வாழ்க்கைத்துணை - 20.1
ரிஷி ‘மன்னிப்பு கேள்’ என்றதில் திகைத்து போனாள் மகாலட்சுமி
“உன்னை தான்டி சொல்றேன் மன்னிப்பு கேள்!!” என்றான் மீண்டும்.
“எதுக்கு? நான் எதுக்கு மன்னிப்பு கேட்கனும்? அந்த அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்?” என்றாள் விம்மும் மனதோடு கண்ணீரை கட்டுப்படுத்தி.
நிச்சயம் அவள் இதை எதிர்பார்க்கவில்லை.
இத்தனை நாட்கள் மாமியார் மருமகளுக்கு இடையில் சிறு சிறு உரசல் ஏற்பட்டாலும் இன்று போலவே இரண்டு பக்கமும் கேட்டுவிட்டு சரியான தீர்வை சொல்வானே தவிர்த்து இப்படி அவசரப்பட்டு பேச மாட்டான்.
ஒருவேளை இந்திரா கண்ணீர் ஆயுதத்தை கையில் எடுத்துவிட்டாள் அதன் பிறகு அவனுக்கு நியாயம் தர்மம் எதுவும் தெரியாது மொத்தமாக அன்னை பக்கமாக சாய்ந்து விடுவான்.
அதிலும் இந்திரா கை கால் உடைந்து படுத்த படுக்கையாகி இருப்பதற்கு அவள் தான் காரணம் என்று பல நேரம் குத்தி காண்பிக்கும் போதெல்லாம் அவரிடம் அவளுக்காக பேசியவன் தான்.
அதையும் மீறி அவள் மகாவை கடுமையாக பேசினால், “பெரியவங்க அப்படி தான் இருப்பாங்க சில விஷயம் அவங்களால புரிஞ்சுக்க முடியாது. எது நடந்தாலும் அதுக்கு நேரம், சாங்கியம். சம்பிரதாயம்னு எதையாவது பேசுவாங்க. நாம தான் புரிய வைக்கணும் இல்ல அனுசரிச்சு போகணும்..” என்று அவளை சமாதானப்படுத்தவும் தவற மாட்டான்.
“உன்னோட அம்மாவா இருந்தா விட்டுக் கொடுக்க மாட்டியா அப்படி நினைச்சுக்கோ.. வயசாகிறதால வலி தாங்க முடியாது.. ஒரே இடத்தில் இருக்கிற கஷ்டம் அவங்களை இப்படி பேச வைக்குது. அவங்க எந்திரிச்சு நடக்கிற வரைக்கும் இப்படி இருக்கும் அதுக்கப்புறம் ஏன் பேச போறாங்க? விட்டு தள்ளு..” என்பானே தவிர்த்து இந்திராவிடம் கூட மன்னிப்பு கேட்க சொன்னது கிடையாது.
அவன் விருப்பத்திற்கு மாறாக மகா செயல்படும் போது பேசாமல் ஒதுங்கி நின்று அவளை வதைப்பானே தவிர்த்து இப்படி ஒரு சூழல் என்றுமே அமைந்தது கிடையாது.
“காரணம் வேற தனியா சொல்லனுமா? மன்னிப்பு கேள்..” என்றான்.
“என்னால முடியாது ரிஷி…” என்றாள் உறுதியான குரலில்.
“மகாலட்சுமி” என்றவனின் அழுத்தத்தில் மகாவிற்கு இதயம் தடதடத்தாலும் தன் உறுதியில் திடமாக இருந்தாள்.
நிச்சயம் அவன் சொன்னதை செய்யாமல் போனால் அவர்களுக்கு இடையில் இருக்கும் விரிசல் இன்னுமே அதிகரிக்கும். அதேநேரம் தவறே செய்யாமல் எப்படி அவளால் மன்னிப்பு கேட்க முடியும்?!
தன் வீடு, தன் குடும்பம், தன் சொந்தம் என்று இத்தனை காலம் மாமியார் படுக்கையாகி போன ஆற்றாமையில் என்ன பேசினாலும் அதை பெரிது படுத்தாமல் அனுசரித்து சென்றவள் தான்.
