“என்ன சீதா புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா..? நீங்க என்ன சின்ன குழந்தையா மறந்துட்டேன்னு சொல்ல அதுவும் இவ்ளோ பெரிய விஷயத்தை எப்படி மூடி மறைக்க முடிஞ்சது உங்களால..?” என்று ஆவேசமாக கேட்ட ஜெகாவுக்குமே இப்போது அவர்கள் மீதான கசப்பு எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு கணவர் மற்றும் தங்கள் குடும்பத்தின் நிலையே முன்னே நின்றது.
"தாத்தா அம்மா சொல்றது நிஜம்..! எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க" என்று முன்னே வந்த தளிரை கண்டதும் வெறுப்போடு ஜெகா விலகிட அண்ணாமலையின் முன் மண்டியிட்டு அமர்ந்த தளிரிடம் ஏதோ சொல்ல வாயெடுத்த அன்னபூரணி முன் கைகூப்பிய தளிர்,
"எனக்கு உங்களோட ஆதங்கம் புரியுது ஆனா இன்னைக்கு இப்படி நடக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலை, இந்த மாதிரி ஒரு சூழல்ல உங்களை நிற்க வச்சதுக்கு முதல்ல என்னை மன்னிச்சிடுங்க"
"அந்த பையன் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறதா சொன்னானே நீ ஏம்மா அவனை விட்டுட்டு வந்த..?"
"தாத்தா ப்ளீஸ் அவன் சொன்ன எதுவுமே நிஜமில்லை"
"எதும்மா நிஜமில்லை.. என்று திரையை சுட்டிகாட்டியவர் கொஞ்ச முன்னாடி அதுல அவனோட நீ சிரிச்சு சந்தோஷமா பேசிட்டு போனதா இல்ல விளையாடினதா இல்ல தாலி கட்டி வாழ்ந்ததா..? எது நிஜமில்லைன்னு சொல்ல வர.." என்று அழுத்தமாக அண்ணாமலை கேட்க,
"எதுவுமே, நீங்க பார்த்த, கேட்ட எதுவுமே நிஜமில்லை! ஒருவேளை இன்னைக்கு இப்படி நடக்க வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்சிருந்தா நான் இந்த கல்யாணத்துக்கே ஓத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டேன், நான் மோசமான பொண்ணு இல்ல தாத்தா என்ன நம்புங்க" என்று கலங்கிய விழிகளோடு தளிர் சொல்ல சற்று நிதானித்தார் அண்ணாமலை.
"நண்பனா நினைச்சு பழகின சரத்தை கண் மூடித்தனமாக நம்பியது தான் நான் செய்த ஒரே தப்பு! நான் மட்டுமில்ல தாத்தா எங்க கேங்கில் எல்லாருமே ஒருத்தர் மேல ஒருத்தர் அளவுகடந்த அன்பும் நம்பிக்கையோடும் தான் இருந்தோம்..."
"சந்தியா, லேகா, அசோக், தீனா, அஜய், சரத் எல்லாருமே சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்ஸ்... ஒன்னா ஸ்கூல், டியூஷன் போறது ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்றது, ஸ்போர்ட்ஸ் டே கல்சுரல்ஸ் எல்லாமே நாங்க சேர்ந்து பார்டிசிபேட் செய்வோம்"
"எங்க அப்பா இது தப்புன்னு சொன்னது கிடையாது. எங்களுக்கும் நட்பில் ஆண் பெண் என்ற பேதம் பார்க்க தெரியல. எல்லாரும வெளியில போறப்போ எங்க அப்பா தான் பெரும்பாலும் கூட வருவாங்க சில நேரம் சந்தியாவோட அப்பா சில நேரம் அஜய் அப்பாவும் வருவார். அது காலேஜ் போன பிறகும் தொடர்ந்தது.."
"என்ன ஒன்னு எல்லாரும் கொஞ்சம் பெரிய பிள்ளைகளாகிட்டதால அப்பாம்மா இல்லாம நாங்களே போய் வருவோம் அப்போ எடுத்தது தான் நீங்க பார்த்த வீடியோ.." என்றவளுக்கு துக்கப்பந்து தொண்டையை கவ்விபிடிக்க முயன்று அதை விழுங்கியவள் கண்ணீரை உள்ளிளிழுத்தவாறே அண்ணாமலையிடம்.
