வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 6.2

 


மகாலட்சுமி அறைக்குள் செல்வதை கண்டு, “எங்கே கிளம்பிட்ட? மீதம் இருக்கிற சாப்பாட்டை எடுத்து வச்சுட்டு பாத்திரத்தை கழுவி வை..” என்று இந்திரா அதிகாரமாக சொல்ல ஒருநொடி ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு கண்களை மூடித் திறந்தாள் மகாலட்சுமி. 


“ஏய், உன்கிட்ட தான்டி சொல்றேன், காது கேட்கலை..” என்றார் மீண்டும் 


“அத்தை எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு கொஞ்ச நேரமாவது படுத்து எந்திரிச்சா தான் எந்த ஒரு வேலையும் செய்ய முடியும்..” என்று மெல்லிய குரலில் தன்மையாகவே சொன்னாள். 


“ஆளுங்க எடுத்துட்டு போக வந்துடுவாங்க, நீ தூங்கி எழுந்து ஆடி அசைஞ்சு வந்து செஞ்சு கொடுக்குறதுக்குள்ள விடிஞ்சுடும் அதனால செஞ்சு முடிச்சிட்டு போய் படு..” என்றார். 


அப்போது தான் அங்கே வந்த சிவபாலன் சூழலை உணர்ந்து “என்னமா?” என்று மருமகளிடம் விசாரித்தார். 


“மாமா ஹோட்டல்ல இருந்து வந்த பாத்திரத்தை கழுவி கொடுக்க சொன்னாங்க. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு தூங்கி எந்திரிச்சு செய்றேன்னு சொன்னேன் ஆனா அத்தை இப்பவே செய்ய சொல்றாங்க..” என்றதில் அதிர்ந்து போனார். 


“ஹோட்டல்ல இருந்து வந்த பாத்திரத்தையா சொல்ற?” 


“ஆமா மாமா” என்றவளுக்கு அவர் ஏன் அதிர்ந்தார் என்று புரியவில்லை. 


“அது எல்லாமே பெரிய பெரிய பாத்திரம். ரொம்ப கனமானது வேற, அதை எப்படி நீ கழுவ முடியும்? நீ போ மா.. இன்னைக்கெல்லாம் ஹாஸ்பிட்டல், விசேஷம்னு எவ்ளோ களைப்பா இருக்கும். போ போய் தூங்கி ரெஸ்ட் எடு..” என்றார்.


“என்ன பேசுறீங்க நீங்க? அவ தூங்கிட்டா அதை எல்லாம் யாரு கழுவி வைப்பாங்க?” 


“இந்திரா வீட்டு பாத்திரம் வேற ஹோட்டல் பாத்திரம் வேற. நீயும் லட்சுமியும் மாடிக்கு வராததால உங்களுக்கு தெரியல..” என்றவர் மனைவி அருகில் அமர்ந்திருந்த மகளிடம் “எவ்ளோ பெரிய பாத்திரம் வந்துச்சுன்னு உனக்கு தெரியாதா?” என்றார் சற்று உரத்த குரலில்.


“அமைதியா இருக்கிறவளை எதுக்கு கத்தறீங்க?”


“நீ தான் புரியாம பேசுற இந்திரா ஆனா அந்த பாத்திரத்தை எல்லாம் மஹா கழுவ கூடாதுன்னு மேல வந்து பார்த்த உன் மகளுக்கு தெரியாதா? அப்படி இருந்தும் குத்துக்கல்லாட்டம் உட்காந்து பாத்துட்டு இருக்காளே அதான் கேட்டேன்..”

 

“மாமியார் மருமகள் ஏதோ பேசுறாங்க, அதுல எதுக்கு நான் தலையிடனும்? அப்புறம் நான் இங்க வந்ததே பிரச்சனை பண்ண தான்னு சொல்லுவீங்க எனக்கு எதுக்கு பொல்லாப்பு? அதுதான் அமைதியா இருந்தேன்..” என்றாள் விட்டேர்த்தியாக.  


