"அப்பா ஏன் இவ்வளவு அவசரபடனும்.."
என்று தொடங்கிய அம்பலவாணன் 'எல்லாம் தீர விசாரிக்காம நீ
அவசரபட்டதோட விளைவு தான்' என்பதாக அமைந்த தந்தையின்
பார்வையில் மௌனமாகி போனார்.
"தாத்தா என்ன பேசுறீங்க..? இது தப்பு தளிரை நிச்சயம் பண்ணிட்டு தங்கச்சியை கட்ட சொல்றது நியாயமே இல்ல
இதனால எல்லாரோட வாழக்கையும் பாதிக்கப்படும்" என்று சுஜி பதறிக்கொண்டு
வந்தாள்.
"என்ன பேசுற நீ..? யாருக்கு
யாரால பாதிப்புன்னு இன்னமுமா உனக்கு புரியலை.., அம்பலா உன்
பொண்ணுக்கு புரிய வை" என்று சொல்ல சுஜி வேகமாக தந்தையை பார்த்தாள் அவரோ 'இனி எதுவும் என் கையில் இல்லை' என்பது போல
விட்டேர்த்தியாக அமர்ந்திருந்தார்.
பின்னே நடக்கும் எதையும் எதிர்பாராத அவர் மனம் தொடர்ந்து வந்த
கைபேசி அழைப்புகளில் அத்தனை துவண்டு போயிருந்தது..., இத்தனை வருட வாழ்க்கை
பயணத்தில் அவர் கொண்ட முதல் சறுக்கல், மிகவும் பலமான அடி..!
அதற்கு யாரையும் குறை சொல்ல முடியாத ஒருவித வெறுமையான மனதோடு இருந்தவருக்கு
தென்றலை மணமகளாக கொண்டு வருவதில் விருப்பம் இல்லையென்றாலும் எதுவும் தன் கையில்
இல்லாததை உணர்ந்து மௌனித்துவிட்டார்.
தங்களுக்கான இறுதி புகலிடமாக அம்பலவாணனை நம்பியிருந்த சீதா
அவர் மௌனத்தில் ஸ்தம்பித்து போனார்.
"என்ன ஜெகா இது உன் மாமனார் கல்யாணத்தை
நிறுத்துவார்னு காத்திருந்தா இவர் அதே வீட்டுல இருந்து பெண் எடுக்க பார்க்கிறார்..
எப்படியாவது இதை நிறுத்துடி நமக்கு இந்த குடும்பமே வேண்டாம்" என்று தங்கையின்
காதை கடிக்கவும் மாமனாரை நெருங்கிய ஜெகாவின் வார்த்தைகள் எதையும் அவர் காதிலேயே
வாங்கிக்கொள்ள வில்லை, தன் முடிவை செயலாற்றும் முடிவோடு
அமர்ந்திருந்தார்.
யார் பேச்சுக்கும் அசையாத அண்ணாமலையை கண்ட
தென்றலுக்கு அச்சம் அதிகரிக்க உடனே கைபேசியை எடுத்தவள், 'அத்தான்
ப்ளீஸ் அத்தான் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்.. எப்படியாவது எல்லாருக்கும் புரிய
வைங்க' என்று கண்ணீரோடு உதய்க்கு மெசேஜ் அனுப்பியவள் அதை
அவன் பார்க்காமல் போகவும் உடனே அவனுக்கு அழைக்க உதய்யின் எண் ஸ்விட்ச்ஆப்
செய்யபட்டிருந்தது.
கண்ணீரை துடைத்தவளுக்கு வேறு யாரை துணைக்கு அழைக்க என்று
வேகமாக மணமேடையை அலசிட அப்போதுதான் ராகவன் அங்கில்லாததை கண்டு ஒருவேளை உதய்யோடு
சென்றிருப்பானோ என்று உடனே அவனுக்கு அழைத்தாள். ஆனால் அவனுமே
ஸ்விட்ச்ஆஃப் செய்திருக்க மீண்டும் உதய்க்கு ஒருமுறை அழைத்து பார்த்தவள் கண்ணீரோடு
அனைத்து வழிகளும் அடைபட்டு விட்டதை உணர்ந்து தவித்து போனாள்.
