“இவங்க என் அத்தை பசங்க தளிர் உங்களை எல்லாம்
பார்க்கணும்ன்னு என்னோடவே வந்துட்டாங்க” என்றதும் புன்னகையோடு தன்னை அறிமுகபடுத்தி
கொண்ட தளிரை சாந்தினிக்கு மிகவும் பிடித்துவிட்டது.
அவளோடு பேசிக்கொண்டே கோவிலுக்குள் செல்ல சரத் இயல்பு போல
தளிர் அருகே நெருக்கமாக நடந்து வந்தான்..
அவர்களுக்கு முன்னே சென்ற குமார் கோவிலுக்குள்
நுழைந்தவர்களின் ஒவ்வொரு அசைவையும் விடாமல் வீடியோ எடுத்து கொண்டு சென்றான்., செல்லும்
இடங்களில் எல்லாம் வீடியோ, புகைப்படம் மற்றும் செல்பி
எடுப்பது அவர்களிடையே வழக்கமான ஒன்று என்பதால் அதை கண்டுகொள்ளாத தளிரும்
புன்னகையோடு அனைவருடனும் பேசிக்கொண்டு வந்தாள்.
“சுனில் இங்க பூமாலை கிடைக்குமா..?” என்றான் தீனா.
“கிடைக்கும் மாமா..”
“சரி அப்போ டிரைவரோடு போயிட்டு இரண்டு பூமாலை
மட்டும் வாங்கிட்டு வந்துடுறியா..?”
“இரண்டு எதுக்கு மாமா..?”
“ப்ச் விநாயகருக்கு டா.. பேசிட்டே இருக்காம
சீக்கிரம் போய் வாங்கிட்டு வா” என்று அவனை அனுப்பிவிட்டு உள்ளே வர அங்கே தளிரும்
சாந்தினியும் உற்சாகமாக உரையாடிக்கொண்டிருந்தனர்.
“அக்கா இந்த புடவையில நீங்க ரொம்ப அழகா
இருக்கீங்கக்கா.., இன்னும் இரண்டு அக்காங்க கூட வருவாங்கன்னு
சொன்னார் நீங்க மட்டும் வந்திருக்கீங்க..?”
“ஒருத்தங்க வர முடியல சாந்தினி இன்னொரு
அக்காவும் அண்ணாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க”
“ஒஹ் சரி சரி..! ஆமாக்கா நீங்க எல்லாரும் சின்ன
வயசுல இருந்தே ஃப்ரெண்ட்ஸ்னு எங்க மாமா சொன்னாங்க அது உண்மையா..?”
“ஆமா..” என்றவள் கோவிலின் சிறப்பு குறித்து
கேட்க மகிழ்ச்சியோடு விவரித்தவள் இறுதியாக “எங்க அம்மாவை
தேடி வந்து வைக்ககூடிய எல்லா வேண்டுதலையும் தவறாம நடத்தி கொடுத்துடுவா.. அந்தளவு
சக்தி வாய்ந்தவ, இங்க வந்துட்டீங்கல்ல இனி உங்களுக்கு
எப்பவும் இவ துணையா இருப்பா பயப்படாம பரீட்சை எழுதுங்க” என்றவளோடு
சேர்ந்து கோவிலை சுற்றி பார்த்து கொண்டிருந்த தளிருக்கு லேசாக தலை சுற்றியது.
தலையை குலுக்கி தன்னை நிலைபடுத்தி கொண்டவள் மண்டபத்தில் அமர
உடன் அமர்ந்த சாந்தினி “அக்கா எங்க மாமா எல்லா டான்ஸ் ஷோலயும் வின்
பண்ணனும்னு நான் இங்க வந்து தான் வேண்டிப்பேன் தெரியுமா..?” என்ற
சாந்தினிக்கு மாமன் மகனான தீனா மீது சிறுவயது முதலே ஒரு பிடித்தம். அவன் நடனத்தின்
மீது பித்தாகி இருப்பவளுக்கு தான் பங்குகொள்ளும் ஒவ்வொரு போட்டியின் வீடியோவையும்
உடனுக்குடன் தீனா அனுப்பிவிடுவான்.
தளிரை கவனித்து கொண்டிருந்த அசோக் அவள் தடுமாறியதை
கண்டுகொண்டவன் இப்போது தலையை பிடித்தவாறு சாந்தினியின் பேச்சை
கேட்டுக்கொண்டிருந்தவள் இன்னும் சில நிமிடங்களில் முழுமயக்கத்திற்கு
சென்றுவிடுவாள் என்பது புரிபட உடனே சரத்திடம் சென்றான்.
