒரு மனுஷியா மதிக்காம போனது தான்..”


“அப்பா என்னைக்காவது உங்களை கலந்துக்காம எந்த முடிவாவது எடுத்து இருக்காரா?” என்று கேட்க இல்லை என்று தலையசைத்தார்.


“அவர் என்கிட்டே அனுமதி கேட்டு அடமானம் போடணும்னு கூட நான் எதிர்பார்க்கலை.. ஒரே ஒரு வார்த்தை இப்படி செய்யலாம்னு இருக்கேன் உனக்கு ஓகேவா இல்லை வேற ஏதாவது ப்ளான் வச்சுருக்கியான்னு கேட்டிருந்தா கூட போதும் ம்மா..”


“என்னை யாருன்னு கேட்டுட்டு என்னோட சொத்தை எனக்கே தெரியாம அடமானம் போடற அளவுக்கு போயிருக்காருன்னா அதுக்கு என்னம்மா அர்த்தம்?! பணம், சொத்தை பற்றின பிரச்சனை இல்லை இது, எனக்கான உரிமை என்னன்னு தெரியாம அவரோடு இனி வாழறதா இல்லை..”


“என்ன மகா இப்படி பேசற?”


“ப்ளீஸ் ம்மா, என்னோட வாழ்க்கையில் அவர் எந்தளவு முக்கியமோ அந்தளவு நானும் அவரோட வாழ்க்கையில முக்கியமானவளா இருக்கணும்னு நினைக்கிறேன் இது தப்பா? அப்பா ஒரு நாள் கூட உங்களை இன்செக்யூரா ஃபீல் (Insecure feel) பண்ண விட்டது கிடையாது ஆனா அந்த வீட்டுல எனக்கு அந்நிய உணர்வை அவர் கொடுத்துட்டார்..”


“இனி அதுதான் என்னோட வீடு, அவங்க தான் என்னோட மனுஷங்கன்னு எவ்ளோ சந்தோஷமா அங்கே போனேன் ஆனா எனக்கு சொந்தமில்லாத இடத்துல அனாவசியமா துருத்திக்கிட்டு இருக்கிற மாதிரி தான் என்னை உணர வச்சுட்டார். அப்போ அவரே தான் அதை போக்கணும்…”


“இப்போ அவரோட பணத்தேவையை தீர்த்துட்டா என்னோட முக்கியத்துவமே அவருக்கு தெரியாம போயிடும். எனக்கு அங்கே எவ்ளோ ரெஸ்ட்லெஸ்ஸா (Restless) இருந்தது தெரியுமா?” 


“எந்த விஷயத்தையும் ஆறப்போடனும் அவசரத்துல அள்ளி தெளிக்க கூடாதுன்னு நீங்க தானே ம்மா அடிக்கடி சொல்லுவீங்க.. இந்த முடிவுக்கு நான் வந்து ரொம்ப நாள் ஆச்சு, இப்போ இந்த பிரச்சனை காரணமா கொஞ்சம் முன்னாடியே வந்துட்டேன் அவ்ளோ தான்!”


“இப்போ தான் என் மனசுக்கு கொஞ்சம் அமைதி கிடைச்சிருக்கு அது குழந்தைகள் பிறக்கும் வரையாவது நீட்டிக்க ஆசைப்படறேன்..” என்று மகா சொன்ன பிறகும் பாக்கியலட்சுமி அடுத்து கட்டயபடுத்துவாரா என்ன?! 


மகிழிச்சியுடனே மகளின் முடிவை மனதார ஏற்றுக்கொண்டார். 


அடுத்த நாள் நகை, பட்டுப்புடவை, தட்டு வரிசை பொருட்கள் என்று அனைத்தையும் வாங்கிக்கொண்டு பெங்களூருக்கு கிளம்பினர் சிவபாலன், இந்திரா மற்றும் ரிஷி.


“என்ன இருந்தாலும் நீ பண்ணது ரொம்ப தப்பு இந்திரா..” என்றார் சிவபாலன் அவர்களுக்கு இரண்டு வரிசை முன்னே அமர்ந்திருந்த மகனை பார்த்தபடி.  


“என்ன தப்பு பண்ணிட்டேன் நான்?!”


