தீராத காதல் தொல்லையோ - 4.2
“எல்லாத்துக்கும் என் பொண்டாட்டியை காரணமாக்கி அவளை குறை சொல்றதை விட்டுட்டு இவ என்ன திருட்டுத்தனம் பண்ணி இப்போ நம்மளை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க..” என்றவன் சிந்துவை அவர்கள் முன்னே நிறுத்தி,
“நான் எவ்ளோ தூரம் உங்க கிட்ட சரியான காரணம் இல்லாம அவகிட்ட ஃபோன் கொடுக்காதீங்கன்னு சொல்லி இருப்பேன்… அப்படியே கொடுத்தாலும் பக்கத்துல இருந்து கண்காணிக்க சொன்னேன்.. ஆனா என் பொண்டாட்டியை குறை சொல்றதை தவிர்த்து வேற எதை உருப்படியா செய்தீங்க?”
“இவ அவளை மதிக்காத போது அதை திருத்தாம திரும்ப அவளையே காரணம் காட்ட எப்படி முடியுது உங்களுக்கு? சிந்து அவளை மதிக்காம போனாலும் இவளுக்காக என்கிட்டே பேசினவளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”
“வரதா என்னப்பா பேசற?”
“பின்னே என்ன ம்மா? உங்க தப்பை அடுத்தவ தலையில் கட்ட பார்க்காதீங்க.. உங்களால முடியாதுன்னா எதுக்காக அடுத்தவங்க குழந்தைக்கு முதல்ல பொறுப்பு ஏத்துகிட்டீங்க?” என்றவனுக்கு இன்னுமே கோபம் ஆறவில்லை.
“முன்ன மாதிரி படிப்புல அவளுக்கு நாட்டமே இல்லை. ஃபெயில் ஆகி இருக்கா அக்காவை இல்லை என்னை வர சொல்லி டீச்சர் சொல்லி இருக்காங்க.. ஆனா அதை கூட என்கிட்டே சொல்லலை நீங்க..”
“அப்படி இல்லை வரதா சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பெயில் ஆகி இருப்பா அடுத்த முறை நல்ல மார்க் எடுக்கிறேன்னு சொன்னதால தான் உன்கிட்ட சொல்லலை..”
“நீங்க சொன்ன நல்ல மார்க் வாங்க நோட்ஸ் எடுக்கணும், படிக்கணும்னு உங்க ஃபோனை வாங்கிட்டு போய் உங்களுக்கு தெரியாம இன்ஸ்டகிராம் சாட்டிங் பண்ணி இருக்கா தெரியுமா?” என்றதில் கைகளை பிசைந்து கொண்டு நின்ற இந்திராவால் பதிலளிக்க முடியவில்லை.
“ஏய் இவ்ளோ திருட்டுத்தனம் பண்ண எங்கிருந்து கத்துகிட்ட? உன்னை நாங்க அப்படியா வளர்த்தோம்? ஏன் உன் புத்தி இப்படி போச்சு?” என்று ரிஷி ஆக்ரோஷமாக கேட்க அவளோ பதிலின்றி அழுது கொண்டிருந்தாள்.
ரிஷியின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள் சிந்து.
“அழுது ஏமாத்தலாம்னு நினைக்காத.. மரியாதையா சொல்லு எப்படி உனக்கு இப்படி புத்தி போச்சு?..” என்று ரிஷி அவளை பிடித்து இழுக்க,
“மாமா கேட்கிறதுக்கு பதில் சொல்லுடா மா..” என்று சிவபாலன் பேத்தியை தன் கைவளைவில் கொண்டு வந்தார்.
“கிளாஸ்ல எல்லாரும் இன்ஸ்டா.. இன்ஸ்டான்னு சொல்றாங்களே அப்படி அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க தான் மாமா சேர்ந்தேன்..”
“எப்போ சேர்ந்த?” என்றதற்கு அவளிடம் மௌனம்.
“சொல்லு..”
“இப்போ தான் ஒரு மூணு, நாலு மாசம் இருக்கும்..”
“எப்போ இருந்துன்னு சரியா சொல்லு?” என்று ரிஷி கர்ஜிக்க,
“மாமி கிட்ட பேச வேண்டான்னு அம்மா சொன்னதால அவங்களோட படிக்க வேண்டாம் நானே படிக்கிறேன்னு பாட்டி கிட்ட ஃபோன் வாங்கி அதுல தான் ஓபன் பண்ணேன் மாமா..”
“உனக்கு மெயில் ஐடி ஏது?”
“அதுவும் என் ஃப்ரெண்ட் சொன்ன படி அவங்க மொபைல்ல இருந்து க்ரியேட் பண்ணினேன்..” என்று நடுங்கிய குரலில் சொல்ல,
“பார்த்தீங்களா? என் பொண்டாட்டி மேல நீங்க காட்டின வன்மத்தை உங்களோடு நிறுத்தாம இவளுக்கும் சொல்லி கொடுத்ததோட விளைவை..”
