வாழ்க்கைத்துணை - 20.1


ரிஷி மகாவை அழைத்துக்கொண்டு கேஃபிடேரியாவிற்கு செல்ல அங்கு பெரிதாக ஆட்கள் இல்லை. 

ஆங்காங்கே ஓரிருவர் இருக்க ரிஷியோடு இணைந்து நடந்த  மகாலட்சுமியின் பார்வை கணவனின் மீதே!!

திருமணமான இத்தனை மாதங்களில் புது மாப்பிள்ளைக்கே உண்டான கவனிப்பு மகாவின் சாப்பாடு என்று எடை கூடி இருந்தவன் இப்போது கூடிய எடையோடு சேர்த்து மேலும் சில கிலோக்கள் குறைந்து காணப்பட்டான். 

இந்தளவு இளைத்து போயிருப்பவன் நிச்சயம் சரியான சாப்பாடு தூக்கம் இல்லாமல் தான் இருக்கிறான் என்று புரிந்தது. ஒருவேளை அதற்கு காரணம் தன்னையும் குழந்தைகளையும் பிரித்து இருப்பதாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. 

அப்படியே அவன் தன்னை தேடி இருந்தாலும் தனக்காக தேடி இருக்க மாட்டான் பத்திரத்திற்காக தான் தேடி இருக்க கூடும் என்ற எண்ணம் எழுவதையும் அவளால் தவிர்க்க முடியவில்லை. 

‘ப்ச் அப்படி இருக்காது மகா, அவருக்கு எமோஷனல் சப்போர்ட் நீதான்! இப்போ இருக்கிற நெருக்கடியில ஆறுதலுக்காக கூட உன்னை தேடி இருக்கலாம். உன் புருஷனை பற்றி நீயே நல்லவிதமா நினைக்கலைன்னா எப்படி?’ என்று அவள் மனமே அவளை கடிந்தது. 

அவளே சரியாக யோசிக்க நினைத்தாலும் இருவருக்கும் இடையிலான இடைவெளி சரியான புரிதலுக்கு உட்படுத்தாது அவளையுமே குழப்பத்தில் ஆழ்த்தியது.

‘இப்போது ரிஷியிடம் சிந்து மற்றும் வீட்டு பத்திரம் பற்றி பேசலாமா வேண்டாமா?’ என்ற குழப்பத்துடன் மகா அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்திட அவளுக்கு எதிரில் அமர்ந்த ரிஷியின் பார்வையும் மனைவி மீதே!!

“எப்படி இருக்கீங்க ரிஷி?” என்றாள் புன்னகையோடு.

“நான் எப்படி இருந்தா உனக்கு என்னடி?

“நான் உங்க வைஃப் ரிஷி! நான் கடைசியா பார்த்ததுக்கும் இப்போதைக்கும் உங்க கிட்ட எவ்ளோ வித்யாசம். அந்த கவலை எனக்கு இருக்காதா? ஏன் இவ்ளோ இளைச்சுட்டீங்க?”

“புருஷனை பற்றி கவலைப்படறவங்க யாரும் இக்கட்டான நேரத்துல உன்னை மாதிரி விட்டுட்டு போக மாட்டாங்க..” என்றான் கடுப்போடு. 

“ப்ச், இப்போவும் சண்டை போடணுமா ரிஷி? சரி நான் உங்களை எதுவும் கேட்கலை ஆனா இவ்ளோ நாள் கழிச்சு பார்க்கிற என்னை ஒரு வார்த்தை கூட விசாரிக்கலை நீங்க…”

“நான் விசாரிக்காததால நீ என்ன தேய்ஞ்சா போயிட்ட.. நான் இல்லாம ரொம்ப நல்லா இருக்கிறது உன்னை பார்த்தாலே தெரியுதே.. அதுவும் முன்னதுக்கு இப்போ இன்னும் அழகா இருக்க அப்புறம் எதுக்கு இந்த கேள்வி?”

