தீராத காதல் தொல்லையோ - 4.2
மேலும் சில மாதங்கள் கழிந்த நிலையில்:
அன்று புதுச்சேரியில் ரிஷியை சந்தித்த பின்னர் மகா அவனை தொடர்பு கொள்ளவில்லை. நிச்சயம் அவன் நன்மைக்காக அவள் பேசும் எதுவுமே அவளுக்கு எதிராகவே திரும்பும் இருவருக்கு இடையிலான விரிசல் இன்னுமே அதிகமாகும்..
தன் மீதும் குழந்தைகள் மீதும் அவனுக்கு இருக்கும் பற்றும் அன்பும் கேள்விக்குறியாகவும் வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து கொண்டவள் அவனாக பட்டு திருந்தட்டும் என்று விட்டுவிட்டாள்.
அவனோடு பேச முயற்சிக்கவில்லையே தவிர்த்து அவன் பேச்சு அவள் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி இருந்தது. பிரிவு அவளை பற்றிய புரிதலை கொடுக்கும் என்ற அவளின் நம்பிக்கை பொய்த்து போனதை ஏற்கவே அவளுக்கு பல நிமிடங்கள் பிடித்தது.
அன்று அலுவலகக் கூட்டம் முடிந்த வீடு வந்து சேர்ந்தவள் முகமே சரியில்லாமல் இருப்பதை கண்டு ஆளாளுக்கு விசாரிக்க தொடங்கி விட்டனர்.
“ஒன்னும் இல்லப்பா.. அவ்வளவு தூரம் போய் வந்த டயர்ட்னஸ்.. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்..” என்றவள் தன் அறைக்கு சென்று படுக்க ரிஷியின் நினைவுகள் படையெடுத்தது.
அவர்களின் திருமண வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது என்ற கவலை ரிஷிக்கு இருப்பது போலவே தெரியவில்லை.
ஆனால் மகாவிற்கு ‘அது எங்கே தோற்று விடுமோ’ என்று அச்சம் எழுவதை தடுக்க முடியவில்லை.
கணவனிடம் சொன்னது போல, இது இருவருக்கும் இடையிலான தற்காலிக பிரிவு நிச்சயம் அவர்களின் வாழ்வு ஒருநாள் மலர்ந்து சிறக்கும் என்ற நம்பிக்கை அவனை காணும் வரையில் அவளுக்கு இருந்தது.
ஆம் இருந்தது!! ரிஷி இறுதியாக அவளை விட்டு செல்வதற்கு முந்தைய நொடி வரை அந்த நம்பிக்கை அவளுக்கு இருந்தது.. ஆனால் அவளை விட்டு அவன் சென்ற நொடி அவள் நம்பிக்கை உடைந்து போனது.
ஊசலாடி கொண்டிருக்கும் தங்களின் உறவை பலப்படுத்த ரிஷி இனி எந்த முயற்சியும் எடுப்பான் என்று அவளுக்கு தோன்றவில்லை. யோசனையில் இருந்தவளுக்கு மண்டை வலி எடுத்தது தான் மிச்சம்.
‘வேண்டாம் மஹா எதையும் யோசிக்காதே அன்னைக்கு முடிவு பண்ணின மாதிரி குழந்தைகள் ஃபர்ஸ்ட்.. இப்போதைக்கு அவங்களை மட்டும் பாரு வேற எதை பற்றியும் யோசிக்காதே’ என்று தன்னை தானே தேற்றிக்கொண்டவள் அடுத்த நாள் முதல் தன் வழக்கமான வேலைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டாள்.
ஒன்பதாம் மாதம் தொடங்கியதுமே வளைகாப்பு பேச்சு மீண்டும் அவர்கள் வீட்டில் எழ ஆடம்பரமாக செய்ய வேண்டாம் முன்பு சொன்னது போலவே வீட்டோடு செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள் மகாலட்சுமி.
“நாங்க ஒருமுறை மாப்பிள்ளை கிட்ட பேசி பார்க்கிறோம் மகா.. எந்த பிரச்சனை வந்தாலும் நாங்க தீர்த்து வைக்கிறோம்..” என்றார் பாக்கியலட்சுமி.
“வேண்டாம் ம்மா. இவ்ளோ நாள் இல்லாத வகையில் புதுசா என்ன பிரச்சனை வந்துட போகுது? அப்படியே வந்தாலும் அதை சந்திக்க நான் தயார்..”
“மகா..”
“ம்மா நான் காரணம் இல்லாம சொல்லல.. ஏற்கனவே அவர்கிட்ட பேசின போது இது அவர் எடுத்து செய்ய வேண்டிய விசேஷம்னு சொன்னார். அவ்ளோ அக்கறையோடு இருக்கிறவர் இந்த நிமிஷம் வரை ஒரு வார்த்தை எனக்கு பேசலை.. எனக்கு அவர் இதுல கலந்துக்கனும்னு தோணலை.. விட்டுடுங்க” என்ற சொல்ல அதற்கு மேல் யாரும் அவளை வற்புறுத்தவில்லை.