“மச்சி என்னடா இது இந்த பொண்ணு இன்னும்
கிளம்பாம இருக்கு..? தளிருக்கு மயக்க மருந்து வேலை செய்ய
ஆரம்பிச்சுடுச்சு அவ முழுசா மயங்கறதுகுள்ள அனுப்பிவிடு இல்ல காரியமே கெட்டு
போயிடும்” என்றான் சரத் கோபமாக...
“இதோ மச்சி” என்றவன்
சாந்தினியை எப்படி இங்கிருந்து கிளப்புவது என்று சிலநொடிகள் யோசித்தவன், “ஹே இனிக்குட்டி இங்க வா” என்று அழைக்கவும் “மாமா கூப்பிடுறாங்க வந்துடுறேன் க்கா” என்றவள்
துள்ளிகுதித்துக்கொண்டு அவனிடம் சென்றாள்.
சாந்தினி செல்லவும் “என்ன பண்ணுது தளிர் ஏன்
ஒரு மாதிரி இருக்க..?” என்று அவளருகே அமர்ந்தான் அசோக்.
“எனக்கு லைட்டா தலை சுத்துது அசோக்.. கண்ணே
திறக்க முடியலை” என்று தளிர் சொல்ல..,
“உனக்கு தான் எப்பவும் ஏசி ஆகாதே ரொம்ப நேரம்
இருந்தா தலைவலி வந்துடும் அதனால கூட இருக்கும் இன்னும் கொஞ்ச நேரம் தான் பூஜை
பொருட்கள் வந்ததும் சாமி கும்பிட்டுட்டு கிளம்பிடலாம்” என்ற
அடுத்த சிலநிமிடங்களில் தளிர் முழுதாக மயங்கியிருந்தாள்.
“ஆமா இனி அத்தை எங்களுக்கு சமைச்சு வைக்கறேன்
சொன்னாங்களே என்னென்ன செய்திருக்காங்க?”
“மட்டன் பிரியாணி, காடை
வறுவல், மீன் குழம்பு அப்புறம் நாட்டுக்கோழி பிரட்டல்னு
எல்லாமே செய்திருக்காங்க மாமா..”
“ஆமா போனமுறை நான் வந்தப்போ நீ ஏதோ புதுசா ஒரு
சிக்கன் ரெஸிபி செய்திருந்தியே அதுவும் இருக்கா..?”
“அச்சோ இல்லையே மாமா இன்னைக்கு நான் எதுவுமே
சமைக்கலை எல்லாமே அம்மா தான் செய்தாங்க.. உங்களுக்கு அந்த டிஷ் பிடிச்சதா..?”
என்று கண்கள் மின்ன கேட்டவளிடம்,
“ஆமா இனிக்குட்டி இன்னைக்கு அதை
சமைச்சிருப்பன்னு நினைச்சேன் தளிர்கிட்ட கூட உன்னோட டிஷ் பற்றி
சொல்லியிருந்தேன் அவளும் சாப்பிட ஆசையா இருந்தா.., ப்ச்
இல்லன்னா பரவால்ல விடு” என்றவன் ஏமாற்ற குரலில் உருகி போனது சாந்தினிக்கு..
“அதுக்கென்ன மாமா நீங்க சாமி கும்பிட்டு சுத்தி
பார்த்துட்டு வரதுக்குள்ள நான் செய்து வச்சிடுறேன் நீங்க கவலை படாதீங்க..” என்றாள் புன்னகையோடு.
“அப்படியா முடியுமா..?”
“ஏன் முடியாம..? நிச்சயம்
முடியும் மாமா”
“அப்போ சரி” என்றவன் அங்கே தளிர் முழுதாக
மயங்கிவிட்டதை கண்டதும் பேச்சு கொடுத்தவாறு சாந்தினியை கோவிலின் வாசலுக்கு கொண்டு
வந்தவன் எதிரில் பூமாலைகளுடன் வந்த சுனிலிடம் பணம் கொடுத்து, “தேங்க்ஸ் டா.. இனி எங்களுக்காக சிக்கன் செய்யபோறா அவளுக்கு தேவையானது
வாங்கி கொடுத்து ஹெல்ப் பண்ணு சுனில் லேட் பண்ணிடாதீங்க எங்களுக்கு நேரமில்லை
சாப்பிட்டதும் கிளம்பிடனும்.. நாங்க பூஜை முடிச்சுட்டு கோவிலை பூட்டிட்டு வரோம்”
என்றதும் அவர்கள் இருவரும் வீட்டிற்கு கிளம்பினர்.