“காட்! உங்களை கேட்டது தப்பு தான். தெரியாம கேட்டுட்டேன், இனி கேட்கலை.. ஆனா நீங்க முன்னத்துக்கு இப்போ ரொம்பவே மெலிஞ்சு இருக்கீங்க சரியா சாப்பிடறீங்களா?”

“தேவையில்லாம என் வாயை கிளறாதடி. சாப்பிடலைன்னா நீ என்ன என் பக்கத்துல உட்கார்ந்து ஊட்டியா விடப்போற?”

“நான் ஊட்டி விட மாட்டேன்னு சொல்லலையே ரிஷி. ஆனா நான் உங்களுக்கு யாருமில்லாதப்போ எந்த உரிமையில ஊட்டி விட சொல்றீங்க?” என்றவள் அவன் அடுத்து பேசும் முன் எழுந்து சென்று அவர்கள் இருவருக்குமான காஃபியோடு வந்தாள்.

ரிஷி அவளை முறைத்து பார்க்கவும், “நான் யாருன்னு உங்க மனசை தொட்டு சொல்லுங்க நானும் ஊட்டி விடறேன்” என்றாள்.

“திரும்ப அதே இடத்துக்கு வராதடி..” என்றான் எரிச்சலோடு.

“சரி நான் எதையும் பேசலை. முதல்ல காஃபி குடிங்க அப்போ தான் உங்களால சரியா பேச முடியும்..” என்றாள் புன்னகையோடு. 

காலை கிளம்பி வரும் அவசரத்தில் அவன் சாப்பிடவில்லை. நேரம் இருந்தால் மட்டும் அங்கு என்ன இந்திரா அனைத்தையும் செய்து வைத்து மகனுக்காக காத்துக்கொண்டா இருக்கிறார்?! 

நிச்சயமாக இல்லை. என்னமோ இத்தனை மாதங்கள் சொகுசாக உட்கார்ந்து சாப்பிட்ட உடம்பு காலையில் சீக்கிரம் எழுந்து மகனுக்கு சமைத்து கொடுக்க வளைய மறுத்தது. சிவபாலன் தான் தன்னால் முடிந்ததை செய்து கொடுப்பார். அவருக்கு கூட முழுமையான சமையல் தெரியாது. தெரிந்ததை வைத்து மகனுக்கும் பேத்திக்கும் செய்து கொடுப்பார். 

எட்டு மணிக்கு மேல் எழும் இந்திரா மெதுவாக தான் வேலைகளை செய்ய ஆரம்பிப்பார். ஒவ்வொரு வேலை செய்யும் போதும் அதோடு சேர்த்து மகாவையும் அரைத்து எடுப்பார். 

ரிஷிக்கு முழுமையான வீட்டு சாப்பாடு கிடைப்பதே இரவில் தான். ஆனால் அவனுக்கு இருக்கும் அதிகப்படியான வேலை, அலைச்சல், அழுத்தம் அவனை சரியாக சாப்பிடவும் விடாது. 

அதே போல தான் உறக்கமும். இருக்கும் போது ஒருவரின் அருமை தெரியாது என்பார்களே அது ரிஷி விஷயத்தில் உண்மையாகி போயிருந்தது.

ஆதரவாக தோள் சாய கைப்பிடிக்க மடி சாய மகா இல்லாததில் அவன் நிலை இன்னுமே மோசமாகி போனது.

மகா இருந்தால் மட்டும் அவளிடம் அனைத்தையும் சொல்லி ஆறுதல் தேடக்கூடியவன் இல்லை தான் என்றாலும் அவளது இருப்பு அவளது அணைப்பு அவனுக்கு தனி பலமும் உத்வேகமும் கொடுக்கும். 

அதோடு குழந்தைகளும் இல்லாததில் அறையின் வெறுமை அவனை தூங்க விடாமல் அலைகழித்தது. 