அவள் ஆசைப்பட்டது போலவே அண்ணன்கள், அண்ணிகள், குழந்தைகள் மற்றும் அவள் உடன் பணிபுரிவோர் சூழ அவளின் வளைகாப்பு வைபவம் அழகாக நடந்தது.
ஆனால் வளைகாப்பில் காயத்ரி தான் சற்று முகத்தை தூக்கி வைத்தபடி இருந்தாள்.
இருக்காதா பின்னே! மகாலட்சுமி வீடு வந்து சேர்ந்த இத்தனை மாதங்களில் அவள் கணவன் தன் வீட்டிற்கு வருவது குறைந்து போய்விட்டது.
இதோ இப்போதும் விசேஷத்திற்கு வந்திருக்கும் அவளோடு இருக்காமல் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருக்கிறான்.
இத்தனைக்கும் மிலிட்டரியிலிருந்து அவர்களின் பெரிய அண்ணன் வந்த போதும் வேலையை பங்கு போட்டு கொள்ளாமல் கதிர் ஒருவனே அனைத்தையும் செய்வதை கண்டவளுக்கு கடுகடுத்தது.
ஜெய்சித்ரா மகாவிற்கு நலங்கிட்டு வளையல் அணிவித்த போது அங்கு வந்து சேர்ந்தார் சிவபாலன்.
ஆம் சிவபாலனே தான்!! மகாவின் வளைகாப்பிற்கு அவர் மட்டும் வந்திருந்தார்.
அவருக்குமே யாரும் முறையாக அழைப்பு கொடுக்கவில்லை. ஆனாலும் மருமகளின் உடல் நலன் குறித்து வாரம் இரண்டு முறையாவது விசாரிக்கும் மனிதரிடம் விஷயத்தை அவளால் மறைக்க முடியவில்லை பேச்சு வாக்கில் அடுத்த வாரம் வளைகாப்பு என்று சொல்லிவிட்டாள்.
சொன்னாளே தவிர்த்து அப்போது கூட அவரை அழைக்க வில்லை ஆனால் சிவபாலன் அவராகவே விசேஷத்திற்கு வந்து மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்.
மகா கேட்டுக்கொண்டபடி மனைவி மற்றும் மகனிடம் விசேஷம் பற்றி அவர் எதுவும் பேசவில்லை.
ஆம் மகாவே தான் ரிஷிக்கு சொல்லக்கூடாது என்று சொல்லி இருந்தாள்.
சொல்வதால் வரக்கூடிய பிரச்சனை பற்றி அவளுக்கு கவலை இல்லை ஆனால் தன்னை முக்கியமாக நினைக்காது ஒதுக்கி வைப்பவனுக்கு ஒதுக்கத்தின் வலியை உணர்த்த நினைத்தாலேயே அவனை அழைக்கவில்லை.
அப்படி என்ன அவனுக்கு வீம்பு?! ஒவ்வொருமுறையும் அவள் அன்பை புரிந்து கொள்ளாதவனின் அலட்சியம் அவளை வெகுவாக காயபடுத்தி இருந்தது. அவன் மீது எந்தளவு நிபந்தனையற்ற அன்பை வைத்திருந்தாளோ அது இப்போது வெறுப்பாக மாறி இருந்தது.
விசேஷம் முழுக்க அவள் இதழ்களில் புன்னகை படர்ந்து இருந்த போதும் தன்னை முக்கியமாக நினைக்காத கணவன் மீதான ஆதங்கம் கோபமாக உருமாறி இப்போது அது வெகுவாகவே அதிகரிக்க தான் செய்தது.
தன்னை துச்சமாக நினைக்கும் கணவன் எதிரில் எக்காரணம் கொண்டும் உடைந்து விடக்கூடாது, தைரியமாக தன் பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு வளைய வந்தாள் மகாலட்சுமி.
ஆனால் மருமகளை தனியாக கண்ட சிவபாலனுக்கு தான் மனம் தாங்கவில்லை.
அவர் முகத்தை வைத்தே அகத்தை படித்தவள், “கவலையை விடுங்க மாமா. இதுநாள் வரை இது தற்காலிக பிரிவுன்னு தான் நினைச்சிருந்தேன் ஆனா அன்னைக்கு உங்க மகன் பேசின பேச்சில இது நிரந்தரமாகவும் வாய்ப்பு இருக்குன்னு புரிஞ்சுகிட்டேன். இத்தனை மாசம் அவர் இல்லாம மூணு பேரு வாழலையா?”