"மனுஷங்கன்னு நம்பினது தவிர நான் வேற எந்த தப்புமே செய்யலை தாத்தா. எனக்கே தெரியாம தாலி கட்டின சரத் இப்போ எப்படி இந்த கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்தான்னும் எனக்கு சத்தியமா தெரியாது” என்றவளின் குரல் உடைய இமையோரம் திரண்டிருந்த கண்ணீர் வேகமாக இறங்கியது.
அது இறங்கிய வேகத்தை விடவும் வேகமாக துடைத்தவளுக்கு கண்ணீர் கொண்டு தன்னை நியாயபடுத்தவோ தன்னால் அவர்கள் கொண்ட அவமானத்தை கடந்துசெல்லவோ மனமில்லை.. நிச்சயம் மறந்து விட்டேன் என்ற உண்மை காரணத்தை இத்தனை நடத்த பிறகும் அவள் சொல்வது எத்தனை அபத்தமாக இருக்கும் என்பது புரிபட அதை தவிர்த்து வேறு எப்படி தன்னை நிருபிக்க என்று புரியாமல் அலமலந்து போனாள்.
“உனக்கு தெரியாம தாலி கட்ட முடியும் ஆனா நீ
கையெழுத்து போடாம எப்படிம்மா கல்யாணத்தை பதிவு செய்திருக்க முடியும்..?”
"தாத்தா போதும் இதுக்கு மேல தளிரை எதுவும்
கேட்காதீங்க.." என்று சொன்ன சுஜி நிவியின் கண்களிலும் கண்ணீர் திரண்டிருந்தது.
பின்னே அவர்களுக்குமே திருமணத்திற்கு பிறகும் பள்ளியிலும்
கல்லூரியிலும் படிக்கும் நண்பர்களுடன் நட்பு உண்டு, அதில் ஆண் பெண் பேதமில்லை,
அவ்வப்போது குறுஞ்செய்திகள், நலம்
விசாரிப்புகள், குழந்தைகள் குறித்தான பேச்சு, வருடத்திற்கு இருமுறை குடும்பத்தோடு சந்தித்து கொள்வது என்று
இருப்பவர்களுக்கு நண்பனால் ஏமாற்றபட்டு குற்றவாளியாகி இருக்கும் தளிரின் நிலை
வெகுவாக பாதித்திருந்தது.
“நான் கையெழுத்து போடலை தாத்தா ஆனா எனக்கு
என்னை நிரூபிக்க நிஜமா எந்த ஆதாரமும் கிடையாது நீங்க பார்த்த
வீடியோ எல்லாமே நிஜம் நான் ஒத்துக்குறேன் ஆனா அவன் என்னை இப்படி பாக்குறது கூட
இப்ப இந்த வீடியோல தான் எனக்கு தெரியும் அப்போ எங்க யாருக்குமே அவன் மேல துளி
சந்தேகம் கூட கிடையாது இருந்திருந்தா அவனோட ஃபிரெண்ட்ஷிப்பை கண்டிப்பா
துண்டிச்சிருப்பேன்”
"அக்கா வேண்டாம் க்கா நீயேன்
எல்லாருக்கும் நிரூபிக்க நினைக்கிற நாங்க உன்னை நம்புறோம்.. ப்ளீஸ் தாத்தா என்
அக்காவை விட்டுடுங்க அவ ரொம்ப நல்லவ இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க" என்று
கைகூப்பினாள்.
"இல்ல நான் விளக்கம் சொல்ல
கடமைபட்டிருக்கேன் நீ போ தென்றல்" என்று தங்கையை அனுப்பிட,
“எப்படிமா நீ சொல்றத நாங்க எப்படி நம்புறது..?
ஒருவேளை இந்த கல்யாணம் நடக்கிறதுக்கு முன்னாடி சொல்லி இருந்தாகூட
நம்பி இருப்போம் இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்து எங்க குடும்பத்த இந்த நிலையில்
நிறுத்தினது பிறகு எப்படிம்மா நம்ப சொல்ற..?"