ரிஷி நிதானமாக காஃபியை பருக சிவபாலன் மூலமாக அவன் சாப்பிடாமல் கிளம்பியதை அறிந்தவள் கணவனுக்கு சுட சுட இட்லி, பொங்கல் வாங்கி கொண்டு வந்து வைத்தாள்.

“என்ன இதெல்லாம்? எதுக்குடி இப்போ வேஷம் கட்டுற?”

“வேஷமா? மைண்ட் யுவர் லாங்குவேஜ் ரிஷி. உங்க முகத்தைப் பார்த்தாலே நீங்க சாப்பிடலைன்னு தெரியுது மாமாவும் அதே தான் சொன்னார்.. வயிறு காலியா இருந்தா புத்தி எப்படி சரியா யோசிக்கும்? அதனால தான் வாங்கிட்டு வந்தேன், சாப்ட்டுட்டு பேசலாம்..” என்றாள் கடுப்போடு.

“அப்போ என்னை புத்தி இல்லாதவன்னு சொல்றியாடி..” என்று கோபத்தோடு ரிஷி எழுந்து விட்டான். 

“கொஞ்சமும் சுயபுத்தி இல்லாம அடுத்தவங்க சொல்றதை கேட்டு நடக்கிறவங்களுக்கு என்ன பெயரோ அதை நீங்களே உங்களுக்கு வச்சுக்கோங்க நான் சொல்ல விரும்பல…” என்றவள் அவன் பேசுவதற்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து,

“இது ஒன்னும் நம்ம வீடோ பெட்ரூமோ கிடையாது உங்க இஷ்டத்துக்கு சத்தம் போட்டு பேச.. கொஞ்சம் உங்க சத்தத்தை கம்மி பண்றீங்களா?” 

“நீ தான்டி என்னை பேச வைக்கிற, என்னையும் என் குழந்தைகளையும் பிரிச்சுட்டு இப்போ ஒண்ணுமே நடக்காத மாதிரி…” என்றவனை இடையிட்டு, 

“ரிஷி நம்ம பிரச்சினையை அப்புறம் பேசிக்கலாம் முதல்ல சாப்பிடுங்க..”

“சாப்பாடு ஒன்னு தான் குறை!! முதல்ல நீ எதுக்குடி இங்க வந்த?” என்றான் இறுகிய குரலில். 

“ஏன் பார்த்தா உங்களுக்கு தெரியலையா? மீட்டிங்கு வந்து இருக்கேன்..”

“அதுதான் எப்படின்னு கேட்டேன். அன்னைக்கு வேலைக்கு போக முடியாது பேப்பர் போடுவேன், சூழ்நிலை புரிஞ்சிக்கோங்கன்னு எவ்வளவு பேசின? இப்ப மட்டும் உன்னால வேலைக்கு வர முடியுதா?”

“ரிஷி..”

“எனக்கு சம்பாதிச்சு கொடுக்க முடியாது… ஆனா உன் அப்பனுக்கு மட்டும் சம்பாதிச்சு கொடுக்க முடியுதா?” என்றான் பல்லை கடித்துக் கொண்டு தாழ்ந்த குரலில். 

“ரிஷி அப்பாவுக்கும் என்னோட முடிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவரை அனாவசியமா பேசாதீங்க..”

“ஹே! நான் பேசறது உனக்கு அனாவசியமா தெரியுதா? அன்னைக்கு நீ தானடி சொல்லிட்டு போன இப்ப மட்டும் உன் அப்பா எப்படி வேலைக்கு போக விட்டாங்க? குடும்பமே ஏமாத்து குடும்பமா இருக்கீங்க.. இங்க நம்பி ஏமாந்தது நான் தான்!!” 

“ரிஷி கண்ட்ரோல் யுவர்செல்ஃப்! கோபத்துல என்ன பேசுறீங்கன்னு புரியாம பேசிட்டு இருக்கீங்க. நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க..” 