ஆனால் இன்று அவளின் தன்மானத்தை அவர்கள் தீயிலிட முயற்சிப்பதை அவளால் அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இடுப்பை பிடித்தபடி நின்றிருந்தவளுக்கு நா வறண்டு போக, தண்ணீரை எடுத்து குடித்துவிட்டு மெல்ல அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கணவனை பார்த்தாள்.
“எதுக்குடா லட்சுமியை மன்னிப்பு கேட்க சொல்ற? சின்ன பொண்ணு பேச்சை கேட்டுகிட்டு சாதாரண தோசை விஷயத்தை ஊதி பெருசாக்கினது இவங்க.. இவங்களை மாதிரியே நீயும் இத்தனை நாளும் லட்சுமி செய்ததை மறந்துட்டு பேசாத..” என்று மகனை கண்டித்தார் சிவபாலன்.
ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன், “இருந்துட்டு போகட்டும், எனக்கு வீடு வீடா இருக்கணும். வெளியே இல்லாத நிம்மதி அட்லீஸ்ட் வீட்லயாவது எனக்கு இருக்கணும்னு நினைக்கிறேன்.. ஆனா இங்கயும் பிரச்சனைன்னா எப்படி?”
“எனக்கு எப்படியாவது இந்த பிரச்சனை முடியனும் அது மன்னிப்பு கேட்டா மட்டும் தான் தீரும் என்றால் கேட்கிறதுல தப்பில்லை..” என்றவனை கோபத்தோடு சிவபாலன் பார்க்க,
“என்ன பேசறீங்க நீங்க?! பிரச்சனை முடிய மன்னிப்பு கேட்டா ஆச்சா? அதுவும் தப்பே செய்யாம! அப்போ அந்த மன்னிப்பை நீங்களே உங்க அக்கா கிட்ட கேட்டு பிரச்னையை முடிங்க. நான் எந்த தப்பும் செய்யலை, என்னால கேட்க முடியாது..”
“அம்மாடி லட்சுமி நீ பொறுமையா பேசு..” என்றார் மூச்சு வாங்க பேசியவளை கண்டு..
“காலையில நான் விஷயத்தை சொன்ன போதே சிந்துவை கூப்பிட்டு அவளுக்கு நீங்க புரிய வச்சிருக்கணும். இனி இது போல அடம் பிடிக்கக் கூடாதுன்னு கண்டிச்சு இருக்கணும் ஆனா நீங்க அப்படி செய்யாம என்னை சமாதானப்படுத்துனீங்க” என்றவளை இடையிட்டு,
“என் பொண்ண கண்டிக்கணுமா? பாத்தியம்மா நல்லா இருக்குற குடும்பத்துல எப்படி சண்டை மூட்டி விடுறான்னு.. கண்டிக்கிற அளவுக்கு என் பொண்ணு என்ன தப்பு பண்ணிட்டா?”
“வீட்டு சூழலை புரிஞ்சுக்காம தான் நினைச்சது சாதிக்கணும்னு நினைக்கிறது என்ன மாதிரியான மனநிலை? அது கண்டிக்கக் கூடியது! அவளை நான் கண்டிச்சா நிச்சயம் அது இன்னொரு பிரச்சினைக்கு வழிவகுக்கும் அதுவே சிந்துவோட தாய்மாமா செய்யும் போது அப்படி தெரியாது அதனால தான் சொன்னேன்…”
“போதும் மகாலட்சுமி நிறைய பேசிட்ட..” என்றான் எப்போதும் போலவே இப்போதும் கோபத்தில் அவள் பெயரை நீட்டி முழக்கி.
அந்தக் குரலே அவளை அவனிடமிருந்து அந்நியப்படுத்தி இருந்தது.
“நீ பெரிய படிப்பாளியா இருக்கலாம் ஆனால் உன் புத்திசாலித்தனத்தை இங்க காட்டாத. இது குடும்பம் நாலையும் அனுசரிச்சு தான் ஆகணும். உன் புருஷன் விட பல வருஷம் மூத்தவ என் மக., அவளுக்கு தான் இந்த வீட்ல முதல் அதிகாரம்..”