“ரிஷி தான் லட்சுமி கிட்ட போய் இன்னொரு முறை பேசி பார்க்கிறேன்னு சொன்னானே ஆனா அவனை போக விடாம வீட்டை அடமானம் போட கட்டாயபடுத்தினது ரொம்ப தப்பு.. ஒரு லட்சமா இரண்டு லட்சமா?!” என்று வேதனையோடு மனைவியை பார்த்தவர், 


“இதுவரை மருமகளோட சம்பளப்பணம் இருந்தது. அவனால சமாளிக்க முடிஞ்சது ஆனா இப்போ அவன் சம்பளப்பணம் மட்டுமே வச்சு எப்படி சமாளிப்பான்? இரண்டு வருஷத்துல வீட்டு பத்திரத்தை மீட்க முடியாமல் போனா வீடு, கடன் கொடுத்தவனுக்கு சொந்தமாகிடும்…”


“ப்ச் நீங்க ஏன் இவ்ளோ பதறுறீங்க? கொஞ்ச நாள் பிரிஞ்சு இருந்தா தான் என் பிள்ளையோட அருமை அவளுக்கு தெரியும்..”


“என்னடி பேசற?”


“பின்னே என்ன?! இப்போ வீம்போடு பத்திரத்தை குடுக்க முடியாதுன்னு போயிருந்தாலும் பிள்ளை பெத்த பிறகு என்னைக்கு இருந்தாலும் அவ இங்க வந்து தானே ஆகணும்..”


“ஒன்னு இல்லை இரண்டு பிள்ளைங்க அதுங்களுக்கு அப்பன் வேண்டாமா? அப்பான்னு என் பிள்ளையை தானே காட்டியாகணும்? வேற ஒருத்தனை காட்டிட முடியுமா என்ன?” என்றதில் “இந்திரா!!” என்ற சீற்றம் அவரிடம். 


“எதுக்கு இப்போ சத்தம் போடுறீங்க? பிள்ளைகளுக்கு அப்பனை அடையாளம் காட்ட வேண்டிய பொறுப்பு அவளோடது தானே?! அதுக்காக எப்படி இருந்தாலும் நம்மளை தேடி வந்துதான் ஆகணும். அப்போ பத்திரத்தை கொடுத்தா தான் ஆச்சுன்னு சொன்னா முடியாதுன்னு போயிடுவாளா என்ன?”


“என்ன பொம்பளைடி நீ!!” என்று வெறுப்போடு தொடங்கியவர், ரயிலில் இருப்பதை உணர்ந்து, “ப்ச் நீ பேசறது சரியில்லை இந்திரா. பிள்ளையும் மருமகளும் எந்த மனக்கசப்பும் இல்லாம குழந்தைகளோடு சந்தோஷமா நல்லா வாழ ஒன்னு சேரணும்னு நினைக்காம மருமகளை கேவலபடுத்துற மாதிரி பேசற..”


“இது உன் மகனுக்கும் தான் கேவலம் அது புரியுதா இல்லையா உன் மரமண்டைக்கு.. இதோபார் ஏற்கனவே உன்னை வாயே திறக்க கூடாதுன்னு சொன்னேன் அப்படி இருந்தும் இப்படி ரிஷியை மிரட்டி வீட்டு பாத்திரத்தை வைக்க சொன்னது கொஞ்சமும் சரியில்லை…”


“அப்போ நாம பெத்த பொண்ண அம்போன்னு விட்டுட சொல்றீங்களா? ரிஷியை படிக்க வச்சுட்டோம் படிச்ச பொண்ண கட்டி வச்சுருக்கோம். என்னைக்கு இருந்தாலும் அவன் வாழ்க்கையை அவனால நேர்படுத்திக்க முடியும் ஆனால் பொட்ட புள்ள வாழ்க்கை அந்த மாதிரியா? நீங்களே சொல்லுங்க…”


“எதை பத்தியும் யோசிக்காம மகளை வாழ வைக்க அன்னைக்கு சிந்துவோட பொறுப்பை ஏத்துக்கிட்டது நாம!! ஒருபக்கம் அது சரின்னு இருந்தாலும் இப்போ ஒரு கண்ணுக்கு வெண்ணை இன்னொரு கண்ணனுக்கு சுண்ணாம்பு வைக்கிற மாதிரி தான் எனக்கு தோணுது..”


“என்ன, அப்படி என்ன வித்யாசம் பார்த்துட்டேனாம் நான்! இப்படி பேசறீங்க?”