"தவிர்க்க
முடியாத இடத்தில் நிக்க வச்சுட்டா கல்யாணத்து நடத்திடலாம்னு நினைத்தீர்களா..?”
என்ற அண்ணாமலையின் குரலில் அடக்கப்பட்ட கோபம், ஏமாற்றம்,
கழிவிரக்கம் அத்தனையும் போட்டி போட்டது.
“நான் நிஜமா எதையுமே பிளான் பண்ணல இது எல்லாமே
என் கை மீறி நடக்குது தாத்தா” என்றவளுக்கு இத்தனை நேரம் கட்டுபடுத்தியிருந்த
கண்ணீர் வழிந்தோடி அவர் பாதத்தில் விழுந்தது.
என்னதான் அவர்கள் மறைத்தது தவறாக இருந்தாலும் இப்போது தன்
முன்னே இருக்கும் தளிரின் கண்ணீர் அவரை வெகுவாக அசைத்திருந்தது.. அவள் வார்த்தைகள்
பொய்யாக இருக்க வாய்ப்பில்லை அதனால் நடந்த முடிந்த எதை மாற்றிவிட முடியும்..? என்று
கேள்வியோடு பேரனின் நற்பெயரும் அவர் மனதை ஆக்கிரமித்தது.
“நீ என்ன பேசினாலும் எவ்வளவு விளக்கம்
கொடுத்தாலும் நடந்த எதையும் மாத்திட முடியாது.. ஆனா என் பேரனை பற்றி ஊருக்குள்ள
இருக்க பேச்சை பொய்யாக்கனும்னா இப்போ இங்க உதயாதித்தன் கல்யாணம் நடந்தாகணும்
அதுவும் உன் தங்கச்சியோட நடக்கணும்” என்று சொல்ல தூக்கிவாரி போட்டது
இளந்தளிருக்கு.
அதேநேரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த துணை காவல்
கண்காணிப்பாளர் அலுவலகத்தினுள் திருமணத்திற்காக அணிந்திருந்த பட்டு வேட்டி
சட்டை நெற்றியில் இடப்பட்ட சந்தனம் கட்டப்பட்டிருந்த பட்டை கையிலிருந்த மங்கள
கயிறோடு வேகமாக நுழைந்த உதயாதித்தனின் மீது தான் அங்கிருந்தவர்களின் பார்வை
மொத்தமாக குவிந்திருந்தது.
கைபேசியில் சிவனேஷை உதய் தொடர்பு கொள்ளவும் அறையின் வெளியே
இருந்த கான்ஸ்டபிள் "ஐயா காத்துட்டு இருக்கார் உள்ள போங்க ஸார்" என்று
சொல்லவும் ராகவனோடு உள்ளே சென்றான்.
"கம் உதய் வெரி குட் டிசிஷன்" என்று
அவனுக்கு கை கொடுத்தவரிடம், "எங்க அங்கிள் அந்த
***" என்று பல்லை கடித்து கொண்டு கேட்டவனின் ஆவேசத்தை கண்டவர்,
"கூல் டவுன் உதய்! அவன் இப்போ ஜிஹெச்ல
ட்ரீட்மென்ட்ல இருக்கான்.. பொதுவா இந்த மாதிரி கேஸஸ்ல இரண்டு பக்கமும்
நாங்க விசாரிக்க வேண்டி இருக்கும் உன்மேல தப்பில்லைன்னு தெரிஞ்சாலும் நீ அடிச்சது
இப்போ சோஷியல் மீடியா நியூஸ்ன்னு கொஞ்சம் காம்ப்ளிகேட் ஆகிடுச்சு.."
"அங்கிள் ஆனா அவன் தளிரை பழிவாங்க
இவ்வளவும் செய்யறான், அவன் மேல டிஃபாமேஷன்.."என்ற
உதய்யை தடுத்த சிவனேஷ் "அவன் என்ன செய்தான்னு நான்
பார்த்துக்கறேன் இனி நீ என்ன செய்ய போற அதை சொல்லு உதய்..?"