“இதுக்கு மேல என்னடி கேட்கணும்? என்னை பார்த்தா உனக்கும் உன் குடும்பத்துக்கும்  இளிச்சவாயனா தெரியுதா? பொண்ணு தான் முக்கியம்னு கூட்டிட்டு போனவங்களுக்கு இப்போ உன்னோட சம்பளம் தான் முக்கியமா இருக்கா?”

“ரிஷி யார் மேலயோ இருக்கிற கோபத்தை என் மேல காட்டாதீங்க..” என்றாள் அவளும் பொறுமை இழந்து. 

“நீ செய்த காரியத்தால தான்டி கொதிச்சு போயிருக்கேன். ஆனா நீ சரி நான் தான் தப்பா புரிஞ்சுட்டு இருக்கிறேன்னு பேசற.. என்னமோ உன்னை அங்க நாங்க கொடுமை படுத்துன மாதிரி என்னென்ன பேச்சு...

கடைசியா நானும் அப்பாவும் உனக்கு வீட்டு வேலைகள் எல்லாம் செய்து கொடுத்தும் அதை மதிக்காம என்னை விட்டு போனவ தானே?” என்று அடிக்குரலில் சீற,

“ரிஷி நீங்களா ஒரு முடிவு பண்ணிக்காம முதல்ல என்னை பேச விடுங்க அப்போ தானே என்ன நடந்ததுன்னு நான் சொல்ல முடியும்..”

“புதுசா என்னடி சொல்ல போற? முடியலை வேலையை விட போறேன்னு சொல்லிட்டு போனவளுக்கு இப்ப மட்டும் எப்படி வேலை செய்ய முடியுது? இப்போ உனக்கு ஒன்னும் ஆகலையா? மயக்கம் வரலையா? இவ்ளோ தூரம் வந்திருக்கியே தல சுத்தல் இல்லையா?” என்று அவன் பேசிக்கொண்டே செல்ல, 

“ஸ்டாப் இட் ரிஷி!! இனஃப் இஸ் இனஃப்!!” என்று உரத்த குரலில் சொல்ல அங்கே வந்து சேர்ந்தான் ராம்.

அவனை கண்டதுமே மகா தன்னை நிதானப்படுத்த, “என்ன மச்சி சாப்பிட உட்கார்ந்துட்ட டைம் ஆச்சு…”

“ராம் அவர் இன்னும் சாப்பிடலை, சாப்பிட வச்சு கூட்டிட்டு வாங்க..” என்றவள் எழுந்து மீட்டிங் ஹாலுக்கு செல்ல முற்பட, 

“எங்க கிளம்பிட்ட?” என்றான் அடிக் குரலில். 

“வந்த வேலையை பார்க்க.. நீங்க எதுக்காக இங்க வந்தீங்கன்னு தெரியாது பட் நான் உங்க கூட சண்டை போடறதுக்கு வரல… வேலையை முடிச்சுட்டு அதுக்கப்புறம் நம்ம பிரச்சினையை பேசிக்கலாம்..” என்றவள் ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள். 

ஆலோசனை கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்ற மகாவை மிதுன் ஆச்சர்யமாக பார்க்க சிறு புன்னகையோடு அவனருகே அமர்ந்தாள்.

பல நிறுவனங்களில் இருந்து வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி இருக்க தன் முறை வந்த போது மஹா பேச தொடங்கினாள்.

அவள் பேசிக் கொண்டிருந்த போது ரிஷிவும் ராமும் உள்ளே வந்தனர். அடுத்த இரண்டு மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடக்க “கைஸ், வில் மீட் அஃப்டர் லஞ்ச் பிரேக்..” என்று ஒருங்கிணைப்பாளர் சொல்ல அனைவரும் வெளியேறினர்.

Comments

Popular Posts

வாழ்க்கைத்துணை - 19.2

வாழ்க்கைத்துணை முன்னோட்டம்

வாழ்க்கைத்துணை - 19.1

மனசெல்லாம் மழையே - 33

வாழ்க்கைத்துணை - டீசர்