வாழ்க்கைத்துணை - 20.3

Image
“என்னடி குழந்தைங்க ரொம்ப அமைதியா இருக்காங்க..” என்று மனைவியின் முகம் பார்த்தான். “எல்லா நேரமும் முழிச்சுட்டு இருப்பாங்களா என்ன? இப்போ தூங்கிட்டு இருப்பாங்க..” “ஆமா, குழந்தைகள் நல்லா தூங்கறாங்களா? சாப்பிடறாங்களா?” “இது என்னை கேட்க வேண்டிய கேள்வி” “யாரை கேட்டா என்ன? இப்போ நீயும் அவங்களும் வேற வேற இல்லையே..” “ஓஹ் அப்போ இது எனக்கான கேள்வின்னு எடுத்துக்கலாமா?” “ப்ச், பதிலை சொல்லுடி” என்றவனின் கரம் இன்னும் அவள் வயிற்றை விட்டு அகலாமல் மெல்ல வருடி கொண்டிருந்தது. “அதுதான் அப்போவே சொன்னேனே, எந்த ப்ராப்ளமும் இல்லை..” என்றவள் தன் கைபேசியில் இருந்த மருத்துவ அறிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். “இது டியூ டேட்! ஒரு குழந்தையா இருந்தா ஒரு வாரம் முன்ன பின்ன இருக்கும்னு சொன்னாங்க பட் இரண்டு குழந்தைகள் என்பதால டெலிவரிக்கு த்ரீ வீக்ஸ்ல இருந்தே எப்போனாலும் எக்ஸ்பெக்ட் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க..” “தமிழ் மாசத்துல ஒன்பது ஆரம்பிச்சதுமே அப்பாம்மா வளைக்காப்பு செய்யலாம்னு இருக்காங்க ரிஷி. உங்களை முறையா அழைப்பாங்க...” “வளைகாப்பு நான் செய்ய வேண்டியது..” என்றான் இறுகிய குரலில். “ஆனால் இப்போ சூழல் அப்படி இல்லையே?...

வாழ்க்கைத்துணை - 8.1



அன்று அதிகாலை அலாரம் அடிக்கவும் ரிஷியின் இறுக்கமான அணைப்பில் இருந்த மகாவால் சுத்தமாக கண் விழிக்கவே முடியவில்லை. மீண்டும் அலாரம் அடிக்க “லச்சு..” என்றவனின் குரலில் மெல்ல விழித்தவளால் சட்டென எழுந்து கொள்ள முடியாத அளவு அப்படி ஒரு அசதி. 

ரிஷியின் கை வளைவில் இருந்தவள் அலாரத்தை அணைத்து விட்டு மீண்டும் உறங்க தொடங்கி ஐந்தரை மணிக்கு மேல் தான் எழுந்து கொண்டாள். குளித்து முடித்து அவள் வெளியில் வந்த போது சிந்து படித்து கொண்டிருக்க மகாலட்சுமியின் நாள் வழக்கம் போல தொடங்கியது.

வனிதா, தான் வந்த காரியம் இன்னும் ரிஷியிடம் பேசப்படாததில் ஊருக்கு திரும்பவில்லை. மகாலட்சுமியை வைத்துக்கொண்டு பேசுவதில் அவளுக்கு விருப்பமில்லை. அதனால் அவள் வேலைக்கு கிளம்பிய பிறகு தான் பேச்சை தொடங்க வேண்டும்.

நேற்று மாடிக்கு அழைத்து சென்று இந்திராவின் காதில் லேசாக விஷயத்தை போட்டு வைக்க அவரோ மகள் சொன்னதை கேட்டு ‘என்ன பதில் சொல்வது?’ என்று புரியாமல் கைகளை பிசைந்தார்.

“என்னம்மா அமைதியா இருக்குற? சரிடி, அப்படித்தான் பண்ணிக்கலாம்னு உன்கிட்ட இருந்து ஒரு வார்த்தை வரலையே ஏன்?” என்று வனிதா கேட்கவும், 

“இல்லடி உன் தம்பி கிட்ட இதுவரைக்கும் இந்த விஷயத்தை பற்றி பேசலை அதோடு அவனுக்கு குழந்தைங்க பிறக்க போகுது இந்த நேரத்துல எப்படி பேசறது? அப்புறம், விசேஷம் நடக்கும் போது பார்த்துக்கலாமே?!” என்றார் தயக்கத்தோடு.