தளிரின் சிவந்திருந்த விழிகளில் கண்ணீர் தன்போக்கில்
தடையின்றி வெளியேறிகொண்டிருக்க, விடைத்த நாசியுடன் அண்ணாமலையிடம்,
"தாத்தா இந்த கல்யாணம் வேண்டாம், நான்
நிச்சயமா உதய்யோட வாழ்க்கையில இருந்து விலகி போயிடுறேன் நீங்க அவருக்கு வேற பொண்ணு
பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க ஆனா இது மட்டும் வேண்டாம் தாத்தா.. ப்ளீஸ் தென்றல்
வேண்டாம் அவளை விட்டுடுங்க அவ சின்ன பொண்ணு! நான் செய்த தப்புக்கு
அவ என்ன பண்ணுவா..? என்னால அவ வாழ்க்கை பாதிக்கப்பட வேண்டாம்
ப்ளீஸ்" என்று அவரிடம் மன்றாடியவள்,
"நாங்க முன்னாடியே சொல்லாதது தப்புதான்! அந்த
தப்புக்கு தண்டனையை எனக்கு கொடுங்க ஆனா என் தங்கச்சி வாழ்க்கை வேண்டாம்” என்று
சொல்ல அவரோ கண்ணீர் வற்றிய நிலையில் நின்றிருந்த சீதாவிடம் சென்றவர்,
"எங்களை இவ்ளோ தூரம் வரவச்சு எல்லார்
முன்னாடியும் தலைகுனிய வச்ச நீதான்ம்மா உன் பெண்ணோட கேள்விக்கு பதில்
சொல்லணும்" என்று அண்ணாமலை பந்தை அவர்புறம் தள்ளிவிட்டு செல்ல, ஒருமுடிவோடு மகளை பார்த்தவர், “செய்த தப்பை திருத்தி
மன்னிப்பு கேட்க நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருங்க தென்றலை கூட்டிட்டு போய் தயார்
பண்ணு தளிர்” என்றார்.
கரைந்த விழிகளோடு நின்றிருந்த தளிரின் உயிர்கூடு சீதாவின்
வார்த்தைகளில் சிதறிப்போக "ம்மா ப்ளீஸ் இது வேண்டாம்" என்ற மகள்களின்
மன்றாடலை ஏற்க சீதா தயாராக இல்லை.
மணப்பெண் அலங்காரத்தில் கண்ணீரோடு வந்து நின்ற தென்றலை கண்ட
ராஜி, “அம்மா மகளுங்க எல்லாரும் ஏற்கனவே ப்ளான் பண்ணி செய்துட்டு எதுக்குடி இப்போ
நீலிகண்ணீர் வடிக்கிறீங்க..? இதெல்லாம் தெரிஞ்சு தானே
அப்போவே உனக்கு புடவையை எடுக்க பார்த்த அப்புறம் என்ன..?" என்று வெந்தபுண்ணில் வேல் பாய்ச்ச பதிலின்றி அவரை பார்த்த இளந்தென்றலின்
கண்ணீர் நின்று போயிருக்க ஒரு முடிவோடு உதய்யின் வருகைக்காக காத்திருந்தாள்.
சரத்தை எதுவும் செய்ய முடியாத கோபத்தோடு மண்டபத்தினுள்
நுழைந்த உதய் அங்கே மேடையில் மாலை அணிந்து சர்வலங்காரத்தோடு தென்றல் மணமகளாக
இருப்பதை கண்டு அதிர்ந்தவன் வேகமாக அவர்களை நெருங்கினான்.
"என்னதிது..? யார்
இவளை இப்படி நிற்க வச்சா..?" என்றவனின் கர்ஜனை காலியாக
இருந்த திருமண மண்டபமெங்கும் எதிரொலித்தது.