"என்ன சொல்ல வரீங்க எனக்கு புரியலை"
என்று நெற்றியை நீவிக்கொண்டே கேட்கவும்,
"எனக்கு மேலிடத்துல இருந்து ப்ரெஷர்
கூடியிருக்கு இப்போதைக்கு அவனோட மேரேஜ் சர்டிஃபிகேட் பற்றி நான் யாருக்கும் ஐ மீன்
மீடியால சொல்லல அவன் ட்ரீட்மென்ட்ல இருக்க வரை சமாளிக்க முடியும் அதுக்கு அப்புறம்
உன்னையும் விசாரிக்க வேண்டி இருக்கும்.." என்று சொல்ல 'புரியுது'
என்பதாக தலையசைத்தான் உதய்.
"சட்டப்படி இன்னொருத்தனோட மனைவியை நீ
கல்யாணம் செய்ய இருந்தது மிகப்பெரிய அஃபென்ஸ் உதய்.. அவன் எல்லாமே பக்காவா ப்ளான்
பண்ணி செய்திருக்கான் நீ நடுவுல வருவங்கிறதை அவன் எதிர்பார்க்கலை, அவனோட லாயர் உன்னை விசாரிக்காம ஒருதலை பட்சமா செயல்பட்டா உன்மேல கேஸ்
போடுவேன்னு சொல்லிட்டு இருக்கான்... எப்பவும் சட்டத்துக்கு சாட்சி தான் முக்கியம்
அது அவன் பக்கம் ஸ்ட்ராங்கா இருக்கு.. எனக்கு தெரிஞ்சு இனி இதுல நீ தலையிடாம
இருக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்"
"அங்கிள் என்ன சொல்றீங்க..?" என்றான் குறையாத திகைப்போடு.
"ஆமா இந்த கேஸ் நாம் நினைச்சது போல இல்லாம
வேற டைமென்ஷன்ல போகுது.. இது அரேன்ஜ்ட் மேரேஜ் தானே..! நம்ம ஸர்கிள்ல நானே உனக்கு
வேற பெண் பார்க்கிறேன் பெட்டர் நீ இதுல இருந்து வெளியில போறது உனக்கு, உன்னோட பிசனஸ், உன்னை சார்ந்தவங்களுக்கு
நல்லது" என்றவர் மேலும் விளக்கமாக பேசிக்கொண்டே செல்ல இறுகிய முகத்தோடு அவரை
பார்த்திருந்த உதய் வெளியில் வர அவனை சுற்றி வளைத்து கொண்டனர்
பத்திரிக்கையாளர்கள்.
வேகமாக சென்றவன் அவர்களை கண்டதும் ஒருகணம் நிதானிக்க, "மச்சான் எந்த பதிலும் சொல்ல வேண்டாம் கிளம்பு" என்றான் ராகவன் ஆனால்
அதற்கு அவர்கள் விட்டால்தானே.. வேறொரு வழக்கு குறித்து கவர் செய்வதற்காக
வந்திருந்த ஓரிரு பத்திரிக்கையாளர்கள் அங்கே உதய்யை கண்டதுமே மற்றவர்களுக்கும்
தெரிவிக்க இப்போது அவனை சூழ்ந்துகொண்டனர்.
"ஸார் ஒரே ஒரு கேள்வி, நிஜமாவே அவங்க கல்யானமனவங்கன்னு தெரியாம தான் கல்யாணம் செய்ய
பார்த்தீங்களா..? அப்படி என்ன ஸார் அவசியம் உங்க அழகுக்கும்
வசதிக்கும் எத்தனை பெண்கள் கிடைப்பாங்க" என்று உதய் முன் மைக்கை நீட்ட அவனோ
அடக்கபட்ட கோபத்தோடு நின்றிருந்தான்.
அதற்குள் சிசிடிவியில் வெளியில் நடப்பதை கண்டுவிட்ட சிவனேஷ்
உதய் பதில் சொல்லும் முன்பாக அங்கே வந்தவர், "விசாரணையை தொடங்கிட்டோம் காவல்துறை
என்னைக்கும் இரண்டு பக்கமும் நேர்மையா செயல்படுவோம்.. இப்போதைக்கு அந்த திருமணம்
நடைபெறாது பொறுமையா இருங்க" என்றவர் "நீ கிளம்பு உதய் நான்
பார்த்துக்கறேன்" என்று அனுப்பி வைத்தார்.