“இல்லைனா மட்டும் நீ பிரச்சனை பண்ணாம இருந்திட போறியா என்ன? அதுதான் நலங்கு வைக்காம ஒதுங்கி நின்னதுலயே பார்த்தேனே?! என்று கடுமையான குரலில் சொன்னவர்,


“நீ எதுவும் சொல்ல வேண்டாம் ஆனா செய்யலாம் இல்லையா?!” என்றார் அதே கடுமையோடு.


“நானா? நான் என்ன செய்யணும்?”


“உன் அம்மா லட்சுமியை பாத்திரத்தை கழுவ  சொன்னப்போ கனமானதை நீ கழுவுறேன்னு சொல்லி இருக்கலாமே..” என்றதும் தான் தாமதம்,  


“என்னது என் மக பாத்திரம் கழுவணுமா?” என்றார் இந்திரா அதிருப்தியான குரலில்.


“ஏன் இப்படி ஒரு கேள்வி? கல்யாணத்துக்கு முன்னாடி உன் மக இதெல்லாம் செஞ்சது கிடையாதா? மகா இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னாடியும் செஞ்சிருக்கா தானே?! இப்ப மட்டும் என்ன?” 


“அதை தாங்க நானும் கேட்கிறேன், இத்தனை வருஷமா தான் என் மக அங்கேயும் இங்கேயும் அல்லாடி இல்லாத கஷ்டமெல்லாம் பட்டா.. இப்போ வீட்டுக்கு ஒரு மருமகள் வந்த பிறகாவது அவ நிம்மதியா ரெண்டு நாள் தங்கி சீராடி சந்தோஷமா இருந்துட்டு போவான்னு பார்த்தா நீங்க வேலை வைக்கிறீங்க..” 


“எல்லா சூழ்நிலையும் ஒரே மாதிரி கிடையாது இந்திரா. ரெண்டு குழந்தைகளை சுமந்துட்டு இருக்குற பிள்ளைக்கு இப்ப முடியலன்னு சொன்ன பிறகும் செய்ய சொல்றது ரொம்ப தப்பு..”


“உன்னால முடியாது, உன்னை நான் செய்ய சொல்லலை ஒன்னு லட்சுமி ரெஸ்ட் எடுத்து வர வரைக்கும் பொறுமையா இருக்கணும் இல்லை அவசரம் எனும் போது வீட்டில் இருக்கிற வனிதா செஞ்சா என்ன தப்பு?” என்ற சிவபாலனின் பேச்சு புரிந்தாலும் அதை அத்தனை எளிதாக  இந்திரா ஏற்றுக் கொண்டு விடுவாரா என்ன?!


“மாமா நான் போய் படுக்கட்டுமா? ரொம்ப அசதியா இருக்கு..” என்றாள் மகா நிற்க முடியாது அவஸ்தையோடு இடுப்பை பிடித்த படி.


“என்ன பொண்ணுமா நீ?! இன்னுமா போய் படுக்காம இருக்க? இதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்டுட்டு இருப்பியா போ, போய் நல்லா தூங்கி எழு.. அப்போதான் குழந்தைகளோட வளர்ச்சி ஆரோக்கியமா இருக்கும்னு சொல்லுவாங்க…”

“சரி மாமா..” என்றவள் அறைக்கு செல்ல “ஒரு நிமிஷம்..” என்று தடுத்த வனிதா.,


“மருமகளை மட்டும் ஒரு வார்த்தை சொல்ல விடாம அவளுக்காக கொடி பிடிச்சிட்டு வரீங்களே இதே என் பொண்ணுக்கு நெய் தோசை சுட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொன்னதுக்கு அவளை ஒரு வார்த்தை கண்டிச்சு இருப்பீங்களா?”


“இப்போ இதை கண்டிப்பா பேசியே ஆகணுமா? வாயை மூடு வனிதா” என்றவர், “நீ போய் படுமா..” என்றிட மகா அறைக்கு கிளம்பினாள். 


“எதுக்கு இப்போ அவ வாயை அடைக்க பார்க்கறீங்க? என் பேத்தி என்ன அவ அப்பன் வீட்டு, சொத்து நகையையா கேட்டுட்டா! ஒரு தோசை தானே?! அது கூட முடியாதுன்னு சொன்னா பெத்த வயிறு எந்தளவு எரியும்னு யோசிக்க மாட்டீங்களா?”