"நான் தான்..!" என்று முன்னே வந்த
அண்ணாமலை அவனிடம் தாலியை நீட்டி "கட்டு" என்று சொல்ல அவனோ அதை வாங்காமல்
"ஏன்..?" என்றான் அழுத்தமான குரலில்.
"என்ன பேசுற உதய்..? அவங்களால நமக்கு ஏற்பட்ட களங்கத்தை அவங்க தான் துடைக்கணும்.. நிவி
கல்யாணத்தின் போதே நான் சம்மதம் சொல்ற பெண்ணை தான் கட்டுவேன்னு எனக்கு வாக்கு
கொடுத்திருக்க.. தளிரும் நான் சம்மதிச்ச பெண் தான் இப்போ தென்றலும் நான்
சம்மதிக்கிற பெண் தான்..! இதுக்கு மேல எந்த கேள்வியும் கேட்காம முதல்ல தாலி
கட்டு" என்றார் பிடிவாதமாக.
உதய் அவரளவுக்கு இல்லையானாலும் தானுமே கொண்ட முடிவை எளிதாக
மாற்றிக்கொள்ளாத பிடிவாதக்காரன் தான். அதிலும் மனதார நேசித்தவளை விட்டு
மற்றொருத்திக்கு தாலி கட்ட சொன்னால் செய்துவிடுவானா..?!
"முடியாது தாத்தா" என்று தீர்க்கமாக
சொன்னவன் தென்றலை நெருங்கி "என்ன கோலமிது ப்ரீஸீ..? அவங்க
சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி" என்று அடிக்குரலில் சீற.,
"நான் வேண்டாம்னு தான் சொன்னேன் த்தான்..
ஆனா யாருமே நான் சொன்னதை கேட்கலை, அதுவும் அக்கா, அம்மா.." என்றவளுக்குமே அழுகை பொங்கிக்கொண்டு வர வார்த்தைகளை
முடிக்காது திணறலோடு அவனை பார்த்தாள்.
"யார் சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்காது
முதல்ல இந்த வேஷத்தை கலைச்சுட்டு வா" என்று சொல்ல, "உதய்" என்ற அண்ணாமலையின் குரல் அத்தனை உயர்ந்திருந்தது...
"தாத்தா ப்ளீஸ் இது என்னோட வாழ்க்கை!
காலம் முழுக்க என்னோட வர போற பந்தம் அதை எப்படி செய்த தப்புக்கு பிராயச்சித்தமா
நடக்கணும்னு முடிவு பண்ணுவீங்க..? தென்றல் அக்காவோட
தப்புக்கு தண்டனையா உங்களோட வற்புறுத்தலுக்காக என்னை ஏத்துக்கிட்டாலும் நான்
ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது நீங்க சொல்ற எல்லாமே செய்யறதுக்கு.."
"உதய்..."
"தளிர் தென்றல் மட்டுமில்ல
விருப்பமில்லாத பெண்ணை கல்யாணம் செய்துக்கறது எனக்குமே தண்டனைன்னு உங்களுக்கு
புரியலையா..? சொல்லபோனா தளிர் இடத்துல தென்றலை கொண்டு வந்து
நீங்க உண்மையா தண்டிக்க போறதே என்னை தான்..!!"
"புத்தி கெட்டு போய் பேசாத உதய், தளிர் அடுத்தவன் மனைவி! எத்தனை நியாயங்கள் சொன்னாலும் நம்மகிட்ட இருந்து
மறைச்சது தப்பு அதனால தான் நமக்கு இந்த நிலை.. உனக்கு அனுபவம்
பத்தாது, இந்த பிரச்சனை இத்தோட நிற்காம உன்னை விசாரணை அது
இதுன்னு இன்னுமே அலைக்கழிப்பாங்க..”
“தேவையே இல்லாம அவங்க பிரச்சனையில உன்னோட தலை உருளும்..