“என்னம்மா நம்ப வச்சு கழுத்தறுக்க பார்க்கறீங்களா? இது மட்டும் என் புருஷனுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்! என் வாழ்க்கையே முடிஞ்சது. அதுக்கப்புறம் எதுக்கு நான் உயிரோட இருந்து கிட்டு? அன்னைக்கே சாகட்டும்னு விட்டு தொலைச்சிருந்தா நிம்மதியா போய் சேர்ந்திருப்பேன், எதுக்கு காப்பாத்துனீங்க?” என்றாள் கண்ணீரோடு.

“எதுக்குடி அவசரப்படுற? உன் தம்பி நிலவரம் என்னன்னு தெரியாது அப்படி இருக்கிறப்போ நான் எப்படி உறுதி கொடுக்க முடியும்?”

“ஏன்? எப்படி இருந்தாலும், என்னைக்கு நடந்தாலும் இது நீங்க செய்ய வேண்டியது தானே?!”

“இல்லன்னு சொல்லல வனிதா. ஆனா ஒரு குழந்தை பிறந்தாலே செலவு எதுவும் நம்ம நினைக்கிற படி இருக்காது. இங்கே ரெண்டு குழந்தைகள் எனும் போது எது ஒன்னும் யோசிச்சு தான் செய்யணும்..” என்றார். 

“என்னம்மா பேசற நீ?! பிரசவம் என்ன நீங்களா பார்க்க போறீங்க? அவளோட அம்மா வீட்டில் தானே பார்க்கனும், குழந்தைகளுக்கு செய்ய வேண்டியதும் அவங்க பொறுப்பு தான்…”

“இருந்தாலும் நம்ம குடும்ப வாரிசுங்கடி. அவங்க ஆயிரம் தான் செஞ்சாலும் நம்ம எதுவும் செய்யாமல் இருந்திட முடியாதே.. என் பேரப்பசங்களுக்கு நாங்களும் செய்யணும் வனிதா..”

“அப்போ என் பொண்ணு உங்க வாரிசு இல்லையா ம்மா?.. பார்த்தியா நீ கூட எங்களை பிரிச்சு பேச ஆரம்பிச்சிட்ட, எங்களுக்கு உங்களை விட்ட வேற நாதி ஏது?! இத்தனை நாள் அப்பா தான் இப்படி பேசுவாரு இப்போ நீயும். இனி எனக்கு இந்த வீட்ல என்ன உரிமை இருக்கு?” என்று கண்களை கசக்கியவள்,

“உன் மருமக பேசின பேச்சுக்கும் நீ பேசுறதுக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்ல யாருக்குமே என் கஷ்டம் புரியலை, என் மேல பாசம் இல்ல, எனக்காக செய்ய யாருமே இல்ல.. உனக்கு உன் மகன், மருமகள், உங்க குடும்ப வாரிசுங்க தான் முக்கியமா இருக்கு.. அப்போ என்னை என்ன குப்பைத்தொட்டியில இருந்தா எடுத்துட்டு வந்தீங்க?” என்று ஒப்பாரி வைக்க தொடங்கி விட்டாள். 

“ஏய் அழாதடி, நான் தான் சொன்னேனே உன் தம்பி கிட்ட பேசாம எந்த ஒரு முடிவும் சொல்ல முடியாதுன்னு. அவன் கிட்ட பேசிட்டு தான் முடிவு பண்ண முடியும். நானா எதையாவது சொல்லி பின்னாடி முடியாம போயிட்டா என்ன பண்றது?”

“நாலு வருஷமாவே உங்க அப்பாவோட ஓட்டம் சுத்தமா கிடையாது. இப்போ உன் தம்பி அவன் பொண்டாட்டி சம்பளத்துல தான் குடும்பம் ஒரு நிலையில இருக்கு.. அதனால தான் அவன் கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்றேன். புரிஞ்சுக்கோ வனிதா..” என்று மகளை சமாதானப்படுத்தி இருந்தார்.

அரிசியை ஊறப்போட்டு விட்டு பருப்பு, பூண்டு, தக்காளி அனைத்தும் சேர்த்து குக்கரில் ஏற்றியவள் சிந்துவுக்கு காஃபி கொண்டு வந்து வைத்தாள். 