உள்ளே வந்த தீனா “மச்சி அவங்க கிளம்பிட்டாங்க நமக்கு நேரமில்ல
வேற யாராவது வரதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சுட்டு இங்கிருந்து கிளம்பிடனும்”
என்றவன் மயங்கி இருந்த தளிரை பிடித்து நிறுத்த அவள் பின்னே வந்த அசோக்கும் ஃபோட்டோவில்
அவள் மயங்கி இருப்பது தெரியாத வண்ணம் அவளை பின்னிருந்து பிடித்துக்கொள்ள
இப்போது தளிர் அருகே வந்து நின்ற சரத் அவள் கழுத்தில் மாலை அணிவிக்க அவள் தலையோ
கீழ் நோக்கி சாய்ந்திருந்தது.
ஃபோட்டோ எடுத்து கொண்டிருந்த டிரைவர், “ஸார்
அவங்க தலை கீழ இருக்கு இதை பார்த்தா யாருக்கும் சந்தேகம் வராதா..? ஏதாவது பண்ணுங்க” என்று சொல்ல.,
“குமார் எப்பவும் கல்யாணத்தப்போ பொண்ணு தலை
குனிஞ்சு தானே இருக்கும் அதனால எந்த சந்தேகமும் வராது நீ எடு..”
“இல்ல ஸார் நீங்களே பாருங்க” என்று சரத்திடம்
காண்பிக்கவும் உடனே தளிரை அங்கேயிருந்த தூணுக்கு முன்பாக நிற்க வைத்தவன் அவள்
தலையையும் அதற்கேற்ப சரி செய்துவிட்டு மற்றவர்களிடம் பிடித்து கொள்ள சொன்னான்
தீனாவும் அசோக்கும் அதே போல செய்ய மந்திரத்தை கைபேசியில் ஓடவிட்டு,
“குமார் நீ ஃபுல் சைஸ் எடுக்காத பாதி அளவு எடு
போதும் அதுதான் நாம கோவிலுக்குள்ள வந்தது எல்லாம் வீடியோவா இருக்கே” என்றவன்
மற்றொரு மாலையை தான் அணிந்துகொண்டு தாலியை எடுத்து தளிருக்கு கட்டவும் குமார் அதை
அழகாக படம் பிடித்துக்கொண்டான்.
“அடுத்து என்ன மச்சி..?” என்று
தீனா கேட்கவும் அவளை தூக்கிகொண்ட சரத் வாயிலை நோக்கி நடந்தவாறே,
“ஏற்கனவே சொன்னது மாதிரி தான்.. அசோக்
அப்பாக்கு ஆக்சிடென்ட்னு போன் வந்தது அதனால எல்லாரும் கிளம்பறோம்னு சொல்லி நீ
கோவில் சாவியை உங்க அத்தை வீட்டுல கொடுத்துட்டு கிளம்பிவா நாங்க வைட் பண்றோம்”
என்றதும் சரத் சொன்னது போலவே கோவிலை பூட்டி அவசரமாக சாந்தினியின் வீட்டிற்கு
ஓடியவன் அவர்களிடம் கண்ணீரோடு நிலையை விளக்கிவிட்டு சுனிலோடு திரும்பினான்.
ஏற்கனவே தளிர் காரின் பின்சீட்டில் கிடத்தபட்டிருக்க அவளருகே
சரத் அமர்ந்திருந்தான். சுனிலை கண்டதும் மற்றவர்களிடம் சிறு பதட்டம்.. “டேய்
அமைதியா உட்காருங்க நான் பார்த்துக்குறேன்” என்றவன் சுனிலிடம் “தேங்க்ஸ் சுனில்
அத்தை கிட்ட நாங்க இன்னொரு நாள் வரோம்ன்னு சொல்லிடு” என்றிட தீனா காரில் ஏறி
அமர்ந்தான்.
“சரிண்ணா கண்டிப்பா வாங்க, அக்கா எங்க காணோம்..” என்றவன் விழிகள் காரினுள் துழாவவும்.,
“ஆக்சிடென்ட் விஷயம் கேட்டதுல இருந்து அழுதுட்டே
இருந்தவ தலைவலில அப்படியே தூங்கிட்டா.. டைமாச்சு எல்லாருக்கு சொல்லிடு சுனில்”
என்றவன் அவன் மேலும் பேசும் முன் கைகாட்டி கிளம்பிய அதேநேரம் மருத்துவமனையில்
இருந்து கட்டுபோட்டுக்கொண்டு லேகாவோடு மதிய உணவை முடித்த அஜய் திரையரங்கத்திற்குள்
நுழைந்திருந்தான்.