அதையெல்லாம் தவிர்க்கனும் உன்னை கேள்வி கேட்கிறவங்க வாயை அடைக்கனும்னா அதுக்கான
ஒரே பதில் உன்னோட திருமணம்!! சொன்னா கேளு தென்றலோடு உன்னுடைய கல்யாணம் இப்போ ரொம்ப
அவசியம் எதுவும் பேசாம தாலி கட்டு" என்றார் அண்ணாமலை காட்டமாக.
"என்ன பேசுறீங்க நீங்க..?" என்று ஒருநொடி நிதானமாக மூச்சை இழுத்துவிட்டவன், "ஓகே எனக்கு உங்க ஆதங்கம் புரியுது, எனக்காக
யோசிக்கிற என் தாத்தாவை நான் மதிக்கிறேன்... ஆனா ஏன் தென்றல்..?"
"அதான் சொன்னேனே அவங்களால ஏற்பட்ட.."
என்று அவர் தொடங்கவுமே,
"போதும் தாத்தா போதும்.. தயவுசெய்து
நிறுத்துங்க..! ஏன் இப்படி காலங்காலமா எந்தவொரு இக்கட்டான சூழல் வந்தாலும் உங்களோட
கௌரவத்தை நிலை நிறுத்த பெண்களை பலியாக்குறீங்க..? அவளும்
உயிரும் உணர்வும் உள்ள மனுஷி தாத்தா..”
“அவளுக்குன்னு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும்.
திருமணம் பற்றிய ஆசை கனவு இருக்கும். அதையெல்லாம் தூக்கி போட்டுட்டு உங்களுக்காக
கல்யாணம் பண்ணனும்னு ஏன் நிற்பந்தபடுத்துறீங்க..? அப்படி செய்யகூடிய
திருமணம் அவளுக்கு வாழ்நாள் முழுமைக்குமான தண்டனையாகிடாதா..? கட்டாயத்தால் கட்டப்பட்ட தாலிக்காக அவளோட ஒட்டுமொத்த வாழ்க்கையை தாரை
வார்த்து கொடுக்கணும்னு நீங்க எப்படி எதிர்பார்க்கறீங்க..?"
"நீ சின்ன பையன் உதய் உனக்கு இதெல்லாம்
புரியாது.. எத்தனையோ பஞ்சாயத்துல யாருனே தெரியாத பையனை கட்டிக்கிட்டு இப்போ வரை
சந்தோஷமா குடும்பம் நடத்தற பெண்கள் இருக்காங்க... நீ சொல்ற வெறுப்பை என் கையில
இருக்க மஞ்சக்கயிறு விருப்பமா மாத்திடும்.. சொன்னதை மட்டும்
செய்..!"
"ஒஹ் இதுக்கு பேர் தான் மஞ்சக்கயிறு
மேஜிக்கா..?" என்று விரக்தியாக புன்னகைத்தவன்,
"இப்படி ஒரு ஏற்பாட்டை செய்ய எப்படி
உங்களுக்கு மனசு வந்தது..? அவளோட விருப்பம் கனவு எல்லாமே
நீங்க ஏற்பாடு செய்திருக்க இந்த கல்யாணத்தால தடைபட்டு போகும்னு தெரியாதா..?
என் தங்கச்சியை என் ஃபிரென்ட் விரும்பின போது கூட அவளோட விருப்பத்தை
கேட்டுட்டு இவங்க கல்யாணத்தை நடத்த ஏற்பாடு பண்ணினவன் நான்..! அது எப்படி உங்களோட
வார்த்தைக்காக விருப்பமே இல்லாத பெண்ணை கட்டிப்பேன்னு நினைச்சீங்க..?"
என்றவனின் அடக்கப்பட்ட கோபம் கண்டு அங்கிருந்தவர்கள் மிரண்டு
போயினர்.
பின்னே எத்தனை இணக்கமாக இருந்த தாத்தாவும் பேரனும் இப்போது
ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் நிற்பதை கண்டு அஞ்சாமல் வேறென்ன செய்வர்..!