“என்னமா லட்சுமி இப்படி பேசுற?”
“நிதர்சனத்தை பேசுறேன் மாமா. இவ்வளவு நாள் என் புருஷன்ங்கிற ஒரு பிடிப்பு எனக்கு இருந்தது. ஆனால் இன்னமும் அவர் என்னை தன்னோட சரிபாதியா பார்க்கலை என்பதை புரிஞ்சுகிட்டேன். இதுக்கு மேலயும் அவருக்காக காத்திருந்து என்னோட வாழ்க்கையை வீணடிக்க நான் விரும்பல…”
“நம்ம எவ்வளவு தான் முயற்சி பண்ணினாலும் தலையெழுத்துன்னு ஒன்னு இருக்கு இல்லையா? அதன் படி தான் நடக்கணும்னு இருந்தா யார் தடுக்க முடியும்? எனக்கு படிப்பு இருக்கு வேலை இருக்கு எல்லாத்துக்கும் மேல என் குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கு உடம்புல தெம்பு இருக்கு கூடவே எனக்கு பக்கபலமா என் குடும்பம் இருக்கு.. இதுக்கு மேல என்ன வேணும்?”
“அம்மாடி லக்ஷ்மி மனச விட்டுடாதம்மா.. ஏதோ கெட்ட காலம் கூடிய சீக்கிரம் குழந்தைகள் வரவில் எல்லாமே மாறும்னு நம்பு..”
“நேரம், காலம்ன்னு என்னை நானே ஏமாத்திக்க விரும்பலை மாமா.. உங்க பிள்ளை கூட வாழ்ந்த எனக்கு தான் தெரியும் குழந்தைகளோட வரவு எந்த விதத்துலயும் அவரையும் மாத்தாது எங்க வாழ்க்கையிலயும் எந்த மாற்றத்தையும் கொடுத்துடாதுன்னு..”
“கானல் நீர் தாகம் தீர்க்காது மாமா. அப்படி தான் எங்களோட கல்யாண வாழ்க்கை குழந்தைகளால சரியாகிடும்னு நம்புறதும் காத்திருப்பதும்.. இனி நான் காத்திருக்க தயாரா இல்லை எங்க வாழ்க்கையை பார்த்துக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு..”
“அம்மாடி லட்சுமி கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிர்..” என்றவரை இடையிட்டவள்,
“அப்படி கிடையாது மாமா. கல்யாணம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி. அவ்வளவு தான்! நீங்க சொல்ற மாதிரி அது மட்டுமே வாழ்க்கை ஆகிடாது. எல்லாருக்கும் கல்யாண வாழ்க்கை வெற்றிகரமா அமைஞ்சிடாது சிலருக்கு தோற்கவும் செய்யும்..”
“அதுக்காக முடங்கி ஒரு மூலையில உட்காரக்கூடிய ஆள் நான் கிடையாது. உங்க பிள்ளையை நல்லா புரிஞ்சுகிட்டேன் அதனால இனியும் இலவு காத்த கிளியா அவருக்காக காத்திருக்க நான் தயாரா இல்லை….
“என் வாழ்க்கையில் கல்யாணம் என்கிற ஒரு சாப்டர் (Chapter) முடிஞ்சிடுச்சு அடுத்த அத்தியாயமான குழந்தைகள் அவங்களோட வளர்ச்சி, படிப்பு, வேலைன்னு எவ்வளவோ இருக்கு, அதெல்லாம் நான் தானே பார்த்து ஆகணும்.. இனி அவரைப் பற்றி நினைக்க கூட எனக்கு நேரமில்லை…”
“லட்சுமி என்னம்மா இதெல்லாம்? அவசரப்படாதே! உனக்கு தெரியாததா?! அவனுக்கு இருக்கிற நெருக்கடியில் உன்னை சரியா புரிஞ்சுக்காம அப்படி பேசி இருப்பான்..”
“அப்படி என்ன மாமா நெருக்கடி? இவ்ளோ நெருக்கடியிலும் அக்கா அம்மாவை மதிக்க முடியுது, விட்டு கொடுக்காம பேச முடியுது, அவங்களுக்காக என்னையும் குழந்தைகளையும் விட்டுட்டு போக முடியுது ஆனா என்னை புரிஞ்சுக்க முடியலை..”
“எனக்கு மரியாதை இல்லாத என்னை புரிஞ்சுக்காத என்மேல பாசம் இல்லாத, என்னை யார் நீன்னு கேட்ட ஒருத்தரோடு அர்த்தமே இல்லாத இந்த பந்தத்துக்குள்ள எதுக்கு நான் இருக்கணும்?” என்றதில் ஆடிப்போனார் சிவபாலன்.
super
ReplyDelete