“வீட்டு பொண்ணு கண்கலங்கி நின்னா குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க. வயித்துல பிள்ளைகளை வச்சுக்கிட்டு பெரியவங்களோட ஆசிர்வாதம் வாங்கணுமே தவிர்த்து இப்படி அவங்களோட கோபத்துக்கு ஆளாக கூடாது.. புரியுதா? ஒழுங்கா மன்னிப்பு கேள்..” என்றார் இந்திரா.
“நான் திரும்பவும் சொல்றேன் மன்னிப்பு கேட்கிற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணல த்தை.. அண்ணி தான் என் கிட்ட முகம் கொடுத்து கூட பேசாம போனாங்க அதை இப்போ வரை நான் பெருசு படுத்தவே இல்லை..”
“இப்படியாடி அம்மா கிட்ட பேசுவ?” என்று சிவந்த விழிகளோடு ரிஷி கேட்க,
“தப்பே செய்யாத என்னை மன்னிப்பு கேட்க சொன்னவங்க கிட்ட இப்பவும் மரியாதையோடு தான் பேசிட்டு இருக்கேன் ரிஷி. என்னோட நிலைமை ரெண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிற உங்க அக்காவுக்கு புரியாத போது உங்களால முடிஞ்சா புரிய வைங்க, ஆனா என்னை மன்னிப்பு கேட்க சொல்லாதீங்க..” என்றவள் அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் அறைக்கு சென்று விட்டாள்.
“பார்த்தியா டா உன்னையே எப்படி எடுத்தெறிஞ்சு பேசிட்டு போறான்னு..” என்று இந்திரா கண்ணீர் சிந்த,
“உன்னையே மதிக்காம போறா.. எல்லாம் நீ கொடுக்கிற இடம் ரிஷி!”
“அக்கா எனக்கு பொங்கல் பிடிக்கும்னு வாரம் மூணு முறையாவது செய்து கொடுப்பா ஆனா நெய் வாசனை ஆகாம போயிட்டதால இப்போ சில நாளா செய்யறதே கிடையாது. எனக்கு தேவைபட்டா நான் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன். சிந்துவுக்கும் வாங்கி கொடுக்கிறேன் ஆனா இப்படி பிரச்சனை வேண்டாம்..”
“ஏன்டா? என்னமோ நான் பிரச்சனை பண்ணவே பெங்களூர்ல இருந்து கிளம்பி வந்த மாதிரி பேசற. உங்களுக்கு எல்லாம் என் பொண்ணு இங்க இருக்குறது கஷ்டமா இருந்தா சொல்லிடுங்க இப்பவே எலி மருந்து வாங்கி கொடுத்து அவளை கொன்னுடுறேன்..” என்று சொல்ல மூவருமே பதறிப் போயினர்.
“என்னடி பேசுற எங்க இருந்து உனக்கு இப்படி எல்லாம் புத்தி போகுது.. நாங்க சொன்னோமா எங்க பேத்தி எங்களுக்கு பாரம்னு..” என்று கண்ணீரோடு இந்திரா மகளை அணைத்துக்கொண்டார்.
“நீ பேசறது இன்னும் உன் தம்பிக்கும் தம்பி பொண்டாட்டிக்கும் இடையில பிரச்சனையை தான் அதிகமாக்கும் வனிதா.. நான் சொல்லியே சிந்து கேட்கல என் வார்த்தைக்கு கூட மரியாதை இல்லை..”
“இப்படி அவளை யாருமே கண்டிச்சு நல்வழி படுத்தாம போனா என்னாகும்னு யோசிச்சு பாரு. நாளைக்கு கட்டி கொடுக்க போற வீட்டிலேயே உன் பொண்ணு இப்படியே இருந்து அவங்க உன் மகளை பேசினா அங்கேயும் வாழாத வா விஷம் வச்சு கொன்னுடுறேன்னு சொல்லுவியா? என்ன பேச்சு இதெல்லாம்?” என்று கண்டித்தார் சிவபாலன்.