"உதய் அவசரபடாம அப்பாகிட்ட கொஞ்சம் பொறுமையா
பேசு இதுல எல்லாருக்கும் சம்மதம்" என்ற அம்பலவாணனுக்கு தந்தையின் இன்றைய அதீத
நிலை எங்கே அவருக்கே பாதகமாகிவிடுமோ என்ற அச்சம். அம்பலவாணன் எத்தனை முயன்றும்
அண்ணாமலை தன் முடிவை மாற்றாமல் போனதில் வருத்தம் இருந்தாலும் மகன் இப்படி அவரை
எடுத்தெறிந்து பேசுவதை அவரால் பொறுக்க முடியவில்லை.
"எல்லாருக்கும்னா..? உங்களுக்குமா ப்பா..?" என்று சொல்லிலடங்கா
வலியோடு தந்தையை பார்த்த மகனுக்கு பதிலளிக்க முடியாமல் அவர் நகர.. 'தந்தையின் மௌனத்தை சம்மதமாக எடுத்துகொள்வதா..?' என்ற
கேள்வியோடு சில நொடிகள் தேங்கி நின்றவன் பின் தென்றலை பார்க்க அவளோ அங்கேயே
நின்றிருந்தாள்.
அதில் அவன் கோபம் மேலும் கிளறப்பட, "ஏன் ப்ரீஸீ எனக்கு வாழ்க்கை கொடுன்னு நான் உன்னை கேட்டேனா..? ஏன் இந்த மாதிரி? உனக்கு என்னை தெரியாதா?! யார்
சொல்லி இருந்தாலும் நீ எப்படி ஒத்துக்கலாம், முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே..?
உன்னோட ஸ்டடீஸ் அப்ராட் கனவு எல்லாம் மூட்டை கட்டிட்டு எந்த
நம்பிக்கையில் நீ ரெடியாகி வந்து நிக்கிற..? அத்தை
எப்படி விட்டாங்க..?" என்றவன் சீதாலக்ஷ்மியை தேட,
"அத்தை ரூம்ல இருக்காங்க அண்ணா" என்ற
நிவி நடந்ததை சொல்லவும் கோபத்தோடு மணமகள் அறையை திறந்து கொண்டு சென்றவன் அவரிடமும்
குறையாத கோபத்தோடு பொரிந்து தள்ளிவிட்டான்.
அப்போது தான் முகம் கழுவி ஓரளவு தன்னை மீட்டெடுத்து இருந்த
சீதாவிடம்,
"அத்தை நான் தெரியாம தான் கேட்கிறேன் நீங்க மாமாவ லவ் பண்ணி
தானே கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க, நீங்க ஆசைப்பட்ட அவரோட வாழ உங்களுக்கு
உரிமை இருக்குன்னா அது உங்க பொண்ணுக்கும் இருக்கு தானே..? அப்படி
தானே எல்லா அம்மாவும் நினைப்பாங்க ஆனா எப்படி நீங்களே அவளோட உரிமையை மறுத்து
இப்படி கட்டாயபடுத்துவீங்க..?”
“இது சரின்னு நினைக்கிறீங்களா அத்தை?! ப்ரீஸீ சின்ன பொண்ணு.
உங்க மிரட்டலுக்கு பயந்து ஒத்துகிட்டு இருந்திருக்கலாம் ஆனா யார் என்ன சொல்லி
இருந்தாலும் நீங்க எப்படி இதுக்கு ஒத்துக்கலாம்?" என்றவனை நன்றி பெருக்கோடு
பார்த்த சீதாவின் மனம் நெகிழ கண்களை மூடி அவசரமாக கடவுளுக்கும் கணவருக்கும் தன்
நன்றியை தெரிவித்தார்.