“பிள்ளையை இங்க விட்டுட்டு தினம் தினம் என் பொண்ணு எவ்ளோ துடிப்பான்னு புரிஞ்சுக்காம பேசறீங்களே?!” என்றிட அதற்கு மேலும் அங்கிருக்க முடியாதளவு கால்கள் கடுத்தது மகாலட்சுமிக்கு.


‘என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள்’ என்பது போல அவள் அறைக்குள் செல்ல, “ஏய் நில்லுடி, ஒரு கரண்டி மாவு என்ன டேக்ஸா அளவுக்கு கனமாவா இருக்க போகுது?! அதை கூட உன்னால எடுத்து ஊத்தி குடுக்க முடியாதா?” என்று வழி மறித்து ஆவேசமாக கேட்டாள் வனிதா. 


“அண்ணி நான் எதையும் செய்ய முடியாதுன்னு சொல்லலை, எனக்கு நெய் ஸ்மெல் ஆகலை அதனால சாதாரண ரோஸ்ட் போட்டு கொடுக்கிறேன்னு சொன்னேன் பட் சிந்து தான் நான் சொன்னதை புரிஞ்சுக்காம அடம் பிடிச்சா..”


“அப்போ என் மகளை அடங்காபிடாரின்னு சொல்றியா?”


“நான் அப்படி சொல்லலை அண்ணி ஆனா அவளோட இடத்துல என் மகள் இருந்திருந்தா என்னோட கஷ்டத்தை புரிஞ்சுக்கவா என்னை தொந்தரவு பண்ண மாட்டான்னு சொல்றேன்..”


“அப்படியே நெய் ரோஸ்ட் சாப்பிடனும்னு ஆசைப்பட்டாலும் அவங்க அப்பாவோட போய் வெளியில சாப்பிட்டு வருவா இப்படி அடமா நிற்க மாட்டா, அடுத்தவங்கள புரிஞ்சுக்காம பேச மாட்டா..” என்றாள் அடக்கப்பட்ட கோபத்தோடு.


“அப்போ என் பொண்ணு யாரையும் புரிஞ்சுக்க மாட்டான்னு சொல்றியா? பார்த்தியா ம்மா, இன்னும் பொறக்காத இவ பொண்ணு நல்லவளாம் என் பொண்ணு கெட்டவளாம் அடங்காப்பிடாரியாம்..”


“நான் அப்படி சொல்லலை அண்ணி, சிந்து ஒன்னும் நாலு வயசு குழந்தை இல்லை பதினாலு வயசு பொண்ணு. அவளுக்கா சில விஷயம் புரிஞ்சுக்க முடியலைனாலும் எடுத்து சொன்னா புரிஞ்சுக்கிற வயசு தான். அப்படியிருந்தும் அடமா இருக்கா..”


“இது ரொம்ப தப்பு. என் பொண்ணு இப்படி இருந்தா நிச்சயமா நான் கண்டிப்பேன் அந்த குணத்தை மாற்றுவேன்னு ஸோ அவ இப்படி அடமா இருக்க மாட்டான்னு சொல்றேன்…”


“பாருங்க ப்பா, என்னமோ நான் என் பொண்ணை ஒழுங்கா வளர்க்காம கெடுத்து குட்டி சுவராக்கி இருக்கிற மாதிரி அவ பேசறதை. ஏய், எப்படி புள்ளையை வளர்க்கனும்னு நீ எனக்கு சொல்லாத..” என்று சீறியவள், 


“போதும் சாமி போதும் என் பொண்ண இங்க இருக்க வச்சதுக்கு உங்களால என்ன பண்ண முடியுமோ அதை சிறப்பா பண்ணிட்டீங்க.. இனியும் அவளை இங்க இருக்க விட்டா எங்களை மானத்தோடு வாழ விடமாட்டா போல..” என்று கண்ணீர் சிந்திய அதே நேரம் வெளியில் சென்றிருந்த ரிஷி வீட்டிற்கு வந்திருந்தான். 