அதேநேரம் மகாலட்சுமி தூங்குவதற்காக உள்ளே வந்து படுத்து கண்களை மூடிக்கொண்டு விட்டாலே தவிர்த்து சுத்தமாக உறக்கம் வரவில்லை.
மனம் எங்கும் கணவனின் பேச்சு, நடவடிக்கை, கோபம் அதோடு சேர்த்து மாமியார் நாத்தனாரின் குத்தல் பேச்சுக்களும் நிறைந்திருந்தது.
ஒரு குழந்தையாக இருந்திருந்தால் கூட அவளால் சமாளித்து இருக்க முடியுமோ என்னவோ ஆனால் இரட்டை குழந்தைகள் எனும் போது சுத்தமாக முடியவில்லை.
அவளுக்கு கிடைப்பதே வார விடுமுறை மட்டும் தான் அன்று மதியம் உறங்கி எழும் போது அத்தனை களைப்பும் நீங்கி புத்துணர்வோடு இருப்பாள்.
கருவுற்று இருக்கும் தாய்க்கு எந்த அழுத்தமும் கூடாது ஆனால் இங்கே அவளுக்கு மூச்சு முட்டியது. வலுக்கட்டாயமாக கண்களை இறுக மூடி உறங்க முயன்ற போதும் முடியவில்லை.
மனம் ஒரு நிலையில் இல்லாமல் போயிருக்க நிச்சயம் இது குழந்தையை தானே பாதிக்கும் இதற்கு தீர்வு காணாமல் விடக்கூடாது.. என்ற உறுதியோடு கண்ணயர்ந்தாள்.
“உன் பொண்ணு நடந்துக்குற விதத்தை பார்த்து ஒருவேளை அம்மா அப்பா வளர்த்திருந்தா வேற மாதிரி இருந்திருப்பாளோ நாம சரியா வளர்க்காமல் விட்டுட்டோமோன்னு.. எனக்கே பல நாள் தோனி இருக்கு…”
“மாசத்துக்கு ஒரு முறை இங்க வந்து தங்கும் போதாவது அவளுக்கு நல்ல புத்திமதி சொல்லக்கூடாதா? உன் அம்மா தான் செல்லம் கொடுத்து கெடுக்கிறா.. லட்சுமி எது சொன்னாலும் மதிக்கிறது கிடையாது. நீயாவது உன் பொண்ணுக்கு நல்லது சொல்லலாம் இல்லையா?”
“அவ எதுவும் சொல்லலைன்னு உங்களுக்கு தெரியுமா?” என்று மகளுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வந்தார் இந்திரா.
“அப்படி சொல்லி கொடுத்திருந்தா லட்சுமி முதல் முறை சொன்ன போதே அவ புரிஞ்சுகிட்டு இருந்திருக்கனுமே?! அப்படி இல்லாம போனது தானே பிரச்சனை. மாசமா இருக்கிற பொண்ணு இவ்ளோ வேலை செய்றதே பெருசு என் வார்த்தைக்காக ரோஸ்ட் போட்டுட்டு தான் போனா நான் நெய் ஊத்தி அவளுக்கு எடுத்து கொடுத்தேன்..”
“இப்போ சரி லட்சுமிக்கு பிள்ளைகள் பிறந்த பிறகு யார் ரோஸ்ட் போட்டு கொடுப்பா? ரோஸ்ட் இல்லன்னு சிந்து சாப்பிடாமலே பட்டினி கிடப்பாளா? இதெல்லாம் ஒரு அம்மாவா நீ தான் புரிய வைக்கணும். அதை விட்டுட்டு மன்னிப்பு கேளுன்னு அந்த பெண்ணை டார்ச்சர் பண்ண கூடாது..”
“என்னை பார்த்தா கொடுமைக்காரியா தெரியுதா? எதுக்கு டார்ச்சர்னு சொல்றீங்க? நீங்க ஒருத்தர் போதும் ப்பா என்னை கொடுமைக்காரியா காட்டுறதுக்கு..”