“தளிர் முழிக்கிறதுகுள்ள நாம ரெசார்ட்க்கு
போயிடனும் குமார்” என்று சரத் சொல்ல கார் வேகமாக சென்னைக்குள் நுழைந்து அதையும்
தாண்டி வெட்டிங் ஸ்யூட் புக் செய்யபட்டிருந்த மகாபலிபுரம்
நோக்கி புழுதி பறக்க சென்று கொண்டிருந்தது.
வாகனம் சென்னையை தாண்டி கிழக்கு கடற்கரை சாலைக்குள் பயணித்த
வேளை “ஐ சே ஸ்டாப் தி கார்” என்ற தளிரின் ஆக்ரோஷக் குரலும்.. “ப்ளீஸ் தளிர் சொன்னா
கேளு நாம இரண்டு பேரும் இப்போ ஹஸ்பண்ட் அன்ட் வைஃப்... நமக்காக வெட்டிங் சூட்
ரெடியா இருக்கு இன்னும் கொஞ்ச தூரம் தான் அமைதியா இரு” என்ற சரத்தை ஓங்கி
அறைந்தவள்,
“ராஸ்கல் இப்போ காரை நிறுத்தலை நான் கீழ
குதிச்சிடுவேன்” என்று தொண்ணூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் காரில் இருந்து தளிர்
குதித்துவிடுவேன் என்று சொல்லவும் பதறிப்போன சரத் “குமார் காரை எங்கயாவது ஓரமா
நிறுத்து” என்றதில் காரின் வேகம் சற்று குறைந்ததே தவிர
நிற்கவில்லை..
“சரத் நான் சொன்னதை செய்வேன்னு உங்களுக்கு
தெரியும் இப்போ கார் நிற்கலை..” என்று தளிர் கதவில் கை வைக்கவும் டிரைவர் தன்புறம்
இருந்த லாக்கை போட்டுவிட அவளால் கதவை திறக்க முடியவில்லை..,
“சரி சரி தளிர் நிறுத்துறோம் ஆனா நீ டோர்
திறந்துடாத” என்று சரத் ஒருபுறம் பதற.., “யோவ் டிரைவர் காரை
நிறுத்தி தொலை” என்ற தீனாவும் அசோக்கும் தளிரின் கையை பிடித்துக்கொண்டு,
“ப்ளீஸ் தளிர் அப்படி எதுவும் செய்திடாத..
உனக்கு இந்த கல்யாணம் அதிர்ச்சியா இருக்கும் ஆனா எங்களை நம்பு...” என்றவர்களின்
கையை உதறிய தளிர், “இப்போ காரை நிறுத்த போறீங்களா இல்லையா..?”
என்றவள் அப்போதுதான் செல்லும் வழியை கண்டு “எங்க போயிட்டு
இருக்கோம்..?” என்று ஆவேசமாக சீறியவள் முன்னிருந்த டிரைவரின்
சட்டையை பிடித்து இழுக்க கார் அவனிடம் தடுமாறியது.
“நாம இப்போ மகாபலிபுரம் போயிட்டு இருக்கோம்
இன்னும் கொஞ்ச நேரம் தான் அமைதியா இரு” என்றவர்களின் வார்த்தையை கேட்க தான் தளிர்
தயாராக இல்லை. இப்போது மட்டுமல்ல மயக்கம் தெளிந்ததில் இருந்தே இப்படி அவர்களுக்கு
ஒத்துழைக்க மறுக்கும் தளிரை எப்படி கட்டுபடுத்துவது என்று அவர்களுக்கும்
புரியவில்லை.
பின்னே சென்னைக்குள் நுழைந்து அஜய்யின் அழைப்பை ஏற்று சரத்
பேசிக்கொண்டிருக்கும் போதே தளிரிடம் லேசான அசைவுகள் தென்பட்டது.. அதை கண்டவன்
வண்டியை வேகமாக செலுத்த சொல்லவும் அடுத்த அரை மணிநேரத்தில் தளிருக்கு மயக்கம்
முழுதாக தெளிந்துவிட்டது.