“என்னாச்சு? எதுக்கு க்கா இப்போ அழுதுட்டு இருக்க?” என்றான் தன்னை எதிர் கொண்டவளிடம்.


“அதை ஏன்டா கேட்கிற வரதா, உன் பொண்டாட்டி பேசற பேச்சு ரொம்ப மோசமா இருக்கு. என் பொண்ணையும் பேத்தியையும் அசிங்க படுத்தினவ என்னை என்னைக்கு அசிங்கபடுத்துவான்னு இருக்கு..” என்று ஒப்பாரி வைக்க மகாலட்சுமிக்கு திக்கென்றானது.


எரிகிற தீயில் எண்ணெய் வார்க்கும் மாமியாரை ஆற்றாமையோடு பார்த்தவள், “நான் யாரையும் அசிங்கபடுத்தல ரிஷி, பட் நெய் ரோஸ்ட் ப்ராப்ளமை இந்தளவு பெருசு படுத்துறப்போ நானும் என் தரப்பை சொல்லி தானே ஆகணும்..”


“அதை இவங்க தப்பா புரிஞ்சுகிட்டா நான் என்ன செய்ய?” என்று தன் தரப்பை சொல்ல அவன் அதை காது கொடுத்து கேட்டானா என்பது சந்தேகமே!


“ப்ச் என்னாச்சுன்னு முழுசா சொல்லுங்க?” என்றான் மகா புறம் திரும்பாமல் பொதுவாக. 


வனிதா ஆரம்பிக்கவும், “நானே சொல்றேன்..” என்ற சிவபாலன் நடந்ததை சொல்லி முடிக்க, “இன்னுமா இந்த ரோஸ்ட் பிரச்சனை முடியலை?! ஏன்க்கா தேவையில்லாம நீயும் இந்த சின்ன விஷயத்தை பெருசு பண்ற?” என்றான் சலிப்போடு.


“எதுடா சின்ன விஷயம்? என் பொண்ணு ஒரு வாய் சாப்பாட்டுக்கு நேத்து வந்த இவ கிட்ட பிச்சை எடுக்கணுமா?”


“அண்ணி, எதுக்கு இவ்ளோ பெரிய வார்த்தை பேசறீங்க? ஏன், இத்தனை நாள் சிந்துவுக்கு நான் எதுவும் செஞ்சு போடலையா?” என்று மகா சற்று உரத்த குரலில் கேட்டுவிட, 


“பார்த்தியா ரிஷி செஞ்சதை எப்படி சொல்லி காட்டுறான்னு. இத்தனை வருஷம் என் பொண்ணை பார்த்துகிட்ட நீங்க ஒரு வார்த்தை இப்படி பிரிச்சு பேசி இருப்பீங்களா? நேத்து வந்தவ என்ன பேச்சு பேசுறா பாரு..” என்றார் கண்ணீரோடு.


“இப்படித்தான் பெரியவங்க கிட்ட பேசுறதா?” என்று மனைவியிடம் நேரடியாகவே பல்லை கடித்து கொண்டு கேட்டான் ரிஷி.


“நான் ஒன்னும் தப்பா பேசிடலையே?! கொஞ்சமும் என் ஸிச்சுவேஷனை புரிஞ்சுக்காம பேசறாங்க அதை தான் எடுத்து சொன்னேன் அப்படி இருந்தும் பிச்சை எடுக்கிறான்னு சொல்றது சரியா?”


“எனக்கு எவ்ளோ டயர்டா இருந்தாலும் ஆஃபீஸ்ல இருந்து வந்த பிறகு அவ பாஸ்தா வேணும்னு கேட்டா பாஸ்தா, ஃப்ரைட் ரைஸ் கேட்டா ஃபிரைடு ரைஸ் நூடுல்ஸ் சில நேரம் சிக்கன் குழம்புன்னு சிந்துக்கு பிடிச்சதை  எவ்வளவு நேரமானாலும் அவளுக்காக செஞ்சு கொடுத்துட்டு தான் தூங்க போயிருக்கேன்..”