“முடியலை தூங்கனும்னு சொன்ன பெண்ணை நிற்க வச்சு இவ்ளோ நேரம் பேசினது நீதானே! அதான் நிதர்சனத்தை சொன்னேன். இந்த பேச்சை இதோட விடுங்க..” என்றவர்,
“உனக்கும் சேர்த்து தான் டா சொல்றேன். திரும்ப மருமக கிட்ட போய் இந்த பிரச்சனையை ஆரம்பிக்காதே.. உன் அம்மாவும் அக்காவும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டுட்டா போதும் மூளையை அடமானம் போட்டவனாட்டம் பேச ஆரம்பிச்சுடுவ..”
“லட்சுமி பக்கத்து நியாயம் எதுவுமே கண்ணுக்கு தெரியாம போயிடும்..” என்று மகனுக்கும் கொட்டு வைத்தவர் நண்பனை பார்த்துவிட்டு அப்படியே பேத்தியை அழைத்து வர கிளம்பினார்.
ரிஷி சமையலறைக்கு செல்வதை கண்ட இந்திரா, “எங்க வரதா போற? என்ன வேணும்?” என்றார்.
“பாத்திரத்தை மாற்றி கழுவி வைக்க போறேன் மா..”
“என்ன? நீ எதுக்கு தம்பி இதெல்லாம் செய்யற?”
“ப்ச் அவளால முடியாதப்போ வேற என்ன செய்ய? நீ போ க்கா நான் மாத்தி கொடுத்துக்கிறேன்..” என்றான்.
“நான் இருக்கிறப்போ நீ எதுக்கு இதெல்லாம் செய்துட்டு? போ, நான் கழுவி வைக்கிறேன்..” என்றவள் தம்பியை அனுப்பி விட்டு உணவுகளை மாற்ற தொடங்கினாள்.
மாலை ஐந்தரை மணி போல முகம் கழுவி வெளியில் வந்த மகாலட்சுமியை வரவேற்றது என்னவோ மயான அமைதியோடு இருந்த வீடு தான்.
சமையல் அறைக்கு சென்று பார்க்க மதியம் மீந்திருந்த சாதம் குழம்பு பொரியல் அனைத்தும் வேறு பாத்திரத்துக்கு மாற்றப்பட்டு இருந்தது.
ஆனால் எதுவும் சூடு செய்யப்படாமல் இருப்பதை கண்டவள் தானே அனைத்தையும் சூடு செய்து எடுத்து வைத்துவிட்டு டீ போட தொடங்கினாள்.
‘ரிஷி எங்கே இருக்கிறான்?’ என்று தெரியவில்லை அவள் அழைத்தாள் இப்போது இருக்கும் சூழலில் அழைப்பை துண்டித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை அதனால் மாமனாருக்கு அழைத்தாள்.
“எங்க மாமா இருக்கீங்க? வீட்ல யாருமே இல்ல..”
“நானும் ரிஷிம் வெளியே வந்திருக்கோம் லட்சுமி. உன் அத்தையும் வனிதாவும் மாடியில் இருப்பாங்க..”
“சரி மாமா..” என்று வைத்தவள் வெளியில் வந்து பார்க்க சிந்து படியில் இருந்து இறங்கி கொண்டு இருந்தாள்.
“நானே கூப்பிடுனும்னு இருந்தேன் சிந்து, டீ ரெடியா இருக்கு அத்தைக்கும் அண்ணிக்கும் கொண்டு போய் கொடுத்துட்டு வந்துரு..” என்றாள்.
“நான் எதுக்கு போகணும்? தேவை இருந்தா நீங்க கொண்டு போய் கொடுங்க…”
“சிந்து!!” என்று அதிர்வோடு மகா பார்க்க,
“இனிமேல் நீங்க என்கிட்ட ஒன்னும் பேச வேண்டாம் மாமி உங்ககிட்ட நான் எதுவும் கேட்க மாட்டேன் நீங்களும் என்கிட்ட எதுவும் கேட்க வேண்டாம்..” என்றாள் முகத்தில் அடித்தார் போல.
அதைக் கேட்ட மகாலட்சுமிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
இதற்கு மேல் அவள் பேசுவதை விட பேசாமல் இருப்பது அவள் உடல் நலனுக்கு நல்லது என்பதால் டீயை ஃபிளாஸ்க்கில் ஊற்றி வைத்தவள் மீண்டும் மாமனாருக்கு அழைத்தால்
“மாமா எங்க வந்துட்டு இருக்கீங்க அவருக்கு காஃபி போட்டுட்டுமா?”