முதலில் தனக்கு என்ன நேர்ந்தது என்று புரியாமல் இருந்தவள் தன்
கழுத்தில் கட்டப்பட்டிருந்த தாலியை கண்டதும் பதறிப்போக அவளருகே இருந்த சரத், “நமக்கு
கல்யாணம் ஆயிடுச்சு தளர்” என்றான்.
“என்ன உளறல் இது” என்று சீறியவள் முதல் வேலையாக
தன் கழுத்தில் கிடந்த தாலியை கழற்ற போக அவள் கையைப் பிடித்துக் கொண்ட சரத்,
“ப்ளீஸ் தளிர் அப்படி எதுவும் செய்திடாத நான் உன்னை
என் உயிருக்கு உயிரா நேசிக்கிறன். நீ இல்லாம சத்தியமா என்னால வாழவே முடியாது
தளிர்.., ஒரு நாள்கூட நான் ஸ்கூலுக்கு லீவு போடாம
வந்தது உனக்காக தான் என்னோட காதலை புரிய வைக்க எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு
தளிர்..!”
“உனக்கு லவ் பிடிக்காதுன்னு தான் நான் நேரே நம்ம
கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினேன்.. இப்போ நாம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப், உன்னை கண்டிப்பா ராணி மாதிரி வச்சுப்பேன்” என்று சரத் தன் காதல் புராணத்தை
பாடியவன் இறுதியில்,
“நீ இப்படி ஏதாவது செய்வன்னு தான் உனக்கு மயக்க
மருந்து கொடுத்து கல்யாணம் செய்ய வேண்டியதா போச்சு..” என்று சொல்ல தளிரோ
ஆவேசத்தோடு அவனை ஓங்கி அறைந்து காரை நிறுத்துமாறு சொல்லியவள் அவனுக்கு உடந்தையாக
இருந்த இருவரையும் அருவெறுப்போடு பார்த்த பார்வையில் மிரண்டவர்கள் எச்சில் கூட்டி
விழுங்கியவாறே,
“தளிர் ஒரு ஃப்ரெண்டா நீ நல்லா இருக்கணும்னு
நாங்க உனக்கு நல்லது தான் செய்திருக்கோம். சரத் உன்னை ரொம்ப லவ் பண்றான் நீ இல்லாம
அவனுக்கு வாழ்க்கையே கிடையாது அவன் ரொம்ப நல்லவன்... ஆனா அவசரப்படாத தளிர் நிச்சயம்
சரத் உனக்கு நல்ல ஹஸ்பன்ட்டா இருப்பான்..” என்று அவர்கள் சொல்லிக்கொண்டு
இருக்கும்போதே,
“எது எனக்கே தெரியாம கட்டின இந்த கயிறுக்கு
பேர் தாலி, இவன் எனக்கு ஹஸ்பண்ட்டா..?” என்று சிவந்த விழிகளோடு சரத்தை பார்த்தவள் அதுநேரம் வரை தனக்கு
இழைக்கப்பட்ட அநீதியிலும் நண்பர்களாலேயே தான் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சியிலும்
இருந்தவள் இப்போது ஆவேசத்தோடு கழுத்தில் இருந்த கயிறை கழற்றி சரத் முகத்திலேயே
விட்டெறிந்தாள்.
“தளிர் என்ன பண்ற..?” என்று
மற்றவர்கள் பதற சரத்தோ தன் முகத்தில் விழுந்த தாலியையும்
தளிரையும் மாறி மாறி பார்த்த அதேவேளை முக்கிய சாலையில் இருந்து ஒடித்து கிளை
சாலை வழியாக வாகனத்தை செலுத்தய குமார் ஆள் அரவமற்ற இடத்தில் காரை நிறுத்தினான்.
ஆவேசமாக கீழே இறங்கிய தளிர் “ச்சை நீங்க எல்லாம் ப்ரெண்ட்ஸ்ஸா
டா.. இவன் செய்த அய்யோகியதனத்துகக்கு நீங்க மட்டும் தான் கூட்டா இல்ல
அஜய் லேகாவுமா..?” என்றவளிடம் அத்தனை ரௌத்திரம்.
“தளிர் நீ கோபப்படற அளவு எதுவும் நடந்துடல,
ஏன் இப்படி பேசற அஜய் லேகாவுக்கு எதுவும் தெரியாது.. நீ கோபபடாம
சரத்தை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு” என்று அசோக் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே லேசாக
தூறல் ஆரம்பித்து விட்டது.
Comments
Post a Comment