அதேநேரம் "தாத்தா என்ன பேசுறீங்க...?" என்ற தளிர் நம்ப முடியாமல் அவரை பார்த்தாள்.
"இதோ என் பேத்திய எங்க ஆளுங்கள விட்டுட்டு
வேற ஆளுங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்ததே என் அனுபவத்துக்கு அதிகம்மா.. அந்த
பையன் உன்னோட ரெண்டு மாசம் வாழ்ந்ததா சொல்லி இருக்கான் அது நிஜமா இருக்காதுன்னு
உன்னோட கண்ணீர் நம்ப சொல்லுது..”
“ஆனா முள்ளு மேல சேலை பட்டாலும் சேலை மேல முள்ளு பட்டாலும்
சேதாரம் என்னைக்கும் சேலைக்கு தான்! இப்பவே உனக்கு கல்யாணம் மட்டும் தான் ஆச்சா
இல்ல குழந்தையும் இருக்கான்னு கேட்கிறாங்க அதை நான் நம்பலை ஆனா இதைவச்சு என்
பேரனுக்கு தகுதி..." என்றவருக்கு அதற்கு மேலும் தொடர முடியாமல் தொண்டை
அடைத்துக்கொண்டு வர கண்கள் கலங்கி போனது.
"இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசு ம்மா
நாங்க மானத்துக்கு கட்டுப்பட்டு வாழறவங்க. ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம் எதுக்கும்
பதில் சொல்ல வேண்டிய தேவை இல்ல அவங்கவங்க வாழ்க்கையை அவங்க தான் வாழனும்னு
புத்திக்கு புரிஞ்சாலும் மனசு தப்பே செய்யாத என் பேரனை நோக்கி வரக்கூடிய ஒரு சொல்ல
தாங்காது..!"
"என் பையன் அளவுக்கு எனக்கு பெரிய மனசு
இல்லம்மா.. நீ எப்படி எடுத்துகிட்டாலும் சரி என்னோட வயசுக்கும் அனுபவத்துக்கும்
இன்னைக்கு நடந்த விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் அதிகம்.. இனியும் உன்னை ஏத்துக்க கூடிய
அளவு எனக்கு மனதைரியமில்லை தயவுசெய்து இந்த தாத்தாவை
மன்னிச்சிடு.."
"அச்சோ தாத்தா என்ன பேசுறீங்க? நான் கல்யாணம் நடக்கணும்னு உங்ககிட்ட விளக்கம் கொடுக்கலை, என்னோட கர்மாவை நான் அனுப..விச்சு தானே ஆக.. ஆகணும் ஆனா நீங்..க..ளும்
அதுல.." என்று நாசி விடைக்க உடைந்த வார்த்தைகளை சேகரிக்க முடியாமல்
அவரை பார்த்தாள்.
"நீயும் எனக்கு பேத்தி மாதிரி தான்!
ஒருவேளை இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த கல்யாணத்தை நடக்கவிட்டிருக்க
மாட்டேன் ஆனா இவ்ளோதூரம் வந்த பிறகு மனசு கிடந்தது அடிச்சுக்குது.. ஒரே பேரன் ம்மா
எனக்கு!"
"அவன் வாழ்க்கை உன்னால சீரழிஞ்சதா இருக்க வேண்டாம் உனக்கு புண்ணியமா
போகட்டும் உன் தங்கச்சிக்கு வழி விட்டு நீ ஒதுங்கி நில்லுன்னு தான் சொல்றேன்"
என்று சொல்ல நெஞ்சம் வெதும்ப அவரை பார்த்தாள் இளந்தளிர்.
அண்ணாமலையின் முடிவை எதிர்பாராத அனைவரும் திகைத்து நிற்க, "தாத்தா என்ன பேசுறீங்க" என்று முதலில் பதறிக்கொண்டு நிவி ஓடிவந்தாள்.
"எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன்.. இனி
யாரும் ஒருவார்த்தை பேசக்கூடாது அந்த பெண்ணை கூட்டிட்டு போய் தயார் பண்ணுங்க"
என்றார் கட்டளையாக.
Comments
Post a Comment