“இதோபார் ஆம்பளை பையனை பெத்து வச்ச பெருமையில அவன் பொறுப்பு எடுத்துப்பான்னு நாம கொடுக்க கூடிய வாக்கின் வீரியம் புரியாம அன்னைக்கு பேசினது நம்மோட தப்பு ஆனா அதுக்காக ரிஷி அனுபவிக்கிறதா? அவன் மேல இவ்வளவு சுமத்துறது எந்த விதத்தில் நியாயம்?…” என்ற மனிதருக்கு இந்திராவின் மிரட்டலில் ரிஷி வீட்டை அடமானம் போட ஒப்புக் கொண்டதில் சுத்தமாக விருப்பம் இல்லை.


“நாம வாழுற வீடு இந்திரா. அவனுக்கு இருக்குற ஒரே சொத்து!! இதை கூட ஒரு அப்பனா நான் சேர்த்து வைக்கலைன்னு நினைக்கிறப்போ எனக்கே அசிங்கமா இருக்கு. அவனா கட்டிக்கிட்டது கூட அவனுக்கு இல்லாம பண்ணினா எப்படிடி?”


“நீங்க ஏன் இப்போ அபசகுணமா பேசுறீங்க? அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது. என் கணக்குப்படி உங்க மருமக எப்படி இருந்தாலும் இன்னும் ஒன்னுல இருந்து ஒன்றரை வருஷத்துக்குள்ள நம்ம பையனை தேடி வந்து தான் ஆகணும்…”


“அப்படி வரவ அவன் கூட சேர்ந்து நம்ம வீட்ல வாழனும்னா அதுக்கு அந்த பத்திரத்தை கொடுத்து தான் ஆகணும்னு கண்டிஷனா சொல்லிட்ட பிறகு எந்த அப்பா அம்மாவும்  பொண்ண வாழ வேண்டாம்னு கூட்டிட்டு போக மாட்டாங்க..”


“வசதி இல்லாத நாமலே கடனை உடனை வாங்கி நம்ம பெண்ணை வாழ வைச்சபோ அவங்க மட்டும் வித்யாசமாவா இருந்துட போறாங்க. நிச்சயம் பெண்ணை வாழ வைக்க தானே பார்ப்பாங்க. அப்போ பத்திரம் நம்ம கைக்கு வந்ததும் அதை அடமான போட்டு நம்ம வீட்டு பாத்திரத்தை மீட்டு எடுத்துடலாம்..”


“எவ்வளவு சுலபமா சொல்லிட்ட. எப்படி பார்த்தாலும் அந்த பத்திரத்தை மீட்கிற பொறுப்பும் நம்ம மகனுக்கு தானே?!”


“ஏங்க இப்ப மாதிரி ரெண்டு வருஷம் இல்லாம ஒரு அஞ்சு இல்லை  ஏழு வருஷம் வட்டி கட்டுற மாதிரி கூட வச்சுக்கிட்டு ஆடமானம் போட வேண்டியது தான்… எப்படியும் ஒரு வருஷத்துல உங்க மருமகள் வேலைக்கு போய்டுவா அவ சம்பளமும் இவன் சம்பளமும் சேர்ந்துச்சுன்னா அதை மீட்டுட மாட்டாங்களா என்ன?!” என்பதற்கு சிவபாலன் ஏதோ பேச வர அவரை தடுத்து,


“போதும் இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க. இப்ப செய்ய வேண்டிய விசேஷத்தை மட்டும் பாருங்க இந்த பேச்சு எல்லாம்அப்புறம் பாத்துக்கலாம். அங்க நம்ம பொண்ணு காத்திருப்பா..” என்றவர் அதற்கு மேலும் சிவபாலனிடம் பேச்சை வளர்க்காமல் மகளுக்கு அழைத்து பேச தொடங்கி விட்டார்.


அவர்களுக்கு முன்னே அமர்ந்திருந்த ரிஷியின் கைகள் கைப்பேசியில் இருந்த மனைவியின் எண்ணையே வெறுத்தி பார்த்திருந்தது.


இந்த இரண்டு நாட்களில் அன்று தான் அவசரப்பட்டு அவளை கடிந்து கொண்டோமோ என்ற எண்ணத்தை தோற்றுவித்து இருந்தனர் வனிதாவும் இந்திராவும்.