"அத்தை எமோஷன்ல பேசி இருக்கலாம்
தாத்தாவும் சொல்லியிருக்கலாம் ஆனா உனக்கு என்னை தெரியாதா..? எதுக்காக
இவளை இப்படி அலங்காரம் பண்ணி நிறுத்தியிருக்க..?" என்று
சுஜியையும் விட்டு வைக்காமல் உதய் பிடித்து கத்த,
"அண்ணா அக்கா இல்ல" என்ற நிவி
அவசரமாக வாயை விட்டவள் சட்டென்று சுஜியின் சைகையில் மௌனித்து விட்டாள்.
"என்ன இல்ல நிவி" இன்று புருவத்தை
கீறியவாறு கேட்டவனிடம் "ஒன்னும் இல்லன்னா" என்றாள்.
"அக்கா இல்லனா வேற யார் இவளை ரெடி
பண்ணினது..?" என்று அழுத்தமாக நிவியை பார்க்க அவள்
பார்வையோ தன் போக்கில் இளந்தளிர் மீது படிந்தது.
அப்போது தான் உதய்யும் அவளை பார்க்க, திருமண
புடவையோடு இருந்தவளின் காதிலும் கழுத்திலும் எந்த நகைகளும் இல்லாதிருப்பதை
கண்டவனின் விழிகள் அவசரமாக அவள் கைகளில் படிந்த அடுத்த நொடி உதய்யின் விழிகள்
அப்பட்டமாய் வலியை காண்பித்தது.
அவன் அணிவித்த வளையல்கள் தென்றலுக்கு இடமாறி இருப்பதை
கண்டவனுக்கு தான் கொண்ட வலி கோபமாக உருமாற வேகமாக அவளை நெருங்கியவன்,
"உனக்கு என்ன தைரியம் இருந்தா நான் போட்ட
வளையலை உன் தங்கச்சிக்கு மாத்தியிருப்ப..? அவளை நீயே இப்படி
கொண்டு வந்து நிறுத்தியிருக்கியே எப்படிடி, எப்படி உன்னால
முடிஞ்சது..? கல்நெஞ்சக்காரி! யார் சொல்லி இருந்தாலும் நீ
இதை செய்யலாமா..? சொல்லுடி" என்று அவளை பிடித்து
உலுக்கியவன்,
"அப்போ உனக்கு நான் ஒண்ணுமே இல்லையா..?
அவ்ளோ ஈஸீயா போயிட்டேனா..?" என்று
நெஞ்சம் வெதும்ப கேட்க மெளனமாக அவனை பார்த்த தளிர்,
"ஸாரி!! இதை தவிர எனக்கு வேற எதுவும்
சொல்ல தெரியலை.. இந்த ஒரு வார்த்தை எதையும் மாத்திடாதுன்னு புரியுது ஆனா எங்களால
முடிஞ்சது இது மட்டுமே.." என்றவளின் பார்வை தென்றலை தழுவுவதை கண்டவனின் கரம்
வேகமாக உயர்ந்து விட்டது.
சடுதியில் நிதானித்த உதய் கரத்தை இறக்கியவாறு, "வேண்டாம் தளிர் ஏற்கனவே கொதிச்சு போயிருக்கேன் என் கோபத்தை கிளறாத
அப்புறம் தாங்க மாட்ட..!! வளையலை மாத்தலாம் நகை, மாலையை
மாத்தலாம் ஆனா என்னைக்கு இருந்தாலும் நீதான் என் பொண்டாட்டி! உன்னால முடிஞ்சா
மாத்தி காட்டுடி பார்க்கலாம்" என்று அடிக்குரலில் சீறியவன் வழக்கத்திற்கு
மாறான அவள் அழுத்தத்தில் மேலும் வாதிட விரும்பாது விலகி மற்றவர்களிடம்,
"எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்றேன் நல்லா
புரிஞ்சுக்கோங்க" என்று தொடங்கிட உதய்யின் விழிகள் வைஷுவை அவசரமாக தேடியது.