ஆனால் சிந்துவோ அதை எடுக்காமல், அறையில் உறங்கிக் கொண்டிருந்த வனிதாவை எழுப்பி “அம்மா எனக்கு காஃபி போட்டு கொடு, வா” என்றாள். 

“அதுதான் உன் மாமி இருப்பாளேடி அவ கிட்ட கேட்க வேண்டியது தானே?! தூங்கிட்டு இருக்கிற என்னை எதுக்கு இம்சை பண்ற?” என்றாள் போர்வையை இழுத்து போர்த்தியபடி.

“இன்னிக்கு தானேம்மா நீ என் கூட இருக்க.. எனக்கு காஃபி போட்டு கொடுத்து பிடிச்சதை சமைச்சு கொடு ம்மா..” என்றாள் கெஞ்சலான குரலில்.

“ஏன்டி நானே என்னைக்கோ ஒரு நாள் தான் நிம்மதியா தூங்கறேன் அதையும் கெடுப்பியா? போ.. போய் அவ கிட்ட கேட்டு வாங்கி குடி..” என்று கத்தி விட சிந்துவிற்கு முகமே வாடி போனது. 

வேறு வழியில்லாமல் மகா போட்டு வைத்த காஃபியை குடித்து விட்டு படிக்க தொடங்கினாள்.

மகாவிற்கு இன்று அதிக நேரம் சமையல் அறையில் நிற்க முடியவில்லை. ஒரு பக்கம் அனலில் வியர்த்து ஊற்றியது என்றால் மறுபுறமும் இடுப்பும் காலும் அத்தனை கடுத்தது.

இடையை பிடித்தபடி நின்றிருந்தவள் ஒரு நாற்காலியை கொண்டு வந்து சமையல் அறையில் போட்டு மெல்ல உட்கார்ந்து எழுந்து என்று சமைக்க தொடங்கினாள்.

இன்று அவளால் அதிகம் செய்ய முடியவில்லை. சாதம் சாம்பார் வைத்தவளுக்கு நறுக்கி வைத்த காயை பொரியல் செய்ய முடியாது போக பாக்ஸில் எடுத்து ஃபிரிட்ஜில் பத்திரபடுத்தினாள்.

அப்போது தான் உள்ளிருந்த பன்னீரை கண்டவளுக்கு நேற்று இரவே இந்திரா காலை உணவிற்கு சப்பாத்தி பன்னீர் செய்ய சொன்னதும் சிவபாலன் அந்நேரம் சென்று வாங்கி வைத்ததும் நினைவு வந்தது. 

ஆனால் நிச்சயம் அவளால் இதற்கு மேல் அங்கே நிற்க முடியாது போக அரைத்து வைத்திருந்த மாவை எடுத்து ஒரு வழியாக இட்லி ஊற்றி முடித்தவள் ஹாலில் வந்து ஃபேனுக்கு அடியில் அமர்ந்து கொண்டாள்.

இன்னும் அவள் பால் கூட குடிக்கவில்லை. கண்களை மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் சிவபாலன் வரவும் சமையல் அறைக்கு சென்று அவருக்கு காபியும் தனக்கு பாலும் போட்டு எடுத்து வந்தாள்.

“என்னம்மா முகமே ரொம்ப சோர்வா தெரியுது. ஏதாவது பிரச்சனையா?”

“ஒன்னும் இல்ல மாமா, இன்னைக்கு கொஞ்சம் முடியல அதனால சப்பாத்தியும் பன்னீரும் செய்யல.. இட்லி தான் ஊத்தி வச்சுருக்கேன் கொஞ்ச நேரம் கழிச்சு சட்னி அரைச்சு வச்சுடுறேன் அத்தை கிட்ட சொல்லிடுறீங்களா? நான் முடிஞ்சா நைட் வந்து சப்பாத்தி செஞ்சு கொடுக்கிறேன்…” 

“அதுக்கு என்னம்மா?! ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது. நீ கிளம்பு, சட்னி நான் பார்த்துக்கறேன் இல்ல வனிதாவை போட சொல்றேன். நீ போய் கொஞ்சம் நேரம் படுத்து எந்திரிச்சு கிளம்பு மா..” என்ற மாமனாரை வாஞ்சையோடு பார்த்தவள் பாலை குடித்து முடித்து இட்லி பாத்திரத்தில் இருந்த இட்லிகளை ஹாட் பேக்கிற்கு இடம் மாற்றினாள்.

ரிஷி எழுவதற்கு இன்னும் நேரம் இருந்தது. 