அதிலும் தேனில் குழைத்த வனிதாவின் பேச்சு அவனுக்கு அத்தனை எளிதாக ஜீரணமாக வில்லை. எப்போதும் இப்படி பேசக்கூடியவள் கிடையாது ஒருவேளை ‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்களே! அதுபோல அவன் செய்யப் போகும் சீர் வரிசைகள் ‘அவளின் பேச்சையும் மாற்றி உள்ளதா?’ என்ற எண்ணம் தான் அவனுக்குள் சுழன்று கொண்டிருந்தது.


அவன் மனதில் என்றும் இல்லாத வகையில் இன்று ஏதோ ஒரு சஞ்சலம் குடிகொள்ள அவனால் தன் இயல்பிலேயே இருக்க முடியவில்லை. கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்று அனைத்து புறமிருந்தும் அவனை இறுக்கி பிடித்து மூச்சை அடைக்க செய்வது போல இருக்க அமைதி இழந்த மனம்  மனைவியை வெகுவாக தேடியது.


ஆனாலும் இந்த நொடி வரை தனக்கு அழைத்துப் பேசாதவளுக்கு தானாக முன்னெடுத்து பேச அவன் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.


அதிலும் நேற்று அவள் செக்கப் செல்ல வேண்டிய நாள்! நிச்சயம் சென்று இருப்பாள், ஸ்கேனும் செய்து இருப்பார்கள் ஆனால் ஒரு வார்த்தை அவனுக்கு அழைத்து மகா பேசவில்லை. அதனாலே அவனும் வீம்போடு அவளுக்கு அழைக்காமல் இருக்கிறான்.



ஆனால் அவன் கரமோ அவனும் மனைவியும் இணைந்து கடைசியாக எடுத்த புகைப்படத்தை ஆசையாக வருடி கொண்டிருந்தது.


மகாவின் முன்பாக ஒரு காலை மடக்கி அவள் மணி வயிற்றில் இருக்கும் பிள்ளைகளுக்கு அவன் முதல் முத்தம் இட்ட போது மகா எடுத்த புகைப்படம் அது.


அதன் பிறகு இருவரும் தனியாக சேர்ந்து புகைப்படம் எடுக்கும் தருணம் அவர்களுக்கு கிட்டவில்லை.


ஒருவழியாக மாலை போல பெங்களூரு சென்று சேர்ந்தவர்கள் அங்கிருந்து ஆட்டோ பிடித்து வனிதா வீட்டிற்கு சென்றனர்.


வாசலிலேயே அவர்களுக்காக காத்திருந்த வனிதா வாயெல்லாம் பல்லாக, “என்ன ரிஷி மகாவை காணோம்?” என்று அத்தனை ஆவலாக தம்பி மனைவியை தேடினாள்.


“அவ வரலைக்கா” 


“என்னடா இப்படி சொல்ற? அவளுக்கு இருக்குற ஒரே நாத்தனார் நான்! என் வீட்டு விசேஷத்திற்கு வர முடியாத அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு?”


“நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. இந்த நேரத்துல அதிகமா ட்ராவல் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொன்னதால கூட்டிட்டு வரலை..” என்றிட அவனை இடையிட்ட சிவபாலன், 


“முதல்ல நீ லட்சுமிக்கு தகவல் சொன்னியா?” என்றார்.


“என்னப்பா பேசுறீங்க, ரிஷி வேற அவ வேறயா? ரிஷிக்கு சொன்னா போதாதா? இதெல்லாம் சொல்லி வர வேண்டிய விசேஷமா? நம்ம வீட்டு விசேஷம் ப்பா, நமக்குள்ளேயே அழைச்சுக்கிற அளவுக்கு நான் என்ன அவ்ளோ அந்நியப்பட்டு போயிட்டேனா? என் தம்பி பொண்டாட்டியை நான் வான்னு சொல்லி கூப்பிட்டு அவ வர்றதுக்கு”


“இதெல்லாம் சொல்லாமல் செய்ய வேண்டியது. ஏன் இந்த மரியாதை கூட அவளுக்கு தெரியாதா?” என்று கேட்க “இதெல்லாம் இங்கே பேசணுமா? முதல்ல உள்ள வாங்க..” என்று அழைத்தார் ஸ்ரீனிவாசன்.

 

வனிதாவின் மாமியார் நாத்தனார்களிடம் நலம் விசாரித்தவர்களை மகளிடம் அழைத்து சென்ற வனிதா சாப்பிட்டு கொண்டிருந்த சிந்துஜாவிடம், “ஆசீர்வாதம் வாங்கிக்கோ சிந்து..” என்றார்.