"வைஷு எங்கக்கா..?" என்றவனிடம் அவள் அறையில் இருப்பதை சொல்லவும், அழுது
கொண்டிருந்த வைஷுவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு வெளியில் வந்தவன் மறுக்கையில்
தென்றலை பிடித்துக் கொண்டு..,
"எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க, இவங்க
ரெண்டு பேரும் எனக்கு ஒன்னு தான்! என்ன ஒன்னு இது பத்து வயசு குழந்தைனா இது இருபது
வயசு குழந்தை..! நான் இவங்க இரண்டு பேரையும் வேறயா பார்த்ததில்லை.." என்று
சொல்ல நிவி சுஜியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி..
பின்னே உதய்யின் முதல் குழந்தையே வைஷு தானே..! தாய்மாமனாக
அவளை முதல்முறை கையில் ஏந்தியவன் அவளை ஒருபோதும் எந்த சூழலிலும் தனித்து
விட்டதில்லை..
சரவணனுக்கு முன்பாக வைஷுவிற்காக சென்று நின்றுவிடுவான்.
இப்போது தென்றலுக்கும் வைஷுவிற்கும் அவனிடம் எந்த பேதமும் இல்லை என்றதில் ராகவன்
சரவணனுக்குமே ஆசுவாச மூச்சோடு புன்னகையும் இணைந்திருந்தது.
"எப்படி நீங்க இவளை கொண்டு வந்து தளிர் இடத்தில்
நிறுத்துவீங்க..?" என்றவன் பெரியவர்களின் முகத்தில்
இருந்த திகைப்பை கண்டு,
"ஒத்துக்கறேன் கண்டிப்பா நாம்
எதிர்பார்க்காத பிரச்சினை வந்துடுச்சு இல்லன்னு சொல்லல ஆனா ஒரு விஷயம்
புரிஞ்சுக்கோங்க இதுக்கு தீர்வு தென்றல் கிடையாது" என்றவனுக்கு தளிர் குறித்த
தன் முடிவை சொல்லி இன்னுமே அண்ணாமலையை எதிர்க்க வேண்டாம் என்று முடிவு செய்தவன்,
"நீ போய் முதல்ல இந்த வேஷத்தை கலைச்சுட்டு
வா ப்ரீஸீ" என்று தென்றலிடம் சொல்லிவிட்டு தளிரை பார்க்க அவன் ஆற்றாமை
இன்னுமே அதிகரித்தது.
தலை கோதியவாறு அவளிடம் இருந்து பார்வையை திருப்பியவன் உடனே
சீதாவிடம் சென்று, "அத்தை நான் உங்க பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்"
என்றான்.
சீதா திகைப்புடன் என்ன பதில் சொல்வது என்று புரியாமல்
நிற்கவும்,
"இந்நேரத்துக்கு என் பொண்டாட்டியா இருக்க வேண்டியவ இன்னமும்
உங்க பெண்ணா இருக்கிறதால தான் உங்ககிட்ட பெர்மிஷன் கேட்கிறேன் கொஞ்சம்
புரிஞ்சுக்கோங்க" என்று உதய் சொல்ல மறுபுறமிருந்த அண்ணாமலைக்கு தன்னை
மறுத்து தன் முடிவை எதிர்த்து உதயாதித்தன் பேசியதை அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள
முடியவில்லை.
அவன் மறுப்பை எதிர்பாராத பெரியவரின் நெஞ்சில் மெல்ல ஊடுருவிய
வலி உதயாதித்தன் தென்றலை மறுத்ததில் வலுவாக அவரை தாக்கியதில் நிலைகுலைந்து தரையில்
விழுந்திருந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் அண்ணாமலையை தூக்கிக்கொண்டு உதய்
வெளியேற மற்றவர்களும் அவனை தொடர்ந்திருந்தனர்.
மண்டபமே வெறிச்சோடி போயிருக்க வீடு
வந்து சேர்ந்த சீதா மற்றும் மகள்களை தெரு முழுக்க நின்றிருந்தவர்களின் பார்வை
துளைத்து கொண்டிருந்தது.
Comments
Post a Comment