சற்று நேரம் படுத்து எழுந்து அவனுக்கு காஃபி போட்டு கொடுத்து கிளம்ப சரியாக இருக்கும் என்று எண்ணியபடி சோர்வோடு கட்டிலில் படுத்தவள் விழிகள் தன் போக்கில் கணவன் மீது நிலைத்தது.

அவன் தாடையில் ஒட்டியிருந்த அவள் ஸ்டிக்கர் பொட்டை பார்த்தவள் இதழ்கள் புன்னகையை தத்தெடுக்க அதை தொடர்ந்து நேற்று இரவு நடந்த கூடல் நினைவில் எழுந்தது. 

ரிஷி இப்படி இருப்பவன் கிடையாது!!

அதுவும் ஊடல் பொழுதில் பேச்சை நிறுத்தி விடுபவன் அவளை திரும்பியும் பார்க்க மாட்டான். தீண்டத்தகாதவள் போல அவளிடம் இருந்து அவன் ஒதுங்கி செல்வதே அவளுக்கு அத்தனை வலி கொடுக்கும். 

அதற்காக கெஞ்சி, கொஞ்சி என்று எத்தனை சண்டை போட்டாலும் அவனிடம் இருந்து எந்த பதிலும் வராது. சண்டை தீர்ந்து அவளை அணைக்க வந்தால் “அன்னைக்கு அவ்ளோ ஒதுங்கி போனீங்க இப்போ மட்டும் நான் தேவையா?” என்று அவனுக்கு போக்கு காட்டுவாள்.

அப்படி இருக்கையில் நேற்று மாலை அவள் மடியில் படுத்ததே மகாவுக்கு ஆச்சரியம் என்றால் இரவு அவளை நாடியது இன்னுமே அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.

‘எப்படி நிகழ்ந்தது? தான் எப்படி சம்மதித்தோம்?’ என்று இன்னுமே அவளால் நம்ப முடியவில்லை. அதேநேரம் இரவு தன்னை நாடியவனை அவளால் மறுக்கவும் முடியவில்லை.

மகா கேள்வி தொடுக்கும் முன்பே ரிஷி அவளை தன் ஆளுகையில் கொண்டு வந்திருந்தான். அடுத்தடுத்த அவன் தேடலில் அவளால் எதுவுமே பேச முடியவில்லை. என்றும் இல்லாத வேகத்தோடு அவளை நாடியவனின் தீவிரம் அவளுக்கே மிகவும் புதிதாக தான் இருந்தது.

“ரிஷி குழந்தைங்க..” என்ற அவள் வார்த்தையில் தான் சற்று மட்டுபட்டான்.

என்றும் இல்லாத இறுக்கத்தோடு அவளை கட்டிக்கொண்டு உறங்க முற்பட்டவனிடம், “என்ன ஆச்சு ரிஷி?” என்ற கேள்விக்கு அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. 

இருவருக்கும் இடையில் வயிறு தடையாக இருப்பதால் எப்போதும் அவளை பின்புறம் இருந்து அணைத்துக் கொண்டு உறங்குவது தான் வழக்கம்.

நேற்றும் அப்படி உறங்கியவனின் கைகள் அவளை விட்டு நொடி பொழுதும் விலகவில்லை. 

“என்னன்னு சொல்லுங்க, ஏதாவது ப்ராப்ளமா?” என்று கணவனை திரும்பி பார்க்க அவனோ கண்களை மூடிய படி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தான்.

அதுமட்டுமல்ல அவள் வயிறோடு படரவிட்டிருந்த அவன் கரம் எப்போதும் போல குழந்தைகளை வருடியபடி இருந்தது. சில இரவுகள் மகா உறக்கம் பிடிக்காமல் அவஸ்த்தை படும் போதெல்லாம் இப்படி தான் அவளையும் குழந்தைகளையும் வருடி கொடுப்பான். 

அதன் இதத்தில் என்றும் போல சற்று நேரத்தில் சுகமாக அவளும் கண்ணயர்ந்தாள்.

இப்போது அதனால் வந்த அசதி தான் இது என்றாலும் மனமோ கணவனுக்கு என்ன பிரச்சனை? என்ற கேள்வியை தான் தொடுத்துக் கொண்டிருந்தது.

Comments

Post a Comment

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை - 19.1

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 20.1

வாழ்க்கைத்துணை - 20.3