“வரதா அப்படி இல்லப்பா, உன் பொண்டாட்டி தோசை கூட போட்டு கொடுக்கலை முடியலைன்னு சொல்லிட்டா. படிப்புக்கும் அப்படி தானே சொல்லுவா சிந்துவோட படிப்பு பாதிக்க படக்கூடாதுன்னு அவ படிக்கிறதுக்காகன்னு..”
“போதும் ம்மா அவ தான் சின்ன பொண்ணு நெய் தோசையை வச்சு பிரச்சனை பண்ணினா குழந்தையை சுமந்துட்டு இருக்கிறவளோட கஷ்டத்தை சொல்லி நீங்க தானே புரிய வச்சுருக்கணும்?”
“அதை விட்டுட்டு அவளோடு சகவாசம் பண்ண வேண்டான்னு சொல்லி கண்டதையும் பேசி அவளை இவளுக்கு எதிரி மாதிரி சித்தரிச்சு.. ஸ்ஹப்பாஆஆ..” என்று தலையை பிடித்து கொண்டவனுக்கு கிறுகிறுத்து கொண்டு வந்தது.
தண்ணீர் எடுத்து வேகமா குடித்தவன், “சரி சொல்லு, அந்த பொறுக்கி உனக்கு இன்ஸ்டால தான் பழக்கமா?”
“ஆமா மாமா..”
“எவ்ளோ வருஷமா அவனை தெரியும்?”
“இப்போ தான் ஒரு மூணு மாசமா?”
“என்ன மூணு மாசமா?” என்று இந்திரா திகைத்திருக்க,
“மூனே மாசம் பழகினவனை நம்பி யாருக்கும் தெரியாம வெளியே போக உனக்கு எவ்ளோ நெஞ்சழுத்தம் இருக்கணும்?..” என்றவன் மீண்டும் அவளை நெருங்க,
“ரிஷி அவ சின்ன பொண்ணு! உலகம் தெரியாம தப்பு செய்திருப்பா பொறுமையா எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா… போதும்! நீ அடிச்சா அவ தாங்க மாட்டா, ஏதாவதுன்னா அதையும் நாம தான் பார்க்கணும் சொன்னா கேளு..” என்றதில் தன்னை கட்டுபடுத்தியவன்,
“முதல்ல உன் பாஸ்வோர்ட் கொடு..” என்றான் அடிக்குரலில்.
“வரதா என்ன இன்ஸ்டாகிராம்? என்ன பாஸ்வோர்ட்? புரியற மாதிரி சொல்லுப்பா..” என்று கண்ணீரோடு கேட்டார் இந்திரா.
“ஃபேஸ்புக் மாதிரி அதுவும் ஒரு சமூக வலைத்தளம் ஆனா அதை பற்றிய சரியான புரிதலும், வழிகாட்டுதலும் இல்லாத குழந்தைகள், பெண்கள் எவ்வளவோ சிக்கல்களில் மாட்டிக்கிறாங்க தெரியுமா ப்பா..”
“அதனாலேயே இவளுக்கு ஃபோன் கொடுக்காம எந்த சந்தேகமா இருந்தாலும் லச்சுவை கேட்க சொன்னேன்.. அவ இருந்த வரையிலும் அவ எதிர்ல ஃபோன் படிக்க மட்டும் தான் யூஸ் பண்ணிட்டு இருந்தா ஆனா இப்போ நமக்கு தெரியாம இவ அதுல சேர்ந்திருக்கா...” என்று வெறுப்போடு சொன்னவன் ஆசிரியர் கொடுத்த ஐடியை இன்ஸ்டாவில் பதிவு செய்ய தொடங்கினான்.
அதேநேரம் அவளை அறைக்கு அழைத்து சென்று, “மாமா சொல்றது உண்மையா சிந்து? எங்க கிட்ட பொய் சொல்லிட்டு போனியா?..” என்றார் சிவபாலன்.
“தாத்தா மாமா சொல்ற மாதிரி அவர் பொறுக்கி எல்லாம் கிடையாது ரொம்ப நல்லவர், அவருக்கு என்னை ரொம்பவே பிடிக்கும் எனக்காக எதுனாலும் செய்வார்.. நானும் அவரும் லவ் பண்றோம்..” என்று அழுகையோடு சொல்ல ஆடிப் போய்விட்டார் மனிதர்.
“ஏய் என்னடி சொல்ற? லவ்வா? உங்க அப்பா..” என்ற இந்திராவிற்கு பூமியே தட்டா மாலையாக சுழன்றது.
“அடிப்பாவி மகளே!! எங்கிருந்து இதையெல்லாம் கத்துக்கிட்ட வந்த? என் பொண்ணு மாதிரி தான் நீயும் இருப்பன்னு நினைச்சேனடி ஆனா என் வயித்துல நெருப்பள்ளி கொட்டிட்டியே..” என்று ஒப்பாரி வைக்க தொடங்கிவிட்டார்.