அவள் இந்திரா சிவபாலனை ஒன்றாக சேர்ந்து நிற்க சொல்ல, “முதல்ல மாமா கிட்ட வாங்கிக்கோ” என்றாள்.


“அதெல்லாம் எதுக்கு க்கா? இருக்கட்டும். அப்பா அம்மா கிட்ட வாங்கினா போதும்..” என்றான் ரிஷி.


“என்ன தம்பி இப்படி சொல்லிட்ட? தாய் மாமா ஸ்தானம்ங்கறது இன்னொரு தாய்க்கு சமம் இல்லையா?! நீ தான் என் பொண்ண முதல்ல ஆசீர்வாதம் பண்ணனும்..” என்றிட சிந்துவை மனதார ஆசிர்வதித்தான்.


அடுத்தநாள் தேவையான பொருட்களை வாங்கி வந்து பேத்திக்கு பிடித்ததை செய்து கொடுத்தார் இந்திரா. 


அதற்கு அடுத்த இரண்டாம் நாள் அவர்கள் வசதிக்கு ஏற்றபடி திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்திருக்க குறித்த நேரத்தில் விசேஷம் தொடங்கியது. 


சீர் வரிசைகளோடு ரிஷி மண்டபத்திற்கு வந்தபோது மாலை மரியாதை என்று ஆர்ப்பாட்டமாகவே அவனை வரவேற்று என்றுமில்லாத மரியாதையை கொடுத்து அவனை கவனித்தனர். 


ரிஷியின் கையாலேயே மகளுக்கு மாலை அணிவிக்க செய்து அவளுக்கு கொண்டு வந்திருந்த நகைகளையும் அவனையே போட்டுவிட சொன்னவள் “இதெல்லாம் வாழ்க்கையில ஒருமுறை நடக்கிற விசேஷம்.. இது உனக்கானது ரிஷி என் பொண்ணை ஆசிர்வாதம் பண்ணு..” என்று தம்பியை மகளுக்கு நலங்கிட்டு ஆசிர்வதிக்க செய்தாள்.


“பார்த்தியா வரதா, உன் அக்கா என்ன பேசறோம்னு தெரியாம வார்த்தையை விட்டுடுவாளே தவிர மனசு சொக்கதங்கம்! உன்னை ஒரு இடத்திலும் விட்டுக்கொடுக்காம எப்படி தாங்கினா..”


“நீங்க இரண்டு பேரும் எப்பவும் இப்படியே ஒத்துமையா இருக்கணும். யார் கண்ணும் படக்கூடாது..” என்று விசேஷம் முடியவும் பேத்திக்கு திருஷ்டி கழித்தவர் அக்கா தம்பியையும் ஒன்றாக நிறுத்தி திருஷ்டி கழித்தார். 


ரிஷியால் அதற்கு மேல் தங்க முடியாததால் அன்று மாலையே அவர்களுக்கு டிக்கெட் போட்டிருந்தான். வனிதாவோ சிந்துவையும் அவர்களோடு கிளம்ப சொன்னாள். 


“எதுக்கு வனிதா இவ்ளோ அவசரமா? பிள்ளைக்கு எவ்வளவு கண்திருஷ்டி பட்டிருக்கும்.. ரிஷிக்கு வேலை இருக்குன்னு நாங்க சீக்கிரம் கிளம்புறோம். நீ இன்னும் ரெண்டு நாள் பிள்ளையை வச்சுருந்து அப்புறமா கூட்டிட்டு வா…”

 

“பா படிக்கிற பொண்ணு இத்தனை நாள் லீவு போட்டதே அதிகம். போதும் அவள் ஸ்கூலுக்கு போகனும் நீங்களே பத்திரமா கூட்டிட்டு போயிடுங்க. எனக்கும் இங்க சொந்தத்தில் ஒரு முகூர்த்தம் வருது.. அந்த வேலையில இவளை கூட்டிட்டு வர முடியாமல் போனாலும் போயிடும் அதனால நீங்களே கூட்டிட்டு போயிடுங்க..” என்றதில் சிந்துவோடு சென்னை திரும்பினர்.


Comments

  1. 💞💞💞💞இந்திரா உங்கள் உயர்ந்த குணத்தை போலவே உங்கள் பெண்ணின் வாழ்வும் நல்லல்லல்லஆஆ வளம் பெறும். வெயிட் பண்ணுங்கோ.

    ReplyDelete

Post a Comment

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 20.3