“அவ்ளோ செய்து கொடுத்த நான் ஒரு தோசை சுட்டுக் கொடுக்க மாட்டேனா என்ன? வெறும் ரோஸ்ட் போட்டு கொடுக்கிறேன்னு சொன்னேன் ஆனா அவ நெய் ரோஸ்ட் தான் வேணும்னு பிடிவாதமா நிக்கிறா..”

“உன்னை விடவா? என் பெண்ணை குறை சொல்ற நீ மட்டும் என்ன ஒழுங்கா?” என்றார் வனிதா ஆக்ரோஷமாய். 

“அக்கா! என்ன வார்த்தை பேசறன்னு யோசிச்சு பேசு?” என்று கண்டித்தான் ரிஷி. 

“பின்னே என்னடா?! என் பொண்ணு பிடிவாதம் பிடிக்கிறான்னு சொல்ற இவளும் தன் பிடிவாதம் விட்டு ஒரு நெய் ரோஸ்ட் தானேன்னு போட்டு கொடுத்தா என்ன?”

“நெய் வாசனை எனக்கு குடலை பெரட்டிக்கிட்டு வருது, வாந்தி எடுத்துட்டு தொண்டை எல்லாம் எரியுது, அடுத்து எது குடிச்சாலும் தொண்டையை அறுத்துக்கிட்டு தான் போகுது. வலி ஒரு பக்கம் சாப்பிட முடியாமல் பசி ஒரு பக்கம்னு என் அவஸ்தை எனக்கு தான் தெரியும்..”

“இது தெரியாம அவ தான் பேசறான்னு பார்த்தா இரண்டு குழந்தை பெற்ற நீங்களும் புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றது என்ன நியாயம்?” என்றாள் மாமியார் நாத்தனார் இருவரிடமும். 

“செய்யறதையும் செய்துட்டு பேசுறதை பார்த்தியாடா? இவ பேசுற பேச்சுக்கு என் பொண்ணு கிட்ட மன்னிப்பு கேட்டு ஆகணும்” என்று இந்திரா ஆரம்பிக்க, 

“மன்னிப்பா? நான் எதுக்கு கேட்கணும்?” என்று நிமிர்வுடனே மாமியாரை கேட்டாள் மகாலட்சுமி. 

“எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா என்னையே திரும்ப கேள்வி கேட்பா? எல்லாம் நீ கொடுக்கிற இடம் வரதா..”

“ம்மா, உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க.. அவளுக்கு நிஜமாவே இப்போ வாந்தி அதிகமா இருக்கு சில ஸ்மெல் ஆகலை டாக்டரும் அதை சேர்த்த வேண்டான்னு சொல்லி இருக்காங்க.. வாமிட் குறைய மாத்திரையும் கொடுத்து இருக்காங்க…”

“இருக்கட்டுமே! எல்லாம் சேர்ந்தது தான் மசக்கை. சும்மாவே பிள்ளை மடியில வந்து உட்காந்துக்காது.. பொம்பளையா பொறந்துட்டா இதெல்லாம் தாண்டி தான் வரணும். ஏன் என் மகளும் தான் இரண்டு பிரசவத்துக்கும் செத்து பிழைச்சா அதுக்காக வேலையை விட்டுட்டாளா இல்லை வீட்டுல சோறாக்காம போயிட்டாளா?”

“இதோ இவ பேசற மாதிரி அன்னைக்கு என் மக பேசி இருந்தா பொட்டியை கட்ட சொல்லி தொரத்தி விட்டிருப்பா இவ மாமியா. ஆனா இவளுக்கு எங்க அருமை தெரியாம மனசை நோகடிக்கிறா..

சின்ன பொண்ணு தானேன்னு ரெண்டு தோசையை ஊத்தி குடுத்துட்டு வாந்தி எடுத்து படுத்துக்க வேண்டியது தானே, யார் வேண்டான்னு சொன்னா?” என்று சொல்ல ரிஷிக்கு மண்டை வலிக்க தலையை பிடித்துக்கொண்டான். 

“நீ பேசறது கொஞ்சமும் சரியில்ல இந்திரா. அந்த காலம் மாதிரி இந்த காலம் இல்லை. வனிதா கஷ்டப்பட்டு வேலைக்கு போன போது நீ எத்தனை நாள் புலம்பி இருப்ப இப்போ லட்சுமியும் அதே நிலைமையில் தானே இருக்கா, அப்புறம் எப்படி உன்னால இந்த மாதிரி பேச முடியுது?..”