அங்கே வந்த ரிஷி, “உன் மகளை மாதிரின்னு நீதான் கனவு கண்டுட்டு இருக்கணும்.. இவ நம்மளை எல்லாம் ஏமாத்திட்டு கண்ட கண்ட பொறுக்கிக்கு ஐஸ்க்ரீம் ஊட்டிட்டு இருக்கா..” என்றதில் தூக்கிவாரிப்போட பேத்தியை பார்த்தார் இந்திரா.
“அவர் ஒன்னும் பொறுக்கி இல்லை ரொம்ப நல்லவர் மாமா.. என் மேல ரொம்ப பாசமா இருப்பார்..” என்றதும் தான் தாமதம் பாய்ந்து வந்தவன் அடித்த அடியில் சுருண்டு அறையின் மூலையில் விழுந்தாள்.
“பார்த்தீங்களா? கொடுத்த வாக்குக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு இவளை வளர்த்து ஆளாக்கி, படிக்க வைக்கிற உங்களோட பாசமோ, இவளுக்காக என் பொண்டாட்டி வார்த்தையை மதிக்காம கடன் பட்டு சீர் செய்த என்னோட பாசமோ பெரிசா தெரியலை.. எவனோ ஒரு பொறம்போக்குக்கு எப்படி வக்காலத்து வாங்கிட்டு வரான்னு..” என்றவன் கோபத்தோடு மீண்டும் சிந்துவை நெருங்க,
“கொஞ்சம் பொறு ரிஷி..” என்ற சிவபாலன் பேத்தியை எழுப்பி அமர்த்தி, “என்ன பேச்சு சிந்து இதெல்லாம்? சின்ன குழந்தை இவ்ளோ பெரிய பேச்சு பேசலாமா? மாமா சொல்ற மாதிரி இன்னொருத்தனோடு சுத்திட்டு இருந்தியா? யார் அவன் எப்படி பழக்கம்? உன்னை எவ்ளோ நம்பியிருந்தோம் எங்களுக்கு தெரியாம..” என்று கண்கலங்க பேத்தியை பார்த்தவரால் அடுத்து தொடர முடியவில்லை.
“தாத்தா.. தாத்தா..” என்று கண்ணீரோடு பார்த்தவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
“ஒருநிமிஷம் நீங்க இருங்க ப்பா...” என்று அவளிடம் வந்தவன் உன் பாஸ்வோர்ட் கேட்டேன்.. என்றான்.
அவன் குரலே அவளை அச்சுறுத்த “ப்ளீஸ் மாமா நான் தெரியாம ஓபன் பண்ணிட்டேன் இனி எதுவும் பண்ண மாட்டேன் வேண்டாம்...” என்று சாதிக்க நினைத்தாள்.
ஆனால் ரிஷி விடுவதாக இல்லை.
“இப்போ பாஸ்வோர்ட் கொடுக்க போறியா இல்லையா?” என்று ரிஷி கை ஓங்க பயத்தில் பாஸ்வோர்டை சொல்லி விட்டாள்.
வெளியில் வந்து அதை பதிவு செய்து அவளின் இன்ஸ்டா கணக்கிற்குள் சென்றவன் அவளுடைய கணக்கையும் DM யையும் முழுதாக படிக்க படிக்க விழிகள் சிவந்து போனான்.
அத்தனையும் ராஜ் என்பவனுடனான காதல் ஸ்டேடஸ், பாடல்கள், கவிதைகள், முத்தம் தொடங்கி ஏகத்திற்கும் காதல் பேச்சுக்களாக இருந்தது. அதையெல்லாம் படித்தவன் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றிருந்தான்.
அவளுடைய விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்க அதை பார்த்து ராஜ் மட்டுமல்ல இன்னும் சில ஆண்கள் அதில் சிலர் பள்ளி மாணவர்கள் வேற்று மதத்தினர் என்று ஏகப்பட்ட ஆண்கள் அவள் அழகை புகழ்ந்து அவளுக்கு காதல் வலை வீசி இருந்தனர்.
யார்? என்ன? என்றே தெரியாத முன்பின் அறியாத ஆண்களோடு வெகு சகஜமாக உரையாடியதும் அவளை பற்றிய விபரங்களை பகிர்ந்து உரிமையாக பேசி இருப்பதை கண்டவன் உறைந்து போனான்.
எங்கிருந்து இந்த தைரியம் வந்தது? எப்பேர்பட்ட ஆபத்தில் அவள் சிக்கி இருக்கிறாள் என்பதை உணர்ந்த ரிஷியால் ‘சிந்துவா இப்படி..’ என்று இன்னுமே நம்ப முடியவில்லை.
அவன் தூக்கி வளர்த்த குழந்தை. அவனுடைய முதல் குழந்தையாக இன்று வரையிலும் நினைப்பவனுக்கு அவள் குழந்தை இல்லை என்பதை அவளுடைய பேச்சுக்கள் நெற்றி பொட்டில் அறைந்தார் போல புரிய வைக்க செயலற்று போய் தளர்ந்து அமர்ந்து விட்டான்.
Comments
Post a Comment