வாழ்க்கைத்துணை - 20.1
“எதனால உனக்கு வேண்டாம்? அப்படி என்ன ஆச்சு?” என்று கேட்க அவளிடம் அமைதி.
“என்னனு சொல்லு மகா, ஏன் அமைதியா இருக்க?” என்று தினகரனும் கேட்க மெல்ல அவர்களை பார்த்தவள், “ம்மா, ப்பா அவர் வீட்டை அடமானம் போட்டு தான் சிந்துவுக்கு சீர் பண்ணி இருக்கார்..” என்றாள்.
“என்னடி சொல்ற வாழற வீட்டை அடமானம் போட்டு செய்யற அளவுக்கு என்ன நிர்பந்தம்? எதுக்காக இப்படி பண்ணினார்..”
“அவருக்கும்மே வீட்டை அடமானம் போடுறதுல விருப்பம் இல்லை ம்மா. இப்போதைக்கு ஃபிரண்ட்ஸ் கிட்ட கடன் வாங்கி ஒரு சவரன் மட்டும் போட்டு விசேஷத்தை நடத்தலாம்னு தான் சொல்லி இருக்கிறார்..”
“..”
“ஆனா அத்தை அவர் சொன்னதை கேட்கலையாம். சொன்ன சீரை செய்யணும்னு கட்டாயபடுத்தி இருக்காங்க.. அதுக்கும் மேல அவர் முடியாதுன்னு சொன்னதுல அண்ணி பிளாக்மெயில் பண்ண மாதிரியே அவங்களும் பண்ணி இருக்காங்க… வேற வழியே இல்லாம தான் இந்த முடிவுக்கு வந்திருக்கார்.”
“என்னம்மா சொல்ற? எனக்கு என்னமோ இது சரியா படலை. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அவரோட ரத்தத்தை உறிஞ்சு குடிக்கிற மாதிரி தான் தெரியுது. அன்னைக்கு அவங்க பொண்ணோட நல்லதுக்காக வாக்கு கொடுத்தாங்க சரி… ஆனா கொடுத்தவங்க அதை நிறைவேற்றுவது தானே முறை?!”
“எதுக்காக எல்லா பாரத்தையும் தூக்கி மாப்பிள்ளை மேல போடுறாங்க.. இதனால் உங்களுக்கு இடையில தான் விரிசல் அதிகமாகுது. அவங்க புரியாம பேசலாம் ஆனா அவர் எப்படி இதுக்கு சம்மதித்தார்?”
“அத்தை செத்துடுவேன்னு சொல்லி அவரை மிரட்டி தான் செய்ய வச்சுருக்காங்க..”
“காரியத்தை சாதிக்க செத்துருவேன்னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்காங்களே, அந்த அளவுக்கு உயிர் விலைமதிப்பு இல்லாம போயிடுச்சா? மாப்பிள்ளையும் அவங்களுக்கு புரிய வைக்காம எதுக்கு அவங்க தாளத்துக்கு ஏத்த மாதிரி ஆடனும்?”
“அப்பா அவருக்கு ஏற்கனவே அம்மா என்றால் அவ்வளவு பாசம். இப்ப அவங்க எமோஷனலா பிளாக் மெயில் பண்ணும் போது அப்படி ஒரு கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். உங்களுக்கு தெரியுமா சிந்து விஷயமா என்கிட்ட பேசறதுக்கு இருந்திருக்காரு ஆனா அத்தை தான் விடலை..”
“அதனால நாம வளைக்காப்பை செய்யாம இருக்க முடியாதே மகா…”
“எனக்கு புரியாமல் இல்லைப்பா ஆனா ஏற்கனவே நான் பத்திரம் கொடுக்காத கோவத்துல இருந்தவர் இப்போ வீட்டு பாத்திரத்தையும் அடமானம் போட்டு வச்சிருக்கிறதால அவரோட மொத்த கோபமும் என் மேல தான் இருக்கும். எதுக்காக போய் கூப்பிட்டு அதை அதிகப்படுத்தனும்?”
“மகா…”
“அதுக்காக செய்ய வேண்டான்னு சொல்லலை பெரிய அண்ணா இன்னும் இரண்டு மாசத்துல வரேன்னு சொல்லி இருக்காரே அப்போ வீட்டோடு இந்த விசேஷத்தை அண்ணங்க, அண்ணிகள், குழந்தைகள் என்று நம்ம வரைக்கும் பண்ணிக்கலாமே..”
“என்னடா இப்படி சொல்ற? மாப்பிள்ளை வருவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. மனம் தளர விடாதே! நீ சொல்ற மாதிரி இந்த நேரத்தில் பேசினால் அவர் கோபம் கூட வாய்ப்பு இருக்கு. இன்னும் ரெண்டு மாசம் தள்ளிப் போடப் போறோம் இல்லையா?! அப்போ ஒரு முறை போய் பேசிப் பார்க்கலாமே..”
“உன்னையும் பிள்ளைகளையும் அவரும் எத்தனை நாளைக்கு பிரிந்திருக்க முடியும்? ஆற போடுறதால அவரோட கோபமும் ஓரளவு தணிஞ்சுருக்கும். அதோடு நாமளா போய் அவரை அழைக்கும் போது வளைகாப்புக்கு வரவும் வாய்ப்பு இருக்கு..” என்றார் தினகரன்
“நீங்க சொல்றதும் சரிதான் ப்பா. ஆனா எதுக்கு இந்த ரிஸ்க்? அவர் வரமாட்டாரு என்கிற முடிவுடனே நான் இருந்துக்கிறேனே.. எல்லா ஏற்பாடும் பண்ணி விசேஷத்துக்கு அவர் வராமல் போனால் அது இன்னும் மோசம் ஆகிடும் ப்பா..”