“என் மகளுக்கு என்ன இவளை மாதிரி ஏசி ரூம்ல காலாட்டிட்டு செய்யற வேலையா? இல்லை லிஃப்ட் தான் இருந்துச்சா? வெயில் மழைன்னு பார்க்காம மூணு மாடியும் ஏறி இறங்கி செஞ்சிருக்கா அவளும் இவளும் ஒண்ணா?”

“இங்கிருந்து என் மகன் சொகுசா கூட்டிட்டு போய் ட்ரெயின் ஏத்தி விடறான் அங்க அவ அண்ணன் கூட்டிட்டு போறான் ஆனா என் பொண்ணு ரெண்டு பஸ் மாறி கஷ்டப்பட்டு வேலைக்கு போயிருக்கா. இன்னொரு முறை என் பெண்ணை இவ கூட சேர்த்து வச்சு பேசாதீங்க…” என்றவர்,

“இப்போ நீ மன்னிப்பு கேட்க போறியா இல்லையாடி” என்றார் மருமகளிடம் நேரடியாக. 

“கண்டிப்பா முடியாது அத்தை.. இன்ஃபாக்ட் இவங்க பேசின பேச்சு தான் என்னை ரொம்பவே காயபடுத்தி இருக்கு. அப்போ அவங்க தான் என் கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்று மகா முடிக்கும் முன்னமே, 

“உனக்கு எவ்ளோ மெதப்பு இருந்தா என் பொண்ணை மன்னிப்பு கேட்க சொல்லுவ?” என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்தார் இந்திரா.

“பார்த்தீங்களா பா உங்க அருமை மருமக பேசறதை..” என்று தந்தையிடம் வனிதா குறை படிக்க, “சின்ன விஷயத்தை ஊதி பெருசு பண்ணினது நீ! அதுவும் லட்சுமி ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்ன பிறகும் இப்படி நிற்க வச்சு பேசறது தப்பு, அதுக்கே நீ மன்னிப்பு கேட்கணும்..” என்றார்.

“உங்க கிட்ட சொன்னேன் பாருங்க..” என்று தலையில் அடித்து கொண்டவள், “பாருடா தம்பி என்ன பேச்சு பேசுறான்னு...” என்று அங்கலாய்த்தவர்,

நம்ம வீட்டுக்குள்ள அடி எடுத்து வச்சு வருஷம் கூட ஆகலை அதுக்குள்ள செய்ததை சொல்லி காட்டி, என் பெண்ணை மட்டம் தட்டி, அம்மாவை எதிர்த்து பேசி இப்போ என்னை மன்னிப்பு கேட்க சொல்லின்னு உன் பொண்டாட்டி எல்லை மீறி போறா.. இதெல்லாம் என் வீட்டுக்காருக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?”

“என்னாகிடும்?” என்றான் ரிஷி சலிப்போடு. 

“உன் வீட்டு ஆளுங்க லட்சணம் இப்பவாவது தெரிஞ்சதே முதல்ல உறவை வெட்டி விடுன்னு சொல்லுவாரு. உன் பொண்டாட்டி எனக்கு அம்மா வீட்டு உறவே இல்லாம பண்ண பார்க்கிறா டா..” என்று உரத்த குரலில் அழ தொடங்கிவிட்டார். 

“இதுக்கு தான் ஆசை பட்டியாடி?” என்று இந்திரா மருமகளை முறைக்க சூழல் இன்னுமே மோசமாகி போனது.  

ரிஷி எத்தனை சமாதானப்படுத்தியும் வனிதாவின் அழுகை குறையாமல் போக இந்திராவும் கண்ணீரோடு முகத்தை தூக்கி வைத்தபடி ஹாலின் ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டார். 

“இதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம், நீ உள்ள போ மா” என்று சிவபாலன் சொல்ல, “மன்னிப்பு கேள்!!” என்றான் ரிஷிவரதன்.


Comments

Post a Comment

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.3