“இன்னும் ரெண்டு நிமிஷத்துல வந்துடுவோம் போடு மா..” என்ற அதேநேரம் அவளுக்கு ஜெயசித்ராவிடம் இருந்து அழைப்பு.
பேசி முடித்துவிட்டு அழைப்பை துண்டிக்க, அவர்களும் உள்ளே நுழைந்தனர்.
“டூ மினிட்ஸ் காஃபி கலந்துட்டு வந்துடுறேன்..” என்று ரிஷியிடம் சொல்ல அவன் அதை காதில் வாங்காமல் அறைக்கு சென்று விட்டான்.
எதிர்பார்த்தது தான் என்பதால் ஒரு பெருமூச்சோடு ஃபிளாஸ்கில் இருந்து டீயை கப்பில் ஊற்றிக்கொண்டு வந்து மாமனாருக்கு டீ கொடுத்தவள்,
“அத்தையும் அண்ணியும் மாடியில இருக்காங்க, இதுல டீ வச்சுருக்கேன் மாமா..” என்று ஃபிளாஸ்க்கை கொண்டு வந்து வைக்கவும்,
“நீ உட்கார்ந்து பால் குடி மா. நான் அவங்களுக்கு கொடுக்கிறேன்..” என்று மாடிக்கு சென்றார்.
ரிஷிக்கு காஃபியும் தனக்கு பாலும் எடுத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு சென்றாள்.
“ரிஷி காஃபி” என்று அவனிடம் கொடுக்க அவளை தாண்டி சென்று கட்டிலில் அமர்ந்தான்.
அவன் முகமே அத்தனை சோர்ந்து போயிருந்தது. விழிகளில் களைப்பை மீறிய எதுவோ ஒன்று தென்பட மகாவிற்கு தவித்து போனது.
அவன் எதிரே அமர்ந்தவள், “என்னைக்கும் இல்லாம ஏன் உங்க முகம் இவ்ளோ டையார்ட்டா இருக்கு..” என்று கேட்க கண்களை மூடி அமர்ந்திருந்தவன் அப்படியே அவள் மடியில் தலை சாய்த்தான்.
மகாவால் நம்பவே முடியவில்லை. பொதுவாகவே அவளோடு இணக்கமாக இருந்தாலும் இப்படி ஊடலின் போது அவளின் அண்மையை அவன் என்றுமே எதிர்பார்த்தது இல்லை.
இப்போது திடீரென ஏன் இப்படி? என்ற கேள்வி எழுந்தாலும் அவள் கைகள் தன் போக்கில் அவன் தலைமுடியை கோதியது.
அதன் இதத்தில் அப்படியே கண்கள் மூடியவன் அடுத்த சில நொடிகளில் உறங்கியும் போனான்.
அவள் கரங்கள் தம் பணியை நிறுத்தாமல் செய்து கொண்டிருந்த போதும் அவன் உறக்கத்தின் அதன் ஆயுள் பதினைந்து நிமிடங்கள் தான். விழித்தவன் தான் இருக்கும் நிலை கண்டு அவளிடம் இருந்து விலகி அமர்ந்தான்.
ஒரு பெருமூச்சோடு எழுந்து சென்றவள் மீண்டும் காஃபி போட்டுக்கொண்டு வந்து, “என் மேல இருக்கிற கோபத்தை காஃபி மேல காண்பிக்காதீங்க… உங்களுக்கு இப்போ இது அவசியமா தேவை, நிஜமாவே நான் தப்பு பண்ணியிருந்தா மன்னிப்பு கேட்க என்னைக்குமே தயங்கியது கிடையாது..”
“உங்களுக்கே அது தெரியும் ஆனா இன்னைக்கு, இது, இந்த விஷயம் அப்படி இல்லை.. உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்..” என்றிட என்ன நினைத்தானோ அவள் கையில் இருந்த காஃபியை வாங்கிக்கொண்டு பருக தொடங்கினான்.
nice
ReplyDelete