“எனக்கு தெரிஞ்சு சிந்துவோட விசேஷத்திற்காக என்னை பார்க்க வந்தவரையே பார்க்க விடாத அத்தை. நிச்சயமா இதுக்கும் விட மாட்டாங்கன்னு தான் தோணுது..
அப்படி இருக்கிறப்போ எதுக்கு ரிஸ்க் எடுத்துக்கிட்டு? நீங்க எல்லாரும் கூட இருக்கீங்களே அது போதும்..”
“சரி, எதுக்கு இப்போ இதை பேசிகிட்டு. நடத்தும் போது பார்த்துக்கலாம்..” என்ற பாக்கியா, “நீ எதை பற்றியும் யோசிக்காம போய் படு மகா..” என்று மகளை அனுப்பி வைத்தவர்கள் பேச்சு முழுக்க ரிஷி தான்.
மேலும் ஒரு மாதம் கடந்த நிலையில்…
அன்று புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு தங்கள் கம்பெனியின் சார்பில் கலந்து கொள்ள மகாலட்சுமி வந்திருந்தாள்.
குறித்த நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே அங்கு வந்து சேர்ந்தவள். ஏழு மாடி கட்டிடத்தின் உள்ளே நுழைந்தாள்.
ஆறாம் மடியில் தான் அவர்களின் கூட்டம் நடை பெறுகிறது. லிஃப்டிற்காக காத்திருந்தவள் பாக்கியலட்சுமியிடம் இருந்து அழைப்பு வரவும் எடுத்துப் பேசினாள்.
“பத்திரமா வந்துட்டேன் ம்மா மீட்டிங்கு இன்னும் அரை மணி நேரம் கிட்ட இருக்கு. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஹான்! மாத்திரை போட்டுட்டேன்…”
“மறக்காம வெந்நீர் குடி..”
“சரி, சரிமா சுடுதண்ணி தான் குடிப்பேன். கையோடு எடுத்துட்டு வந்து இருக்கேன்.. லிஃப்ட் வந்துடுச்சு, நிச்சயம் மாத்தி குடிக்க மாட்டேன் என்றவள் லிஃப்ட் திறக்கப்படவும் அனைவரும் வெளியேறுவதற்காக காத்திருந்தாள்.
கைபேசியை அணைத்து ஹான்ட்பேக்கில் (Handbag) போட்டுக்கொண்டு உள்ளே நுழைந்த மகா லிப்டை மூட அவசரமாக ஒரு கரம் அதை தடுத்தது. வினாடிக்கும் குறைவான நேரத்தில் அவள் விழிகள் அக்கரத்திலிருந்த காப்பை காண அது அவளுக்கு பரிட்சையமான கரம் தான்.
அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அடுத்த நொடி ரிஷி தான் உள்ளே நுழைந்து இருந்தான்.
ரிஷிவரதனை கண்டதுமே அவளையும் அறியாமல் மகாவின் கண்கள் மின்னினாலும் தன் முன்னே இருந்தவனின் கோலம் கண்டு அதிர்ந்து போனாள்.
முன்பிற்கு இப்போது சற்று இளைத்து காணப்பட்டான். ‘இரண்டு மாதங்களில் இந்தளவு எடை குறைந்து போயிருக்கிறானே! அப்படி என்னவானது?’ என்று புரியாமல் கணவன் முகத்தை பார்க்க அதில் அத்தனை களைப்பு.
ரிஷியின் உறங்கா விழிகளின் சோர்வே அவன் தூங்கி பல நாட்கள் ஆகியிருக்கும் என்ற செய்தியை அவளுக்கு கடத்தியது.
“எப்படி இருக்கீங்க ரிஷி?” என்று தன்னை மீறி கேட்டவள் அப்போது தான் அவன் பார்வையும் தன் மீது இருப்பதைக் கண்டாள்.
அவனுக்கு அப்படியே நேர்பதமாக சிவப்பில் வெள்ளைப் பூக்கள் போட்ட டாப்ஸ் வெள்ளை நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிறத்தில் சிகப்பு பூக்களிட்ட ஷால் என்று மீட்டிங்கிற்காக தயாராகி வந்தவள் தாய்மை கொடுத்த பூரிப்பும், மிளிர்வும், மகிழ்ச்சியும் போட்டி போட அழகோவியமாக நின்றிருந்தாள் மகாலட்சுமி.
தன் வீடு வந்து சேர்ந்த பிறகு முன்பிருந்த சோர்வு அமைதியின்மை அழுத்தம் நீங்கி புத்துணர்வு பெற்றிருந்தாள்.
அதிலும் பிள்ளைகளின் அசைவு அவர்களுடனான பேச்சு என்று அவள் நாட்கள் மகிழ்ச்சியாகவே கழிந்து கொண்டிருக்க அது முகத்திலும் தென்படுவது இயல்பு தானே!!
அதிலும் இன்று தலைக்கு குளித்து கூந்தலை சிகப்பு நிற குட்டி கிளிப்பில் அடைத்து விரித்து விட்டிருந்தவளின் அழகு இரு மடங்கு கூடி இருந்தது.
Comments
Post a Comment